கை.அறிவழகன் எழுதியவை | ஜூன் 14, 2011

கல்வியும், இந்திய சமூகமும்.

girl_studying

தங்கை மகன் ஆதவனுடன் ஒரு முறை உரையாடிக் கொண்டிருந்தேன், அவனுக்கு எட்டு வயதிருக்கலாம். அவன் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் இருந்து சென்னைக்கு வந்திருந்தான், அமெரிக்கக் கல்வி முறைக்கும், அவன் சேர்க்கப்பட்ட சென்னைப் பள்ளியின் கல்வி முறைக்கும் அப்போது தகராறுகள் நடந்து கொண்டிருந்தன, ஒருமுறை வீட்டுப் பாடம் எழுதி வரச் சொல்லி சில பயிற்சிப் பாடங்களை வகுப்பில் வழங்கி இருக்கிறார் ஆசிரியர், அன்று இரவு வீட்டுப் பாடம் எழுதவில்லை இவன், மறுநாள் காலையில் ஆசிரியர் அனைவரிடமும் வீட்டுப் பாடத்தைச் சோதனை செய்த போது இவன் எழுதவில்லை என்று சொல்லி இருக்கிறான், “ஏன் எழுதவில்லை?” என்று ஆசிரியர் கேட்டதற்கு, “எழுத வேண்டும் என்று தோன்றவில்லை” என்றும், “அந்தப் பயிற்சி எனது ஆர்வத்தைத் தூண்டுவதாய் இல்லை” என்றும் பதில் சொல்லி இருக்கிறான், ஆசிரியருக்கு ஒரே குழப்பம், கண்டிப்பான குரலில் சொல்வதைச் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார், “நீங்கள் எனக்கு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள், இது பற்றி நான் எனது பெற்றோரிடம் புகார் செய்ய வேண்டும்” என்று இவனும் கண்டிப்பாகக் கூறி இருக்கிறான், ஆசிரியர் கொஞ்சம் அப்போதைக்குப் பின்வாங்கி முந்திக் கொண்டு புகார் சொல்லி விட்டார். அவனுடைய மனத்தை அமெரிக்கர்களின் கல்வி முறை அத்தனை வேகமாக வளர்த்திருக்கிறது, அவன் நான் இப்போது வாசிக்கிற சில நூல்களை வாசித்து முடித்துக் கருத்துச் சொல்கிறான், அதில் இருந்து மேற்கோள்களைக் காட்டுகிறான், தொடர்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

தொடர்ந்து அவனோடு உரையாடும் போது “அப்பத்தாவும், இன்னும் சில உறவினர்களும் வீட்டுக்கு வரக் கூடாது” என்றும், “தன்னுடைய சுதந்திரமான சில செயல்பாடுகளை அவர்கள் அனுமதிப்பதில்லை” என்றும் அவன் என்னிடம் சொன்னான், பிறகு தங்கையிடம் விசாரித்தபோது “சில ஆபத்தான விளையாட்டுக்களை அவன் விளையாடும் போதும், சமையல் அறையில் சென்று தனக்குத் தேவையானவற்றை அவன் சமைக்கத் துவங்கும் போதும் அவர்கள் கண்டிப்பதை அவன் விரும்புவதில்லை” என்றும், “தன்னுடைய தனி மனித சுதந்திரத்தில் இவர்கள் குறுக்கிடுகிறார்கள்” என்றும் அவர்கள் மீது ஒரு வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறான், இந்த இரண்டு செயல்பாடுகளும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட ஒரு மனித மனநிலை அல்ல, அளவற்ற தனி மனித விடுதலையைக் கற்றுக் கொடுக்கும் எந்த ஒரு கல்வியும் இப்படித்தான் இருக்கும்.

இந்தியக் கல்வி முறையில் அல்லது வகுப்புச் சூழலில் கிடைக்கிற பல நுட்பமான பண்புகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும், இந்தியச் சூழலும், அமெரிக்கச் சூழலும் வேறு வேறானவை என்பதிலும், இந்திய மனநிலையும், அமெரிக்க மனநிலையும் முற்றிலும் வேறு வேறானவை என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை, அமெரிக்கச் சூழலில் எந்த ஒரு மாணவனும் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்த உடன் இந்த உலகத்திலேயே தான் மிக உயர்ந்தவன் அல்லது மிக உயர்ந்த சமூகத்தைச் சார்ந்தவன் என்கிற அரசியல் அவனையும் அறியாமல் ஊட்டப்படுகிறது, இவ்வுலகின் எந்த நாட்டு மக்களையும், எந்த தேசத்தின் பூர்வீகக் குடிகளையும் தனது நலன்களுக்காக அழித்தொழித்து அவற்றின் எண்ணெய் வளம் முதற்கொண்டு அனைத்தையும் சுரண்டும் தகுதியும், திறனும் தனக்கு இருப்பதாக ஒரு முதிர்ந்த அமெரிக்க மாணவன் அல்லது இளம் அமெரிக்கக் குடிமகன் நம்பத் துவங்குகிறான், குடும்ப உறவுகள், சமூக நிகழ்வுகள், பக்கத்துக்கு வீட்டு மனிதன், பக்கத்துக்கு ஊர் மக்கள் இவை எல்லாவற்றையும் விடத் தனி மனித நலன்களே மேலானவை என்கிற அடிப்படை முதலாளித்துவச் சிந்தனைகளை அமெரிக்கக் கல்வி வளர்த்தெடுக்கிறது என்பதை நாம் எந்த ஒரு நிலையிலும் மறந்து விட முடியாது. இந்தியக் கல்வி முறையையும், மேலை நாட்டுக் கல்வி முறையையும் ஒப்பீட்டு நோக்கில் நாம் செயல்படுத்தவோ, முன்னெடுக்கவோ இயலாது, ஏனெனில் ஒரு நாட்டின் கல்வி முறை என்பது அதன் தத்துவப் பண்பாட்டு வெளிகளோடு இணைந்தே இருக்க வேண்டும், அடிப்படை அமெரிக்கக் கல்வியில் வழங்கப்படும் அளவற்ற சுதந்திரத்தையும், தனி மனித எழுச்சியையும் நாம் இந்திய மாணவர்களுக்கு வழங்க முற்படும்போது நிகழும் முரண்பாடுகள் பல்வேறு உளவியல் சிக்கல்களை சமூகத்தில் உருவாக்கும்,அந்த முரண்களால் ஏற்படும் மோதல்கள் பிறகு குடும்ப உறவுகள், மற்றும் சமூக இணக்கம் போன்றவற்றைச் சிதைக்கும் காரணிகளாக மாற்றம் அடையக் கூடிய சாத்தியம் உண்டு, அதே வேளையில் மேலைநாட்டுக் கல்வியில் வழங்கப்படுகிற உளவியல் கல்வி, பல்வேறு அழுத்தங்களில் இருந்து விடுதலை பெற்ற சூழல், ஆசிரியர், மாணவர் உறவு போன்ற நுட்பமான சிலவற்றை நாம் உள்வாங்கிக் கொண்டு அதனை நமது வகுப்பறைகளில் அறிமுகம் செய்தே ஆகவேண்டும்,

ED_Primary Education

நமது கல்விக் கூடங்கள் அளவற்ற தனி மனித சுதந்திரத்தை அனுமதிப்பதில்லை, ஆனால், சில நுட்பமான மனித உறவுகள் குறித்த செய்திகளை உணர வைக்கிறது, அமெரிக்கக் கல்வியில் ஆசிரியர் ஒரு மனிதர் அவ்வளவுதான், அவருடைய கடமை ஒரு மாணவனுக்குக் கல்வி கற்க உதவுவது, எங்கேனும் ஆசிரியர் மாணவனுடைய உரிமைகளில் அல்லது தனிப்பட்ட விருப்புகளில் தலைகாட்டினால் அவர் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படும் நிலை அங்குள்ள அரசியல் சூழலில் அன்றாட நிகழ்வாக இருக்கிறது, இந்தியக் கல்வியில் ஆசிரியர் மதிப்புக்குரிய ஒரு வழிகாட்டி, வாழ்க்கையைக் கட்டமைக்க உதவும் ஒரு மிக உயர்ந்த பண்பாளர், சமூகத்தின் உயர்வான மனிதர்களில் ஆசிரியரும் ஒருவர், அவர் உங்களைக் கண்டிப்பதும், தண்டனை வழங்குவதும் உங்கள் வாழ்க்கையின் நலனுக்கானது என்கிற நுண்ணுணர்வு இந்தியக் கல்விச் சூழலில் உணர்த்தப்படுகிறது, அளவற்ற தனி மனித சுதந்திரத்தை வழங்காத இந்தியக் கல்வி, அளவற்ற நுட்பங்களை வகுப்பறைகளில் வழங்கியே வருகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால், இந்த நுட்பங்களை நமது கல்வி முறையும், பாடத் திட்டங்களும் வழங்குகின்றன என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது, இவை நமது கலாசார மற்றும் பண்பாட்டு வெளிகளால் தன்னிச்சையாக நிகழ்கிற ஒரு நிகழ்வு.

நமது பாடத் திட்டங்களைப் பொறுத்த வரை இன்னும் மெக்காலேயின் எழுத்தர்களை உருவாக்கும் கல்வித்திட்டத்தின் அடிப்படையிலேயே உழன்று கொண்டிருக்கிறது, ஒரு மிகச் சிறந்த அடிமையை எப்படி உருவாக்குவது என்பது தான் மெக்காலே உருவாக்கி இந்திய சமூகத்துக்குப் பரிசளித்த கல்விமுறை, நாம் அந்த முரணை இன்னும் கடக்காமல் பயணிப்பது தான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொடுமை. இப்போது சமச்சீர் கல்வி குறித்த விவாதத்தில் நாம் எல்லோரும் குதித்திருக்கிறோம், ஆனால், அடிப்படைக் கல்வி மற்றும் கல்விச் சூழல் குறித்த எந்த ஒரு விவாதக் களங்களையும், மேடைகளையும் நாம் உருவாக்குவதே இல்லை, இப்போது நம்மில் பலர் உரையாடிக் கொண்டிருக்கிற சமச்சீர் கல்வி குறித்த விவாதங்கள் அரசியல் முடிவுகள் குறித்த விமர்சனங்களாகவும், நம்மையும் அறியாத ஒரு பக்கச் சார்பு உரையாடல்களாகவுமே இருப்பதை ஆழமாகக் கவனிக்கும் போது அறிந்து கொள்ளலாம்,

நமது அடிப்படைக் கல்வி முறையில் காலம் காலமாக ஒரு வியப்பான, மிகக் கொடுமையான முரண் இருக்கிறது, அந்த முரணை நம்மில் பலர் கடந்து வந்திருக்கிறோம், கடக்க முடியாமல் தேங்கிப் போனவர்களாகவும் இருக்கிறோம், அந்த முரண், கல்வியை ஒரு நினைவாற்றல் தொடர்பான திறனாக மாற்றி வைத்திருப்பதில் இருந்து துவங்குகிறது, நினைவாற்றல் கல்வியின் ஒரு மிக இன்றியமையாத பகுதி என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை, ஆனால், நினைவாற்றலே கல்வி என்கிற ஒரு முரணை நாம் விரைவில் கடந்தாக வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு வரையில் ஒரு மாணவனின் கல்வியையும், அவனது திறனையும் நிர்ணயம் செய்வது மதிப்பெண்கள், நினைவாற்றல் மற்றும் பாடங்களை விளங்கிக் கொள்ளாத உருப்போடும் திறன் இவை கூடுதலாக இருந்தால் ஒரு வெற்றி பெற்ற மாணவனை இந்திய சமூகத்தில் உங்களால் உருவாக்கி விட முடியும், அறிவுக்கும், நினைவாற்றலுக்கும் வேறுபாடு தெரியாத மூடர்களாகவே நம்மையும் நமது கல்வி முறை உருவாக்கி இருப்பது தான் இதில் உள்முரண், "எல்லா வினைகளுக்கும் சமமான ஒரு எதிர் வினை உண்டு" என்கிற சொற்றொடரின் பின்னணியில் காணக் கிடைக்கிற அறிவியலின் ஆற்றலை, அதன் பயன்பாட்டை, நடப்பு வாழ்க்கையில் இந்தச் சொற்றொடர் உள்ளீடு செய்யப்படுகிற இடங்களைக் குறித்து ஒரு விரிந்த தளத்தை உருவாக்கிக் கொடுப்பதே கல்வியின் மிக முக்கிய செயல்திட்டமாக இருக்க வேண்டும், எந்த மாணவன் இந்த சொற்றொடரில் இருந்து அளப்பரிய வாழ்க்கைத் தத்துவங்களை உணர்ந்து கொள்கிறான் என்பது முக்கியமே தவிர, எந்த மாணவனுக்கு இது போல நிறையச் சொற்றொடர்கள் நினைவில் இருக்கிறது என்பதல்ல கல்வி, ஆனால், பரிதாபமாக நமது குழந்தைகள் நிறையச் சொற்றொடர்களை நினைவில் வைத்துக் கொள்ளச் சொல்லித் துன்புறுத்தப்படுகிறார்கள்.

Teacher%20disciplining%20kids%20-%20Chitrakoot

ஆண்டு இறுதித் தேர்வின் போது அப்படி நினைவாற்றல் பொருந்திய ஒரு மாணவனோ மாணவியோ முதலிடம் பெறுவதும், செய்தித் தாள்களில் இடம் பெறுவதும் இந்தியக் கல்விமுறை செய்து கொண்டிருக்கும் பின்னிழுத்தல், ஒரு சமூகத்தின் அறிவாற்றலை சரியான திசையில் செலுத்த இயலாத பின்னிழுத்தலாகவே இந்த நினைவாற்றல் கல்வியை நாம் நோக்க வேண்டும். பாடத் திட்டங்கள் குறித்த வரையறைகளில் அதிக கவனம் செலுத்தும் நமது கல்வியாளர்களும், சிந்தனையாளர்களும் கூட வகுப்பறை நடைமுறைகள் மற்றும் மாணவர்களின் மனநிலை குறித்த பெரிய மாற்றங்களை நோக்கி நகர்வதில்லை, இந்தியாவின் கிராமத்தில் இருக்கும் ஒரு வகுப்பறையைக் கற்பனை செய்து பாருங்கள், ஒரு பாட நூலில் இருக்கிற பாடத்தின் உட்கருத்தை அவர் தனது விரைப்பான நடையில் விளக்குவார், அங்கு பரஸ்பர உரையாடல்களோ, கருத்துப் பரிமாற்றங்களோ நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு, அப்படியே யாரேனும் ஒரு மாணவன் கேள்விக்கணைகளைத் தொடுத்தால் அது இந்திய சமூகத்தைப் பொறுத்தவரையில் அதிகப் பிரசங்கித்தனம்.

முதலாளித்துவம் நமது கல்விச் சூழலை ஏறக்குறைய அடிமைகளை விரைந்து உருவாக்கும் தொழிற்சாலையாகவே வைத்திருக்கிறது, அதனைத் தாண்டி அடிப்படை அறங்களை, மனித உரிமைகளை, வாழ்க்கையின் கோரமான ஏற்ற தாழ்வுகளை, வர்க்க வேறுபாடுகளை, முரண்களை அதனால் ஏற்படும் சமூகச் சீரழிவுகளை எந்த ஒரு பாடத்திட்டமும் வழங்கியதாகவோ, வழங்கப் போவதாகவோ தெரியவில்லை.

கல்வி என்பதை பொருளீட்ட உதவும் கருவி அல்லது வாழ்க்கையின் பொருட்தேவைகளை எதிர்கொள்ள நாம் கண்டறிந்த ஒரு தகுதி என்பது மாதிரியான ஒரு பிம்பத்தை நமது அறிவுலகமும், அரசும் கட்டமைத்திருக்கின்றன, கல்வி உறுதியாகப் பொருளீட்ட உதவும் ஒரு கருவி தான் என்பதை நாம் ஒப்புக் கொண்டாலும், அடிப்படைக் கல்விக்குப் பொருளீட்டுவதை விட மிக முக்கியமான ஒரு தேவை இருக்கிறது, அது மனித மனத்தைப் பண்படுத்துதல், ஒரு மாணவனின் மனநிலையை, ஒரு வருங்காலக் குடிமகனின் ஒழுக்கத்தை, முதிர்ந்த ஏற்ற தாழ்வுகள் அற்ற சமூக உறுப்பினர்களைப் படைத்தது வழங்க வேண்டிய நமது அடிப்படைக் கல்வி அதற்கான எந்த உள்ளடக்கமும் இல்லாமல் தான் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, பாடநூலின் முகப்பில் “தீண்டாமை ஒரு பாவச்செயல்” என்கிற வாசகங்களோடு தான் தொடர்ந்து அறுபது ஆண்டுகளாய் இந்த சமூகம் தனது வகுப்பறைகளில் தீண்டாமையைக் கடைபிடிக்கிறது, வேலைவாய்ப்புக்கான கல்வி, அறிஞர்களுக்கான கல்வி, நிபுணர்களுக்கான கல்வி இவை எல்லாவற்றையும் தாண்டி குழந்தைகளுக்கான, மாணவர்களுக்கான கல்வியை யாரும் கண்டறிந்து வழங்கி விடாதபடி நமது அறிவுலகம் தொடர்ந்து வரையறைகளை நிர்ணயித்துக் கொண்டே பயணிக்கிறது.

School-hikkaduwa-2

நமது குழந்தைகளுக்கு மனித உணர்வுகள் குறித்த, மனித உடல் குறித்த முறையான கல்வியை நாம் இன்னும் உருவாக்கவில்லை, நமது குழந்தைகளுக்கு மதம் எப்படி உருவாக்கப்பட்டது, அது மக்களுக்குச் செய்யும் நன்மை தீமைகள் என்ன என்பது குறித்த முறையான கல்வியை நாம் இன்னும் உருவாக்கவில்லை, சாதி நமது சமூகத்தில் எப்படி உருவாக்கப்பட்டது?, சாதி ஒரு மனிதனோடு அல்லது சமூகத்தோடு கொண்டிருக்கும் தொடர்பு என்ன? சாதியின் மூலம் எப்படி ஒரு அறிவியலின் அடிப்படையற்ற விதிகளால் கட்டமைக்கப்பட்டது? போன்ற நுட்பமான வலிந்து ஏற்றப்படவேண்டிய கல்வியை எத்தகைய இந்தியப் பாடத்திட்டமும் வழங்குவது போலத் தெரியவில்லை, இந்திய சமூகத்தில் உழைப்பும், பொருள் ஈட்டலும் எப்படியான முரண்களைக் கொண்டிருக்கிறது, அளவுக்கு அதிகமான பொருள் ஈட்டும் ஆசையை இந்தியக் கல்வி முறையின் அடிப்படை எப்படி மறைமுகமாகத் தூண்டுகிறது என்பது குறித்து நாம் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும், சமூகத்தில் நிலவும் ஏற்ற தாழ்வுகளை நீக்க உதவுவதாய் இருக்க வேண்டிய கல்வி, அதனை மென்மேலும் வளர்க்கும் ஒரு முரண்பாடு இந்தியக் கல்விமுறையின் மிகப்பெரிய சாபமாக இருக்கிறது. நிறையப் பொருளீட்டும் ஆசை ஒரு குற்றம் என்பதை நமது சமூகமும், கல்வித் திட்டங்களும் மறைத்து, நிறையப் பொருளீட்டுபவனை ஒரு வெற்றியாளனாகச் சித்தரிக்கின்றன, ஒரு நாட்டின் நாணயத்தை உருக்கி அதை கள்ளச் சந்தையில் உலோகமாக மாற்றி விற்றுக் கயமைத்தனம் புரிந்த ஒரு மனிதனை வெற்றியாளனாக சித்தரிக்கின்ற எழுத்தாளர்களையும், கூப்பிடுகிற தொலைவில் கொத்துக் கொத்தாக மடிந்து போகிற தனது மொழி பேசுகிற மக்களின் மரணத்தைக் கண்டும் காணாமல் வல்லரசு வெறி கொண்டலையும் மூடர்களைக் கல்வியாளர்கள் என்றும் விஞ்ஞானிகள் என்றும் போற்றித் திரியும் ஒரு சமூகத்தை உருவாக்கியது தான் இந்தக் கல்விமுறையின் சாதனை.

basicFacilities08

இன்றைய இந்தியக் கல்வியைப் பொறுத்தவரை அதிகப்படியான பொருள் ஈட்டும் பந்தயக் குதிரைகளை எப்படி உருவாக்குவது என்பது குறித்து அதிகம் கவலைப்படுகிறது, திறமையான அடிமையை உருவாக்குவது எப்படி என்கிற மெக்காலேயின் கல்வித் திட்டத்திலிருந்து விலகி நமது கல்வி திறமையான முதலாளிகளை உருவாக்குவது எப்படி என்கிற இலக்கை நோக்கிப் பயணப்படுகிறது, திறமையான முதலாளிகளை உருவாக்கும் கல்வித் திட்டம் என்பது எளிய மக்களின் மீதான அவர்களின் குழந்தைகளின் மீதான ஒடுக்குமுறையாகவும், வன்முறையாகவும் தான் இயங்க முடியும் என்கிற அடிப்படையை மறந்து நமது கல்வித் திட்டங்களால் சமூக மறுமலர்ச்சிக்கும், மனித குல வளர்ச்சிக்கும் பெரிய அளவில் என்ன வழங்க முடியும் என்று பெரிய குழப்பமாக இருக்கிறது.

**********

Advertisements

Responses

  1. Nice and wonderful thoughts..

  2. தோழர் அவர்களுக்கு வணக்கம் , தங்களின் இந்த நுட்பமான பதிவு ஆருமையாக உள்ளது , நம் நாட்டின் கல்வி முறையும் அதற்கான நம் சமுகம் நடந்துகொள்ளும் விதத்தை பற்றி மிகச்சரியாக பதிவு செய்து உள்ளீர்கள் , நிச்சயம் ஒரு மாற்றத்தை நோக்கி நம் சமூகமும் , அரசும் ஒரு நல்ல முடிவு எடுக்கும் வரை கல்வியில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாது , அதலால் இந்த கருத்தை அணைத்து மக்களுக்கும் சரியான விழிப்புணர்வு தேவைப்படுகிறது .

    என்றும் அன்புடன் தமிழ் பிரியன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: