கை.அறிவழகன் எழுதியவை | ஏப்ரல் 8, 2011

திராவிடம் பிக்சர்ஸ் வழங்கும் "தமிழ்ப் பிச்சைக்காரன்"

Kalaignar

பள்ளிப் பருவத்தில் இலவசப் பகல் உணவு எனக்கு ஒரு மிகப்பெரிய சுமையாகவும் வெட்கமாகவும் இருந்தது, அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலுமினியத் தட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு வரிசையில் நின்று இலவசமாக வழங்கப்படும் பகல் உணவை பெற்றுக் கொண்டு

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"

 

என்கிற வள்ளுவப் பெருந்தகையின் குறளை அனைவரும் சொல்லி முடித்த பிறகு சாப்பிட வேண்டும். அப்போது வீடுகளில் இருந்து உணவைக் கொண்டு வந்து சாப்பிடும் நண்பர்கள் பணக்காரர்கள் என்றும் இலவசப் பகல் உணவு சாப்பிடுபவர்கள் ஏழைகள் என்றும் ஒரு கற்பிதம் நிலவிக் கொண்டிருந்தது, இரு குழுவும் எப்போதும் ஒன்றை ஒன்று விலகியே இருக்கும், இந்த ஏழை பணக்காரர் பேதம் என் மனதிலும் குடி கொண்டு அரிக்கத் துவங்கியதே நான் வெட்கம் அடைந்ததற்கான காரணம். பலமுறை கெஞ்சிப் பார்த்தும் தந்தையார் மிகப் பிடிவாதமாக நான் எல்லாக் குழந்தைகளோடும் அமர்ந்து இலவசப் பகல் உணவையே சாப்பிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். காலம் மிகச் சரியாக இலவசப் பகல் உணவின் அருமையை அதன் தேவையை எனக்கு உணர்த்தியது. தந்தையை இழந்த, அதிகாலையில் எழுந்து வேலைக்குச் செல்லும் தாயுடன் வாழ்க்கையை எதிர் கொண்ட ஒரு நண்பனைச் சந்திக்கும் வரையில்   அதன் மேன்மை  எனக்குப் புரியவில்லை. காலையில் உணவு உட்கொள்ளாமல் அந்தப் பகல் உணவின் நேரத்துக்காக அந்த நண்பன் காத்திருப்பான், உடைக்கப்பட்ட தண்டவாளக் கம்பியில் இருந்து கிளம்பி வரும் மணியோசை எங்களில் பலரை அடையும் முன்னரே அந்த நண்பனை அடைந்து விடும், அவன் உணவுக்குத் தயாராகி விடுவான். இரவுப் பசி அவனை ஆட்கொள்ளும் வரையில் தேவைப்படும் உணவை அவன் சாப்பிடுவான். பிறகு அவனோடு சேர்ந்து பத்தாம் வகுப்பு வரை எந்த வெட்கமும் இன்றி நான் எனது உணவு வேளைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்,  அவனது பசியில் ஒரு மகத்தான மனிதரின் முகம் எளிமையாய் சிரித்துக் கொண்டிருக்கும்,  அந்த மனிதரின் பெயர் காமராஜர்,  ஆம், இந்தியா மாதிரியான வளரும்  ஏழை நாடுகளுக்குக் காமராஜர் போன்றவர்கள் அரிதான தலைவர்களாக இருந்தார்கள்,  அந்த அரிய மனிதரையும் ஒரு குறிப்பிட்ட சாதி முகமூடி  அணிவித்து பின்வந்த காலங்களில் தமிழர்களாகிய நாம் குறுகிப் போனோம்.

இன்றைக்கு இலவசங்கள் என்று சொன்னவுடன் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் ஒரு மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு, ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள், ஆடுகள், மாடுகள், வீடு, நிலம் என்று ஏறத்தாழ ஒரு மாநிலத்தின் மக்கள் அனைவரையும் இலவசங்களை அடையக் காத்திருக்கும் பிச்சைக்காரர்களாக மாற்றிய சாதனையை திராவிடக் கட்சிகளின் இன்றைய தந்தையும், தாயும் செய்து முடித்திருக்கிறார்கள், காமராஜரின் இலவசப் பகல் உணவுத் திட்டம் எப்படி ஒரு கனவுத் திட்டமாக இருந்ததோ, எப்படி ஒரு எதிர்காலத்தை நோக்கிய கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக இருந்ததோ, அதற்கு நேர் மாறாக இன்றைய அரசுகளின் இலவச அரிசி, இலவசத் தொலைக்காட்சி போன்ற வாக்கு வங்கித் திட்டங்கள் காட்சி அளிக்கத் துவங்கி இருக்கின்றன. முதலில் நாம் ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும், எந்த அரசியல் கட்சியும் அல்லது ஆட்சியாளரும் இலவசத் திட்டங்களைத் தங்களின் கட்சி நிதியில் இருந்தோ, சொந்தப் பணத்தில் இருந்தோ வழங்கவில்லை, உழைக்கும் மக்களின் குருதியில் இருந்து பெறப்படும் வரிப்பணத்தில் தான் இத்தகைய திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன, ஆகவே மக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படும் எந்த ஒரு திட்டமும் பொருளும் இலவசம் என்று சொல்ல முடியாது. இலவசங்கள் என்று சொல்ல முடியாத ஒன்றை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்று கேள்வி இப்போது உங்களுக்கு வந்திருக்க வேண்டும். அப்படியென்றால் பொருளாதாரத்தையும் அதன் உள்ளடக்கத்தையும் புரிந்து கொள்ளக் கூடிய கூர்மையான அறிவு உங்களுக்கு உண்டென்று பொருள். நீங்கள் தொடர்ந்து படிக்கலாம்.

04ganesh7

குடியாட்சித் தத்துவத்தைக் கொள்கையாகக் கொண்டிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு சமூகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல என்ன செய்ய வேண்டும்? அந்த சமூகத்தின் மக்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும், அந்த சமூக மக்களின் வரிப்பணத்தை முறையாகச் செலவு செய்ய வேண்டும், அந்தச் சமூக மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும், கல்வியைத் தங்கு தடையின்றி வழங்கி அதன் மூலமான விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும், மருத்துவ வசதிகளைப் பெருக்கி நோயற்ற சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும், குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை மற்றும் போக்குவரத்து வசதிகளைப் பெருக்கி அந்தச் சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானங்களைத் தன்னிறைவு கொள்ளப் பாடுபட வேண்டும். சாதி, மதப் பாகுபாடுகளைக் கடுமையான தனது சட்டங்களால் ஒழித்து சமநீதி நிலவுகின்ற ஒரு சமூகத்தைக் கட்டமைக்க உறுதி கொள்ள வேண்டும். இதன் மூலமாக வேலை வாய்ப்புகளைப் பெருக்கி உழைப்புக்கு உகந்த ஊதியத்தைப் பெறுகிற நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கொண்ட மனிதர்கள் நிரம்பிய உலகத்தை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும்.

தேர்வு செய்த மக்களின் வரிப்பணத்தையும், உழைப்பையும் ஆட்சி செய்கிற அதிகார மையங்கள் என்கிற தங்கள் கற்பனையில் இருந்து நமது திராவிட இயக்க அரசியல்வாதிகள் வெளியேறியதாகத் தெரியவில்லை, முதல்வர் உட்பட ஊரை ஆள வந்திருக்கிறோம், உங்களை ஆள வந்திருக்கிறோம் மாதிரியான ஆதிக்க மனப்போக்கே மக்கள் பிரதிநிதிகள் நடுவில் ஆழ வேரூன்றி இருக்கிறது. பல்வேறு மட்டங்களில் நடக்கும் ஊழல்களும், கையூட்டுத் திருட்டும் ஆட்சி அதிகாரம் என்பது எந்த ஊதியமும் இன்றி மக்களுக்குச் செய்யும் பணி என்பதை மாற்றி அவர்களிடம் கொள்ளை அடிப்பதற்கான ஒப்பந்தம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. ஏறக்குறைய எந்த அரசுத் துறையும் ஊழல்கள் அற்ற வெளிப்படையான ஒன்றாகக் காணக் கிடைப்பது தமிழக மண்ணில் அரிதான அதிசயமாக மாறி விட்டது. வரிப்பணம் முறையாகச் செலவு செய்யப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினால் மக்களின் வரிப்பணம் முழுவதும் பல்வேறு அமைப்புகளிடம் கடன் வாங்கி வாக்குகளைக் கவரும் இலவசத் திட்டங்களைச் செயல்படுத்தப் பயன்படும் மறைமுகத் திறவுகோலாக மாறி இருக்கிறது. கிடைக்கிற வரிப்பணத்தைப் பயன்படுத்தி வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும், எதிர்காலத்தை வளமான ஒன்றாக மாற்ற வேண்டும் என்கிற நிலையில் இருந்து வழுவி இன்றைய அரசியல் கட்சிகள் இலவசங்களைக் காட்டி ஏமாற்றும் குறுக்கு வழியைப் பின்பற்றுகின்றன என்பதை நாம் உணர வேண்டும், இலவசங்களை வழங்கச் செலவு செய்யப்படும் பணமும், உழைப்பும் வேற்று நாடுகளில் இருந்து நமக்குக் கிடைக்கப் போவதில்லை, மாறாக அதற்கான பரிசுகளாக நாம் அடிப்படைத் தேவைகளின் விலையை, எரிபொருட்களின் விலையை, கல்விக் கட்டணங்களை, மின் கட்டணங்களை இரண்டு அல்லது மூன்று மடங்காக ஆட்சியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்கிற உண்மையை நாம் உணரத் துவங்கினால் இலவசங்கள் குறித்த எந்த வியப்பும் நமக்கு ஏற்படாது.

தமிழக அரசின் பல்வேறு துறை வளர்ச்சி விகிதங்கள் வீழ்ச்சியில் இருக்கிறது, கடந்த ஐந்தாண்டுகளில் உற்பத்தி, தொழில் வளர்ச்சி, விவசாயம் மற்றும் கல்வி வளர்ச்சி விகிதங்கள் கடும் வீழ்ச்சியில் இருக்கின்றன, கல்விக் கட்டணங்கள் வானளவில் உயர்ந்து உயர் கல்வியை வறுமைக் கோட்டுக்குக் கீழிருக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் நுகர்வது பகல் கனவாக மாறிக் கொண்டிருக்கிறது, கல்வி நிறுவனங்களில் காணப்படும் வேறுபாடுகளும், பாடத் திட்டங்களும் வெவ்வேறு வகையான மன நிலையை மாணவர்களிடம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது, துவக்கப் பள்ளிகளில் அல்லது தனியார் பள்ளிகளில் நிலவும் ஒழுங்கற்ற கட்டண விகிதங்களைக் கட்டுப்படுத்த இயலாத அரசுகளும், ஆட்சியாளர்களும் கல்வியை வைத்துக் கொள்ளை அடிக்கும் முதலாளிகளுக்கு மறைமுகமாக உதவி செய்து கொண்டிருக்கிறார்கள், இன்றைக்கு நமது சமூகத்தில் உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வியில் ஆதிக்கம் செய்யும் பெரும்பான்மை முதலாளிகள் நமது அரசியல்வாதிகள் அல்லது அமைச்சர்கள் என்பது கல்வியின் நிலையை எடுத்துச் சொல்லும் ஒரு எடுத்துக்காட்டு.

2011_95_2011-04-05T171526Z_01_DEL16_RTRIDSP_0_INDIA

மருத்துவ வசதிகள் அல்லது உயிர் காக்கும் கருவிகள் நிரம்பிய தன்னிறைவு பெற்ற ஒரு அரசு மருத்துவமனையை நம்மால் கண்டு பிடிக்க முடியாது, ஆனால், தனியார் மருத்துவமனைகள் வீதிக்கு இரண்டாக முளைத்துக் கிடக்கிறது, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பான்மையான மருத்துவர்கள் தனக்கென ஒரு தனியார் மருத்துவமனையை நடத்திக் கொண்டு பணம் செய்வதில் குறியாய் இருப்பதை தமிழகத்தின் காக்கை குருவிகள் கூட அறியும், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்பது கூட மீண்டும் தனியார் மருத்துவமனைகளையும், அவர்களின் கொள்ளையையும் ஊக்குவிக்கும் ஒரு திட்டமாக இருக்குமோ என்று அஞ்சத் தோன்றுகிறது, ஏனென்றால் அரசு மருத்துவமனைகள் எல்லா வசதிகளும், உயிர் காக்கும் மருந்துகளும், நவீன மருத்துவத்துக்கான கருவிகளும் கொண்டிருக்குமேயானால் இப்படியான ஒரு திட்டமே தேவை இல்லை. அரசு மருத்துவமனைகளின் பணியே அதன் மக்களின் உயிர் காப்பது தான் என்பதை நாம் இன்னும் உணரவில்லை. முதல்வரின் உறவினர்களோடு தொடர்புடைய பல மனிதர்களின் பெயர் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தும் தனியார் நிறுவனங்களின் பெயரோடு உச்சரிக்கப்படுவது இந்தத் திட்டத்தின் நம்பகத் தன்மையைக் குலைக்கிறது.

குடிநீருக்காகத் தொலைதூரங்களை நோக்கிப் பயணிக்கும் வறண்ட பாலை நிலங்களைப் போல நமது கிராமங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன, தூய்மைப் படுத்தப்பட்ட குடிநீரை எந்தக் குடிமகனும் இந்த அரசிடம் இருந்து பெற முடியாத சூழல் நிலவுகிறது. குடிநீர் அருகில் கிடைக்கும் கிராமங்களில் நிலவும் சாதீய வேறுபாடுகள் ஒடுக்கப்பட்ட மக்களை அந்தக் குடிநீரை நுகரும் ஆற்றல் அற்றவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது, தமிழகத்தின் பல கிராமங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இருந்தும் அவை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பயன் பெரும் உயர் சாதித் தொட்டிகளாக இருப்பதை ஏனோ மாற்றி மாற்றி இரண்டு திராவிட அரசுகளும் கண்டு கொள்ளவே இல்லை, ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் வாழும் பகுதிகளில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அழுக்கடைந்து நாற்றம் அடிப்பதை நவீனத் தீண்டாமை என்று தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அவற்றை சுத்தம் செய்ய வேண்டிய பணியாளர் பெரும்பாலும் அந்தக் கிராமத்தின் ஆதிக்க சாதியைச் செர்ந்தவரியா இருப்பார், நகர்ப் புறங்களில் வசிக்கும் குடிசைப் பகுதி மக்களின் வாழ்க்கை நீருக்காகவே நடப்பது போல ஒரு மிகக் கொடுமையான சூழலை எல்லா நகரங்களிலும் நாம் கண்டபடியே தான் பயணிக்க வேண்டியிருக்கிறது, குடிநீரைத் தவிர்த்து புழங்கும் நீரையும் இப்போது விலை பேசும் தனியார் முதலாளிகள் பெருகிக் கொண்டு வருவதை இந்த ஆட்சியாளர்கள் தங்கள் சாதனையாகச் சொன்னால், இலவசங்களின் மாயையில் இருந்து நாம் வெளியேறி வர முடியும்.

211

மாநிலத்தின் பல்வேறு கிராமங்களுக்கு சாலை வசதிகளும், பேருந்து வசதிகளும் இல்லை என்பதை நமது ஆட்சியாளர்கள் ஒப்புக் கொள்வார்களோ இல்லையோ, தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் உணர்ந்து கொள்வார்கள், ஒப்புக் கொள்வார்கள், கடந்த விடுமுறையின் போது நாகர்கோவில் அருகில் திசையன்விளையிளிருந்து பிரிந்து செல்லும் மாங்குளம், பாப்பான்குளம் போன்ற ஊர்கள் பேருந்தையும், தார்ச் சாலைகளையும் கடந்த அறுபது ஆண்டுகளில் கண்டதே இல்லை என்கிற உண்மையை உணர்ந்த போது விடுதலை அடைந்து பெரியாரின் கனவுகளை நோக்கிப் பயணம் செய்வதாகப் பீற்றும் இந்த இரண்டு திராவிட அரசுகளின் அவலமான ஆட்சி முறையும் திட்டங்களும் கண் முன்னர் நிழலாடுகிறது. இரவுகளில் இந்தக் கிராமங்கள் தீவுகளைப் போல எந்த இணைப்பும் இல்லாத கரும்புள்ளிகளாக மாறிப் போய் இருக்கின்றன, மலைக்கிராமங்களில் பலவற்றுக்கு இன்னும் மின்வசதி இல்லை, மருத்துவம், கல்வி, சாலை, போக்குவரத்து என்று எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத சோகங்களாக நீண்ட காலமாய் இந்தக் கிராமங்கள் யாரையோ எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றன. தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன, ஆனால், அவற்றை மின்சாரமின்றி எதனைக் கொண்டு இயக்குவது என்று தெரியாமல் மக்கள் விழி பிதுங்கிக் கிடக்கிறார்கள்.

சாதி ஒரு வளரும் கிருமியைப் போல தமிழகமெங்கும் கடந்த அறுபது ஆண்டுகளில் ஊடுருவி இருக்கிறது, தொடர்ந்து திராவிட அரசியல் இயக்கங்களில் அறிமுகம் செய்யப்பட்டுக் கிளைத்துத் தழைக்கிற சாதிய வேட்பாளர் முறையால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நசுக்கப்பட்டும், அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டும் சீரழிந்து கிடக்கிறது, ஆட்சியாளர்களால், அதிகாரிகளால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் மக்களாக தலித் மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் கிடக்க இலவச அரிசியும், இலவசத் தொலைக் காட்சியும் அவர்களின் கீழ்நிலை வாழ்க்கை முறையை எப்படி மாற்றி அமைக்கும் என்பதை எல்லாம் தெரிந்த கலைஞரும், மெத்தப் படித்த ஜெயலலிதாவும் சொன்னால் தான் உண்டு. ஒரு மனிதனை அடிமைத் தளையிலிருந்து மீட்க முடியாத, அந்த அடிமைத் தளையை ஆதரித்து ஊக்குவிக்கிற அரசுகளைக் கொண்டிருப்பதும், அந்த அரசுகளிடம் இருந்து இலவசக் கண்துடைப்புகளைப் பெறுவதும் தான் நமது மக்கள் அவர்களைத் தேர்வு செய்ததற்கான பரிசுகள். இரட்டைக் குவளை முறையை ஒழிக்க முடியாத ஒரு அரசிடம் இருந்து அரிசி, தொலைக்காட்சி போன்ற பொன்னையும் பொருளையும் எந்த ஒடுக்கப்பட்ட இளைஞனும் எதிர் நோக்கி இருக்கவில்லை, அவனுக்கு உண்மையில் தேவையாய் இருப்பது மரியாதையான இருப்பு. மதுரையில் இருந்து இருபது கிலோ மீட்டர் சுற்றளவில் எண்ணற்ற கிராமங்களில் இன்னமும் ஆதிக்க சாதி மக்கள் வசிக்கிற தெருக்களின் வழியாக ஒடுக்கப்பட்ட மக்கள் நடக்க இயலாத பெருங்கொடுமை நடக்கிற போது அதே கிராமங்களில் தேர்தல் கால வாக்குறுதிகளை அம்பலங்களுக்கு வழங்கிக் கொண்டிருப்பது முதல்வர் ஐயாவின் மகன் அழகிரி என்பது தான் விசித்திரமான பெரியார் தத்துவம். ஒடுக்கப்பட்ட மக்களின் விளைநிலங்களில் விளையும் பொருட்களை கண் காணாத இடத்தில் கொண்டு சென்று தான் விற்பனை செய்ய முடியும், ஒரு தலித் விவசாயியின் நிலத்தை உழவும், பயிர் செய்யவும் அவனைத் தவிர வேறு எந்த மனிதனும் வரமாட்டான் என்பது கலைஞர் ஐயாவுக்குத் தெரியும், அதனால் தான் அவர் அவனுக்கு இலவச அரிசியையும், இலவசத் தொலைக் காட்சியையும் வழங்கி ஆற்றுப் படுத்தி இருக்கிறார்.

சாதி வேறுபாடுகள் அற்ற தமிழகக் கிராமங்கள் இன்றைக்கு இல்லை என்னும் அளவுக்கு வேட்பாளர்களின் தேர்வும், அமைச்சர்களின் தேர்வும் சாதியை மையப்படுத்தி நடந்து கொண்டிருக்கும் இந்த ஆட்சியைத் தான் நாம் பெரியாரின் கனவான சமநீதி ஆட்சி என்று நம்ப வேண்டும். ஏனென்றால் முதல்வர் தலித் மக்களின் வீட்டில் சம்பந்தம் வைத்துக் கொண்டிருக்கிறார். இலவசத் திட்டங்களை நிறைவு செய்யத் தேவைப்படும் பணமும், பொருளும் கலைஞர் அய்யா வீட்டுத் தோட்டத்திலோ, ஜெயலலிதா வீட்டுக் கொல்லைப் புறத்திலோ இருந்து கொண்டு வரப்படுவதில்லை, மாறாக அந்தப் பணம் நீங்களும், நானும் காலமெல்லாம் உழைத்து, அரசுக்கு வரி செலுத்தி நேர்மையாக நடந்து கொண்டதன் வலி. ஒன்றுக்கு மூன்றாக முதலாளிகளும், முதலாளித்துவக் காவலர்களும் நம்மிடம் இருந்து பறிக்கும் எரிபொருட்களின் விலை, பதுக்கி வைக்கப்பட்டுப் பின்னர் விலை ஏற்றம் செய்யப்படுகிற காய்கறிகளின் விலை, நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் விலைவாசிகளின் ஏற்றம், தொடர்ந்து விவசாய நிலங்களை இழந்து நகரத்துக்குள் துரத்தி அடிக்கப்படுகிற ஏழை விவசாயிகளின் குருதி, இலவச அரிசியும், இலவசத் தொலைக்காட்சியும் இல்லம் நோக்கி வந்து விட உழைப்பவனின் பொருள் எங்கே போகிறது, அரசு மது விற்பனைக் கூடங்களில் இறைந்து கிடக்கும் காலி பாட்டில்கள் மாதிரி காணாமல் போய் விடுகிறது, உழைப்பு, விழிப்புணர்வு, அறிவு, தன்மானம் எல்லாவற்றையும் இழந்து அங்கே விழுந்து கிடப்பான் திராவிடன். அவனிடம் எஞ்சி இருப்பது அவனுக்கு இலவசமாக வழங்கப்பட்ட பொங்கல் வேட்டியாக இருக்கலாம்.

farmer

இலவசங்களால் நாம் தொலைநோக்கில் பொருளாதார நன்மைகளை, நமக்கான உரிமைகளை, சமூக விழிப்புணர்வை, கல்வியை, அடிப்படை வசதிகளை, மருத்துவ வாய்ப்புகளை, சுய மரியாதையை இன்னும் எல்லாவற்றையும் இழந்து தனியான குணம் கொண்ட தமிழர்கள் என்னும் நிலையில் இருந்து மாறி வழக்கமான இந்துக்கள் அல்லது இந்தியர்கள் என்கிற திசையை நோக்கிப் பயணிக்கிறோம் நண்பர்களே, ஆம், அது தானே ஆட்சியாளர்களுக்கு வேண்டும், இனி அவர்களுக்குத் தேவை எல்லாம் கேள்விகள் எதுவும் கேட்காத, சிந்திக்க இயலாத இலவசங்களில் திளைத்துக் கிடக்கும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள்.

வெல்க திராவிடம், வாழ்க தமிழர்.

*********

Advertisements

Responses

  1. nandru


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: