கை.அறிவழகன் எழுதியவை | ஜூன் 8, 2011

ஊழலும், இந்திய சமூகமும்.

mumbai_police_taking_bribes

“வண்டிய சைடுல நிறுத்து”,

“லைசென்ஸ், ஆர் சி புக், இன்சூரன்ஸ் எல்லா டாகுமென்ட்ஸையும் எடு”

“சார், அவசர வேலையா வந்தேன், எடுத்துட்டு வரலை”

“அப்போ முன்னூறு ரூபாய் பைன் கட்டு”

“சார், மாசக் கடைசி அவ்வளவு பணம் இல்லை”

“எவ்வளவு இருக்கு?”

“சார், அம்பது ரூபா தான் இருக்கு”

“அம்பது ரூபாயா?, எங்கள என்ன பிச்சைக்காரன்னு நினைச்சியா?”

“சாரி, சார், அவ்வளவு தான் இருக்கு”

“ஐயாகிட்டப் போனா பைன் கட்டாம விட மாட்டார்”

“பாத்துச் செய்ங்க சார்”

“நூறு ரூபாய் குடுத்துட்டு வண்டிய எடுப்பா”

தொப்பியையோ, கையில் இருக்கும் கையேட்டையோ விரிப்பார் போக்குவரத்துக் காவலர், பணம் அதில் செலுத்தப்பட்டவுடன் காட்சி இனிதே முடிவடையும், தப்பித்த மனநிலையோடு பயணியும், கிடைத்த மனநிலையோடு காவலரும் தங்கள் அடுத்த கட்ட சமூகப் பங்களிப்பில் தீவிரமாக இறங்கி விடுவார்கள்.

இந்தக் காட்சி இந்தியாவின் எல்லா நகரச் சாலைகளிலும் காணக் கிடைக்கிற ஒரு சராசரி இந்தியக் காட்சி, இதுதான் சராசரி இந்தியனின் ஊழல் குறித்த மெய்யுணர்வு, சராசரி இந்தியனின் மனநிலையில் ஊழல் என்பது ஒரு வாய்ப்பு, அது தப்பிக்கக் கிடைத்ததாகவும் இருக்கலாம், அல்லது பொருளீட்டக் கிடைத்ததாகவும் இருக்கலாம், இந்தக் காட்சியின் பின்னணியில் தனி மனித ஒழுக்கம், விதி மீறல்கள், விதி மீறலை ஊக்குவிக்கும் அரசியலின் உறுப்புக்கள், விதி மீறலின் மீதான அலட்சியப் போக்கு, பரஸ்பர நன்மை அடைவதைப் போன்ற தோற்றம் என்று பல்வேறு சிக்கலான உளவியல் கூறுகளை நாம் அடையாளம் காண முடியும். இத்தகைய இந்திய சமூகத்தில் தான் இன்றைக்கு சில தனி மனிதர்கள் தங்கள் உண்ணா நோன்பினாலும், ஊடக அதிரடி விளம்பரங்களினாலும் இந்தியாவில் இருந்து ஊழலை விரட்டி அடிக்கப் போவதாக கதை கட்டிக் கொண்டிருக்கிறார்கள், அந்தக் கதையை திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசைக்கோர்ப்பு என்று முடிந்த மட்டும் செம்மைப்படுத்திக் கல்லாக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் நமது காட்சி மற்றும் அச்சு ஊடக முதலாளிகள்.

இந்திய சமூகம் என்பது இன்றைக்கு உலகப் பொது மயமாக்கலின் மிகப்பெரிய சோதனைக் களம், இந்த சோதனைக் களத்தில் பல்வேறு இயந்திரங்களைக் கொண்டு நடத்தப்படும் சோதனை நிகழ்வுகளில் பரிதாபமாக விழி பிதுங்கி நின்று கொண்டிருப்பவன் உழைக்கும் மனிதனும், ஒடுக்கப்பட்ட மனிதனும் தான்.முதலாளித்துவத்தின் சிந்தனைகளை விதைத்து மிகப்பெரிய நுகர்வு மனநிலையை உருவாக்கி அதன் பயன்களை அறுவடை செய்து கொள்வதில் பன்னாட்டு அரசுகளில் இருந்து, நிறுவனங்கள் மற்றும் கொள்கைப் பரப்பு இயக்கங்கள் வரை தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன, காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் இருந்து அரசியல், சமூக மற்றும் பொருளாதாரத் தளங்களில் பல்வேறு வினோதமான மாற்றங்களையும், உள்ளீடுகளையும் இந்திய சமூக அடுக்குகள் சந்தித்தபடியே ஒரு இலக்கற்ற பயணத்தை மேற்கொண்டுள்ளதன் பின்னணியில் பல்வேறு கலவையான கோட்பாடுகளின் எதிரொலிப்பும், சாதி மற்றும் மதங்களின் பங்களிப்பும் நீண்டு தொடர்கின்றன.

காலனி ஆதிக்கத்துக்குப் பிந்தைய நவீன முதலாளித்துவத்தின் வளர்ச்சியும், காலம் காலமாகப் போற்றிப் பேணப்பட்டு வரும் மரபுசார் சிந்தனைகளும் ஒன்றையொன்று முந்திச் செல்வதும், எஞ்சிய மனநிலையைக் கொண்டு அரசியலின் துணையுடன் ஒரு பரந்து பட்ட தேசத்தை உருவாக்குவதும் தன்னிச்சையான ஒரு நிகழ்வைப் போலத் தோற்றம் கொண்டிருந்தாலும், இந்திய சமூகத்தில், இதன் பின்னணியில் நிகழ்கிற சிதைவுகளும், விளைவுகளும் புறந்தள்ள முடியாத ஒரு பரிதாப நிலையில் மையம் கொண்டிருப்பதை எந்த ஒரு அறிவார்ந்த இந்தியனும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இன்றைக்கு இருக்கிற இந்திய தேசிய மனநிலை என்பது நாட்டுப் பற்று என்கிற கற்களைக் கொண்டு இரண்டு நூற்றாண்டுகளுக்குள் கட்டி அமைக்கப்பட்ட ஒரு கூட்டுச் சமூக மனநிலை, பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய இந்தியாவின் நிலவியல் பல்வேறு சிற்றரசர்களையும், சமஸ்தானங்களையும், நிலப்பிரபுக்களின் மேலாண்மையையும் தழுவி இருந்தது, மிகப்பரந்து பட்ட தேசிய மனநிலையோ, கற்பிதங்களோ இல்லாத அன்றைய இந்தியாவின் ஒரே பொதுவான பண்பு மதம் மட்டுமே, காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரையில் வாழ்ந்து வருகிற பல்வேறு இன மற்றும் மொழிக் குழுவினர் தங்களுக்கே உரிய தனிப்பட்ட பண்புகளோடும், கலாச்சார வெளிகளோடும் வாழ்க்கையை எதிர் கொண்டார்கள்.

dress1_1

ஒவ்வொரு இன மொழிக் குழுவுக்குமான தனித்தனியான வரலாற்றை காலனி ஆதிக்கம் அடித்து நொறுக்கியது, மேலோங்கியது, காலனி ஆதிக்கம் என்பது வெறும் ஆங்கில ஆட்சியை மட்டும் குறிப்பதாகக் கருத இயலாது, அக்காலத்தில் நிகழ்ந்த முதலாளித்துவ மனநிலை எழுச்சியின் குறியீடாகவே பல்வேறு நாடுகளின் காலனி ஆதிக்க காலத்தை நாம் கருத முடியும். வட மற்றும் தென்னிந்திய நகரங்கள் பலவற்றில் மாறுபட்ட பண்பாடு, கலை மற்றும் கலாச்சார நம்பிக்கைகளைக் கொண்ட தனிச்சிறப்பு மிக்க வாழ்க்கை நிலை நிலவி வந்தது, நெகிழ்வுத் தன்மையும், உள்வாங்கு திறனும் பெருமளவில் கொண்டிருந்த இந்தச் சமூகங்கள் மதம் மற்றும் அது சார்ந்த நம்பிக்கைகளைத் தவிர வேறெவற்றையும் பெரிதாகப் பொருட்படுத்துகிற மனநிலையில் இல்லை, இந்தச் சமூகங்களின் அடித்தட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கை மிகக் கடினமானதாகவும், பிழைத்தலுக்கான நெருக்கடியை உள்ளடக்கியதாகவும் இருந்தது.

ஏறத்தாழ இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் இருந்து தொடர்ந்து முடியாட்சி அல்லது மன்னராட்சியின் ஆதிக்கத்தில் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட பல்வேறு இனக்குழுக்கள் எப்போதாகிலும் எழுச்சியான மனநிலைக்கு உந்தப்பட்டு ஆட்சி அதிகாரத்துக்கு எதிராகக் குரல் எழுப்பத் தயாரான போது அந்தக் குரலை ஒடுக்குவதற்கும், நீர்க்கச் செய்வதற்கும் மதகுருக்கள் அல்லது சாமியார்களின் பங்கு கணிசமான அளவில் இருந்து வந்திருப்பதை ஒவ்வொரு இந்திய நிலப்பகுதி மன்னர்களின் அரசவையிலும், ஆட்சி அமைப்பிலும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். இது இந்து மதத்திற்கு மட்டுமன்றி இந்திய சமூகங்களை ஆட்சி செலுத்திய வெவ்வேறு மத நம்பிக்கைகள் கொண்ட ஆட்சிக்கும் பொருந்தும்.

இந்திய சமூகத்தில் அல்லது இந்திய சமூகம் என்று குறியீடு செய்யப்படுகிற இன்றைய நவீன இந்தியாவில் ஊழல் என்கிற சொல்லாடலும், அதன் வெவ்வேறு வடிவங்களும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டவை அல்ல, மாறாக முடியாட்சிக் காலங்களில் இருந்தே நிகழ்ந்து வரும் உழைப்புச் சுரண்டலில் இருந்து துவங்கி காலனியாதிக்க காலத்தில் நிகழ்ந்த அறிவுச் சுரண்டல் வரை அவை பரிணாம வளர்ச்சி கொண்டிருந்தன. நவீன இந்தியாவின் அலைக்கற்றை ஊழலைப் போலவே மன்னராட்சிக் காலங்களில் கஜானா ஊழல்கள், வைக்கோல் போர் ஊழல்கள், நில அபகரிப்பு ஊழல்கள் வரை வெகு விமரிசையாகவே நடைபெற்றுக் கொண்டிருந்தன என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் நிலங்களைப் பறித்து பூசாரிகளுக்கு வழங்கிய இறவாப் புகழ் பெற்ற சோழப் பேரரசர்களின் ஊழலை எதிர்த்து அரண்மனை வாயிலில் தலையை அறுத்துத் தனியே எடுத்து வைத்த உழைக்கும் வர்க்கப் போராளிகளின் குருதியில் தான் பண்டைய இந்தியாவின் வரலாறு குறித்து வைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய உழைக்கும் மக்களின் வரலாற்றை மட்டுறுத்தி முடியரசர்களின் போரையும், நில ஆக்கிரமிப்பு வெறியையும் இந்திய வரலாறாக மாற்றி அமைத்ததில் மெக்காலேயின் கல்வித் திட்டம் பெரும் பங்காற்றி இருக்கிறது, காந்தியார் முதற்கொண்டு இன்றைய சமச்சீர் கல்வித் திட்டங்கள் வரையில் இந்திய வரலாற்றின் உண்மைத் தன்மையை அல்லது அதன் பின்னே ஒளிந்திருக்கிற குரல்வளை நெரிக்கப்பட்ட போது மனிதனின் வாழ்க்கை முறையை நமக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை, மாறாக இன்றளவும் அவை பேரரசர்களின் போர் வெற்றியையும், அவர்கள் மக்களுக்கு வழங்கிய சலுகைகளையும் துதி பாடும் தனி மனித வழிபாட்டு சாதனங்களாகவே இருப்பதை இந்திய அறிவுலக ஆசான்கள் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

Baba-Ramdev

பல்வேறு கோட்பாடுகளையும், அரசியல் வழிமுறைகளையும் கொண்டிருந்த விடுதலை அடைந்த இந்தியாவில் நூற்றுக் கணக்கில் இனக்குழுக்களும், மொழிக்குழுக்களும் நிலைபெற்றிருந்தன, வெவ்வேறு மனநிலையும், வாழ்க்கை முறையும் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்த மனிதக் குழுக்களை தொகுக்கும் ஒரு மிகக் கடினமான பொறுப்பை தப்பிச் செல்லும் போதோ அல்லது விட்டுச் செல்லும் போதோ ஆங்கில ஆட்சியாளர்கள் தங்களை எதிர்த்த அல்லது அடிவருடிப் பிழைத்த சில குறிப்பிட்ட அமைப்புகளிடம் கையளித்துச் சென்றார்கள், குறுகிய கால இடைவெளியில் இந்த முரண்களை இணைக்கும் சட்ட திட்டங்களை இயற்றும் பொறுப்பை ஏற்றவர்கள் அதே அமைப்புகளில் இருந்து வந்தது தவிர்க்க இயலாத ஒரு நிகழ்வாக மாறியது.

முடியாட்சியின் போது உழைப்புச் சுரண்டலிலும், அறிவுச் சுரண்டலிலும் குடி கொண்டிருந்த ஊழல், காலனியாதிக்கத்தின் போது ஒட்டு மொத்த வளங்களையும் சுரண்டுவதாக மாறியது, ஏறத்தாழ அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார நிலைகளில் எந்தவொரு நிலைத்த கட்டுமான அமைப்பும், மூலதனங்களும் இல்லாத ஒரு சூழலில் நூற்றுக்கு மேற்பட்ட இன மற்றும் மொழிக் குழுக்களின் ஒருங்கிணைந்த தேசியம் உருவாக்கப்பட்டது, இப்படி ஒரு வெற்றிடத்தில் முரண்களால் கட்டப்பட்ட தேசத்தைக் கொண்டு செலுத்தும் கருவியாக இருந்த காலனியாதிக்கத்தின் எதிர்ப்பு மனநிலையும் குன்றிப் போய்விட எஞ்சியிருந்த ஒரே கருவி இந்துமதம், இன்றுவரை நவீன இந்தியாவின் அடிப்படைக் கட்டுமானத்தைக் காப்பாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கும் இந்துமதத்தின் அடிப்படை வாதத்தில் இருந்துதான் சமூக ஊழலான சாதியும், ஏனைய பொருளாதார ஊழல்களும் இன்னும் உழைக்கும் மக்களுக்கு எதிரான பல்வேறு ஆற்றல்களும் பல்கிப் பெருகின, இந்த அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டால் இன்றைய ராம்லீலா மைதான உண்ணாவிரதங்களைச் சரியான திசையின் சென்று நம்மால் கண்டறிய முடியும்.

நவீன இந்தியாவில் ஊழல் எங்கிருந்து துவங்குகிறது என்கிற கேள்விக்கு விடை தேடினால் கிடைக்கிற முதலும் கடைசியுமான விடை முதலாளித்துவச் சிந்தனை என்பதுதான், விடுதலைக்குப் பிந்தைய இந்திய சமூகத்தில் நிலவிய அரசியல் மற்றும் கோட்பாட்டு வெற்றிடங்களை முதலாளித்துவம் தனது வழக்கமான வித்தைகளால் நிரப்பிக் கொண்டது, இந்திய மரபு சார் விவசாய இயக்கத்தில் இருந்து துவங்கி இன்றைய அலைக்கற்றைகள் வரைக்கும் முதலாளித்துவம் தனது எல்லைகளை விரித்துக் கொண்டு சராசரி இந்திய இந்திய மனிதனை ஒரு நுகர்வு எச்சமாக மாற்றி வைத்திருக்கிறது.

Mukesh-Ambani

எழுபது விழுக்காடு உழைக்கும் இந்திய மக்கள் அரசு மற்றும் முதலாளிகளுக்கான முதலீடாக மாறிப் போன அவலத்தை நாம் மக்களாட்சி என்று கொண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். வலிமையான அரசியல் மற்றும் சமூகக் கோட்பாடுகளை நிலை நிறுத்தும் கல்வி, மதம் சார்ந்த நம்பிக்கைகளையும், தனி மனிதத் துதி பாடல்களையும் நோக்கி நகர்த்தப்பட முதலாளித்துவத்தின் கொடுங்கரங்களுக்கு மாற்றாக நம்மால் எந்த ஒரு கருவியையும் கண்டறிய முடியவில்லை, நுகர்வும், பொருள் ஈட்டலும் மட்டுமே கல்வியின் கடைசி இலக்காக மாற்றப்பட்டுவிட்ட ஒரு சமூகத்தில் ஊழல் அதிகாரப் பூர்வமான தனி மனித வெற்றியைப் போல ஒரு கொண்டாட்ட மனநிலையை இந்தியச் சராசரி மனிதனிடத்தில் உருவாக்கி இருக்கிறது, இன்று ஒவ்வொரு மனிதனும் தனக்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறான், வாய்ப்புகளற்ற மனிதனே ஊழலில் இருந்து தப்பிச் செல்லும் ஒரு நிலையை முதலாளித்துவத்தின் கொடுங்கரங்கள் கட்டமைத்திருக்கின்றன. எப்படியாவது என்னுடைய வாழ்க்கை வசதிகளைப் பெருக்கி முன்னணிப் பொருளீட்டுபவனாக மாறி விடு என்பது தான் இன்றைய நவீன இந்தியாவின் மனசாட்சி, இந்த மனநிலை ஏகமாய்க் குடிகொண்டிருக்கிற ஒரு சமூகத்தில் இருந்து கொண்டுதான் ஊழலுக்கு எதிரான போராட்டம், உண்ணாவிரதம் போன்ற அரைகுறை நாடகங்களை நாம் அணுக வேண்டியிருக்கிறது.

நவீன இந்தியாவில் ஊழல் என்பது ஒரு தனி மனித இயக்கமோ, ஒழுக்க நெறியோ அல்ல, அது இந்த சமூகத்தின் கூட்டு மனநிலையாக மாறிப் போயிருக்கிறது, எனக்கு வாக்களித்தால் உடனடியாக இந்த நுகர்வுப் பண்டங்களை நீ அடைய முடியும் என்கிற தேர்தல் கால வாக்குறுதிகள் தொடங்கி எனக்கு இந்த அலைக்கற்றைப் பயன்பாட்டை ஒதுக்கீடு செய்தால் உனக்கு ஒரு தீவு, உனக்குக் கீழிருக்கும் எழுத்தர்கள் வரைக்கும் இவ்வளவு என்று பகிர்ந்து கொள்கிற முதலாளித்துவத்தின் அடிப்படைச் சிந்தனை அது. பொது சமூகத்தின் அழுக்கு மனமே ஊழல், இந்த அழுக்கை அகற்றுவது என்பது ஒரு அரசியல் சமூக இயக்கமாக நிகழ வேண்டும், திட்டமிடப்பட வேண்டிய அறிவுலகப் பணியாகத் தொடர வேண்டும், இந்திய சமூகத்தில் இருந்து முற்றிலும் ஊழலை அகற்ற வேண்டுமென்றால் இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு நாம் கல்விக் கூடங்களில் மனித வாழ்க்கை மற்றும் அரசியல் விழிப்புணர்வு குறித்த அகவெழுச்சியை உருவாக்க வேண்டும், பொருள் இருப்பவனுக்குத் தரமான கல்வி (தரமான கல்வி என்பது பொருளீட்டுவதில் ஒரு மனிதனை எப்படி முன்னணியில் கொண்டு செல்வது என்று இங்கு பொருள் கொள்ளப்பட வேண்டும்) என்பதை குடியரசுத் தலைவர்கள் வரைக்கும் அங்கீகரிக்கும் ஒரு சமூகத்தில் அடிப்படை ஒழுக்கத்தையும், அகவெழுச்சியையும் தொடர்ச்சியாக இரண்டு நூற்றாண்டுகளுக்கு உருவாக்குவது என்பது இந்தியாவிலிருந்து ஊழலை ஒழிப்பது மாதிரியான ஒரு ராமலீலா மைதானக் கனவுதான்.

அன்னா ஹசாரே ஆகட்டும், ராம்தேவ் ஆகட்டும், எந்த ஒரு தனி மனிதனுக்கும் இந்தியக் குடியரசு நாட்டுச் சட்ட திட்டங்களின்படி போராடுவதற்கான உரிமை இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை, இவர்களின் போராட்டங்களால் ஊழல் குறித்த குறைந்தபட்ச விழிப்புணர்வு ஊட்டப்படுமாயின் நாம் அதனை வரவேற்கலாம், பிறகு ஏன் ராம்தேவ் மாதிரியான உடனடிப் புரட்சியாளர்களை நாம் எதிர்க்க வேண்டும் என்று ஒரு கேள்வி உங்களுக்குள் எழக்கூடும், அதற்கான விடை "ஊழல் என்பது யோகத்தினால் கிடைக்கும் கடவுளின் கருணையைப் போலவோ, இந்தியச் சாமியார்களின் கைகளால் ஆசிர்வதிக்கப்படும் பிழைத்தலுக்கான வாய்ப்பைப் போலவோ பொருளற்ற விளங்கிக் கொள்ள முடியாத கானல் நீரல்ல, மாறாக இந்த சமூகத்தின் மனநிலையில் படிந்திருக்கும் கறை, இந்தக் கறையைப் போக்கும் வழிமுறை ஊழலுக்கு எதிரான மனநிலையை ஒவ்வொரு தனிமனிதனும் அடைவதில் அடங்கி இருக்கிறது, ஒரு தனி மனிதன் நடத்திக் காட்டுகிற உண்ணா நோன்பின் மூலமாக இந்த சமூகத்தின் மிகப்பெரிய அவலத்தை நீக்க முடியுமென்று குருட்டுத் தனமாக நம்புவது எந்த ஒரு அறிவார்ந்த மனிதனும், ஊடகங்களும் செய்யக்கூடாத தவறான முன்னுதாரணம், இந்தியத் திரைப்படங்களில் நிகழும் நாயக வழிபாட்டுத் தோற்றம், அரசியல்வாதிகளை வாழும் கடவுளர்களாகச் சித்தரிக்கும் சமூக மனநிலை போன்றவற்றுக்கும் இத்தகைய தனி மனிதத் தடாலடி உண்ணா நோன்புகளுக்கும் பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை.

Anna_Hazare

மதத்தின் பெயரில், ஆன்மீகத்தின் பெயரில் ஒரு கலையை அல்லது உடற்பயிற்சியைத் தனது சமூகத்திடம் விற்றுக் காசாக்கிக் கொண்டிருக்கிற முதலாளித்துவ எச்சமான காவி உடை தரித்த ஒரு கார்போரேட் மதவாதியிடம் இருந்து ஊழலை ஒழித்து விடும் அற்புத ஆற்றலை எதிர் நோக்கி இருக்கிற சமூகம் தனது சிந்தனைகளில் எந்த அளவுக்குப் பின்தங்கி இருக்கிறது என்பதைக் கற்பனை செய்வதே கொடுமையான ஒரு கனவாக இருக்கிறது. ஊழல் ஒரு நிகழ்வின் மூலமோ, ஒரு உண்ணாநோன்பின் மூலமோ, ஒரு தனி மனிதனின் மூலமோ ஒழிக்கப்பட முடிகிற சமூகச் சிக்கல் அல்ல, மாறாக முறையான திட்டமிட்ட கல்வியின் மூலமும், அரசியல் விழிப்புணர்வின் மூலமும் ஒரு சமூகத்துக்குள் உள்ளீடு செய்து உருவாக்கப்பட வேண்டிய அறம் சார்ந்த கூட்டுச் சமூக மனநிலை, ஊழலை எதிர்க்க வேண்டுமென்றால் முதலில் தேவையற்ற நுகர்வையும், முதலாளித்துவச் சிந்தனைகளையும் குற்றம் என்று கண்டறியும் வெளிப்படையான உள்ளம் வேண்டும், ஊழலை எதிர்க்க வேண்டுமென்றால் குறைந்த பட்சம் கலாச்சார, ஆன்மீக மற்றும் மத வணிகம் செய்யாத நுட்பமான மனவிடுதலையாவது பெற்றிருக்க வேண்டும்.

இந்திய அரசியலில் ராம்தேவ் வகையறாக்களின் அதிரடித் திருவிழாக்களையாவது நாம் போனால் போகிறதென்று ஏற்றுக் கொள்ளலாம், ஆனால், ஊடகங்கள் உருவாக்குகிற வெற்றுக் கூச்சலையும், வறட்டு பிம்பங்களையும் ஏற்றுக் கொள்ளவே முடியாது, கூட்டுச் சமூக மனநிலையின் மருத்துவமனைகளாக இருக்க வேண்டிய ஊடகங்கள், ராம்தேவ் மாதிரியான அதிரடி மன்னர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும் வெளி, வருங்காலத் தலைமுறை இந்தியர்களை அதிரடிகளின் மூலம் எல்லாச் சமூகத் தீங்குகளையும் நீக்கி விடலாம் என்று திடமாக நம்ப வைக்கும், கவனம் செலுத்த வேண்டிய எத்தனையோ அடிப்படைத் தேவைகளை விடுத்து ராம்தேவ் வகையறாக்கள் அஞ்சி நடுங்கி அணிந்து கொண்ட சுடிதாருக்குள் மையம் கொண்டிருக்கிற நமது ஊடகங்களின் நம்பகத்தன்மை ஊழலை ஒழிக்கும் ராம்லீலா மைதான விளையாட்டைப் போலவே காட்சி அளிக்கிறது.

india-bribe

முதலாளித்துவத்தின் கோரமான இன்னொரு கரம் மனித குலம் இதுகாறும் தேடிக் கண்டடைந்த அடிப்படை அறத்தை வெட்டி வீழ்த்துவதற்கு முன்பாக நாம் விழித்தெழுவோமா? இல்லை, தொடர்ந்து பாபாக்களின் பின்னால் படை திரண்டு வெற்று முழக்கங்களை எழுப்பித் திரிவோமா என்பதைக் காலம் தன்னில் குறித்து வைத்துக் கொள்ளும்.

***********

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: