கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 16, 2011

“ஜோ” என்றொரு மனிதன். (சிறுகதை)

 

clown

ஜோ மூன்றடி உயரம் தான் ஆனால் மனிதன், அழுகவும், சிரிக்கவும், யாரையாவது அணைத்துக் கொள்ளவும் நினைக்கிற மனிதன் தான் ஜோ, ஆனால், உலகம் ஏனைய மனிதர்களைப் போல ஜோவை நடத்துவதில்லை, கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிற விலங்குகளைப் போலவே உயரம் குறைவான ஜோவைப் பலர் பார்த்துச் செல்கிறார்கள், ஜோ யாரிடமாவது தான் கடைசியாகப் பார்த்த திரைப்படம் குறித்தும், அதில் வருகிற நீர்வீழ்ச்சி குறித்தும் உரையாடி விட வேண்டும் என்று விரும்புகிறான், ஆனால் அப்படி யாரும் அவனுக்குக் கிடைக்கவில்லை, ஜோ கடற்கரைக்குச் சென்று அலைகளோடு விளையாட வேண்டும் என்று நீண்ட காலமாகத் திட்டம் தீட்டி அதனைச் செயல்படுத்திய ஒரு முறை தன்னைச் சுற்றிப் பெருங்கூட்டம் கூடிவிட்டதை எண்ணி வருந்தி இருக்கிறான். ஜோவுக்குக் கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு நாளும் அழுகை வரக்கூடிய மனநிலை இருந்திருக்கவில்லை, ஆனால் இன்று கண்ணீர்த்துளிகள் பணிக்கத் துவங்கி இருந்தன, சிங்கங்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டின் அருகில் ஜோ நின்று கொண்டிருந்தான், ராஜா என்று அழைக்கப்படும் அந்த சிங்கம் ஜோவைப் பார்த்ததும் எழுந்து அருகில் வந்து விட்டிருந்தது, ஜோ தனது மிகக் குட்டையான கைகளை கம்பிகளின் வழியே உள்ளே நுழைத்து ராஜாவை வருடிக் கொடுத்தான், ராஜா தனது கழுத்தைச் சாய்த்துக் கொண்டு அவனது வருடலை ஆமோதித்தது, இந்த சர்க்கஸ் கூடாரத்தில் ஜோ என்கிற குள்ள மனிதனாக அவன் சேர்க்கப்பட்ட போது யாரோ ஒரு இந்தோனேசிய வியாபாரி இந்த சிங்கத்தை சர்க்கஸ் கம்பெனிக்கு விற்று விட்டிருந்தான், பத்து நாட்களுக்கு மேலாக ராஜா அதிக ஆர்ப்பாட்டம் செய்து அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது, மாஸ்டர் எத்தனையோ முயற்சி செய்து பார்த்தும் பயனின்றிப் போனது, ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த சிங்கங்களை முன்னங்கால்களால் அடித்து விரட்டுவதும், கடிக்க வருவதுமாய் இருந்த ராஜா பிறகு எப்படியோ கொஞ்சம் அமைதியடையத் துவங்கியது, ராஜாவின் கூண்டுக்கு அருகில் சென்று பார்ப்பதும், அதனிடத்தில் பேசுவதுமாய் ஜோ அந்த சிங்கத்திடம் கொஞ்சம் கொஞ்சமாய் ஒட்டிக் கொள்ளத் துவங்கி இருந்தான், ராஜாவும் முறைத்துப் பார்ப்பதும், பின்பு கழுத்தைச் சிலுப்பிக் கொள்வதுமாய் இரண்டு மூன்று மாதங்களைக் கடத்தியது.

52677

பிறகு ஒருநாள் மாஸ்டரிடம் ஜோ ராஜாவுக்குத் தான் உணவு கொடுக்க விரும்புவதைச் சொன்னபோது மாஸ்டர் சிரித்தார், "நானே இந்த சிங்கத்திடம் இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாகத் தான் இருக்கிறேன் ஜோ, நீ கேட்பது எனக்கு வியப்பாக இருக்கிறது" என்றார், ஆனாலும், தொடர்ந்து மூன்று நாட்களாய் ஜோவின் நச்சரிப்புத் தாங்காமல் மாஸ்டர் கடைசியில் ஒப்புக் கொள்ள வேண்டியதாய் இருந்தது, இரும்பு வாளியில் கொடுக்கப்பட்ட இறைச்சித் துண்டுகளை எடுத்துக் கொண்டு மாஸ்டரின் பின்னால் நடக்கத் துவங்கி இருந்தான் ஜோ, ராஜா மெல்ல எழுந்து மாஸ்டரின் அருகில் வரத் துவங்கியது, அதே நேரம் எழுந்து மாஸ்டரின் அருகில் வருவதற்குத் தாயாரான இன்னொரு சிங்கத்தை ராஜா நின்று ஒருமுறை முறைத்துப் பின் கர்ஜிக்கவும் அந்த சிங்கம் அப்படியே படுத்துக் கொண்டதைப் பார்த்து மாஸ்டர் கொஞ்சம் பின் வாங்கினார், ஜோ வாளியைக் கையில் எடுத்துக் கொண்டு முன்னேறினான், இருப்பதில் ஒரு மிகப்பெரிய இறைச்சித் துண்டை ராஜாவை நோக்கி வீசி விட்டு இரண்டு அடிகள் முன்னே நகர்ந்தான் ஜோ, ராஜா ஒரு முறை கழுத்தைச் சாய்த்து ஜோவைப் பார்த்து விட்டு இறைச்சித் துண்டை கடித்து இழுக்கத் துவங்கியது, ஜோ இப்போது ராஜாவின் கழுத்துக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தான், சிறிது தயங்கிப் பின் ஒரு குருட்டுத் தைரியத்தில் ராஜாவின் பிடரி மயிர்களைக் கோதி வருடிக் கொடுக்கத் துவங்கினான், இப்போது இறைச்சித் துண்டுகளை விடுத்தது ராஜா, தனது கழுத்தைச் சாய்த்துக் கொண்டு வாயைத் திறந்து ஜோவின் கைகளை முட்டியபடி தேய்க்கத் தொடங்கியது, இப்போது தனது இரண்டு கைகளாலும் ஜோ ராஜாவை அணைத்துக் கொண்டான், இன்னும் சில இறைச்சித் துண்டுகளை நேரடியாக ராஜாவின் பற்களில் கொடுக்கத் துவங்கிய ஜோவை ரசித்தபடி ராஜா தனக்கான இறைச்சியை சுவைக்கத் துவங்கியது, மாஸ்டர் கொஞ்ச நேரம் ராஜாவையும், ஜோவையும் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார். ராஜாவும், ஜோவும் அன்றில் இருந்து நல்ல நண்பர்களாகி இருந்தார்கள்.ஜோவுக்கு நிறைவாக இருந்தது, ஜோவின் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு வியப்பான முரட்டுத்தனமான உயிர் அன்பு செலுத்துவது அம்மாவுக்குப் பிறகு அன்று நிகழ்ந்தது.

3400699780_c9890cc1a0

நினைவுகள் நிகழ் காலத்துக்கு வந்தபோது ஜோவின் கண்களில் இருந்து தாரையாய் நீர் வழிந்து கொண்டிருந்தது, இன்னும் பத்துப் பதினைந்து நாட்களில் ராஜாவைப் பிரிய வேண்டும், சர்க்கஸ் கூடாரத்தின் முதலாளி கடுமையான பண நெருக்கடியில் இருந்தார், முன்னரைப் போல சர்க்கஸ் கூடாரங்களுக்கு மக்கள் வருவதில்லை, விலங்குகளையும், மனிதர்களின் சாகசங்களையும் இப்போது மனிதர்களின் வீட்டுக்கே தொலைக்காட்சிகள் கொண்டு சென்று விடுகின்றன, காட்டு விலங்குகளின் வாழ்க்கையை, அவற்றின் இரை தேடும் படலங்களை எல்லாம் மிகுந்த நெருக்கமாக ஒளிபரப்பும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் எழுச்சி சர்க்கஸ் மாதிரியான கூட்டு மனிதர்களின் சாகசங்களையும், ஜோ மாதிரியான குள்ள மனிதர்களின் வாழ்க்கையையும் அடித்து வீழ்த்தி இருக்கிறது, சர்க்கஸ் முதலாளி நேற்றுக் காலையில் எல்லோரையும் அழைத்து அமரச் சொன்னார், தான் மிகுந்த பண நெருக்கடியில் இருப்பதையும், விலங்குகளையும், பொருட்களையும் இன்னுமொரு சர்க்கஸ் நிறுவனத்துக்கு விற்று விடப் போவதாகவும், அனேகமாக இன்னும் பத்து நாட்களில் பணப் பரிமாற்றம் நிகழும் என்றும் சன்னமான குரலில் சொன்னார், சர்க்கஸ் கூடாரத்தில் இருந்த பலருக்கு இது ஏற்கனவே தெரிந்த செய்தியாக இருக்க வேண்டும், பெரிதான மாற்றங்கள் ஏதுமின்றி அமைதியாக அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள், விஜியும், யாதவும் சர்க்கஸ் முதலாளியிடத்தில் உரத்த குரலில் எதற்காகவோ சண்டை பிடித்தார்கள், அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய பணத்தை உடனடியாக அவர் கொடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் காவல்துறையில் புகார் கொடுக்க நேரிடும் என்றும் அவர்கள் அவரிடம் எழுந்து நின்று சத்தம் போட்டார்கள், வேறு ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் இருந்து ஒரு வருடங்களுக்கு முன்னாள் இவர்களை அதிக சம்பளத்தில் வேலைக்குச் சேர்த்துக் கொண்டிருந்தார் முதலாளி, கடந்த ஆறு மாதங்களில் நல்ல உணவும், உடையுமாய் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள் இந்தத் தம்பதியினர், அதிக சம்பளத்தில் வேலைக்குச் சேர்ப்பது சர்க்கஸ் கூடாரங்களில் மிக அரிதாக நிகழும் நிகழ்வு, இப்போது அனேகமாக முதலாளியை அவர்கள் மிரட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஜோ வெறுமையாய் உணரத் துவங்கினான், ஜோவின் வாழ்க்கை விவரம் தெரிந்த நாட்களில் இருந்தே இப்படித்தான் நிலையற்றதாய் இருந்தது, ஜோவுக்கு எட்டு வயதான போது ஜோவின் தந்தை அவனை ஒரு சர்க்கஸ் கூடாரத்துக்கு விற்று விட்டிருந்தார், தாயின் இறப்புக்குப் பின்னர் ஜோவின் வாழ்க்கையில் எந்த மனிதரும் அன்பு செலுத்தியதாய் அவனுக்கு நினைவில்லை, தாய் இறக்கும் வரையில் ஜோவின் மீது அன்பு செலுத்தினாள், உயரம் குறைவான குழந்தைகளையும் அவர்களின் தாய் மட்டுமே நேசிக்கிறாள் என்கிற உண்மையை ஜோ அறியத் துவங்கி இருந்த போது ஜோவின் அம்மாவுக்குக் காச நோய் முற்றிப் போய் இருந்தது, ஜோவை சர்க்கஸ் கூடாரத்துக்கு விற்கும் தனது கணவனின் முடிவை அவள் தான் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தாள், ஆனால் தாயின் மரணம் ஜோவின் தந்தைக்குச் சாதகமாக இருந்தது, முடிவில் தந்தை பத்தாயிரம் ரூபாய்களை பெற்றுக் கொள்ளவும் ஜோ வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டான், ஜோவுக்குத் தந்தையின் மீது கூட அளவற்ற அன்பும், பாசமும் இருந்தது, மருந்துக்குக் கூடத் தன் மீது அன்பு செலுத்தாத தந்தையின் மீது ஜோவுக்கு இருந்த பாசம் அலாதியானது, தனக்கென இந்த உலகில் இருக்கும் சொந்தம் தந்தை மட்டும் தான் என்கிற உள்ளுணர்வு ஜோவை அப்படியான ஒரு அன்பு கொள்ள வைத்தது. ஆனாலும் வறுமை ஒரு குள்ள மனிதனைப் பெற்ற தந்தையை வணிகனாக்கி இருந்தது. வழக்கம் போலவே பொருளின் தேவை மனிதர்களின் உள்ளுக்குள் பொதிந்து கிடக்கும் அன்பையும், பாசத்தையும் விரட்டி விட்டிருந்தது.

WATING FOR ANOTHER JOKER

Clown Rajeev (short) from Calcutta and Biju from Kerala are playing cards during the break time at Rambo circus in Pune.

ஜோ தனது நினைவுகளை அசை போட்டபடி விளக்குக் கம்பங்களின் மீது ஏறத் துவங்கி இருந்தான், துருப்பிடித்திருந்த அந்த விளக்குக் கம்பிகள் இரவு வேளைகளில் நீண்ட தொலைவுக்கு சர்க்கஸ் கூடாரங்களின் இருப்பை வெளிப்படுத்தும் வட்ட வடிவ ஒளிபாய்ச்சும் விளக்கை நிறுத்திப் பிடித்துக் கொண்டிருந்தன, ஜோவின் கால்கள் அந்தக் கம்பிகளின் மீது படாத நாட்கள் அநேகமாக இல்லை, ஜோ எப்போதும் மாலை வேளைகளில் உயரமான இந்தக் கம்பிகளில் ஏறி நின்று கொண்டு இரவுக் காட்சிக்கு வரும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருப்பான், ஏனோ இந்தக் கம்பிகளில் ஏறி உயரமான இடத்தில நிற்கும் போது தான் ஒரு குள்ளமான மனிதன் என்கிற நினைவு மறந்து போய் எல்லோரையும் விட மிக உயரமாய் இருப்பதாய் ஜோவுக்குத் தோன்றும், சராசரி உயரங்களில் இருந்தும், உருவங்களில் இருந்தும் குறைந்த மனிதர்களை இந்த உலகம் தனக்குத் தொடர்பு இல்லாதவர்களைப் போல நடத்துவதாக ஜோவுக்குள் ஒரு குறை இருந்து கொண்டே இருந்தது, ஜோவின் குடும்பத்தைப் பற்றியும், ஜோவின் உணர்வுகளைப் பற்றியும் இவ்வுலகில் யாருக்கும் அதிக அக்கறை இருக்கவில்லை, அவ்வளவு ஏன் ஜோ என்ற பெயர் கூட ஜோக்கர் என்கிற பட்டப்பெயரின் முதல் எழுத்தைத் தான் பற்றிக் கொண்டிருந்ததே தவிர தனக்குத் தாயால் வைக்கப்பட்ட நெருக்கமான கணேஷ் என்கிற பெயரை இந்த உலகம் மறந்து விட்டிருந்தது, தன்னை கணேஷ் என்று அழைக்க வேண்டும் என்று பல மனிதர்களோடு ஜோ சண்டை போட்டுப் பார்த்தான், அந்தப் பெயரை கடைசியாக அம்மா அழைத்தபோது அம்மாவின் உடலில் பாதி உயிர் தான் இருந்திருக்க வேண்டும், அம்மாவின் மரணத்தோடு கணேஷ் என்கிற பெயரும் செத்துப் போனது குறித்து ஜோவுக்கு மிகுந்த வருத்தம் இருந்தது. ஒரு பெயர் கொல்லப்பட்டதை அந்தப் பெயருக்குச் சொந்தக்காரனாக இருக்கும் மனிதன் பார்ப்பது வாழ்க்கையில் விநோதமானதாகத் தான் இருக்கிறது, ஆனாலும், வினோதங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது.

ராஜா என்கிற சிங்கமும் ஜோவும் நண்பர்களானது கூட வாழ்க்கையில் அப்படி ஒரு வினோதம் தான், மாஸ்டரிடம் கூட அத்தனை அன்பு காட்டாத ராஜா ஜோவின் மீது அபாரமான அன்பு செலுத்தியது, ஜோ உணவு மற்றும் காட்சி நேரங்களைத் தவிர்த்து ராஜாவின் கூண்டுக்கு அருகிலேயே அதிக நேரம் செலவழித்தான், சில காலை நேரங்களில் ராஜாவுடன் உலவுவது, அதற்கு உணவளிப்பது என்று தனது உலகத்தை இன்னொரு உயிரோடு ஒட்டிக் கொண்டிருந்தான் ஜோ, ராஜா தனது இரண்டு கால்களைத் தூக்கி உடல் எடை முழுவதையும் ஜோவின் மீது கிடத்தி கால்களால் மென்மையாக அடிக்கும் போது ஜோ தனது தாயின் அரவணைப்பை உணர்ரத் துவங்கினான், ஜோவின் உலகம் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு நெருக்கமான உறவோடு நிகழ்ந்ததைப் போலவே ஜோ உணரத் துவங்கினான். இப்போது ஜோ வாழ்க்கையில் மீண்டும் ஒரு முறை இழப்பையும் துயரத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும் போலிருந்தது, அதிலும் ராஜாவைப் பிரிய நேரிடும் அவலத்தை ஜோவால் கற்பனை செய்யவும் முடியவில்லை, மின் கம்பங்களோடு அதிக நேரம் செலவிடத் துவங்கினான் ஜோ, ஜோவுக்குத் தான் குள்ளமாய் இருப்பது குறித்த வருத்தமும், துயரமும் அதிகமாய் இல்லை, ஆனால், தனக்குள் இருக்கும் மனிதனைப் புறக்கணிக்கிற அல்லது தன்னை ஒரு காட்சிப் பொருளாய் மட்டுமே பார்க்கிற இந்த உலகத்தைக் கண்டால் மிகுந்த எரிச்சலாகவும், அயர்வாகவும் இருந்தது, தனது வயிற்றின் மீது ஒட்டப்பட்டிருக்கிற மினுமினுக்கிற காகிதங்களைப் பற்றி அதிகம் கேள்வி எழுப்பும் இந்த உலகம், அந்தக் காகிதங்களின் பின்புறமாகக் காய்ந்து ஒட்டிக் கிடக்கிற வயிற்றைக் குறித்தும், அதில் இருந்து புறப்படும் பசியைப் பற்றியும் ஒரு போதும் கேட்டு அறிந்து கொண்டதே இல்லை, முட்டை வடிவத்தில் தலையைச் சுற்றிப் பொருத்தப்பட்டிருக்கும் தொப்பியின் கோணங்களைக் குறித்துக் கவலைப்படுகிற உலகம், பல முறை கயிற்றில் ஆடும் காட்சியின் போது கீழே விழுந்து கண்ணிப் போயிருக்கும் காயங்களைக் குறித்து அதிகம் கவலைப்படுவதே இல்லை.

3610602496_646097d4b7

கடுமையான மன உளைச்சலில் இருந்த ஜோவின் நாட்கள் விரைவாக ஓடத் துவங்கி இருந்தன, ஜோ தனது தாயைப் பறி கொடுத்தபோது அவனுக்கு வயது எட்டு இருக்கலாம், அன்றைய நாட்களின் துயரங்களை விடவும், இன்றைய நாட்கள் மிகுந்த வலியோடு நகரத் துவங்கி இருந்தன, வாழ்க்கையில் பல்வேறு மனிதர்களைப் பிரிந்து வந்திருக்கிற ஜோவுக்கு ஒரு சிங்கத்தைப் பிரிகிற துயரத்தைத் தாங்க முடியவில்லை, பெரும்பாலான தனது நேரத்தை மின் கம்பங்களின் மீதேறி அமர்ந்து கழிக்கத் துவங்கி இருந்தான் ஜோ. இறுதியாக அந்த நாளும் வந்து விட்டிருந்தது, மாஸ்டர் ஒரு மூலையில் நின்று கொண்டிருக்க, அவருக்கு அருகில் முதலாளி நின்று கொண்டிருந்தார், எங்கிருந்தோ ஒரு வட மாநிலத்தில் இருந்து வந்திருந்த லாரிகளில் சிங்கங்களை ஏற்றும் பணியைச் சில பணியாளர்கள் தொடக்கி இருந்தார்கள், இரண்டு கூண்டுகளுக்கு இடையில் இடைச்செருகலான இன்னொரு நீளமான நடைமேடையைப் பயன்படுத்தி சிங்கங்களை ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டிருக்கிற பணியாளர்களைப் பார்த்தபோது ஜோவின் கண்களில் நீர் கட்டிக் கொண்டது, ராஜா அடைக்கப்பட்டிருக்கும் கூண்டு அப்படியே இருந்தது, ராஜாவை அருகில் சென்று பார்க்கும் வலிமை தனக்கு இல்லை என்பதை ஜோ உணரத் துவங்கினான், இப்போது விளக்குக் கம்பங்களும் கீழே சாய்க்கப்பட்டிருந்தன. ஏறிச் சென்று தனிமையில் அமர்ந்திருக்கவும் வாய்ப்பில்லை, தனது கால்களில் இருந்து உலகம் நழுவிக் கொண்டிருப்பதை ஜோ பார்த்துக் கொண்டிருந்தான்.

கூடாரத்தில் இருந்த அனைவரும் தங்கள் அடுத்த கட்ட நகர்வு குறித்த முடிவான திட்டங்களை வைத்திருந்தார்கள், ஆனால் ஜோவுக்கு அப்படி ஒன்று இருக்கவில்லை, ஜோவுக்கு ஒரே ஒரு திட்டம் மட்டுமே இருந்தது, ராஜாவைப் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதே அந்தத் திட்டம். இன்னும் சில மணித் துளிகளில் ராஜாவை லாரிக்கு மாற்றி விடுவார்கள், பிறகு தனது இரண்டு கைகளாலும் அணைத்துக் கொள்ள ஜோவுக்கு இவ்வுலகில் இருந்த ஒரே உயிரும் அவனை விட்டு விலகிப் போய் விடும் என்கிற உண்மையை ஜோ மிக நெருக்கத்தில் உணரத் துவங்கினான், ஜோ தனக்காக எதையும் யாரிடத்திலும் கேட்பதில்லை, கிடைக்கிற உணவு, சொல்கிற வேலை என்று வாழ்க்கை முழுவதுமே ஒரு அடிமையைப் போலக் கழித்திருந்தான் ஜோ, இப்போது ஜோ ஒரு முடிவுக்கு வந்திருந்தான், மெல்ல நடந்து சென்று முதலாளியின் அருகில் நின்று கொண்டு அவரது முகத்தைப் பார்க்கத் துவங்கினான் ஜோ, முதலாளி தன கூடார விலங்குகளை விலைக்கு வாங்குகிற மனிதனோடு பேசிக் கொண்டிருந்தார்.

2113206684_a5b6370a67

"ஐயா, ஒரு சின்ன வேண்டுகோள்" என்றான் ஜோ, முதன்முறையாகத் தன்னிடத்தில் வேண்டுகோள் விடுக்கும் ஜோவைக் குனிந்து பார்த்தார் முதலாளி, "என்ன ஜோ?, நீயும், கிளம்புகிறாயா?" என்று கேட்டார் முதலாளி, "என்னையும் இந்த லாரியில் ஏற்றி அனுப்பி விடுங்கள் ஐயா" என்று சன்னமான குரலில் சொன்னான் ஜோ, "எப்படியும் குள்ளர்கள் தேவைப்படுவார்கள் தானே அந்தக் கூடாரத்து மனிதர்களுக்கு?" என்று மீண்டும் கேட்டான் ஜோ, "என்னையும் அவர்களிடம் பேசிக் கிடைக்கிற விலைக்கு விற்று விடுங்கள் ஐயா" என்று கெஞ்சலான குரலில் ஜோ கேட்டது முதலாளியின் மனத்தைக் கொஞ்சம் இளக்கி இருக்க வேண்டும் அல்லது இன்னும் கொஞ்சம் பணம் கிடைக்கும் என்கிற பொறி அவரிடத்தில் அப்போது தான் உருவாக்கி இருக்கும், மெல்ல நகர்ந்து சென்று ஜோவைக் கைகாட்டி அந்த மனிதரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார் முதலாளி, இறுதியில் ஜோவின் பக்கமாக வந்து "ஜோ, நீயும் இந்த லாரியில் செல்லலாம்" என்றார். ஜோ வாழ்க்கையில் முதன்முறையாக வெற்றி பெற்றது போல உணர்ந்தான், ராஜா அடைக்கப்பட்டிருக்கும் அந்தக் கூண்டின் பக்கம் சென்று தனது கையைக் கம்பிகளின் வழியாக நுழைத்து ராஜாவின் பிடரியைப் பிடித்தான் ஜோ, ராஜா தனது இரண்டு முன்னங்கால்களையும் தூக்கி ஜோவின் கழுத்தில் வைக்க முயற்சி செய்தது, அப்போது அது மிக உயரமானதாக இருந்தது, எல்லா மனிதர்களையும் விட மிக உயரமாக ராஜா இருப்பதாக ஜோ நம்பத் துவங்கினான்.  உயரம் குறைந்த ஒரு மனிதனின் மனதில் ஏனைய உயரமான மனிதர்களை விடவும் தான் உயர்நிலை பெற்று வாழ்வதை அறியாமல் அது ஜோவின் முகத்தில் உரசத் துவங்கி இருந்தது. தனது தாய்க்குப் பிறகு இரண்டு கைகளாலும் தன்னை அணைத்துக் கொள்கிற இன்னொரு உயிரை மிக உயரமானதென்று ஜோ நம்புவதில் வியப்பில்லைதான். இனி ஜோவும் ராஜாவும் பயணம் செய்வார்கள், குள்ள மனிதர்களுக்கான தேவை மனித மனங்களில் மிச்சமிருக்கும் வரை…….

vintage-pierrot-clown-lion-bisque-figurine-circus-old_190491201678

************

Advertisements

Responses

  1. Good story…
    Unnarvulla Kathai…really good

  2. what to write?
    Superb story, write more stories like this.
    Sentimental and touching too.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: