கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 21, 2011

"யுத்தம் செய்" – ஒரு பார்வை.

Yudham_Sei_Movie_posters_wallpapers_stills_photos_pics_06

திரைப்படங்கள் ஏறத்தாழ எனது அகவிருப்புப் பட்டியலில் இருந்து விலகிக் கொண்டு விடுமோ அன்று அஞ்சுகிறேன் நான், திரைப்படம் கடந்த நூறாண்டுகளில் பல்வேறு தாக்கங்களையும், அரசியல் மற்றும் சமூக ஏற்ற இறக்கங்களையும் உண்டாக்கி இருக்கிறது, திரைப்படங்கள் என்னும் காட்சி ஊடகத்தால் இதுவரை கவனம் பெறாத ஒரு உயிரின வரிசையையே மிகுந்த கவனத்தில் கொள்ள வைத்து அறிவியல் விழிப்புணர்வையும் கூடவே நகர்த்த முடிந்தது.  எத்தனை மாற்றங்களை உண்டாக்கும் திரைப்படங்களும் வேறு மொழியில் இருந்தோ மண்ணில் இருந்தோ உருவாக்கி வருவது பெரு மகிழ்ச்சியைத் தருவதில்லை, அகமனம் நம்முடைய மொழியையும், மனிதர்களையுமே எல்லா இடங்களிலும் தேடித் பார்க்கிறது, ஆனால், தமிழ்த் திரைப்படச் சூழலில் ஒரு நல்ல, நேர்மையான திரைப்படத்துக்காக நீண்ட நாட்கள் நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது, ஐயாமாரின் புகழ் பாடும் சாதிய முகமூடி அணிந்த திரைப்படங்கள், "ஸ்ரீனிவாசன் என்கிற பெயர் குற்றப் பட்டியலில் இருப்பதில்லை" போன்ற போலியான, ஆனால் விரும்பிக் கட்டமைக்கப்படுகிற கற்பிதங்கள், ஐயா வீட்டுக்குப் போகிறவருக்கு இலவசமாய் வண்டி ஓட்டும் அல்லது சுமை தூக்கும் உழைக்கும் மக்கள், ஐயாமார்களுக்கு அடிமைகளாய் அல்லது உடல் கொடையாளர்களாய் இருப்பது ஒன்றையே தங்கள் வாழ்க்கையின் பயனாகக் கருதும் ஒடுக்கப்பட்ட மக்கள், இஸ்லாமியர்களைக் குற்றவாளிகளாகவும், பல தேசியச் சிக்கல்களை அதில் துன்புறும் மக்களை தேசப்பற்று என்னும் சிறைச்சாலைகளுக்குள் போட்டு அடைத்து விட்டுத் தங்களின் முகத்தை தேசிய அடையாளங்களாகப் பிள்ளையார் பிடித்துக் கொள்கிற அவாளின் அழிச்சாட்டியங்கள் என்று ஒரே மாதிரியான சிந்தனைகளில் அல்லது பொதுப் புத்தியில் ஊறிப் போய்க் கிடக்கிறது நமது திரைப்படங்கள். முத்துராமலிங்கம் என்ற பெயரைத் தாங்கி இருக்கும் ஒரு ஐயாவுக்கும் அவர் மகளுக்கும் காவல் காப்பதற்காக ஒரு கதாநாயகனும் அவரது பட வெளியீட்டுக்குக் காவடி எடுக்கும் எண்ணற்ற இளைஞர்களும் இன்னமும் நமக்கு வாய்த்திருப்பது தான் மிகப்பெரிய அவலமாகவும், அவமானமாகவும் இருக்கிறது. இத்தகைய காட்சி ஊடகங்கள் தான் நமது சமூகத்தின் அரசியலை, பண்பாட்டை மிக நுட்பமாக நிறுவுகின்றன.

இந்தத் துவக்கப் புள்ளியில் இருந்து தமிழகத்தின் ஒவ்வொரு குழந்தையும் வெளியேறி வரவேண்டியிருக்கிறது, இலவசமாய் வழங்கப்படும் தொலைக்காட்சிகள் சோம்பலையும், பல்வேறு மூடத்தனங்களையும் வாரி வழங்கிக் கொண்டிருக்க இத்தகைய காட்சி ஊடக பிம்பங்கள் ஒரு வீரியம் மிகுந்த கிருமியைப் போல எங்கும் ஊடுருவித் தங்கள் சமூக அரிப்புப் பணியைச் செவ்வனே செய்யத் துவங்கி விடுகின்றன, சார்பற்ற மனநிலையும், உயர் எண்ணங்களும் உருவாகும் சூழலை இந்தக் காட்சி ஊடக பிம்பங்கள் அடித்து நொறுக்கி விடுவதை ஒரு விதமான கலக்கமான மனநிலையோடு தான் நாம் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. "உலகத்தரமான" அல்லது "மாற்று சினிமா" மாதிரியான வழக்கமான பின் நவீனத்துவச் சொற்களை இதற்காக இரவல் வாங்கிக் கொண்டு ஈரானில் அப்படி இருந்தது, ஜெர்மனியில் இப்படி இருக்கிறது, ஜப்பானில் இப்படியும் அப்படியுமாய் இருக்கிறது என்றெல்லாம் நான் அங்கலாய்க்க அல்லது நீட்டி முழக்க வரவில்லை, மாறாக உலகத்தரம் என்பதன் முழுமையை எனது குடும்பத்தில் இருந்தும், எனது சமூகத்தின் உள்ளிருந்தும் தான் அளவிட வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்வது தான் உண்மையானதாகவும் இருக்கும் என்கிற படியால் தமிழ்த் திரைப்படங்களை வேறு எந்த மொழிப் படங்களோடும், நிலவியல் எல்லைகளோடும் நான் ஒப்பீடு செய்வதை விரும்பவில்லை. அதே நேரம் பல்வேறு மொழிகளுடனான, நிலவியல் எல்லைகளுடனான ஒப்பீடு என்பது சில அடிப்படை ஒழுக்கங்களை நாம் அடைந்த பிறகு செய்ய வேண்டிய தேவைப்படுகிற மாற்றம் என்பதில் நான் யாருடனும் முரண்படவில்லை.

cinema1

திரைப்படங்கள் வணிகரீதியான பின்னலைக் கொண்டிருக்கின்றன என்பதும், அந்தப் பின்னலின் துவக்கம் முதலாளிகள் மற்றும் அவர்களின் பொருட்தேவைகளை நோக்கியே நகர்கிறது என்பதை நம்மால் எளிதில் உணர முடிகிறது, ஆனால் இத்தகைய முதலாளிகளின் எல்லைகளை உடைத்துக் கொண்டே நமது மண்ணையும், மனிதர்களையும் கலை நுணுக்கங்களோடு பலரால் வெளிக்கொண்டு வரமுடிந்தது, முடிகிறது. திரைப்படங்களை நோக்கி இயங்குகிற மனிதர்களை, திரைப்படங்களில் தலைகாட்டுகிற மனிதர்களை வழிபடத் துவங்கிய நமது சமூகம் அவர்களின் கதாபாத்திரங்களை உண்மை என்றும், அவர்களால் தங்கள் வாழ்க்கையின் துன்பங்களுக்கும் விடை கண்டுபிடித்துக் கொடுக்க முடியும் என்று நம்பத் துவங்குகிறது, அந்த நம்பிக்கையில் சிலரை முதல்வராக்கியும், சிலரை அமைச்சர்களாக்கியும், பலரைத் தங்களின் குல தெய்வங்களாக்கியும் வைக்கிறது. இந்த நம்பிக்கைகளை அல்லது இந்த நம்பிக்கைகளுக்குப் பின்னிருக்கும் பலரது பொருளாதார இயக்கங்களை நமது திரைப்படங்கள் சிதைக்கவோ அல்லது மாற்றிக் கட்டமைக்கவோ விரும்புவதில்லை. அதனால் தான் ஆதிக்கசாதி ஐயாமாரின் சிம்மாசனமாக இன்றளவும் தமிழ் சினிமா கோலோச்சிக் கொண்டிருக்கிறது. மாற்றுத் திரைப்படங்கள் என்ற பெயரில் தழுவல்களையும், அப்படி வெற்றி பெற்ற சில தழுவல்களால் தங்களின் கருத்தியல் இந்த உலகத்தின் துன்பங்களை எல்லாம் நீக்கப் போதுமானது என்கிற அளவில் இயக்குனர்களும், நடிகர்களும் ஊடகங்களில் உரையாடத்  துவங்கி விடுகிறார்கள். அது நமது சமூக உள்ளடக்கத்தின் ஒரு முன்னுரை என்பதால் பெரிதாக நாம் கூச்சலிட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

இப்படியான ஒரு சூழலில் அல்லது மனநிலையில் தான் நான் அல்லது நாம் ஒரு திரைப்படத்தைக் காண்பதற்காக அமர வேண்டியிருக்கிறது, இந்தச் சூழலில் திரைப்படம் பார்க்க அமரும் எந்த மனிதனுக்கும் தமிழ்த் திரைப்படங்கள் நிறைவை வழங்கி விட முடியாது, வழிபாட்டு மனநிலையோ அல்லது சார்பு மனநிலையோ கொண்ட மனிதனால் மிகுந்த மகிழ்வோடும், ஆரவாரத்தோடும் பார்க்கப்படும் திரைப்படங்களைக் கூட சமூகக் கண் கொண்டு பார்ப்பதன் வலி மிக அதிகமானது. வழியெங்கும் அதில் கொட்டிக் கிடக்கிற பல்வேறு எதிர்மறைத் தாக்கம் விளைவிக்கிற கருத்தியல் சிதறல்களை எதிர்கொள்ளுதல் என்பது ஏறக்குறைய நமக்கு நாமே மன அழுத்தம் உண்டாக்கிக் கொள்கிற செயல் என்பதை மிகை என்று கொள்ள முடியாது. தனது குடும்பத்தைத், தனது சமூகத்தை, அதன் இளைஞர்களை, தனது மொழியை நேசிக்கிற எந்த ஒரு மனிதனும் கண்ணை மூடிக் கொண்டு திரைப்படங்களில் தோற்றம் காண்கிற தனது நாயகனின் வருகைக்காகக் காத்திருந்து ஆரத்தியும், அபிஷேகமும் செய்யும் இயக்கங்களைக் கடந்து செல்லவோ, கண்டும் காணாமல் செல்வது ஒரு வகையில் குற்றம். ஆனால், அத்தகைய மன அழுத்தங்களை உண்டாக்காத நேர்மறையான சிந்தனைகளையும், உயர் எண்ணங்களையும் வளர்த்தெடுக்கும் தமிழ்த் திரைப்படம் ஒன்றை வாழ்நாளில் பார்த்து விட வேண்டும் என்கிற ஆவல் எனக்குள் இருக்கிறது.

cheran_yudham_sei_movie_stills_gallery_06

"யுத்தம் செய்" திரைப்படத்தின் நாயகனும், இன்னும் பல நல்ல திரைப்படங்களின் இயக்குனருமான சேரன் நமது மண்ணுக்கான கலைஞர் என்று அடையாளம் காணப்படுபவர், அவர் கால ஓட்டத்தில் ஒரு அன்பான நண்பரும் ஆகிவிட, நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு திரைப்படம் பார்க்கும் சூழலை  உருவாக்கியது அந்த நட்பு, முன்னதாக மிஷ்கினின் "அஞ்சாதே" திரைப்படம் குறித்துப் பலர் பேசியிருந்ததும், சில காட்சிகளை நான் பார்க்க நேர்ந்ததும் மிஷ்கின் குறித்த ஒரு புரிதலை எனக்குள் உண்டாக்கி இருந்தது. அந்தப் புரிதல் இதுதான் "திரைப்படங்களின் மீதான தீராத காதல் கொண்ட ஒரு இளைஞன், உலகின் பல்வேறு திரைப்படங்களை உற்று நோக்கி அதில் வெற்றி அடைந்த நுட்பங்களைத் தனது இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் உள்ளீடு செய்கிற புதிய தலைமுறை இயக்குனர்", நான்  மேலைநாட்டுப் படங்களில் இருந்து சிலவற்றை அப்பட்டமாக எடுத்துக் கையாள்கிறேன், அதனை மறைக்கவோ இல்லை, மறுக்கவோ இல்லை என்று அந்த  இயக்குனரே வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் போது அதில் குற்றமொன்றும் இல்லை. அவருடைய படங்களில் கதாபாத்திரங்களின் வீச்சும், அவை ஒவ்வொன்றும் தனக்கான பாதைகளில் நடந்து செல்லும் விதமும் இயக்குனரின் முழுமையான ஈடுபாட்டையும், அவரது கடும் உழைப்பையும் நமக்குச் சொல்லும், அந்த வகையில் அவரது முந்தைய படங்களில் பல கதாபாத்திரங்கள் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டன.அவை ஒவ்வொன்றும் தனக்கான நீதியைத் தேடித் பயணம் செய்தன, தனது செயல்களுக்கான நியாயங்களை உரக்கப் பேசின, ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டிக் காட்சி ஊடகங்கள் கட்டமைக்க வேண்டிய சமூக நீதியையும், நியாயங்களையும் நோக்கி அவை பயணம் செய்தனவா? என்கிற கேள்விக்கான விடையை நான் உங்களிடம் விட்டு விடுகிறேன்.

மிஷ்கின் குறித்த புரிதல் ஓரளவு இருந்த காரணத்தாலும், அவரது "நந்தலாலா" திரைப்படம் குறித்து வலையெங்கும் வைக்கப்பட்டிருந்த விமர்சனங்களின் காரணத்தாலும் "யுத்தம் செய்" திரைப்படம் இப்படி இருக்கக் கூடும் என்றொரு வரைபடத்தை எனக்குள் நான் வரைந்து கொண்டிருந்தேன், வழக்கமான மதச்சடங்குகள், ஆரத்திகள், தேங்காய் உடைத்தல் இவற்றில் இருந்து மாறுபட்டு ஒரு தமிழ்த் திரைப்படம் வேறு வழியில் துவங்குவதையே புதிய மாற்றம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது, திரைப்படத்தின் மூலக்கதை என்பது ஒரு நகரத்தில் நடக்கும் தொடர் குற்றங்களின் பின்னணியைக் கண்டறியும் ஒரு புலனாய்வு அதிகாரியின் காலடியைப் பின்பற்றி நடக்கிறது, அவர் குற்றவாளிகளையும், குற்றத்துக்கான பின்னணியையும் எப்படிக் கண்டறிகிறார் என்பது தான் முழு நீளக் கதை. முதலில் நாம் பேச வேண்டியது சேரனின் நடிப்பு, ஆனால், அதற்கு முன்னதாக நாம் ஜெயப்ரகாஷின் நடிப்பு குறித்து அவசியம் பேச வேண்டும், ஒரு பிணவறை அலுவலராகத் தோற்றமளிக்கும் அவரது உரையாடல்கள், முகபாவங்கள் இவை இணைந்த ஆளுமை எல்லாம் ஒரு இயக்குனரின் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும், ஏனெனில் இந்தப் பாத்திரத்தை இவர் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று முடிவு செய்யும் இடத்தில் துவங்குகிறது ஒரு இயக்குனரின் வெற்றி, அவர் சில தொழில் நுட்ப விஷயங்களை சேரனுக்கு விளக்கும் இடங்களில் நம்மையும் ஒரு மருத்துவமனைப் பிணவறைக்குள் அழைத்துச் சென்று விடுகிறார், இனி சேரனைக் குறித்துப் பேச வேண்டும், பொதுவாகத் தமிழ்த் திரையுலகில் சேரன் தனக்கென ஒரு கட்டமைப்பைச் செய்து வைத்திருக்கிறார், ஒரு மென்மையான நடுத்தர வர்க்கத்து இளைஞன் என்பதே அந்தக் கட்டுமானம், அந்தக் கட்டமைப்பை உடைத்து வெளியேற இந்தப் படம் அவருக்கு நிச்சயம் உதவக் கூடும், குறிப்பாக சில எதிரிகளை ஒரு பாலத்தில் ஒரு சிறிய கத்தியோடு அவர் எதிர்கொள்ளும் காட்சி அவரது தோற்ற உருவாக்க வரலாற்றில் ஒரு மைல்கல்,       ஒரு பொது மனிதனாகவும், புலனாய்வு அதிகாரியாகவும் வாழும் உளச்சிக்கலைத் தன்னுடைய முகபாவங்களில் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அவர் வெளிப்படுத்தி இருப்பது ஒரு இயக்குனராக இருப்பவர் நடிகராகப் பரிணாமம் அடைவதன் முழுப்பயன் என்று நினைக்கிறேன்.

yudham-sei-premiere-show-at-ags-cinemas-stills_12_132316123

சில பொது இடங்களில் கதை நாயகர் நடந்து கொள்ளும் முறை குறித்து இரண்டொரு முறை மிஷ்கின் தீவிரமாகச் சிந்தித்திருக்கலாம், உயர் அதிகாரியின் அறையில் ஒரு இளம் அதிகாரி அறிமுகம் செய்யப்படும் போது காட்டப்படும் குறைந்த அளவு அவை நாகரீகம், அவர்கள் குறித்த கோப்புகளைக் குப்பைக் கூடையில் எரியும் காட்சிகள் கதை நாயகனின் எரிச்சலை உணர்த்தினாலும் கொஞ்சம் பார்வையாளர்களை நெளிய வைக்கிறது. தனது முந்தைய படங்களை நல்ல பகல் வெளிச்சத்தில் காட்டியிருந்த மிஷ்கின் இந்த முறை இருட்டை நாடியிருக்கிறார், ஒரு குற்றப் பின்னணியை உள்ளடக்கிய திரைப்படம் என்பதால் இருட்டுப் பின்புலத்தில் கொடுக்க நினைத்த ஒளிப்பதிவாளர்,  இருளும் ஒளியும் ஒரு பார்வையாளனின் மனநிலையை அதிகம் பாதிக்கிறது என்கிற உண்மையை உணரத் தவறி விட்டார் என்று நினைக்கிறேன், நல்ல திறமையும், புதிய கோணங்களில் படம் பிடிக்கும் ஆற்றலும் நிரம்பிய சத்யா கொஞ்சம் இருட்டைத் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று எனக்குத் தோன்றியது. இருட்டை அவர் கையாண்டிருக்கும் நளினமும், அழகும் நிச்சயமாக ஒரு புகைப்படக் கலை தெரிந்த மனிதனுக்குக் கிளர்ச்சியை அளிக்கக் கூடியவை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை, ஆனால், புகைப்படக் கலை மற்றும் அதன் நுணுக்கங்கள் தெரியாத ஒரு மனிதனின் மனதில் வெய்யிலும், அதற்கே உரிய ஒளியும் விரைந்து ஊடுருவி விடுகிறது. ஆனாலும் மாறுபட்ட காட்சிப் பிடிப்புகளுக்காக அவருக்கு ஒரு "ஓ" போடலாம். படத்தின் இன்னொரு நேர்மறையான விஷயம் இசை, தொடர்ந்து நீளமாகத் தோற்றமளிக்கும் படத்தின் தொய்வை கேயின் இசை கொஞ்சம் கட்டி நிமிர்த்துகிறது, எளிமையான சிக்கலற்ற அவரது பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு வலிமை சேர்க்கும் காரணி என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், ஒரே ஒரு குத்துப் பாடலில் யாரையோ சமரசம் செய்து கொண்டிருந்தாலும் அந்தப் பாடல் திரைப்படம் முடிந்து வெளியே வருகிற எந்தத் தரப்புப் பார்வையாளனையும் பின்தொடர்வது அவரது திறமையின் சான்று. வழக்கமாக ஒரு அச்சமூட்டும் படத்துக்குப் பயன்படுத்தப்படும் கம்பிக் கருவிகளை விட அவர் பயன்படுத்தி இருக்கும் தோல் கருவிகள் வலிமை சேர்ப்பதோடு படத்தோடு ஒன்றுவதற்குப்  பார்வையாளனைத் தூண்டுகிறது. படக் கோர்வை விஷயத்தில் இயக்குனரும், தொழில் நுட்பக் கலைஞரும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாமோ என்றொரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை, தொடர்ச்சி இல்லாத பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாக மாறுமிடத்தில் தான் ஒரு திரைப்படத்தின் நீளம் குறித்துப்  பார்வையாளர்கள் சிந்திக்கத் துவங்குகிறார்கள்.

இனி திரைப்படத்தின் மையக்கருவிற்கு வருவோம், குற்றவாளிகளுக்கு எதிராக யுத்தம் செய்ய வேண்டும் என்பதே இந்தப் படம் சொல்லும் செய்தி, அதாவது குற்றவாளிகளுக்கு எதிராக நேரடி யுத்தம் செய்தல், ஒரு மருத்துவரும் அவரது குடும்பமும் எதிர்கொண்ட துன்பங்களுக்காக அந்தக் குற்றத்தோடு தொடர்புடைய அனைவரது உறுப்புகளும் சிதைக்கப்பட வேண்டும் அல்லது அறுக்கப்பட வேண்டும் என்று தங்களுக்கான சில நியாயங்களைப் பேசுகிறார்கள் அவர்கள், ஒரு குற்றவாளியின் மனநிலைக்கும், சமூக மனநிலைக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பு குறித்து நாம் இந்த இடத்தில் பேசியாக வேண்டும், எந்த ஒரு தனி மனிதனும் இந்த சமூகத்தின் ஒரு உறுப்பாகவே இருக்கிறான் அல்லது இந்த சமூகம் பல தனி மனிதர்களின் இயக்கம் என்று சொல்லலாம், கூட்டு சமூக மனநிலையின் பிறழ்வாகவே குற்றங்கள் சமூகவியலில் தோற்றம் காண்கிறது, ஒரு தனி மனிதனின் குற்றம் இழைக்கும் மனநிலைக்கு முழுக்க அவனே பொறுப்பு என்று மற்ற உறுப்புகள் தட்டிக் கழிக்க முடியாது. ஒரு குற்றத்தின் பின்னணியில் பல்வேறு சமூகக் காரணிகளும், உளவியல் அழுத்தங்களும் நிரம்பிக் கிடக்கிறது, அரசியல் அமைப்புகளின் தொய்வு, முதலாளித்துவத்தின் பொருளாசை, முதலாளித்துவத்தின் அடிப்படைப் பண்புகளை வளர்க்கும் கல்வி முறை, குடும்ப அமைப்புகளில் நிகழும் இடைவெளிகள், என்று பல்வேறு காரணிகளால் தோன்றி வளரும் குற்றங்களை குற்றம் இழைத்தவனின் உறுப்புகளை அறுத்துத் தீர்வு காண இயலும் என்று கருதினால் நாம் அடிப்படையான சமூக அரசியல் குறித்து அறியாமல் பிழை செய்கிறோம் என்று பொருள். அப்படி ஒரு பிழையை மிஷ்கின் செய்திருக்கிறார், இறுதிக் காட்சிகளில் பேசப்படுகிற உரையாடல்களும், அதன் மூலம் உள்ளீடு செய்யப்படும் கருத்துக்களும் சமூக அரசியலின் வேர்களைத் தாண்டி சருகாய் உதிர்கின்றன. பழி தீர்க்கும் குடும்பத்தினரின் செயல்பாடுகளும், அவர்கள் சித்தரிக்கப்படும் விதமும் நிகழ்வுலகை விட்டு ஒரு புனைவுலகுக்கு நம்மை எடுத்துச் செல்வதை இந்தப் படத்தின் பலவீனம் என்று நான் சொல்வேன். மூன்று பிணங்களைக் கடத்தி வந்து அவற்றை எரிப்பது போன்ற காட்சிகள் நம்புவதற்குக் கடினமானவை.

tamil_director_mysskin_images_stills_photos_01

எது எப்படியோ, வழக்கமான திரைப்படங்களில் இருந்து மாறுபட்டுப் பயணிக்க வேண்டும் என்கிற மிஷ்கினின் பயணத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும், அவரது திரைப்படங்களில் காணப்படும் மாற்று மொழித் திரைப்படங்களின் தழுவல்களும், சிந்தனைகளும் புதிய படைப்பாளிகளுக்கு ஊக்கமும், நம்பிக்கையும் அளிக்கும் என்று நாம் நம்பலாம். இந்தத் திரைப்படம் A சென்டர் என்று சொல்லப்படும் நகர்ப்புறங்களில் நல்ல வெற்றி அடையும் என்பது உறுதி, ஊரகப் பகுதிகளையும், கிராமப் பகுதிகளையும் வென்றெடுக்க வேண்டுமானால் அவர்களின் மொழியும், சிந்தனைகளும் அறிந்து கொள்ளப்பட வேண்டும், நீண்ட நாட்களுக்குப் பிறகு திரைப்படத் தொழில் நுட்பங்களையும், திரைப்பட மொழியையும் நன்கு அறிந்த ஒரு இயக்குனர் தமிழ்த் திரையுலகில் காலூன்றி இருக்கிறார் என்பதோடு, அவர் உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான படங்களை இயக்குகிறார் என்று சொல்லப்படுவாரேயானால் அதே ரசிகர்களின் ஆரவாரத்தோடும், சார்பு மனநிலையோடும் என்னைப் போன்றவர்கள் திரைப்படம் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். அதெல்லாம் சரி, என்னை மாதிரி ஆட்களுக்குப் படம் எடுக்க ஆரம்பித்தால் அப்புறம் முதலாளிகளின் கதி என்று கேட்கிறீர்களா?

***********

Advertisements

Responses

  1. வித்தியாசமான பொருந்துகிற விமர்சனம் .நன்றிகள் நண்பரே!!

  2. வெறும் நடிப்பு, பாடல், ஒளிப்பதிவு என வெறுமையாய் விமர்சனம் செய்யாமல் பல்வேறு கோணங்களிலும் ஆராய்ந்திருக்கும் உங்களின் விமர்சனம் சிறப்பாய் உள்ளது.

    மிக்க நன்றி .. !

    http://blog.nilavan.net

  3. The review highlights possitive and negative part of this movie. As nowadays most of the movie reviews are much personalized arivazhagan, I welcome you to write more reviews.

  4. நல்ல ஆய்வு.வாழ்த்துகள்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: