கை.அறிவழகன் எழுதியவை | ஜூன் 20, 2011

சேனல் 4 – துயரின் பெருங்குரல்

Sri-Lanka_000000

இந்தக் கட்டுரையை எழுதத் துவங்கியபோது நள்ளிரவு பன்னிரண்டு மணியை நோக்கி எனக்கு எதிரில் இருக்கும் சுவர்க்கடிகாரத்தின் முட்கள் நகர்ந்து கொண்டிருந்தன,அந்த சுவர்க் கடிகாரம் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒரு தாய் எனக்குப் பரிசாக அனுப்பியது, அது முக்காலத்திலும் அன்பை உணர்த்தக்கூடிய ஒரு உயிர்ப் பொருளைப் போல எனது படுக்கையறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது, என்றாவது ஒருநாள் அந்தக் கடிகாரத்தின் இயக்கம் நின்று போய் விடக் கூடும், அல்லது அந்தக் கடிகாரத்தின் இயக்கத்தை உணரும் எனது விழிகளில் உயிர் உலர்ந்து விடக் கூடும், ஆனால் முகம் தெரியாத ஒரு மகனுக்கு அவனுடைய தாய் ஒருத்தியால் கொடுக்கப்பட்ட அளவற்ற நேசத்தின் இயக்கத்தை இந்தப் பேரண்டத்தில் எந்த இயக்கத்தாலும் நிறுத்தி விட முடியாது என்கிற நம்பிக்கை மட்டுமே என்னைச் சுற்றி எப்போதும் இருக்கிறது.

நிறைமொழி தனது தாயின் மடிக்குள் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருக்கிறாள், அவளது உறக்கம் பாதுகாப்பும், அன்பும் நிரம்பிய ஒரு படுக்கை அறைக்குள் வாய்த்திருப்பது மட்டுமே மகிழ்ச்சியாய் என்னால் இந்தக் கணத்தில் உணர முடியவில்லை, எனது கரங்களின் இயக்கம் சொல்லி விட முடியாத வலியையும், துயரத்தையும் பேனா முனைகளின் ஊடாகக் கசிந்தபடி இடையிடையில் நிறுத்தி எழுத்துக்களை ஒரு நேர்கோட்டில் பதித்தபடி தனது பயணத்தைத் தொடர்கிறது. உடல் ஒரு பருப்பொருளைப் போல எந்தச் சலனமும் இன்றிப் படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறது. உடலைச் சுற்றிலும் படுக்கையில் நிறைந்தபடி துயரத்தின் சுவடுகளும், கதறலின் துணுக்குகளும், அழுகுரலின் மிச்சங்களும் துணைக்கிருக்கின்றன, மனிதர்கள் இல்லாத ஒரு பரந்த பாலைவனத்தின் காணமுடியாத எல்லைகளைப் போல எனது உறக்கம் அந்த அறைக்குள் இருந்து வெகுதொலைவில் இருக்கிறது, வெறுமையினால் கட்டப்பட்ட குகையொன்றில் அடைக்கப்பட்ட ஒரு சிறு பறவையைப் போல நினைவின் காலடித் தடங்களைப் பற்றிக் கொண்டு இலக்கின்றி அலைகிறது இருப்பின் உண்மை. அழுவதற்கான தனிமையையும், விழித் திரைகளை உடைக்கக் காத்திருக்கும் கண்ணீரின் வேகத்தையும் கட்டுப்படுத்தி அமைதியாக்கும் எந்த ஒரு ஆற்றலும் என்னருகில் இப்போது இல்லை.

Channel_4_Jan_09_2007_intro

மூன்று நாட்களுக்கும் மேலாக இந்தத் துயரமும், வலியும் ஒரு வேட்டைக்காரனைப் போல எனைத் துரத்தித் துரத்தி வருகிறது, நடக்கும் போதும், பயணிக்கும் போதும், உண்ணும் போதும், உறக்கத்தை நோக்கிக் காத்திருக்கும் போதும் இந்தத் துயரத்தின் கொடுங்கரங்கள் கிடைக்கிற இடைவெளிகளை எல்லாம் நிரப்பியபடி எனைச் சுற்றி வருகிறது, சேனல் 4 ஒளிபரப்பிய "இலங்கையின் கொலைக்களங்கள் (Srilanka’s Killing Fields)" ஆவணப்படத்தை இணையத்தில் பார்த்த கணங்களில் இருந்து உயிர் பெற்று எழுந்து பறந்தலையும் ஒரு மிகப்பெரிய பறவையைப் போல அது எனது தலைக்கு மேலிருக்கும் வானத்தை மறைத்தபடி வலம் வருகிறது. இந்த ஆவணப்படத்தைப் பார்க்க நேர்ந்த எந்தவொரு பண்பட்ட மனிதனும் இப்படித்தான் துடித்தும் துவண்டும் தனது படுக்கையில் வீழ்ந்து கிடப்பானென்று தோன்றுகிறது, போரின் கோரக் கரங்கள் மனித சமூகத்தைச் சீரழித்த எந்தவொரு நிமிடத்திலும் மனித குலத்தின் உயர்பண்புகள் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட ஒரு செடியில் இன்னும் வாடாமல் இருக்கிற மலரின் இதழ்களைப் போலத் உயிர் துடித்துக் கொண்டிருக்கும். அந்த ஆவணப்படத்தின் பல காட்சிகள் கண்களில் கூர்மையான வாளின் முனைகொண்டு செருகப்படுவதைப் போல எனக்குள் துயரத்தின் விதைகளை விதைத்து விட்டுத் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டு விட்டது. நினைவுச் செல்களில் இருந்து நீக்க முடியாத இந்தக் காட்சிகள் நெருப்பின் வெம்மையைப் போல இதயத்தின் உள்ளிருந்து என்னை எரியூட்டிக் கொண்டிருக்கின்றன.

எளிய உழைக்கும் மக்களால் சூழப்பட்ட ஒரு குடியிருப்பு, முற்றிலும் சிதைந்து கிடக்கிறது, சிதைவுகளின் நடுவே ஒரு பதுங்கு குழி, ஒரு குடும்பம் முழுக்க அதற்குள் அழுந்திக் கிடக்கிறது, இரண்டு பெண்கள் தங்கள் சின்னஞ்சிறு குழந்தைகளை மார்பில் அணைத்தபடி பதுங்கிக் கிடக்கிறார்கள், படித்துப் பட்டம் பெற்று சீருடைகளை அணிந்து மனித சமூகத்தின் உயரிய படைப்பொன்றின் வழியாக அந்தக் குழந்தைகளைக் குறி வைத்து வீசப்படுகின்றன கொத்துக் குண்டுகள், குடும்பத் தலைவனோ தம்மையும், அந்தக் குழந்தைகளையும் கொல்லப் பறந்து வரும் உலோகப் பறவையின் வெறியைக் காட்சிப்படுத்தத் துடிக்கிறான், காமெராவின் கண்களை அகலத் திறந்து வைத்துப் பதுங்கு குழிகளின் விளிம்புகளில் இருந்து துடிக்கிறான், "வீடியோ எடுக்கிற நேரமா இது?, பதுங்கு குழிக்குள் படுங்கள், படுங்கள்" என்று அந்தக் குடும்பம் முழுவதும் ஓலமிடுகிறது, கதறி அழுகிறார்கள் அந்தப் பெண்கள், இந்த உயிர்ப் போராட்டத்தையும், வானூர்தியின் இரைச்சலையும் கேட்டபடி மலங்க விழித்துத் தலை தூக்கி "அம்மா, அம்மா" என்று கதறி அழுகிறான் ஒரு குழந்தை.

எனது வாழ்க்கையின் மிகக் கொடுமையான கணமொன்றை நான் சந்திக்க நேர்ந்த வலியைச் சொல்லியபடி விழிகளில் உடைந்து பீறிடுகிறது கண்ணீர். அந்தக் குழந்தை இந்த நாகரிக உலகை நோக்கித் தனது அவலமான இருப்பின் வலியை வழிய விடுகிறது, அந்தக் குழந்தை இந்த மானுட சமூகத்தை நோக்கி எண்ணற்ற கேள்விகளை அள்ளி எரிகிறது, வெடிகுண்டுகளை என் மீது வீசியெறியும் அந்த மனிதனுக்கு நான் என்ன தீமை செய்தேன், எனக்கான உலகத்தை ஏன் இப்படிச் சீரழிக்கிறீர்கள், எனது மகிழ்ச்சியை ஏனிப்படிப் பதுங்கு குழிகளுக்குள் போட்டுப் புதைக்கிறீர்கள்?, எனது சிரிப்பொலிகளில் மலர்ந்து செழிப்பதர்க்காக வளர்க்கப்பட்ட முற்றத்துச் செடிகளின் மீது ஏனிப்படி நெருப்பிடுகிறீர்கள்? எனது பூங்கரங்களில் தவழ வேண்டிய ஒரு பொம்மையை ஏனிப்படி யாரும் சேகரிக்காது வீதிகளில் வீசி எறிந்தீர்கள்? எனது செவ்விதழில் புகட்டப்பட வேண்டிய பாலையும் , சோற்றையும் யாரும் சமைக்காது ஏனிப்படி எல்லாம் எரிந்து சாம்பலாகிக் கிடக்கிறது?, எனது மழலைச் சொற்கள் ஏனிப்படி வலிகளோடு காற்றில் அலையும்படி விட்டீர்கள்? என்றெல்லாம் வாழ்க்கையில் நான் சந்தித்திராத கேள்விகளைக் காட்சிகளாய் உருக்கி என் கண்களில் ஊற்றி விடுகிறது.

jun3-11-lanka1

இத்தனை கொடுமையான வன்முறையும், கொலைவெறியும் நிரம்பிய உலகில் ஏன் நமது குழந்தைகளின் வாழ்க்கை உதிர்ந்த சருகுகளைப் போலக் கூட்டித் துடைக்கப்படுகிறது, கேட்கச் சகிக்காத இந்தக் குழந்தைகளின் அழுகுரலை, மரண ஓலத்தை எதிரொலித்தபடி தானே இந்த உலகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது, இப்படி ஒரு இழிபிறவிகளாய் நாம் எப்படி மாறிப் போனோம்? நமது நாகரீகத்தைச் சுமந்து புறப்பட்ட ஒரு பெரும்பயணம் இத்தனை குறுகலான ஒரு எல்லைக் கோட்டில் தான் முடிந்து போகுமா? எங்கிருந்து துவங்கி வருகிறது இந்தப் பெருந்துயரம். வியட்நாமின் பெயர் தெரியாத கிராமங்களின் குழந்தைகள் மீது கொத்துக் குண்டுகளை வீசி எறிந்து அவர்களை ஏதுமற்றவர்களாய் சாலைகளில் துரத்திய அமெரிக்காவின் நகரங்களில் தான் நாகரீகம் விளைந்து ஆறாய்ப் பெருகி ஓடுவதாய் நாம் கதைகளில் படிக்கிறோமே? ஜப்பானின் அழகிய குள்ளக் குழந்தைகளின் மீது அணுகுண்டுகளை வீசி அவர்களைக் கொத்துக் கொத்தாய்க் கொன்றொழித்த அமெரிக்க விமானங்கள் அமைதியைத் தேடி அலைவதாக இன்னும் நாம் நம்பிக் கொண்டிருக்கிறோமே? எல்லைக் கோடுகளும், இனங்களின் பேராசையும் ஏதுமறியாத இந்தக் குழந்தைகளின் உயிரைக் குடிக்கத் துடிக்கும் கொடுமைக்கு நாம் என்ன தான் தீர்வு வைத்திருக்கிறோம், பாலஸ்தீனக் குழந்தைகளை இஸ்ரேல் அழிப்பதற்கும், ஆப்கன் குழந்தைகளை தாலிபான்களும், அமெரிக்காவும் சேர்ந்து அழிப்பதற்கும், காஷ்மீரக் குழந்தைகளை இந்தியாவும், பாகிஸ்தானும் சேர்ந்து அழிப்பதற்கும், ஈழக் குழந்தைகளை இலங்கை அழிப்பதற்கும் தானா நாம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறோம், சுயநலம் மிகுந்த முதலாளிகளின் உலகம் செழித்து வளர நாம் உழைக்கும் மக்களின் குழந்தைகளைக் கொன்று குவிப்பதை எப்படி சகித்துக் கொள்கிறோம்.

எனது குழந்தையும், நான் வாழும் நிலமும் நலமாக இருப்பதற்கு இன்னொரு குழந்தையைக் கொன்றொழிக்கும் கொடுமையான உலகிற்கு நாகரீக உலகென்று பெயர் சூட்டிக் கொண்டாடும் உலகில் வாழ்வதற்கே வெட்கமாக இருக்கிறதே? அந்தப் பதுங்கு குழியில் அவலமான நிலையில் தலை உயர்த்தி அழுத சின்னஞ்சிறு மனிதன் உயிர் பிழைத்தால் இந்த உலகைக் குறித்தும், வாழ்க்கையைக் குறித்தும் என்ன தான் நினைப்பான்? அவனுடைய முகத்தில் தெரிந்த மரண பயமும், அழுகுரலும் இனி எல்லாக் காலங்களிலும் குழந்தைகளைக் காணும் போதெல்லாம் எல்லாச் சாலைகளிலும் ஆறாத புண்களோடு பின்தொடரும் உணவற்ற ஒரு தெருநாயைப் போல என்னைத் துரத்தி வரும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய தமிழர்கள் அந்தக் குழந்தையின் அழுகையைக் கடந்து வந்து விட்டார்கள்.

jun3-11-lanka2

நிலமும், வீடும், தாயும், தந்தையும், கட்டி விளையாடிய நாய்களும் பறித்து எறியப்பட்ட அந்தக் குழந்தையின் மனம் தான் என்ன பாடுபட்டிருக்கும், இனி உடலின் இயக்கம் தேய்ந்து உயிர் உலர்ந்து அதன் கடைசிச் சொட்டு அண்டப் பெருவெளியில் கரைந்து போகும் வரைக்குமான துயரத்தின் சுவடுகளை அந்தக் காட்சி உள்ளீடு செய்து விட்டது, கொண்டாட்டங்களும், மகிழ்ச்சியும் நிரம்பியது வாழ்க்கை என்கிற நேர்மறைச் சிந்தனைகளைத் துடைத்தெறிந்து எல்லாக் கொண்டாட்டங்களையும் விழுங்கி, அழித்து மனத்திரையில் புடம் போடப்பட்ட அந்தக் குழந்தையின் அழுகைதான் விடுதலையின் விலை என்றால் அந்த விடுதலைக்கு நாம் தகுதியானவர்கள் தானா? என்று விடுதலையின் மீதும், போராட்டங்களின் மீதுமே வெறுப்புக் குடி கொள்கிறது, சொல்ல முடியாத வேதனையை உள்ளடக்கி, ஒரு குழந்தையின் புன்னகையைப் பறித்த அந்தக் கணம் தான் விடுதலைப் போரின் வடு என்றால் இனி எந்தப் போருமே தேவை இல்லை. அந்தக் குழந்தைக்கு இடம் பெயரும் வலிமையில்லை, அகதியாய்ப் பயணித்து நாட்டைக் கடக்கவும் வசதி இல்லை, பாதுகாப்பாய்த் தன் தாய் மடியில் உறங்கும் அளவுக்குப் பொருளில்லை. போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் தனது வேதனைகளைத் தேக்கி ஒரு காட்சியின் வழியாய் உயிர் உறுத்தும் வலியைக் காற்றில் பரப்பிய அந்தக் குழந்தையின் துயரத்தை எத்தனை குற்றவாளிகளுக்கு நாம் தண்டனை கொடுத்தாலும் துடைத்தெறிய முடியுமா என்று தெரியவில்லை?

Cute%20Baby%20sleep

நிறைமொழி புரண்டு படுக்கிறாள், அவளது கண்களில் பாதுகாப்பும், அவளது இதழ்களில் புன்னகையும் குடிகொண்டிருக்கிறது, அந்தப் புன்னகையை விழுங்கியபடி சேனல் 4 ஒளிபரப்பில் நான் கண்ட அந்தக் குழந்தையின் அழுகுரல் அறையை நிரப்பிப் பெருகி வழிந்து, வீதிகளில் வழிகிறது, மேகங்களின் மீதேறி நிலவைத் துரத்தி ஓடுகிறது, நிலவு தப்பிக்க முனைந்து ஓடிக் கொண்டே இருக்கிறது, எனது கண்களில் நிரந்தரமாய் உருவான ஒரு அடைக்க முடியாத துளையில் இருந்து கண்ணீர் பெருகத் துவங்குகிறது, தலையணைக்கு அருகில் வைக்கப்பட்ட பேனா மட்டும் எனது சொற்களை விழுங்கியபடி முன்பொருமுறை நான் எழுதிய கவிதையொன்றை எனக்கு நினைவூட்டுகிறது.

என்னைச் சுற்றிலும் ஒரு உலகம் இருக்கிறது,
நான் மட்டுமே அதில் தனித்திருக்கிறேன்,
உண்மைகளைக் கடந்து தொலைதூரக் கனவுகளில்
விழித்து எழுவதை நான் வேண்டி விரும்புகிறேன்,

அடர்ந்த சோலையொன்றில் நடந்து பார்க்கினும் வறண்ட
பாலையொன்றின் தாகம் தொடர்ந்து வருகிறது என்னை,
ஜன்னலின் வழியே எட்டிப் பார்க்கும் நிலவை
எழுதுகோலை எறிந்தாவது விரட்டி விடுகிறேன்,

அழகாய் விழும் அருவிகள், மடிந்த என் மக்களின்
மரணத்தை அள்ளிச்சுருட்டி வருவதாய் அழுகிறேன்,
இசையின் இனிமைகளில் கூடக் கசிந்து வழியும் என்
இனத்தின் கண்ணீர்த் துளிகளைக் கண்டு கொள்கிறேன்,

விருந்துகளின் திளைப்பிலும் வெறுமையை மட்டுமே
விரும்பித் தின்கிறது வலிகள் நிரம்பிய வாழ்க்கை,
முகிலைக் கடக்கும் பறவைகள் பாலுக்குப் பரிதவிக்கும்
எம் குழந்தைகளின் பசியை எனக்குள் எச்சமிட்டபடி
இருளின் கிளைகளில் அடைந்து மறைகின்றன

என் உலகைச் சுற்றிக் கம்பிகள் கட்டிவிட்டு,
என்னைச் சுற்றிலும் ஒரு உலகம் இருக்கிறது,
நான் மட்டுமே அதில் தனித்திருக்கிறேன்.

*********

Advertisements

Responses

  1. வாசித்தேன் என்பதன்றி என்ன சொல்ல… இந்த உலகம் ஏன் இவ்வளவு குரூரமாக இருக்கிறது?

  2. காணொளியை கண்ட போது வந்த கண்ணீரை விட…..உங்களின் கட்டுரையைய்ப் படித்த போது தாங்கமுடியவில்லை…………….

  3. நான் இலங்கையில் இருக்கின்றேன்.என்னால் எதையும் கூற முடியாத நிலை.நீங்கள் எங்கள் மேல் வைத்திருக்கும் அன்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை.வேறு என்னால் எதையும் கூற முடியாது அருமை சகோதரனே!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: