கை.அறிவழகன் எழுதியவை | ஏப்ரல் 23, 2011

முற்றத்து மரங்கள். (சிறுகதை)

1235279383xhHKvQ7

எனது ஆடைகளை எல்லாம் கழற்றி விட்டுக் கிணற்றடியில் அப்பா என்னைக் குளிப்பாட்டி விட்டுக் கொண்டிருந்த காலத்தில் இருந்து அந்த வேப்பமரம் அங்குதானிருக்கிறது, அதன் ஒரு கிளை நீண்டு கிணற்றுக் கம்பங்களின் மேலாகக் கொஞ்சம் தாழ்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது, சில நேரங்களில் நீரை இறைக்கும் வாளியின் ததும்பும் நீர்ப்பரப்பில் அதன் வெள்ளைப்பூக்கள் சில மிதக்கும், வேப்பம்பூ படிந்த நீர் உடலுக்கு நல்லதென்று சொல்லியபடி அப்பா எனது முதுகைத் தனது கரங்களால் தேய்த்துக் கொண்டிருப்பார், நான் சில நேரங்களில் அண்ணாந்து வேப்பமரத்தின் அடர்ந்த கிளைகளில் எப்போதாவது தாவிச் செல்லும் இரண்டு அழுக்கடைந்த மஞ்சள் நிற அணில்களைப் பார்த்தபடி குளித்து முடிப்பேன், கோடைக் காலங்களில் தாத்தா வேப்பமரத்தடியில் ஒரு சாய்வு நாற்காலியைப் போட்டுக் கொண்டு நாளிதழ்களைப் படித்துக் கொண்டிருப்பார், அடுத்த தெருவில் இருக்கும் அத்தை பிள்ளைகளும், பக்கத்துக்கு வீட்டு வாஹித் மாமாவின் மக்களும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு விடுமுறை நாள் காலையில் மஞ்சரி அக்கா நீண்ட கயிறொன்றை வீட்டில் இருந்து கொண்டு வந்து வேப்பமரத்தின் ஆகத்தாழ்ந்த கிளையொன்றில் கட்டி முடிச்சிட்டாள், வாஹித் மாமாவின் மூத்த மகன் உமர் வீட்டுக்குச் சென்று அவனுடைய அம்மாவிடம் கெஞ்சிக் கதறி ஒரு தலையணையை வாங்கிக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்த கயிற்றின் இடைவெளியில் நுழைத்துக் கட்ட முயல அவனது முயற்சி வெற்றி பெறவில்லை, அத்தை மகள் சுதாவும் நானும் ஊஞ்சல் கயிற்றில் அமர்ந்து ஆடுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் அது சுருண்டு கொள்வதும் எங்களைக் கீழே சாய்ப்பதுமாய் இருந்தது, பிறகு நாங்கள் தாத்தாவின் உதவியை நாட அவர் ஒரு பலகையை வைத்து இரண்டு புறத்திலும் முட்டுக் கொடுப்பது போலக் கட்டி அதன் மேலே தலையணையை வைத்துக் கொடுத்தார், பிறகு அவரே எங்களை ஊஞ்சலில் அமர வைத்துப் நிறைய நேரம் ஆட்டிக் கொண்டிருந்தார், எங்கள் விடுமுறை நாட்களை அந்த வேப்பமரத்தின் நிழல் கசப்பான அதன் பூ மணத்தோடு தன் மீது கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் தாலாட்டிக் கொண்டிருந்தது, நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம். கூரை வேயப்பட்டிருந்த கல்லுக்கால் வைத்த வீட்டு முற்றத்தின் முன்பாக அந்த வேப்பமரம் எப்போதும் நின்று கொண்டிருந்தது, வேப்பமரம் குறித்த பெரிய சிந்தனைகள் அப்போது எங்களில் யாருக்கும் இருக்கவில்லை, அது தன் பாட்டில் பூப்பதும், காய்ப்பதும், பிறகு இலைகளை உதிர்ப்பதுமாய் மிக உயரமாயும், அகலமாகவும் வளர்ந்து கொண்டிருந்தது.

அக்காவின் திருமணம் உறுதியாகும் வரை வேப்பமரம் ஒரு பொருட்டாய் யாருக்கும் இருக்கவில்லை, அத்தையின் மகன் பரிதிக்கும் அக்காவுக்கும் திருமணம் முடிவாகி பேச்சு வார்த்தைகள் வளர்ந்து கொண்டிருந்தபோது அம்மா, மண்டபத்தில் இல்லாமல் வீட்டிலேயே திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்று சொன்னதும், திருமணப்பந்தல் அமைக்கப் போதுமான இடம் வீட்டில் இல்லை என்று அப்பா மறுப்புச் சொன்னார், பிறகு வேப்பமரத்தை வெட்டி விடலாம் என்று அம்மா யோசனை சொல்லவும் எனக்குப் பகீரென்றது, வேப்பமரத்தை வெட்டிப் போடுவதென்று அம்மா திடுதிப்பென்று சொன்னபோது தான் வேப்பமரத்தின் மீது நான் கொண்டிருந்த இனம்புரியாத நெருக்கம் புரியத் துவங்கியது, இரவு நெடுநேரம் வரையில் நான் உறக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன், அம்மாவும், அப்பாவும் திருமணச் செலவுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள், அத்தை நகை மற்றும் வீட்டுச் சாமான்களில் கறாராக இருப்பதாக அம்மா அப்பாவிடம் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்கள், அம்மாச்சியும், அக்காவும் முற்றத்தில் படுத்து உறங்கி இருந்தார்கள் , எனக்குள் வேப்பமரம் குறித்த நினைவுகள் வேகமாய்ப் பரவத் தொடங்கின, அழுக்கடைந்த மஞ்சள் நிற அணில்கள் இரண்டும் இனி எப்படி விளையாடும், பெரிய அண்ணன் மகள் மங்கையும், சின்ன அண்ணன் மகன் ஆதவனும் அடுத்த விடுமுறைக்கு வரும்போது ஊஞ்சல் விளையாடுவதற்கு என்ன செய்வார்கள், தாத்தா ஊரில் இருந்து வந்தால் எங்கே சாய்வு நாற்காலியைப் போடுவார், கல்லூரியில் இருந்து வந்து என் மிதிவண்டியை நான் எங்கே சாத்தி வைப்பேன் என்றெல்லாம் தேவையற்ற கேள்விகள் எழுந்தன, பிறகு ஒருவழியாய் அன்றிரவு நான் உறங்கிப் போனேன்.

Snehaகாலையில் எழுந்து முதல் வேலையாக அடுப்படியில் இட்லி அவித்துக் கொண்டிருந்த அம்மாவிடம் போனேன், ஓரத்தில் நெளிந்த அந்த அலுமினியப் பாத்திரத்தைத் திறந்து அதன் மேல்பகுதித் தட்டில் நீரை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார் அம்மா, விறகடுப்பின் கணகணப்பு அந்தக் காலை வேளை அம்மாவின் முகத்தில் வியர்வைத் துளிகளை வழிய விட்டிருந்தது, வெண்ணிறத்தில் அடுக்களையை நிரப்பும் இட்லிச் சட்டியின் ஆவிக்கிடையில் அம்மாவின் முகம் நீண்ட நெடுங்காலமாய் அங்குதான் இருக்கிறது, வேரூன்றிய வேப்பமரத்தின் சாயலைப் போல, அம்மா தனது சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தபடி "என்னடா, டீ வேணுமா, அக்காட்ட சொல்லுடா, வெளி அடுப்புல சூடு பண்ணித் தருவா" என்றார்கள் அம்மா. அது இல்லம்மா, நீங்க எதுக்கு வேப்பமரத்த வெட்டச் சொல்றீங்க?, அது எவ்வளவு காலமா நம்ம வீட்டுல இருக்கு, பந்தல் வேணும்னா, வேப்பமரத்த விட்டுட்டு நான் போடச் சொல்றேம்மா" என்று அருகில் சென்று அமமாவிடம் முறையிடுவது போலச் சொன்னேன், "பந்தலுக்கு இல்லடா பழனி, வெறகு விக்கிற விலைல அதுக்குன்னு ஒரு தனிச் செலவா ஆகுமே, வெறகுக்கு வெறகும் ஆச்சு, பந்தல் போட இடமும் ஆச்சுன்னுதான் சொன்னேன், உனக்கு எங்கடா கஷ்டம் தெரியும், நீ போயி டீக் குடிச்சுட்டுக் காலேஜுக்குக் கிளம்புற வழியப்பாரு" என்று மாவைக் கரண்டியில் அள்ளி மறு ஈடு ஊற்றத் துவங்கினார்கள் அம்மா. நான் வெளியில் வந்து அக்காவிடம் டீயைச் சூடு பண்ணச் சொன்னேன், அக்கா வெளி அடுப்புப் பக்கமாய் நடந்தாள், வெளி அடுப்பு என்பது வேப்பமரத்தின் கீழே செங்கற்களால் அடுக்கிக் கட்டப்பட்டது, தேநீர் போடுவதற்கு, வெந்நீர் போடுவதற்கு என்று இந்த அடுப்பை அம்மாவும், அக்காவும் பயன்படுத்துவார்கள், வேப்பமரத்தின் நிழலில் கிடந்த கருங்கல்லில் அமர்ந்து காலையில் தேநீர் குடிப்பது அப்பாவின் நெடுங்காலப் பழக்கங்களில் ஒன்றாக இருந்தது. குற்றாலத் துண்டைத் தோளில் போட்டபடி அப்பாவின் பெரும்பாலான தேநீர்ப் பொழுதுகள் வேப்பமரத்தின் கீழே தான் நிகழ்ந்திருக்கும், வேப்பமரம் இல்லாமல் அந்தக் கருங்கல்லில் அமர்ந்து அப்பா தேநீர் குடிப்பார் என்றோ, வேப்பமரம் இல்லாத வெளி அடுப்பை அம்மாவும், அக்காவும் பயன்படுத்துவார்கள் என்றோ நான் கனவிலும் நினைக்கவில்லை. அப்படி எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என்று நான் மனதுக்குள் வேண்டிக் கொண்டிருந்தேன்.

திருமண வேலைகள் வேக வேகமாய் நடந்து கொண்டிருந்த போது அத்தை வீடு இருந்த தெருவுக்கும், எங்கள் வீட்டுக்குமாய் மிதிவண்டியை இயக்க வேண்டியிருந்தது, "டேய், மச்சாங்கிட்டப் போயி மோதரத்துக்கு அளவு எடுத்துட்டு வாடா" என்று அப்பாவும், "பழனி, ஒங்க அத்தைக்கு எத்தனை பத்திரிக்கை வேணும்னு கேட்டுட்டு வாடா" என்று அம்மாவும் என்னை விரட்டிக் கொண்டிருந்தார்கள், நானும் சளைக்காமல் போய் வந்து கொண்டிருந்தேன், ஆனாலும் எனக்குள் வேப்பமரம் பற்றிய ஏக்கமும், அது வெட்டப்பட்டுவிடுமோ என்கிற அச்சமும் மனதுக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஒருவழியாக அத்தை ஒருநாள் வீட்டுக்கு வந்து அப்பாவிடம், "அண்ணே, மண்டபத்துல வச்சா நல்லா இருக்கும்னு அவுக சொல்றாக, தொலையில இருந்து வர்ற அவுக சொந்தக்காரக ஊருக்குள்ளே வந்து போறது அவ்வளவு சௌரியப்படாதுன்னு உங்க அண்ணன் கிட்டச் சொல்லு, சரியா வந்தாப் பாக்கலாம், இல்லைனா இங்கேயே வச்சுக்கலாம்னு சொல்லச் சொன்னாகன்னு" ஒரு மாதிரியாய் இழுத்தார்கள் அத்தை, "சரி, கவி, நான் கம்பெனிக்குப் போயிட்டு சாயங்காலமா வீட்டுக்கு வாரேன்னு மச்சான்கிட்டச் சொல்லு" என்று அத்தையை அனுப்பி வைத்தார் அப்பா. நான் வேப்பமரத்தில் சாத்தி வைத்திருந்த என்னுடைய மிதிவண்டியைக் கிளப்பிக் கொண்டு கல்லூரிக்குக் கிளம்பினேன். கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.

Old_tree_old_home_by_abdollahi

அம்மா, புலம்பிக் கொண்டும், அத்தையைத் திட்டிக் கொண்டும் ஒருவழியாய் மண்டபத்தில் திருமணம் நடத்துவதற்குச் சம்மதம் சொல்லி விட்டிருந்தார்கள், மண்டபத்தில் இருந்த எரிவாயு அடுப்பில் வெம்மையில் வேப்பமரம் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டது, திருமணம் முடிந்ததும், கட்டிலை எடுத்து அப்பா வேப்பமரத்தடியில் போட்டு விட்டார், வருகிற போகிறவர்கள் அமரவும், பேசிக் கொண்டிருக்கவும் மட்டுமல்லாது, அப்பாவின் தேநீர்ப் போழுதுகளுக்குக் கருங்கல்லை விடவும் ஒரு நல்ல அமர்விடமும் கிடைத்தாயிற்று, கட்டில் வேப்பமரத்துக்கு வந்ததில் இருந்து அந்த இடம் ஒரு பரபரப்பான இடமாகக் காட்சி அளிக்கத் துவங்கியது, மீனா சித்தியின் கடைசிப் பயல் அந்தக் கட்டிலிலேயே கிடையாய்க் கிடந்தான், போதாத குறைக்கு ஜிம்மியும் கட்டிலுக்கு அடியில் படுத்துக் கொண்டு குலைக்கத் துவங்கியது, தாத்தா ஜிம்மிக்கென்றே ஒரு கம்பை வேப்பமரத்தில் ஒடித்து தோல் சீவி வைத்துக் கொண்டிருந்தார், அது குலைக்கும் போதெல்லாம் அந்தக் கம்பை எடுத்து அவர் ஜிம்மியை மிரட்டுவதும், அது வாலைச் சுருட்டிக் கொண்டு பயப்படுவது போல நடிப்பதுமாய் நாட்கள் நகரத் துவங்கின.

ஒரு மழைக் காலத்தின் அதிகாலைப் பொழுதில் தாத்தா இறந்து போனார், வெளியே மழை பிசுபிசுவென்று தூறிக் கொண்டிருந்தது, அப்பா அத்தை வீட்டிலிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்கை வாங்கி வந்து வேப்பமரத்தில் நாங்கள் ஊஞ்சல் கட்டும் கிளையில் தொங்க விட்டிருந்தார், முற்றக் கதவின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு வேப்பமரத்தைப் பார்த்தேன் நான், பெட்ரோமாக்ஸ் விளக்கின் ஒளியில் மழைத்துளிகளைக் கணக்கெடுத்தபடி அதன் இலைகள் அழுது வடிந்து கொண்டிருந்தன, அதன் கிளைகள் ஒடுங்கிப் போய் வீட்டில் இருந்த மனிதர்களின் முகத்தைப் போலவே மெல்ல இருட்டில் அசைந்து கொண்டிருந்தது அதன் பிம்பம். தாத்தா ஒடித்து விட்டிருந்த அதன் கிளைகள் துளிர்விடத் துவங்கி இருந்தன, தாத்தா உடல்நிலை சரியில்லாத காலத்தில் பெரும்பாலும் வேப்பமரத்தில் கிடந்த கட்டிலில் தான் படுத்திருந்தார், இப்போதும் அவரது உடலை அந்த வேப்பமரத்தின் கீழே கிடந்த கட்டிலில் தான் கிடத்தி இருந்தார்கள், அழுக்கடைந்த மஞ்சள் நிற அணில்கள் அன்று முழுவதும் அங்கு வரவேயில்லை, தாத்தாவின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் போது திரும்பி நின்று ஒரு முறை வேப்பமரத்தைப் பார்த்தேன் நான், சலனங்கள் இல்லாத அப்பாவின் முகத்தைப் போலவே அது காற்றில் இயங்கிக் கொண்டிருந்தது. பிறகு இரண்டொரு மாதங்களில் பரிதி மச்சானுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவும் அவர் அக்காவையும் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு போவதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார், அக்காவின் குழந்தைகள் இங்கிருக்கும் வரையில் நான் மறக்காமல் அவர்களுக்கு வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டிக் கொடுத்தேன், வேலை தேடிக் கொண்டிருந்த மிச்ச நாட்களில் அழுக்கடைந்த மஞ்சள் நிற அணில்களின் வாலை அவர்கள் இருவருக்கும் காட்டினேன், வேப்பமரம் மறுபடி பூக்கத் துவங்கி இருந்தது, வழக்கம் போலவே கிணற்று வாளி வேப்பம்பூக்களையும் சேர்த்து இடைவிடாது இறைத்துக் கொண்டிருந்தது, ஒரு இலையுதிர் காலத்தின் மாலையில் அக்கா வேப்பமரத்தை விட்டு வெகு தூரத்தில் இருந்த கண்காணாத நகரத்துக்குப் பயணமாக வேண்டியிருந்தது,

278067174_96bbbc2f6b

எனக்கு வேலை கிடைத்து நான் நல்ல சம்பளத்தில் இருந்தபோது அப்படி ஒருநாள் வந்து விட்டிருந்தது, முதன் முறையாக அக்கா இந்த ஊரை விட்டு வெகு தொலைவில் செல்ல வேண்டியிருந்தது குறித்து நாங்கள் அனைவருமே மிகுந்த கவலை கொண்டிருந்தோம், மாலையில் செல்ல வேண்டிய பயணத்தின் சுமையை அக்கா முதல் நாள் காலையிலேயே சுமந்து கொண்டு வீட்டுக்கு வந்திருந்தாள், வந்ததும் முதல் வேலையாக உறங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பித் தேநீர் சுட வைத்துக் கொடுத்தாள் அக்கா, வெளி அடுப்பில் அமர்ந்து கொண்டு "பழனி, அப்பா, அம்மாவை இனிமேல் நீதாண்டா பாத்துக்கணும், அப்பா ஏதாவது கோவமாச் சொன்னா எதித்துப் பேசாதடா, நம்ம அப்பா நமக்காக எம்புட்டுக் கஷ்டப்படுறாருன்னு உனக்குத் தெரியாதுடா, வாங்குற சம்பளத்த அப்பாகிட்ட அப்படியே குடுத்துருடா, உன் செலவுக்கு எவ்வளவு வேணுமோ வாங்கிக்கோ" என்று பெரிய மனுஷி போலப் பேசத் துவங்கினாள், அவள் அப்படிப் பேசுவது இதுதான் முதல் முறை, பெரும்பாலும் நான் தவறுகள் செய்கிறபோதும், அப்பா அம்மாவிடம் திட்டுக்கள் வாங்கும் போதும் அக்கா எனக்கு ஆதரவாகவே இருப்பாள், எனது தவறுகளை நியாயம் செய்து என்னை அரவணைத்துக் கொள்வாள், “சின்னப்பய தானப்பா” என்று அப்பாவிடம் எனக்காகப் பரிந்து பேசுவாள், முதல் முறையாக ஒரு முதிர்ந்த பெண்ணைப் போல அவள் பேசத் துவங்கி இருந்தாள், எனக்கு வியப்பாக இருந்தது, அவர்கள் விடை பெறுவதற்கான நேரம் நெருங்கி விட்டது, அக்கா, அப்பாவிடம் சொல்லி விட்டு அப்பாவின் காலில் விழுந்து வணங்கினாள், அம்மாவிடம் சென்று "போயிட்டு வாரேம்மா” என்று சொல்லத் துவங்கும் போதே கேவிக்கேவி அழத் துவங்கினாள், பரிதி மச்சானும், குழந்தைகளும் கூடக் கண்கலங்கி நின்றபோது நான் பேசாமல் நின்றிருந்தேன், அக்கா அழுகத் தான் வேண்டும், அழுகை சில நேரங்களில் பேரமைதியைக் கொடுக்கும், பிரிவையும், துயரையும் வடிகட்டி எடுத்துக் கொள்கிற பேராற்றல் அழுகை தான், அழுது அழுது துன்பங்களை ஆற்றிக் கொள்கிற வழிமுறையை நமக்கு இயற்கை வழங்கி இருக்கிறது, கண்ணீரின் வழியே தேங்கிக் கிடக்கிற நினைவின் சுமைகளை வெளியேற்றி விட்டு புறஉலகை எதிர்கொள்கிற ஆற்றலை அழுகை தான் மனிதர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறது, ஆகவே அக்கா அப்போதைக்கு அழுகத்தான் வேண்டும் என்று தோன்றியது. அக்காவும் அழுது முடித்து விட்டு கயல்விழியைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள், "பழனி, அம்மாவையும், அப்பாவையும் பாத்துக்கடா" என்று மெல்லிய குரலில் அக்கா சொல்லி விட்டு என்னிடம் இரண்டு நூறு ரூபாய்த் தாள்களைக் கொடுத்தாள். இப்போது அக்கா கணக்குச் சொல்லவில்லை, அவள் எனக்குப் பணம் கொடுக்கும் போதெல்லாம் கணக்கு வைத்துக் கொள்வாள், அவளது கணக்குப்படி இந்த இருநூறு ரூபாய் சேர்த்து இத்தோடு மூன்றாயியரத்து முன்னூறு ரூபாய் ஆகிறது.

india-village-greenery

வேப்பமரத்தை விட்டு வெகு தொலைவில் இருக்கிற நகரத்தை நோக்கி அவர்கள் நகர்ந்து கொண்டிருந்தபோது நான் கிணற்றடியில் நின்று கொண்டு வேப்பமரத்தைப் பார்த்தேன், அது இன்னொரு பூக்கும் காலத்தில் நின்று கொண்டிருந்தது, அதன் இலைகளில் அசைவில்லை, கிணற்றுக் கம்பங்களின் மேலே படர்ந்திருந்த அதன் கிளை குடும்பத்தில் நிகழும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது எனக்கு, காலில் இடறிய கிணற்று வாளியில் நீர் இருக்கவில்லை, ஆனால், அதனடியில் தேங்கிய ஈரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தன சில வேப்பம்பூக்கள். அக்காவின் குழந்தைகள் கயலும், மணிமொழியும் கட்டி வைத்திருந்த மண் வீடும், நுங்கு வண்டியின் கவையும் வேப்ப மரத்தின் அடியில் கிடந்தன, இனி அவர்களின் வருகைக்காக வேப்ப மரத்தின் கிளைகள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று தோன்றியது, அவர்கள் செல்லும் நகரத்தில் நிறைய மரங்கள் இருக்கலாம், ஆனாலும், அவர்களை நேசிக்கிற இந்த மண்ணில் வளர்ந்து கிளைக்கும் வேப்பமரத்தின் அருகாமையை அவர்கள் இழக்கத்தான் வேண்டும். இப்படித்தான் உலகில் பல வீடுகளின் முற்றத்து மரங்கள் தனிமையை உணர்த்தியபடி காற்றோடு உரையாடிக் கொண்டிருக்கின்றன மரங்கள்.

**********

Advertisements

Responses

 1. சிறு சிறு பத்திகளாக இருந்தால், படிக்க இன்னும் சுகமாக இருக்கும். ஒவ்வொரு பத்தியும் நீளமாக இருக்கும்போது படிக்கையில் ஒரு களைப்பு உண்டாகிறது.

 2. உங்கள் கருத்தை உறுதியாக அடுத்த பதிப்பில் செயல்முறைப்படுத்த விழைகிறேன், உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

 3. என்னுடைய நினைவுகள் மீட்டபடுகின்றன அண்ணா உங்கள் எழுத்தில் …………….

 4. வாளியின் அடிப் புறத்தில் தேங்கிய ஈரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த சில வேப்பம் பூக்களைப் போல நினைவுத் தாழ்வாரத்தில் இன்னும் ஒட்டிக் கொண்டு உயிர்ப்புடன் வேர்பிடித்து வாழ்கையை அர்த்தப் படுத்தும் நினைவுகளில் “நிழலாடும் மரங்கள்” இந்த “முற்றத்து மரங்கள்”.

  வாழ்வின் சில பக்கங்களை அழகாகச் சொல்லியுள்ளீர்கள் அறிவழகன். வாசிக்கக் காத்துக் கொண்டிருக்கிறேன் மிச்சப் பக்கங்களை.

 5. நினைவுகளை மீட்பதும், அதன் மூலம் சில கனவுகளை உருவாக்குவதும், அந்தக் கனவுகளால் இந்தச் சமூகம் பயன் பெறுவதும் தானே இலக்கியத்தின் வேலை, நன்றி அன்பு.

 6. நன்றி சரவணன், ஒரு மழைக் கவிஞனின் நெஞ்சில் இந்தப் பதிவுகள் நிலை பெற்றது குறித்து மகிழ்ச்சி, ஏனெனில் இவை சில கவிதைகளாய் நாளை உருவாக்கி எங்களை மகிழ்விக்கக் கூடும்.

 7. அன்புள்ள ஐயா அறிவழகன் அவர்களுக்கு வணக்கம், நான் உங்களை விட வயதில் பெரியவன் தான், ஆனால் உங்கள் மேன்மையான சிந்தனைகளாலும், அறிவாலும் என் போன்றவர்களை கண் கலங்க வைத்து விட்டீர்கள், இந்த கதையை படித்து முடித்ததும் ஒரு சொல்ல முடியாத கணம் நெஞ்சில் கூடியது, மண்ணையும், மனிதர்களையும் பிரிவது எத்துனை வலி தரக் கூடியது என்பதை உணர வைத்தீர்கள், நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு திடமான இலக்கியத்தை வாசிக்கும் அனுபவம் கிட்டியது, உங்கள் எழுத்துக்கள் நூலாக வெளியாகி இருக்கிறதா, அப்படி இருந்தால் எனக்கு தகவல் கொடுக்க முடியுமா, உங்கள் எழுத்தை என் பிள்ளைகளுக்கெல்லாம் அறிமுகம் செய்ய வேணும் ஐயா.

 8. இந்த கதையில் மண் வாசனை அதிகம். கிராமத்தில் இருந்து நகரம் சென்றவர்கள் இதை மிகவும் ரசிப்பார்கள். இன்னும் பல கிராமங்களில் மரங்களை மட்டுமல்ல, இயற்கையோடு ஒன்றி போவார்கள். எப்போதும் இயற்கையோடு ஒன்றி போவது நல்லது தான். இந்த கதை மிகவும் அருமை. ஆசிரியர் அவர்களுக்கு எனது நன்றி……

 9. மதிப்புக்குரிய திருச்செல்வம் ஐயா அவர்களுக்கு, வணக்கம், உங்கள் நெகிழ்வான வாழ்த்துக்கு இந்தச் சிறுவனின் நன்றி, உங்களைப் போன்றவர்களின் சிந்தையில் உயர இன்னும் கடுமையாய் உழைப்பேன் என்கிற உறுதியைத் தவிர என்னிடம் வேறெதுவும் இல்லை. நன்றியும், அன்பும்.

 10. அன்புக்குரிய கபிலன், உங்கள் வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: