கை.அறிவழகன் எழுதியவை | ஜனவரி 1, 2011

ஒரு தமிழனின் புத்தாண்டுப் புலம்பல்கள்.

common_man

நகரச் கூச்சலில் இருந்தும், பெருங்கூட்டத் தனிமையில் இருந்தும் கொஞ்ச நேரம் விடைபெற என்று நேற்று இரவு பத்தரை மணிக்கு முடிவு செய்தேன், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் ஒரு இளைஞன் தெருவின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்குத் தனது இரு சக்கர வாகனத்தை பெருத்த ஓசையுடன் நான்கைந்து முறை ஓட்டிக் கொண்டிருந்தான். முழுதாகக் குடித்திருந்தான், அவனைப் பொறுத்தவரை அது கொண்டாட்டம், புதிதாய்ப் பிறந்த குழந்தைகள், இதய நோயாளிகள் இன்னும் பலருக்கு அந்த ஓசை பெரும் எரிச்சலையும் இடைஞ்சலையும் கொடுக்கலாம், ஒரு குளிர்ச் சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே வந்தபோது பக்கத்துக்கு வீட்டுப் பெண் "என்ன சார், பார்ட்டிக்குக் கிளம்பி விட்டீர்களா? என்றார்கள். அனேகமாக அவரது கணவர் நேற்றே கிளம்பி இருக்கலாம். அவரிடம் விளக்கம் சொல்வதற்கும், பேசிக் கொண்டிருப்பதற்கும் எனக்கு விருப்பமில்லை. "ஆம்" என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டேன்.

தொலைக்காட்சி ஊடகங்களின் வருகைக்குப் பின்னர் தான் இந்திய நகர்ப்புறங்களில் ஆங்கிலப் புத்தாண்டு ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக மாறி இருக்கிறது என்று நினைக்கிறேன், அதுவும் கொண்டாட்டம் என்பது குடியும், கூச்சலும் என்று நமது இளைஞர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை, ஆங்கிலப் புத்தாண்டு வருவதற்கு முன்னாள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடித்து விட வேண்டும், படித்த, படிக்காத இளைஞர்கள் என்கிற பாகுபாடு எதுவும் இதற்குக் கிடையாது, படிக்காத உடல் உழைப்புத் தொழில் செய்பவர்கள் கூடப் பரவாயில்லை, படித்த நல்ல வேலைகளில் இருக்கும் இளைஞர்களிடம் இந்தப் பழக்கம் ஒரு நோயைப் போலப் பரவி இருக்கிறது. இதை ஆங்கிலச் செய்தி ஊடகங்கள் நேரலையில் வேறு ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள், ஏறத்தாழ கடன் வாங்கியாவது இந்திய நடுத்தர மக்கள் மேலை நகரங்களின் கொண்டாட்ட நடைமுறைகளையும், வாழ்க்கை முறையையும் பின்பற்றி விட வேண்டும் என்பது அனேகமாக ஆங்கிலத் தொலைக்காட்சிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை இலக்காய் இருக்கலாம், பன்னாட்டு நிறுவனங்கள் அமைதியாகவும், அழகாகவும் வாழ்ந்து கொண்டிருந்த இந்திய மனிதர்களை ஒட்டு மொத்தமாக நிம்மதி இழந்தவர்களாகவும், மன அழுத்தம் மிகுந்தவர்களாகவும் மாற்றி இருக்கின்றன.

Indian_farmer

பாய் கலூக்காசில் நகை வாங்காவிட்டால் நீங்கள் பிறந்த பயனே இல்லை என்கிறார்கள், கடாபோன் பயன்படுத்தினால் உங்கள் குழந்தைகள் மூன்று வயதில் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் என்கிறார்கள், காலையில் எழுந்தவுடன் பல் துலக்கும் பசையில் உப்புக் காரம் எல்லாம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்கிறார்கள், எந்த சாதிக்கு எந்த முகப் பொலிவூட்டும் பசை தடவலாம் என்பது ஒன்று தான் இனி மிச்சம், சோப்பில் மசாலா இருக்கிறதா என்று சோதனை செய்ய ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், அந்தக் கருவி சரியாக வேலை செய்கிறதா என்று இன்னொரு கருவி கூடிய விரைவில் வரலாம், இனி எங்கள் சோப்பைக் குழந்தைகள் அப்படியே தின்னலாம் என்று ஒருநாள் சொல்லுவார்கள், முகச்சவரம் செய்து தெருவில் போகும் பெண்களின் கன்னத்தை எப்படி உரசுவது என்று சொல்லிக் கொடுக்கிறார்கள், 3D தொலைக்காட்சி வைத்திருந்தால், (அதுவும் ஒரு குறிப்பிட்ட நீளத்திற்கு)  நீங்கள் வாழ்வது முறை, இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்வார்களோ என்று பயமாகவும், எரிச்சலாகவும் இருக்கிறது.

முதலாளிகள் தங்கள் விழாக்களை உருவாக்குகிறார்கள், அவற்றைச் சந்தைப் படுத்துகிறார்கள், பன்னாட்டு முதலாளிகளால் இன்றைக்கு ஒரு ஆண்டில் ஒரு புதிய விழாவை அறிமுகம் செய்து அதனை நடைமுறைக்குக் கொண்டு வர முடியும், வரும் காலங்களில் தங்கம் வாங்குவதற்கென்றே பல "அக்சய திருதியா" க்களை உண்டாக்க அவர்களால் முடியும். அரசுகளை அவர்களே அமைக்கிறார்கள், எந்த அமைச்சரை எந்தத் துறையில் வைக்க வேண்டும்? என்று அம்பானிகளும், டாட்டாக்களுமே முடிவு செய்கிறார்கள், பிறகு எவ்வளவு ஊழல் செய்ய வேண்டும்?, யார் ஊழல் செய்ய வேண்டும்? என்பதையும் அவர்களே சொல்வார்கள், பிறகு எந்த ஊழலை வெளியே சொல்ல வேண்டும்?, எந்த ஊழலை மூடி மறைக்க வேண்டும்? என்பதையும் அவர்களே சொல்வார்கள், ஊழல்களில் இருந்து கிடைக்கும் உபரி வருமானங்களில் சிறு நிறுவனங்களும், பரிவர்த்தனையில் அரசு அலுவலர்களும் பிழைத்துக் கொண்டு விடுவார்கள், இந்தக் கூட்டணி தான் இன்றைய இந்தியாவைக் கோலோச்சுகிறது, இவர்களின் ஊதுகுழல் செய்தி ஊடகங்கள், அவை தினமும் காலையில் எழுந்தவுடன் இந்தியா இன்றைக்கு இவ்வளவு மைல் வளர்ந்து விட்டது, நாளைக்கு இத்தனை மைல் வளரக்கூடும் என்றெல்லாம் ஆருடம் சொல்லிக் கொண்டிருப்பார்கள், அவர்களுக்குப் படி அளக்கும் முதலாளிகளின் உலகம் தான் அவர்களின் உலகம். இந்த ஒரு கட்டமைக்கப்பட்ட முதலாளிகளின் உலகத்துக்காகவே மீதம் இருக்கிற ஐம்பது விழுக்காடு எளிய மக்கள் நாளெல்லாம் உழைக்க வேண்டியிருக்கிறது, படிப்பறிவும், பட்டறிவும் இல்லாத ஒரு உழைக்கும் கூட்டம் அப்படியே ஓசிச் சோறும், ஓசித் தொலைக்காட்சியும் கொடுத்து மழுங்க வைக்கப்பட்டிருக்கிறது.

1224677207145

அவன் அவனுக்கு ஒரு தொலைக்காட்சி வைத்திருக்கிறான், அவனுக்குத் தேவையானதை மட்டுமே அதில் சொல்லிக் கொண்டிருப்பான், ஆங்கிலத் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒவ்வொன்றும் ஒரு பன்னாட்டு அரசியல் பின்புலம் கொண்டு இயங்கும், ஒரு பொம்பளப் பிள்ள செத்துப் போனதை வச்சே ரெண்டு வருஷமா பொழப்பு ஓட்டுற ஆங்கிலத் தொலைக்காட்சிகள் எல்லாம் இங்கே உண்டு, பேசாம "குரோஷி டைம்ஸ்" ன்னு பேர மாத்தீட்டா நல்லது, அதுல யாரு என்ன பேசுனாலும் "நோ, நோ" ன்னு சொல்லிக்கிட்டே ஒருத்தரு உக்காந்து இருப்பாரு, பேரு என்னவோ கோசுவாமியோ, சுப்ரமணியசாமியோ. அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வந்தால் ரெண்டு மூணு நாளைக்கு ஊரையே காலி பண்ணி விட்டு எல்லாரும் ஓடிப் போயிரனும், பாவம் வருசமெல்லாம் வேலை பாத்த ஒரு மும்பை காவல்துறை உயர் அதிகாரிய உள்ளயே விடலைன்னு குய்யோ, முய்யோன்னு கத்துறாரு!!. எலியப் புடிச்சு தின்னு உயிர் வாழுரவங்கெ நாட்டுக்கு அந்த அமெரிக்க ஆளு ஆயிரம் கோடி செலவழிச்சு வந்தா என்ன, வராட்டி என்ன?

நூறு ரூபாய் எடுத்துப் பெருமையாப் பைல வச்சுக்கிட்டு கடைக்குப் போனா வெங்காயம் நூத்தி இருபது ரூபாய்டா வெண்ணை வந்துட்டான், என்று விரட்டுகிறான், பெட்ரோல் போடும்போது அளவு மீட்டர் மட்டுமில்லைடா, விலை உயர்வு மீட்டரும் ஓடிக்கிட்டே இருக்கும்குறான், பிரதமரு கைய விரிச்சுட்டு அதெல்லாம் இப்போ நம்ம கைல இல்லைன்னு சொல்றாரு, நான் ஒரு பள்ளிக் கூடப் பையன் மாதிரி, எனக்கிட்டப் போயி நீங்க விலைவாசி உயர்வு, அது இதெல்லாம் கேக்கக் கூடாதுன்னு சொல்றார்

BANGLADESH/

இந்தியாவுலையே மிகப்பெரிய தொழில் கல்வி வணிகமாகத்தான் இருக்க வேண்டும், ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவமோ, பொறியியலோ படிக்க இருபது லகரத்தில் இருந்து ஒரு கோடி வரைக்கும் செலவழித்துப் பிள்ளைகளைப் படிக்க வைப்பவர்கள் இந்த தேசத்தில் இருக்கிறார்கள், அந்தப் புள்ள படிச்சு வந்து ஏழைகளுக்கு இலவச மருத்துவமும், இடியாத கட்டிடமும் கட்டும் என்று நாமெல்லாம் எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம், கல்வி பொருள் ஈட்டுவதற்கான ஒரு கருவி, சிறந்த கல்வி என்பது சிறப்பாகச் பொருள் சேர்க்க உதவும் ஒரு கூடுதல் தகுதி, கல்விமான்களும், கல்வியாளர்களும் கொள்ளையடிப்பது, மற்றும் ஊழல் செய்வதில் தொழில் நுட்பத்தை உள்ளீடு செய்கிறார்கள், கல்வி எனும் கருவியைத் தங்கள் பண அறுவடைக்குப் பயன்படுத்துகிறார்கள், என்ன இலக்கு வைத்துப் படிக்கிறாய்? என்கிற கேள்விக்கு எண்பது விழுக்காடு மாணவர்கள் சொல்லும் பதில் "எல்லாரும் படிக்கிறாங்கே, நானும் படிக்கிறேன்" என்பது மாதிரித் தான் இருக்கிறது.

சரி, நம்ம ஆளுக பொழுதன்னைக்கும் பாக்குற தமிழ் சினிமாவாவது நல்லா இருக்கான்னு பாத்தா கிட்டத்தட்ட குத்தகை ரேஞ்சுக்கு மாறிடுச்சு, நடிகர் சங்கம்னு சொல்றாங்க, டைரக்டர் சங்கம்னு சொல்றாங்க, சின்னத்திரை சங்கம்னு புதுசா ஒன்னு சொல்றாங்க, தென்னிந்திய சங்கம், வட இந்திய சங்கம், கிழக்கு, மேற்கு கடைசியாப் பாத்தா எல்லாரும் சன் டிவி சொல்ற நாள்ல தான் கூட்டம் போடுறாங்க, குத்தாட்டம் போடுறாங்க, ரஜினி, கஜினி எல்லாம் முன்ன மாதிரிக் கிடையாது, கலாநிதி மாறன் எங்கே போனாலும் அந்தக் கூட்டத்துல போயி முதல் வரிசைல உக்காந்து கைதட்டனும், ஒரு படம் எடுத்து அந்தப் பட டைரக்டர் ஒண்ணுக்குப் போனதுல இருந்து ஆரம்பிச்சு, அப்புறம் CD வெளியீடு , CD கவர் வெளியீடு, ட்ரைலர் வெளியீடு, திரை தூக்கு விழா, திரை இறக்கு விழா, ரசிகர்கள் காவடி எடுப்பு, பால்குடம் சுமப்பு, முடி காணிக்கை, பாலாபிஷேகம், ஏண்டா இந்த உலகத்துலேயே ஒரு திரைப்படத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ற நாடும் அதன் மக்களும் நாசமாப் போனாத் தான் என்ன அப்படீன்னு திடீர்னு யோசனை வருது, நானும் ஒரு சினிமாக்காரன் தான் என்று சொல்லிக் கொண்டு நமது முதல்வர் சகிதம் அரச பரிவாரங்கள் அங்கே போய் உக்காந்து "ஹாங்காங்குல" கேட்டாக, "அமெரிக்காவுல" கேட்டாக, ஏன் ஆந்திராவுல கூடக் கேட்டாக, போகலையே மொதல்ல தமிழனுக கதைய முடிச்சிட்டு அப்புறம் தாண்டா எல்லாம் என்று ஒரே பிடிவாதமாக மறுத்துவிட்டார் என்று முழங்குகிறார்கள்.

karunanidhi_illus_20100201

குண்டூர் சாலை சரியில்லை, மண்டூர் ஓலை சரியில்லை, தின்டூரில் நான் போன பொதுக்கூட்டதின் போது குளிர் சாதன வசதி இல்லை என்று எதிர்கட்சி அம்மா போராட்டம் நடத்துகிறார், கருப்பு எம்ஜியார் பம்முரதப் பாத்தா அவர் கூட்டணி தானே இல்லை என்று சொன்னேன், தாயுடன் பிள்ளை சேருவது கூட்டணி இல்லை, அது குடும்பங்களின் பிணைப்பு என்று சொல்லி அம்மாவின் காலடியில் ஐக்கியமாகிற மாதிரித் தெரியுது, மூன்றாவது அணி இல்லை, மூன்றாவது இல்லை என்று கூட்டத்துக்குக் கூட்டம் கத்த ஆரம்பித்திருக்கும் சின்னப்பா தாஸ், பெரியப்பா தாஸ் எல்லாம் யாராவது சேத்துக்குங்க, சேத்துக்குங்க என்று கெஞ்சிக் கூத்தாடாமல் இருந்தால் சரிதான். தனியாத் தான் நின்னு பாருங்களேன் ராமதாஸ் சார், உங்க பவர் என்னன்னு தமிழக மக்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும். அண்ணன் திருமா ஏதோ எரையான்மை மாநாடு நடத்துறாராம், அண்ணன் தெரியாமத் தான் கேக்குறேன் தமிழர்களுக்கு அப்படி ஒன்னு இல்லைன்னு உங்களுக்குத் தெரியும் தானே? கொத்துக் கொத்தாக் கொன்னு குவிச்சப்போ, நீங்க கூடிக் குலவுற தலைவரு உறுதியா நின்னிருந்தா தமிழர்களுக்கு இறையாண்மை ஒன்னு இருக்குப்புன்னு கொஞ்சமாவது இந்த மொதலாளிகளுக்குத் தெரிஞ்சிருக்கும், அப்பவெல்லாம் சும்மா இருந்துட்டு இப்போ எரையான்மை மாநாடு போடக் கிளம்பி இருக்கீக!!!! நடத்துங்க, உங்களுக்கும் இப்போ நல்லாத் தெரிஞ்சு போச்சு, இவங்கே திருந்த வழியில்லை, இவங்களத் திருத்துனா நமக்கும் வழியில்லை என்று!!!

imagesCA8EKWSB

திடீர்னு கெளம்புனாரு சீமானு அண்ணன், அவரு கெளம்புன சோரப் பாத்தா நான்கூட உண்மையிலேயே நம்பிட்டேன், ஆகா, பாருடா பெரியாரோட பேரன் கெளம்பீட்டாரு, இனி ரண களம் தாண்டா!!! என்று அப்படியே வாய்ல வெரல் வச்சுப் பாத்தா, நேராப் போயி ஐயா முத்துராமலிங்கம் கால்ல சரண் அடைஞ்சுட்டாரு, கொள்கையும் கிடையாது, அடிப்படை அரசியல் வழிமுறைகளும் கிடையாது, நேரா உலக நாடுகளின் ஒட்டு மொத்த தமிழர்களின் முதல்வர் நாந்தான்னு அண்ணன் சொல்லி இருக்காரு, கடைசியாப் பாத்தப்போ "நீ இல்லைன்னா, இந்தத் தமிழ் மக்களை யாராலையும் காப்பாத்த முடியாதுடா தம்பின்னு அழுது கலங்கினாருன்னு" சும்மா ஹாரி பாட்டர் ரேஞ்சுக்கு மேடைக் கதைகள் எழுதுறாரு, சினிமாக் கார ஆளுள்ள, நம்ம பயகள எங்க அடிச்சா விழுவாங்கன்னு கரீட்டாத் தெரியும்ல, திடீர்னு பாத்தா என்ன இருந்தாலும் கலைஞர் ஐயா தானே எங்கள எல்லாம் வளத்து எடுத்தாருன்னு சொல்றாரு, திடீர்னு பாத்தா தாயே நீங்கள் தான் ஈழத்தின் விடிவெள்ளி என்று கூவுராரு, அரை மணி நேரச் சந்திப்ப வச்சு இனி ஆயுள் பூராக் கதை எழுத அவருக்கு வாய்ப்பா கலைஞரு ஐயா அப்போ அப்போ அவர செயில்ல அடைச்சுருவாறு. கடைசியா அவரு காமெடி பீசா ஆகாம இருந்தாலே பெருசு, அவரு கத்துற கத்தப் பாத்தா, ஆயிடுவாரோன்னு தான் கவலையா இருக்கு.

SEEMAN__14540f

யாரப்பா நாங்க நம்புறது, நீ எல்லாரையும் இப்படிச் சொல்றியேன்னு யாரோ ஒரு தம்பி கேக்குற மாதிரித் தெரியுது???? நானும் உன்னைய மாதிரித்தான் தம்பி கேட்டுக்கிட்டு அலையுறேன், என்ன நீ எழுத மாட்ட, நான் எழுதிப்புட்டேன், அம்புட்டுதேன். முதலாளிகளும், முதலாளித்துவமும் பொழுதுபோக்கு, கல்வி, அரசியல், விளையாட்டு, வணிகம், வீடு, குடும்பங்கள், உறவுகள், மனித உடல், மருத்துவம் என்று எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஆற்றலாக உருவாகி விட்டார்கள், உருவாகி விட்டார்கள் என்றால், உருவாக்கியது யார்? இத எழுதுற நான், இதப் படிக்கிற நீங்க, எங்க அப்பா, அம்மா, உங்க அப்பா, அம்மா,  எங்க தாத்தா, பாட்டி, உங்க தாத்தா, பாட்டி எல்லாரும் தான். பிள்ளைகளாவது பொழச்சு நல்ல படியா வாழட்டுமேன்னு தான் இந்தப் பொலம்பல்.

சரி, எங்கடா ராத்திரில போனான்னு யாரும் கேக்கலையே, நான் வசிக்கும் பெங்களுர் வீட்டுக்குப் பின்புறம் ஒரு அமைதியான, அழகான கிராமம் இருக்கிறது, அந்தக் கிராமத்தின் சாலையொன்றில் இருக்கும் கற்பாறையில் சென்று அமர்ந்து கொண்டேன், வெகு தொலைவில் வெடியோசை தொடர்ச்சியாகக் கேட்கிறது,  நிலவொளியில் அந்தக் கிராமத்தின் கொஞ்ச நிலம் அழிக்கப்பட்டு ஒரு புதிய தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது, பனி கொண்டாட்டங்களில் இருந்து தப்பித்து எங்கிருந்தோ வேகமாய் வந்து கொண்டிருக்கிறது, ஒரு மாணவன் தெரு விளக்கில் படித்துக் கொண்டிருக்கிறான். சில கட்டப்படாத மாடுகள் சாலை நடுவில் அசையாமல் நம்மைப் போலவே நின்று கொண்டிருக்கின்றன, சோளம் விதைக்கப்பட்ட கொஞ்ச நிலங்களில் இருந்து மனதை மயக்கும் ஒரு வாசனை வருகிறது,ஒரு கடை வாசலில் கயிற்றுக் கட்டில் போட்டு முதியவர் ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கிறார், புத்தாண்டும், அதன் கூச்சலும் இந்தக் கிராமத்துக்குள் இன்னும் வரவில்லை, அடுத்த ஆங்கிலப் புத்தாண்டு வரும் போது இங்கிருக்கிற கிராமம் இருக்காது என்பதும், இந்த புத்தாண்டைப் போல என்னால் ஒளிந்து கொள்ள முடியாது என்றும் உறுதியாய் எனக்குத் தெரிகிறது.  ஏனோ அந்த நேரத்தில் ஒரு திருக்குறள் நினைவில் பட்டுத் தெறித்தது,

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது"

பாவம் அந்தக் கிழவன் இப்போ இருந்தா என்ன எழுதி இருப்பாரோ?? நம்மாளு பூராப் பேரும், "புத்தாண்டு வந்துருச்சு, புத்தாண்டு வந்துருச்சு, இந்தியா வளந்துருச்சு, இந்தியா வளந்துருச்சு", “எல்லாரும் பீரு அடி, தண்ணி அடி" என்று கத்திக் கொண்டு, அடுத்த தேர்தலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான். ஐநூறோ, ஆயிரமோ, க்வாட்டரோ, புல்லோ புளியோதரையோ, பிரியாணியோ, தேர்தல் ஒரு பரஸ்பர வாக்காளர், வேட்பாளர் ஒப்பந்தம் ஆகி நீண்ட நாட்களாகி விட்டது. "ஏல, நீ எனக்கு இம்புட்டுக் குடுத்துரு, என்ன வேண்ணாலும் பண்ணிக்க" என்பது மாதிரியான ஒரு ஒப்பந்தம். இதுல வேற நம்ம முதலாளி, தொழிலாளி, பாட்டாளி, உழைப்பாளி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் கூடிய விரைவில் போட்டுத் தள்ளீருவாங்கன்னு நினைக்கிறேன், நாமளும், பங்காளி, கூட்டாளி, முதலாளி மாதிரியான சொல்லாடல்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.  

8289854-happy-new-s-year-puppy-with-a-funny-expression

ஆங், சொல்ல மறந்துட்டேனே, எல்லாருக்கும் "புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பாஸ்", ஹலோ, ஹலோ, நில்லுங்க பாஸ், நான் பைத்தியம் எல்லாம் கிடையாது, சத்தியமா இந்தக் கட்டுரைய அந்தப் பாறைல உக்காந்து தான் எழுதுனேன்.

************

Advertisements

Responses

 1. Hmm… ungalin mana vethanay purihirathu. Enna seyya, naanum oru sarasari kudimahanaahi ponaen.
  Intha samuham oru naal maarum, maara vendum, maarida antha ellam valla iray arul purinthida vendum.
  Vaazthukkal.
  Anbudan endrum,
  Sakthi.

 2. நான் ஒரு ஈழத்தமிழன் ,
  அண்ணன் சீமான் எப்படிப்பட்டவர் எனக்கு தெரியாது, அவர் எப்படிபட்ட ஆளாக இருந்தாலும் பரவாயில்லை,
  அனால் அவருடைய கருத்துக்கள் தமிழகத்தில் ஒரு சில புத்தி ஜீவிகளையாவது உருவாக்கும் – தமிழ், தமிழனின் விடிவிற்காக.
  நாங்கள் யாரையும் விமர்சிப்பதிளால் எந்த பலனும் இல்லை.

  • ஈழத்தமிழா தங்கள் ஆதங்கம் புரிகிறது,அனைவரையும் சந்தேகம் படுவதோ அல்லது விமர்சிப்பதோ வேலைக்கு ஆகாது,தமிழர்க்காக யார் குரல் கொடுத்தாலும் நாம் வரவேற்க வேண்டியது இன்றைய கடமை,சிமானின் பேச்சி தமிழ் உணர்வாளர்களிடம் ஒரு எழுச்சியை ஏற்படுத்தும் என்பது ஐயமில்லை,அவரின் பேச்சு இன்றைக்கு தமிழனுக்கும்,ஈழத்தமிழனுக்கும் அவசியமாகிறது,
   இரா.வெங்கடேஷ்

 3. அது, அதே தான், நானும் சொல்ல வருவது. இன்னொரு முறை படித்துப் பாருங்கள் புரியும்…….

 4. உங்கள் கதை ………..
  ………..இல்லை நடை….

 5. பெங்களூரில் தான் எனது புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பித்தது. 2000m வருடம் நான் அங்கு வேலை செய்து கொண்டு இருந்தபோது.
  நண்பர்கள் என்னை அழைத்து சென்றார்கள். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் நண்பர்களின் தொந்தரவு தாங்க முடியாது. என்ன பாலா உங்களுக்கு
  என்ஜாய் பண்ண தெரியவில்லை என்று சொல்லுவார்கள்.

  அவர்களிடம் எல்லாம் இதை எல்லாம் விளக்கி கூறினால் அதை இப்போ எதுக்கு பெசுகிர்கள் என்ஜாய் பண்ணுங்க என்று கேட்ப்பார்கள்.
  பெரியாரை விரோதியாக பார்க்கும் மக்கள்தானே நம்மையும் இவர்கள் இவனுக்கு பொழப்பு இல்லை என்று சொல்ல பெரிதாக ஒன்றையும் சாதித்து விடவில்லை என்று தோன்றும்.

  அண்ணனுக்கு மீண்டும் வாழ்த்துகள். நானும் உன்னைய மாதிரித்தான் தம்பி கேட்டுக்கிட்டு அலையுறேன், என்ன நீ எழுத மாட்ட, நான் எழுதிப்புட்டேன், அம்புட்டுதேன்.பெங்களூரில் தான் எனது புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பித்தது. 2000m வருடம் நான் அங்கு வேலை செய்து கொண்டு இருந்தபோது.
  நண்பர்கள் என்னை அழைத்து சென்றார்கள். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் நண்பர்களின் தொந்தரவு தாங்க முடியாது. என்ன பாலா உங்களுக்கு
  என்ஜாய் பண்ண தெரியவில்லை என்று சொல்லுவார்கள்.

  அவர்களிடம் எல்லாம் இதை எல்லாம் விளக்கி கூறினால் அதை இப்போ எதுக்கு பெசுகிர்கள் என்ஜாய் பண்ணுங்க என்று கேட்ப்பார்கள்.
  பெரியாரை விரோதியாக பார்க்கும் மக்கள்தானே நம்மையும் இவர்கள் இவனுக்கு பொழப்பு இல்லை என்று சொல்ல பெரிதாக ஒன்றையும் சாதித்து விடவில்லை என்று தோன்றும்.

  அண்ணனுக்கு மீண்டும் வாழ்த்துகள். நானும் உன்னைய மாதிரித்தான் தம்பி கேட்டுக்கிட்டு அலையுறேன், என்ன நீ எழுத மாட்ட, நான் எழுதிப்புட்டேன், அம்புட்டுதேன்.

 6. சினிமாக் கார ஆளு”ள்ள”, change this to kundu laaa machi

 7. யாருடைய வாழ்கையும் யாராலையும் தீர்மானிக்க முடியல. கருத்து திணிப்பு, கலாச்சார திணிப்பு என்று எல்லாமே திணிக்கப்படுகிறது. தனிமனித நலம் மட்டுமே எல்லோருடைய எதிர்பார்ப்பாய் இருக்கிறது. இதனால் எனக்கு என்ன பலன் என்ற எண்ணமே மேலோங்கி விட்டது. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று என்றைக்கு மறந்தோமோ அன்றே சுயநலமாகிவிட்டோம்.

 8. I liked your article. Thank u…
  my site


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: