கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 28, 2011

காலத்தில் கரைந்த நண்பனொருவன்…………

boy%20on%20bike

பெங்களூர் நகரின் ஒரு நெரிசல் மிகுந்த சாலை, முக்கிய சாலையில் இருந்து கிளைக்கும் இன்னொரு சாலையில் திரும்பியவுடன் இப்படி ஒரு காட்சி, பின்புறமும், முன்புறமும் இருக்கைகள் பொருத்தப்பட்ட ஒரு மிதிவண்டி, அதன் முன்புறத்தில் ஒரு இரண்டு வயதுக் குழந்தை, பின்புறத்தில் நான்கு அல்லது ஐந்து வயதில் வால் பையன் ஒருவன், பையனைப் பிடித்தபடி நடந்து வரும் அம்மா, முன்புறக் குழந்தையோடு உரையாடிக் கொண்டு மிதிவண்டியை நகர்த்தும் ஒரு மனிதர், கைப்பிடியின் கம்பிகளில் சில பைகள், ஒரு ஊர்வலம் போல அவர்கள் நகர்கிறார்கள், அவர்களிடம் நகரத்தின் அவசரம் எதுவுமில்லை, அவர்களிடம் இரைச்சல் மிகுந்த ஊர்திகள் எதுவும் இல்லை, அவர்களிடம் நிஜமான புன்னகையும், வாழ்க்கையும் இருக்கிறது போலத் தோன்றுகிறது, எல்லோரையும் போல இந்த நகரத்தில் அவர்களின் நகர்வுக்கும் ஒரு காரணம் இருக்கும்.  

பெங்களூர் நகரத்தில் பீஜிங் நகரைப் போல மிதிவண்டிகள் அதிக அளவில் இல்லையென்றாலும், அடிக்கடி கண்ணில் தென்படத்தான் செய்கின்றன, மனிதர்கள் இன்னும் கொஞ்ச நாளில் இயந்திர இறக்கைகளைக் கட்டிக் கொண்டு வான் வழியாக அலுவலகம் செல்வார்கள் போலிருக்கிறது, சாலைகளும், உள்கட்டமைப்பு வசதிகளும் வந்து குவியும் மக்கள் திரளின் முன்னாள் தோற்றுப் போய் விடுகின்றன, இத்தனை நெருக்கடிகளில் மிதிவண்டிகளில் செல்பவர்களைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமையாகத் தான் இருக்கிறது, அதிலும் குடும்பத்தோடு மிதிவண்டிகளில் செல்பவர்கள் தான் எத்தனை நெருக்கமாய் வாழ்க்கையை உணர்கிறார்கள், அவர்களின் கால்கள் சாலைகளை ஒட்டியபடியும், சாலையின் ஓரங்களில் கிடக்கும் மண்ணை உரசியபடியும் சில நேரங்களில் நடக்கிறது, மென்மையான அதிக ஒலி எழுப்பாத அதன் சக்கரங்கள் வாழ்க்கையின் அதி உன்னதமான நாட்களைச் சுழற்றியபடி பயணிக்கின்றன.

boy_with_bicycle

அப்படி ஒரு மென்மையான நாளில் நான் மிகச் சிறுவனாய் இருந்தேன், அப்பாவிடம் ஒரு “ஹெர்குலஸ்” மிதிவண்டி இருந்தது, அடர் பச்சை நிறத்தில் எங்கள் கண்களில் எப்போதும் படுமாறு அந்த மிதிவண்டி மிக உயரமாய் நின்றிருக்கும், சில ஓய்வு நாட்களில் அப்பா ஒரு பழைய துணியைக் கொடுத்து அந்த மிதிவண்டியைத் துடைக்கச் சொல்வார், அப்போதிலிருந்தே மிதிவண்டியோடு நான் நெருக்கமாக உணரத் துவங்கி இருந்தேன், மிதிவண்டியை ஓட்டுவது குறித்த கனவுகள், மிதிவண்டியில் சில வண்ணக் காகிதங்களை ஒட்டிக் கொண்டு பள்ளிக்குப் போகும் ஆவல் என்று அந்த மிதிவண்டி அப்போது ஒரு சின்னஞ்சிறு மனிதனின் கனவுத் தொழிற்சாலையாக மாறி விட்டிருந்தது, வயதும் உயரமும் போதவில்லை என்கிற காரணங்கள் காலத்தின் முன்பாகத் தோற்று விட்டன, மிதிவண்டியை ஓட்டுவதற்கான வயது வந்து விட்ட போதிலும், உயரம் தான் கொஞ்சம் உயிரை எடுத்தது, உயரமும் கிடைத்து விட்ட ஒரு நீண்ட பகல் நாளின் முந்தைய இரவின் கனவுகளில் நான் மிதிவண்டியை இயக்கக் கற்றுக் கொண்டு விட்டேன், மறுநாள் காலையில் எழுந்து மிதிவண்டியைப் பார்க்கையில் அது என்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது, இன்றைக்கு நீயா? நானா? என்று பார்த்து விட வேண்டியதுதான் என்று நானும் சிரித்து விட்டு அதன் கைப்பிடிகளில் ஒன்றை வலது கையிலும், இருக்கையையும், முன்புறச் சக்கரத்தையும் இணைக்கும் கம்பியை இடது கைகளிலுமாய்ப் பிடித்தபடி "குரங்குப் பெடல்" போடத் துவங்கினேன், இருபுறங்களிலும் ஆட்டம் காட்டியபடி என்னைக் கொஞ்ச நேரம் அலைக்கழித்த மிதிவண்டி ஒரு வேலியோரத்தில் கொண்டு போய்ச் என்னைச் சரித்து விட்டு முன் சக்கரத்தை மட்டும் சுற்றிக் கொண்டிருந்தது, வேலி முட்கள் குத்திய காயம் ஒருபக்கமும், "டேய் பாருடா, இன்னும் சைக்கிள் ஓட்டத் தெரியல" என்கிற என்னை விடக் குள்ளமான நண்பர்களின் கேலியும் நெஞ்சுக்குள் கிடந்து குமையவும், குருதி கொப்புளிக்க மிதிவண்டியை நிமிர்த்தி ஏறி அழுத்தத் துவங்க கொஞ்சம் அச்சத்தோடு நகரத் துவங்கியது அதன் சக்கரங்கள், ஒரு அடி, இரண்டு அடி, நான்கு, பத்து, இருபது, ஐம்பது என்று நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கிய மிதிவண்டி கடைசியில் எனது கட்டுக்குள் வந்தே விட்டது, அந்த நேர்கோட்டுப் பயணத்துக்குப் பிறகு ஏறத்தாழ மிதிவண்டியும் நானும் நல்ல நண்பர்களாகி விட்டிருந்தோம், அன்றிலிருந்து பதினைந்து ஆண்டுகள் மிதிவண்டி என்னுடைய எல்லா நிகழ்வுகளிலும் பங்கு பெற்றிருந்தது. மிதிவண்டியைத் துடைத்து அதன் இணைப்புப் பகுதிகளில் எண்ணெய் போட்டு, அதன் துருப் பிடித்த கம்பிகளை உப்புத் தாளில் தேய்த்து எப்போதும் பளபளப்பாய் வைத்துக் கொள்ளத்தான் எத்தனை ஆசை நமக்குள்.

3115902731_6f246352ac

அப்பாவின் மிதிவண்டி எனக்கு ஒதுக்கும் நேரம் மிகக் குறைவானதாக இருப்பதாக நான் உணரத் துவங்கி இருந்த ஒரு நண்பகலில் அப்பா கொஞ்சம் உயரம் குறைந்த மிதிவண்டியை எனக்காக வாங்கி வந்திருந்தார், சிவப்பு நிறத்தில் வாலை ஆட்டும் ஒரு வளர்ப்பு நாயைப் போல அது வீட்டு முற்றத்தில் நின்று கொண்டிருந்தது, அன்றைய மாலையும் இரவும் வண்ண மலர்களைப் பறித்து என் மீது எறிந்து கொண்டிருந்தன,  ஒவ்வொரு நண்பனின் வீட்டுக்கும் சென்று அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து புதிய மிதிவண்டியைக் காட்டி விமர்சனமெல்லாம் வாங்கி அவர்களை அனுப்பி வைப்பது என்று இரண்டு மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் முடிந்து போயிருந்தது, மிதிவண்டியும் நானும் தேய்ந்து வளர்ந்து பள்ளி இறுதி வகுப்பு வரை வந்து விட்டோம், ஒரு முழு நிலவு நாளில் மிதிவண்டியைப் பூட்டி முற்றத்தில் சாய்த்து விட்டு உறங்கப் போனால் கொஞ்ச நேரத்தில் விழிப்பு, கூச்சலும், குழப்பமும் கூடிக் கொண்டு இடையில் அழுகைச் சத்தம் வேறு, பக்கத்துக்கு வீட்டு வாஹித் அண்ணனைப் பாம்பு கடித்து விட்டிருக்கிறது, அது படுத்திருந்த இடத்தில இவர் படுத்திருந்தாரா?, இல்லை, இவர் படுத்திருந்த இடத்தில் அது படுத்திருந்ததா? என்று தெரியவில்லை, "ஊது சுருட்டை" என்று தெளிவாகச் சொல்லியபடி காலைப் பிடிக்கிறார், யாரும் அத்தனை விரைவாகச் செயல்படுவது போலத் தெரியவில்லை, இயந்திர ஊர்திகள் எல்லாம் இல்லாத ஒரு எளிமையான கிராமம் தான் அது, என்னுடைய மிதிவண்டியைக் கிளப்பி விடுவது என்று முடிவு செய்தாயிற்று, வாஹித் அண்ணனுக்குப் பாம்பு கடித்த பகுதியின் இரண்டு பக்கமும் ஒரு கட்டுப் போட்டு அவரை பின்னிருக்கையில் அமர வைத்துக் கால்களால் நெம்பியபடி இருக்கையில் அமர்ந்து, வாஹித் அண்ணனை முதுகில் சாய்ந்து கொள்ளச் செய்து விட்டு ஏறி அழுத்தினால் இரவும், நிலவும் துரத்தி வருகிறது, மிதிவண்டி எடுத்தது பாருங்கள் ஒரு வேகம், இடையிடையில் வாஹித் அண்ணனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவர் எப்படி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டி வேகம் குறைக்கப்படும், கொஞ்சம் சுழல்வதும், பிறகு தெளிவதுமாய் அவரது நிலை என்னை அந்த இரவில் அச்சமூட்டியது, நானிருக்கிறேன் என்று சுற்றிச் சுழன்று ஒரு உயிரைக் காப்பதற்காய் சுழன்று கொண்டிருந்த சக்கரங்களில் இருந்த அந்த இரவில் வந்த ஓசை இவ்வுலகில் நான் கேட்ட ஒரு மிகச் சிறந்த மெல்லிசை. பதினைந்து நிமிடங்களில் பதினைந்து கிலோ மீட்டர்களைக் கடந்து அரசு மருத்துவமனையை நாங்கள் அடைந்தபோது மருத்துவமனை வாசலில் ஒன்றுமறியாத சிறுவனைப் போல நின்று கொண்டு விட்டது என் சிவப்பு நிற மிதிவண்டி, உடனடியாக அவசர மருந்துகள் கொடுக்கப்பட்டு வாஹித் அண்ணனும் அவரது வாழ்க்கையும் உறுதி செய்யப்பட்ட போது நான் என்னுடைய மிதிவண்டியில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.

10886938760j60Gs

எனக்கும் மிதிவண்டிக்குமான தொடர்பு இப்படி அழுத்தமாய் வளரத் துவங்கிய பொழுதுகளில் அப்பாவின் மிதிவண்டிக்கு வயதாகி விட்டிருந்தது, இன்னுமொரு நண்பகலில் அப்பா மிதிவண்டியை யாரிடமோ விற்றுவிட்டு ஒரு TVS – 50 ஐ வாங்கி இருந்தார், வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியோடும், திளைப்போடும் இருந்தபோது ஏனோ எனக்கு மட்டும் கொஞ்சம் வருத்தமாய் இருந்தது, வீட்டின் ஒரு மிக மூத்த உறுப்பினரை இழந்து விட்டது போலவே ஒரு சோகமான இழை என்னிடம் அப்பிக் கிடந்தது, மிதிவண்டியோடு ஒட்டிக் கிடந்த என்னுடைய பழைய நினைவுகளை யாரோ பறித்துச் சென்றது போல உணர்ந்தேன் நான், அந்த மிதிவண்டியின் நிறம், உலக உருண்டையைத் தூக்கியபடி நின்று கொண்டிருக்கும் ஹெர்குலஸ் இன் உருவம் பதிந்த அதன் நடுக்கம்பி, சக்கர இணைப்புக் கம்பிகளிடையே நான் நுழைத்து வைத்த வண்ணக் காகிதங்கள், சுற்றி அலைந்த ஒற்றை அடிப்பாதைகள், நண்பர்கள் என்று காலம் அந்த மிதிவண்டியோடு சிலவற்றை அள்ளிக் கொண்டு விட்டது, ஆனாலும், வாழ்க்கை என்ன நின்றா விடுகிறது யாருக்கும்???

பிறகு நான் கல்லூரிக்குப் போன போது கூடவே நிறம் மங்கிப் போன அந்தச் சிவப்பு நிற மிதிவண்டியும் என் கூடவே இருந்தது, காலை வேளைகளில் மெல்லப் பயணித்தபடி மிதிவண்டி முன்னே நகரக் கல்லூரியின் மரங்கள், சுற்றுச் சுவர்கள், பின்னே வெகு தூரத்தில் தெரிகிற ரயில் வண்டி, இடையில் வந்து போகிற கூடப் படிக்கிற பிள்ளைகள், அவர்களில் சிலரின் சிரிப்பு என்று அந்தப் பயணம் தான் எத்தனை அழகானது,  பாலத்தில் அமர்ந்து நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, முதல் காதலியின் வீட்டைச் சுற்றி வந்தபோது, அவளது அப்பா விரட்டிய போது, காலையில் உடற்பயிற்சி செய்கிற போது, சுற்றுப் பட்டிகளில் நடக்கும் கிரிக்கெட் விளையாட்டில் கலந்து கொண்டு இளைத்துத் திரிகிற போது, வீட்டில் கோபம் கொண்டு ஊரை விட்டு ஓடியபோது இப்படி எல்லா இடங்களுக்கும் கூடவே வந்து கொண்டிருந்தது என் சிவப்பு நிற மிதிவண்டி, அன்பும், கோபமும், காதலும், நட்பும், குருதியும், இசையும், எழுத்தும் இன்னும் பல கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு மனிதனின் உடலை, மனத்தை தன் மீது அமர்த்திக் கொண்டு பயணம் செய்த அந்த எளிய வாகனத்தை நான் எங்கோ இழந்து விட்டிருக்கிறேன், காலம் என்னுடைய மிதிவண்டியைப் பறித்துக் கொண்டு விட்டது, நம்முடைய இளமைக் காலப் புன்னகையை, அரைக்கால் சட்டையை, இலந்தைப் பழங்களை, இன்னும் பலவற்றைப் பறித்தது போலவே காலம் மிதிவண்டியை ஓட்டிச் சென்று விட்டது, அந்த எனக்கே எனக்கான சிவப்பு மிதிவண்டி எங்கே போனது? என்னுடைய கோபங்களின் போதான உதைகள், கொண்டாட்டங்களின் போதான தழுவல்கள் எல்லாவற்றையும் தாண்டி ஒரு உண்மையான நண்பனைப் போல என்னுடைய வரவுக்காகக் காத்திருந்த அந்த சிவப்பு நிற மிதிவண்டியை நான் எங்கோ தொலைத்து விட்டேன், என் மகள் தனக்காக ஒரு மிதிவண்டியைக் கேட்கும் காலத்தில் இப்படி ஒரு கேள்விக்கான பதிலை நோக்கி நான் பயணிக்க வேண்டியிருக்கிறது.

2538641482_e8e35243da_z

உலகெங்கும் இன்றைக்கும் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் ஊர்திகளில் மிதிவண்டியே முன்னணியில் இருக்கிறது, ஏறக்குறைய ஒரு பில்லியன் மிதிவண்டிகள் புவிப் பந்தின் பல பகுதிகளில் ஓடிக் கொண்டிருக்கிறது, ஏறக்குறைய 50 கோடி மிதிவண்டிகள் சீனாவில் மட்டும் ஓடிக் கொண்டிருக்கிறது, ஏறத்தாழ 3,20,00,000 மிதிவண்டிகள் இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கின்றன, உழைக்கும் மக்களின் நண்பனாக, ஒடுக்கப்பட்ட மக்களின் தோழனாக, எளிய உண்மையான வாழ்க்கையை வாழும் இந்த தேசத்தின் கடைக்கோடி மனிதனின் ஊர்தியாக, தேநீருக்கான பாலையும், காலையைக் கொண்டு வருகிற செய்தித் தாள்களைச் சுமந்து வருகிற ஊடகமாகவும் நகரெங்கும், கிராமங்கள் எங்கும் மிதிவண்டிகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன, புதிது புதிதாய்த் தொலைக்காட்சிகளில் வளம் வந்து பல நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கையை கடன் கட்டும் தொழிற்சாலையாக மாற்றும் ஊர்திகளை விடவும், முதலாளிகளையும், முதலாளித்துவக் கனவுகளையும் சுமக்கும் சொகுசு ஊர்திகளையும் விடவும், நான் மிதிவண்டிகளை நேசிக்கிறேன், மிதிவண்டிகளில் பயணம் செய்வதை விரும்புகிறேன், குறைந்த பட்சம் காலை வேளைகளில் உடற்பயிற்சி செய்வதற்கு மட்டுமாவது என்னுடைய சிவப்பு நிற மிதிவண்டியை மீட்டுக் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன். நீங்கள்???

bike_love

***********

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: