கை.அறிவழகன் எழுதியவை | ஜனவரி 10, 2011

சங்கீதாவும், ஒரு சோதனை எலியும். (சிறுகதை)

blue-moon-large

மெல்லிய கடற்காற்று முகத்தை வருடியபடி அருகில் இருக்கும் மரத்துக்குத் தாவுகிறது. நான் அந்தப் பெரு நகரத்தின் மனித நடமாட்டமில்லாத தெருவில் பூட்டப்பட்டிருக்கிற கடையின் அருகில் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி நிற்கிறேன், நிலவு அந்தக் கடை வாசலைக் கடந்து கடலுக்குள் இறங்கி இருக்கிறது,  நிலவு கடை வாசலுக்கு வந்து விட்டால் எனக்கு சங்கீதாவின் நினைவு வந்து விடும், அப்படி ஒரு நாளில் நிலவோடு சேர்ந்து அவளும் கடை வாசலில் வந்திருந்தாள், அவளுடைய புன்னகை நிலவொளியின் வசீகரத்தை ஒத்திருந்தது, கடை முழுவதும் ஒரு விதமான நறுமணம் பரவத் துவங்கி இருந்தது, பொருட்களை விற்கும் பலகையில் தனது இரண்டு கைகளையும் சரித்து வைத்துக் கொண்டு அவள் குமார் பையாவுடன் பேசத் துவங்கினாள், சரளமான ஹிந்தியில் அவர்கள் இருவரும் உரையாடத் துவங்கியது கண்டதும் முதன் முறையாக ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற வேகம் மனதுக்குள் வேகமெடுத்தது. குமார் பையா என்னை சங்கீதாவிடம் அறிமுகம் செய்து வைத்த போது நான் என்னைப் பற்றிய குற்ற உணர்வில் சிக்கி இருந்தேன், ஒரு பெரு நகருக்குள் அடைபட்ட புதிய வயல் எலியைப் போல ஏதாவது வளைக்குள் அடைந்து கொள்ளவே ஆசைப்பட்டிருந்தேன், அவளது மென்மையும், புன்னகையும் கலந்த அந்த அறிமுகம் இந்த உலகத்தின் கதவுகளை எனக்காக முதன் முதலில் திறந்து விட்டது, அவள் தனக்கு வேண்டியவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டு, நீண்ட நேரம் ஒரு வானொலி அறிவிப்பாளரின் ஆளுமையோடு அங்கே நின்று கொண்டிருந்தாள், அவள் பேசும் போது குறுக்கிட யாருக்கும் விருப்பம் இல்லை. அவள் விடை பெறும் போது என்னிடம் சொல்லிக் கொண்டு போகவில்லை. ஒரு மிக நீண்ட இரவு எனக்கு அருகில் வந்து விட்டிருந்தது.

மறுநாள் காலையில் கொஞ்சம் சீக்கிரமே கடைக்கு வந்து விட்டிருந்தேன், கடை முதலாளி அம்மாவுக்கு வியப்புக் கொள்ளவில்லை, குமார் பையாவும், சந்துருவும் வந்து தான் கடை திறக்க உதவி செய்வார்கள், இன்று சந்துரு வருவதற்கு முன்பாகவே நான் வந்து விட்டிருக்கிறேன், உண்மையில் கடைக்கு வேகமாக வரவேண்டும் என்கிற ஆர்வம் எல்லாம் எனக்கு இல்லை, இயல்பாகவே நான் வேகமாகி இருப்பது எனக்குத் தெரிந்தது, என்றைக்கும் இல்லாமல் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வாசலில் நின்று கொண்டிருந்தது, அதிக ஆள் நடமாட்டம் இல்லாத நீரூற்றில் குளித்தது என்று எல்லாம் கொஞ்சம் முன்னதாகவே நிகழ்ந்தது. மனிதர்களின் வாழ்க்கையை அவர்களின் மனநிலையை அப்படியே திருப்பிப் போடுவதற்கு ஒரு பெண்ணும், ஆணும் எல்லா இடங்களிலும் காத்திருக்கிறார்கள், கடந்து போகிற பல நூறு பெண்களில் ஒரு பெண்ணின் அலைவரிசை நமது அலைவரிசைகளை மாற்றிப் போடுகிறது, மனித அறிவுக்கும், ஆற்றலுக்கும் எட்டாத சில நுட்பமான மாற்றங்களை இந்த இனம் புரியாத நுண்ணிய உணர்வுகள் நமக்குள் விளைவிக்கின்றன. சில மணி நேரங்களில் நமது முழு உலகமும் ஒரு தனி மனிதருக்குள் அடைபட்டுப் போவது தான் மனித இயங்கியலில், சமூகவியலில் நிகழ்கிற மிகப்பெரிய வியப்பான மாற்றம். சங்கீதா அப்படித்தான் ஒரே நாளில் எனக்குள் நிறைந்து போனாள், சங்கீதாவின் வருகையின் போது கடை முழுவதும் நிரம்பிய நறுமணத்தைப் போலவே எனது நினைவுகளுக்குள் அவள் இன்றைக்கும் நிரம்பி வழிகிறாள்.

mumbai_6

குமார் பையாவிடம் போகிற போக்கில் எனக்குத் தெரிந்த ஹிந்தியில் நேற்று வந்தவர்களைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன், அது ஒரு மிகச் சாதரணமான விசாரணையாய் இருக்க வேண்டும் என்று நான் நம்பினேன், ஆனால், குமார் பையா முதன் முறையாக எனைப் பார்த்து ஒரு மாதிரியாகச் சிரிக்கவும் எனது நம்பிக்கை தகர்ந்து தவிடு பொடியானது, “நீ சங்கீதா பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா?” என்று அவன் என்னிடம் நேரடியாகக் கேட்டது எனக்கு ஒரு மாதிரியாகப் போனது, என்னுடைய அன்றைய உரையாடல்கள் முழுவதையும் அவனுடைய அந்தக் கேள்வி நிறுத்திக் கொள்ள வைத்து என்னை மீண்டும் வயல் எலியாக மாற்றியது, அன்று முழுவதும் என்னை குமார் பையா சீண்டிக் கொண்டே இருந்தான், எனக்கு உள்ளுக்குள் அது பிடித்திருந்தும், நான் கோபமாக இருப்பது போல நடித்தேன், நிலவு கடை வாசலில் தென்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் காலம் தனது பிரம்மாண்டத்தை எனக்குக் காட்டியது, நொடிகள் ஒவ்வொன்றும் என்னால் ஒரு சுமை தூக்கியின் வலியோடு நகர்த்தப்பட்டன, சில நகர்வதாய்த் தெரியவில்லை, நிலவு கடை வாசலைக் கடந்து விட்டிருந்தது, சங்கீதாவின் நறுமணம் கடைக்குள் பரவும் வாய்ப்பிருந்த கடைசி நொடி என்னைக் கடந்து விட்டிருந்ததை கடை முதலாளியம்மா கொடுத்த அன்றைய நாளுக்கான படிக்காசு எனக்கு உணர்த்தியது.

குமார் பையா அடுத்த நாளில் வந்திருக்கவில்லை, கிமத்ராய் வீட்டுக்கு மளிகைச் சரக்குப் போடுவதற்கு இன்றுதான் கடைசி நாள், நாங்கள் பொருட்களை எல்லாம் நேற்று மாலையே எடுத்து வைத்திருந்தோம், காலையில் குமார் பையா வந்தவுடன் கொண்டு செல்வது என்பது திட்டம், குமார் பையாவின் சின்னப் பையனுக்கு உடல் நிலை சரியில்லை என்று முதலாளியம்மா பேசிக் கொண்டிருந்தார்கள், பிறகு சந்துருவும், முதலாளியம்மாவும் கலந்து பேசி என்னை கிமத்ராய் வீட்டுக்கு அனுப்புவது என்று முடிவு செய்தார்கள், மிதிவண்டியின் முன்புறங்களில் இரண்டு மிகப்பெரிய மளிகைப் பொருட்கள் அடங்கிய பைகளும் சந்துருவால் மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தன, பின்புறத்தில் வைத்துக் கட்டப்பட்ட அட்டைப்பெட்டியும் ஏறத்தாழ எனது மாநகர மிதிவண்டிப் பயணத்தைத் துவக்கி வைத்தன. சந்துரு கிமத்ராய் வீட்டை எப்படி அடைய வேண்டும் என்பதற்கு ஒரு வரைபடமே கொடுத்திருந்தான், அல்லது “அக்ரோபோலிஸ்” எங்கே இருக்கிறது என்று யாரிடமாவது கேட்டு நான் தெரிந்து கொள்ள வேண்டும், அக்ரோபோலிஸ் என்பது பெருமுதலாளிகள் வசிக்கும் வீடுகள் நிரம்பிய பகுதி, சில நடிகர்கள், இசை அமைப்பாளர்கள் போன்றவர்களின் பெயரைச் சொல்லி அவர்கள் அனைவரும் இங்கு வசிப்பதாக குமார் பையா கண் விரிய என்னிடம் ஒருநாள் சொல்லி இருந்தான், பள்ளிக்கூடம் செல்லும் போது சிரிப்பும், பாட்டுமாக இருந்த மிதிவண்டிப் பயணம் போல இருக்கும் என்று தான் முதலில் எனக்குத் தோன்றியது, சாலையின் முடிவில் கடல் பசுமை கலந்த நீல நிறத்தில் எனது மிதிவண்டிப் பயணத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கடை இருக்கும் பகுதி ஒரு மலைக்குன்று மாதிரியான பகுதியில் இருக்கிறது, மிதிவண்டி மிதிக்காமலேயே கடற்காற்றின் வேகத்தில் புகுந்து கலவரப்படுத்தியது, இனி அடுத்த வளைவு வரும்போது மேடு, மிதிவண்டி தானாகவே நின்று விடும், இறங்கிக் கால்களை ஊன்றி இரண்டு கைகளாலும் மிதிவண்டியை சுமைகளோடு முன்னே நகர்த்த வேண்டும், இறங்கி நகர்த்த முயற்சி செய்தால் சுமைகளின் கனம் எனது கால்களைத் தடுமாற வைக்கிறது. ஒருவழியாக வயிற்றோடு ஒட்டியபடி மிதிவண்டியை நகர்த்தி மேட்டில் ஏற்றி உச்சிக்கு வந்தால் வியர்வையில் நனைந்து சட்டை முழுவதும் உப்புப் படிந்திருக்கிறது, கருப்பு வண்ணம் பூசப்பட்டிருந்த காலணியின் வண்ணம் மஞ்சளாய் மண் அப்பிக் கிடந்தது.

அக்ரோபோலிஸ் நுழைவாயிலில் நின்ற போது இரண்டு காவலர்கள் பின்புற வாயில் வழியாக வருமாறு சைகை செய்தார்கள், வீட்டைக் கண்டுபிடித்து பணியாட்களுக்கான வாயில் வழியாக இரண்டு பைகளைக் கொண்டு சேர்த்த போது ஏறக்குறைய ஒரு கோமாளியைப் போல இருந்தேன் நான், ஆனால் அன்றைய நாள் எனக்காகவே விடிந்திருக்க வேண்டும், ஒரு பையை வேலைக்காரர்களில் ஒருவர் வாங்கிக் கொண்டு நகர்ந்த போது “யார் வந்திருக்கிறார்கள்?” என்று கேட்டபடி சங்கீதா அந்த அறைக்குள் காட்சி கொடுக்கிறாள், சங்கீதாவைச் சுற்றி இரண்டு மூன்று வேலையாட்கள், கிமத்ராய் வீட்டில் கடைசிப் பெண் சங்கீதா, என்னைப் பார்த்ததும் அவள் அடையாளம் கண்டு கொண்டாள், அவளது பார்வையில் கருணையும், அன்பும் நிரம்பிக் கிடந்தது, ஒரு பணிப்பெண்ணை அழைத்து என்னை அமரச் செய்தாள் சங்கீதா, பொன் மஞ்சள் நிறத்தில் கற்கள் பதிக்கப்பட்ட ஒரு ஆடையில் ஏறக்குறைய ஒரு தேவதையைப் போலிருந்தாள் சங்கீதா, அவளுடைய செல்வச் செழிப்பை அவளை ஒட்டியபடி பின்தொடர்ந்த பணிப்பெண்ணை வைத்தே என்னால் அடையாளம் காண முடிந்தது, சங்கீதா எனக்கு ஹிந்தி அத்தனை சரளமாக வராது என்பதை அறிந்து கொண்டு விட்டாள், எனக்குப் புரியும் ஆங்கிலத்தில் அவள் பேசத் தொடங்கினாள், அப்படிப் பேசுவது அவளுக்கு கடினமான ஒன்றாக இருக்க வேண்டும், இருந்தாலும் புன்னகையோடு அப்படியே பேசினாள். எதிரில் இருந்த மேசையில் பாதி அமர்ந்தபடி பொருட்களை சரிபார்த்தாள் சங்கீதா, என் கைகளில் இருந்த துண்டுத்தாளை வாங்கி ஒவ்வொரு பொருளாகக் குறித்து முடித்து விட்டு ” இது யாருடைய கையெழுத்து? என்று புருவங்களை உயர்த்தி அவள் கேட்ட போது “என்னுடையது” என்று அடிக்குரலில் சொன்னேன், அவள் வியப்படைந்திருக்க வேண்டும், அந்த வரிகளை தனது மெல்லிய சிவப்பு நிற விரல்களால் வருடிக் கொடுத்தாள் சங்கீதா, அழுகிற குழந்தையை மடியில் கிடத்தி வருடிக் கொடுப்பதைப் போல இருந்தது சங்கீதாவின் அந்த வருடல், “நீ என்ன படித்திருக்கிறாய்?” என்று என்னிடம் கேட்டாள் சங்கீதா, “இளங்கலை அறிவியல் முடித்திருக்கிறேன்” என்று நான் சொன்ன போது அவளால் நம்பவே இயலாது திரும்பத் திரும்ப அதே கேள்வியைக் கேட்டாள். ஆனால் “உன்னுடைய படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையே?” என்று அதட்டும் தொனியில் அவள் கேட்டது அந்தப் பெருநகரத்தின் களைப்பை எனக்குள் இருந்து விரட்டப் போதுமானதாக இருந்தது, கூடவே ஒரு பணிப்பெண் ஒரு விலை உயர்ந்த கோப்பையில் ரத்தச் சிவப்பு நிறத்தில் ஏதோ ஒரு திரவத்தை எனக்குக் கொடுத்தாள், சங்கீதா இருக்கும் பக்கம் தலையைத் திருப்பினேன், தலையை அசைத்து அவள் என்னை அந்தக் குளிர் பானத்தைக் குடிக்குமாறு சொன்னது ஏதோ சொன்னது அனேகமாக ஒரு கட்டளையைப் போல இருந்தது, அது என்ன மாதிரியான குளிர் பானம் என்று எனக்குத் தெரியாது, ஆனால், உலகின் சுவை மிகுந்த ஒரு தருணம் அந்தக் கோப்பையில் நிறைந்து கிடந்தது, அதன் சுவை நினைவுகளைக் கூட நிரப்பி உயிரின் களைப்பைப் போக்கும் ஒரு அரிய சுவையாக இருந்தது. 483d-ghost-ship-poster-m

தொடர்ந்து கிமத்ராய் வீட்டுக்கு நானே போவதற்கான சிறப்பு அனுமதியை எனக்கு வழங்கி இருந்தான் குமார் பையா, கிமத்ராய் வீட்டில் இருந்தும் இப்போது முன்பை விட அதிகம் அழைப்புகள் இருப்பதாக மகிழ்ந்தாள் முதலாளியம்மா. அவ்வப்போது நிலவு கடை வாசலுக்கு வரும் அதே நேரத்திலும், இன்னும் சில நேரங்களிலும் சங்கீதா ஒரு நிலவைப் போல வந்து போய்க் கொண்டிருந்தாள், ஒவ்வொரு நாளும் வண்ணமயமான கார்களில் அவள் வந்து போவது எனக்கான திருவிழாக் காலமாக மாறிப் போனது. சங்கீதாவின் வரவுக்குப் பின்னால் நகரம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக் கொண்டிருந்தது, பக்கத்தில் இருந்த பூங்கா, தூரத்தில் இருந்த கடல் எல்லாம் கடைக்குள் வந்து போகிற மாதிரியும், வெயில் காலத்தில் மழையை, மழைக் காலத்தில் இளஞ்சூட்டை எனக்குள் வழங்கக் கூடியதாகவும் சங்கீதாவின் அன்பு வாழ்க்கைக்கும் எனக்குமான தொடர்பை நெருக்கமாய் மாற்றியது. நான் இந்த உலகத்தை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று சங்கீதா எனக்குப் பலமுறை வகுப்புகள் எடுத்திருக்கிறாள், குடிக்கத் தேநீரும், சிரிக்க அவள் முகமும் அருகில் இருக்க ஒரு வயல் எலியை நகரத்தின் புதிய தலைமுறை மனிதனாக்கும் தன்னுடைய முயற்சியில் அவள் பாதி வெற்றி பெற்றிருந்தாள். சங்கீதா என்னோடு மட்டுமில்லை, தான் சந்திக்கிற ஒவ்வொரு மனிதரோடும் அத்தனை நெருக்கமாய் இருக்கிறாள், இருந்திருக்கிறாள், சில பணிப் பெண்களோடும், வாயிற் காவலர்களோடும் அவள் சிரிக்கச் சிரிக்கச் சில நேரங்களில் சண்டை போட்டுக் கொண்டிருப்பாள், அவள் யாரையும் அதிர்ந்து பேசி நான் அறிந்திருக்கவில்லை, அல்லது அவள் அப்படிப் பேசியே இருக்கவில்லை.

To_see_the_Moon_231172356_std

சங்கீதா என்னைத் தன் தந்தையாருக்கு ஒருநாள் அறிமுகம் செய்தாள், தன்னுடைய கடும் பணிச் சூழலிலும், என்னோடு மிக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார் அந்த மனிதர், சங்கீதா நான் இளங்கலை அறிவியல் படித்திருப்பதையும், கணிப்பொறி அறிவு கொண்டிருப்பதையும் விழிகள் விரிய தன் தந்தையிடத்தில் எடுத்துச் சொன்னாள், என் தகுதிக்கு ஏற்ற ஒரு வேலையை அவர் வழங்க வேண்டும் என்று ஒரு சிறு குழந்தையைப் போல அவரிடம் கெஞ்சினாள், சங்கீதாவின் வீட்டில் வேறு யாரையும் நான் பார்த்திருக்கவில்லை, ஒரு நாள் சங்கீதா தனது அறையை நான் பார்க்க வேண்டும் என்று என்னை உள்ளே அழைத்தாள், தயங்கியபடி என்னுடைய வியர்வை வழிகிற சட்டையையும், அழுக்கான காலுறையையும் நானே பார்த்துக் கொண்டேன், ஆனாலும், அவள் என்னை விடுவதாய் இல்லை, வெள்ளியால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள், மர வேலைப்பாடுகளுடன் கூடிய நூல்கள் அடுக்கப்பட்டிருந்த அலமாரி என்று எல்லாவற்றையும் எனக்குக் காட்டினாள் சங்கீதா, தான் உளவியல் படிப்பதாகவும், உளவியல் சார்ந்த நூல்களைப் படிப்பது தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் என்னிடம் சொன்னாள் சங்கீதா.”கேரன் ஹோர்னி”, “சிக்மன்ட் ப்ராய்ட்” போன்றவர்களைப் பற்றி நான் அறிந்த சில நூல்களை சங்கீதாவிடம் நான் சொன்னபோது அவள் எனக்கு முத்தம் கொடுத்து விடுவாளோ என்று பயந்தேன் நான், நல்ல வேளை அப்படி எதுவும் நிகழவில்லை. அவளுடைய தூய்மையான மனத்தைப் போலவே இருந்தது அறையும் அதில் பரவி இருந்த நறுமணமும்.

Once-in-a-blue-moon-L

ஒரு மழைக்கால நாளின் நண்பகலில் குமார் பையா என்னை கிமத்ராய் வரச் சொன்னதாகச் சொன்னபோது நான் உள்ளபடியே பயந்து போனேன், ஐந்து மணிக்குத் தேநீர் நேரத்தின் போது நான் அக்ரோபோலிஸ் சென்று கிமத்ராயைச் சந்தித்தேன், அவர் தன்னுடைய அலுவலகத்துக்கு காலையில் வரும்படி என்னிடம் சொன்னார், முகவரி அச்சிடப்பட்ட அட்டையை என் கையில் கொடுத்து விட்டு அவர் இப்படிச் சொன்னார், “என் மகள் நேசிக்கிற எல்லாவற்றையும் நானும் நேசிக்கிறேன்”. அனேகமாக அவரது மகள் நேசிக்கிற விசித்திரமான பொருட்களில் நானும் ஒன்றாய் இருக்க வேண்டும், மறுநாள் காலையில் கிமத்ராய் அலுவலகத்தில் நான் நின்றபோது ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் எனக்கான பணி நியமன உத்தரவு கையில் கொடுக்கப்பட்டது, அன்றைய மதிப்பில் ஐந்தாயிரம் என்பது ஒரு மிகப்பெரிய தொகை மட்டுமில்லை, தனி மனித வாழ்க்கையை அவனுடைய பொருளியல் வாழ்க்கைத்தரத்தை மாற்றி அமைக்கக் கூடியதாய் இருந்தது, நல்ல உடைகளையும், நல்ல காலணிகளையும் நான் அணியத் துவங்கி இருந்தேன். எப்போதாவது சில நாட்களில் பொன்னிற வெய்யிலில் மின்னும் கடலலைகளுக்கு இடையே நான் சங்கீதாவைச் சந்தித்தேன், சங்கீதாவை நான் அடிக்கடி சந்திக்க முடியாமல் போனது குறித்த மிகப்பெரிய வருத்தம் எனக்குள் இருப்பதாக அவளிடம் நான் சொன்னேன்,  அப்போதும் கண்ணைச் சுருக்கி மிக அழகாய்ச் சிரித்தாள் சங்கீதா, சங்கீதா சில நேரங்களில் என்னை மிகப்பெரிய உணவகங்களுக்கு அழைத்துச் செல்வாள், “உனக்கு என்ன வேண்டும்?” என்று என்னிடம் கேட்பாள், நான் “சோறும் சாம்பாரும் வேண்டும்” என்று சொல்வதைக் கேட்டு அவள் ஒருபோதும் சிரிக்கவில்லை, என்னுடன் புதிதாக வேலை செய்யும் நண்பர்களில் பலர் அப்படித்தான் சிரிப்பார்கள், அப்படி ஒரு சிரிப்பை சங்கீதாவிடம் இருந்து நான் ஒரு நாளும் பார்த்திருக்கவில்லை, அடுப்படி வரை சென்றாவது எனக்கான உணவுப் பொருளைப் பெற்று விடுவதில் சங்கீதா விடாப்பிடியாக இருப்பாள், இருந்தாலும் அந்த உணவகங்களின் கலாச்சாரத்தோடு ஒட்டிக் கொள்ள முடியாத என்னுடைய தனிமையை எப்போதும் சங்கீதா தன்னுடைய புன்னகையால் நிரப்பி இருந்தாள். நகரத்தின் தெருக்கள் மிக அழகானதாக மாறத் துவங்கி இருந்தன, சங்கீதா, கஜல் இசை, ஆட்களற்ற கடற்கரை என்று ஒரு சுமை தூக்கியின் வாழ்க்கை மிக அழகானதாக மாறிப் போனது.

ஒரு நாள் விடுமுறையில் சங்கீதா என்னை அவளுடைய வீட்டுக்கு வரச் சொல்லி இருந்தாள், அழுக்கும், வியர்வையும் இல்லாத எனக்கு முக்கிய நுழைவாயிலில் அனுமதி கிடைத்ததே மிகப் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது, நான் அன்று ஒரு கோமாளியைப் போல இல்லாமல் அந்த வீட்டுக்குள் நுழைந்தேன், பணிப்பெண்களில் ஒருவர் என்னை வியப்பாகப் பார்த்து அது நான் தானா என்று உறுதி செய்து கொண்டார், என்னை வீட்டுக்குள் அழைத்து வரவேற்பறையில் சங்கீதா அமரச் சொன்ன போது எனக்கு முன்னதாக ஒரு நடுத்தர வயதான மனிதர் அங்கு அமர்ந்திருந்தார். அவரிடம் என்னை அறிமுகம் செய்தாள் சங்கீதா, அந்த மனிதர் என்னை நோக்கிச் சில கேள்விகள் கேட்டார், நான் எங்கு பிறந்தேன்?, எங்கு படித்தேன்?, கிராம வாழ்க்கையும், நகர வாழ்க்கையும் எப்படி மாறுபட்டிருக்கின்றன?, இந்த வேலை செய்வதற்கு முன்பு நான் எங்கு வேலை செய்தேன்?, என்ன சம்பளம் வாங்கினேன்?, இந்த வேளையில் சேர்ந்த பிறகு என்ன என்ன மாற்றங்களை உளவியல் ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் நான் அடைந்திருக்கிறேன்? என்று தொடர்ச்சியாக அவர் பல கேள்விகளைக் கேட்டார். சங்கீதா புன்னகையோடு ஒரு வெள்ளைத்தாளில் சில குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தாள். எனக்கு மெல்லப் புரியத் துவங்கியது மேலே நடந்தவை யாவும் சங்கீதாவின் உளவியல் படிப்பின் ஒரு மிக முக்கியமான சோதனைக் காலம் என்று, உளவியல் உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்குக் கடைசி ஆண்டில் சில நடைமுறைத் திட்டங்களைக் கொடுத்து மனிதர்களின் உளவியலில் உண்டாகும் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தச் சொல்வார்கள், அப்படி ஒரு ஆய்வின் மாதிரியாக சங்கீதாவுக்கு நான் இருந்திருக்கிறேன்.

moon-world

அதற்குப் பிறகு சங்கீதாவைப் பல முறை நான் சந்தித்திருக்கிறேன், சங்கீதா அதே புன்னகையோடு என்னை எதிர் கொள்வாள், ஒரு மாலை நேரத்தில் அவள் தனக்குக் கணவராக வரப் போகிற கனவானை ஒரு உணவகத்தில் எனக்கு அறிமுகம் செய்தாள், அன்றும் கூட எனக்கான சோற்றையும், சாம்பாரையும் அவள் எப்படியோ வரவழைத்துக் கொடுத்தாள். சங்கீதா ஒரு போதும் என்னை தனக்குக் குறைவாக நடத்தி இருக்கவில்லை, சங்கீதா ஒரு நாளிலும் என்னை ஏளனம் செய்திருக்கவில்லை, சங்கீதா ஒரு வயல் எலியைப் போல நகரத்துக்குள் வந்து விழுந்த என்னை நகரத்து எலியாக மாற்றிக் காட்டினாள். தன்னுடைய படிப்புக்கான சோதனை மாதிரி நான் என்று அவள் அறிந்திருந்தும் அப்படி ஒரு போதும் என்னை அவள் நடத்தி இருக்கவில்லை. சங்கீதா எனக்குள் ஒளிந்திருந்த மனிதனை முழுமை செய்து கொடுத்தவள், இந்த உலகம் நாம் காணுகிறபடியெல்லாம் மாறும் வல்லமை கொண்டது என்று எனக்கு அவள் தான் உணர்த்தினாள், சங்கீதாவைப் போல வெகு இயல்பாகச் சிரிப்பவர்களை அதற்குப் பிறகு நான் சந்திக்கவே இல்லை. எதிரில் சுழலும் உலகம் முழுதையும் நமது புன்னகையால் கட்டுப்படுத்த முடியும் என்று சங்கீதா ஒரு நாள் மாலையில் கடைவாசலில் நிலவு இருந்த போது நறுமணத்தைப் பரப்பியபடி என்னிடம் சொன்னாள்.காருக்குள் அமர்ந்து  என்னுடைய மடிக்கணினியை விரித்து அந்தப் படத்தை இன்னொருமுறை பார்க்கிறேன், அது ஒரு சின்னக் குழந்தையின் புன்னகை ததும்பும் புகைப்படம், தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருக்கிறாள் சங்கீதா, மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளிடம் கிடைத்த மின்னஞ்சல் அது, அந்தப் புகைப்படத்தில் இருந்து ஒரு நிலவைப் போலவே நகரத் துவங்குகிறது சங்கீதாவின் அதே புன்னகையும், சிரிப்பும்.

image-12557129

சங்கீதா எப்படி இருப்பாள் என்று அறிந்து கொள்ள உங்களுக்கு ஆசையாய் இருக்கிறதா? முழு நிலவு உங்கள் வீட்டுப் பக்கமாக வரும் போது நின்று பாருங்கள், அப்படித்தான் இருப்பாள், உலகம் முழுவதும் நறுமணத்தைப் பரப்பும் களங்கமில்லாத அழகான புன்னகை தான் அவள் அடையாளம், அவளை வேறு எப்படியும் என்னால் அடையாளம் செய்யவே முடியாது. உலகெங்கும் உலவும் சங்கீதாக்களால் உருவாக்கப்பட்டது நிலவின் ஒளி, ஒவ்வொரு மனிதனின் மீதும் நிலவொளியின் கதிர்கள் வீழும் போது அவனுக்குள் நிறைந்து இருக்கிற ஒரு சங்கீதாவின் புன்னகை வெளியாகக் கூடும், ஏனெனில் சங்கீதா ஒரு முழுமையான பெண். அவளே இந்த உலகத்தை முன்னின்று நடத்திச் செல்கிறாள், என்னைப் போலவே நீங்களும் எப்போதாவது சங்கீதாவின் புன்னகையை உணர்ந்திருப்பீர்கள், அப்போது அவள் பெயரை மாற்றிக் கொண்டிருந்திருப்பாள்.

*********

 

 

 

 

 

 

 

Advertisements

Responses

  1. migavum arumai nanbare

  2. bombay?????


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: