கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 23, 2011

இரண்டு குழந்தைகள், ஒரே தாய் (சிறுகதை)

mother_child

நாளை விடிந்தால் தீபாவளி, தீபாவளி கொண்டாடுகிற மனநிலையில் நானும், பூங்கொடியும் இருக்கவில்லை, பாண்டியனுக்கு ஏழு வயதாகிறது, ஆனால் அவனுக்கு ஆடைகள் மீது எந்த ஒரு அக்கறையும், ஆர்வமும் இருப்பதில்லை, அவன் ஆடைகள் இல்லாமல் இருப்பதையே பெரும்பாலும் விரும்புகிறான், மூன்று வயதானாலும் தமிழரசிக்கு ஆடைகள் மட்டுமில்லாமல் அலங்காரம் செய்து கொள்வதிலும் அதிக ஆர்வம், பூங்கொடியின் பொட்டு, தலை அலங்காரப் பொருட்கள் எல்லாவற்றையும் இப்போதே அணிந்து கொள்வதும், புதியவற்றைக் கேட்பதும் என்று பாண்டியனுக்கு எதிராக இருக்கிறாள், பாண்டியன் தங்கைக்காக எதை வேண்டுமானாலும் கொடுத்து விடக் கூடிய, அவள் மீது மிகுந்த அன்பு கொண்ட ஒரு அண்ணனாக இருக்கிறான், நாங்கள் தீபாவளி கொண்டாடி ஏறத்தாழ ஐந்தாறு ஆண்டுகள் ஆகி விட்டிருந்தது, திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், ஆரவாரத்தோடும் தீபாவளியைக் கொண்டாடி இருக்கிறோம், ஆனால் கொண்டாட்டங்கள் ஒரு சடங்காக மட்டும் இருக்கக் கூடாது என்பதில் எங்கள் இருவருக்குமே ஒரே மனநிலை இருந்தது, நான் பூங்கொடியை கடைத் தெருவுக்கு அழைத்தேன். நீங்களே போய் வாங்கி வந்து விடுங்களேன், எதுக்கு நானும் குழந்தைகளும்", என்று மறுத்துப் பார்த்தாள் பூங்கொடி, நான் விடுவதாய் இல்லை.

"இல்ல, பூங்கொடி, வா, நாமளும் கடைத்தெருவுக்குப் போய் ரொம்ப நாளாச்சு, பிள்ளைகளையும் கூட்டிப் போனாப்ல இருக்கும்ல" என்று சொன்னவுடன், அமைதியாகி விட்டாள், அவளுடைய அமைதி எப்போதும் ஒப்புக் கொள்வதின் அடையாளமாக மாறிப் போயிருந்தது, இரண்டு முறை எந்த ஒரு வேண்டுகோளையும் அல்லது கட்டளையையும் கொடுக்கும் போது பெரும்பாலும் பூங்கொடி அமைதியாகி விடுவாள், அந்த அமைதியை ஒப்புக் கொள்ளுதல் என்று நான் புரிந்து கொண்டிருந்தாலும், அது அவளுடைய மனமொப்பிய ஒப்புக் கொள்ளுதலா என்பது குறித்த ஐயம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். பூங்கொடி எல்லாப் பெண்களையும் போலவே தனக்குத் தேவையானவற்றையும், தனது ஆசைகளையும் கணவனிடம் கேட்கும் ஒரு பெண்ணாகவே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தாள். பாண்டியன் பிறந்து ஒரு வருடத்தில் அவளுடைய அனைத்து நடவடிக்கைகளும் மாறிப் போயிருந்தது, அவள் பாண்டியனுக்காகவே அதிக நேரம் செலவிடும் ஒரு ஆழமான தாயாக மாறிப் போயிருந்தாள், தனக்கான எதையும் என்னிடம் கேட்பதை பூங்கொடி அனேகமாக நிறுத்திக் கொண்டிருந்தாள், பாண்டியன் ஒரு தெளிந்த நீரைப் போலவும், ஆசைகள் எதுவும் இல்லாத ஒரு குழந்தையாகவும் வளர்ந்து கொண்டிருந்தான். பிறகு தான் தமிழரசி பிறந்தாள், தமிழரசி ஒரு அழகிய தேவதையைப் போலவும், மிகுந்த துடுக்குத்தனமும் ஆசைகளும் நிரம்பிய ஒரு பெண்ணாக வளரத் துவங்கி இருந்தாள், தமிழரசியின் வரவுக்குப் பின்னர் பூங்கொடி கொஞ்சம் சிரிக்கத் துவங்கி இருந்தாள், அந்தச் சிரிப்பு எனது வாழ்க்கையின் சுமைகளைக் கொஞ்சம் இறக்கி விட்டிருந்தது, பாண்டியன் பிறந்த பிறகு நான் அதிகமாகப் பூங்கொடியைப் பற்றியே கவலை கொள்ளத் துவங்கினேன், ஒரு குழந்தை ஒரு தாயின் மனதை அதிக அழுத்தத்தில் ஆழ்த்துவது என்பது எத்தனை கொடுமையான தண்டனையாக இருக்கும் என்பதை நான் உணர்ந்திருந்தேன், அவளது மன அழுத்தத்தைக் கொஞ்சமாவது குறைக்க வேண்டும் என்று நான் உளப்பூர்வமாக விரும்பினேன். ஆனால், அதில் ஒரு இருபது விழுக்காடு தான் என்னால் வெற்றி பெற முடிந்தது.

நாங்கள் கடை வீதிக்குக் கிளம்பி இருந்தோம், பாண்டியனுக்குப் பூங்கொடி அவன் மறுக்காத அடர் நிற ஆடைகளை அணிவித்து முடிக்கையில் தமிழரசி தானே ஆடைகளை அணிந்து கொண்டு விட்டிருந்தாள், நாம் கடைத் தெருவுக்குப் போகிறோம் என்கிற மகிழ்ச்சி அளவற்று இருந்தது தமிழரசிக்கு, எங்களுக்கு முன்னே அவள் நடக்கத் துவங்கி இருந்தாள், பாண்டியன் எப்போதும் போலவே இருந்தான், அவன் மகிழ்ச்சியை அல்லது துயரத்தை வெளிக்காட்டும் குழந்தையாக எப்போதும் இருக்கவில்லை, அவனுடைய உலகம் அம்மா என்றாகி விட்டிருந்தது, அம்மாவின் சிரிப்பைப் பெரும்பாலும் அவன் எதிரொளிப்பான், அம்மாவின் முகத்தைக் கூர்ந்து நோக்கி விட்டு அவள் என்ன மாதிரியான மன நிலையில் இருக்கிறாளோ அதே மாதிரி முகபாவனை காட்டுவான் பாண்டியன். பாண்டியனுக்குப் பசிக்கும் போது மட்டும் அவனது குரல் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கும், தலையை இரண்டு பக்கமும் அசைத்தபடி அவன் “ங்கே” என்று குரல் கொடுப்பான், பெரும்பாலும் அவன் அப்படிக் குரல் கொடுக்காத வண்ணம் பூங்கொடி பார்த்துக் கொண்டிருப்பாள், அவன் அப்படிக் குரல் கொடுக்கும் போது பூங்கொடியின் முகம் இருண்டு விடும், தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக அவள் மருண்டு விடுவாள், பாண்டியனைத் தூக்கித் தன் மடியில் வைத்துக் கொண்டு "யேன், ராசாவுக்குப் பசிச்சுருச்சா, அம்மா, இப்போச் சோறு குடுக்குறேண்டா செல்லம்" என்று அடிக்குரலில் அவனிடத்தில் பேசிக் கொண்டிருப்பாள்.

mothers-love

தமிழரசி என்னிடம் வான வேடிக்கைகளைக் காட்டிக் கொண்டே வந்தாள், அவளுக்கு கடந்த இரண்டு வாரங்களாக வாணவேடிக்கைகள், பக்கத்துக்கு வீட்டுக் குழந்தைகள் வெடிக்கும் வெடிகள் மீதே அதிக ஆர்வம் இருந்தது, அவளுக்கு வாங்கிக் கொடுக்கப்பட்டிருந்த வெடிகள் கொஞ்சம் குறைவாக இருப்பதாக அவள் பூங்கொடியிடம் புகார் சொல்லி இருக்கிறாள், இப்போது நேரடியாகவே என்னிடம் கேட்டாள் " அப்பா, இன்னொரு டப்பா வெடி வாங்கிக் குடுங்க, அண்ணனுக்கும் சேத்து நான் வெடிப்பேன்" என்றாள். சரி என்று தலையை ஆட்டி விட்டு நான் முன்னே நடக்கத் துவங்கினேன், "நா வேணா தம்பியத் தூக்கிட்டு வரவா" என்று பூங்கொடியிடம் ஒரு பேச்சுக்குக் கேட்டு வைத்தேன், வெளியில் வரும்போது அவள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வருவதைச் சுமையாகக் கருதுவதில்லை, அதிலும் பாண்டியனை அவள் தனது இடுப்பில் இருந்து இறக்கவே மாட்டாள், தமிழரசியைப் பல நேரங்களில் நடக்க விடுவாள், அல்லது என்னைத் தூக்கச் சொல்லுவாள். எத்தனை கூட்டமான பேருந்து நெரிசல்களிலும், பொது இடங்களிலும் பாண்டியனை வீட்டில் இருந்து தூக்கி வரும்போது எப்படிப் பிடித்திருந்தாளோ அதே போலவே பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருப்பாள், வலுக்கட்டாயமாக நான் சில நேரங்களில் அவளிடம் இருந்து பாண்டியனை வாங்கி வைத்துக் கொள்வேன், பாண்டியன் அப்படி மாற்றப்படும்போது முகத்தைப் பார்த்துச் சிரிப்பான், யார் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டாலும் அவன் எந்த வேறுபாடுகளுமின்றி அதே மாதிரியான சிரிப்பொன்றை வழங்குவான், எல்லா மனிதர்களையும் பாண்டியன் ஒரே மாதிரிப் பார்க்கும் எந்தக் களங்கமும் இல்லாத அன்பைத் தனக்குள் வைத்திருந்தான்.

வழக்கமாக நாங்கள் குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கும் கடைக்குள் சென்றபோது பெருங்கூட்டமாய் இருந்தது, அந்தக் கூட்டத்திலும் கடை முதலாளியான அந்த இளைஞன், எங்களைத் தனியாக வரவேற்றது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது, பாண்டியன் கூட்டத்தைப் பார்த்தால் கொஞ்சம் கலவரமடைவான், ஏதோ ஒரு புதிய சூழலுக்கு அவனை அழைத்துச் சென்றிருப்பது போல அவன் அம்மாவின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொள்வான், பிறகு சிறிது இடைவெளி விட்டு எழுந்து மீண்டும் கூட்டத்தை அல்லது புதிய மனிதர்களைப் பார்ப்பான், கடையில் வேலை செய்யும் சிறுவன் ஒருவன் பாண்டியனுக்கு அருகில் வந்து "பாண்டியா, என்ன தீபாவளிக்கு டிரஸ் எடுக்க வந்தியா?" என்று கேட்கவும் பாண்டியன் படக்கென்று திரும்பி அந்தச் சிறுவனைப் பார்த்துச் சிரித்தான், தனது வழக்கமான அடிக்குரலில் "திர்ர்ர்ம்பா, திர்ர்ர்ம்பா" என்று பாண்டியன் ஏதோ சொல்ல முயன்றான், பாண்டியனின் பெயரை யாராவது உச்சரித்தால் அவன் இப்படி எதிர் வினையாற்றுவது வழக்கம். பூங்கொடி தேடித் தேடி பாண்டியனுக்கான ஆடையைத் தேர்வு செய்து கொண்டிருந்தபோது தமிழரசி தனக்கான ஆடையை அவளே தேர்வு செய்து விட்டிருந்தாள், கருஞ்சிவப்பு நிறத்தில் கீழ்ப்புறமும், வெண் மஞ்சள் நிறத்தில் பூக்கள் வைத்துத் தைக்கப்பட்டிருந்த ஆடையை அவள் எனக்குக் காட்டியபோது நான் அதன் விலைப் பட்டையைப் பார்த்தேன், நான் விலைப் பட்டையைப் பார்ப்பதைப் பூங்கொடி கவனித்திருக்க வேண்டும், என் பக்கமாக நகர்ந்து வந்தவள், என் காதுக்கு அருகில் "என்னங்க, என்கிட்ட ஒரு அரநூறு ரூபாய் இருக்குங்க, புள்ளைங்க கேக்குறத வாங்கலாம்" என்றாள். அவள் எதற்காக அதைச் சொல்கிறாள் என்பது எனக்குத் தெரியும், பாண்டியனுக்காக அவள் கொஞ்சம் விலை உயர்ந்த ஆடையை வாங்கப் போகிறாள், அதற்கு முன்னோட்டமாகவே அதைச் சொல்கிறாள் என்பது புரிந்தது.

"நீ வேணும்கிறத வாங்கு, பூங்கொடி", என்று சொல்லி விட்டு அவளுக்கான உடைகளைத் தேடத் துவங்கி இருந்தேன் நான். கொஞ்சம் நிறம் குறைந்த சேலைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பலகையை நோக்கி என் கண்கள் சென்றபோது அங்கே காயத்ரியும், அவளது பிள்ளைகளும் நின்று கொண்டிருந்தார்கள். எனக்குப் பகீரென்றது, காயத்ரி நாங்கள் இருந்த பழைய வீட்டுக்குப் பக்கத்துக்கு வீட்டில் இருந்தாள். பூங்கொடியின் பொறுமையைச் சோதிப்பதிலும், அவளது கண்களைக் கலங்க வைப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவள், ஏதாவது ஒன்றைச் சொல்லி தான் சந்திக்கிற மனிதர்களின் அன்றைய பொழுதை இருண்டு போக வைப்பதில் அவள் கைதேர்ந்த பெண்ணாக இருந்தாள், காயத்ரி ஒரு முறை பூங்கொடியிடம் சொல்லி இருக்கிறாள், "எங்க வீட்டுக்காரருக்குத் தெரிஞ்ச ஒரு மடம் இருக்கு பூங்கொடி, அங்கே இந்த மாதிரிக் புள்ளைங்களை நல்லாப் பாத்துக்குவாங்க, வைத்தியம் பண்ணி, பள்ளிக் கூடத்துல படிக்க வைப்பாங்களாம், நீ வேணும்னா சொல்லு, அங்க பாண்டியணச் சேத்து விடலாம்". அன்றில் இருந்து மூன்று நாட்களுக்கு பித்தம் பிடித்தவளைப் போல இருந்தால் பூங்கொடி என்கிற தாய். பூங்கொடியும் காயத்ரியைப் பார்த்திருக்க வேண்டும், தான் பாண்டியனுக்கு ஆடை தேர்வு செய்து விட்டதாக என்னிடம் கண்களைச் சரித்துச் சொன்னாள், நான் மாடிக்குப் போவதாகக் கைகளால் சைகை காட்டியதும் அங்கிருந்து மிக வேகமாக மாடிப்படிகளை நோக்கி நடக்கத் துவங்கினாள் பூங்கொடி. அந்தக் கணத்தில் ஒரு வேட்டைக்குத் தயாரான விலங்கிடம் இருந்து நாங்கள் தப்பிச் செல்வதைப் போல உணர்ந்தோம்.

Mother_child_720

பிள்ளைகள் இருவரும் வளர்ந்து விட்டார்கள், அவர்களுக்கும் இனிக் கொஞ்சம் புழக்கம் அதிகமாகத் தேவைப்படும் என்று நான் சொன்னபோது முதலில் மறுத்தாள், பிறகு இரண்டாம் முறையாகச் சொன்னபோது அமைதியாகி விட்டாள், பூங்கொடி வீடு மாற்றுவதை விரும்பாமல் இருந்தது பாண்டியனுக்காகத் தான் என்பது எனக்குத் தெரியும், பாண்டியன் கொஞ்சம் புதிய இடங்களையும், புதிய மனிதர்களையும் கண்டால் கலவரமடைவான், கொஞ்சம் அடித்தொண்டையில் குரலெடுத்து ஏதாவது சொல்ல முற்படுவான். எங்கே வீடு மாற்றம் அவனுக்கு உளச் சிக்கலை உண்டாக்கி விடுமோ என்கிற கவலையின் ரேகைகள் அவள் முகத்தில் அளவுக்கு அதிகமாக இருந்தன, பிறகு இரண்டொரு வாரத்தில் பாண்டியன் சமநிலைக்குத் திரும்பியபோது கொஞ்சம் நிம்மதி அடைந்தாள் பூங்கொடி.

தமிழரசி வெடிகளைப் பற்றியே என்னிடம் பேசிக் கொண்டிருந்தாள், ஆடைகள் குறித்த நிறைவு அவள் மனதில் உருவாகி விட்டிருக்க வேண்டும், நாங்கள் ஒருவழியாக ஆடைகளை எடுத்துக் கொண்டு கடையில் இருந்து வெளியே வந்திருந்தோம், தமிழரசி வெளியே வந்த உடன் தள்ளுவண்டியில் வைத்து விற்கப்படும் வெடிகளைக் கை காட்டினாள், இருநூறு ரூபாய் கொடுத்து அவளுக்கு இன்னொரு வெடி டப்பாவை வாங்கியபோது எந்தச் சலனனமும் இல்லாமல் பாண்டியன் அந்த வெடிப் பெட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தான். "தம்பிக்கு வெடி வேணுமா?" என்று பாண்டியனைப் பார்த்துக் கேட்டாள் பூங்கொடி, தன்னுடைய ஆசையை அவள் அப்படி வெளிக் காட்டுவதாக எனக்குத் தோன்றியது, நான் வேறு பக்கமாய்த் திரும்பிக் கொண்டிருந்தேன்.

நாங்கள் கொஞ்சம் கூட்டம் குறைந்த தெருவொன்றுக்குள் நடக்கத் துவங்கி இருந்தோம், தமிழரசி இப்போது என்னிடம் கேட்டாள், "அப்பா, அண்ணன் எதுக்கு நடக்கவே மாட்டேங்குறான்?", அண்ணன நடக்கச் சொல்லுங்கப்பா, சுரேஷ், சீமா எல்லாம் வெடிப் போடும்போது அண்ணனைக் கேலி பண்றாங்கப்பா” என்று மெல்லிய குரலில் என்னிடம் சொன்னாள், நான் எனக்கும் பூங்கொடிக்கும் இடையில் உள்ள தொலைவைப் பார்த்தேன், நல்ல வேலையாக தமிழ் பேசிய சொற்கள் அவள் காதுகளுக்கு எட்டாத ஒரு தொலைவில் அவள் இருந்தாள். நான் இப்போது பேசத் துவங்கினேன்.

“அண்ணா, எல்லாரையும் விட ரொம்ப நல்லவம்மா, அவனுக்கு எது மேலயும் ஆசை இல்ல, யார் மேலயும் கோவம் இல்ல, அண்ணன மாதிரிக் குழந்தைங்க யாரு வீட்டுலயும் இல்ல பாத்தியா, ரொம்ப நல்ல அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சி எல்லாம் இருக்குற வீட்டுல தான் அண்ணா மாதிரி குழந்தைங்க வருவாங்க, அதுனால, யாரும் அண்ணனக் கேலி பண்ணினா நீ அவங்க கிட்டச் சொல்லு, எங்க அண்ணன் மாதிரி நீங்க நல்லவங்க இல்லன்னு" என்றேன். சரிப்பா என்று சொல்லி விட்டுப் பாண்டியனைப் பார்த்தாள் தமிழரசி. பாண்டியன் பக்கவாட்டில் நகர்கிற கட்டிடங்களை வேடிக்கை பார்த்தபடி அவ்வப்போது அம்மாவின் முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். நான் பூங்கொடிக்கு அருகில் சென்றேன், அவள் பாண்டியனை ஒரு பூங்கொத்தைப் போலத் தாங்கியபடி நடந்து கொண்டிருந்தாள், அவளது உலகம் அவன் தேவைகளுக்கும், அசைவுகளுக்குள் உள்ளாக இயங்கிக் கொண்டிருப்பது போலிருந்தது எனக்கு. நாங்கள் ஒரு மிகப்பெரிய ஆலமரத்தில் கீழாக இப்போது நடக்கத் துவங்கி இருந்தோம், குளிர்ந்த காற்றில் சலசலக்கும் அந்த மரத்தின் சில இலைகள் எங்களுக்கு முன்னாள் காற்றில் அசைந்து அதன் வேருக்கு அருகில் விழுந்தன, அந்த மரத்தின் வேருக்கு நேராக இப்போது பூங்கொடி நடந்து கொண்டிருந்தாள், அவளது கைகளில் பாண்டியன் ஒரு குறிஞ்சிப் பூவைப் போலப் படுத்திருந்தான். ஒரு மரம் தன் கிளைகளை நேசிப்பது போல அப்பழுக்கற்ற அன்பை அவனுக்கு வழங்க அந்தத் தாய் இருக்கும் போது சராசரி உலகுக்குத் தேவைப்படும் எந்த உணர்வும், பொருட்களும் அவனுக்குத் தேவை இல்லை என்று தோன்றியது.

நாங்கள் வீடு நோக்கி நடக்கத் துவங்கி இருந்தோம், தீபாவளி, புத்தாடைகள், வெடிகளைக் குறித்த வண்ண வண்ணக் கனவுகள், நீ, நான், அவன், அவள், திட்டுதல், பாராட்டுதல் என்கிற எல்லாவற்றையும் அறிந்த ஒரு குழந்தையையும், இவை பற்றிய எந்த உணர்வுகளும் இல்லாத இன்னொரு குழந்தையையும் படைத்து ஒரே தாயிடம் கொடுத்திருக்கிற இயற்கை அந்த மரத்தை விட மிக உயர்ந்ததைப் போல இருந்தது. அந்தத் தாயைப் பின்தொடர்கிற இன்னொரு குழந்தையாக நான் நடந்து கொண்டிருந்தேன். உலகம் இன்னொரு தீபாவளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

ba930c8b1d

***********

Advertisements

Responses

 1. அந்தத் தாயைப் பின்தொடர்கிற இன்னொரு குழந்தையாக நான் நடந்து கொண்டிருந்தேன்./////தலைப்பில் ஒரு சிறு மாற்றம். ஒரு தாய், மூன்று குழந்தைகள்…..அருமையான சிறுகதை…

  மிகவும் பிடித்த சில வரிகள்…..ஒரு மரம் தன் கிளைகளை நேசிப்பது போல அப்பழுக்கற்ற அன்பை அவனுக்கு வழங்க அந்தத் தாய் இருக்கும் போது சராசரி உலகுக்குத் தேவைப்படும் எந்த உணர்வும், பொருட்களும் அவனுக்குத் தேவை இல்லை என்று தோன்றியது.

  “அண்ணா, எல்லாரையும் விட ரொம்ப நல்லவம்மா, அவனுக்கு எது மேலயும் ஆசை இல்ல, யார் மேலயும் கோவம் இல்ல, அண்ணன மாதிரிக் குழந்தைங்க யாரு வீட்டுலயும் இல்ல பாத்தியா, ரொம்ப நல்ல அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சி எல்லாம் இருக்குற வீட்டுல தான் அண்ணா மாதிரி குழந்தைங்க வருவாங்க, அதுனால, யாரும் அண்ணனக் கேலி பண்ணினா நீ அவங்க கிட்டச் சொல்லு, எங்க அண்ணன் மாதிரி நீங்க நல்லவங்க இல்லன்னு” என்றேன்………..

  அந்தக் கணத்தில் ஒரு வேட்டைக்குத் தயாரான விலங்கிடம் இருந்து நாங்கள் தப்பிச் செல்வதைப் போல உணர்ந்தோம்.

 2. யதார்த்தம் பளீரென்று தெரிகிறது.அருமையான சிந்தனை.நான் சொல்ல நினைத்ததை, தான் முந்திக் கொண்டு…. நற்றமிழன் சொல்லிவிட்டதிலும் எனக்கு மகிழ்ச்சியே.அன்பகலா,இர.இலாபம்சிவசாமி

 3. i am glad to read a genuine story.
  This kind of story is very rare.
  Heart touching and priceless story.
  Hats off
  Jai hind

  Singaravelan
  Sr.Landscape Architect


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: