கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 26, 2011

ஆகவே நான் விடைபெறப் போவதில்லை……….

images

நேற்று இரவு ஒன்பது மணி இருக்கலாம், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் நிறைமொழியோடு ஒரு வீதியுலா வரவேண்டும், நகரத்தின் பொருள் வாழ்க்கை நெரிசல்களில் சிக்கித் திணறும் குழந்தைகளில் இன்னுமொன்றாக அவளை நான் பார்க்க விரும்பவில்லை, அது ஒரு தந்தைக்குரிய சுயநலமாக இருக்கலாம், குளிர்ந்த காற்றும், நாள் முழுவதும் ஓடிக் களைத்த ஊர்திகளும் தவிர வீதியில் யாரும் இல்லை, தொலைக்காட்சியின் திரைகளில் பலரது உலகம் நுகர்வுக்கான பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு வழக்கமான இரவுதான் அது, வெறிச்சோடிய வீதியில் யாரோ துவைத்த நீரில் பாதி உடைந்த நிலவு மட்டும் தனிமையில் உலவிக் கொண்டிருக்கிறது, ஒரு வீட்டின் இரும்புக் கதவை முட்டித் தள்ளியபடி வெள்ளையும் கருப்பும் கலந்த குட்டி நாயொன்று வெளியேறி ஓடி வருகிறது, படக்கென ஓடவும், நிற்கவும், தலையைத் திருப்பி என்னைப் பார்க்கவுமாய் அந்தக் குட்டி நாய் இரவின் முகத்தில் ஒப்பனை செய்கிறது, கைவிரல்களைச் சொடுக்கி அந்த நாயை அருகில் அழைக்கத் துவங்குகிறாள் நிறைமொழி, கூடவே நானும் சேர்ந்து கொள்ள, ஆபத்தற்ற மனிதர்கள் என்று அடையாளம் கண்டதாலோ என்னவோ அருகில் வருகிறது அந்த நாய், பெயர் தெரியாத காரணத்தால் ஒரு உடனடிப் பெயரை வைக்க வேண்டிப் "பப்பி" என்று நாங்கள் அழைக்கவும் அதன் கொண்டாட்டம் வாலுக்கு மாறிவிடுகிறது, கால்களைத் தூக்கியபடி கொஞ்ச நேரம் விளையாடத் துவங்கிய அந்தக் குட்டி நாய், திடீரென்று எதையோ விரட்டத் துவங்கியது, கூர்ந்து பார்த்தால் வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒரு பட்டாம்பூச்சி, சுவற்றில் அமரவும், நாய்க்கு ஏய்ப்புக் காட்டவுமாய் மேலும் கீழுமாய்ப் பறக்கத் துவங்குகிறது, அதன் பறக்கும் வழியை அடைக்க முனைந்தபடி குட்டி நாயும், சிக்கிக் கொள்ளாமல் அந்தப் பட்டாம்பூச்சியும் கொண்டாட்டத்தில் திளைக்கின்றன, விளையாடும் நாய் என்று பட்டாம்பூச்சிக்குத் தெரிந்திருக்க வேண்டும், வளைந்து நெளிந்து அமர்ந்து பின் பறந்து நாயைக் களைப்படைய வைத்துச் சுவற்றில் அமர்கிறது, தலையை பக்கவாட்டில் சரித்தபடி நடுவீதியில் அமர்ந்து கொள்கிறது அந்தக் குட்டி நாய்.

dog-with-butterfly1

"உயிர்களின் கொண்டாட்டம் எங்கிருந்து துவங்குகிறது?" என்று சில நாட்களுக்கு முன்பு எனக்கு விடை தெரியாத கேள்வியைக் கேட்ட நண்பன் அந்தத் தருணத்தில் இருந்திருந்தால், மேலே சொன்ன இடத்தில் இருந்து தான் உயிர்களின் கொண்டாட்டம் துவங்குகிறது என்று எளிமையாய் பதில் சொல்லி இருப்பேன்.      கூட்டம் கூட்டமாக வாழும் உயிர்களைப் பார்க்கும் போது ஒரு அளப்பரிய மகிழ்ச்சியும், திளைப்பும் உண்டாகிறது, படங்களில் கூடத் தனித்துத் திரிகிற ஒற்றை யானையை விடவும் கூட்டமாய் நகரும் யானைக் கூட்டம் மிக அழகாய்த் தெரிகிறது, முற்றத்தில் வந்து அமர்கிற பெயர் தெரியாத ஒரு பறவையின் மருகிய பார்வையும், அலைதலும் இனம் புரியாத அயர்ச்சியைக் கொடுப்பதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை, சில நேரங்களில் ஊர்ப்புறங்களில் கூரைகளில் அமர்ந்து சண்டையிடும் காக்கைகளை மனம் தேடுகிறது, அது என்ன மாதிரியான ஒரு எதிர்பார்ப்பு?, காக்கைகளுக்கும் நமக்கும் என்ன தொடர்பு?, அவற்றை நமது மனம் ஏன் எதிர்நோக்குகிறது?, ஒருவேளை அவை குறித்த நினைவுகள் நம் வாழ்வோடு கலந்திருக்கின்றனவா? என்று ஒரு கேள்வி பிறக்கிறது, நமது குழந்தைப் பருவத்தில் இருந்தே காக்கைகள் மனிதர்களோடும், மனிதர்களை அண்டியும் வாழ்ந்து வருகின்றன, பிறப்பு, இறப்பு என்று மனிதனின் எல்லா விதமான கூடல்களிலும் அவை அழையாத விருந்தினராய்க் கலந்து கொள்கின்றன. ஆகவே நாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் காக்கைகளும் வந்து விட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கத் துவங்குகிறோம். மனித மனம் தான் எத்தனை விந்தையானது, வாங்கிக் குவித்திருக்கும் அல்லது வீட்டுக்குள் அடைந்திருக்கும் பொருட்களை எல்லாம் விடுத்து வீட்டுக் கூரையின் மீது ஒரு காக்கையைத் தேடும் இந்த மனம் தான் உயிர்களின் கொண்டாட்டம், துயரம் என்று எல்லாமுமாய் இருந்து இந்த உலகை ஆட்டுவிக்கிறது.

ஒரு உயிரின் அல்லது மனிதனின் மகிழ்ச்சியைப் பொருள் மட்டுமே முடிவு செய்கிறதா? என்கிற கேள்விக்கு விடை தேடினால் உறுதியான விடை "இல்லை" என்பதாகத் தான் இருக்கும், ஒரு உயிரின் கொண்டாட்டமும், மகிழ்ச்சியும் தனது குடும்பத்தில் இருந்து துவங்குகிறது, தாய் தந்தையின் அரவணைப்பில், சகோதரச் சண்டைகளில், சமூகத்தில் தனக்கான இருப்பில் அல்லது மதிப்பில், ஏனைய உயிர்களுக்குப் பயனுள்ள வாழ்க்கையின் சாரலில், தனக்கான சுதந்திர வெளியில் என்று மகிழ்ச்சியின் துவக்கமும், உச்சமும் பெரும்பாலும் பொருளுக்கு வெளியேதான் கண்டடையப் படுகிறது, நான் உயிர்களின் அறநெறி சார்ந்த அகவாழ்க்கை குறித்துப் பேசுகிறேன், புற வாழ்க்கையில் அல்லது சக மனிதர்களின் இலக்கணத்தில் அடையாளம் காணப்படுகிற மகிழ்ச்சி குறித்து எனக்கு அவ்வளவாகத் தெரியாது, பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுக்காகவே வாழ்ந்து தொலைக்கிற மனிதர்களைக் கண்டால் எரிச்சலும், வெறுப்பும் சூழ்ந்து கொள்கிறது. பார்க்கும் நேரமெல்லாம் தொலைக்காட்சியின் நீள அகலம் குறித்தும், புதிதாய் வாங்கிய அலைபேசி குறித்தும் உரையாடிக் கொண்டிருக்கிற மனிதர்களால் இந்த உலகம் ஒரு பக்கம் நிரம்பிக் கொண்டிருக்கிறது.

kid-and-dog-bottom

புதிதாய் ஒரு வீட்டுக்கு மாறிப் போன போது பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஒரு கேள்வி கேட்டார், "எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள்?", சம்பளத்தைச் சொன்னேன், "இது போதுமானதா?, இந்த நகரத்தில் வாழ்வதற்கு இந்தச் சம்பளம் எப்படிப் போதுமானதாய் இருக்கும்" என்று திரும்பக் கேட்டார், நான் வாழ்வதற்கும், என்னுடைய மகிழ்ச்சிக்கும் இந்தச் சம்பளம் போதுமானது மட்டுமில்லை, அதிகமானதும் கூட" என்று புன்னகைத்தபடியே சொன்னதும், ஒரு மாதிரிப் பார்த்து விட்டு உள்ளே போய் விட்டார், அவருடைய அலைவரிசைக்கு நான் இணங்கி வரமாட்டேன் என்று அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும், அதற்குப் பிறகு அதிகம் உரையாடுவதில்லை, "எங்கே சார் பத்துது?, அது இப்படி ஆயிருச்சு?, இது இப்படி ஆயிருச்சு?, அந்த விலை இப்படி, இந்த விலை இப்படி, அவனவன் கொள்ளை அடிக்கிறான், எனக்கும் உங்களுக்கும் கொடுப்பதில்லை" என்பது மாதிரி நான் உரையாடத் துவங்கி இருந்தால், அவர் நிச்சயம் என் நண்பராகி இருப்பார். பொருட்தேவைகள் குறித்து உரையாடுவதையோ, வருத்தம் அடைவதையோ குறித்து நான் குறை சொல்லவில்லை, ஆனால், குறை சொல்வதையே வாழ்க்கையின் பெரும்பகுதியாக நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம், மனைவி மக்களின் குறை, தாய் தந்தையரின் குறை, உறவுகளின் குறை, நட்புகளின் குறை என்று குறையுலகைக் கட்டி அமைப்பதில் மும்முரமாய் இருந்து விட்டு மகிழ்ச்சியின் அடையாளங்களை, முகவரியை இழந்தவர்களாகி விடுகிறோம்.

இரண்டுபுறமும் தட்டி வைத்துக் கட்டப்பட்டுத் தென்னங் கீற்றுகளில் வேயப்பட்ட கூரையின் சிலுசிலுப்பில் நீலக் கம்பியோன்றில் தொங்கிக் கொண்டிருக்கும் லண்டியன் விளக்கைத் துடைத்து எண்ணெய் ஊற்றி அதன் அசைகிற வெளிச்சத்தில் வண்டுகளோடும், மூலையில் படுத்திருக்கும் "பிரௌனி"யோடும் சேர்ந்து பள்ளிப் பாடங்களைப் படிக்கிறபோது, அப்பா வருவார், கண்களில் காலையில் இருந்து தேங்கிய அன்போடும், களைப்போடும் அவர் கைகளில் இருக்கும் வெங்காய பஜ்ஜியோ, இல்லை காராப்பூந்தியோ வாழ்க்கையை, மகிழ்ச்சியை, உயிர்களின் கொண்டாட்டத்தை சுவையோடு அள்ளி வழங்கும் அந்தத் தருணங்களில் வாழ்க்கை மிக நெருக்கமாகவும், பாதுகாப்பாகவும் இருந்தது மாதிரித் தோன்றுகிறது. நினைத்ததை வாங்கவும், நுகரவும், மகிழவும் முடிகிற நகரத்தில் இருந்து நமது மனம் அந்தப் பழைய கணங்களையே நோக்கி நம்மை நகர்த்துகிறது, நகரத்தில் வாழ்கிற பெரும்பாலான மனிதர்கள் இப்படித்தான் அலைகிறார்கள், அவர்கள் வேறு இடங்களில் வாழ விரும்புகிறார்கள், அவர்கள் வெவ்வேறு மனிதர்களோடு வாழத் தவிக்கிறார்கள், ஆனாலும் அந்த மனிதர்களின் தேவைகள் அவர்களைத் துரத்தி அடிக்கிறது, தனக்குத் தொடர்பில்லாத மொழியில் எஞ்சியிருக்கிற வாழ்க்கையைத் தொலைத்து விடுகிற எத்தனையோ மனிதர்களை எனக்குத் தெரியும், தாய்மொழியின் மிக முக்கியமான சில சொற்களைக் கூட அவர்கள் மறந்து விட்டிருக்கிறார்கள். நகரத்தில் வசிக்கும் பெரும்பாலான மனிதர்கள் சந்திக்கும் போது கேட்கிற கேள்வி "ஊருக்குப் போனீர்களா?" என்பதாகத் தான் இருக்கும், அந்தக் கேள்விக்குள் ஒரு பதிலுக்கான தேடல் இருக்குமோ இல்லையோ, கேட்டவனின் ஏக்கம் நிறைய இருக்கும், அந்தக் கேள்வியை ஏக்கம் நிறைந்த வாழ்க்கையைத் தொலைத்த மனிதர்களின் கூட்டுமனம் என்று தான் நான் நினைக்கிறேன், இந்தக் கேள்வியைக் கேட்பவர்களுக்காக நான் நிறைய நேரம் வைத்திருக்கிறேன், நான் எப்போது சென்றேன், அங்கு காலநிலை எப்படி இருந்தது, மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள், அரசியல் எப்படி நடக்கிறது, இன்னும் கண்டது கேட்டது எல்லாவற்றையும் சொல்லி அவர்களின் மனதில் ஒரு நிறைவைக் கண்டு விடுவேன், அது என்னுடைய நிறைவாகக் கூட இருக்கலாம்.

boy_and_dog_kmws

உயிர்களின் கொண்டாட்டம் அல்லது மனிதனின் அகவாழ்க்கைக் கொண்டாட்டம் என்பது என்னைப் பொறுத்தவரை மனிதர்களின் கூடுதலில் தான் இருப்பதாக நம்புகிறேன், அது ஒரு குடும்பத்தின் கூடலாக இருக்கலாம்,அல்லது ஊரின் கூடலாக இருக்கலாம், தன்னைப் போலவே உயிர்க் கட்டில் அடைபட்டுக் கிடக்கிற மனிதக் கூட்டத்தைக் கண்டவுடன் மனிதன் மகிழ்ச்சி அடைகிறான், என்னைப் போலவே இந்த மனிதர்களும் வாழ்வதற்கான போராட்டத்தில் இயங்குகிறார்கள், இருந்தாலும் கூடிக் களிப்படைகிறார்கள் என்று தன்னைத் தானே ஆற்றுப் படுத்திக் கொள்கிறான், நகரத்தின் வீதிகளில், கடற்கரைகளில், பலபொருள் அங்காடிகளில், உணவகங்களில், திரைப்பட அரங்குகளில் என்று கூட்டம் கூட்டமாக வாழவே மனிதன் ஆவலாய் இருக்கிறான், அவ்வளவு ஏன், facebook என்கிற இந்த சமூக இணையத்தின் வெற்றி எப்படி சாத்தியம் ஆனது? எல்லா இணையத் தளங்களையும் அடித்து வீழ்த்தி நகர மனிதர்களின் அடையாளமாய் எப்படி இந்த இணையம் வெற்றி பெற்றது என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், வேறெங்கும் இல்லாத மனிதனின் கூட்டு வாழ்க்கை அனுபவம் தான் என்கிற எளிய உண்மை புலப்படும், ஏனைய தளங்களில் இப்படிக் கூட்டமாய் உலவ முடியாது, இங்கு எப்போதும் எல்லோருக்குமான ஒரு பத்துப் பதினைந்து பேர் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள், கவலையோ, மகிழ்ச்சியோ, காதலோ, நட்போ, அரசியலோ, சண்டையோ, சமாதானமோ என்ன செய்தாலும் போற்றவும், தூற்றவும் சில மனிதர்கள் அருகில் இருப்பது மாதிரியான ஒரு கட்டமைப்புத் தான் இந்தத் தளத்தின் வெற்றி.

humor-with-children

மற்ற எல்லா இடங்களையும் போலவே இங்கும், நன்மையையும், தீமையும், நண்பர்களும், எதிரிகளும், போற்றுதலும், தூற்றுதலும், ஆண்களும், பெண்களும், இடதும், வலதும் நிரம்பி வழிகிறது, இவர்களை எதிர்கொள்கிற அல்லது இவர்களோடு பயணிக்கிற ஒரு வாழ்க்கை அனுபவத்தை, நாம் எதனைத் தொலைத்து விட்டதாக எண்ணுகிறோமோ அவற்றை நமக்கு வழங்குகிற ஒரு கருவியாகத் தான் இவற்றை நாம் காண வேண்டும் என்று தோன்றுகிறது. இந்தத் தளங்கள் எங்கோ முகம் காணாமல் வாழுகிற பல மனிதர்களின் தேவைகளை நிறைவு செய்வதாய் இருக்கிறது, இந்தத் தளங்கள் எங்கோ உயிருக்குப் போராடுகிற மனிதர்களின் உயிரைக் காப்பதற்கு எப்போதும் முன்னின்று விரைகிறது, இந்தத் தளங்கள் இலக்கியத்தை, மொழியை, அரசியலை, அன்பை இன்னும் எல்லாவற்றையும் வழங்கி இருக்கிறது. இந்தத் தளங்கள் ஒரு வகையில் மனித உயிர்களின் கொண்டாட்டம் போலத்தான் தோன்றுகிறது எனக்கு, சக மனிதர்களின் அருகாமையை இழந்த, தனது மொழியை இழந்த, தனது மண்ணை இழந்த, தனது வாழ்க்கையை இழந்த எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையை இந்தத் தளங்கள் தான் சரிவில் இருந்து தூக்கி நிறுத்துகின்றன. மனதளவில் நாம் பெறுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்ற நம்பிக்கையை இந்தத் தளங்கள் வாரி வழங்குவதால், என்னை இங்கிருந்து யாரும் துரத்தினாலும் நான் போவதற்குத் தயாரில்லை நண்பர்களே. போற்றுபவர்களை நேசிப்பது போலவே தான் புழுதி வாரித் தூற்றுபவர்களையும் நான் நேசிக்கிறேன், ஏனெனில் அவர்கள் தான் நம்மை முன்னோக்கி நகர்த்துகிறார்கள், அவர்கள் தான் இன்னும் சிறப்பாக நாம் வாழவேண்டும் என்கிற வேட்கையை நமக்குள் விதைக்கிறார்கள்.

bye-bye-girl-9_3

நான் என்கிற தனித்த கூட்டில் இருந்து விடுபட்டு, நாம் என்கிற கொண்டாட்ட உலகில் வாழ்வோம் நண்பர்களே, நாம் விடை பெறமாட்டோம், ஏனெனில் விடைபெறுதல் எப்போதும் துயரம் தருவதும், கடைசி முடிவுமாகவே இருக்கட்டும்.

***********

Advertisements

Responses

  1. The first story gives a beautiful explaination for life. Keep writing arivu.

  2. Ungal eluthai naan nesikkiren. Neenga daily oru article elutha venum anna.

    Balamurugan


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: