கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 1, 2011

தமிழ்த் திரைப்படங்கள் – ஒரு உரையாடல்

atthemovies_0

யுத்தம் செய் திரைப்படம் குறித்த விமர்சனம் ஒருதலைப் பட்சமாக அல்லது தவறான நீதியை வழங்க முற்படுவதாக திரைப்பட விமர்சகர் தோழர் விஸ்வாமித்திரன் சிவகுமார் ஒரு விவாதத்தில் குறிப்பிட்டார், மேலை நாட்டுப் படங்களில் இருந்து எடுத்துக் கையாளப்படும் காட்சிகள் அல்லது வழிமுறைகள் முற்றிலும் தவறானதென்றும், அவ்வாறு வெளிப்படையாக எடுத்துக் கையாள்வதாக ஒரு இயக்குனர் ஒப்புக் கொண்டாலும் அது மிகப்பெரிய அறிவுத் திருட்டு என்றும் அவர் குற்றம் சுமத்துகிறார், அவரோடு பெரிதாக முரண்பாடுகள் எல்லாம் இல்லை என்றாலும் சில கேள்விகளையும், பகிர்வுகளையும் அவரை நோக்கி வைக்க வேண்டியிருக்கிறது, எந்த ஒரு கருத்தியலையும் உருவிக் காட்சிப் படுத்துகிற திரைப்படங்கள் உண்மையான படைப்பாளியின் வேலைத் திட்டத்தைக் குலைக்கின்றன என்பதிலும், அப்படிச் செய்வது தார்மீக அளவில் தவறானது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஒப்புக் கொள்வோம். அப்படி ஒப்புக் கொள்வதற்கு முன்னாள் தமிழ்த் திரைப்படச் சூழலில் நிலவும் சில அடிப்படை உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும், தமிழ்த் திரைப்படம் என்றல்ல, எந்த மொழித் திரைப்படங்களிலும் இன்று

வணிகப் பின்னலும், முதலாளித்துவச் சிந்தனைகளும் கலந்து திரைப்படம் என்கிற ஊடகமே இன்னொரு வணிகப் பொருளாகவும், பண்டமாகவும் மாறி விட்டிருக்கிறது, கலைச் சேவை அல்லது நுண்கலை முயற்சி என்று திரைப்படத் துறையில் இயங்கும் யாரையும் அத்தனை எளிதில் அடையாளம் காண்பது அரிது, கடந்த காலங்களில் மிகப்பெரிய வணிக வெற்றியையும், அடையாளங்களையும் பெற்ற இயக்குனர்களே திரைப்படத் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியையும், போக்கையும் முடிவு செய்கிறார்கள், ஒரு குறிப்பிட்ட அமைப்பில் உருவாக்கப்பட்ட திரைப்படம் வணிக அளவில் வெற்றி அடைந்து மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றால் தொடர்ந்து அதே கட்டமைப்பில் உருவாக்கப்படும் திரைப்படங்களே இதற்கு ஆதாரமாய் இருக்கிறது, எந்த ஒரு இயக்குனரும், திரைக் கலைஞரும் தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொண்ட பின்பே படைப்பூக்கம் மிகுந்த தனது உள்ளார்ந்த ஆழமான விருப்பத்தை நோக்கி நகர முடியும், இருப்புக்கான சமரசங்கள் செய்வதற்கு மறுத்துக் கரைந்து காணாமல் எத்தனையோ நல்ல படைப்பாளிகளை நம்மால் அடையாளம் காண முடியும். கலைக்கும், வணிகத்திற்கும் இடையிலான இந்த இடைவெளி எப்படி உருவாகிறது அல்லது உருவாக்கப்படுகிறது.

filmmaking

காட்சி ஊடகத்தின் மயக்கம் பார்வையாளனை எப்போதும் ஒரு கனவுலகிலும், வியப்பிலும் நிறுத்துகிறது, தான் செய்ய நினைக்கிற அல்லது வெளிப்படுத்துகிற சமூகக் கோபத்தைத் திரையில் இன்னொரு மனிதனால் சாதிக்க முடிவதை நினைத்து மனதளவில் பெருமிதம் கொள்ளும் பார்வையாளன் அந்த ஊடகத்தின் காட்சிகளில் தோன்றும் மனிதர்களைத் தன்னுடைய நிழல் என்று கருதுகிறான், அவனைப் போற்றுகிறான், பெருமிதம் கொள்கிறான், இவ்வாறான போற்றுதலை எப்போதும் விரும்புகிற மனித மனம் தொடர்ந்து இத்தகைய நாயகத் தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தன்னையும் அறியாமல் பல வழிகளில் முனைந்து நிற்கிறது, நாயகர்கள் அரசியலுக்கு வருவதும், அரசியல்வாதிகள் திரைக்கு வருவதற்குமான ஒரு மெல்லிய இழை இங்குதான் பின்னப்படுகிறது, ஒரு படைப்புக்குப் பின்னால் தாக்கம் விளைவிக்கிற தொழில்நுட்ப அறிவியல், சமூக அறிவியல், அரசியல் பின்புலம் இவை குறித்த வெளிப்படையான விவாதங்களையோ, அடிப்படை முரண்களையோ நமது சமூகத்தில் எந்த ஒரு திசையிலும் நாம் விவாதிக்க விரும்புவதில்லை, அல்லது கற்றுக் கொடுக்க விரும்புவதில்லை, திரைப்படங்களின் பாதிப்பில் முதல்வர்களைத் தேர்வு செய்கிற நமது சமூகத்திற்கு அந்தத் திரைப்படம் பற்றிய தவறிப் போன ஒரு பாடப் பகுதியைக் கூட நம்மால் கல்லூரி வரையில் காண இயலாது, நமது சமூகம் வாழ்நாளில் பாதி பேசும் திரைப்படங்கள் குறித்தும் அவை உருவாக்கப்படும் விதம் குறித்த விழிப்புணர்வு பள்ளி நாட்களிலேயே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், மாற்றங்களை விரும்புகிற அல்லது மாற்றங்களை நோக்கிச் சிந்திக்கிற எந்த ஒரு திரைப்படக் கலைஞனும் இதற்கான முயற்சியை எடுத்ததாக வரலாறு இல்லை, நல்ல திரைப்படங்களை உருவாக்கும் கலைஞர்களை, திரைப்படங்களின் மூலம் பரவலாக்கப்படும் அரசியல் திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்று எந்த ஒரு திரைப்படக் கலைஞரும் இதுவரையில் முன்னின்று பேசியதில்லை, அப்படிப் பேசுகிற ஒரு சிலரையும் திரைப்படங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்னும் அளவில் தான் துறை முன்னோடிகள் கணக்கிட்டிருந்தார்கள்.

படைப்பாளிகளும், துறை சார்ந்த வல்லுனர்களும் நிரம்பிக் கிடந்த, கிடக்கிற ஒரு சமூகத்தில் வாய்ப்புகளும், தளங்களும் இல்லாமல் இளைஞர்கள் திசை மாறிச் சென்றார்கள், மேலை நாட்டுப் படங்களின் தழுவலை, சாயலை இன்னும் கிடைக்கும் எல்லாவற்றையும் உள்வாங்கி தங்கள் மொழியில் வழங்கி ஒரு தற்காலிக இருத்தலின் பயனை அவர்கள் அறுவடை செய்யத் துவங்கினார்கள், அவர்களுக்கு வேறு வழியில்லை, படைப்பூக்கம் மிகுந்த இயக்குனர்களின் பட்டியலில் வாய்ப்பு ஒரு முற்றுப் புள்ளியாகவே இருந்தது, தங்களின் வெற்றியையும், இருப்பையும் உறுதி செய்து கொள்வதற்கு அவர்கள் கடைசியில் நாடிச் சென்றவை மேலை நாட்டுப் படங்களாய் இருந்தன, ஆனால், வெற்றி அடைந்த பின்னர் தாங்கள் கவனம் செலுத்த வேண்டிய மிக இன்றியமையாத பணி புதிய தலைமுறைக்கான தளங்களை உண்டாக்குதல் என்கிற அடிப்படை உண்மையை அவர்கள் யாவரும் வெற்றியின் களிப்பில் வசதியாக மறந்து போனார்கள், யாம் பெற்ற துன்பம் பெறுக இப்பேரண்டம் என்று தன்வழியைத் தனி வழியாக்கிக் கொண்டு  கடந்து போனார்கள் முன்னவர்கள், பொற்கிழி வழங்குவது, வீடு கட்டிக் கொடுப்பது, வயது முதிர்ந்த காலத்தில் பணமுடிப்பு அளிப்பது அல்லது வெளிநாடுகளில் சென்று குத்தாட்டம் போடுவது மட்டுமே திரைப்படக் கலைஞர்களின் கடமையாக மாறிப் போனது, குறும்படங்களை இயக்கும் பயிற்சிகளை வழங்குவது, திரைப்படங்கள் குறித்த கருத்தரங்குகள் நடத்துவது, பாடத்திட்டங்களில் திரைப்படங்களைச் சேர்ப்பது போன்ற மக்களோடு நெருக்கமாக ஒரு கலையை மாற்றி அமைக்கிற எந்தப் பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழ்ச் சூழலில் எந்த ஒரு முன்னோடியும் இல்லாமல் போனது தான் கலைக்கும், வணிகத்திற்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியாக மாறிப் போனதை நாம் அனைவருமே வசதியாக மறந்து விட்டோம் என்று நினைக்கிறேன்.

imagesCA96C8UB

என்னைப் பொறுத்தவரை ஒரு திரைப்படம் என்பது இவ்வுலகை எதிரொலிக்கும் கண்ணாடி, எதிராக அமர்ந்திருக்கும் மனிதர்களின் கூட்டு மனதைத் தனக்குள் உள்வாங்கி சமூக இயக்கத்தை சீரமைக்கும் வல்லமை பொருந்திய ஊடகம், கிடைக்காத நீதியை, கிடைக்காத காதலை, கிடைக்காத அரசியலை கண்களுக்குள் பாய்ச்சிக் கிடைக்கின்ற மாதிரியான ஒரு மாயையை உண்டாக்கும் திரைக்காட்சி, நமது தமிழ்த் திரைச் சூழல் தனது மக்களையும், மண்ணையும் எதிரொலிக்கிறதா? அல்லது எதிரொலித்ததா? என்கிற கேள்விக்கு "இல்லை" என்கிற ஆணித்தரமான பதிலை என்னால் வழங்க முடியும். திரைப்படங்கள் நமக்கு அறிமுகம் ஆன போது அவை வர்ணக் கட்டுக்களில் இருந்து விடை பெற்றிருக்கவில்லை, ராமனும், கிருஷ்ணனும், ராதையும், சீதையும் என்று புராணக் காலங்களில் இருந்து விடை பெறாமல் இசை மொழியின் இன்னொரு பகுதியாக இருந்தது திரைப்படங்கள், இந்த வர்ண காலத் திரைப்படங்களை உடைத்துக் கொண்டு வரலாற்று மொழிகளைப் பேச வந்த மன்னர் காலத் திரைப்படங்களிலும் மன்னராட்சியை அல்லது முதலாளித்துவத்தைத் தூக்கி நிறுத்தும் போற்றுதலும், புகழுரையும் நிரம்பி இருந்தது, காட்சி அமைப்பின் வியப்பான தோற்றங்களைத் தவிர்த்து அவை மேலதிகமாக எதிர் நின்ற சமூகத்திற்கு எதுவும் செய்ய இயலாத ஒன்றாய்த் திரை இறக்கிக் கொண்டு விட்டன, இவற்றின் பின்னரான குடும்பங்களின் சிக்கல்களை அவிழ்க்கிற அல்லது பேசுகிற படங்கள் யாவும் எளிய மக்களின் வாழ்க்கையை, அவர்களின் தேவையை, அவர்களுக்கான அரசியலை, கலையை இன்னும் எதையும் சொல்லாமல் காதலையும், திருமணங்களையும் தாங்கி நின்ற காட்சிகளாகத் தேங்கி நின்றன, தனி மனிதனை அல்லது நாயகனை வழிபடுகிற ஒரு மனநிலையை இந்தப் பகுதி துவக்கி வைத்து ஒரு புதிய அரசியலை மக்களுக்கு அறிமுகம் செய்தது, இன்றைக்கு அரசியலில், சமூகத்தில் எல்லா இடங்களிலும் வழிபாட்டு மனநிலையை வெற்றிகரமாக உருவாக்கியதில் இந்தப் பகுதித் திரைப்படங்களுக்கு ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. தேவை இருக்கிற இடங்களில் அல்லது பசி இருக்கிற இடங்களில் போராடி உணவு வழங்குவதிலும், இடம் வழங்குவதிலும் கரைந்து கொண்டிருந்த காலம் நகர்ந்து ஒரு நாளும் சமூக நீதியை அல்லது சமூக நீதிக்கான தேவையை வலியுறுத்தும் படங்களை உருவாக்கி விடவில்லை, இடையில் தோன்றி உதித்த திராவிட இயக்கங்களும் அதன் தாக்கமும் குறிப்பிட்ட எல்லை வரை திரைப்பட மூலக்கூறுகளை மாற்றி அமைக்க முனைந்தாலும், காலம் காலமாக கைக்கொள்ளப்பட்டிருந்த பொருள் முதலாளிகள் அந்த எல்லைகளை எப்போதும் குறுக்கி அடைத்து விடவே முனைப்பாக இருந்தார்கள், திராவிட இயக்கங்களின் தாக்கம் இன்னொரு நாயகனை நமக்கு வழங்கி விட்டு விடை பெற்று விட்டது, எம்.ஜி.யார் என்கிற நாயகரையும், அவரைத் தொடர்ந்த வழிபாட்டு மனநிலையையும் தவிர்த்து அந்தக் காலகட்டம் சமூக உள்ளீடுகளை எங்கும் வழங்கியதாக எனக்கு நினைவில் இல்லை.

bg2

விளிம்பு நிலை மக்களை அல்லது என்னையும் உங்களையும் பற்றிய ஒரு திரைக்களத்தை நீண்ட காலத்திற்குப் பின்னால் சில இயக்குனர்கள் நமது மண்ணுக்குக் கொண்டு வைத்தார்கள், தன்னிச்சையாக அவர்கள் தமக்குள்ள இருந்த மண்ணின் மனத்தை காட்சிப்படுத்த முனைந்தார்கள், பெயர்கள் குறித்து நாம் பிறகு பார்க்கலாம், இவற்றை எல்லாம் கடந்து சமூக எல்லைகளை உடைக்காத அல்லது உடைக்க விரும்பாத திரைப்படங்களையே தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை இயக்குனர்களில் வழக்கமான பாதையைத் தவிர்த்துச் சிலர் வேறு பாதைகளைத் தேடுகிறார்கள், நாயகத் தோற்றம் இல்லாத, ஒரு உழைக்கும் மனிதனின் உண்மையான வாழ்க்கையை அவனது மன ஓட்டங்களை எதிரொலிக்கிற திரைப்படங்களை யார் எடுத்தார்கள், இன்று வரை சிறந்த திரைப்படங்கள் என்று சொல்லப்படும் பல்வேறு திரைப்படங்கள் உண்மையில் தங்கள் சொந்த அறிவில் உருவாக்கப்பட்டவை தானா என்கிற கேள்விகள் எனக்குள் எழும்புவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த அடிப்படைகளை வைத்துத் தான் எந்த ஒரு திரைப்படத்தையும் நான் விமர்சனம் செய்வேன் அல்லது நோக்குவேன், அதுதான் நேர்மையானதும் கூட. 

எந்த ஒரு மனிதனும் சொந்தமாக இந்த உலகில் எதனையும் உண்டாக்க முடியும் என்று நான் நம்பவில்லை, அது எழுத்தாக இருக்கட்டும், திரைப்படமாக இருக்கட்டும், கல்வியாக இருக்கட்டும், இன்னும் யாவும், யாவும் இவ்வுலகில் யாருக்கும் சொந்தமானதாக இருக்க வாய்ப்பில்லை, இங்கு உருவாக்கப்படும் ஒவ்வொரு சொற்களும் இந்தப் பேரண்டத்தின் அகண்ட வெளிகளில் உலவிக் கொண்டிருக்கும் தொடர்களில் இருந்தோ, முன்னைய வாழ்க்கையில் இருந்தோ, வரலாற்றில் இருந்தோ சேகரிக்கப்படும் பொருட்கள் தானே, ஒரு புனைவோ, ஒரு நினைவோ முன்னின்ற ஏதோ ஒன்றின் அச்சைச் சுற்றி இயங்கும் இயக்கம் என்றே நான் நம்புகிறேன், அந்த வகையில் மரத்தைச் சுற்றி ஓடும் பாடல்களுக்கும், கைவிரல் சொடுக்கைச் சுற்றி ஓடும் நாயகர்களுக்கும் மிஷ்கின் கொஞ்சம் மாறுதலாகவே எனக்குத் தெரிந்தார், மேலும் இந்த விமர்சனத்தில் திரைப்படத்தை அதன் மையக் கருத்தை நியாயம் செய்து நான் எங்கும் வாதிடவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

imagesCA08913X

இறுதியாக விமர்சனம் என்பது செம்மைப்படுத்தும் கருவியாக இருக்க வேண்டுமே ஒழிய ஊற்றி மூடும் அமிலமாக இருக்கக் கூடாதென்று நான் உளப்பூர்வமாக நம்புகிறேன், ஒரு நல்ல விமர்சனம் இன்னும் பல படைப்பாளிகளை உருவாக்க உதவி செய்ய வேண்டுமே ஒழிய இருக்கும் படைப்பாளிகளையும் நாசம் செய்து அழிக்கும் வேலையைச் செய்யக் கூடாதென்று விரும்புகிறேன், அப்படித்தான் நான் எந்த ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனரையும் விமர்சனம் செய்வேன், என்னுடைய நோக்கம் மிஷ்கினையோ அல்லது எந்த ஒரு கலைஞனையோ புண்படுத்தி அவனுடைய குற்றங்களைக் கண்டறிந்து படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதல்ல, மாறாக அதே கலைஞனையோ இயக்குனரையோ "இன்னும் சிறப்பாக……." என்னும் இலக்கை நோக்கித் துரத்துவதற்கு மட்டுமாகவே இருக்குமாறு திருத்தி அமைத்துக் கொள்கிறேன், அப்படித்தான் யுத்தம் செய் திரைப்படத்தையும் நான் விமர்சனம் செய்திருந்தேன், முரண்களை மட்டுமே பேசுவதற்கு அந்தக் கலை ஒன்றும் அழிய வேண்டிய கலை இல்லையென்று முழுமையாக நம்புகிறேன் நான், மாற்றங்களும், உள்ளீடுகளும் தமிழ்த் திரையுலக வரலாற்றில் நீண்ட காலம் பிடிக்கக் கூடியவை, ஆயினும் அதன் துவக்கத்தில் இருக்கிற ஒரு சிலரையாவது நாம் உறுதியாக ஆதரிக்கத் தான் வேண்டியிருக்கிறது, என்னைப் பொறுத்தவரையில் சேரன் மற்றும் மிஷ்கின் இருவருமே அத்தகைய சமூக மாற்றங்களையும், வேலைத் திட்டங்களையும் கொஞ்சமேனும் கொண்டிருக்கிற மனிதர்கள் என்று உறுதியாக நான் அறிவேன், நான் யுத்தம் செய் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுத ஒரு வகையில் அதுவே காரணமும் கூட, நமக்கான திரைப்படங்களை நாம் தான் உருவாக்க வேண்டும், அப்படி ஒரு பயணத்தில் பல நேரங்களில் நாம் சமரசம் செய்து கொள்ளத்தான் வேண்டும். மேலை நாட்டுப் படங்களைத் தழுவிப் படங்களை இயக்கும் ஒரு சில புதிய சிந்தனை உள்ள இளைஞனை நான் அப்படித்தான் சமரசம் செய்து கொண்டிருக்கிறேன் விஸ்வாமித்திரன்.

short%20film%20making

தொடர்ந்து உரையாடுவோம், நல்ல பலவற்றை நோக்கி, அன்போடும், நட்போடும்.

***********

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: