கை.அறிவழகன் எழுதியவை | ஏப்ரல் 21, 2011

இழவு வீட்டில் விளம்பரத்தட்டி வைக்கும் புரட்சியாளர்கள்.

red-fox_679_600x450

ஈழம் அல்லது ஈழத் தமிழர்கள் என்று எழுதத் துவங்கும் போதே கைகள் நடுங்கத் துவங்கி விடுகிறது, நம்மையும் அறியாமல் மனம் ஒரு விதமான கலக்கத்தைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறது, ஏனென்றால் இந்த சொற்கள் உயிர்களின் வலியையும், மரணத்தின் வாயிலையும் வாழும் காலத்தில் நமக்கு உணர்த்தியவை, வெறும், "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி" என்கிற வீர வசனங்களையே கேட்டுப் பழகிப் போன நம் வாழ்க்கையில் அந்த மூத்த குடியின் முதியவர்களும், பெண்களும், குழந்தைகளும் குருதித் துணுக்குகளாக, சதைப் பிண்டங்களாக நம் கண்களின் முன்னே காட்சிக்கு வைக்கப்பட்ட போது தான் வாழ்க்கையின் கொடூரமும், மனிதர்களின் இன வெறியும் புரியத் துவங்கியது, நாம் கலங்கி நின்றோம், அழுது புரண்டோம், அரற்றினோம், ஆற்ற மாட்டாமல் புழுங்கினோம், ஆனாலும் உலகம் நமது கூக்குரலை அத்தனை எளிதாகப் புரிந்து கொள்ளவில்லை, ஏனென்றால் நமது நிலமும், நமது மக்களும் அத்தனை வணிக முக்கியத்துவம் பெற்றவர்களாய் இருக்கவில்லை, வளம் கொழிக்கும் எண்ணெய் வளமோ, நிலம் செழிக்கும் பணப்பயிர்களோ நம்மிடம் கொட்டிக் கிடக்கவில்லை, உலக வல்லரசுகள் தங்கள் ஆயுதங்களை விற்கக் கிடைத்த அரிய வாய்ப்பாகவே நமது போராட்டங்களையும், போராளிகளையும் உற்று நோக்கிக் கொண்டிருந்தது, தட்டிக் கேட்கும் திறன் இருந்தும் வஞ்சம் தீர்க்கும் வலிய ஆற்றலாகவே இந்தியத் துணைக் கண்டம் நின்று கொண்டிருந்தது, இன்னும் இருக்கிறது. பொது உடைமைச் சித்தாந்தம் பேசிக் கொண்டிருக்கும் சீனமோ, பேசிக் கொண்டிருந்த ரஷ்யாவோ தெற்காசியாவின் ஒரு தீவில் அடைபட்டு மரண ஓலம் எழுப்பிய மனிதர்களைக் கண்டு கொள்ளவில்லை, ஏனெனில் அவர்களின் பொது உடைமைத் தத்துவங்கள் எல்லைகளைக் கொண்டவை, எல்லைகள் இல்லாத சமூக நீதியைக் கனவு கொண்ட கார்ல் மார்க்சின் பெயரைச் சொல்லிக் கொண்டே தங்கள் எல்லைகளை வரைந்து கொண்டிருந்தார்கள் இந்தச் சிவப்புச் சட்டைக் காரர்கள், இழவு வீட்டில் விளம்பரத் தட்டி வைக்கும் நமது புரட்சி நாயகர்களைப் போல இவர்கள் ஐக்கிய நாடுகள் அவையில் இறந்து போன மனிதர்களின் அவலத்துக்கு நீதி காண்பதை விடுத்துத் தங்கள் அரசியல் நன்மைகளைக் குறித்த பெரும் கவலை கொண்டிருந்தார்கள். பேரினவாதிகளை அவர்களின் போர்த்திட்டங்களை ஆதரித்தார்கள்.

இப்படியான ஒரு காலகட்டத்தில் தான் ஐக்கிய நாடுகள் அவை ஒரு வல்லுநர் குழுவை நியமனம் செய்து இலங்கையில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்ற குற்றச்சாட்டை உறுதி செய்யத் தலைப்பட்டது, அந்த வல்லுநர் குழுவும் இப்போது தனது அறிக்கையை வெளியிட்டு அங்கே போர்க்குற்றங்கள் மட்டுமல்ல, மனித உரிமை மீறல்களும், பன்னாட்டு விதிமுறைகள் கட்டுடைப்பும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன என்று குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே என்பதற்கான நம்பகமான முகாந்திரத்தை உருவாக்கி இருக்கின்றன, இந்த அறிக்கை வெளியாவதற்கும், இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் பல்வேறு உண்மைகளை ஆதாரங்களுடன் வல்லுநர் குழுவிடம் ஒப்படைப்பதற்கும் தங்கள் வாழ்க்கையையும், உயிருக்கான அச்சுறுத்தலையும் பணயம் வைத்துப் பலர் பணியாற்றினார்கள், தனி மனிதர்கள், முன்னாள் போராளிகள், செய்தியாளர்கள், ஊடகங்கள், தன்னார்வக் குழுக்கள், மனித உரிமை அமைப்புகள், முன்னாள் ஐக்கிய நாடுகள் அவை அலுவலர்கள் என்று பெயர் பெரியாத பலரும் இந்த அறிக்கையின் பின்புலத்தில் இருக்கிறார்கள். இறந்து போன மனித உயிர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும், அவர்கள் கொல்லப்பட்டது மனித வாழ்க்கையின் அடிப்படை விதிகளுக்கு முரணானது என்பதில் அவர்களைக் கொன்று அழித்தவர்களைத் தவிர யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

untitled

ஆனால், இறந்து போன அல்லது நடந்து முடிந்து போன ஒரு போர் குறித்த விசாரணைகளும், அறிக்கைகளும் ஏன் இத்தனை முக்கியத்துவம் பெற வேண்டும் என்கிற ஒரு கேள்வியை நமது புதிய தலைமுறை இளைஞர்கள் எதிர் கொள்ளக் கூடும், முதுமனிதனின் காலத்தில் இருந்தே மரணம் குறித்த அச்சமும், கவலையும் மனிதனுக்குத் தொடர்ந்து நிலைத்திருந்தது, இறந்த இயக்கமற்ற உடலங்களை அப்படியே விட்டு விட்டு மனிதன் ஓடத் துவங்கினான், மரணம் உருவாக்கிய கேள்விகளை எதிர் கொள்வதில் மனிதனுக்கு இருந்த அறியாமை அவனை இத்தகைய ஒரு குழப்ப நிலையை நோக்கி நகர்த்தியது, காலப்போக்கில் மனிதன் தனது அறிவையும், ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு பண்பட்ட போது அவனுக்கு உடல் இயக்கம், வாழ்க்கை, பிறப்பு, இறப்பு குறித்த பல்வேறு தகவல்களும், செய்திகளும் விளங்கத் துவங்கியது, பிறப்பைக் கொண்டாடியது போலவே மனிதனின் இறப்பையும் மனிதன் கொண்டாடத் துவங்கியது அப்படித்தான், இயங்க மறுத்த உடலை அவன் மரியாதையோடு அடக்கம் செய்யக் கற்றுக் கொள்கிறான், நாகரிக வளர்ச்சி அடைந்த மனிதக் குழுக்கள் இறப்பை வெகு நேர்த்தியாக எதிர் கொள்ளத் துவங்கியது, மலர்களும், வாசனைத் திரவியங்களும் தூவப்பட்டு அவன் வாழ்ந்த வாழ்க்கையை மதிப்பிடத் துவங்கியது உலகம், ஆகவே இன்றைய பொது உலகில் எல்லா மனிதக் குழுக்களும் தங்கள் உறுப்பினரை இழந்தவுடன் பாரம்பரியமான ஒரு சடங்கை, இறுதி மரியாதையைச் செய்து வழி அனுப்பி வைக்கிறது, இந்த வழிமுறைகளை வாழும் மனித குலத்தின் உயரிய நாகரீகம் என்று அடையாளம் செய்து கொள்ளலாம், இயற்கை மரணமோ, நோயின் சீற்றமோ, போரின் கரங்களோ சக மனிதனை உயிரிழக்க வைக்கும் போது எதிர் நின்று சண்டையிடுபவனும் அந்த உடலத்தை உயரிய மதிப்போடு அடக்கம் செய்வதை ஒரு பொது விதியாக, மனிதர்களுக்கான உரிமையாக நாமே ஒரு விதி கொண்டிருக்கிறோம், அந்த விதியைக் கடை பிடிப்பவர்களை மனிதர்களாகவும், மீறுபவர்களை இன்னும் விலங்குகளாகவும் நாம் அடையாளம் காண்பதற்கு இந்த விதிகள் உதவி செய்கின்றன. ஆனால், நம் கண்ணெதிரில் வாழ்ந்து கொண்டிருந்த நமக்கு நெருங்கிய சொந்தங்கள் என்று உணரப்பட்ட, நாம் பேசுகிற மொழியையே பேசிக் கொண்டிருந்த மனிதக் குழுக்களை அதன் பச்சிளம் குழந்தைகளை, அதன் முதுபெரும் பெற்றோரை, உலகப் பசியாற்றும் தாயாரை குருதியும், சதையும் நிறைந்த இன்னும் பல மனிதர்களை இந்த விதிகளுக்குப் புறம்பாக நாகரீக உலகின் ஆயுதங்கள் சிதைத்துச் சின்னாபின்னமாக்கின, போருக்குத் தொடர்பில்லாத கள்ளமற்ற சிரிப்போடு தாயின் மடியில் விளையாடிக் கொண்டிருந்த எம் குழந்தைகளின் சிரிப்பைக் கொள்ளை கொண்டு போயின இயந்திரப் பறவைகள், போரில் இலக்குகளை விடுத்து எளிய வாழ்க்கையைக் கைக்கொண்டிருந்த எமது எண்ணற்ற மக்களைக் குறி வைத்தது பேரினவாதம்.

தங்களுக்கான எல்லைகளும், தங்களுக்கான உரிமைகளும் கூட அறியாத உழைக்கும் மக்களின் உயிரைப் பறித்துச் சென்றது பேரினவாதிகளின் போர். இறந்த பின் புதைக்கப்படாத எண்ணற்ற பிணங்களின் வாசனை இன்னும் நம் நாசித் துளைகளில் தொக்கி நிற்கிறது, பேரினவாதிகளால் கழுவப்பட்டிருந்தாலும் எம் இளம் சிறார்களின் குருதிக் கரை எம் மூளையின் நினைவுச் செல்களில் படித்து உறைந்து போயிருப்பதை எப்படி அழிப்பது என்று தெரியாது எங்களுக்கு, ஆனாலும் எங்களுக்கு ஒரு வழி இருந்தது, இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களில் பலர் அப்பாவிகள், அவர்கள் தாங்கள் ஏன் கொலை செய்யப்பட்டோம் என்று அறியாமலே இறந்து போனார்கள் என்பதை இந்த உலகம் அறிய வேண்டும், அவர்களின் போராட்டமும், போரும் ஒடுக்குமுறைக்கு எதிராகவே துவங்கப்பட்டது என்கிற அரசியலின் மூலத்தை நாம் இந்தப் பன்னாட்டு சமூகத்திற்கு உணர்த்த வேண்டும் என்கிற உள்ளுணர்வும், வெறியும் தொடர்ந்து போராடுவதற்கான வலிமையை நமக்குக் கொடுத்தன. நாம் வாழ்க்கையின் கனவுகளோடு தங்களுக்கான உரிமைகளை நோக்கிக் குரல் எழுப்பிய எமது உறவுகளுக்கு நீதியையும், எமக்கான உரிமைகளையும் கொண்டு ஒரு தனியான நாட்டை நோக்கி எமது பயணத்தைக் மேற்கொண்டிருக்கிறோம், நாம் அதில் வெற்றியும் பெறுவோம்.

untitled 1

இந்த வேளையில் தான் சில மேதைகளின் ஆய்வுகளும், குற்றச்சாட்டுக் கடை விரிப்புகளும் நம் கண்ணில்படுகிறது, பெயர் சொல்லும் அளவிற்கு இவர்கள் முக்கியத்துவம் பெற்றவர்கள் இல்லையென்றாலும் கூட இவர்கள் இலக்கியம், மார்க்சியம், லெனினியம், புரட்சி, புண்ணாக்கு போன்ற வண்ணங்களைத் தங்களின் மீது பூசிக் கொண்டிருக்கிறார்கள், இவர்கள் பூசியிருக்கிற வண்ணங்கள் இவர்களின் உண்மையான அடையாளத்தை அழித்து இவர்களை சமூக சேவகர்கள் எனவும், சித்தாந்தங்களை அடை காக்கிற மார்க்சியக் குஞ்சுகள் என்றும் நமது இளைஞர்களை மடை மாற்றும் வாய்ப்பு இருக்கிறது, புலிகள் அப்படிச் செய்தார்கள், புலிகள் இப்படிச் செய்தார்கள், புலிகள் பொது மக்களைக் கொன்றார்கள், அவர்கள் மீது ஏறி நின்றார்கள், அமர்ந்தார்கள், குதித்தார்கள், மிதித்தார்கள் என்றெல்லாம் புழுதி வாரித் தூற்றிக் கொண்டே படம் காட்டுகிறார்கள்.

ஐ.நா வின் வல்லுநர் குழு அறிக்கையில் இருக்கும் புலிகளின் மீதான குற்றங்களுக்கு இவர்கள் கண்காட்சி வைக்கிறார்களாம், அடடா, என்ன ஒரு கரிசனையும், அன்பும் இவர்களுக்குத் தமது மக்களின் மீதும், மொழியின் மீதும். இவர்கள் சொல்கிற குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறதா, இல்லையா? இவர்கள் எத்தனை காலமாக இந்தக் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள், இப்போது ஏன் இன்னும் வீரியமாக வைக்கிறார்கள் என்ற பல கேள்விகள் நம்மை நோக்கி வரலாம், அதற்கான விடை ஒன்றுதான், வாழுமிடங்களில் எல்லாம் காணாமல் போன அல்லது களவாடப்பட்ட புரட்சிக்குச் சொந்தக்காரர்கள் இவர்கள் என்பதை நம்ப வைப்பதற்கான ஒரு அரிய களமாக அவர்கள் இந்த இழவு வீட்டைத் தேர்வு செய்து கொள்கிறார்கள், இழவு வீட்டில் வைக்கப்படுகிற இத்தகைய அருவருப்பான விளம்பரத் தட்டிகளை இழப்புகளை உணர்ந்தவன் எவனும் எடுத்தெறிய மாட்டான் என்கிற ஒரு குருட்டு நம்பிக்கையே இவர்கள் இந்த விளம்பரத் தட்டிகளைப் பரப்பி கடை விரிக்கிற இழிதொழிலைச் செய்ய வைக்கிறது.

ஒரு மிகப்பெரிய மனிதக் குழு தனது விடுதலைக்காகப் போராடுகிறது, நீண்ட நெடிய அதன் போராட்டம் அமைதியான வழிமுறைகளில் இருந்து துவங்கிக் கிளைத்து எதிர்த்துப் போராடி அதற்கான அரசியல் வழிமுறைகளைக் கற்றுணர்ந்து இன்னும் தனது இருப்பைப் பறை சாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், பேரினவாதம் புரிந்த கொடுமைகளை, பேரினவாதத்தின் கொடூரங்களை இந்த உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் ஐக்கிய நாடுகள் அவையின் வல்லுநர் குழு ஒரு அறிக்கையை விடுத்திருக்கிறது, அதில் பேரினவாதத்தின் மனித உரிமை மீறல்களை ஒரு மிக முக்கியமான மையக் கருவாக எடுத்துக் கொண்டு தனது பரிந்துரைகளைப் பதிவு செய்திருக்கிறது, இப்படியான ஒரு காலகட்டத்தில் இந்த இனத்தின் உறுப்பினர்கள், இந்த மொழியின் பயன்பாட்டாளர்கள் என்கிற முறையில் நாம் என்ன செய்ய வேண்டும், இந்த அறிக்கை சொல்லும் உண்மைகளை இறுக்கப் பற்றிக் கொண்டு நமது போராட்டங்களை இன்னும் வலிமைப்படுத்த வேண்டும், அரசியல் வழியாக நாம் அடைய வேண்டிய உரிமைகளை நோக்கிய நமது பயணத்திற்கு இந்த அறிக்கையை ஒரு துடுப்பாகப் பயன்படுத்திக் கொண்டு நகர வேண்டுமே விடுத்து விடுதலைக்கு எதிராகப் புரிந்து கொள்ளப்படக் கூடிய போராளிகளின் மீதான குற்றச்சாட்டுகளை கடை பரப்புவதும், அதை இணையத்தில் கூவி விற்பதும், இதைத் தான் நான் அன்றே சொன்னேன் என்று அறிவு ஜீவி வேடம் புனைவதும், புரட்சியின் பெயரால் இறந்து போன எளிய உழைக்கும் மக்களுக்குக் கிடைக்கப் போகும் நீதியைத் தட்டிப் பறிக்க நினைக்கும் ஒரு ஆகக் கடைந்த கயவாளித்தனம், இந்தக் கயவாளித் தனத்தை யார் செய்தாலும், அவர்கள் இந்த மொழிக்கும், இனத்துக்கும் துளியும் நேர்மையற்ற கல்நெஞ்சக்காரர்கள் என்பதை நாம் உணர்ந்து கொண்டே ஆக வேண்டும்.

wrong-place-in-wrong-time-10

நமது தவறுகளை உணர்ந்து கொள்வதும், அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதும் நிகழ வேண்டிய செயல்கள் தான் என்பதில் நம் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை, எந்தக் கருத்தையும் முன்வைக்கவும், அவற்றை மக்களிடத்தில் சேர்க்கவும் ஒரு சரியான கால அளவு இருக்கிறது, அந்தக் கால அளவு குறித்த விழிப்புணர்வும், அக்கறையும் இல்லாத மனிதர்களால் எந்த நன்மையையும் நிகழப் போவதில்லை, அவர்களின் எழுத்தும், இயக்கமும் பன்றித் தொழுவங்களில் நிறைந்து கிடக்கும் புழுக்கைகளைப் போன்றவை, புரட்சி புரட்சி என்று கூக்குரலிட்டபடி இத்தனை காலம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை இந்த இழவு வீட்டு விளம்பரத் தட்டி ஒன்றே விளக்கிச் சொல்லும். இயன்றால் ஒரு இரவு மதுவையும், மஞ்சங்களில் நீங்கள் நிகழ்த்தும் போலிப் புரட்சிகளையும் நிறுத்தி விட்டு இழந்து போன உரிமைகளையும், உயிர்களையும் நீதிக்கு முன்னிறுத்த நிகழும் போராட்டங்களில் கலந்து கொள்ளுங்கள், அல்லது உங்கள் புரட்சியின் பெயரால் உருவான சிங்களப் பெயரொன்றை வைத்துக் கொண்டு இனமாற்றம் அடைந்து விடுங்கள், நலமாய் இருக்கும்.

இறுதியாய்ச் சில வரிகள் புரட்சியின் பொன்னம்பலங்களுக்கு, குறைந்தது உங்கள் மொழிக்கும், இனத்துக்கும் நேர்மையானவர்களாய் இருப்பது குறித்துச் சிந்தியுங்கள், பிறகு மானுடப் பரப்பை நோக்கிப் பரப்புரை செய்யக் கிளம்பலாம். நீண்ட நெடிய போராட்ட வழிமுறைகளைக் கடந்து இன்று அரசியல் அரங்கில் தனக்கான முகவரியைத் தேடும் ஒரு சிக்கலான காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம், இந்தச் சிக்கலை விடுவிப்பது என்பது ஒரு அச்சமற்ற விடுதலை பெற்ற வாழ்க்கையை, தனது மொழியைச் சிறப்பாகக் கையாளும் உரிமையை நமது குழந்தைகளுக்கு வழங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், "புலிகளும், அவர்கள் இழைத்த போர்க்குற்றங்களும்" என்கிற பெயரில் நீங்கள் விரிக்கும் கடைகள் சிங்களப் பேரினவாதத்தின் குருதி வெறியைத் தான் விற்பனை செய்யப் பயன்படும், அதற்காக நீங்கள் விலை பேசப்பட்டிருக்கலாம், அல்லது உங்களுக்கு விலை கொடுக்கப்பட்டிருக்கலாம், அது குறித்த கவலை எங்களுக்கு இல்லை, எங்கள் கவலை எல்லாம் சிவப்புப் புரட்சியின் பெயரில் நீங்கள் கறைப்படுத்தும் எம் குழந்தைகளின் குருதியைப் பற்றியது. உங்கள் புலிகளின் போர்க்குற்றங்கள் குறித்த இணையக் கடைகளை இப்போதைக்கு மூடிக் கொண்டு வேறு ஏதாவது பச்சைக்கடல், ஊதாக்கடல் என்று கதை எழுதுங்களேன், அதையும் சிங்களத்தில் எழுதுங்களேன், பன்னாட்டு விருதுகள் கிடைக்கும் வாய்ப்புகளும் உண்டு, பயணங்களும் உண்டு.

415PREP2

நீங்கள் களத்தில் இருந்திருக்கலாம் தோழர்களே, நீங்கள் தத்துவங்களைக் கரைத்துக் குடித்திருக்கலாம், நீங்கள் புரட்சியை நோக்கி உலகத்தை நகர்த்தலாம், ஆனால், நீதியின் குரலுக்காக பல கோடித் தமிழர்கள் ஏங்கித் தவித்திருக்கும் போது நீங்கள் சொந்த வீட்டுப் பிணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆளாய்ப் பறக்கிறீர்கள், இறந்து போன எமது சொந்த உயிர்களுக்காக நாங்கள் ஒப்பாரி வைக்கும் போது நீங்கள் புரட்சியின் பெயரில் விளம்பரத் தட்டிகளை வைக்கிறீர்கள், தமிழில் வைக்கப்பட்டிருந்தாலும் அந்தத் தட்டிகளின் உள்ளடக்கம் சிங்களத்தில் தான் புரிந்து கொள்ளப்படும், ஆகவே அகற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் பூசிக் கொண்டிருக்கிற சிவப்பு வண்ணங்களையும் சேர்த்து……….

மார்க்சிடம் இடம் இருந்து மன்னிப்பாவது உங்களுக்குக் கிடைக்கட்டும்.

*********

Advertisements

Responses

 1. “விடுதலைக்கு எதிராகப் புரிந்து கொள்ளப்படக் கூடிய போராளிகளின் மீதான குற்றச்சாட்டுகளை கடை பரப்புவதும், அதை இணையத்தில் கூவி விற்பதும், இதைத் தான் நான் அன்றே சொன்னேன் என்று அறிவு ஜீவி வேடம் புனைவதும், புரட்சியின் பெயரால் இறந்து போன எளிய உழைக்கும் மக்களுக்குக் கிடைக்கப் போகும் நீதியைத் தட்டிப் பறிக்க நினைக்கும் ஒரு ஆகக் கடைந்த கயவாளித்தனம்”

  நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் கட்டுரையைப் படிக்கும்போது எனக்குத் தோன்றியதும் இதே. நன்றி.

 2. இந்த இனத்தில் பிறந்த நேர்மையான எந்த மனிதருக்கும் உங்களுக்கும் எனக்கும் ஏற்பட்ட உணர்வு தான் தோன்றும் தமிழ்நதி. ஆனாலும், இவர்கள் தங்கள் கடைகளை மூடப் போவதில்லை, ஏனெனில் இவர்கள் கடையின் முதலாளிகள் அல்ல, கடையில் வேலை செய்யும் கூலிப் பொடியன்கள்.

 3. நேரடியாக அந்த எத்திப் பிழைக்கும் கூட்டத்தை அம்பலப்படுத்தி இருக்க வேண்டும், நீங்கள் ஏன் பெயர் கூடக் குறிப்பிடாமல் பம்மி இருக்கிறீர்கள் அறிவழகன்?

 4. அண்ணா, சரியான நேரத்தில் சவுக்கைச் சொடுக்கி இருக்கிறீர்கள், எங்கே நீங்களும் காலப்போக்கில் கரைந்து போய்விட்டீர்களோ என்று பயந்தேன், எங்கள் உணர்வுகளை அப்படியே உங்கள் எழுத்தில் கொட்டித் தீர்த்து விட்டீர்கள், நன்றி அண்ணா.

 5. (நீங்கள் களத்தில் இருந்திருக்கலாம் தோழர்களே, நீங்கள் தத்துவங்களைக் கரைத்துக் குடித்திருக்கலாம், நீங்கள் புரட்சியை நோக்கி உலகத்தை நகர்த்தலாம், ஆனால், நீதியின் குரலுக்காக பல கோடித் தமிழர்கள் ஏங்கித் தவித்திருக்கும் போது நீங்கள் சொந்த வீட்டுப் பிணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆளாய்ப் பறக்கிறீர்கள், இறந்து போன எமது சொந்த உயிர்களுக்காக நாங்கள் ஒப்பாரி வைக்கும் போது நீங்கள் புரட்சியின் பெயரில் விளம்பரத் தட்டிகளை வைக்கிறீர்கள், தமிழில் வைக்கப்பட்டிருந்தாலும் அந்தத் தட்டிகளின் உள்ளடக்கம் சிங்களத்தில் தான் புரிந்து கொள்ளப்படும், ஆகவே அகற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் பூசிக் கொண்டிருக்கிற சிவப்பு வண்ணங்களையும் சேர்த்து……….மார்க்சிடம் இருந்து மன்னிப்பாவது உங்களுக்குக் கிடைக்கட்டும்.)

  சரியாகச் சொன்னீர்கள் தம்பி, ஆனால் இவர்களுக்கு மார்க்சிடம் இருந்து மன்னிப்பா, மார்க்ஸ் இவர்களைப் பார்த்தால் மண்டையில் போட்டு விடுவார். இவர்கள் புரட்சியின் பெயரில் பிழைப்பு நடத்துபவர்கள், புரட்சி புரட்சி என்று சொல்லிச் சொல்லியே பல பெண்களை நாசம் செய்தவர்கள், புரட்சியின் பெயரில் பல நாடுகளில் கூட்டம் சேர்ந்து தண்ணி அடிக்கும் களவாணிகள். இவர்களை நாமெல்லாம் சேர்ந்து பெரிய மனிதர்கள் ஆக்குவது தான் முட்டாள்தனம்.

 6. Sariyaana pathivu.

 7. உங்களைப் போலவே பலரும் அந்த எத்திப் பிழைக்கும் கூட்டத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தான் பெயர்களைக் குறிப்பிடவில்லை வாசுதேவன், மற்றபடி நீங்கள் நினைப்பது போலப் பம்முதல் எல்லாம் இல்லை.

 8. காலப் போக்கில் கரைந்து போவதற்கு நாம் என்ன கற்பூரமா முரளிகாந்தன், மொழியும் அது சார்ந்த இன உணர்வும் எக்காலத்திலும் நம்மிடம் இருந்து விலகிப் பொய் விடாது. உங்கள் அன்புக்கு நன்றி.

 9. உண்மைதான் ஜீவரத்தினம் ஐயா, இவர்களைப் பற்றி எழுதியும், பேசியுமே நமது காலத்தை நாம் வீணடிக்கிறோம் என்பதை நினைவு படுத்தியமைக்கு நன்றி, ஆனாலும், இவர்களின் போலியான வண்ணம் பூசப்பட்ட எழுத்தின் வன்மையில் நமது இளைய தலைமுறை மயங்கி விடக் கூடாதே என்கிற ஒரு ஆதங்கம் தான் இதனை எழுத என்னைத் தூண்டியது. உங்கள் அன்புக்கு நன்றி.

 10. நன்றி முஸ்தாக்.

 11. இறுதியாய்ச் சில வரிகள் புரட்சியின் பொன்னம்பலங்களுக்கு, குறைந்தது உங்கள் மொழிக்கும், இனத்துக்கும் நேர்மையானவர்களாய் இருப்பது குறித்துச் சிந்தியுங்கள்////

  Good Advice for them….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: