கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 14, 2011

காதலாகிக், கசிந்துருகிப், பின் அட்டைப்பெட்டி சுமந்து………..

romantic-love-painting-wallpaper

உலகம் மிகப் பெரியதாக இருந்தபோது, நான் சிறுவனாக இருந்தேன், நான் பெரியவனாக வளர்ந்து பார்த்தபோது உலகம் மிகச் சிறியதாகி விட்டது. ஆம், என்னுடைய உலகம் மிகச் சிறியது, என்னுடைய உலகத்தில் இரண்டொரு சொற்களும், சில முத்தங்களுமே மீதமிருக்கின்றன, தத்துவங்கள், சித்தாந்தங்கள், கோட்பாடுகள், கட்சிகள், சாதிகள், மதங்கள் என்று தங்களின் மீது வண்ணம் பூசிக் கொண்டு இல்லாத பெரிய ஒரு உலகத்தை மனிதர்கள் கட்டி அமைத்திருக்கிறார்கள், நாளின் கடைசியில் அன்போடு பரிமாறப்படும் ஒரு தட்டுச் சோறும், ஒரு கோப்பைத் தேநீரும் தான் உலகம் என்பதை ஏனோ நாள் துவங்கும் போதினில் பலர் ஏற்றுக் கொள்வதில்லை, இயந்திரங்களும், ஊர்திகளும் பலரது உலகத்தைப் பெரிதாய் மாற்றி அமைக்கின்றன, ஓலைக் குடிசை ஒன்றின் வழியாய்ப் பயணிக்கும் காற்றும், குளிரூட்டப்பட்ட படுக்கையறையில் கிடந்தது புரளும் காற்றும் அதே இதழ்களையும், பருவ முத்தங்களையும் பார்த்து நாணிக் கொண்டு சாளரங்களின் வழியே தலை குனிந்து தப்பி விடுகின்றன. மிகப் பெரிய போர்களும், இனப் பேரழிவுகளும் ஒரு சில சொற்களில் தான் உருவாகிக் கிளைத்துத் துளிர்க்கின்றன. மனிதனின் ஆழ்மனதில் எப்போதும் இருக்கும் ஆசைகளும், வன்மங்களும் தான் இந்த உலகின் பெரும் துன்பங்களுக்கும், அழிவுகளுக்கும் காரணமாகி வரலாறாகி விடுகின்றன.

சில காலங்களுக்கு முன்னாள் ஒரு சின்னஞ்சிறிய கதை படித்தேன், காதல் அல்லது அன்பு என்றால் என்ன என்பது குறித்த சிக்கலான கேள்விக்குரிய விடையை மிக எளிமையாக அந்தக் கதை எனக்கு உணர்த்தியது, உலகம் மிகச் சிறியது என்கிற எளிய உண்மையை அந்தக் கதையின் வாயிலாக முற்றிலும் நம்பத் துவங்கினேன் நான். பகுதி நேரமாக அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்ட வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை விற்கும் சிறுவன் ஒருவன் குறித்த கதை அது. அவன் பெயர் டேவிட்சன் ஸ்மித், ஏழ்மையின் பொருட்டு அவன் வீதிகளில் அலைந்து திரிகிறான், தனது பள்ளி நேரம் போகக் கிடைக்கும் காலத்தைத் தனது வயது முதிர்ந்த தாய், தந்தையர்க்காக நகர வீதிகளில் செலவிடுகிறான் அந்தச் சிறுவன், ஒரு நாளின் நண்பகலில் வயிற்றுப் பசி அவனை வாட்டி எடுக்கிறது, உணவு வாங்க வேண்டுமென்றால் இன்னும் இரண்டொரு பொருட்களையாவது அவன் விற்று முடிக்க வேண்டும், ஆனால், விற்பனை அவன் நினைத்ததைப் போல இருக்கவில்லை, பசியின் மயக்கத்தோடு அவன் ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறான், ஒரு இளம்பெண் அந்த வீட்டின் கதவைத் திறந்து கொண்டு "என்ன வேண்டும்?" என்று கேட்கிறாள், குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று அவளிடம் கேட்கிறான் அந்தச் சிறுவன், சிறுவனின் முகத்தில் இருக்கும் களைப்பையும், பசியையும் கண்டு கொண்டு உள்ளே செல்கிறாள் அந்தப் பெண், வரும் போது அந்தப் பெண்ணின் கைகளில் ஒரு கோப்பை நிறையப் பாலும், சில ரொட்டித் துண்டுகளும் இருக்கிறது, ஒரு புன்சிரிப்போடு அவனை அமர வைத்து உணவளிக்கிறாள் அந்தப் பெண். உணவு முடித்ததும் "இந்த உணவுக்காக நான் உங்களுக்கு எவ்வளவு தர வேண்டும்?" என்று அவளிடம் கேட்கிறான் அந்தச் சிறுவன், "இந்த வீட்டில் அன்பை நாங்கள் விலைக்கு விற்கக் கூடாதென்று அம்மா கண்டிப்புடன் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்" என்று அதே புன்முறுவலோடு பதிலளிக்கிறாள் அந்தப் பெண். "உன் பெயர் என்ன?" என்று விடைபெறும் போது கேட்கிறாள் அந்தப் பெண், "டேவிட்சன் ஸ்மித்" என்று சொல்லி விட்டு நடக்கிறான் அந்தச் சிறுவன்.

76529304

காலம் உருண்டோடி பத்துப் பதினைந்து மழைக்காலங்களையும் அசைக்க முடியாத மன உறுதியையும் அந்தச் சிறுவனுக்குக் காட்டியது, அந்தச் சிறுவனை அந்த இளம்பெண் மறந்து விடுகிறாள், ஆனால், பிணியும், மூப்பும் அந்தப் பெண்ணை அடிக்கடி நினைத்துக் கொள்ள கடும் நோய் வாய்ப்படுகிறாள் அந்தப் பெண், உள்ளூர் மருத்துவர்கள் கைகளை விரிக்கத் தனது நிலங்களை விற்று மருத்துவம் செய்யப் பெருநகரம் நோக்கி நகர்த்தப்படுகிறாள் அந்தப் பெண், பெருநகரத்தின் பொருளாசையோ அவள் நிலத்திற்கு ஈடாகி விடவில்லை, ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுப் பல மருத்துவர்களால் சோதனை செய்யப்படுகிறாள் அன்பு நிரம்பிய அந்தப் பெண். இந்த நோய்க்கான சிறப்பு மருத்துவரும், மருத்துவமனையின் சொந்தக்காரருமான ஒருவர் நாளை வருகிறார், அவரிடம் கேட்டுக் கொண்டு மேல் சிகிச்சையைத் தொடருவோம் என்று மருத்துவமனை சொல்லிவிட அந்த சிறப்பு மருத்துவருக்காக அந்தப் பெண்ணும் காத்திருக்கிறாள், மறுநாள் அங்கு வந்த சிறப்பு மருத்துவர் சில நாட்கள் தங்கி இருந்து அந்தப் பெண்ணுக்குச் சிகிச்சை அளிக்கிறார், பல பரிசோதனைகளுக்குப் பிறகு அந்தப் பெண்ணின் நோய்க்கான அறுவை சிகிச்சையைச் செய்து முடிக்கிறார், மிகப்பெரும் செலவு மிகுந்த அந்த அறுவை சிகிச்சைக்கான கடனுக்காகவே இனி நாம் உயிர் வாழ வேண்டும் என்கிற மன உளைச்சலில் வாடுகிறாள் அந்தப் பெண். ஆனால், உடல் நலம் பெறுகிறது, இறுதியாக வரப்போகும் தொகைக்கான குறிப்பை நோக்கி அந்தப் பெண் அச்சத்தோடு காத்திருக்கிறாள், அந்தக் குறிப்பும் வருகிறது, உறைக்குள் அடைப்பட்டிருந்த குறிப்பை கையில் எடுத்துப் பிரிக்கிறாள் அந்தப் பெண், அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது

" உங்கள் செலவு முழுவதும் ஒரு கோப்பைப் பாலினாலும், சில ரொட்டித் துண்டுகளாலும் அடைக்கப்பட்டு விட்டது" – டாக்டர்.டேவிட்சன் ஸ்மித்.

கண்ணீர் பெருக்கெடுக்க அந்த மருத்துவரைப் பார்க்க ஓடி வருகிறாள் அந்தப் பெண், தனது நகர வீதிகளில் அலைந்து திரிந்த அந்தச் சிறுவனைக் கண்டு கொண்டு அவள் விழி நனைக்கிறாள், தனது மென்மையான கரங்களால் அந்த விழியில் வழியும் நீரைத் துடைக்கிறான் அதே பழைய சிறுவன். எத்தனை எளிமையாகவும், அழகாகவும் அன்பை இந்தக் கதை விளக்கிச் சொல்கிறது.

சரி, இந்தக் கதைக்கும், காதலர் தினத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? நண்பர்களே???

1200042907708

நிறைய இருக்கிறது, இதே போல விலை மதிக்க முடியாத அன்பையும், நேசத்தையும் எல்லோரது வாழ்க்கையிலும் வழங்க சில மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் நலனையும், வாழ்க்கையையும் பொருட்டாகக் கருதுவதில்லை, அவர்கள் நமது கண்களில் தென்படும் புன்னகைக்காகவே வாழ்கிறார்கள், அவர்கள் நமது பசியையும், உணவையும் பற்றியே தாங்கள் பட்டினியாக இருக்கும் போதும் சிந்தனை செய்கிறார்கள். பள்ளித் தேர்வுக்கான கட்டணத்தைக் கேட்டபோது பைகளைத் தடவிப் பார்த்து என்னைத் தனது மிதிவண்டியில் ஏற்றிக் கொண்டு நீண்ட தொலைவு பயணித்து யாரோ ஒருவரிடம் எனக்குத் தெரியாமல் கடன் வாங்க முயன்ற அப்பா, தனது மகனின் குடல்வால் அறுவை சிகிச்சையின் போது அழுது புரண்டு ஊரைக் கூட்டிய அம்மா என்று நம்மைச் சுற்றிலும் சில மனிதர்கள் வாழ்கிறார்கள், எனது முகத்தில் தெரியும் சுருக்கங்களை வைத்தே எனது தேவை என்னவென்று இன்று வரை கண்டறியும் தந்தையின் அன்புக்கு என்னிடம் விலை இல்லை, அண்ணி இல்லாத நேரங்களில் அண்ணனுக்குச் சமைத்து வைத்துக் காத்திருக்கும் தம்பியின் அன்புக்கு என்னிடம் விலை இல்லை. இப்படி நம்மைச் சுற்றி உலகம் சில எளிய சமன்பாடுகளில் முடிந்து போகிறது உலகம், பொன்னையும், பொருளையும் நோக்கி ஓடும் பல மனிதர்களின் முகத்தில் இருந்து தொலைந்து போயிருக்கிற வாழ்க்கையை நான் கண்டிருக்கிறேன். ஒரு அன்பான முத்தத்தையும், மிக அழகான சொல்லையும் எதிர் கொள்ளாமலேயே சில மனிதர்கள் இறந்து போகிறார்கள். அவர்களின் வாழ்க்கை முற்றுப் பெறாத தொடராக வீதிகளில் அலைகிறது.

காதலின் வலிமை இரண்டு இணை ஆடைகளோடும், இரண்டு நூறு ரூபாய்த் தாள்களோடும் என்னையும் ஒரு பெருநகரத்தை நோக்கி விரட்டியது, சாதியும், அதன் கோரமும் எல்லாக் காதலர்களையும் விரட்டியது போலவே என்னையும் விரட்டத் தவறவில்லை, அப்போது காலை நீட்டிப் படுக்க முடியாத ஒரு அறையில் வாழ்க்கையைச் சொல்லிக் கொடுத்தாள் ஒரு சின்னஞ்சிறு பெண், ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து இரவு எட்டு மணி வரையில் பக்கத்தில் இருக்கும் ஒரு அட்டைப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்து உயிர் வாழ்வதற்கான உணவு செய்திருக்கிறாள் அந்தச் சின்னப் பெண், தன்னுடைய உணவைப் பற்றி அவள் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை, ஏதுமற்ற அத்தனை இரவிலும் ஏதாவது ஒன்றைச் சமைத்து செய்து என் மனதில் நிறைந்து இருக்கிறாள் ஒரு சின்னப் பெண், வேலை தேடி நான் செல்லும் போதெல்லாம் அவளிடம் எங்கிருந்து முளைத்து வரும் பணம் என்கிற மந்திரம் குறித்து அவள் இது வரையில் என்னிடம் சொன்னதில்லை, கடைசியாக அவளிடம் இருந்த கொலுசு காணாமல் போயிருப்பது குறித்துப் பின்னொரு நாளில் அறிந்து கொள்வேன் நான்.

taj-mahal56

காதல் பரிசுப் பொருட்களிலும், முத்தங்களிலும் இருக்கும் என்பதை மாற்றி அது அட்டைப் பெட்டிகளையும், இன்னும் பல கடும் வேலைகளையும் செய்யும் தனது கரங்களில் கூட இருக்கும் என்று எனக்குக் கற்றுக் கொடுத்தவள் அந்தச் சின்னப் பெண், அவள் என்னை நேசித்ததற்குப் பதிலாகப் பல நாட்கள் வறுமையையும், பசியையும் தான் அவளுக்குக் கொடுத்திருக்கிறேன், ஆனாலும், அது நான் கொடுத்தது என்று மகிழ்ச்சியோடு அந்தப் பரிசுகளை ஏற்றுக் கொண்டிருக்கிறாள் அந்தச் சின்னப் பெண். நகைகளையும், உடைகளையும் கேட்கும் பல பெண்களுக்கு நடுவில் அவள் வாழ்ந்திருந்தாலும் என்னிடம் அவள் கேட்டது எல்லாம் ஒரு சின்னப் புன்னகையும், சில முத்தங்களும் மட்டும்தான். தந்தையின் உடல் நலம் குன்றி அவர் படுக்கையில் இருந்தபோது ஒரு மகளைப் போல அவரருகில் இருந்து பலருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவள் அந்தச் சின்னப் பெண். வாழ்க்கையை, அதன் சுவையை பல்வேறு புற ஆற்றல்களுக்கு நடுவில் என்னிடம் இருந்து பிரித்து விடாமல் காத்தவள் அந்தச் சின்னப் பெண்தான், கடினமான பல நாட்களை மிக எளிமையாக எதிர் கொண்டு என்னை அழித்து விடாமல் காத்தவள் அந்தச் சின்னப் பெண்தான். இனி வரும் என் தலைமுறைகள் என்ன சாதியென்று யாரும் கேட்க முடியாதபடி குழப்பம் செய்தவள் அந்தச் சின்னப் பெண் தான். பல அரசுகள் இந்த தேசத்தில் போட்ட சட்டங்களால் நிகழ்த்த முடியாத ஒன்றை இரண்டு குடும்பங்களின் எதிர்ப்பை உடைத்து இந்த சமூகத்திற்கு உரக்கச் சொன்னவள் அந்தச் சின்னப் பெண்.

நான் இலக்கியத்தை விடவும், என் மொழியை விடவும், என் இனத்தை விடவும், இன்னும் எல்லாவற்றை விடவும் அவளை நேசிக்கிறேன், ஏனென்றால் என்னுடைய இலக்கியம் எனக்குள் இருந்து பிரிந்து விடாமல் காத்தவள் அவள், ஏனென்றால் என்னுடைய மொழி எனக்குள் இருந்து அழிந்து விடாமல் போற்றியவள் அவள், ஏனென்றால் என் இனத்தின் துன்பங்களைக் கண்டு நான் துவளும் போதெல்லாம் எதிர் கொள்ளப் புதிய ஆயுதங்களை எனக்கு வழங்கியவள் அவள். இப்போது சிந்தனைகளாலும், உடலாலும் கொஞ்சம் வளர்ந்திருக்கிறாள் அந்தச் சின்னப் பெண். எனக்கு அவள் “மனைவி” என்று எல்லோரும் சொல்லுகையில், நான் சொல்கிறேன், அவள் தான் இந்த பூமியை பூக்கள் சொரிந்து அலங்கரிக்கும் “காதல்” என்று, எளிய சமன்பாடுகளில் எல்லாக் கோட்பாடுகளையும் அடைத்து விடும் “புரிதல்” என்று, தன் புன்னகையால் இந்த உலகைக் காக்கும் “தாய்மை”யும், “பெண்மை’யுமென்று…………….நீங்கள் என்ன சொல்கிறீர்கள்???

IMG_1860

 

************

Advertisements

Responses

  1. பெண்மையைப் பெருமைப்படுத்தும் பதிவு… பெருமைப்படுகின்றேன் நண்பா. ம்… மற்றொரு நாளில் பதிவிட்டிருக்கலாம்…

  2. உலகம் மிகப் பெரியதாக இருந்தபோது, நான் சிறுவனாக இருந்தேன், நான் பெரியவனாக வளர்ந்து பார்த்தபோது உலகம் மிகச் சிறியதாகி விட்டது…..arambamay asaththal….supper sir…

  3. ஒரு அன்பான முத்தத்தையும், மிக அழகான சொல்லையும் எதிர் கொள்ளாமலேயே சில மனிதர்கள் இறந்து போகிறார்கள். அவர்களின் வாழ்க்கை முற்றுப் பெறாத தொடராக வீதிகளில் அலைகிறது… super ..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: