கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 5, 2011

ஒருவர் கைது, பலர் தப்பி ஓட்டம்.

raja arrested

ஆ.ராசா கைது செய்யப்பட்டிருக்கிறார், இனி இந்தியாவில் ஊழல் ஒழிக்கப்பட்டு விடும், உழைக்கும் மக்களுக்கு எதிரான எல்லா முதலாளித்துவக் குற்றங்களும் இல்லாமல் போய் விடும் என்பது மாதிரி ஒரு தோற்றத்தை இந்திய ஊடகங்கள் தொடர்ந்து உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன, எல்லாவற்றுக்கும் மேலாக NDTV என்கிற ஆங்கிலக் காட்சி ஊடகம் "தி.மு.கவின் தலித் தலைவர் ஆ.ராசா கைது" என்று ஒரு செய்தியை ஓட விட்டது, தலித்துக்களுக்கும் ஊழலுக்கும், மேல்தட்டு முதலாளிகள் மற்றும் பார்ப்பன பனியாக்களுக்கும் (நல்ல எண்ணமும் முற்போக்கு சிந்தனைகளும் கொண்ட என்னுடைய பார்ப்பன, பனியா நண்பர்கள் மன்னிக்கவும்)  ஊழலுக்கும், குற்றங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று புள்ளி விவரம் எடுத்தால் அனேகமாக இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே தினமும் ஏதாவது ஒரு ஊழல் செய்தியோடு இணைக்க வேண்டியிருக்கும், ஆனால், நம்முடைய வேலை அதுவல்ல.

ஸ்பெக்ட்ரம் ஊழல், ஊழல்களின் தாய் என்று ஒரு செய்தியை ஊடகங்களும் சில அரசியல் தரகர்களும் பரப்பிக் கொண்டிருக்கிறார்களே அது உண்மையா என்று பார்த்தால், ஊழல்களின் ஆதித்தாய், ஆதித்தந்தை எல்லாம் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இந்த செய்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள், இந்த ஊழலில் அடிப்படை அல்லது துவக்கம் முதலாளிகளின் பினாமி நிறுவனமான காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நவீன இந்தியாவை முதலாளிகளிடம் விற்ற நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் இருவரும் தான். இந்திய மக்களின் தொலைத்தொடர்புத் தேவைகளை அரசு எடுத்துக் கொள்ளாமல், அலைக்கற்றை ஒதுக்கீடுகளை அரசு நிறுவனங்கள் கையகப் படுத்தாமல் என்றைக்கு  உலகமயமாக்களில் ஒப்பந்தங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டதோ அந்தப் புள்ளிதான் ஸ்பெக்ட்ரம் ஊழலின் தாய், தந்தை, தாத்தா, பாட்டி எல்லாம் என்கிற உண்மையை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

53592-corporate-lobbyist-nira-radia

ஆ.ராசா இந்த ஊழலில் அல்லது ஊழல் என்று சொல்லப்படுகிற இந்த அரசுக்கான இழப்பில் (இது அரசுக்கான இழப்பா, ஊழலா என்று நம்மை ஆளும் நடுவண் அரசே முடிவு செய்யவில்லை, பிறகு நாம் எப்படி முடிவு செய்வது) என்ன பங்காற்றி இருக்கிறார்?, எவ்வளவு சேர்த்திருக்கிறார்? என்று முடிவு செய்வதற்கு முன்னால் நாம் சில செய்திகளை அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது, இந்த ஊழலின் மூலம் தெள்ளத் தெளிவாக ஒரு செய்தி புலனாகிறது, அது இந்தியாவில் எந்த அமைச்சரும், பிரதமரும் உழைக்கும் மக்களின் நலன்களுக்காகவும், அவர்களின் விருப்பங்களுக்காகவும் தேர்வு செய்யப்படுவதில்லை, பன்னாட்டுப் பெரு முதலாளிகளின் நலன்களுக்காகப் பிரதமர்களும், உள்நாட்டுப் பெரு முதலாளிகளுக்காக அமைச்சர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், இவர்களுக்கென்று தரகர்கள், சிறப்பு அலுவலர்கள், உளவு சொல்லும் அதிகாரிகள் என்று ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது, அவர்களுக்கான ஒரு சிறு எடுத்துக்காட்டு "நீரா ராடியா", ஏறத்தாழ டாட்டா மற்றும் அம்பானிகளின் அதிகார மையமாக இருந்து மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் அரசின் அநேக அமைச்சர்களைத் தேர்வு செய்ய மறைமுகமாக அடிகோலியவர் இந்த "நீரா ராடியா" என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும், ஏன் இவர் கைது செய்யப்படவில்லை என்று ஒரு கேள்வி உங்களுக்குள் கிளம்பி, பதில் கிடைக்காமல் நீங்கள் குழம்பினால், "பாவம் நீங்கள்" இந்திய அரசியலின் மைய நீரோட்டம் குறித்த புரிதல் உங்களுக்கு இல்லை என்று பொருள், நீரா ராடியாவைப் பிடித்தால் டாட்டாவையும், அம்பானியையும் கையைக் காட்டுவார், ஊழலின், குற்றங்களின் ஒட்டு மொத்த உருவங்களான டாட்டாவையும், அம்பானியையும் கைது செய்து விசாரிக்கும் அளவுக்கு இந்தியாவில் எந்த அரசியல்வாதிக்காவது முதுகெலும்பு இருக்கிறதா என்ன? அரசுகளை அமைப்பவர்களும், அரசைக் காப்பவர்களும், அரசைக் குலைப்பவர்களும், அடுத்த அரசைத் தேர்வு செய்பவர்களும் இவர்களாக இருக்கும் போது இவர்களை எல்லாம் ஒப்புக்குக் கூட விசாரிக்க வக்கற்றது தான் நமது குற்றப் புலனாய்வுத் துறை.

Ambani-brothers4

மும்பையில் துணி விற்றுக் கொண்டிருந்த, வளைகுடாவில் பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்த தீருபாய் அம்பானி எப்படி இத்தனை பெரிய தேசத்தின் ஆணி வேரைத் தன் வீட்டு மொட்டி மாடியில் வைத்திருக்கிறான், ஒரு தேசத்தின் நாணயங்களை உருக்கி கள்ளச் சந்தையில் விற்று அந்த நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கத் தெரியுமா உங்களுக்கு?, தெரிந்து கொள்ளுங்கள்!!!! மேற்கண்ட கேள்விக்கு விடை கிடைக்கும், ஊரைக் கூட்டி நீங்கள் எல்லோரும் அரிசி கொண்டு வாருங்கள், நான் உமி கொண்டு வருகிறேன், கலந்து போட்டு இடித்து அவல் சாப்பிடலாம் மாதிரியான வித்தைகள் தெரியுமா உங்களுக்கு?, தெரிந்து கொள்ளுங்கள்!!!!, அமைச்சர்களை நியமனம் செய்யும் அதிகாரம் உங்களைத் தேடி வரும். உங்களின் வரிப் பணத்தையும், எனது வரிப்பணத்தையும் வெளிநாடுகளில் முதலீடு செய்து, அலைபேசிகளின் வழியே உள்நாட்டு எண்களை குரலி வித்தை காட்டி வருகிற வருமானத்துக்கு வரிக் கட்டாமல்  ஏமாற்றும் திறமை இருக்கிறதா உங்களுக்கு? அடுத்த அம்பானி நீங்கள் தான்!!!!.

காங்கிரஸ் செட்டியார் தலைவர்கள், பாரதீய ஜனதாக் கட்சி ஐயர் தலைவர்கள்  (என்னப்பா தலித் தலைவர் என்று ஒருவரைச் சொல்லும் போது இன்னொருவரைச் செட்டியார் தலைவர், ஐயர் தலைவர் என்று சொல்லக் கூடாதா? அதுதானே ஊடக தர்மம்!!!) போன்றவர்கள் எப்படி இந்த இந்திய அரசின் V S N L என்கிற தொலைத் தொடர்பு நிறுவனத்தையே டாட்டாவுக்கு விற்றார்கள் என்று நீங்கள் கேள்வி எழுப்பத் துவங்கினால் இந்திய இறையாண்மைக்கு நீங்கள் இடைஞ்சல் செய்கிறீர்கள் என்று உங்களை உள்ளே போட்டு விடுவார்கள். தனது குடிமக்களுக்கு மிகக் குறைந்த விலையில் தொலைத் தொடர்பு வசதிகளைக் கொடுக்க இருந்த ஒரே வாய்ப்பை சிதம்பரம் குழுவினர் பேரம் பேசி விற்றார்கள். இப்போது அந்த நிறுவனத்தின் பெயர் டாட்டா இண்டிகாம். அலைக்கற்றையில் பணம் செய்யும் வாய்ப்பை அருமையாகத் துவங்கி வைத்தவர் பாரதீய ஜனதாக் கட்சியின் இறந்து போன பிரமோத் மகாஜன்.

Chidambaram-budget

இந்தச் சிக்கலில் தலித் ஆயுதத்தை முதலில் கையில் எடுத்த நமது பெரியாரின் பேரன் ஐயா கருணாநிதி அவர்கள் இப்போது பொதுக்குழுவைக் கூட்டி மீண்டும் ஒரு நாடகத்தைத் துவக்கி இருக்கிறார், திராவிடர்களுக்கு எதிரான போர் நடக்கிறது, ஆரியர்கள் அட்டகாசம், இனப்போர் என்று நீட்டி முழக்கி இருக்கிறார், வெளியில் இருந்து பார்த்தால் உண்மை போலவே தான் தோன்றும், பெரியார் மட ஆதீனம் ஐயா வீரமணி அவர்களும் தீவிரமாக அதனை வழிமொழிகிறார். ஆனால், இதில் என்ன சிக்கல் என்றால், அதெப்படி திராவிடர்களுக்கு எதிராக திராவிடர்களே போர் தொடுக்க முடியும், ஆ.ராசாவை சிக்கலில் நிறுத்த வேண்டும் அல்லது அந்தப் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று தீவிரமாகச் செயல்பட்டவர்கள் மண்டல முதலாளிகளான மாறன் சகோதரர்கள், மாறன் சகோதரர்களின் ஆதரவுடனே வட இந்திய ஊடகங்களும், முதலாளிகளின் தரகர்களும் வீரியமாகச் செயல்பட்டார்கள் என்பது தான் உண்மை, இவர்களுக்கு எதிரான கூட்டணியை அல்லது நிலைப்பாட்டை எடுத்தவர்கள் இளவரசி கனிமொழியும், அவரது படை பட்டாளங்களும், இந்தப் பரிவாரங்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்ததன் மூலமாகவே பல்வேறு சிக்கல்களில் ஆ. ராசா மாட்டிக் கொண்டார் என்பது நடைமுறை உண்மை. (ராசாவுக்கு ஒன்றும் தெரியாது, எல்லாம் கனிமொழிதான் என்பது அல்ல இதன் பொருள்).

kalanidhi %20dayanidhi%20Maran

தி.மு.கவின் உட்கட்சி அரசியலை ஆழமாக கவனித்தால் ஒரு எளிதான உண்மை புலப்படும், கலைஞர் குடும்ப உறுப்பினர்களை விடுத்து எந்த ஒரு தனி மனிதனும் கொள்கை முடிவுகளையோ, மாற்றங்களையோ உண்டாக்க முடியாது, வடமாவட்டங்கள் என்றால் ஸ்டாலினின் ஒப்புதலும், தென் மாவட்டங்கள் என்றால் அழகிரியின் ஒப்புதலும் பெற்றாக வேண்டும், அதிகாரிகள் மாற்றம், மற்றும் சிறு வணிக நிலைப்பாடுகள் முழுதும் தயாளு அம்மாவின் கைகளில், நடுவண் அமைச்சக விவகாரங்கள் மற்றும் துறை சார்பு முடிவுகள் முழுவதும் இளவரசி கனிமொழியின் பொறுப்பு, செய்தி ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் மற்றும் பெரு வணிகங்கள்  முழுவதும் கருணாநிதியின் மனசாட்சியின் மகன்கள் பொறுப்பு என்று கட்சியே கிட்டத்தட்ட குடும்பமாகவும், குடும்பமே கட்சியாகவும் மாறி இருக்கிறது. கருணாநிதியின் ஒப்புதல் இல்லாமலோ, கருணாநிதியின் பார்வைக்கு வராமலோ மாநிலமாகட்டும், மையமாகட்டும் எந்த ஒரு அமைச்சரும் பெரிய அளவில் ஊழல் செய்வதற்கு வாய்ப்பே இல்லை, ராசா செய்ததாகச் சொல்லப்படும் ஊழலோ அல்லது தேசத்தின் வருமான இழப்போ கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் பெரியது, ஒன்று ராசா இந்த ஊழலைச் செய்திருந்தால் சோனியா காந்தி, மன்மோகன் சிங், டாட்டா, அம்பானி, கருணாநிதி, கனிமொழி என்று ஒரு பெரிய படையே ஒன்று கூடித்தான் செய்திருக்க வேண்டும், அல்லது ஊழலே இல்லாமல் கபில் சிபல் சொல்வது மாதிரி மக்களுக்கான சேவையால் நாட்டுக்கு உண்டான இழப்பாகத்தான் இருக்கும்.

DMK_MP_Kanimozhi

இந்த ஊழலின் மூலம் இன்னும் சில நிறுவனங்களையும், மனிதர்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும், முதலாவது நடுவண் அரசின் தணிக்கைத் துறை, இந்தத் துறை இதற்கு முன்பாக எதாவது கொள்கை முடிவுகள் குறித்தோ அதனால் உண்டான தேசிய இழப்புகள் குறித்தோ பெரிய அளவில் ஏதாவது பேசி இருக்கிறதா அல்லது இதன் பெயராவது மக்களுக்குத் தெரியுமா என்றால் இல்லை, இதில் மட்டும் ஐயா முந்திக் கொண்டு நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்று கூச்சலிடுவதன் காரணம் என்ன?  ஐயாவுக்கும் AIRTEL நிறுவனத்தின் சுனில் மிட்டல் பார்திக்கும் என்ன தொடர்பு, சுனில் மிட்டல் ஐயா 1995 ஆம் ஆண்டு துவங்கி வெறும் பதினைந்து ஆண்டுகளில் எப்படி 8 பில்லியன் பணம் சேர்த்தார் என்று கேள்விகள் உங்களுக்குள் எழுந்தால் நீங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என்று பொருள், செட்டியார் தலைவர் இறையாண்மை முழக்கத்தோடு வந்து விடுவார். சரி, சுனில் மிட்டல் ஐயாவுக்கும், நம்ம இந்திய தேசியத்தின் காப்பாளர்களாகிய ஆங்கில செய்தி ஊடகங்களுக்கும் என்ன தொடர்பு? அவர் விளம்பரத்தை நிறுத்தினால் இந்தியக் காட்சி ஊடகங்களில் பலவற்றின் நிலை என்ன ஆகும்? ராசாவைக் குறி வைத்து ஆங்கில ஊடகங்கள் தாக்குதல் நடத்துவதன் பின்னணியில் எந்த வகையான விளம்பரங்கள் இருக்கிறது? 

imagesCA5G5KXQ

ஒரு பக்கம் ஊழல் ஊழல் என்று சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் கபில் சிபல் ஊழலே நடக்கவில்லை என்று சொல்கிறாரே, 100% விழுக்காடு ஊழல் என்று கணக்குத் தணிக்கைத் துறையும், 102 % ஊழல் நடக்கவில்லை என்று அதே துறையின் அமைச்சரும் ஊளையிடுவதன் உள்குத்துத் தான் என்ன? இன்னொரு தேசிய முகம் மத்தியக் குற்றப் புலனாய்வுத்துறை, இந்திய அரசின் மத்தியக் குற்றப் புலனாய்வுத்துறை என்பது ஆளும் கட்சியின் இன்னொரு ஊதுகுழல், ஆளும் கட்சியையே ஆட்டிப் படைப்பவர்கள் முதலாளிகள் என்றால், C B I எல்லாம் வெறும் கரடிப் பொம்மை மாதிரி என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை, என்ன முன்பெல்லாம் கூட்டணி பேரமெல்லாம் C B I செய்யாது, இப்போது சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் பங்கீடு வேண்டுமா, கூப்பிடு C B I ஐ என்கிற அளவில் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இந்தியாவின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்க அம்பானி நடத்திய துறை வணிகத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல் C B I ஐக்கு இருக்குமென்றால் ராசாவின் கைதையும் நன்மை என்று உண்மையிலேயே நாம் கருதி விடும் வாய்ப்பு இருக்கிறது, அமைச்சர்களையும், பிரதமர்களையும் விலைபேசி விற்கவும், பல இந்திய அரசின் நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொள்ளை லாபம் அடிக்கும் டாட்டாவின் வணிகத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சலும், திராணியும் C B I ஐக்கு இருக்குமென்றால் நமது ஆங்கில ஊடகங்கள் சொல்வது போலவே அல்லது சொல்ல வருவது போலவே தலித் தலைவர் கைது செய்யப்பட்டதை நானும் கொண்டாடி மகிழ்வேன்.

sonia_gandhi

நாளும் பொழுதுமாய் மாறி மாறி இந்த தேசமும், அதன் முதலாளிகளும், முதலாளிகளின் அதிகாரப் பூர்வப் பாதுகாவலர்களான அரசியல் தலைவர்களும் சுமைகளை உழைக்கும் எளிய மக்களின் மீது ஏற்றி வைக்க மட்டுமே பழகி இருக்கிறார்கள், உயர்ந்து வரும் எரிபொருட்களின் விலையை அதற்கான காரணத்தைக் கண்டறியவும், எட்டிப் பிடிக்க முடியாத அடிப்படைத் தேவைப் பொருட்களின் விலை உயர்வையும், அதற்கான காரணங்களையும் கண்டறிய இந்த தேசத்தில் எந்தத் தணிக்கைத் துறையும், புலனாய்வுத் துறையும் இல்லை, முதலாளிகளின் வணிகத்தைப் பாதிக்கிற எந்த ஒரு கொள்கை முடிவையும், கோட்பாடுகளையும் குடைந்து குடைந்து ஆராய எல்லாத் துறைகளும் முனைப்புடன் இருப்பதில் தான் ஸ்பெக்ட்ரம் ஊழலின் மூலம் அடங்கி இருக்கிறது. உழைக்கும் மக்கள் சமைத்துச் சாப்பிடுகிற உணவின் ஒரு பகுதியான வெங்காயத்தை, தக்காளியைப் பதுக்கி அவற்றின் விலையைத் தாறுமாறாக ஏற்றிக் கொள்ளையடிக்கும் குற்றத்தையும், ஊழலையும் விட இந்த முதலாளிகளின் சதிராட்டமான ஸ்பெக்ட்ரம் ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை, இருக்கிற எல்லா வாய்ப்புகளையும் முதலாளிகளுக்குப் பட்டயம் போட்டுக் கொண்டு பழங்குடிகளின் மீது போர் தொடுக்கிற தேசத்தில் நீதியையும், நேர்மையையும் மக்களாட்சியின் மூலம் கொண்டு வரலாம் என்று நம்புவது கடினம் தான்,   ஒரு குற்றவாளியின் கைதுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிற பல குற்றவாளிகளை நாம் இனி ஒரு எகிப்து புரட்சி நடத்தித்தான்  கண்டுபிடிக்கவும், களை எடுக்கவும் முடியும் போலிருக்கிறது, ஆனால், உறுதியாக அது நிகழ முடியாத கனவொன்றும் இல்லை என்பது மட்டும் தெரிகிறது.

untitled

இறுதியாக, ஆ.ராசாவின் பின்னால் அல்லது அவர் சொன்ன தலித் மக்களின் பின்னால் உண்மையிலேயே கருணாநிதி இருந்தால் காங்கிரஸ் அரசுக்கு அவர் கொடுக்கிற ஆதரவை விலக்கிக் கொண்டு போராடட்டும் பார்க்கலாம், ஆனால், அப்படி எல்லாம் எதிர்பார்க்க நாம் என்ன தலித் தலைவர் திருமாவளவனா? அல்லது தேவர் தலைவர் (அதாம்பா கவிப்பேரரசர்) வைரமுத்துவா? பல ஆயிரம் உயிர்கள், எம் சொந்த உறவுகள், பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் கொல்லப்படுவதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் எல்லா உதவிகளையும் செய்து தனது ஆட்சியையும், அமைச்சகங்களையும் காப்பாற்றிக் கொண்ட கர்ம வீரர் கருணாநிதியிடம் போய் தலித் மக்களுக்காக, தாமரைக்குளம் மக்களுக்காக, உத்தபுரம் மக்களுக்காக என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால், காவல்துறை அடியாட்கள் வந்து பின் மண்டையில் அடிப்பார்கள் என்பதால் கட்டுரை இத்துடன் முடிவடைகிறது.

imagesCA2Y15C8

*************

Advertisements

Responses

  1. nalla katturai…

  2. பகிர்வுக்கு நன்றி!

  3. dalith endraal ivangal ellarukkum ilakkaram anne. manasula ullatha elutheeteenga nandri.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: