கை.அறிவழகன் எழுதியவை | மே 18, 2011

மே 18 – நீதிப்பறவையின் முறிந்த சிறகில்…..

untitled

தாங்கள் எதற்காகக் கொல்லப்படுகிறோம், தங்கள் மீது எதற்காக எரிகுண்டுகளும், ஏவுகணைகளும் வீசப்படுகின்றன என்று அறியாமலேயே பல குழந்தைகள் இறந்து போனார்கள், தங்களின் மொழிக்காகவும், தங்களின் உறவுகளுக்காகவும் வேறு வழியின்றி ஆயுதங்களை ஏந்தியபடி அணிவகுத்து நின்றிருந்த ஏராளமான எமது இனத்தின் போராளிகள் இறப்பை வெகு அருகில் சந்திக்கக் காத்திருந்தார்கள், பாலூட்டியும், சீராட்டியும் தங்கள் தலைமுறையை வளர்த்துக் கொண்டிருந்த எமது தாய்மாரும், பெண்களும் தமது வாழும் உரிமைகளை கேட்டுப் போராடிய தங்கள் குழந்தைகளின் பக்கம் இருந்த காரணத்துக்காக அழிக்கப்பட்டார்கள், ஆயிரக்கணக்கான மனித உயிர்களை அவர்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப் போராடிய குற்றத்துக்காக பேரினவாத அரச ஆற்றல்களும், மண்டல வல்லாதிக்க ஆற்றல்களும் இணைந்து கொன்று குவித்தன, பாதுகாப்பு வளையங்களின் மீது குண்டுகளை எரிந்து இலங்கையின் ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்றிக் கொள்ளப் பெரும் முனைப்புடன் இருந்தார்கள், எந்தக் குற்ற உணர்வும் இல்லாத காந்தியின் தேசம் அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாய் இருந்து இன அழிப்பில் முன்னின்றது. பொது உடைமையும், சமநீதியும் கொண்ட ருஷ்ய மற்றும் சீனப் பெருந்தகை நாடுகள் ஆயுதங்களை வழங்கி அவர்களை ஆசிர்வதித்தன. அழுவதற்கும், இறந்தவர்களைப் புதைப்பதற்கும் நேரமின்றி எம்மக்கள் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார்கள், சரணடைவதற்காக வந்த பெண்களின், முதியவர்களின் நிர்வாணத்தை வேடிக்கை பார்த்தபடி உலக சமூகம் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தது, ஐக்கிய நாடுகள் அவையும், முதலாளித்துவ ரவுடி அமெரிக்காவும் செய்மதிகளில் படம் பிடிக்கக் காட்டிய அக்கறையை அந்த உயிர்களைக் காப்பதற்கும், அவர்களின் மானத்தைக் காப்பதற்கும் காட்டி இருக்கவில்லை. இப்படி ஒரு மனித அவலம் எமது கண்களின் முன்னே நிகழ்ந்து கொண்டிருந்தது, ஆனாலும், எமது உறவுகளைக் காப்பதற்கும், அவர்களின் வாழ்க்கையை உறுதி செய்வதற்கும் எம்மிடத்தில் எந்த ஒரு ஆற்றலும் அப்போது இருக்கவில்லை,

நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த அரசியல் தலைவர்கள் தங்கள் தொலைக்காட்சிகளின் கணக்கில் வரவுகளை அதிகப் படுத்துவதற்கான இழிசெயல்களில் ஈடுபட்டிருந்தார்கள், நடுவண் அரசின் கால்களைக் கழுவி அந்த அழுக்கு நீரைக் குடித்தபடி இதோ தமிழ் மக்களின் துயர் தீர்க்கும் தீர்த்தத்தை நாங்கள் குடித்துக் கொண்டிருக்கிறோம் என்று நாடகம் ஆடினார்கள், பதவிகளையும், அதிகார ஆவலையும் எறிந்து விட்டுத் தம் மக்களைக் காக்கும் ஒரு மகத்தான அரசியல் பணியைத் துறந்து “ஐயகோ” அவர்கள் அல்லும் பகலும் அதிகார மையங்களுக்காகப் பல்லக்குச் சுமந்தார்கள். அழுது புரண்டோம், “ஐயோ, ஐயோ” என்று கதறினோம், யாருடைய செவிகளிலும் எமது மக்களின் அழுகுரல் கேட்கவில்லை, செய்வதறியாது பித்துப் பிடித்தவர்களைப் போலப் புலம்பினோம், ஏதாவது அதிசயங்கள் நிகழுமா என்று கடைசிக் குழந்தை சாகும்வரை நாங்கள் காத்திருந்தோம். ஆனாலும், அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்ட அந்த ஆயிரமாயிரம் உயிர்களை எமது அரசியல் தலைவர்களும், இயக்கங்களும் அடகு வைத்துத் தங்கள் வாக்கு வங்கியை வளப்படுத்த முயன்றார்கள்.உன்னதமான திலீபன் போன்ற எம்மின இளைஞர்களின் உண்ணாநோன்பை எள்ளி நகையாடி கடற்கரைக் காற்றில் காட்சியளித்தார்கள், செய்தித் தாள்களில் விளம்பரம் செய்தார்கள், இன்னும் சொல்ல முடியாத கொடுமைகளை எல்லாம் அரங்கேற்றினார்கள் எமது மக்களின் உயிர்களைக் காக்கும் மாபெரும் பணியைச் செய்ய வேண்டிய மாண்புமிகு அரசியல்வாதிகள். இறுதியில் ஏறக்குறைய நாற்பதாயிரம் உயிர்களைக் காவு கொண்டு தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டார்கள். மழை முடிந்து தூவானம் வீழ்வதாகத் தமிழ் பேசினார்கள்.

aaee7d5ee17c879d1883ff8e3e00cd6c

இன்றைக்கு அந்த அழிவு நிகழ்ந்து சரியாக இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது, ஆறாத ரணங்களாய் மாறிப் போய் எமது நெஞ்சில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அன்றைய நாளின் கோரக் காட்சிகள் மனப் பிறழ்வு கொண்ட மனிதர்களாய் எம்மை மாற்றி இருக்கிறது, அநீதியான எம்மக்களின் மரணக் காட்சிகளைக் கண்டு ஒன்றும் செய்ய இயலாத பாவிகளாய் நாங்கள் பரிதவித்திருந்தோம், ஆனால் போராட்டமும், போராட்டங்களுக்கான காரணிகளும் அழியாமல் அப்படியே இருக்கிறது, புலிகளால் தான் பேரழிவு என்றும், அவர்கள் அப்படிச் செய்தார்கள், இப்படிச் செய்தார்கள் என்றும் ஒரு கூட்டம் எப்போதும் சுற்றி அலைந்தபடியே இருக்கிறது, அந்தக் கூட்டத்தின் அழுக்கடைந்த கண்களில் இந்த விடுதலைப் போராட்டம் துவங்கப்பட்டதன் காரணிகளை நோக்கியோ, அதன் அடிப்படைகளை நோக்கியோ இருப்பதில்லை, பேரினவாதத்தின் கொடுமைகளும், அடக்குமுறைகளும், மிகுதியாக இருக்கிற வர்க்கச் சிந்தனைகளால் கட்டப்படுகிற அதிகார மையங்களும் சிறுபான்மை இன மக்களின் வாழ்வுரிமையையும், மொழி உரிமையையும் சிதைப்பதால் உருவாகிற இத்தகைய விடுதலைப் போராட்டத்தை, அதன் அடிப்படை நியாயங்களை இந்தக் கூட்டம் உணர்ந்து கொண்டது போலத் தெரியவில்லை. புலிகளின் ஆயுதப் போராட்டம் தான் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அடக்குமுறை வரலாற்றையும், மொழிச் சிறுமையையும் தோற்றுவித்தது போலப் பேசும் இந்த அறிவு ஜீவிகள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என்றும், நடுநிலைவாதிகள் என்றும், மனித உரிமை ஆர்வலர்கள் எனவும் பெயரிட்டுக் கொள்கின்றனர், இத்தனை மனித உயிர்கள் அழிந்து கிடக்கிற ஒரு இனத்தின் உறுப்பினர்களுக்கு இவர்கள் இசங்களைக் குறித்த பாடங்களை அவ்வப்போது எடுத்துக்கொண்டிருப்பது எதிரின் நேரடித் தாக்குதல்களை விடவும் கொடியது என்பதை நம்மால் நன்கு உணர முடியும்.

நாம் வரலாற்றில் ஒரு இக்கட்டான காலத்தில் நின்று கொண்டிருக்கிறோம், நமது மொழி மற்றும் கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், நமது இளைய தலைமுறை மனிதர்களை உறுதியும், ஆற்றலும் கொண்ட நன்மதிப்புள்ள சமூக உறுப்பினர்களாய் மாற்றும் மிகப்பெரிய கடமையும், தேவையும் நமது வாழ்க்கைப் பாதையின் முன்னே இருக்கிறது, நாம் மிகக் கடுமையாகக் கோலோச்சுகின்ற முதலாளித்துவப் பண்புகளின் இடையே நசிக்கப்படுகிற அல்லது விரட்டப்படுகிற மனிதர்களாய் நின்று கொண்டிருக்கிறோம், நமது அறிவும், பண்புகளும் முதலாளித்துவப் பண்புகளோடு இணையாதிருப்பதே நமது அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் பெரும்பாலும் காரணமாய் இருக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில் நம்மை வழி நடத்தும் அரசியல் வழிமுறைகள் முழுக்க முழுக்க ஒரு வணிக மயப்படுத்தப்பட்ட சூழலில் உயர்ந்து நிற்கின்றன, பொருள் ஈட்டுவதும், வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிச் சுக போக வாழ்க்கை வாழ்வதே இப்பிறப்பின் நோக்கம் என்பது போல முதலாளித்துவத்தின் நச்சுக்கரங்கள் நமக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தபடியே நம்மிடை வாழ்கின்றன, சக மனிதனின் வலிகளைப் புரிந்து கொள்ளவும், அறம் சார்ந்த வாழ்க்கை முறையை அடையவும் வழிகாட்ட வேண்டிய கல்வி பொலிதீன் பைகளில் வைத்து விற்கப்படுகிறது, என்ன செய்தேனும் வாழ்க்கையில் பணக்காரனாகி விட வேண்டும் என்கிற அறிவுரைகளைக் கேட்டபடியே தான் நமது குழந்தைகள் வளர்கிறார்கள், இவற்றை எல்லாம் கடந்து ஒரு இனத்தின் விடுதலையைக் கேட்டு நாம் போராடுகிறோம், எங்கள் வாழ்க்கை முறை வேறானது, “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்” உயர் வழி வாழ்க்கையை வாழ நாங்கள் ஒரு நாடடைய வேண்டும் என்று நீண்ட நாட்களாய் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம், நமக்கு கருணாநிதி விடுதலை வாங்கித் தருவார், ஜெயலலிதா விடுதலை வாங்கித் தருவார், நாம் காங்கிரஸ் கட்சியை அழித்தால் விடுதலை பெறலாம், நாம் பாரதீய ஜனதாக் கட்சியை அழித்தால் விடுதலை பெறலாம், நாம் அமெரிக்காவைச் சார்ந்திருந்தால் விடுதலை பெறலாம், நாம் சீனாவின் மனதை மாற்றி விட்டால் விடுதலை பெற்று விடலாம் என்பது மாதிரியான பல்வேறு சார்புச் சிந்தனைகளின் தொகுப்பே நமது பல்வேறு தோல்விகளுக்கும் காரணமாக அமைந்து விடுவது மிக நுட்பமாகக் கவனிக்கப்பட வேண்டியது. நாம் நமக்கான அரசியல் வழிமுறைகளையும், மாற்று ஆற்றல்களையும் அடையாளம் காணுவதும், அந்த அரசியல் வழிமுறைகளின் வழியாகப் பயணம் செய்வதும் தான் இன்றைய இன்றியமையாத தேவையாக இருக்கிறது. மிக முக்கியமாக விடுதலை குறித்துப் பேசும் நம்மில் பலர் விடுதலைக்குத் தேவையான அரசியலில் பங்கேற்பது அரிதாகவே நிகழ்கிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

justice21

இவை எல்லாவற்றினும் மேலாக நாம் காரணங்கள் ஏதுமன்றி இறந்து போன நமது குழந்தைகள், பெண்கள் மற்றும் எண்ணற்ற இளைஞர்களின் உயிருக்கான நீதியைப் பெறுவதற்காகப் போராட வேண்டியிருக்கிறது, அரசியல் வழியான, பண்பாட்டு வழியான, மொழி வழியான நமது விடுதலை என்பது முதலாளித்துவச் சிந்தனைகளை விடுத்து நாம் வெளியேறும் போது தான் வலிமையடைகிறது, பெரும் பின்னடைவாக நமது இளைஞர்களின் பெரும் பகுதியினர் இன்றைக்குத் திரைப்படம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த ஒரு வாழ்க்கை முறைக்கு அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், அவர்களின் சிந்தனைகளில் மொழி குறித்தும், பண்பாடுகள் குறித்தும் மிகப்பெரிய இடைவெளி உருவாக்கப்பட்டிருக்கிறது, இந்த இடைவெளி முதலாளித்துவ ஊடகங்களாலும், வளர்ப்பு முறைகளாலும் தொடர்ந்து வளர்க்கப்படுவது அச்சம் தருவதாகவும், வருங்காலம் குறித்த எச்சரிக்கையாகவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும், இருப்பினும் நம்பிக்கை தரும் நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டே வருவது இந்த நீண்ட போராட்டத்தின் பாதையை முடிவு செய்யப் போதுமானதாக இருக்கும்படி எதிர்காலத்தைக் கட்டமைப்பது நமது கைகளில் இருக்கிறது. எமது மக்கள் நிலங்களைக் கொள்ளையிட்டு எல்லைகளை விரிவு செய்ய வேண்டும் என்று ஒருபோதும் போரிடவில்லை, எமது மக்கள் மாற்று இனத்தாரின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களை இயற்றவில்லை, எமது மக்கள் உனது மொழி தடை செய்யப்படுகிறது என்று யாரிடத்திலும் சொல்லவில்லை, அவர்கள் தங்களின் மொழி, கலை மற்றும் பண்பாட்டு வழியிலான அடிப்படை உரிமைகளை வேண்டி அமைதியாகத் தங்கள் குரலை உயர்த்தினார்கள், ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் அகிம்சைவழியில் போராடினார்கள், தங்களின் மறுக்கப்பட்ட நியாயங்களுக்காக அவர்கள் நிகழ்காலத்தை இழந்தார்கள், எதிர் காலத்தை நோக்கிய கனவுகளோடு ஊர்வலம் போனார்கள், ஆயினும் எமது மக்களின் குரல், குரல்வளை நெரிக்கப்பட்ட ஒரு முனகலாக மாற்றப்பட்டது, அரசியல் தீர்வுகளை நோக்கி அலைபாய்ந்தார்கள் எம்மக்கள், நேசக்கரம் நீட்டி இறைஞ்சினார்கள், ஆயினும் ஆதிக்க மனங்களும், அரசக் கனவுகளும் அவர்களின் குரலைக் கேட்க மறுத்து அவர்களை ஏளனம் செய்தார்கள், வீதிகளில் கொன்று குவித்தார்கள், கூட்டம் கூட்டமாக எரித்தார்கள், புதைத்தார்கள், எங்கள் நாட்டின் குடிமக்கள் என்று சொல்லிக் கொண்டே அவர்களைப் பாலியல் வல்லுறவு கொண்டார்கள்.

தான் வாழும் சமூகத்தின் மீது இப்படிக் கட்டவிழ்க்கப்படும் வன்முறையை எதிர் கொள்ள இவ்வுலகின் எல்லா இளைஞர்களும் கைக்கொள்கிற வழிமுறையை எமது இளைஞர்களும் பின்பற்றினார்கள், தனது குழந்தைகளின் மீது ஏவப்படும் வன்முறையை எதிர் கொள்ள அல்லது தற்காத்துக் கொள்ள எடுக்கப்பட்ட ஆயுதங்களுக்குப் பெயர் தீவிரவாதிகளின் துப்பாக்கியாகவும், குழந்தைகளின், பெண்களின் மீது ஏவப்பட்ட வன்முறைக்குப் பெயர் இறையான்மையாகவும் பொருளுரைக்கப்படுவதை எத்தகைய கோட்பாடுகளால் எதிர் கொள்வது. அரசியல் வழிமுறைகளின் பெயரால், இசங்களின் பெயரால், கோட்பாடுகளின் பெயரால் மனித உணர்வுகளை எப்போதும் யாராலும் புரிந்து கொள்வது இயலாது என்கிற ஒரே ஒரு உண்மையைத் தான் இத்தகைய முரண்பாடுகள் உணர்த்துகின்றன, கோட்பாடுகளை மீறிய, கோட்பாடுகளை உடைக்கிற ஆற்றலாக எஞ்சி இருக்கும் மனித மனமும் அதன் எல்லையில்லாத ஆற்றலும் தான் பேரண்டத்தின் உள்ளடக்கமாக நிறைந்து கிடக்கிறது.

Picjaffna

ஆயினும், நாங்கள் போராடுவதை நிறுத்துவதாய் இல்லை, போராடாத எந்த இனமும் விடுதலையை நோக்கிப் பயணிக்க முடியாது என்று நாங்கள் அறிவோம், போராடாத எந்த இனமும் பெற்ற வாழ்க்கை அத்தனை இனிமையாய் இருக்க இயலாது என்பதை நாங்கள் உணர்கிறோம், போராட்டம் தான் வாழ்க்கையின் முழுமையை எமக்கு உணர்த்துகிறது, போராட்டங்கள் தான் மனிதனின் தேவைகளை, மனித இனத்தின் வரலாற்றுப் பாதை எங்கும் நிரம்பி இருக்கிறது, வாழ்க்கை என்பதே வாழ்வதற்கான போராட்டம் என்று தான் பொருள் கொள்ளப்படுகிறது, அக மனிதனுக்கும், புறச் சூழல்களுக்கும் இடைப்பட்ட போராட்டம் தான் வாழ்க்கையாக மனிதனால் உணரப்படுகிறது. எமது விடுதலை என்பது சிறைகளை உடைத்து வெளியேறுவதில் இல்லை, எமது விடுதலை என்பது சிறைகளே இல்லாத தூய்மையான சமூகத்தைக் கட்டமைப்பது என்று நாங்கள் அறிவோம், எங்கள் அடிப்படை உரிமைகள் யாரும் எங்களுக்கு வழங்கும் யாசகம் அல்ல என்பதையும், நாங்களே உருவாக்கிக் கொள்கிற மானம் நிரம்பிய எமது தேவைக்கான மனநிலை என்பதையும் நாங்கள் அறிவோம்.

எமது இருப்பும், எமது மொழியின் இருப்பும் நாங்கள் சந்திக்கிற முரண்பாடுகளையும், வலிகளையும் கடந்து எங்களால் உருவாக்கப்படுகிற ஒரு மகிழ்வான, ஏற்றதாழ்வுகள் இல்லாத சமூகத்தின் கைகளில் தான் அடங்கி இருக்கிறது, அந்த மேம்பட்ட உயிர் வாழ்க்கையை நேசிக்கிற ஒரு வாழ்க்கைக்காக நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம், போர்க்களத்தில் நின்று களமாடிய எங்கள் இனத்தின் தலைவர்களும், போராளிகளும் கூட இத்தகைய ஒரு சமூகத்தைக் கட்டமைத்து அதன் பரப்புகளில் நின்றே இந்தப் பொருள் உலகோடு போராடினார்கள் என்பதை நாங்கள் எல்லோரையும் விட நன்கறிவோம், ஆம், கடைசியாய் எங்களிடம் இருந்த இரண்டு விமானங்களால் உங்கள் குழந்தைகளின் மீதும் அவர்களின் வாழிடங்களின் மீதும் குண்டுகளை எறிந்திருக்க முடியும், ஆயினும் எங்கள் எதிரிகளே, நாங்கள் உங்கள் படைகளை மட்டுமே குறி வைத்து மடிந்து போனோம். அப்படித்தான் செய்ய வேண்டும் என்று எங்களுக்கு ஆணையிடப்பட்டிருந்தது. அதுதான் எங்கள் பண்பாடும் கூட. விடுதலைக்குப் போராடிய ஒரு தலைவனின் அல்லது தனது சொந்தக் குடிமகளாகிய ஒரு முதுபெரும் தாயின் இறப்பைச் சிறுமை செய்து கல்லறைகளில் நாய்களை சுட்டுப் போடுகிற ஒரு மிகக் கேவலமான இனக் குழுவிடம் அதிகாரப் பகிர்வையும், விடுதலை பெற்ற வாழ்க்கை முறையையும் நம்மால் எக்காலத்திலும் பெற முடியாது என்கிற உண்மையை நாம் உணர்ந்தே ஆக வேண்டும்.

உலகம் முழுவதும் இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது இனப் படுகொலை என்றும், அந்த நாடும் அதன் ஆட்சியாளர்களும் போர்க்குற்றம் இழைத்தவர்கள் என்றும் பரவலான ஒரு விழிப்புணர்வை நமது புதிய தலைமுறை வெற்றிகரமாகச் செய்து வரும் இந்த வேளையில், அந்த விழிப்புணர்வை போராட்ட வடிவங்களாக மாற்ற வேண்டிய கடமையும் தேவையும் தெற்கு ஆசியாவில் வேறு எந்த மக்களையும் நமக்கே அதிகம் இருக்கிறது, இந்த நாள் வாழும் காலத்தில் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு எதிராக மிகப் பெரிய அநீதி இழைக்கப்பட்ட நாள், இந்த நாள் மனித சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களைப் பின்னோக்கித் தள்ளிய ஒரு நாள், இந்த நாளில் நமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் துடைக்க வேண்டிய கடமையில் இருந்து நாம் தவறினால் நெடுங்கால மொழி ஒன்றுக்கும், மிகப் பழமையான மொழி ஒன்றுக்கும் நாமே இழைத்துக் கொண்ட அநீதியாக மனிதகுல வரலாற்றில் அது பதிவு செய்யப்படும். இன்னும் விடுபடமுடியாத முட்கம்பி வேலிகளுக்குப் பின்னே வாழும் நமது உறவுகளின் விடுதலையும், எதிர்கால வாழ்க்கையும் எல்லா வசதிகளையும் பெற்று இவ்வுலகில் வாழும் நம்மைப் போன்ற மனிதர்களின் கைகளில் தான் அடங்கி இருக்கிறது, நாம் ஒரு சின்னஞ்சிறிய தீவில் நமது விடுதலையைத் தொலைத்தோம், நமது நிலங்களை இழந்தோம், நமக்கான நெல் வயல்களையும், கடல் வளங்களையும் பேரினவாதத்திடம் பறி கொடுத்து விட்டு அனாதைகளாக சிறைக் கைதிகளைப் போல அடைபட்டிருக்கும் எமது தமிழ் மக்களின் வாழ்வுரிமையை மீட்கும் ஒரு உன்னதமான வேள்வியில் நாம் இருக்கிறோம், எந்தச் சிறு தீவில் நாம் தோற்கடிக்கப்பட்டதாக அண்மைய வரலாறு சொல்கிறதோ, அந்தச் சிறு தீவின் ஒரு பகுதியில் தான் நமது ஒட்டு மொத்த மொழிக்கும் பண்பாடுகளுக்குமான எஞ்சியிருக்கும் விடுதலை ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. என்ன விலை கொடுத்தேனும் அந்த விடுதலையை நாம் அடைந்தே தீர வேண்டும் என்கிற சூளுரையை ஒவ்வொரு தமிழனும் இந்த நாளில் ஏற்றுக் கொள்ள வேண்டும், நீதியை நோக்கிய பயணத்தில் நாம் உறுதியாய் வெற்றி பெறுவோம்.

VP0522

“தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்”

************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: