கை.அறிவழகன் எழுதியவை | ஜூன் 29, 2011

ஆரண்ய காண்டம் – இருட்டறை இயல்பு.

Aaranya-Kaandam-Stills-016

பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் ஒரு புதிய தலைமுறை திரைப்படத் துறையில் நுழைந்து வெற்றி பெறத் துவங்கி இருப்பதன் தொடர்ச்சியாய், சில நல்ல திரைப்படங்கள் தென்படத் துவங்கி இருக்கும் காலகட்டத்தில் வெளியாகி இருக்கிற ஆரண்ய காண்டத்தைப் பார்ப்பதற்கு எனக்கு இரண்டு காரணங்கள் இருந்தன, ஒன்று “சாரு நிவேதிதா” இந்தத் திரைப்படம் குறித்து ஆகா ஓகோவென்று புகழ்ந்து தள்ளி இருந்தது, இன்னொன்று யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையை சில காட்சிகளில் முன்னோட்டமாகக் காண நேர்ந்தது.

சாரு நிவேதிதா பின் நவீனத்துவக் கலைகளின் உச்சமாக இந்தத் திரைப்படத்தைப் பற்றி வரிக்கு வரி உயர்த்திப் பிடித்திருந்ததைப் படித்தபோது "ஆகா, தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இன்னொரு மைல் கல்லைக் கடக்கும் காலம் கனிந்து விட்டது" என்று அளவுக்கு அதிகமான கற்பனை ஊற்றெடுக்கத் துவங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கெலின் – (Kelin) என்றொரு Kazakasthan நாட்டுத் திரைப்படத்தைத் தன்னுடைய வலைப்பூவில் அறிமுகம் செய்திருந்தார் சாரு நிவேதிதா.

வரலாறு, பழங்குடிகளின் வாழ்க்கை, மனிதர்களின் அடிப்படை உணர்வுக் குவியல்கள், நிலவியலின் அழகு என்று ஒரு காட்சிப்படுத்தப்பட்ட புதையலைப் போல இருந்தது அந்தப் படம், பின் நவீனக் கலைகளின் மிகச் சிறந்த பண்புகளை உள்ளடக்கி இருந்த கெலினைப் பார்த்த பிறகு சாருவின் ஆரண்ய காண்டம் விமர்சனத்தைப் படித்ததில் உண்டான அதீத நம்பிக்கைகள் திரைப்படத்தை பார்க்கத் தூண்டின. கடைசியில் இந்தப் படத்தை சாரு நிவேதிதா தூக்கிப் பிடிப்பதற்குப் பின்னால் ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம் என்று என்னை நானே சமாதானம் செய்து கொள்ள வேண்டியிருந்தது.

ஒரு இருட்டறையில் இளம்பெண் ஒருத்தியும், ஐம்பதைத் தாண்டிய முதிர் மனிதன் ஒருவனும் உறவு கொள்ளும் காட்சியோடு படம் துவங்குகிறது, அழகியலையும், வாழ்க்கை நிகழ்வுகளையும் நேர்த்தியாய்ப் படம் பிடித்து வழங்குவதற்கு ஆயிரமாயிரம் காட்சிகள் இருக்கும் போது உறவு கொள்ள இயலாது துவண்டு கிடக்கிற ஆண்குறியில் இருந்து இந்தப் படத்தைத் துவங்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்ட தியாகராஜன் குமாரராஜாவின் (இயக்குனர்) உளவியல் தமிழ்த் திரைப்படச் சூழலில் ஆற்ற முடியாத துயரமாக நிலை கொள்வதோடு தொடர்கிறது திரைப்படம்.

images

இரண்டு குற்றவாளிகளுக்கு இடைப்பட்ட (சிங்கம்பெருமாள் மற்றும் பசுபதி) மோதல், வன்புணர்வுக்காக அடைத்து வைக்கப்பட்டிருக்கிற ஒரு பெண், அடியாட்களின் வாழ்க்கையில் தெறிக்கும் வக்கிரம், உரையாடல் மற்றும் இயலாமையின் சின்னமாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் ஒரு தந்தை, அவரது மகன் என்று சில குறிப்பிட்ட கதா பாத்திரங்களைச் சுற்றி நகர்கிறது கதைக்களம்.

வழக்கமான காதல், அம்மா, அப்பா சென்டிமென்ட் போன்ற உணர்வுக் குவியல்கள் ஏதுமின்றி சமூக விரோதிகளின் வாழ்க்கையில் நிகழ்கிற இயல்பானதென்று நம்ப வைக்கப்படுகிற ஒரு செய்திப் படம் போல இத்திரைப்படம் நகர்த்தப்படுவதைப் பின் நவீனத்துவக் கலைப்பாணி என்று சாரு நிவேதிதா நம்பி இருப்பதை நினைத்தால் அவரது பின் நவீனத்துவம் பற்றிய புரிதலே கவலைக்கிடமாகிறது.

முதலில் ஒரு தலைசிறந்த கலைப் படைப்பு முற்றிலும் இயல்பானதாகவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை, அது ஒரு புனைவாகக் கூட இருக்கலாம், வரலாறாக இருக்கலாம் அல்லது அழகியலும் நுட்பமும் நிறைந்த சில நிகழ்வுகளின் தொகுப்பாகவும் இருக்கலாம், இயல்பானதைச் சொல்வதென்பது ஆண்குறியின் தளர்ச்சி, ஆண்ட்டிகளை வளைக்க வழங்கப்படும் டிப்ஸ் அல்லது நிர்வாண உடலின் ரோமங்களில் காணக் கிடைப்பதாகச் சொல்லப்படும் அருவருப்பின் மிச்சமாக இருக்க வேண்டும் என்று தியாகராஜனுக்கு சாரு நிவேதிதா பாடம் எடுத்தாரோ என்னவோ?

Aaranya-Kaandam-Stills-001

கதை மாந்தர்கள் யாவரும் சமூகத்தின் அடிப்படைப் பண்புகள் பலவற்றில் இருந்து விலகி ஒன்று மிகைப்படுத்தப்பட்ட எதிர்மறை மனிதர்களாக இருக்கிறார்கள், அல்லது மனப் பிறழ்வுக்கு ஆட்பட்ட பரிதாப நிலையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள், நல்ல வேளை ராவணன் படத்தில் வருகிற சில கதாபாத்திரங்களைப் போல இவர்கள் கவிதைகள் எதையும் இக்கட்டான நேரங்களில் வாசிக்கவில்லை.

சிங்கம் பெருமாள் (ஜாக்கி ஷெராப்) "ஈ" என்று பல்லைக் காட்டி மிரட்டும் போது தமிழ்த் திரைப்படத்தில் வரும் வில்லன்களில் உடல்மொழி நோய் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. இயல்பு அல்ல அது, மாறாக மேனரிசம் வரிசையின் மற்றொரு பரிணாமம்.

திரைப்படத்தில் இரண்டு நேர்மறைப் பண்புகள் உண்டு, ஒன்று எந்தப் பிடிமானங்களுமற்ற ஒரு எளிய தந்தை மகனின் உறவு, இன்னொன்று உளவியல் நெருக்கடியில் தள்ளப்பட்டிருக்கும் ஒரு இளம்பெண்ணின் உறவுச் சிக்கல், இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது இரண்டையுமோ இயக்குனர் இன்னும் ஆழமாகப் பதிவு செய்திருந்தால் ஒருவேளை இந்தப் படத்தில் பின் நவீனத்துவக் கலையை நாம் பொருத்திப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கலாம் என்று தோன்றியது.

வெவ்வேறு கோணங்களில் நகரும் மூன்று தனிக் கதைகளை ஒரு திரைப்படத்துக்குள் அடைக்கும் போது தொடர்புச் சங்கிலி அறுபட்டுக் காட்சிகள் சிதறிப் போவதை இயக்குனர் தவிர்த்திருக்க வேண்டும், அல்லது படத்தொகுப்பாளர்கள் (பிரவீன் மற்றும் ஸ்ரீநாத் – ரெண்டு பேரு இருந்தும் கோட்டை விட்டு விட்டீர்களே) கவனம் கொண்டிருக்க வேண்டும். தனித்தனியான காட்சிகளைக் கடந்து போகிற உணர்வைப் பார்வையாளன் பெறும்போது ஒரு படைப்பின் வீரியம் குறைந்து போகிற ஆபத்து இத்திரைப்படத்தில் நிகழ்கிறது.

Yuvan-shankar-raja

உயர் கலைப்படைப்பு ஒன்றுக்கு அடிப்படையான பண்புகளாக சிலவற்றை நாம் கையாள முடியும், ஒரு மனிதக் குழுவின் பண்பாட்டு அடையாளங்கள், அதன் மீது நிகழ்கிற கதைகள், சில குறிப்பிட்ட கதாபாத்திரங்களின் உணர்வுச் சிக்கல்கள், புலன்களால் நுகர முடியாத நிலப்பரப்பின் அழகியல் அல்லது இவை அனைத்தும் கலந்து காணக் கிடைக்கிற ஒரு புனைவு என்று அடையாளம் செய்ய முடியும், சில குற்றச் சம்பவங்கள், அதன் மீது கட்டமைக்கப்படுகிற உரையாடல் வெளிகள், அதன் பின்னணியில் உலவுகிற மனிதர்கள், இருட்டறையில் உலவும் நிர்வாண மனிதனின் இயல்பு இவற்றை பின் நவீனத்துவக் கலைச் சாயல் என்று சொல்வது ஒருவகையில் பின் நவீனக் கலைகளுக்குச் செய்யும் துரோகம். ஆரண்ய காண்டம் மேற்கண்ட சம்பவங்களின் தொகுப்பை மட்டுமே நம்பி இருக்கிறது.

கொடுக்காப்புளி மாதிரியான பல சிறுவர்கள் இந்தச் சமூகத்தில் உண்டென்பதை நாம் ஒப்புக் கொண்டாலும் ஒரு தந்தையிடத்தில் தலை வெடித்தபடி நடைமுறைச் சமூக வாழ்க்கைக்குப் பொருந்தாத விஷயங்களைப் பேசும் சிறுவனாக மனதோடு ஒன்றுவதற்கு மறுக்கிறான் கொடுக்காப்புளி, கடத்தல் விவகாரங்களில் அந்தச் சிறுவன் பேரம் பேசுகிற காட்சிகள், பணம் கேட்பதற்குத் தந்தையைத் தூண்டும் காட்சி போன்றவற்றில் இயல்பு நிலைகளில் இருந்தும், நடைமுறை வாழ்க்கையில் இருந்தும் விலகிச் செல்லும் அந்தச் சிறுவனைக் கதையின் போக்கோடு ஓட்ட வைக்கவே இயலாமல் போனது பெரிய பலவீனம்.

திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை, வினோத் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அருகிலும் நம்மை அழைத்துச் சென்று நம்மை அறிமுகம் செய்வது மட்டுமன்றி அவர்களை நாம் பின்தொடர்ந்து செல்வதற்கும் உதவி செய்கிறார், ஒரு பார்வையாளனின் கோணத்தை அடையாளம் கண்டு அவனை மட்டுமே பின்தொடர்ந்து ஒளிப்பதிவு செய்திருப்பது இத்திரைப்படத்தை மிகப் பெரிய அளவில் தூக்கி நிறுத்துகிறது.

aaranya-kaandam-1022-12

எடுத்துக்காட்டாக காரில் பயணம் செய்யும் போது பாட்டுப் போடுகிற பின் சீட்டு மனிதனின் அசைவுகளில் காருக்குள் இருப்பது மாதிரி ஒரு உணர்வு உருவாவதை ஒரு ஒளிப்பதிவாளனின் தனிப்பட்ட வெற்றி என்று சொல்லலாம். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒளிப்பதிவு வரிசையில் நீண்ட காலம் இடம் பிடிக்கப் போகும் வினோத்துக்கு வாழ்த்துக்கள். (தனிப்பட்ட டவுட்டு – ஆனா சிங்கம் பெருமாளின் அறைக்குள் மட்டும் கடைசி வரைக்கும் நீங்க விளக்கே போடலையே ஏன் வினோத்?)

யுவனின் இசை மூட்டையில் இருந்து சிதறிப் போன நெல்லிக்கனிகளை அரைத்துத் தேன் கலந்து தனது ஒற்றை இசைக் கருவிகளின் இசைப்பின் மூலம் ஒட்டிச் சேர்த்துப் படைக்கிறது, இசை ஒரு அசைக்க முடியாத கதாபாத்திரம் போல நெஞ்சில் ஒட்டிக் கிடப்பதை இத்திரைப்படத்தின் மிகப்பெரிய அடையாளம் என்று சொல்லலாம்.

பெரும்பாலான காட்சிகளில் பின்னணியில் ஒலிக்கும் திரைப்படப் பாடல்கள், தொலைக் காட்சி உரையாடல்கள் மற்றும் இயல்பான ஒலிக்குறிப்புகள் கதை நிகழ்கிற தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்வதோடு கதையின் போக்கில் பார்வையாளன் ஒன்றி இருக்க முடிவதில் பெரிய அளவு உதவி செய்கிறது. ஒருவேளை இவ்விரண்டு இயல்பான படைப்பாளிகளின் படைப்பூக்கம் தான் சாரு நிவேதிதாவுக்கு பின் நவீனத்துவக் கலைச் சாயலை நினைவு படுத்தியதோ என்னவோ?

கெலின் மாதிரியான மிகச் சிறந்த பின் நவீனத்துவக் கலைப்படைப்புக்கு முன்னால், அட அவ்வளவு ஏன்? அழகர்சாமியின் குதிரை, வானம் போன்ற சமகாலத் திரைப்படங்களோடு ஒப்பிடும் போது கூட ஆரண்ய காண்டம் இயல்பு வண்ணம் பூசப்பட்ட அதே அரதப் பழைய தமிழ்த் திரைப்படம் தான் என்கிற ஏமாற்றம் நமக்குள் உருவாகும் போது படம் முடிவுக்கு வருகிறது சில பல வழக்கமான திருப்பங்களோடு.

azhagarsamiyin-kudhirai-hot-wallpapers-026

ரவி கிருஷ்ணாவும் (சப்பை), ஜாக்கி ஷெராப்பும் (சிங்கம் பெருமாள்) தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களை உள்வாங்கி வெகு நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள், யாஸ்மின் பொன்னப்பாவும் தனது பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார், குறிப்பிடப்பட வேண்டிய நடிப்பு அஜய் ராஜுடையது, ஆண்ட்டிகளை மடக்குவது குறித்து ஆய்வு நோக்கில் பேசினாலும் முகக் குறிப்புகளிலும், உடல் மொழியிலும் ஒரு தேர்ந்த நடிகரைப் போல ஒளிர்கிறார்.

ஒரு புதிய வழங்கு முறையையும் (Presentation), தொழில் நுட்பங்களையும் மிக நேர்த்தியாக வழங்க முடிந்த இயக்குனருக்கு இன்னும் சிறந்த ஒரு கதைக் களத்தை நம்பிக் கொடுத்துப் பார்க்கலாம் எஸ்.பி.சரண், நம்பிக்கையோடு நாமும் தியாகராஜனின் அடுத்த படத்துக்காகக் காத்திருப்போம், வாழ்த்துக்கள் பாஸ்,

இன்னும் சில ஆண்டுகளில் இயல்பும், அழகியலும் இணைந்து தொழில் நுட்பத்தால் செதுக்கி வார்க்கப்படுகிற கெலின் மாதிரியான ஒரு திரைப்படத்தைத் தமிழில் காண முடியும் என்கிற நம்பிக்கை எஞ்சியிருக்கிறது.

*******

Advertisements

Responses

  1. blabbering

  2. ungal peyarai maatri kollalame…(charu vai padithu vittu padam paarka sendrathe atharku oru sandru)….Aranya Kandam is the begining of many good things in Tamil cinema…

  3. என் பெயரை மாற்றிக் கொள்வது சாத்தியமில்லை, ஏனென்றால் வரலாற்றை மாற்றுவதும், அழிப்பதும் அத்தனை எளிதானதில்லை, சாருவிடத்தில் எல்லாமே தவறாக இருக்கும் என்கிற உங்கள் மேலோட்டமான முடிவை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம், இந்தக் கட்டுரை சொல்ல வந்த கருத்து என்ன என்பதை இன்னொரு முறை படித்துப் பார்த்து உங்கள் எண்ணத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம், உங்கள் பெயரை சாருவின் எதிரி என்று மாற்றிக் கொள்ளலாம், அல்லது இந்த வலைப் பூவுக்கு அடிக்கடி வருகிற, எனது எழுத்துக்களைப் படிக்கிற உங்கள் எண்ணத்தையே கூட மாற்றிக் கொள்ளலாம். ஒன்றும் குறைந்து நட்டமாகி விடப் போவதில்லை எனக்கும், உங்களுக்கும்…….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: