தமிழகத் தேர்தல் களம் களை கட்டத் துவங்கி இருக்கிறது, முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடித் திருப்பங்கள், கட்சி அலுவலக உடைப்புகள், கொடும்பாவி எரிப்பு, நடிகர்களின் நகைச்சுவை, துதிபாடல்கள், நெடுஞ்சான் கிடையாகக் காலில் விழும் அரசு அலுவலர்கள், உளவுத் துறை வேலைகளுக்காக நடுவண் அரசையும், தேர்தல் ஆணையத்தையும் எதிர்க்கும் சேட்டுகள், தமிழகமெங்கும் மண்டல வாரியாகக் குத்தகை எடுத்துக் கொண்டு தேர்தல் பரப்புரை செய்யும் மு.க வின் வாரிசுகள், வாரி இறைக்கப்படும் இலவச அறிவிப்புகள், குழுச் சண்டைகள் என்று வழக்கமான தேர்தல் திருவிழா எல்லைகளைத் தாண்டி தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், அவற்றில் இருந்து தப்பிக்க அரசியல் கட்சிகள் நடத்தும் நாடகங்கள் என்று இம்முறை வெயில் சூட்டையும் தாண்டி பற்றி எரிகிறது தமிழகம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை வழக்கமாக அரசியல் கட்சிகள் இரண்டே அணிகளாகத் தான் மோதிக் கொள்வது வழக்கம், இந்தத் தேர்தலிலும் அந்த வழக்கம் மாறாமல் இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை, ஆதியிலிருந்தே நமக்கு உண்டு, இல்லை என்ற தீர்க்கமான மனநிலை இருக்கிறது போலும், சினிமா என்றால் நீ சிவாஜியா?, எம்ஜியாரா? ரஜினியா? கமலா? அரசியல் என்றால் நீ எம்ஜியாரா? கலைஞரா? அல்லது ஜெயலலிதாவா? கலைஞரா? என்கிற ரீதியில் தான் நம்மைப் பழக்கி வைத்திருக்கிறோம், அல்லது வைத்திருக்கிறார்கள், இதைத்தாண்டி, இந்த அரசியல் கொள்கை நலம் வாய்ந்ததா? இந்த மனிதர் நேர்மையானவரா? இந்தக் கட்சியின் கடந்த ஆட்சியில் என்ன மாதிரியான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன? நமது தொகுதியின் வேட்பாளர் தொகுதியின் வளர்ச்சியில் அல்லது மக்கள் நலத் திட்டங்களில் உண்மையில் அக்கறை உள்ளவரா? என்பது மாதிரியான கேள்விகளைக் கேட்டு, அலசி ஆராய்ந்து நமது முந்தைய தலைமுறை வாக்களித்த மாதிரித் தெரியவில்லை, இதன் பின்புலமாக ஒரு நம்பிக்கை சார்ந்த பாரம்பரியம் இருக்கிறது, அரசியல் விழிப்புணர்வும், உரிமைகள் குறித்த எந்த அக்கறையும் இல்லாத ஒரு சமூகத்தை, மனுதர்மத்தில் உருவாக்கப்பட்ட உயர்சாதி மக்களைத் தவிர்த்த ஒட்டுமொத்த சமூகத்தை, ஏறத்தாழ ஒரு மிகப்பெரிய எழுச்சிக்கும், போராட்டத்துக்கும் வழிவகை செய்த தந்தை பெரியாரின் திராவிட இயக்கம், உழைக்கும், எளிய மக்களின் மீது காட்டிய உயரிய அன்பும், உண்மையான அக்கறையும் கேள்விகள் எதுவும் கேட்காமல் திராவிட இயக்கங்களுக்கு வாக்களிக்க மக்களைத் தூண்டியது, தேசியம், தேச நலன் என்று பேசிக் கொண்டு முதலாளித்துவத்தை மறைமுகமாகத் துதிபாடிய காங்கிரஸ் இந்திய விடுதலைக்குப் பின்னர் தொடர் வீழ்ச்சியைச் சந்தித்தது தமிழகத்தில் நிகழ்ந்தது, ஏறத்தாழ காங்கிரஸ் கட்சி திராவிடக் கட்சிகளின் கூட்டணி இல்லாமல் ஒரு சட்டமன்ற இடத்தைக் கூடப் பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது, ஆயினும், தமிழகத்தில் காங்கிரஸ் பெருமளவில் வளர்ந்து வருவதைப் போலவும், அதற்கு லட்சக் கணக்கில் உறுப்பினர்கள் இருப்பதைப் போலவும் அதன் தலைவர்கள் அவ்வப்போது படம் காட்டுவது இயல்பு.
சரி, நாம் செய்திக்கு வருவோம், ஒரு சிக்கலான காலகட்டத்தில் மட்டுமல்லாமல் மிக முக்கியமான காலகட்டத்திலும் தமிழக நடுத்தர மற்றும் உழைக்கும் மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள், நம்மைச் சுற்றி ஒரு மாய வலை பின்னப்பட்டிருக்கிறது, இனம், இனநலன் என்று ஒருபக்கம் நாடகமாடியபடியே இன்னொருபுறம் இனத்தையும் அதன் உயிர்ப் பொருட்களையும் வேரறுக்கும் கலாச்சாரம் தொடர்ந்து நடைபெறுகிறது. நாம் இந்தத் தேர்தலில் என்ன செய்ய வேண்டும்?, யாருக்கு வாக்களிக்க வேண்டும்?, யாரை வேரறுக்க வேண்டும்? என்ன மாதிரியான திட்டங்களை ஆதரிக்க வேண்டும்? இனி வரும் ஆட்சியாளர்களை நாம் எப்படி நடத்த வேண்டும்? நம் முன்னே தொடர்ந்து எழுகிற இந்தக் கேள்விகளுக்கான விடையை நாம் தேடித் பயணிக்க வேண்டியிருக்கிறது. நாம் இதற்கான விடைகளைத் தேடித் புறப்படும் முன்னதாக நமக்கு முன்னதாக நின்று கொண்டிருக்கும், வாக்குக் கேட்கும் கட்சிகளைப் பற்றிய ஒரு குறிப்புத் தேவைப்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம்:
தெரிந்தோ தெரியாமலோ திராவிடக் கட்சிகளின் மூலமாக, ஆணி வேராக நிலைத்திருக்கும் இந்தக் கட்சியின் கடந்த காலச் செயல்பாடுகள், கொள்கைகள், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் கருணாநிதி என்கிற ஒற்றை அச்சில் தான் சுழன்று கொண்டிருக்கிறது.
கடந்த கால ஆட்சியில் இந்தக் கட்சியின் நேர்மறையான தாக்கங்கள்:
1) ஏழை எளிய உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது.
2 ) ஒரு ரூபாய்க்கு அரிசி திட்டம் உண்மையில் பல்வேறு உழைக்கும் தரப்பு மக்களின் உயர் ஆதரவைப் பெற்றுத் தந்திருக்கிறது.
3) மக்களோடு அல்லது கட்சித் தொண்டர்களோடு நெருக்கமான உறவையும், அவர்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்கள் பலவற்றில் தலையிட்டுத் தீர்வுகள் காணும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மாநிலம் முழுவதும் இருப்பது.
4) அறிவார்ந்த சமூகம் அல்லது இளைய தலைமுறை என்னதான் இலவசத் தொலைக்காட்சி குறித்த எள்ளல்களையும், குறைகளையும் கூறினாலும் மக்களிடத்தில் அது ஒரு மிகப்பெரிய தாக்கம் விளைவித்திருக்கிறது என்பதை ஊரகப் பகுதி மக்களோடு உரையாடும் போது காணமுடிகிறது.
5) பெண்கள் திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களின் உதவித் தொகைத் திட்டம், அரசினால் ஊக்குவிக்கப்படும் மகளிர் தன்னுதவிக் குழுக்கள் போன்றவை இந்த அரசின் பால் பெண்களைப் பெரும் அளவில் கவர்ந்திழுத்திருக்கிறது.
6) முதியோர் உதவித் தொகை, இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஐம்பத்தெட்டு வயதான முதியவர்கள் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டம் போன்றவை வயதான பெண்களையும், முதியவர்களையும் பெருமளவில் தி.மு.கவின் பால் நகர்த்த உதவியாக இருக்கும்.
7) மாநிலம் முழுவதும் நடந்தேறி வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய ஆதாரப் பூர்வமான விளக்கங்கள், குறிப்புகள் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்கள் நேர்மறை விளைவுகளைக் கொடுக்கக் கூடியவர்கள்.
8) கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பல்வேறு விமர்சனங்களைக் கொண்டிருந்தாலும், ஊரகப் பகுதி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பையும், பயனாளிகளையும் பெற்றிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
9) தந்தை பெரியாரின் கொள்கைகளை முழுக்கச் செயல்படுத்த முடியாத ஒரு அரைகுறை பகுத்தறிவுக் கட்சியாக இருந்தாலும், இன்னும் குறைந்த பட்சப் பகுத்தறிவுக் கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டிருப்பது பெரியார் தொண்டர்களையும், திராவிடர் கழக உறுப்பினர்களையும் தி.மு.கவின் பக்கம் இன்னும் வைத்திருக்கிறது.
10) தன்னிச்சையாகவும், சர்வாதிகாரத் தொனியிலும் முடிவுகளை எடுக்காமல் குறைந்த பட்ச ஜனநாயக முறைப்படி முடிவுகளை எடுப்பதும், அவற்றை முறையாக ஊடகங்களில் கொண்டு சேர்ப்பதும் நடுநிலையாளர்களைத் தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் ஒரு கட்சியாக எப்போதும் வைத்திருக்கிறது.
எதிர்மறைத் தாக்கங்கள்:
1) கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் கட்சி, ஆட்சி, மாநிலம், தேசியம், ஊடகம், திரைப்படம் என்று எல்லாத் துறைகளுக்குள்ளும் நுழைவதை எல்லாத் தரப்பும் கூர்ந்து கவனித்தபடியே இருக்கிறது, ஸ்டாலின் தவிர்த்த எந்த குடும்ப உறுப்பினரையும் பெரிய அளவில் மக்கள் செல்வாக்கான தலைவராக ஏற்றுக் கொள்ள கட்சி உறுப்பினர்களே தயங்கினாலும் அவர்கள் மீது கட்டாயமாக அந்தச் சுமை ஏற்றப்படுகிறது.
2) மாநில சுயாட்சி போன்ற தனது நீண்ட காலக் கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு, நடுவண் அரசின் ஆட்சியாளர்களோடு இணைந்து தி.மு.க அமைச்சர்கள் அடிக்கிற கொள்ளைகளை தொடர்ந்து ஊடகங்களில் வரும் செய்திகள் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்திருப்பது.
3) நீண்ட காலமாக கட்சிக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் உழைக்கும் தொண்டர்களை விடுத்து கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு பதவிகளை அடைவது, அதன் மூலம் தனிப்பட்ட பல்வேறு பயன்களை அனுபவிப்பது.
4) தொலைநோக்குத் திட்டங்களாக இருக்க வேண்டிய கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி போன்றவற்றில் கவனம் குறைத்து இலவசங்கள், வாக்கு வங்கி அரசியல் போன்றவற்றில் ஈடுபடுவது.
5) ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் வெளிப்படையான தன்மையை இழந்து, காங்கிரஸ் அரசின் குளறுபடிகளுக்கும், ஏவல்களுக்கும் துணையாக இருப்பது, தொகுதி உடன்பாட்டின் போது நடத்தப்பட்ட நாடகங்கள், அமைச்சர்களைத் திரும்பப் பெரும் ஏமாற்று வேலை, மறைமுக பேரங்கள் இவற்றை மக்கள் அமைதியாக ஊடகங்களின் வழியே பார்த்துக் கொண்டிருப்பது.
6) ஈழப் போராட்டம் அதன் உச்சகட்ட மனித இழப்புகளைச் சந்தித்த போது நடத்தப்பட்ட சொந்த ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள், நடுவண் அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெறாமல் நடத்தப்பட்ட பல்வேறு நாடகங்கள், இவற்றின் மூலம் இளைய தலைமுறைத் தமிழர்களிடையே இழந்து போன மரியாதை, ஆதரவு.
7) தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை எதிர்த்து எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் தொடர்ந்து கடிதம் எழுதுவது, தந்தி அடிப்பது போன்ற மிதமான செயல்களை எந்தக் குற்ற உணர்வும் இன்றி அரங்கேற்றியது.
8) முந்தைய அரசின் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களுக்குக் குறிப்பாக மழை நீர் சேகரிப்பு, கழிவறையைக் கட்டாயமாக்குதல் போன்றவற்றைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு அமைதி காத்தது.
9) நிர்வாகச் சீர்கேடுகளைக் களைந்து, வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கத் தவறியது மட்டுமன்றி உள்ளாட்சி நிர்வாகங்களில் நடைபெறும் பல்வேறு மேலாதிக்க ஊழல்களை ஊக்குவிப்பது, கண்டும் காணாமல் இருப்பது.
10) தொடர்ந்து தலித் மக்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைத் தடுத்து நிறுத்த எந்தத் தீவிரமான நடவடிக்கைகளும் எடுக்காதது, தலித் மக்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய பல்வேறு அமைப்புகளை அடித்து நொறுக்கி ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் அரசின் அடாவடி.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்:
திராவிடக் கட்சிகளின் முகத்திரையோடு இயங்கி வரும் ஒரு வல்லாதிக்க அரசியல்வாதியாக ஜெயலலிதா அறியப்பட்டாலும், பல்வேறு காலகட்டங்களில் தன்னுடைய இந்துத்துவ உண்மை முகத்தைக் காட்டத் தவறாத ஒரு பார்ப்பனப் பெண்மணியாகவே இவரை அறிய முடிகிறது, உழைக்கும் மக்களையும், ஒடுக்கப்பட்ட ஏழை மக்களையும் தன்னுடைய திரை முகத்தின் மூலம் கவர்ந்து கட்டி இழுத்துத் தனது இலவச மற்றும் அதிரடி எளிமை வேடத்தால் ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மாற்றாக ஆட்சியில் அமர்த்திய எம்.ஜி.ஆர் அவர்களின் நேர்மறையான பயன்கள் அனைத்தையும் தனது அரசியல் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைத்துக் கொண்டு செயல்படுகிற ஜெயலலிதாவைச் சுற்றியே இந்த இயக்கம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த கால ஆட்சியில் இந்தக் கட்சியின் நேர்மறையான தாக்கங்கள்:
1) நிர்வாகச் சீர்கேடுகளைக் களைந்து ஒரு வெளிப்படையான ஆட்சி நிர்வாகத்தை வழங்க முயற்சி செய்தது.
2) பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டி அவற்றை மிகுந்த கண்டிப்புடன் செயல்படுத்தியது.
3) சரியோ, தவறோ தனது அரசால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளை மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படுத்த முனைந்தது.
4) தவறான கொள்கைகளையும் சமரசங்கள் இன்றி முன்னெடுக்க விழைந்தது.
5) சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் திட்டங்களை பல்வேறு தடைகளுக்கு இடையே முன்னெடுத்து நிறைவேற்ற முயற்சி செய்தது.
6) தூர்ந்து போன பல்வேறு கண்மாய் மற்றும் ஏரிகளைத் தூர்வாரி நீர்வளத்தைக் காப்பதற்கான தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டியது.
7) மழை நீர் சேகரிப்பு, கட்டாயக் கழிவறைத் திட்டம் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்தியது.
8) சிதைந்து போயிருந்த நிதி நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தி வரி மற்றும் ஒப்பந்தங்களில் கண்டிப்புடன் செயல்பட்டது.
9) உள்கட்டமைப்பு வசதிகளைப் பரவலாக்க முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றி பெற்றது.
10) சமூக விரோதிகள் மற்றும் குற்றவாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்டு குற்றங்களின் விகிதத்தைக் குறைத்தது.
இனி எதிர்மறைத் தாக்கங்கள்:
1) ஒரு சர்வாதிகாரி போலத் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது.
2) இரண்டாம் கட்டத் தலைவர்களை அடிமைகளைப் போல நடத்தி உள்கட்சி ஜனநாயகம் அறவே இல்லாமல் ஒழித்தது.
3) ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர் போல அன்றி நியமிக்கப்பட்டவர் போல மக்களிடம் நடந்து கொண்டது.
4) இட ஒதுக்கீடு மாதிரியான உணர்வுப் பூர்வமான விஷயங்களில் ஒருதலைப் பட்சமான முடிவுகளை எடுத்துப் பின் எதிர்ப்புக் கண்டு பின்வாங்கியது.
5) பல்வேறு காலகட்டங்களில் தனது இந்துத்துவ ஆதிக்க முகத்தை எவ்விதக் கூச்சமும் இன்றி வெளிப்படுத்திக் கொள்வது.
6) அரசியல் நாகரீகம் இன்றிப் பல்வேறு இடங்களில் தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களை அவமதிப்பது.
7) விஜயகாந்த் மாதிரியான புதிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மாலை மரியாதையும், வை.கோ போன்ற நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட அரசியல் தலைவர்களை தொகுதிப் பங்கீட்டில் அவர் நடத்திய விதம் அவரது கட்சித் தொண்டர்களையே முகம் சுளிக்க வைத்தது.
8) அரசு ஊழியர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்தியது, அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து அவர்களின் ஆதரவை இழந்தது.
9) ஈழ மக்கள் குறித்த பல்வேறு செய்திகளில் இரட்டை வேடம் புனைந்து வாக்கு அரசியல் நடத்தியது.
10) சசிகலா குடும்பத்தினரோடு கூடிக் குலவி கட்சியை அவர்களது கூடாரமாக மாற்றியது. அவர்களில் பலருக்குக் கட்சியில் செல்வாக்கு வழங்கியது.
பாட்டாளி மக்கள் கட்சி:
வன்னிய சங்கமாக இருந்து அரசியல் கட்சியாக வலம் வரும் ராமதாஸ் குடும்பத்தினரின் அதிகாரப்பூர்வ இயக்கமாக இருந்தாலும், பல்வேறு காலகட்டங்களில் உழைக்கும் மக்களுக்கான நலத் திட்டங்களில் கவனம் செலுத்தியது, மொழி மற்றும் இனம் சார்ந்த மாநில அரசியலில் அதிகக் கவனம் செலுத்தி இயக்கத்தை ஒரு கட்டுக் கோப்புடன் செலுத்துவது, ஈழத் தமிழர்களின் துன்பத்தில் எப்போதும் அதிகக் கவனமும், உண்மையான அக்கறையும் கொண்டு இயங்கியது போன்ற சில நேர்மறைத் தாக்கங்கள் இருந்தாலும், தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அதற்காக எந்த விதமான சமரசங்களையும் மேற்கொள்ளும் கூட்டணிகளை மாற்றிக் கொண்டே இருக்கும் ஒரு இயக்கம் என்கிற எதிர்மறை இந்த இயக்கத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே வைத்திருக்கிறது, தொடர்ந்து சாதிக் கட்சி அரசியல் செய்யும் இயக்கமாகவே தன்னை வைத்துக் கொள்ள விரும்பும் இந்த இயக்கம் மாற்று சமூக மக்களிடையே நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மையைப் பெற முயற்சி செய்யவே இல்லை. ஆயினும் தேர்வு செய்யப்பட தொகுதிகளில் இந்த இயக்கத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் களப் பணியாற்றி இருப்பதும், மக்களின் நம்பிக்கையைப் பெற்று இருப்பதும் இவர்களை ஒரு தவிர்க்க இயலாத அரசியல் இயக்கமாக தமிழக அரசியலில் மாற்றி இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
தே.தி.மு.க:
குறுகிய காலத் தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வது என்பது மிகக் கடுமையான ஒரு நிலைதான், ஆனாலும் இந்தத் தடைகளை உடைத்து விஜயகாந்த் என்னும் தனி மனிதர் ஒரு இயக்கத்தைக் கட்டி அமைத்து இருபெரும் திராவிட இயக்கங்களும் இவரது இயக்கத்தை ஒரு அரசியல் ஆற்றலாக உணர வைத்ததே மிகப் பெரிய சாதனை தான். அடிப்படை அரசியல் இயக்கங்களின் வரலாற்றை நன்கு புரிந்து கொண்டவர்கள் பலரைத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு அவர்களின் ஆலோசனைப் படி தனது அடிகளை எடுத்து வைப்பதில் விஜயகாந்த் மிகக் கவனமாகவே இருக்கிறார் என்பது இந்தத் தேர்தலில் அவர் அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்துக் கொனடத்தில் இருந்தே தெரிய வருகிறது, பல்வேறு சமரசங்களைச் செய்து கொண்டாலும் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியைத் தனக்கென உருவாக்கி வைத்திருக்கும் விஜயகாந்த் இனி வரும் காலங்களில் எப்படி மக்கள் நலப் பணிகளில் அக்கறை செலுத்தப் போகிறார் என்பதில் தான் அவரது அரசியல் எதிர் காலம் அடங்கி இருக்கிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்:
"டான் அசோக்" என்கிற இணையப் பதிவர் இப்படி ஒரு மேற்கோள் காட்டியிருந்தார், "தவறான முடிவெடுக்கும் சரியான தலைவர்கள் காணாமல் போவார்கள் என்பதற்கு வைகோவும், சரியான முடிவெடுக்கும் தவறான தலைவர்கள் நிலைப்பார்கள் என்பதற்கு ராமதாசும் சரியான உதாரணம்",
இதன் முதல் பாதியோடு நான் முழுமையாக உடன்படுவேன், பல்வேறு காலகட்டங்களில் பல தவறான முடிவுகளை எடுத்ததால் ஒரு இயக்கத்தையே அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றவர் வை.கோ என்றால் அது மிகையாகாது, சிறந்த அறிவாற்றலும், சிந்தனைகளும், பேச்சாற்றலும் கொண்டிருக்கும் மிகக் குறைந்த அரசியல் தலைவர்களில் வை.கோவும் ஒருவர் என்பதை அவரது அரசியல் எதிரிகளே கூட ஒப்புக் கொள்வார்கள். ஆனாலும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் தலைவரின் தவறான சில கொள்கை முடிவுகளால் இன்று தேர்தல் அரசியலில் பங்கு பெறவே இயலாத ஒரு நிலை உருவாகி இருப்பதை எப்படிப் புரிந்து கொள்வது என்று விளங்கவில்லை, இது ஒரு பின்னடைவாக இருந்தாலும், இத்தகைய நெருக்கடிகளை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இன்னும் தீவிரமாக அவர் மக்கள் பணியாற்றுவாரேயானால் அவரது வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகள் இன்னும் அழிந்து விடவில்லை என்பது மட்டும் உண்மை. இந்தத் தேர்தலில் அவர் பங்கேற்காமல் இருப்போம் என்று சொன்னதாவது அவர் முதன் முதலில் எடுத்த சரியான முடிவாக இருக்கட்டும்.
விடுதலைச் சிறுத்தைகள்:
திருமாவளவன் என்கிற ஒரு தனி மனிதனால் துவக்கப்பட்டு, அந்தத் தனி மனிதனின் கால்கள் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களின் கரடு முரடான மண் சாலைகளில் புழுதியோடு பயணித்து வளர்க்கப்பட்டு, அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளாலும், தந்தை பெரியாரின் அடிச் சுவடுகளாலும் முன்னெடுக்கப்பட்டு இன்று தமிழக அரசியல் களத்தில் ஒரு மக்கள் இயக்கமாக வளர்ந்து இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தை விமர்சனம் செய்வது என்பது பல நண்பர்களால் எதிர்மறையாகவே புரிந்து கொள்ளப்பட்டிருந்தாலும், வேறு வழியில்லை. இன்றைய தமிழகச் சூழலில் தலித் மக்களின் வாழ்க்கை முன்னிருந்ததை விட மிக அதிகமான தாக்குதலுக்கும், வன்முறைக்கும் ஆளாகிறது என்கிற உண்மை பல்வேறு அமைப்புகளாலும், தனி மனிதர்களாலும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது, இன்றைய அரசுகளும், அரச இயந்திரங்களும் குறிப்பாக காவல் துறையும் தலித் மக்களின் எதிரிகளாகவே செயல்பட்டு வருகிறார்கள் என்பதற்கு மிக நெருக்கத்தில் நம்மால் பல எடுத்துக் காட்டுகளைக் கண்டறிய முடியும், மிதிவண்டியை ஓட்ட முடியாத, காலணி அணிந்து செல்ல முடியாத, நாற்காலியில் அமர முடியாத, அரசுப் பணியாற்ற முடியாத, பொதுக் கிணற்றில் நீர் எடுக்க முடியாத, குழந்தைகளுக்கு பொது மருத்துவமனைகளில் மருந்துகளை வாங்க முடியாத அடிமைகளாக இன்னும் தமிழகத்தில் எண்ணற்ற கிராம மக்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கான முகவரியாகவும், இவர்களின் அரசியல் பிரதிநிதியாகவும் இருக்க வேண்டிய இந்த இயக்கம் கடந்த சில ஆண்டுகளாக திராவிட ஆண்டைகளின் எடுப்பார் கைப்பிள்ளையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, தனது இயக்கத் தொண்டர்களுக்கும், இளைஞர்களுக்கும் துவக்க காலத்தில் ஒரு அறிவு வழிகாட்டியாக இருந்து செயல்பட்ட திருமாவளவனின் இன்றைய பாதை கருணாநிதியின் ஊதுகுழலாக இருப்பதை தலித் மக்களில் ஒரு பிரிவினர் தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள், எந்தச் சமரசங்களும் இன்றி தலித் மக்களின் விடுதலையை நோக்கிய பயணத்தில் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்கிற உயரிய தனது நோக்கத்தில் இருந்து அவர் ஒரு தேர்தல் அரசியல்வாதியாக உருமாற்றம் அடைகிறாரோ என்கிற அச்சத்தோடு தான் அவரை நாம் அவதானிக்க வேண்டியிருக்கிறது. ஆயினும், தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவரும் அவரது இயக்கமும் வீரியத்துடன் பங்காற்றுகிறார்கள் என்பதை தேர்தல் காலத்தில் அவரது இயக்கம் பெரும் வாக்கு விழுக்காட்டில் இருந்து அறிந்து கொள்ள முடியும். தனது சொந்த வாழ்க்கையை, குடும்பத்தை எல்லாம் விடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இரவும் பகலும் தொடர்ந்து இயங்கும்
திருமாவளவனின் அரசியல் பாதையில் துதி பாடல்களும், வழிபாடுகளும் இருக்கக் கூடாது என்பதே ஒவ்வொரு அறிவார்ந்த ஒடுக்கப்பட்ட இளைஞனின் எண்ணமாக இருக்கிறது. இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்களை உருவாக்குவதும், அவர்களைத் தனக்கு இணையான வழி நடத்தும் தகுதி கொண்ட தலைவர்களாக உருவாக்குவதும் அவருக்கு முன்னர் இருக்கும் மிகப்பெரிய பணிகளில் ஒன்று. ஈழம் தொடர்பான அவரது நிலைப்பாடுகளில் நிலவும் வெளிப்படையற்ற தன்மையும், காங்கிரஸ் கட்சிக்காகவும், தி.மு.க வுக்காகவும் அவர் செய்து கொள்ளும் சமரசங்களும் அவரது நிலைத்தன்மை குறித்த எதிர்மறை எண்ணங்களை வரும் தலைமுறையிடத்தில் உருவாக்கலாம் அல்லது உருவாக்கி இருக்கிறது என்பதில் ஐயம் இல்லை.
புதிய தமிழகம்:
துவக்கப்பட்ட போது இருந்த தேவைகள் அனைத்தும் இன்னும் அப்படியே இருக்கும் போது இயக்கத்தில் சோர்வடைந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்று தான் டாக்டர்.கிருஷ்ணசாமியைச் சொல்ல வேண்டும், அறிவார்ந்த துணிவோடு பல்வேறு தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் குறிப்பாகத் தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதிக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை வழிநடத்திய இந்த இயக்கம், பாதி வழியில் சோர்வடைந்து நின்று போனதன் காரணம் என்னவென்று கண்டறிய வேண்டும், மீண்டும் ஒரு எழுச்சி பெற்ற இயக்கமாக அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு ஒடுக்கப்பட்டவனின் ஆவலாய் இருக்கிறது. பல்வேறு துணை அமைப்புகளாகச் செயல்படுகிற ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்களை ஒருங்கிணைத்து அரசியல் ஆற்றலாக பரிணாமம் செய்வது டாக்டர்.கிருஷ்ணசாமியின் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால், அதை அவர் வெற்றிகரமாகச் செய்வாரேயானால் ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்கள் அனைத்தும் இணைந்து செயல்படுகிற காலம் கனியலாம்.
நாம் தமிழர்:
நம்மைப் போலவே ஈழத்தில் கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிரையும் கண்டு குருதி கொதித்து, உறக்கம் இழந்து தவித்து, அழுதவர்களை ஒருங்கிணைத்து ஒரு இயக்கமாக உருவாக்கி இருக்கும் அண்ணன் சீமான் அவர்களின் மீது தணியாத அன்பும், மதிப்பும் என்னைப் போலவே பலருக்கு இருக்கிறது. பல்வேறு காலகட்டங்களில் நாம் அவரை விமர்சனம் செய்தாலும் அது குடும்பங்களில் நிகழும் குட்டிச்சண்டை என்று தான் கொள்ள வேண்டி இருக்கிறது, அப்படி என்றால் என்னதான் சிக்கல், அடிப்படை அரசியல் நிலைப்பாடுகளில் சிக்கல், ஒரு அரசியல் இயக்கமாக நாம் பயணம் செய்யும் போது நமக்கு அருகில் இருக்கும் மக்களை அவர்களின் அன்றாட வாழ்வின் சிக்கல்களை உணர்ந்து அதற்கான போராட்டங்களை முன்னெடுத்து, என்ன மாதிரியான நீண்ட காலத் திட்டங்களால் நமது இலக்கை அடைய முடியும் என்கிற உறுதியான கொள்கைகளோடு பயணிக்கும் போது மட்டுமே ஒரு தெளிந்த அரசியல் இயக்கமாகச் செயல்பட முடியும், எல்லா நேரங்களிலும் ஒலிபெருக்கியில் முழங்குவதால் மட்டுமே விடுதலையும், அரசியல் இயக்கமும் வளரும் என்று நம்புவதும், உணர்வுப் பூர்வமான விஷயங்களை உட்புகுத்தி வளரும் தலைமுறை இளைஞர்களை வன்முறை மற்றும் பிறழ்வு மனநிலையை நோக்கி நகர்த்தும் தனது செயல்களை மாற்றி அமைத்துக் கொண்டு, நாளொரு வசனமும், பொழுதொரு ஆதரவும் தேடித் திரிபவர்களாக பல இளைஞர்களை மாற்றாமல் இருக்க வேண்டும் என்பதே நாம் தமிழர் இயக்கம் குறித்த முன்னோடிகளின் கருத்தாக இருக்கிறது. நீண்ட காலச் செயல் திட்டங்களையும், அடிப்படை அரசியல் நுட்பங்களையும் அறிந்து தனக்கு அருகில் இருக்கும் ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மனிதனின் குரலாக அவரது குரல் ஒலிபெருக்கிகளில் முழங்கத் துவங்குமேயானால் அதை விட மகிழ்ச்சியான செய்தி இருக்க முடியாது. நடிகர்களையும், வல்லாதிக்க மனநிலை கொண்டவர்களையும் முன்னிறுத்துவது, முன்னுக்குப் பின் முரணான செய்திகளைச் சொல்வது போன்ற முந்திரிக் கொட்டை மனநிலையில் இருந்து அமைதியாகவும், அறிவார்ந்த வகையிலும் புதிய தலைமுறைத் தமிழர்களை அவர் வழி நடத்துவாரா??
கம்யூனிஸ்ட்டுகள்:
களப் பணியாற்றவும், எளிய மக்களின் குரலாகவும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிற கம்யூனிஸ்ட் இயக்கங்கள் திராவிடக் கட்சிகளின் தோள்களை மட்டுமே நம்பிக் கொண்டிருப்பதில் இனியும் பயனில்லை, ஏனென்றால் திராவிடக் கட்சிகள் கம்யூனிசக் கொள்கைகளுக்கு எதிராகத் திரும்பி நடை போடத் துவங்கி நீண்ட காலமாகிறது, மக்கள் மன்றத்தில் தனியாகத் தேர்தலைச் சந்திக்கும் நேர்மை கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருந்தும் அவை துணிவற்ற இயக்கங்களாகவே தமிழகத்தில் இருக்கிறது என்பதை அவர்களின் தேர்தல் காலச் செயல்பாடுகள் உறுதி செய்கின்றன. தனித்த மக்கள் இயக்கங்களாக நாம் வளர முடியும் என்கிற அடிப்படை நமபிக்கையை நோக்கி இனி அவர்கள் நடை போடுவது தான் கட்சிக்கும், மக்களுக்கும் நலம் தரும். வழக்கமான சில குறைகளைத் தவிரத் தொடர்ந்து ஒலிக்கும் அவர்களின் குரல் தமிழக அரசியல் அரங்கில் இன்னும் வலிமையாக ஒலிக்க வேண்டும் என்பது தான் பொதுவுடைமைத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிற ஒவ்வொரு எளிய மனிதனின் ஆவல். வரும் காலங்களில் நமது நம்பிக்கையைக் காப்பாற்றுவார்களா காம்ரேடுகள்???
காங்கிரஸ்:
தமிழ்நாட்டில் இருந்து பெருந்தலைவர் காமராஜருக்குப் பின்னர் ஏறத்தாழ துரத்தப்பட்டிருக்கும் காங்கிரஸ், தொடர்ந்து நடுவண் அரசில் தனக்கு இருக்கும் அதிகார ஆற்றலை மையமாக வைத்து திராவிடக் கட்சிகளைத் தனது பகடைக் காயாக மாற்றி வருகிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை, தேசிய அரசியல் அல்லது ஆசிய மண்டல அரசியல் என்ற பெயரில் தீவிரவாத ஒழிப்பு என்கிற முகமூடி போட்டுக் கொண்டு உலகின் மிக உயர்ந்த நாகரீகத்தையும், பண்புகளையும் கொண்ட மக்கள் குழுவைத் தனது கொடுமையான கரங்களால் கண்ணெதிரில் அழித்துத் துடைத்து எடுத்ததை இனி வரும் தலைமுறைத் தமிழர்களில் யாரும் அத்தனை எளிதில் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். எந்தக் கட்சி என்ன கூட்டணி வைத்திருந்தாலும் காங்கிரஸ் இயக்கம் தமிழ் மண்ணில் இருந்து துரத்தப்பட வேண்டும், இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை, குறைந்த பட்சம் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் அதற்கு எதிரான பரப்புரைகளை நாம் செய்தே ஆகவேண்டும், இன்னும் தீவிரமாக நமது அறிவாயுதங்களைப் பயன்படுத்தி காங்கிரஸ் இயக்கத்தை துரத்தி அடிப்பதில் தான் நமது பண்பாடும், மொழியும் காக்கப்படும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொண்டே ஆக வேண்டும், இது தமிழனாகப் பிறந்த ஒவ்வொரு இளைஞனுக்கும் முன்னிருக்கும் கடும் சவால் மட்டுமல்ல, மனிதனாக ஒரு சமூகத்தில் வாழ்வதற்கான அடிப்படைத் தகுதி என்றே நான் கருதுவேன். எத்தனை அறிவார்ந்த தலைவர்களாயினும் அவர்களின் அடிப்படைத் தத்துவம், பொருளாதார மற்றும் அரசியல் நலன்களுக்காக எத்தகைய கொடுஞ்செயல்களையும் புரியத் தயாராய் இருப்பதை ஒரு போதும் நாம் மன்னிக்கவும் சமரசம் செய்து கொள்ளவும் முடியாது. காங்கிரஸ் கட்சியை தமிழகத்தை விட்டுத் துரத்துவதே ஈழத்தில் இறந்து போன எம் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், முதியவர்களுக்கும் நாம் செலுத்துகிற வணக்கமும், அஞ்சலியும்.
நமக்கான அரசியல் இயக்கங்களையும், எதிர்காலத்தையும் நாமே உருவாக்கிக் கொள்ளும் ஒரு மிகச்சிறந்த காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம், மிகச் சிறந்த விழிப்புணர்வை உண்டாக்குவதில் ஒவ்வொரு அறிவுத் தளங்களில் இயங்கும் இளைஞனுக்கும் கடமையும், உரிமையும் இருக்கிறது. இனி தமிழ் மக்களின் எதிர்காலம், வளர்ச்சி, இயக்கம் அனைத்தும் அவர்கள் தேர்வு செய்யப் போகும் உறுப்பினர்களின் கைகளில் இருந்து துவங்கும், அது தனித் தமிழ் தேசியமாகட்டும் அல்லது உலகப் பொது உடைமை ஆகட்டும். நமது எண்ணங்களும், சிந்தனைகளுமே தத்துவங்கள், நமக்கான தத்துவங்களே நமக்கான விடுதலை. நாம் எவற்றில் இருந்தும் விடுதலை பெறுவோம், அழகான ஒரு உலகத்தை நம் தலைமுறைக்குக் கொடுப்போம்.
***************
பின்குறிப்பு – காங்கிரஸ் கட்சியின் கொடி விரைவில் கிடைக்காத காரணத்தால் அதன் இலங்கைக் கிளைக் கொடியைப் பதிவு செய்கிறோம்.
திராவிட கட்சிகள் பொதுவுடைமை கொள்கைக்கு எதிராக நடைபோட துவங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் CPI,CPI-M கட்சியினர் உணர மறுக்கின்றனர். அதிகாரப்பூர்வ இடதுசாரிகள் செய்ய மறுப்பதை நாங்கள் CPI-ML(LIBERTION) செய்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதை தங்கள் நினைவுக்கு கொண்டுவர விரும்புகிறேன். தமிழகத்தில் 11 இடங்களில் தனித்து போட்டியிடுகிறோம்.
By: rajvelu jayaraman on மார்ச் 29, 2011
at 10:02 முப
தங்கள் பணிகள் சிறக்கட்டும், சமநீதியைத் தாங்கிய புவிப்பந்தை மலர வைக்கும் உங்கள் வேலைத்திட்டங்கள் வெற்றி பெறட்டும் தோழர், வாழ்த்துக்களும், அன்பும்.
By: கை.அறிவழகன் on மார்ச் 30, 2011
at 12:02 முப
இலங்கை கிளை கொடி பதிவு அருமை தோழர்
By: rajvelu jayaraman on மார்ச் 29, 2011
at 10:05 முப
//// “தவறான முடிவெடுக்கும் சரியான தலைவர்கள் காணாமல் போவார்கள் என்பதற்கு வைகோவும், சரியான முடிவெடுக்கும் தவறான தலைவர்கள் நிலைப்பார்கள் என்பதற்கு ராமதாசும் சரியான உதாரணம்”,
இதன் முதல் பாதியோடு நான் முழுமையாக உடன்படுவேன், பல்வேறு காலகட்டங்களில் பல தவறான முடிவுகளை எடுத்ததால் ஒரு இயக்கத்தையே அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றவர் வை.கோ என்றால் அது மிகையாகாது, சிறந்த அறிவாற்றலும், சிந்தனைகளும், பேச்சாற்றலும் கொண்டிருக்கும் மிகக் குறைந்த அரசியல் தலைவர்களில் வை.கோவும் ஒருவர் என்பதை அவரது அரசியல் எதிரிகளே கூட ஒப்புக் கொள்வார்கள். ஆனாலும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் தலைவரின் தவறான சில கொள்கை முடிவுகளால் இன்று தேர்தல் அரசியலில் பங்கு பெறவே இயலாத ஒரு நிலை உருவாகி இருப்பதை எப்படிப் புரிந்து கொள்வது என்று விளங்கவில்லை, இது ஒரு பின்னடைவாக இருந்தாலும், இத்தகைய நெருக்கடிகளை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இன்னும் தீவிரமாக அவர் மக்கள் பணியாற்றுவாரேயானால் அவரது வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகள் இன்னும் அழிந்து விடவில்லை என்பது மட்டும் உண்மை. இந்தத் தேர்தலில் அவர் பங்கேற்காமல் இருப்போம் என்று சொன்னதாவது அவர் முதன் முதலில் எடுத்த சரியான முடிவாக இருக்கட்டும்./// நன்றி
By: andalmagan on மார்ச் 29, 2011
at 10:39 முப
இலங்கை கிளைக்கொடி ஒன்றே போதும்.’நச்’சென்றிருந்தது.அன்பகலா,இர.இலாபம்சிவசாமி
By: labamsivasamy on மார்ச் 30, 2011
at 7:19 பிப
/////முன்னுக்குப் பின் முரணான செய்திகளைச் சொல்வது போன்ற முந்திரிக் கொட்டை மனநிலையில் இருந்து அமைதியாகவும், அறிவார்ந்த வகையிலும் புதிய தலைமுறைத் தமிழர்களை அவர் வழி நடத்துவாரா??///// எல்லா நேரங்களிலும் ஒலிபெருக்கியில் முழங்குவதால் மட்டுமே விடுதலையும், அரசியல் இயக்கமும் வளரும் என்று நம்புவதும், உணர்வுப் பூர்வமான விஷயங்களை உட்புகுத்தி வளரும் தலைமுறை இளைஞர்களை வன்முறை மற்றும் பிறழ்வு மனநிலையை நோக்கி நகர்த்தும் தனது செயல்களை மாற்றி அமைத்துக் கொண்டு, நாளொரு வசனமும், பொழுதொரு ஆதரவும்//////////இது எல்லாம் என்ன பதிவு சொல்லுங்கள்???????? உங்களை பொறுத்த அவளவு அரசியல் என்பது என்ன??? அதை எப்படி செய்ய வேண்டும்?????? வன்முறை வன்முறை என்று சொல்லுகள் நீங்கள் இதுவரை நம் தமிழர் கட்சி இதவரை வன்முறை செய்ததை நீங்கள் பார்த்து உள்லேர்கள என்ன சொல்லுங்கள்???? நாடு நிலை யாலன் என்ற பெயரில் வாயில் வந்தது எல்லாம் பேச வேண்டாம்………….
By: RRaj on மே 22, 2013
at 6:33 முப
/////”டான் அசோக்” என்கிற இணையப் பதிவர் இப்படி ஒரு மேற்கோள் காட்டியிருந்தார், “தவறான முடிவெடுக்கும் சரியான தலைவர்கள் காணாமல் போவார்கள் என்பதற்கு வைகோவும், சரியான முடிவெடுக்கும் தவறான தலைவர்கள் நிலைப்பார்கள் என்பதற்கு ராமதாசும் சரியான உதாரணம்”,/////////// இவர் ஒரு கருணா சிங்கி தெர்யுமா?????
By: RRaj on மே 22, 2013
at 6:38 முப