கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 12, 2011

மனச்சிதைவு (சிறுகதை)

Dead%20City

அது ஒரு மழைக்கால இரவு, ஒரு அவசர வேலையாக அலுவலகம் என்னை இந்த ஊருக்கு அனுப்பி இருக்கிறது, இந்த ஊர் எனக்கு புதியது மட்டுமில்லை, கொஞ்சம் அச்சம் தருவதாகவும் இருக்கிறது, எண்ணெய் சேகரிக்கக் கொள்கலன்களை கட்டுவது தான் என்னுடைய வேலை, இந்த ஊரின் பழைய கட்டிடங்களும், சிதிலமான வீடுகளும் அது பாதி அழிந்து போன பழைய நகரம் என்பதைச் சொல்லாமல் சொல்லியது, இந்த ஊர் இப்போது சில பழைய பறவைகளும், பல தெருநாய்களும் மட்டுமே வசிக்கத் தகுதியானதாகி விட்டது, இங்கிருக்கும் மனிதர்கள் அதிகம் புன்னகைப்பதோ, சிரிப்பதோ இல்லை, இவர்களின் மொழி கூட வேறு மாதிரியாக மாறி விட்டிருந்தது, உலகின் பொதுவான சில மொழிகள் மட்டும் இவர்களிடம் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது, கோபம், வன்மம், இனவெறி என்று உலகெங்கும் பொதுவாகப் பேசப்படும் மொழிகளை நன்கறிந்தவர்கள் சீருடைகளில் வலம் வருகிறார்கள், சோதனை செய்கிறார்கள். வேலைகளை விரைந்து முடித்துக் கொண்டு நான் அறைக்கு வந்து விட்டேன், வரும் வழியில் சாலையில் ஒரு வினோதமான மனிதனைப் பார்த்தேன், அவன் நன்கு குடித்திருந்தான், அவனுடைய கால்கள் காற்றில் நடந்து கொண்டிருந்தன, அவனுடைய கண்கள் மண்டையோட்டில் இருந்து கொஞ்சம் விலகி இருப்பது மாதிரி இருந்தது, அவன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தான், அவனுடைய புன்னகை ஒரு புகைமூட்டம் போல என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது, நான் வேகமாக நடக்கத் துவங்கினேன், அவன் மீண்டும் ஒரு புன்னகையை என்னை நோக்கி ஏவியது போலத் தெரிந்ததும் நான் ஓடத்துவங்கி இருந்தேன், நான் தங்கி இருந்த விடுதியின் கட்டிடம் என் கண்களில் பட்டதும் கொஞ்சம் பயம் தெளிந்த மாதிரி இருந்தது,

வேலை தொடர்பாக உலகின் வெவ்வேறு ஊர்களுக்குப் போய் வந்திருந்த போதும், பல நாட்கள் மலை, காடுகள் என்று தங்கி இருந்த போதும் இப்படியான ஒரு அச்சமூட்டும் சிறு நகரத்தை நான் பார்க்கவில்லை, மனிதர்களுக்குப் பதிலாக, ஒரு பகல் பாலைவனத்தில் விடப்பட்ட பறவைகளைப் போல மரங்களிலும், கட்டிடங்களிலும் அலைந்து திரிந்தது, இரவு எப்படி இருக்குமோ? என்கிற பயம் மாலை நேரத்திலேயே துவங்கி விட்டது, விடுதிக்குள் நுழைந்து அறைக்கதவை அடைத்து விட்டு படுக்கையில் சாய்ந்தேன், அழைப்பு மணி ஒலித்தது, அழைப்பு மணியின் ஓசை கடைசியாக நான் சென்று வந்த ஒரு இறப்பில் கேட்ட அழுகைச் சத்தம் போலவே இருந்தது, எழுந்து கதவைத் திறந்தபோது எதிரில் புகை நிரம்பிய புன்னகையோடு வழியில் கண்ட வினோத மனிதன் நின்று கொண்டிருந்தான், இப்போது அவன் புன்னகைக்கவில்லை, “ஏதாவது வேண்டுமா?” என்று வேறெங்கோ பார்த்தபடி என்னிடம் கேட்டான், அவன் முகம் இறந்து போயிருந்தது, அவனுடைய தோல் கரிசல் சேற்று நிறத்தில் அறையின் உள்விளக்கொளி பட்டு மின்னியது, “எனக்கு எதுவும் தேவையில்லை” என்று சொல்லி விட்டு அவனுடைய முகத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க விருப்பம் இன்றிக் கதவை ஓங்கி அறைந்து சாத்தினேன், மெல்லிய இழையாக எங்கிருந்தோ உள்நுழையும் இசையைப் போல சிறிது நேரத்திற்கு முன் நின்று போன மழையோசை அறைக்குள் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தது, எனது கைகள் நடுக்கம் கொண்டிருந்தன, விடுதியின் மிக நீண்ட அந்தத் தளத்தில் என்னைத் தவிர மனிதர்கள் யாரும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை.

simeon

மாலை கவிழ்ந்து கொண்டிருப்பதை சாளரத்தின் காட்சிகள் சொல்லிக் கொண்டிருந்தன, தொலைவில் ஒரு சிறு மலையும், அதன் மீது எரியும் விளக்கும் கண்ணில் பட்டது, அந்தக் காட்சி ஏனோ ஒரு விதமான தளர்ச்சியையும் சோர்வையும் எனக்குக் கொடுத்தது, அந்தக் காட்சியை இன்னொரு முறை காண்பதற்கு ஒப்புதல் இன்றி சாளரக் கதவுகளைச் சாத்தினேன், இருட்டு அறைக்குள் குதித்தது மாதிரி இருந்தது, உணவுக்காக வெளியில் போக வேண்டுமென்றால் படர்ந்து நீண்டு கிடக்கும் ஆளரவமற்ற மூன்று தளங்களைக் கடந்து போக வேண்டும் என்கிற அச்சம் அறைக்குள்ளேயே நீண்ட நேரம் என்னை முடக்கியது, தொலைபேசியின் வழியாக இரண்டு ரொட்டியும், கோழியும் கொண்டு வருமாறு சொல்லி விட்டு மீண்டும் படுக்கையில் சாய்ந்து கொண்டேன், இரவு நகரத்துக்குள் வந்து விட்டிருந்தது, நகரும் வெளிச்சப் புள்ளிகள் சாளரக் கண்ணாடிகளில் தெரிந்தது. தொலைவில் அந்த வினோத மனிதனின் புன்னகை புகை நகர்வதைப் போல அலைவது மாதிரித் தெரிந்தது, இப்போது அவன் ஒரு சங்கிலியால் கட்டப்பட்டிருந்தான், அது ஒரு நீளமான சங்கிலி, அதன் ஒரு முனை அவன் கால்களில் கட்டப்பட்டிருந்தது, இன்னொரு முனையை என்னால் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை, அது எனது நெற்றி உயரத்துக்குத் தெரிகிறது, பிறகு எங்கே போகிறது என்று குழப்பமாக இருந்தது.

படுக்கையில் இருந்து கண் விழித்த போது வானம் மங்கலாய் சில நட்சத்திரங்களோடு மேகங்களை எங்கோ துரத்திக் கொண்டிருந்தது, கொஞ்ச நேரம் நான் வானத்தையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தபோது தான் நான் அறைக்குள் இருப்பது புலனுக்கு எட்டியது, மனம் தீவிர நடுக்கம் கொண்டு அலறி எழுந்தேன், இப்போது அறையின் கூரையும், அதன் நடுவில் சுழலும் பழைய மின்விசிறியும் கண்ணில் பட்டது, ஒரு வேளை கனவாக இருக்குமோ என்று தோன்றியது, கனவில் இத்தனை தெளிவான வானத்தையும், நட்சத்திரங்களையும், மழை மேகங்களையும் நான் பார்த்ததே இல்லை, குழப்பமும், பயமும் சூழ எழுந்து நின்றேன், அழைப்பு மணி ஒலித்தது,  உணவு வந்திருக்க வேண்டும் என்று எழுந்து கதவைத் திறக்க வேறொரு உடைகளற்ற சிறுவன் நின்றிருந்தான், “உணவுக்கு வெளியே போகிறேன், உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என்றான்.  “ரொட்டியும், கோழியும் உணவகத்தில் சொல்லி இருக்கிறேன்” என்று சொல்ல அவன் என்னை வியப்பாகப் பார்த்தான், பின்னோக்கி நடக்கத் துவங்கியவன், திரும்பி நின்று எந்த உணவகத்தில் என்றான்? விடுதி உணவகத்தில் என்று நான் சொல்ல, விடுதி உணவகம் ஆறு மணிக்குக் கடைசித் தேனீர் கொடுத்தவுடன் மூடப்பட்டு விடும் என்று சொல்லி விட்டு நடக்கத் துவங்கினான், நான் உணவகத்திற்குத் தொலைபேசியில் சொன்ன போது ஏழு மணிக்கு மேலிருக்கும், இப்போது மணியைப் பார்த்தேன் எட்டு ஆக இன்னும் பத்து நிமிடங்கள் மிச்சம் இருந்தது. அப்படியென்றால் என்னுடைய அழைப்பை எடுத்தது யார்?, அட்டையில் இருக்கும் உணவக எண்ணை ஒரு முறை சரி பார்த்தேன், 203 என்று சரியாகவே இருந்தது, எண்களை அழுத்தி இப்போது முயற்சி செய்தேன், யாரும் எடுக்கிற மாதிரி இல்லை. படுக்கையில் சாய்ந்து கிடைக்கையில் உறங்கிப் போயிருந்தேன். படக்கென விழிப்பு வரவும், சாளரங்கள் திறந்து கிடந்தன, சாலையில் காட்சிகள் மாறி இருந்தது, சில குழந்தைகள் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தார்கள், நான்கு குழந்தைகள் பள்ளி ஊர்திக்காகக் காத்திருக்கையில் விளையாடிக் கொண்டிருந்தார்கள், "அத்தலி, புத்தலி, மக்கான், சுக்கான் பால் பரங்கி ராட்டணம்……………அத்தலி, புத்தலி, மக்கான்……….." அவர்களின் மகிழ்ச்சியான கரவொலியில் உலகம் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது, அவர்களின் புன்னகை அந்தச் சாலையெங்கும் பரவி வெளிச்சமாய் சூரியனை நோக்கிப் பயணிக்கிறது, வெள்ளை உடையில் அவர்கள் இந்த பூமியின் நிர்வாணத்தை மறைத்துக் கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த பூங்காவின் வேலியை உடைத்துக் கொண்டு ஒரு மலர் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

tamilmakkalkural_blogspot_kilinochi4

எனக்கு நினைவு திரும்பிக் கொண்டிருந்தது, அறையின் இருட்டும், மின்விசிறியும் கண்களில் தெரிய இப்போது பூரண அமைதி நிலவியது, அமைதியின் அடி ஆழத்திலிருந்து இப்போது சில குழந்தைகள் அழும் ஓசை கேட்கத் துவங்கியது, வெடியோசைகளும், அலறல்களும், பிண்ணனியில் ஒலிக்க குழந்தைகள் விம்மி அழும் ஓசை அறையெங்கும் பரவத் துவங்கியது, இடையில் பின்னந்தலை உடைபட்ட மனிதன் சன்னமான குரலில் யாரையோ தேடித் திரிவதும், சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனிதன் புன்னகைக்க முயல்வதும் படக்காட்சிகளைப் போல அறையின் சுவர்களில் தெரிய நான் உணர்வுகளை இழக்கத் துவங்கி இருந்தேன். அழைப்பு மணியோசை ஒலிக்க தன்னிச்சையாய் நடந்து கதவுகளை அகலத் திறந்தேன், நீண்ட அந்த ஆட்களற்ற தளத்தின் சுவர்கள் அற்ற வெளியோடு பக்கத்து விளையாட்டு மைதானம் இணைக்கப்பட்டிருந்தது. அதில் சில சிறுவர்கள் பந்தாடிக் கொண்டிருந்தார்கள், அவர்களின் கண்களில் ஒளி நிரம்பி இருந்தது, அவர்கள் கவலைகள் ஏதுமின்றி பாட்டும் கூச்சலுமாய் ஆட்டத்தில் கவனமாய் இருந்தார்கள், நான் கதவைத் திறப்பதையோ, வாசலில் ஒரு குழந்தை நின்று கொண்டிருப்பதையோ அவர்கள் கவனிக்கவில்லை.அந்தக் குழந்தை என்னிடத்தில் வந்து "அம்மா எங்கே?" என்று கேட்டது,  “நான் நாளைக்கு வேலைக்குப் போக வேண்டும்” என்று சொன்னேன், சில பெண்கள் அருகருகில் கூட்டமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள், அவர்களின் பேச்சில் மகிழ்ச்சியும், கருணையும் பெருகி வழிந்து கொண்டிருந்தது. அவர்கள் அமர்ந்திருந்த இடைவெளியில் ஒரு குழந்தையின் பிணம் கிடத்தப்பட்டிருந்தது, அது பற்றிய எந்தக் கவலையும் இன்றிச் சிலரது புன்னகை ஒரு மாலையாக்கப்பட்டு அந்தக் குழந்தையின் உடல் மீது சாத்தப்பட்டிருந்தது. தளத்தின் முடிவில் தெரிகிற பன்னீர் மரத்தடியில் சில மலரிதழ்கள் சிதறிக்கிடந்தது, அங்கொரு இளம்பெண் புன்னகையைப் பொறுக்கி ஒரு கண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் சேகரித்தபடி யாரையோ பார்த்துப் புன்னகைக்கிறாள். வாழ்க்கையும், மகிழ்ச்சியும் அந்தத் தளம் முழுவதும் பெருகி படிக்கட்டுகளில் நீரைப் போல ஒழுகிக் கொண்டிருந்தது. கீழ்த்தளத்தில் அது பிசுபிசுப்பான குருதியாய் வழிந்து படர, கண்களுக்குப் பதிலாக இரண்டு கோழிக் குண்டுகளைப் பொருத்தி இருந்த சிறுவர்கள் இருவர் பாட்டுப் பாடியபடி அதனைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள்,  முன்பு உயிரோடு இருந்த அந்தக் குழந்தையின் தாயும் தந்தையும் அளித்த விருந்து  ஒன்றில் நான் தொலைபேசியில் சொன்ன ரொட்டியும், கோழியும் வாழை இலைகளில் பரிமாறப்பட என் இரவு உணவு முடிந்து போனது. எலும்புத் துண்டுகளைத் தின்று குரைத்த நாயொன்று இரவை எனக்கு நினைவுபடுத்துகிறது, மீண்டும் படுக்கையில் தள்ளப்பட்டேன் நான்.

gaza-city-tank-fire-dead-children2

விடியலின் அடையாளங்கள் சாளரங்களைத் துளைத்துப் படுக்கையை அடைய நான் கண் விழித்துப் பார்க்கிறேன், அறையின் கதவுகள் திறந்து கிடக்கிறது, சில விடுதிப் பணியாளர்கள் தேநீர்க் கோப்பைகளை ஏந்தியபடி நடந்து கொண்டிருக்கிறார்கள். வெளியில் காற்று வேகமாக அடிக்கத் துவங்கி இருந்தது, விளம்பரத் தட்டிகளைக் காற்று அசைத்தபடி சாலையில் நடக்கத் துவங்கியது, எழுதி முடிக்கப்பட்ட சிறுவர்களின் நோட்டுப் புத்தகங்களில் இருந்து காகிதங்கள் மேலே பறக்கத் துவங்கி இருந்தன, சாளரங்களைத் திறந்து விடியலைத் தேடுகையில்  பின்னந்தலை உடைந்த மனிதன் அந்தச் சாலையில் நடந்து கொண்டிருந்தான், அவனது கழுத்தின் வழியாக ரத்தம் வழிந்து கொண்டிருந்தது, அவனது பின்னந்தலையில் இருந்த மண்டை ஓடு பிளந்து தொங்கிக் கொண்டிருந்தது, அவன் யாரையோ தேடிக் கொண்டு நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறான். அவனது கழுத்தில் இருந்து வழிந்து சாலையில் சொட்டும் ரத்தத் துளிகளில் சில குழந்தைகளின் சிரிப்பும், பாட்டும் மூழ்கிக் கொண்டிருக்க "அத்தலி, புத்தலி, மக்கான், சுக்கான், பால், பரங்கி, ராட்டினம்………ம்ம்ம்ம், ம்ம்ம்ம்ம்ம், ஆ ஆ ஆ ஆ ஆ, அம்மா, அப்பா" என்று அழுதபடி அவன் புன்னகைக்க முயற்சி செய்கிறான்.

சாளரங்களில் தெரியும் சூரிய ஒளியோடு இன்னொரு வேலை நாள் வந்து விட்டிருக்கிறது எனக்கு. நான் வேலைக்குப் போக வேண்டும், எண்ணைக் கிணறுகளைச் சரியாகக் கட்டி முடிக்க வேண்டும், வரைபடங்களை என் முதலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும், எனக்குக் குழந்தைகள், அவர்களின் அழுகைக்குரல், அவர்களின் சிரிப்பொலி, பாட்டு இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டிருக்க நேரமில்லை, குளித்துக் கிளம்பி, அலுவலகம் நோக்கி நடக்கத் துவங்குகையில் என் குழந்தையின் நினைவு வந்தது, கூடவே நேற்று இரவில் வந்த குழந்தைகளின் அழுகைச் சத்தமும், வெடியோசைகளும் அதன் கோரமும் துரத்தி வருகிறது, நான் முன்னிலும் வேகமாக நடக்கத் துவங்குகிறேன், சங்கிலியால் கட்டப்பட்ட மனிதன் தனது புன்னகையை என்னை நோக்கி ஏவுகிறான், “போர், போர்” என்று கத்திக் கொண்டே அலுவலகத்தை நோக்கி இப்போது நான் ஓடத் துவங்கினேன். என்னைக் கடந்து மிக அமைதியாய் ஒரு ராணுவ வீரன் நடந்து கொண்டிருக்கிறான், அவனது சட்டைப்பையில் சிங்கள மொழியில் "அமைதி காப்பவன்" என்று எழுதப்பட்டிருந்தது, அவனது தலைக்கு மேலே ஒரு பெயர்பலகை உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது, அதில் மூன்று மொழிகளில் "கிளிநொச்சி" என்று எழுதப்பட்டிருக்கிறது. 266919c6293fd060d97d01bc90fe_grande

***********

Advertisements

Responses

  1. story confusing and depressing mind in a different way. this trend looks like a ghost thriller but ends and briefs real people’s tragedy on war.

    • Din lille opstilling ser rigtig dejlig ud. Dog vil jeg tilslutte mig de øvrige koranetmrem; Den Søstrene Grene, der er i nærheden af mig er noget kedelig ift. de ting du og andre finder…KH Puk

  2. vaazhthukkal.
    mullaiamuthan

  3. “கோழி”க் குண்டுகளைப் பொருத்தி saria?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: