கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 5, 2011

பொன்னிறத்தில் வழியும் மாலைத்துளிகள்.

 

 

(சில நேரங்களில் மாலை எப்பொழுதும் அழகு ததும்பும் பொன்னிறக் கதிர்களை கசிய விடுகிறது, சில நேரங்களில் மிச்சமிருக்கும் கண்ணீர்த்துளிகளைத் துளிர்க்க வைத்து நினைவுகளோடு விளையாடுகிறது, நீண்டு வரப்போகும் இன்னொரு இரவுக்கான ஒத்திகையை நடத்திப் பார்த்த சில மாலைகளைச் சுருக்கி உங்கள் கண்களில் தவழ விடுகிறேன், கனவுகளின் மிச்சங்களைப் போலவே அறுந்து விழுகிற சில கவிதைத் துளிகள்.)

 

 

draft_lens13540801module142624201photo_1293078412SandalsSunset

என்றோ சேகரித்த உன் புன்னகையை
அள்ளி எறிந்து விட்டுத் தன் பாட்டில்
நுரையோடு கூடிக் களிக்கிறது கடல்,
கொட்டிக் கிடக்கும் காலடித் தடங்களின் இடையே
சங்கு பொறுக்கும் ஒரு சிறுமிக்கு நாளை கிடைக்கலாம்
அந்தப் புன்னகையின் உடைந்த மிச்சங்கள்.

நம் கணங்களால் நிரப்பப்பட்டிருக்கிற அந்தப் பூங்காவின்
பழைய இருக்கையொன்றில் இப்போது இலை துளைத்து
இறங்கிய ஒளிவட்டங்களும், வெண்ணிறப் பறவையொன்றும்.

ஒரு மழைநாளில் அங்கு உடைந்து சிதறிய உன் புன்னகையின்
முனைகளைச் சில மலர்களில் தேடியபடி நானும், இன்னொரு
மாலையும் நின்றிருக்க, இரவு மரங்களில் அடைகிறது.

அசைவற்றுக் கிடக்கும் நீர்ப்பரப்பில் தலைதூக்கி
நெடிதுறங்கும் மரநிழலை நேர்கோட்டில் எழுப்புகிறது
ஒரு நீர்ப்பறவை, தழும்பிய அலைகள் சதுர வயல்களில்
அலைந்து திரியப் பெயர் தெரியாத மலரொன்றின்
இதழ்களில் பயணித்து என் சாளரங்களை அடைகிறது
ஒரு மாலையும், உன் புன்னகையும்.

வேறெங்கோ கசியும் இசைத் துளியொன்றில்
உயிர்த்து எழுகிறது உன் பழைய புன்னகை,
வகுப்பறை ஒன்றின் மௌனச் சுவர்களில்.

எப்போதோ தெறித்து விழுந்த உன் சிரிப்பின்
கரம் பற்றி எனைக் கடந்து செல்கிறது
இன்னொரு மாலை.

3885858401_3bc0529094

உறைபனிக் காலையொன்றின் வாசலில் வரைந்து கலைந்த
வண்ணக் கோலமாய் ஒட்டிக் கிடக்கிறது உன் நினைவுகள்,
உன் புன்னகையால் நிரப்பப்பட்ட கனவுக் கோப்பையொன்று
நொறுங்கும் ஓசையில் ஒரு பூவும், சில பறவைகளும் கண்
விழித்துப் பறக்க, இன்னொரு விடியலைத் தேடித் பறக்கிறது
இன்றைய மாலை……. வழியெங்கும் நீ கொடுத்த முத்தங்கள்,

வெளிர்த்துச் சிவந்த மேகங்களாய்.

பள்ளத்தாக்கொன்றின் படர்மரப் பரப்பில் அறுந்து
விழுகிற மலரொன்றின் தனிமைப் பெருமூச்சையும்,
இணையைத் தேடித் தாழப் பறக்கும் பறவையொன்றின்
கூக்குரலையும், எளிதில் கடந்து என்னருகில் வருகிறது
இன்னொரு மாலை, கடக்கவே முடியாத உன் நினைவுகள்,
இனி அந்த மஞ்சள் நிற மாலையை அடர்ந்த இருளாக்கும்.

வாடிக் கீழே விழக் காத்திருந்த ஒரு மலரின் இதழ்களில்
முத்தமிட்டு மறைகிறது சுற்றி அலைந்த சூரியன்,
மலையோரக் கிராமமொன்றின் நறுமணத்தைச் சுமந்து
சாளரத் திரைகளை அசைக்கிறது காற்று, விரிந்து பரந்து
வெளியில் கிடக்கிறது உன் புன்னகை, மாலை நேரத்தை
உணர்த்தியபடி வந்து சேர்கிறது உன் நினைவுகள்,
உதிர்கிற இதழ்களைச் சேர்த்து இன்னும் ஒரு இரவு
மலரப் போகிறது.

உயரக் கட்டிடத்தின் பின்னே மௌனிக்கின்றன,
பெரு நகரத்தின் இரைச்சலும், சூரியனும்,
பேருந்துச் சாளரங்களில் எப்போதாவது
வந்து போகிறது நிறுத்தங்களும், நிலவும்,
அழுக்கடைந்த மரமொன்றின் பழுப்பு
இலை வழி உதிர்கிறது இரவின் தடங்கள்,
இலக்கற்றுத் திரியும் ஒரு பறவையின்
சிறகில் ஏறிப் பறக்கிறது இன்றைய மாலை.

2583307980_004919f632

தூக்கி எறியப்பட்ட காகிதக் குவளையொன்றில் குளிர் நிரம்பிக் கிடக்க,

சில காதலர்களின் முத்தங்களை உரசியபடி கடலுக்குள் கரைகிறது பகல்,

அலைப்பரப்பின் ஊடாகக் கரை சேரும் இரவைப் பார்த்தபடி,

சுண்டல் சிறுவர்களின் பின்னால் சுற்றி அலைகிறது இன்றைய மாலை,

சிதறிக் கிடக்கிறது மணலில் நிலவொளியும், வாழ்க்கையும்.

குறுக்கிட்ட பாலத்தில் கடந்து போகிற ரயிலையும்,
குளித்துக் கரையேறுகிற சிலரையும், ரசித்தவாறு
ஆற்றில் மிதந்து ஆடியபடி பயணிக்கிறது நிலவு.
கடலில் கலக்குமா? இல்லை, கரை எறி விடுமா??
கவலைகளோடு அலைகிறது இன்றைய இரவு

இருளின் சுருண்ட அலைகள் மாலையின்
கரையில் புரண்டு மேலேறக் காற்றில்
மிதக்கிறது கொடுக்கப்படாத ஒரு முத்தம்.
இரவின் மணலில் புதைந்து அது எழுந்து
வரலாம் ஒரு கனவின் வெளிச்சத்தில்
தனது இலக்கை நோக்கித் தவித்தபடி
அப்போது நான் விழித்திருக்கக் கூடாது.

flower-manipulation

இதுவரை கேட்கப்படாத இசையின்
துளியொன்றைக் கட்டி இழுத்துக்
கொண்டு தூரத்தில் மிதக்கிறது நீளப்
படகொன்றில் இன்றைய இரவு,
அவை இரண்டையும் மீட்கப்
புறப்படும் என் கனவுகள், ஒரு ஒளிரும்
நட்சத்திரத்தின் கண்களைச் சிமிட்டியபடி
அதிகாலையில் திரும்ப வரலாம்.

மழை எறிந்த துளியொன்றில் தொடர்பறுந்து
விழுந்துடைந்து சிதறுகிறது ஒரு செந்நிறப் பூ.
சாலைகளில் மலர்கிறது இன்றைய இரவு.

பகலின் சுமைகளை நெட்டி முறித்தபடி, சலசலக்கிற
மரமொன்றின் அடியில் மஞ்சளாய் உதிர்ந்து மலர்ந்து
கிடக்கிறது இன்னொரு மாலை, மரக்கிளைகளின் வழியே
வழிந்து நிரம்புகிறது இன்றைய இரவின் விழுதுகள்.

வழியில் பகலைத் தொலைத்து
விட்டுக் குளக்கரையில் திரிகிறது
இன்னொரு மாலை, கரையேற
மனமின்றி நீர்ப்பரப்பில் மலரொன்றை
விரிக்கிறது இரவின் கரங்கள்.

பகலின் துளிகள் சிந்திக் கிடக்கிறது
இன்னும் சில பூக்களில்,மாலையின்
கண்பொத்தித் தெருவொன்றில் குழந்தைகளோடு
இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறது
இன்றைய இரவு.

Rainy_Evening_by_coma_wh1te

உன் சிரிப்பின் விழுதுகளைப் பற்றிக்
கொண்டு, ஒரு கொடியும், சில மலர்களும்
புன்னகை செய்ய, நான் புரண்டு படுக்கிறேன்,

உதிர்கிறது கனவின் சருகொன்று.

மேகங்களுக்கு அப்பால், நிலவின் அடியில்
பூத்திருக்கும் ஒரு பூவின் இதழில் இருந்து
மிதந்து வரும் எனக்கான இரவுக் கனவுகள்,
முன்பொரு நாள் நீ கொடுத்த முத்தங்களை
யாருக்கும் தெரியாமல் அங்கு தானே புதைத்தேன்.

சற்றுமுன் கடந்த ரயிலின் கதவில் நின்று சிரிக்கிற பெண்,
தெரியாத ஊரில் கண் சிமிட்டிக் கையசைக்கிற சுட்டிக்குழந்தை,
தூரத்தில் படுத்திருக்கும் மலையொன்றில் எரியும் விளக்கு,
சில விண்மீன்களும் நிலவும் மட்டும் விழித்திருக்கிற இரவு,
அத்தனையும் பார்த்தபடி விழியோரம் வழியக் காத்திருக்கிறது
ஒரு பயணத்தில் உன் நினைவு.

நிலவை உடைத்து விட்டு ஜன்னலில்
வழிகிற பனித்துளி உன் கண்ணீராய்
இருக்க வேண்டும், அறை சுடுகிறது.

வெட்ட வெளிகளில் சுற்றித் திரிந்த காற்றும்,
சில பறவைகளும் சுற்றி இருந்த கிளைகளில் அடைய,
பட்ட இலைகளை உதிர்த்து இரைந்தபடி படுக்கப் போகிறது மரம்.

blog_041

வயல்களில் படர்ந்திருந்த மிச்ச வெய்யிலைக் கட்டி இழுத்தபடி

பறக்கும் பெயரற்ற பறவைகள் இருளை உதிர்த்தபடி சிறகடிக்க,

மரங்களின் இடைவெளியில் பொன்னிறத்தில் கசிந்து அறைக்குள்

நுழைகிறது ஒரு அழகிய மாலை, உன் நினைவுகளை எழுப்ப.

எங்கிருந்தோ துரத்தப்பட்டிருக்க வேண்டும்,
மரக்கிளைகளில் சிக்கிக் குளத்தில் விழுந்த
சில விண்மீன்களைத் தேடியபடி அலைந்து,
கிடைத்த வெளிச்சப் போர்வை போர்த்தியபடி
தெருவிளக்கடியில் குளிர்காய்கிறது இருட்டு.

என் கனவுகளில் விளையாடிக் களைத்த
பின் காலையில் முற்றத்து மலரொன்றின்
ஒற்றை இதழில் குவிந்து மலர்ந்து கிடக்கும்
"உன் புன்னகை".

"உன் நினைவுகளால் தாலாட்டிப் புவிப்பந்தை
உறங்கவைத்த பின்னரும் விழித்தே கிடந்தன
என் இரவுப்பொழுதுகள்"

 

"ஒளிக்கற்றை விழுதுகளின் வழியே முற்றத்தில்

இறங்கி யாருக்கும் தெரியாமல் வாளிக் குளத்தில்

ஆடிக் குளிக்கிறது பாதி உடைந்த வெண்ணிலா"

50667379_AberdeenSeaShoreEvening

 

**********

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: