கை.அறிவழகன் எழுதியவை | ஜனவரி 12, 2011

அடிமைகளின் நகரம்.(சிறுகதை)

pd1131247

முதன் முதலாக நான் ஒரு பெரு நகரத்தைப் பார்க்கப் போகிறேன் என்கிற மகிழ்ச்சியோ, எதிர்பார்ப்போ பெரிதாக எனக்கு இல்லை, நான் எனது மண்ணை விட்டு நீண்ட காலங்களுக்குப் பிறகு பிரிகிறேன் என்ற கவலையும், அழுத்தமும் மட்டும் தான் அதை விடப் பெரிதாகத் தெரிகிறது, கடந்த மூன்று மாதங்களாகவே வேலை இல்லை, மழை வருவதை நான் எப்போதும் பெருங்கவலையோடு தான் பார்க்க வேண்டியிருக்கிறது, அப்படிப் பார்ப்பது ஒரு குற்ற உணர்வாக என்னைக் குடைந்த போதும், வாழ்க்கையின் சுமை அப்படித்தான் என்னை நினைக்க வைக்கிறது, உப்பளத்தில் வேலை செய்யும் எந்த மனிதனுக்கும், உப்பளத்தின் எரிச்சல் நிரம்பிய நீரில் வாழ்க்கையை நகர்த்தும் நாட்கள் மிகக் கடினமானவை தான், ஆனாலும் வாரக் கடைசியில் கிடைக்கும் பணத்தின் வாசனை அதன் கடுமையைக் கொஞ்சம் குறைக்கும், மழை அப்படி அல்ல, வேலையே இல்லாமல் செய்து பட்டினியைப் பரிசாகக் கொடுக்கும், தொடர்ச்சியான மழையும், தேங்கிய நீரும் கணக்கப் பிள்ளையிடம் முதல் முறையாக என்னை மரியாதை இல்லாத வார்த்தைகளால் கூனிக் குறுக வைத்தது, கொஞ்சம் தாமதமாகப் போனதற்கு "நீரு, என்ன தொரைன்னு நினைப்போ, சாவகாசமா வாரீறு, கடன வாங்கிக் கார வீடு கட்டிப்போட்டா, கண்ணு தெரியாதோ உமக்கு, அண்ணாச்சி உம்ம வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிப்புட்டாக, கெளம்பும்", அவமானமாய்த் தான் இருக்கிறது, ஆனாலும் பிழைக்க வேண்டுமே என்கிற வலி பிடிவாதமாக என்னை இந்த முடிவுக்கு வரவழைத்தது,

பெருநகருக்குப் பிழைக்கப் போகும் முடிவு. பீட்டர் தான் உப்பு லாரி டிரைவரிடம் சொல்லி என்னை ஏற்றி அனுப்பினான், கூடவே ஊர்க்காரர்கள் இரண்டு மூன்று பேர் வருவது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது, உப்பு லாரியின் தார்ப்பாய் மீது ஒதுங்கிக் கிடக்கும் வேட்டியின் வழியாகக் கால்கள் வெளித் தெரிகிறது, என் கால்களை நானே ஒரு முறை பார்த்துக் கொள்கிறேன், வெடிப்பும், காயங்களும் நிறைந்த அழுக்கடைந்த கால்கள், கடந்த சில நாட்களாக தொடர்ந்து வலி கொடுக்கும் மூட்டுகள், நான்கு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி கட்டிக் கொடுப்பது ஒரு கிராமத்து மனிதனின் வாழ்க்கையில் அத்தனை பெரிய சாதனையாக இருந்திருக்கவில்லை, காலம் மாறி விட்டிருக்கிறது, பெரியவன் சரியாகப் பணம் அனுப்புவதும் இல்லை, அவனுக்கே பிழைப்பு கொஞ்சம் கடுமையானதாக மாறி இருக்கிறது என்று போன முறை வந்த போது எரிந்து விழுந்தான், இரண்டு குழந்தைகள் அவர்களின் படிப்பு என்று அவனுக்கும் பாவம் சுமையாக இருக்க நான் விரும்பவில்லை, மற்றபடி அவன் என் மீது பாசம் நிறைந்தவன் என்கிற நிறைவு ஒரு பக்கம் என்னை ஆறுதல் படுத்தியது. நான் நகரத்துக்குப் போவது குறித்து அவனுக்கு எதுவும் தெரியாது, மூத்தவளுக்கு மட்டும் தான் போன் பண்ணிச் சொன்னேன், அவள் பேசி முடிக்கையில் விசும்பும் ஒலி மட்டும் எனக்குக் கேட்டது, எனக்காக அழுவதைத் தவிர வேறெதுவும் செய்யும் நிலையில் அவள் இல்லை, அவள் நன்றாக இருக்கும் போது அங்கே போய் வாரக் கணக்கில் இருந்திருக்கிறேன், மருமகனும் நன்றாகவே என்னைக் கவனித்துக் கொள்வார், மூத்தவளின் இப்போதைய வாழ்க்கை குறித்து நினைத்தவுடன் கண்ணில் நீர் கட்டிக் கொள்கிறது, விதியை நொந்தபடியே அதையும் கடந்து விட வேண்டியது தான், வேறென்ன செய்வது?

1199172246J0AMed

விழிப்பு வரும்போது தலைக்கு மேலே உயர்ந்த கட்டிடங்களும், கோபுரங்களும் கடந்து போகிறது, நகர எல்லைகளுக்குள் வந்து விட்டிருக்கிறோம் போல என்று நினைத்துக் கொண்டு கண்ணை மூடிப் படுத்திருந்தேன், முன்பொருமுறை இந்த நகரத்துக்கு வந்திருக்கிறேன், கட்சி ஒன்றின் மாநாட்டுக்கு அழைத்து வந்தார்கள், சாப்பாடு, குடிக்கச் சாராயம், செலவுக்குப் பணம் எல்லாம் கொடுத்து இரண்டு நாட்கள் ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைத்தார்கள், வண்ண வண்ண விளக்குகளும், உயர்ந்த மாளிகைகளுமாய் அழகாய்த்தான் இருந்தது நகரம், இப்போது இருந்த சுமை அப்போது இருக்கவில்லை, இரண்டு நாட்களில் திரும்பி விடுவோம் என்கிற நம்பிக்கை அதற்குக் காரணமாக இருக்கலாம், இப்போது அப்படி இல்லையே, யாரையும் தெரியாத நகரத்தில் புதிதாய் வாழத் துவங்க வேண்டும், மழைக்கும், வெயிலுக்கும் ஒதுங்கிக் கிடக்க இருந்த ஒரு ஓலைக் குடிசையும் இப்போது கை நழுவியது மாதிரித் தெரிந்தது, எப்படியாவது இந்தக் குடிசையை மாற்றிக் கட்டி விடலாம் என்று நினைத்த காரை வீட்டின் பூசாமல் கிடக்கிற செங்கற்கள் கண்களுக்குள் அடுக்கப்பட்டிருக்கிறது, எழுந்து அமர்ந்து ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு கம்பியைப் பிடித்தபடி வெளியில் கொஞ்சமாய் எட்டிப் பார்த்தேன், வெளிர் மஞ்சள் நிறத்தில் சிதறிக் கிடக்கிறது வானம், பனியால் நனைக்கப்பட்ட சாலைகளின் ஓரத்தில் ஒதுக்கப்பட்ட குப்பைகள், சில அதிகாலை மனிதர்களின் ஓட்டத்தில் அதிரும் நடைமேடைகள், மெல்ல விழிக்கத் துவங்கி இருக்கிறது நகரம், காலியாகப் பயணிக்கும் நகரப் பேருந்துகள், குல்லா அணிந்த ஓட்டுனர்கள், எல்லா இல்லங்களிலும் இன்றைய தேநீருக்கான பாலைச் சுமந்தபடி மிதிவண்டிகளை அழுத்தும் என்னைப் போன்ற முதியவர்கள், செய்தித் தாள்களை அணைத்தபடி தூக்கம் தொலைந்த சிறுவர்கள் என்று படுக்கையறையில் கண்விழிக்கும் அனைவருக்கும் அழகாய்த்தான் விடிகிறது நகரத்தின் நாட்கள்.

5276085013_5d0f47f916

லாரி நிறுத்தப்பட்டது, நாங்கள் நகரத்துக்குள் இறக்கி விடப்பட்டோம், மூர்த்தி எங்களை வழி நடத்தி அழைத்துப் போனான், மூர்த்தி கொஞ்சம் படித்தவன், அடிக்கடி நகரத்துக்கு வந்து போகிறவன், கையில் செல்போன் வைத்திருக்கிறான், ஒரு மிகப்பெரிய கட்டிடத்தின் பின்புறத்தில் எங்களை இறக்கி விட்டிருக்கிறார்கள், உறக்கம் இல்லாத இரவின் களைப்பு என்னை அருகில் இருக்கும் படிக்கட்டில் அமர்த்துகிறது, நிமிர்ந்து பார்த்தால் வியப்பளிக்கிற உயரத்தில் கட்டிடமும், அருகில் தெரிகிற இயந்திரங்களும், மூர்த்தி என்னையும், காந்தியையும் பார்த்து " இந்தக் கட்டிடத்துல தான் அண்ணாச்சி வேலை, மேஸ்திரி இப்போ வந்துடுவார், நீங்க வேணுமின்னா பலகாரம் சாப்பிட்டு வந்துருங்க, நேராப் போனா நடைபாதைல ஒரு கடை இருக்கு". மூர்த்தி கடையைக் கையைக் காட்டினான், பல்லுத் தேய்க்காம பலகாரம் சாப்பிட்டுப் பழக்கம் இல்லை தான், பார்க்கலாம், பையில் முப்பது ரூபாயும், சில்லறைக் காசுகளும் இருக்கிறது, காந்தி "பசி இல்ல தம்பி, பொறவு பாக்கலாம்" என்று முடித்துக் கொண்டான், நேற்று இரவு சாப்பிட்ட மூன்று பரோட்டாவும் குருமாவும் இரண்டு மணிக்கெல்லாம் காணாமல் போய் இப்போது பசிக்கத் துவங்கி இருந்தது எனக்கு, மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தேன், நடைபாதைக் கடையில் வியாபாரம் சுறுசுறுப்பாக இருந்தது, ஓரத்தில் ஒரு தொட்டியை மேலேற்றி குழாய் பொருத்தி இருந்தார்கள், சரி, பல்லுத் தேய்க்கலாம் என்று குழாயைத் திறந்து வாயைக் கொப்பளித்தேன், காய்ப்பேறிய விரல்களை விடவும் எந்தக் குச்சியும் தேவையாய் இருக்கவில்லை, மறதியில் குழாயை மூட மறந்திருந்தேன், "யோவ், பெரிசு, அறிவில்லையா? தண்ணியத் தொறந்து விட்டுருக்க, நீ பல்லு வெளக்கிக் குளிக்கவா நான் கடை வச்சிருக்கேன்" என்று சீறினான் கடைக்காரன். கூடவே "கொம்மா, கோத்தா" என்று சுடுசொற்கள் திராவகமாய் இறங்கி என்னைத் தாக்கியது, காலையில் நகரம் சிலருக்கு இப்படித்தான் விடியும் என்று உணர்த்துவது போல இருந்தது அந்த மனிதனின் சொற்கள், என் மகன் வயது இருக்கலாம், மரியாதை மாதிரியான அடையாளங்களை முதலாளிகளுக்கு மட்டுமாக மாற்றிக் கொண்டிருக்கிறது நகரம், என்ன தான் சுடுசொற்களாய் இருந்தாலும் கொஞ்சம் வயதுக்கும், மனிதர்களுக்கும் மரியாதை கொடுத்துக் கொண்டிருந்தது ஊர் என்பது நினைவுக்கு வந்தது, வாரக் கணக்கில் கடன் வாங்கினாலும், "அண்ணாச்சி, டீ எடுத்துக்குங்க, பாக்கி கொஞ்சம் நிக்குது பாருங்க" என்று நாசூக்காகச் சொல்லும் சரவணன் ஏனோ நினைவில் வந்து போனான். மூன்று இட்டலிகளை சாப்பிட்டு விட்டு இடத்தைக் காலி செய்தேன். மேஸ்திரி இன்னும் வந்திருக்கவில்லை. மூர்த்தி யாருடனோ பேசிக் கொண்டிருந்தான் போனில், என்னைப் பார்த்துக் சைகையில் சாப்பிட்டு விட்டீர்களா? என்று பதிலுக்குக் காத்திருக்காமல் பேசிக் கொண்டிருந்தான்.

67174404_2b19280a93

நான் மீண்டும் போய் அந்தப் படிக்கட்டில் அமர்ந்து கொண்டேன், வெய்யில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்திருந்தது, இப்படி நாளெல்லாம் வெயில் அடிக்க ஆரம்பித்தால் உப்பளத்திலேயே வேலை செய்யலாம் என்று தோன்றியது, கொஞ்ச நேரத்தில் மேஸ்திரி வந்து விட்டிருந்தார், வண்டியில் இருந்து இறங்கி மூர்த்தியைப் பார்த்து, "எத்தனை பெரு வந்திருக்காக மூர்த்தி" என்றார் மேஸ்திரி, அண்ணே, ரெண்டு பேரு மட்டுந்தான்னே" என்று அடிக்குரலில் பதில் சொல்லவும், என்ன மூர்த்தி உன்னைய நம்பி அட்வான்ஸ் வாங்கிச் செலவழிச்சு இருக்கேன், நீ கடைசி நேரத்துல இப்படிச் சொன்னா எப்படி என்று குரலை உயர்த்தினான் மேஸ்திரி, எனக்கு உள்ளுக்குள் பயம் எடுக்க ஆரம்பித்தது, எங்கே நம்மையும் வேண்டாம் என்று சொல்லி விடுவானோ என்று காந்தியும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம், கடைசியில் இருபது ரூபாய் குறைவாகத்தான் சம்பளம் கொடுப்பேன் என்று சொல்லி விட்டு கட்டிடத்தின் உள்ளே நுழைந்திருந்தான் மேஸ்திரி, "அண்ணாச்சி, நூத்தம்பது ரூபா பேசினேன், இப்போ நூத்தி முப்பது தான் குடுப்பான் போல தெரியுது, என்ன சொல்லுதீக", மனிதர்களைப் நகரத்தில் பணத்தால் அளக்கிறார்கள் என்று ஒருமுறை கணக்கப் பிள்ளை சொல்லியது நிழலாடியது. நானும் காந்தியும் எதுவும் பேசவில்லை, மூர்த்தி எங்களை அழைத்துக் கொண்டு போய் கட்டிடத்தின் உள்ளே யூனிபார்ம் போட்டிருந்த சில மனிதர்களிடம் இவர்களுக்கு ஹெல்மெட் கொடுத்து உள்ளே அனுப்புங்கள் என்று சொல்லி விட்டு நகரத் துவங்கினான், மூர்த்தி திரும்பி ஒருமுறை என்னைப் பார்த்து "பாத்து அண்ணாச்சி, கவனமா வேலை பாருங்க" என்று சொன்னான். மனம் கொஞ்சம் குளிர்ந்த மாதிரி இருந்தது.

உப்பள வேலையை மாதிரி காலுக்கு எரிச்சல் கொடுக்காத இந்த வேலை எனக்கு அப்படி ஒன்றும் கடினமானதாய் இருக்கவில்லை, இவர்கள் பேசிக் கொள்கிற மொழிதான் கொஞ்சம் கடினமாய் இருந்தது, சுற்றிலும் ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்த மனிதர்கள் வேறு மாநிலங்களில் இருந்து வந்திருக்க வேண்டும், பேசிக் கொண்டே வேலை பார்க்கும் உப்பளங்களும், அவற்றின் மனிதர்களும் ஒரு கனவைப் போல வந்து போனார்கள், வெயில் ஏற ஏறக் குழைத்து எடுத்துச் செல்கிற கலவை கனக்கத் துவங்கியது, கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம் என்றால் யாரும் நிற்கிற மாதிரித் தெரியவில்லை, காந்தியும் கண்ணில் படவில்லை, பேசாமல் நீண்ட நேரமாக இருப்பதும், பீடி குடிக்காமல் இருப்பதும் சுமையை அதிகம் செய்வது போலத் தெரிந்தது, சட்டியைக் கீழே வைத்து விட்டு நகரத் துவங்கினேன், எஞ்சினியர் தம்பி என்னைக் குறுகுறு என்று பார்த்தான், " தம்பி, ஒன்னுக்கு இருந்துட்டு வந்துர்றேன்" அவன் கேட்காமலே சொல்லி விட்டு நடந்தேன், பீடி ஒன்றைப் பற்ற வைத்து இழுக்கவும், யூனிபார்ம் போட்ட ஒரு ஹிந்திக்காரன் என் சட்டையைப் பிடிக்கவும் சரியாக இருந்தது, அவன் பீடியைக் கையைக் காட்டி ஏதோ வெடிகுண்டு மாதிரிச் சத்தம் போட்டான், என்னுடைய அறுபது வயதில் யாரும் சட்டையை அத்தனை எளிதாகப் பிடித்து  இருக்கவில்லை, பக்கத்தில் நின்று கொண்டிருந்த கண்ணாடி போட்ட இளைஞன், எஞ்சினியரை  கண்ணா பின்னாவென்று சத்தம் போட்டான், "லேபர்களுக்கு ஒன்னும் சொல்றது இல்ல, இப்படியே நேரத்தை ஓட்டினா போதும்", என்று முனகியவாறு அவன் அடுத்த தளத்திற்கு நடக்க ஆரம்பித்தான், "யோவ், கெழட்டுத் …..லி, என்னைய வேலைய வீட்டுத் தூக்க வந்தியா நீ" என்று ஏக வசனமாய் அவன் பேசத் துவங்கியதும், காந்தி அருகில் வந்தான், இல்ல, சார், காரை வேலைக்குப் புதுசு, உப்பலத்துல வேலை பார்தவங்கே, தெரியாம நடந்துருச்சு, இனிமே அப்படி நடக்காது" என்று சமாதானம் சொன்னான். முறைத்தபடி நகர்ந்தான் எஞ்சினியர். வேலை செய்யும் இடத்தில் பீடி குடித்தது இத்தனை பெரிய சிக்கல் என்பது எனக்கு ஒரு வழியாகப் புரிந்தது.

old-man-with-walking-stick-mandya-km-doddi-road

சூரியன் மேற்கில் சாயத் துவங்கி இருந்தான், கட்டிடங்களின் இடைவெளியில் நகரத்துச் சூரியன் போக்குக் காட்டிக் கொண்டிருந்தான், வாகனங்களின் இரைச்சல் இன்னொரு சுமையைத் தலையில் கனக்கத் துவங்கியது, உப்பளத்தில் அதிகாலை முதல் நண்பகல் வரைதான் வேலை இருக்கும், ஓய்வு எடுக்கவும், டீக்கடையில் பேசிக் கொண்டிருக்கவும் நிறைய நேரம் இருக்கும், வேலையாவது செய்து விடலாம், பீடி குடிக்காமல் இருப்பது தான் பெரிய கஷ்டமாய்த் தெரிகிறது, உணவு இடைவேளையின் போது உணவைத் தேடவே சரியாய் இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் ஹிந்திக்காரர்கள் இருப்பதால், சப்பாத்தியும், பூரியும் தான் கிடைக்கிறது, கொஞ்சம் கஞ்சியும், உப்பும் கிடைத்தால் அமிர்தமாய் இருக்கும் என்று தோன்றியது, யாரோ விசில் அடித்து வேலை முடிந்து விட்டது என்று சொன்னார்கள், சம்பளப் பட்டுவாடா நடக்கத் துவங்கியது, எஞ்சினியர் தம்பி ஒரு நோட்டை வைத்துக் கொண்டு என் பெயரையும், காந்தியின் பெயரையும் கூப்பிட்ட போது பார்த்த வேலைக்குக் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது, கையில் ஒரு நூறு ரூபாய் நோட்டை அவன் கொடுத்தபோது, கான்ட்ராக்டர் கமிசன் இருபது ரூபாய் போக சம்பளம் என்றான், அனேகமாக எங்கள்  கான்ட்ராக்டர் மூர்த்தியாக இருக்க வேண்டும், "ஊருக்காரப் புள்ளைக பொழச்சுப் போகட்டும்" என்று மனதுக்குள் தோன்றியது, மொதல்லேயே நம்ம கிட்ட சொல்லி இருக்கலாம் என்று முனகினான் காந்தி.

இன்றைய வேலை முடிந்தது என்பதை நினைக்கும் போதே சந்தோஷமாக இருந்தது, அறுபது வயது வரையில் நம்மை உழைக்கும் தகுதி உள்ளவனாக வைத்துக் கொண்டிருக்கிற பூச்சி அய்யனாரை நினைத்துக் கொண்டேன் நான், அது நகரத்தின் ஒரு அழகான சுறுசுறுப்பான மாலைப் பொழுதாக இருக்க வேண்டும், வண்ண வண்ண உடைகளில் ஆண்களும், பெண்களும் வாழ்க்கையை அழைத்தபடி நடக்கிறார்கள், சிரிக்கிறார்கள். ஒரு திருமணத்தின் போது என் பிள்ளைகள் ஒன்று சேர்ந்து சிரித்ததைப் போல ஒன்றாய்க் கூடி பள்ளிக் கூடப் பிள்ளைகள் பேருந்து நிறுத்தத்தில் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களின் சிரிப்பில் மூட்டு வலி கொஞ்சம் கரைந்து விடுவதைப் போல இருந்தது, இரண்டு குழந்தைகளை காருக்குள் வைத்துக் கொண்டு மூத்தவளின் வயதை ஒத்த பெண்ணொருத்தி வித்தைக்காறியைப் போல காரோட்டுகிறாள், ப்ரியாவும், தீபாவும் திண்ணையில் முழங்காலிட்டு விளையாடுவதைப் போலத்தான் இருக்கிறது காருக்குள் இருக்கும் குழந்தைகளின் விளையாட்டு. ஒரு பீடியைப் பற்ற வைத்து உள்ளுக்குள் இழுத்தேன், இரவு எங்கே தங்கப் போகிறோம் என்கிற கவலைகள் ஏதுமின்றி  சுருள் சுருளாய்க் மேலே எழும்பிப் பறக்கிறது பீடிப் புகை. முதலாளிகளின் உலகம் அழகானதாய் இருக்கிறது நகரத்தில், அடிமைகளின் உலகம் நடைபாதை மேடைகளில் புகையாய் அலைகிறது.

3911461121_5fbdaa04d6

**********

Advertisements

Responses

  1. அருமையான பதிவு . நெஞ்சைச்சுடும் உண்மை.வாழ்க்கையில் கோரமாக பிய்த்து எறியப்பட்டுள்ள மனிதர்களின் கதைகள் இன்னும் நிறைய வெளிவரவேண்டும். வாழ்த்துகள்.

  2. சு.பொ.அகத்தியலிங்கம் ஐயா,

    உங்களைப் போன்ற முன்னோடிகளின் வாழ்த்து மிகுந்த மன எழுச்சியையும், மகிழ்ச்சியையும் உண்டாக்குகிறது,
    நாம் காணுகிற நகரக் காட்சிகளில் இருந்து விலகி ஒரு மிகப்பெரிய உலகம் நம்மைச் சுற்றிக் கண்ணீருடன் சுற்றிக் கொண்டே இருக்கிறது,அவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற நோக்கம் ஒரு சமூக உறுப்பினனாக எனது கடமை என்று கருதுகிறேன், குறைந்தபட்ச சமநிலையை நோக்கி நமது உலகம் எல்லாத் துறைகளிலும் நடை போட வேண்டும் என்கிற எனது பேராசையும் இதற்குக் காரணம் எனலாம். தொடர்ந்து சமூக இயக்கத்தை வழி நடத்தும் முன்னோடிகளாகிய உங்களைப் போன்றவர்களின் வழிகாட்டுதலும், ஊக்கமும் இளைய தலைமுறையை செம்மைப்படுத்தும் என்று நம்புகிறேன்.

    நன்றியும், வணக்கங்களும்.

    கை.அறிவழகன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: