கை.அறிவழகன் எழுதியவை | மே 12, 2011

"காலச்சுவடு கருத்தரங்கம்" – யாருக்கு வெற்றி?

kalachuvadu%20-logo_1304053770

இணையத்தில் நட்புக் கொண்ட அன்பும், அறிவும் நிறைந்த ஒரு சகோதரி என்னோடு இணையத்தில் பேசுவார், வழக்கமாகப் பேசுகிற சில பெண்களைப் போலவே நானும் அவ்வப்போது வணக்கமும், சில பதில்களும் சொல்வதுண்டு, காலப்போக்கில் அவர் எனது அலைபேசிக்குச் சில குறுஞ்செய்திகளை அனுப்புவார், நானும் பதிலுரைப்பதும் நிகழ்ந்தது, பிறகொருநாள் தான் மனவருத்தத்தோடு இருப்பதாகவும், “வாழவே பிடிக்கவில்லை” என்றும் ஒரு செய்தி அனுப்பி இருந்தார், எனக்குப் பகீரென்றது, “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?, உங்களுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? பொருளாதராச் சிக்கல், அல்லது உளவியல் சிக்கல் ஏதேனும் உண்டா?” என்று கேட்டேன், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா, நான் ஒருவரைக் காதலிக்கிறேன், இணையத்தில் அறிமுகமான அவர், ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக ஒரு இயக்கம் துவங்கிச் செயல்படுகிறார், அந்த இயக்கம் துவங்கிய நாட்களில் இருந்து என்னுடன் பேசுவதையும், பழகுவதையும் விட்டுவிட்டார், கேட்டால் எனது மக்களுக்கான போராட்டத்தில் களமாடுகிற பொழுது எனக்கு உறவுகள் தடையாக இருப்பதை நான் விரும்பவில்லை என்று சொல்கிறார் என்று பதில் அனுப்பினார். எனக்கு மனித மனத்தின் விருப்புகளையும், அதன் போக்குகளையும் நினைத்து ஒரே குழப்பமாக இருந்தது. தான் காதலித்த ஒரு பெண்ணை, தான் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்த ஒரு பெண்ணை விடவும் எனது மக்களுக்கான நீதியைப் பெறுவதே மகிழ்ச்சியானது, சிறப்பானது என்ற முடிவுக்கு வந்த அந்த இளைஞனைக் குறித்த வியப்பு மேலிட்டது. பிறகு அந்தச் சகோதரிக்கு சில ஆறுதல் சொற்களையும், அன்பையும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

தமிழ் இளைஞர்களின், குறிப்பாக தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் வசிக்கும் இளைஞர்களின் மனநிலையில் ஒருவிதமான குழப்பத்தையும் அச்சத்தையும் உருவாக்கியது ஈழப் போர், இன்றளவும் அவர்களில் பலர் தனது சொந்த மக்களின் இழப்பை, அவர்கள் இறந்த முறையை, அவர்களை மாற்று இனங்கள் சிறுமைப்படுத்திய கொடுமையை பல்வேறு ஊடகங்களின் வழியாகப் பார்க்க நேர்ந்த போது அவர்களின் அகவெளியில் அவர்களையும் அறியாமல் அழுத்தமும், குழப்பமும் ஒரு சேரக் குடிகொண்டன, தனது மொழியையே பேசுகிற குழந்தைகளையும், பெண்களையும் இத்தனை கொடூரமாகக் கொலை செய்கிற வன்மம் போருக்கு உண்டா? ஒரு குழந்தையின் தலையை உடைத்து அதனைக் கொன்று போடும் குண்டுகளை இந்த உலகம் எதற்காகத் தயாரிக்கிறது? ஒரு தாயின் கருவறையில் குடிகொண்டிருக்கும் கருவை அழிக்கவும், அதனை ஊடகங்களில் காட்டவுமா நாம் நாகரீகத்தை அடைந்தோம்?, வளர்த்தோம்? என்றெல்லாம் விடை தெரியாத கேள்விகள் அவர்களின் மனதைக் குடையத் துவங்கியது.

அரசியல் குறித்தும், மொழி குறித்தும் அத்தனை ஆர்வம் இல்லாத பல இளைஞர்கள் இத்தகைய ஒரு கொடுமையான சூழலுக்குப் பின்னால் நிகழ்கால அரசியலை நோக்கி நகரத் துவங்கினார்கள், உற்று நோக்கினார்கள், பங்கு பெற்றார்கள், வெற்றி அடைகிறார்கள், இன்னும் மகத்தான ஒரு தமிழ்ச் சமூகத்தைப் படைத்தளிப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு நிறையவே இருக்கிறது. பல்வேறு திராவிடக் கட்சிகளின் கொடிகளைப் பிடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் அந்தக் கட்சிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள், முழங்கினார்கள், போராடினார்கள், பல்வேறு சாதிக் கட்சிகளின் பின்னே இடைவிடாது சுற்றிய சிலரும் ஒருங்கிணைந்து சில அரசியல் இயக்கங்களை உருவாக்கினார்கள், போராடிக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படங்களும், கிரிக்கெட்டும் மட்டுமே உலகமாய் இருந்த பல மாணவர்களைப் போராட்டக் களங்களில் காண முடிந்தது, தங்களின் நெஞ்சில் நிறைந்த திரைநாயகர்களை விட்டு விட்டு அவர்கள் இறந்து போன தங்களின் இனக் குழந்தைகளுக்காகக் கொடி ஏந்தினார்கள், சாலைகளை மறித்தார்கள், தடியடி பட்டார்கள், சிறைகளுக்குள் போனார்கள், தங்கள் பெற்றோரை எதிர்த்தார்கள், தலைவர்களை நோக்கிக் குரல் எழுப்பினார்கள்.

அதுவரையில் அரசியல் மற்றும் போர் குறித்த பெரிய அளவிலான விழிப்புணர்வு இல்லாமல் இருந்த நமது படித்த இளைஞர்களிடையே இன்றைக்கு உலக அரசியலின் முழு உருவப் படத்தையும் அறிந்து வைத்திருக்கிறார்கள், ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவின் இணைச் செயலர் யார்?, அவருக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்று அறிவுறுத்துகிறார்கள், அமெரிக்க அரச தலைவரின் காரியதரிசிகளை நேரில் சந்தித்து உரையாடுகிறார்கள். உலகின் அறிவு சார் குழுக்களின் தலைவர்களை இந்த இனவழிப்பு நிகழ்வுக்கு எதிராகக் குரல் கொடுக்க வைக்கிறார்கள், கூட்டங்கள் நடத்துகிறார்கள், போர்க்குற்றவாளிகளையும், அதற்கு உடந்தையாய் இருந்தவர்களையும் துரத்தி அடிக்கிறார்கள், விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

உலகெங்கும் வாழும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கான இந்தப் போரைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் போது இடைப்படுகின்றன ஊடகங்களும், ஊடக இயக்கங்களும். அப்படியான ஒரு ஊடக இடைப்பாடு இரண்டு நாட்களுக்கு முன்னதாக நிகழ்ந்த காலச்சுவடு கருத்தரங்கப் புறக்கணிப்பு, தமிழ் மக்களின் இந்தப் பயணத்தில் காலச்சுவடுக் கருத்தரங்கப் புறக்கணிப்பு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவே கருத இடமிருக்கிறது, ஏனெனில் ஐக்கிய நாடுகள் அவையின் போர்க்குற்ற அறிக்கையின் மீது ஊடகங்களின் சார்பாக நடக்க இருந்த முதல் நிகழ்வு அது, மேலும் அறிவுசார் இயக்கங்களின் பல்வேறு முன்னோடிகளும், ஊடகவியலர்களும் இந்தக் கருத்தரங்கில் உரை நிகழ்த்தப் போவதாக காலச்சுவடு அறிவித்திருந்தது, பல்வேறு அமைப்புகளுக்கும், மனிதர்களுக்கும் அது அழைப்பு விடுத்திருந்தது. காலச்சுவட்டின் கருத்தரங்கப் புறக்கணிப்பு நிகழ்வுகளுக்குள் நாம் முழுமையாக நுழைவதற்கு முன்பாக நாம் நம் வெகுமக்கள் ஊடகங்கள் மற்றும் ஊடகவியல் உறுப்பினர்கள் குறித்தும் சிறிது தெரிந்து வைத்துக் கொண்டு செயலாற்றுவது நல்லது.

wrapper123

மக்களாட்சியின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படுகிற தமிழகத்தின் ஊடகங்கள் (அவை அச்சு ஊடகங்களாகட்டும், காட்சி ஊடகங்களாகட்டும்) எவ்வாறு நடந்து கொண்டன, தங்களின் மொழி பேசுகிற மக்களின் துன்பத்தை அவை எந்தக் குரலில் பேசின?, என்ன மாதிரியான எதிர் வினை ஆற்றின? என்ற ஒரு கேள்வியை எழுப்பினால், அதற்கான பதிலை நோக்கி நாம் தவம் கிடக்க நேரிடும், எந்த மக்களின் ஊடகங்கள் குரல் எழுப்ப வேண்டுமோ அந்த ஊடகங்கள் அமைதி காத்தன, மனித உரிமைகள் மீறப்படுவதையும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் அவர்கள் உயிருக்குப் போராடிய போதும் பல்வேறு தமிழகத்தின் வெகுமக்கள் ஊடகங்களின் அட்டைப்படங்களில் ஏதாவது ஒரு தமிழ்ப் பட நாயகியின் அரை நிர்வாணப் படங்களோ, ஒப்பனை செய்து கொண்ட நடிகரின் புகைப்படமோ தான் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.

உலகெங்கும் வாழ்கிற தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த கவனமும், நினைவும் ஒரு சின்னஞ்சிறு தீவின் மேலிருந்த போது நமது ஊடகங்கள் நடிகைகளின் மச்சங்களையும், நடிகர்களின் பட வாய்ப்புகளையும் எண்ணிக் கொண்டிருந்தன, இந்த ஒரு மந்த நிலையும், அலட்சியப் போக்கும் எப்படி வந்தது? அதற்கான காரணங்கள் பல இருந்தாலும் அவற்றில் இரண்டு மிக முக்கியக் காரணங்கள் உண்டு. ஒன்று, தமிழ், தமிழர், தமிழ்நாடு என்கிற சொற்கள் ஏகபோக முதலாளித்துவத்தின் எதிர் அணியிலேயே எப்போதும் இருந்தன, இன்னொன்று எளிய மக்களின் வலிகளையும், அவர்களின் துன்பங்களையும் எழுதிக் கொண்டிருப்பதால் அந்த ஊடகங்களுக்குக் கிடைக்கப் போவது எதுவுமில்லை, மாறாக இந்தியா என்கிற காலனி தேசம் ஒட்டு மொத்தமாக பெரு முதலாளிகளால் ஆட்சி செய்யப்படுகிறது, கட்சிகள், நாடாளுமன்றம், சட்டமன்றம், மக்காளாட்சி, புண்ணாக்கு, புளியங்காய் இவை எல்லாவற்றையும் தாண்டி சில பல பெருமுதலாளிகள் தான் விடுதலை பெற்ற இந்திய யூனியனை ஆதிக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியப் பெருமுதலாளிகள் பலர் ஒரு தனியான தேசிய இனம் எழுச்சி பெறுவதை எப்போதும் விரும்புவதில்லை, அதாவது இந்திய அரசியல் அமைப்பாளர்கள், சிந்தனை மையங்கள், இந்துத்துவ ஆற்றல்கள், காங்கிரஸ் என்கிற பெருமுதலாளிகளின் விற்பனைப் பிரதிநிதி, பாரதிய ஜனதா என்கிற பெருமுதலாளிகளின் விற்பனைப் பிரதிநிதி இன்னும் திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற சிறு பெரு முதலாளிகளின் விற்பனைப் பிரதிநிதி இப்படி யாருக்கும் ஒரு தனித் தேசிய இனம் வலிமை பெற்று விடுதலை கோருவது (அது வேறொரு நாட்டில் இருந்தாலும்) சகிக்க முடியாத மன உளைச்சலைக் கொடுத்தது, அவர்கள் ஒருங்கிணைந்த இந்தியாவில் வாழ்வதற்கும், ஒருங்கிணைந்த இந்தியாவில் தங்கள் வணிகக் கடைகளைப் பரப்பிக் உழைப்பைக் கொள்ளை அடிப்பதற்கும் எப்போதும் விரும்பினார்கள், பெருமுதலாளிகளின் விளம்பரங்களும், அவர்கள் மூலம் கிடைக்கிற வாழ்வாதாரங்களும் நமது ஊடகங்களுக்கு எப்போதும் தேவைப்பட்டது, ஆகவே அவர்கள் எதிரிகளிடத்தில் கையூட்டுக்களைப் பெற்றுக் கொண்டு கள்ளத்தனம் செய்தார்கள், மக்களின் உணர்வலைகள் உச்சத்தில் செல்லும் போது அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு கவர் ஸ்டோரியை வரைவார்கள், ஆகா, நமது ஊடகங்கள் உணர்வு பெற்று விட்டன என்று கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால் அந்தக் கவர் ஸ்டோரியின் மீது கல்லாக் கட்டி முடித்து விட்டு அப்படியே ஊற்றி மூடி விடுவார்கள், உரக்கப் பேசி உண்மைகளை உலகுக்குச் சொல்ல வேண்டிய நேரங்களில் எல்லாம் கள்ள மௌனம் சாதித்துத் தங்கள் உண்மை முகத்தை உலகிற்குக் காட்டும் இந்த ஊடகங்கள், ஒரு போதும் ஈழ மக்களின் துயர் குறித்தும், அவர்கள் கண்டுணர்ந்த அடக்குமுறைகள் குறித்தும் உளப்பூர்வமாகப் பேசியதில்லை.

அச்சு ஊடகங்கள் இப்படி என்றால் மறுபக்கம் மிகப் பெரிய அளவில் தாக்கங்களை உருவாக்கி இருக்க வேண்டிய தமிழின் காட்சி ஊடகங்கள் உலகம் முழுதையும் திரைப்படம் என்கிற ஒற்றைச் சொல்லில் அடக்கி வைத்திருக்கின்றன, தாங்க முடியாத வன்முறையை, ஊடக வன்முறையை தினந்தோறும் காண வேண்டிய ஒரு அல்லல் மிகுந்த வாழ்க்கைச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், திரைப்படங்களும், திரைப்படங்கள் சார்ந்த நிகழ்வுகளும் இல்லாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை இன்றைய தினம் தமிழில் பார்க்க முடியுமா? என்கிற ஒரு கேள்வி மிகப்பெரிய மன அழுத்தம் தரக்கூடியதாக இருக்கிறது. விருப்பம் இல்லாமல் போனால் கூட எங்காவது ஒரு மூலையில் இருந்து ஏதாவது திரைப்படத்தின் துணுக்கு மனத்திரைகளில் விழுந்து கொண்டே இருக்கிறது, எத்தனை பெரிய உளவியல் சிக்கலில் இருக்கிறோம், வளரும் குழந்தைகளும், மாணவர்களும் இதனால் எத்தகைய உளவியல் நோய்களுக்கும், சிக்கல்களுக்கும் ஆளாவார்கள், இது பற்றிய அக்கறை செலுத்த வேண்டிய அரசுகளும், அரச தலைவர்களும் இலவசத் தொலைக்காட்சிகளை வழங்கி அவற்றின் நிழலில் கமிசன்களை அடித்துக் கொண்டிருக்கிறார்கள், தமிழ், தமிழ்நாடு, தமிழர் என்றெல்லாம் முழங்கிய எந்த ஒரு தலைவனின் தொலைக்காட்சியும், தலைவியின் தொலைக்காட்சியும் ஒரு சிறப்புச் செய்தியை ஈழப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தில் தயாரித்து வழங்கியதா? கருணாநிதியின் தொலைகாட்சியிலோ, அவரது பேரன்களின் தொலைக்காட்சியிலோ, ஜெயலலிதாவின் தொலைக்காட்சியிலோ தமிழக மீனவர்களின் அவலத்தை படம் பிடித்த ஏதாவது நிகழ்வு நடந்திருக்கிறதா, ஒருவரை ஒருவர் குறை சொல்லும் உரையாடல்கள், தற்புகழ் பாடும் செய்திகளைத் தவிர வேறு எந்த ஒரு நிகழ்வையும் தங்கள் சொந்தத் தொலைக்காட்சியிலும் செய்யாத இந்த உத்தமர்களா நம் தலைவர்கள், குருதியும், சதையும் துடிக்க ஒரு இனமே அழிந்து கொண்டிருந்த போது அவற்றைக் காட்சிப்படுத்தக் கூட வக்கற்ற இப்படிப்பட்ட தலைவர்களையும், கட்சிகளையும் நாம் எப்படி உருவாக்கினோம், எங்கே தவறிழைத்தோம். இவை தான் நண்பர்களே நமது ஊடகங்கள், இந்த ஊடகங்கள் தான் மக்களாட்சியின் நான்காவது தூண்கள்.

sri-lanka-war crimesஇப்படியான ஒரு சூழலில் தான் நம்மில் ஒரு பிரிவினர் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம், விடுதலை அடைவோம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம், நமது குழந்தைகளுக்கான ஒரு அழகான உலகத்தைப் படைத்து விடுவோம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம், இப்படியான நமது நம்பிக்கைக்கிடையில் தான் காலச்சுவட்டின் கருத்தரங்கம் முக்கியத்துவம் பெறுகிறது. காலச்சுவடு முன்னெடுத்து நடத்துவதால் மட்டுமே நாம் போர்க்குற்ற அறிக்கை மீதான விவாதத்தைப் புறக்கணிக்க வேண்டுமா? என்று ஒரு கேள்வி எழுப்பப்படுமாயின் இல்லை என்பது தான் பதில். அது காலச்சுவடாகட்டும், தினமலராகட்டும், துக்ளக் ஆகட்டும், இல்லை விகடனாகட்டும், போர்க்குற்ற அறிக்கையை முன்னிறுத்தி விவாதங்களை நடத்தலாம், ஏன், போராட்டங்களைக் கூட நடத்தலாம், அவ்வளவு ஏன், தங்கபாலுவும், கனிமொழியும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை எதிர்த்துப் போராடி சிறை செல்லவில்லையா? அதுபோலவே காலச்சுவட்டின் முந்தைய வரலாற்றையும், அதன் கருத்தியல் வடிவத்தையும் நாம் கூர்ந்து கவனிக்கத் தான் வேண்டும்.

காலச்சுவடு பல்வேறு காலகட்டங்களில் ஈழப் போரை இலங்கையின் ஆட்சியாளர்களை மையப்படுத்தியே எழுதி இருக்கிறது, காலச்சுவட்டின் அட்டைப்படங்களில் ராஜபக்ஷேக்களும், சரத் பொன்சேகாக்களும் இடம் பெற்ற அளவில் ஈழ மக்களின் துயர் இடம் பிடிக்கவில்லை, "ராஜபக்ஷே – ஒரு சரித்திரத்தின் வெற்றி" என்று தலையங்கம் எழுதிப் புளகாங்கிதம் அடையும் அதன் கடைந்தெடுத்த நீதியின்மைக்கு அது போலவே பல்வேறு சான்றுகள் உண்டு, இந்திய தேசியத்தால் உருவாக்கப்பட்ட ஒரு குறுகிய திட்டத்தின் மீது கட்டமைக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு எதிரான ஆய்வுகளை மேற்கொள்ளவும், அதற்கான அறிவு ஜீவிகளை மட்டுமே அருகில் வைத்துக் கொள்ளவும் காலச்சுவடால் எப்போதும் முடியும், எனில் இப்போது என்ன ஈழ மக்களின் மீதான போர்க்குற்ற அறிக்கையின் மீது இத்தனை அக்கறையும், ஆர்வமும் என்ற கேள்வியை நாம் புறந்தள்ளி விட முடியாது. போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது பல்வேறு அமைப்புகள், தனி மனிதர்கள் போராட்டம் நடத்தினார்கள், கருத்தரங்குகள் நடத்தினார்கள், எழுதினார்கள், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பினார்கள்.

ஒரு நீதியான ஊடகமாக இருந்திருந்தால் அப்போதெல்லாம் காலச்சுவடு என்ன செய்திருக்க வேண்டும், ஒரு கருத்தரங்கம் நடத்தி இருக்க வேண்டும், ஒரு ஒருங்கிணைப்பை நடத்திக் காட்டி இருக்க வேண்டும், எம்மக்கள் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார்கள், எம்மக்களைக் காக்க வேண்டும், எம்மக்களுக்கு எதிரான பேரினக் கொடுங்கோலர்களை நாம் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் வாருங்கள் என்று முழக்கம் செய்திருக்க வேண்டும், இல்லை, போர் முடிந்து ஓராண்டு காலம் இலங்கையில் எம்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டவை எல்லாம் போர்க்குற்றங்கள் என்று ஆவணம் செய்யப் புறப்பட்டிருக்க வேண்டும், இல்லை, தலையங்கங்கள் எழுதி இருக்க வேண்டும், இவற்றை எல்லாம் செய்யாத அல்லது செய்ய மனமில்லாத காலச்சுவட்டுக்கு இன்றைக்கு என்ன புதிய அக்கறை வந்திருக்க வேண்டும், அதுதான் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் ஒரு தந்திரம், இன்றைக்கு நமது வெகு மக்கள் ஊடகங்களுக்கும் மேலும் பல ஊடகங்களுக்கும் ஈழச் சிக்கலையும், அம்மக்களின் அல்லல்படுகிற வாழ்க்கையையும் விற்றுக் காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள், ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறதா அது குறித்த தொடரைப் போடு, உண்மையிலேயே இவை குறித்துச் சொல்ல வேண்டியபோதெல்லாம் தொப்பியைப் போடு, பிறகு கல்லாக் கட்டு அல்லது உன் தயாரிப்புக்களை வணிகம் செய்து காட்சிக்கு வை. இது தான் நமது ஊடகங்களின் பணி. இவற்றில் சேராத சில ஊடகங்களும் உண்டு தப்பிப் பிழைத்த "மக்கள் தொலைக்காட்சி", "தமிழன் தொலைக்காட்சி" என்று சில.

இப்படியான ஒரு வணிக விளம்பரத்தைச் செய்வதற்குத் தான் காலச்சவடு மிக நுட்பமாகக் காய் நகர்த்தியது, இத்தனை காலம் செய்யாத கருத்தரங்கை உலக அளவில் ஐக்கிய நாடுகள் வெளியிட்ட போர்குற்ற அறிக்கை வெளியான பிறகு செய்வதற்கு காலச்சுவடு தயாரானது இப்படித்தான், போர்க்குற்ற அறிக்கை உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது, இந்தத் தாக்கம் நிச்சயம் பல விளைவுகளை உருவாக்கும், தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தில் ஓரளவு வெற்றி தரக்கூடிய இந்தப் போர்க்குற்ற அறிக்கையை எப்படி சிறந்த முறையில் விற்றுக் காசாக்கலாம் என்கிற காலச்சுவடின் தந்திரம் தான் இந்தக் கருத்தரங்கு, விற்றுக் காசாக்குவது என்பது நேரடியாகச் செய்யப்படுவது மட்டுமில்லை, நீண்ட காலத் திட்டங்களின் அடிப்படையிலும் அவற்றைச் செய்யலாம், ஒரு நல்ல பொருளாதாரச் சூழலில் முதலீடு செய்வது போல, கருத்தரங்கம் நடத்தி முதலீடு செய்து கொள்வது, பின்பு காலம் கனிந்து அதன் பலன்களை புலம்பெயர் மக்களிடமும், உலகத் தமிழர்களிடமும் கூவி விற்பது, "பாருங்கள் தமிழர்களே, நாங்கள் கருத்தரங்கம் நடத்தித் தான் உங்களுக்கு நீதி வாங்கிக் கொடுத்தோம், ஆகவே எங்கள் நூல்களை வாங்கிப் பயனடையுங்கள்" என்று அறுவடைக் காலத்திற்குத் தயாராவது.

india-srilanka-sonia

இப்படி ஒரு சூழலில் "மே பதினேழு" என்கிற இயக்கமும் அதன் மிக முக்கிய நடத்துனர்களில் ஒருவருமான திருமுருகனின் முயற்சியில் காலச்சுவடு கருத்தரங்கைப் புறக்கணிக்க வேண்டும் என்று குரல் எழுந்தது, மிகச் சன்னமானதாக காலச்சுவடால் கருதப்பட்ட இந்தக் குரல் அடைந்த வலிமையைக் கண்டு அஞ்சி நடுங்கியது இலக்கிய தர்பார், இந்தத் தர்பாரில் இருக்கும் பேரா"சிறியர்" வி. சூரியநாராயணன் அவர்களோடு மேடையைப் பகிர்ந்து கொள்வதென்பது என்னுடைய மனிதநேயச் செயல்களுக்கு எதிரானது என்று தெளிவாக ஒரு மின்னஞ்சலை எழுதிப் போட்டு விட்டு விலகி விட்டார் பால் நியூமென், ஒரு மனித உரிமை ஆர்வலருக்கான அத்தனை தகுதிகளையும் தனக்குள்ளே கொண்டிருக்கும் பால் நியூமென் சூரியநாராயணனோடு அமர்வது நீதிக்குப் புறம்பானது என்பதைக் காலம் சொல்லியது. பிறகு எஞ்சியவர்கள் பிடித்தார்கள் ஓட்டம், ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னாலும், பால் நியூமெனின் தெளிவும், உணர்வும் ஏனையவர்களை உந்தித் தள்ளியது என்று சொல்லலாம். கடைசியில் எஞ்சியிருந்தது பேரா"சிறியர்" சூரியநாராயணன் மட்டும்தான். அவரை மட்டும் வைத்துக் கொண்டு கருத்தரங்கு நடத்தினால் அது நாரத கான சபாவைப் போலவே அவாளின் சங்கீதக் கச்சேரி ஆகிவிடும் என்று கருதி ஆட்டத்தை முடித்துக் கொண்டது காலச்சுவடு.

ஆம், இந்தக் காலச்சுவடுக் கருத்தரங்கம் ஒன்றை மிகத் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது, எண்ணங்களும், சொல்லும், செயலும் ஒன்றாய் இருப்பதே நீதி என்கிற வரலாற்று உண்மைதான் அது. தான் பேசுகிற மொழிக்கு உண்மையையாகவும், அதன் மக்களுக்கு நீதியாகவும் நடந்து கொள்கிற ஒருவனால் மட்டுமே உலக நீதி குறித்து உரையாடத் தகுதி பெற்றவன். அதுமட்டுமன்றி தமிழ் இளைஞர்களின் விழிப்புணர்வு மிக நுட்பமானதாகவும், எழுச்சியோடும் இருக்கிறது என்பதையும் இந்த நிகழ்வு உணர்த்தி இருக்கிறது, காலச்சவடு மட்டுமல்ல, ஈழமக்களின் குருதியின் பெயரால் வணிகம் செய்கிற, அவர்களின் வலிகளை விற்றுக் காசாக்கிக் கொண்டிருக்கிற எந்த ஊடகமும் இனி வரும் காலங்களில் கொஞ்சம் நின்று யோசிக்கக் கூடிய ஒரு நிலையை மே பதினேழு இயக்கம் உருவாக்கி இருக்கிறது. ஈழ வணிகம் செய்யும் எல்லா ஊடகங்களுக்கும் ஆப்படித்த இந்தப் புறக்கணிப்பு தமிழ் ஊடக வரலாற்றில் பொன்னெழுத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய நன்னாள் என்றால் அது மிகையாகாது.

நீதிக்காகவும், உள்ளார்ந்த அன்புக்காகவும் செய்கிற எந்தப் பணியும் அளவிட முடியாத அக எழுச்சியையும், சோர்வற்ற நிலையையும் வழங்கும் வல்லமை கொண்டன, அப்படியான பல தமிழ் இளைஞர்களை வழியெங்கும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் கண்டிருக்கிறேன், ஏறத்தாழ அவர்கள் ஒரு மனநோய் பிடித்தவர்களைப் போல வாழ்கிறார்கள், அவர்களின் வயதை ஒத்த மற்ற இளைஞர்களும், மனிதர்களும் செய்கிற வழக்கமான பல்வேறு மகிழ்வான இயக்கங்களை அவர்கள் ஒருபுறமாய் ஒதுக்கி வைத்து விட்டு மௌனமாய் அழுது கொண்டே தங்கள் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள், இணையங்களில் எழுதும், நண்பர்கள், அமைப்புகளில் இயங்கும் தோழர்கள், அமைப்புகள் எதிலும் இல்லாத எல்லா அமைப்பின் போராட்டங்களிலும் பங்கு கொள்கிற மாணவர்கள், தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கணிப்பொறி வல்லுனர்கள், விஞ்ஞானிகள், ஊடகவியாளர்கள், இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், எழுத்தாளர்கள் கொஞ்சம் பொருளாதார வசதி வாய்ப்புகள் மிகுந்தவர்கள் ஒரு பக்கம் என்றால், அன்றாடம் உழைக்கும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், எளிய மக்கள் என்று தங்கள் பங்குக்கும் அவர்கள் தோள் கொடுக்கிறார்கள். ஏனென்றால் இவர்களின் மனங்களில் எப்போதும் மனித குலத்தைப் பற்றிய அக்கறையும், அன்பும் இருந்தது, இன்னும் இருக்கிறது. காலச்சுவடுகளே, உங்கள் மனத்திரைகளில் எப்போதும் எமது மக்களின் வலி வேதனைகளை நாங்கள் உணர்ந்ததில்லை, நீங்கள் வலிகளை ஆய்வு செய்து தீர்வு சொல்பவர்கள், நாங்கள் வலிக்கிற இடங்களில் மருந்திடுகிறவர்கள். எந்த மொழியின் வழியாகவும் நாங்கள் மக்களைச் சென்றடைகிறோம், நீங்கள் எதன் வழியாகவும் பொருளைச் சென்றடைகிறீர்கள்.

Thiru

தங்கள் குழந்தைகளின், தங்கள் பெண்களின், தங்கள் பெற்றோர்களின், தங்கள் சகோதரர்களின் மரணத்துக்கான நீதியைக் கேட்பதற்கும் ஒரு தகுதி வேண்டும் என்று இந்த உலகிற்கு உரத்துச் சொல்லிய எமது இளைஞர்கள் தன்மானமும், அறிவாற்றலும் நிரம்பிய போராளிகள், நாம் இழந்த நீதியை அவர்களின் மூலமாகவே பெறுவோம், அவர்கள் நம்மை வழிநடத்துவார்கள். அவர்கள் இறுதியில் வெற்றி பெறுவார்கள், உலகம் சமநிலை பெறுவதற்கும், உயர்வு தாழ்விலா நிலை பெறுவதற்குமான அவர்களின் போராட்டத்தில் நாம் பங்கு பெறுவோம், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தியே தீருவோம். அதற்கு சில நாட்களாகலாம் அல்லது மாதங்களாகலாம், வருடங்களாகலாம், ஏன்? யுகங்கள் கூட ஆகட்டுமே………………..

காலச்சுவட்டின் மொழியில் சொன்னால் "தர்மத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்."

*************

Advertisements

Responses

  1. //தான் பேசுகிற மொழிக்கு உண்மையையாகவும், அதன் மக்களுக்கு நீதியாகவும் நடந்து கொள்கிற ஒருவனால் மட்டுமே உலக நீதி குறித்து உரையாடத் தகுதி பெற்றவன்.//……
    அது மட்டுமல்ல,மக்களை ஆளும் தகுதியும் அவனுக்குத் தான் உள்ளது…உண்மையை உரக்க கூறி இருக்கிறீர்கள்…

  2. //தான் பேசுகிற மொழிக்கு உண்மையையாகவும், அதன் மக்களுக்கு நீதியாகவும் நடந்து கொள்கிற ஒருவனால் மட்டுமே உலக நீதி குறித்து உரையாடத் தகுதி பெற்றவன்//. …உண்மையை உரக்க கூறி இருக்கிறீர்கள்…

  3. நம்முடைய இளைஞர்களில் பெரும்பாலானோர் ஈழப்பிரச்சினையால் உந்தப்பட்டு எழுச்சி கொண்டு செயலாற்றுவதாக கற்பனை செய்துள்ளீர்கள். திரைப்படத்திலும் மட்டைப்பந்து விளையாடிலும் அவர்களில் பெரும்பாலோர் செலுத்தும் ஆர்வம் ஈழத்தமிழர் பிரச்சினையில் செலுத்துவதில்லை. ஆனால் ஈழப்பிரச்சினையில் ஆர்வம் செழுத்தி செயலாற்றும் மிகச்சில தமிழ் இளைஞர்கள், உங்கள் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காதலை தியாகம் செய்த இளைஞரைப்போல் மிகவும் வீரியம் மிக்க இளைஞர்கள். அவர்களால்தான் நம் தமிழினப்பிரச்சினை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. இன்னும் பிரச்சினையின் அவலம் புரியாமல் பங்கெடுத்துக்கொள்ளாமலிருக்கும் அனைவரும் ஒன்றுபட்டிருந்தால், நாம் எப்போதோ வெற்றி பெற்றிருப்போம். எந்த காலசுவடாலும் நம் வெற்றியை தடுத்திருக்க முடியாது.

  4. Must needed article, medias for tamil should be punished for their irresponsibility. write more to prepare and encourage our youngsters.

  5. mika arumaiyana viparamana pathivu.. nandri…

  6. தான் பேசுகிற மொழிக்கு உண்மையையாகவும், அதன் மக்களுக்கு நீதியாகவும் நடந்து கொள்கிற ஒருவனால் மட்டுமே உலக நீதி குறித்து உரையாடத் தகுதி பெற்றவன். ///உண்மையை உரக்க கூறி இருக்கிறீர்கள்…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: