கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 28, 2011

ராஜபார்ட் சேவுகன். (சிறுகதை)

53799

"டேய், பெரிய பயலே, வாடா இங்க, கொஞ்சம் தலப்பாயையும், அங்கியையும் எடுத்துக் குடுக்கிறியா" என்று மகனை அழைத்தார் சேவுகன், நாற்காலியை எடுத்துப் போட்டு பாண்டி என்கிற வீரபாண்டியன் அப்பாவின் தலப்பாயையும் அங்கியையும் பரணில் இருந்து எடுத்துக் கீழே போட்டான், தலை வைக்கும் இடத்தில் அழுக்குப் படிந்து பிசுபிசுப்பாக ஒட்டிக் கொண்டிருந்தது, பார்க்கவே அருவருப்பாகவும், குமட்டிக் கொண்டும் வந்தது பாண்டிக்கு, சேவுகன் அந்தத் தலைப்பாகையையும், அங்கியையும் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.

"மேகலா, அந்த ஊசியையும் நூலையும் கொஞ்சம் எடுத்துக் குடு புள்ள" என்று உரக்கக் குரல் கொடுத்து விட்டு அங்கியில் படிந்திருந்த தூசியைத் தட்ட ஆரம்பித்தார் சேவுகன் என்கிற ராஜபார்ட் சேவுகன். அங்கியின் இடது பக்கத்தில் இருந்த பூ கிழிந்து கீழே விழும் அளவுக்கு நைந்து போயிருப்பதைப் பார்த்தவுடன் அதைச் சரி செய்ய வேண்டும் என்று தோன்றியது அவருக்கு.

"யப்பா, எதுனாச்சும் திருவிழாவுக்கு புக் பண்ணியிருக்காகளா?" என்று கேட்டபடி ஊசியில் கோர்க்கப்பட்ட நூலை நீட்டினாள் மேகலா, "ஆமா புள்ள, சாரங்கோட்டத் தேரு ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தேன் ஓட்டப் போறாகளாம், அம்பலாரு நம்ம சின்னச்சாமியக் கூப்புட்டு நேத்து சொல்லி இருக்காரு, தடபுடலா தேரு ஓட்டிப்புடனும் சின்னச்சாமி, உங்க ட்ரூப்புத்தேன் நாடகம்னு" சொல்லி அட்வான்சும் குடுத்துட்டாராம், சின்னச்சாமி காலைல டீக்கடைல பாத்து சொன்னான். ரெண்டாயிரம் தரேண்ணே, அங்கியும், தலைப்பாயும் மட்டும் ரெடி பண்ணி வைங்கன்னான், இந்த அங்கி கொஞ்சம் பூக் கிழிஞ்சாப்ல இருக்கு, அதத் தச்சுப்புடுவம்னு உக்காந்தேன்" என்று சொல்லியபடி கண்ணுக்கு அருகில் ஊசியையும், ஊசிக்கு அருகில் நூலையும் வைத்துக் குறி பார்த்துக் கொண்டிருந்தார் சேவுகன். குறி நான்காவது முறையாகத் தவறியது.

மேகலா, சேவுகனுக்கு அருகில் முட்டி போட்டு அமர்ந்தாள், "குடுங்கப்பா நான் தச்சுத் தாரேன்" என்று அங்கியைப் பறித்து மடியில் வைத்துக் கொண்டு அப்பாவை நிமிர்ந்து பார்த்தாள், அப்பா இப்போதே கிட்டத்தட்ட ராஜபார்ட் ஆகி விட்டிருந்தார், நீண்ட நாளைக்குப் பிறகு அப்பாவுக்கு ஒரு நாடகம் புக் ஆகி இருக்கிறது, பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு அப்பா நாடகங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டங்கள் மேகலாவின் நெஞ்சில் நிழலாடியது, அப்பா ஒரு சினிமா நடிகரைப் போலக் காலையில் எழுந்து பல மனிதர்களைச் சந்திப்பார், சிலர் பணத்தை வைத்துக் கொண்டு கெஞ்சுவார்கள், "அண்ணே, சரோஜா வள்ளியா இருந்தா சேவுகன் தானப்பா சரியா வரும்னு மணியக்காரய்யா சொல்றாக, அவுக வார்த்தைக்காவது வெல குடுங்க, கூட நானூறு ஐநூறு கூடச் சேத்து வாங்கிக் குடுக்குறேன்" என்று கெஞ்சுபவர்களை விரட்டி அடிப்பார் அப்பா, "கைநீட்டிக் காசு வாங்குன பொறவு வரலைன்னு சொல்றது அம்புட்டு நாயமா இருக்குமா தவசி, இந்தப் பயலுவ புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்கே" என்று பக்கத்துக்கு வீட்டுத் தவசி ஐயாவிடம் புலம்புவார்.

அப்பாவின் பயண எற்பாடுகளில் அம்மா தீவிரமாக இருப்பாள், அப்பாவுக்குத் தூதுவளைத் துவையல் செய்வது, அவரது வேட்டியை மடித்து தோல்பையில் வைப்பது, அவரது அங்கியை அழுக்கில்லாமல் ஈரத் துணியால் துடைத்து வைப்பது என்று ஏறத்தாழ ஒரு ராஜபார்ட் மனைவியாகி விடுவாள் அம்மா, அந்த நேரங்களில் அம்மாவிடம் எதுவும் கேட்க முடியாது, "இரு புள்ள, அப்பா கெளம்பிக்கிட்டு இருக்காரில்ல, அந்த மனுஷன் நல்லா இருந்தாத்தேன் எல்லாத்துக்கும் சோறு தண்ணி கெடைக்கும்" என்று சொல்லியபடியே அப்பாவைத் தெருமுனை வரை வழி அனுப்பி விட்டுத்தான் நிகழ் காலத்துக்கு வருவாள் அம்மா. எத்தனை நெருக்கமான கணவன் மனைவி என்று இப்போது தோன்றியது மேகலாவுக்கு, மேகலா திருமண வயதைத் தாண்டி வெகு காலமாய் ஒரு நல்ல பயலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள், அந்த நல்ல பயலை எங்கும் காணவே முடியாமல் திரிந்து அலைகிறார் சேவுகனும், காசு வாங்காமக் கல்யாணம் பண்ணிக்கிற நல்ல பயலுக இன்னும் இருக்காங்கே என்று சேவுகனும் சரி, மேகலாவும் சரி இன்னும் தீவிரமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

"ஏலே,பாலு, அது என்ன பேரு சொன்ன?", பத்தாம் வகுப்புப் படிக்கும் இளைய மகனை அழைத்துக் கேட்டார் சேவுகன், "ஜாமண்ட்ரி பாக்சுப்பா" என்று அலுக்காமல் இம்முறையும் சொன்னான் பால்பாண்டி, இந்த மாதத்தில் மட்டும் பதினோராவது முறையாக இதே கேள்வியைக் கேட்கிறார் சேவுகன், அவனும் அலுக்காமல் அப்பா இன்னைக்கு வாங்கி வருவார், நாளைக்கு வாங்கி வருவார் என்று நம்பிக்கையில் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான், தேர்வுகள் வருவதற்குள் ஜாமண்ட்ரி பாக்சை அப்பா எப்படியும் வாங்கித் தந்து விடுவார் என்று பால்பாண்டி நம்பினான். மேகலா அப்பாவின் அங்கியைத் தைத்து முடித்திருந்தாள், அப்பா, அங்கியைக் கையில் ஏந்திக் கொண்டு ஒரு விதமான ஏக்கத்தோடு கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார், அவருடைய நினைவுகள் பின்னோக்கிப் பாய்ந்தன,

dali-persistence-of-time

இதே அங்கியோடு தான் மிகச் சிறந்த நாட்டுப் புறக் கலைஞர் என்கிற விருதை அவர் எம்.ஜி.யாரின் கையால் வாங்கி இருந்தார், எத்தனை பெரிய பெரிய மனிதர்கள், குழல் விளக்குகள், மிகப் பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த மேடையில் முதலமைச்சரின் அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கூட்டத்தைப் பார்த்த போது எப்போதும் இல்லாத ஒரு நிறைவு உண்டாகி இருந்தது சேவுகனுக்கு, ஊர் ஊராகச் சுற்றி வந்து இந்த மேடை நாடகத்தை விடாது நடத்திக் கொண்டிருந்த வைராக்கியத்தின் விலையை அவர் அந்த மேடையில் பெற்றிருந்தார், தனது வாழ்க்கையின் மிக உயரமான இடத்தைத் தான் அடைந்து விட்டதாக அன்று சேவுகன் உணர்ந்தார். ஆனால், விருதுகளையும், உயரங்களையும் தாண்டி வாழ்க்கையின் எளிதான உண்மைகள் எல்லா மனிதர்களையும் துரத்தி வருவதை சேவுகனால் மட்டும் என்ன தடுத்து விடவா முடியும்??

சாரங்கோட்டைத் தேர் நாளும் வந்து விட்டது, நீண்ட நாட்களுக்குப் பிறகு தோட்டத்தில் அமர்ந்து ஒருமுறை நாடகப் பாடல்களை நினைவு படுத்திக் கொண்டார் சேவுகன், மேகலா, இடையிடையில் வந்து அப்பாவுக்குத் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தாள், சின்னச்சாமி வண்டியை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழையவும், அப்பா தலைப்பாகையை எடுத்துத் தனது பைக்குள் வைத்துக் கொள்ளவும் சரியாக இருந்தது, "அண்ணே, கெளம்புவமா, ஆர்மோனியம் நேரா மேடைக்கு வந்திர்றேன்னு சொன்னான், அது என்னவோ ரெண்டு மூணு பட்டன் போயிருச்சாம், சரி பண்ணிக்கிட்டு வர்றேன்னு சொன்னான்" என்ற சின்னசாமியையும் அவனது முகத்தில் நீண்ட நாளைக்குப் பிறகு தெரியும் மகிழ்ச்சியையும் கவனித்துப் பார்த்தார் சேவுகன்.

சில நேரங்களில் உலகம் மிக அழகானதாய் இருக்கிறது, நமக்கு நெருங்கிய மனிதர்களின் கண்களில் தெரியும் மகிழ்ச்சியில் அத்தகைய உலகின் நிழல் படிந்திருக்கும். வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் மேகலாவிடம் "அம்மா, பாண்டி வந்ததும் நீ கடைக்குப் போ", என்று சொல்லி விட்டுத் திரும்பினார், சுருக்கென்றது சேவுகனுக்கு, "அவுக அம்மாவே நின்னாப்புல இருக்குடா தம்பி" என்று சின்னச்சாமியிடம் சொன்னபோது சேவுகனின் கண்களில் மனைவியின் நினைவுகள் தேங்கிக் கிடந்தன.

அம்பலாரின் வீட்டுக்கு அருகில் வண்டி நின்றதும், சேவுகன் கீழே இறங்கிக் கொண்டார், சுப்பிரமணி என்ற அம்பலார் வாசலில் நின்றபடி வரவேற்றார், “ஏய், வாப்பா சேவுகா, எம்புட்டுக் காலமாச்சு நம்ம வீட்டுல கை நனைச்சு, அந்தப் பகட்டும், பவிசும் ஒன்னைய விட்டுப் போகலையே, எல்லாம் எம்.ஜி.யாரு குடுத்த செல்லம்" நாடகம் போடுவதும், நாடக நடிகர்களை வீட்டுக்குள் அழைத்துச் சாப்பிட வைப்பதும் பெருமைக்குரிய காலமாய் இருந்த காலத்தில் இருந்து அம்பலார் இப்படித்தான் கேலியும் கிண்டலுமாகப் பேசிக் கொண்டிருந்தார், நீண்ட நாளைக்குப் பிறகு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்ததில் அவருக்கு அளவற்ற மகிழ்ச்சி,

பறையனும் பள்ளனும் உள்ளே நுழைய அனுமதிக்காத அம்பலக்காரர்களின் வீட்டில் நாடக நடிகர்களுக்கு மட்டும் சாதி இல்லாமலிருந்தது சேவுகனுக்கு ஆச்சரியமாய் இருக்கும். "அதுக்காக எல்லாப் பறையனும், பள்ளனும் என்ன நாடகத்துலயாடா தம்பி நடிக்க முடியும்" என்று ஒரு முறை சின்னச்சாமியிடம் கேட்டார் சேவுகன், "இல்லண்ணே, இவங்களுக்கு உள்ளுக்குள்ள பொசுபொசுன்னு தான் இருக்கும், ஆனாலும், காலங்காலமா நாடகக் கோஷ்டிக்கு வீட்டுக்குள்ள சோறு போட்டுப் பழகினதுநாள நம்மளையும் உள்ள கூப்புடுறாங்கே" என்றான் சின்னசாமி. "இருக்கும்டா" என்று சொல்லியபடி வேலையில் வந்து நின்றார் சேவுகன். பிறக்கும் போதே கிடைக்கிற உயர் நிலையை யார் தான் வெறுப்பார்கள், பிறந்த பிறகும் அந்த உயர் நிலைகளைத் தேடித்தானே ஒவ்வொரு மனிதனும் நகரத் துவங்குகிறான் என்று சம்பந்தமே இல்லாமல் தோன்றியது சேவுகனுக்கு.

Carnival_of_Time_Artwork

"ஒன்னுக்கு பச்சக் கலர்ல இருக்கச் சொல்லுங்க, அவர நான் அம்பலார்னு ஒத்துக்குறேன்" என்று ஒரு முறை சின்னச்சாமி போதையில் சொன்னது நினைவுக்கு வந்தது. சிரித்தபடி மேடையை நோக்கி நகரத் துவங்கினார் சேவுகன், மேடையின் முகப்பு விளக்குகள் ஒளிரத் துவங்கி இருந்தன, தொலைவில் இருந்து பார்த்தபோது அந்த நாடக மேடை அத்தனை அழகானதாக இருந்தது, காற்றில் அசையும் அதன் துணித் தூண்கள் ஏதோ ஒரு அரசவையின் மிச்சம் போல மனசுக்குள் தொக்கி நின்றது.

மேடையின் பின்புறமாக தட்டியை விலக்கிக் கொண்டு சென்ற போது அங்கே சரோஜாவும், கணேசனும் அமர்ந்து ரோஸ் பவுடர் பூசிக் கொண்டிருந்தார்கள், சரோஜாவின் முதுகுக்குப் பின்புறம் இருந்த தட்டியை கொஞ்சம் விலக்கி யாரோ ஒரு விடலைப் பையன் பார்த்துக் கொண்டிருந்தான், சேவுகன் உள்ளே நுழைந்ததும் எழுந்து காலைத் தொட்டு வணங்கினான் கணேசன், "இருக்கட்டும்டா, இன்னும் பழைய காலத்துலேயே இருக்கியேடா" என்று அவனைத் தொட்டுத் தூக்கினார் சேவுகன். பையில் இருந்து துண்டை எடுத்துக் கீழே விரித்துக் கொண்டு அவர்களோடு அமர்ந்து தன்னுடைய அலங்காரத்தைத் துவக்கினார் சேவுகன்.

சரோஜாவின் தங்க முலாம் பூசிய நகைகளைப் பார்த்தவுடன் பால்பாண்டியின் "ஜாமண்ட்ரி பாக்ஸ்", வீரபாண்டியின் "சைக்கிள் டயர்", மேகலாவின் "உடைந்த ஜிமிக்கி" எல்லாம் சேவுகனின் நெஞ்சில் வந்து அழுத்தியது. அங்கியை அணிந்து கொண்டு ஒரு முறை தலைப்பாகையை வைத்துக் கொண்டு கண்ணாடியைப் பார்த்தார் சேவுகன், கம்பீரமாய் ஒரு அரசனைப் போல அங்கே ராஜபார்ட் நின்று கொண்டிருந்தார், இன்னும் எட்டு மணி நேரத்திற்கு அவர் தான் இந்தப் பகுதி முழுவதற்கும் ராஜா, கதாநாயகன், அம்பலார், மணியக்காரர் எல்லாமே.

வந்தனம் மோவ்வ்வ்வவ்வ்வ்………..நாளும் தெரிஞ்ச சனம், பாரும் புகழும் தினம் வந்தனம் மோவ்வவ்வ்வ்வ்…..ஹார்மோனியம் வெகு உற்சாகமாகத் தனது உச்சஸ்தாதியில் பாடத் துவங்கி இருந்தான், சேவுகனின் வாழ்க்கையில் இன்னுமொரு நாடகம் துவங்கி இருந்தது, அந்தக் கலவையான இசையைக் கேட்டவுடன் ஒரு புதிய பலம் பெற்று விடுகிறார் சேவுகன், தனது பிறப்பு, தனது சிறுமையாக இந்த ஊர் சொல்லும் சாதி எல்லாவற்றையும் மறந்து ஒரு கலைஞனாகி விடுகிறார் சேவுகன், கலை மிகக் குறைந்த நேராமாகிலும் அவரை ஒரு மனிதனாக வைத்திருக்கிறது, அதற்காகவே அவர் நாடகங்களை விடாமல் நடிக்கிறார். நேரம் செல்லச் செல்ல காற்றும், இசையும், மக்கள் திரளுமாய் ஒரு புத்தம் புது உலகம் மின்னத் துவங்கி இருந்தது. தனது பகுதியை எதிர் நோக்கி மேடையின் பின்புறமாய் அமர்ந்திருந்தார் சேவுகன்.

அப்போது தான் அந்தக் குழப்பமான குரல் கேட்டது சேவுகனுக்கு, மேடையில் ஏறிக் கணேசனிடம் சில இளைஞர்கள் "தேவர் பாட்டுப் பாடுறா, நாடகம் ஆரம்பிச்சு ஒரு மணி நேரமாச்சு இன்னும் பாடலைன்னா என்ன அர்த்தம்" என்றபடி குழப்பம் செய்து கொண்டிருந்தார்கள், ஊரில் தகராறுகள் வந்ததில் இருந்து நாடகத்தில் எந்த சாதிப் பாடலும் பாடக் கூடாது என்று தடை வாங்கி வைத்திருக்கிறார்கள், இப்போது இவர்கள் குழப்பம் செய்தால் இந்த நாடகமும் நடக்காது போலிருக்கிறதே என்று கவலையோடு மேடையை நோக்கி நடந்து திரைக்குப் பின்புறம் நின்று கொண்டார் சேவுகன், கணேசன் பிடிவாதமாய் "எந்தப் பாட்டும் பாடக் கூடாதுன்னு போலீஸ்ல சொல்லி இருக்காகண்ணே" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தான். "டேய், தேவரையா பாட்டுப் போடலைன்னா நாடகமே வேண்டாம்டா, அடிச்சுப் பத்துங்கடா எல்லாரையும்" என்றபடி ஒரு முடிவோடு சில இளைஞர்கள் வந்திருந்தார்கள், ஒதுக்குப் புறமாய் சில குரல்கள் இப்போது தெளிவாய்க் கேட்கத் துவங்கின சேவுகனின் செவிகளில்.

0

"டேய், தேவர் பாட்டுப் போட்டா, அம்பேத்கர் பாட்டுப் போடணும்டா" என்றவாறு புதுக்குடி இளைஞர்கள் சிலர் எழுந்து நிற்கத் துவங்கி இருந்தார்கள். நாடகம் தடைபட்டிருந்தது, நீண்ட காலம் கழித்துக் கிடைத்த ஒரு நாடக வாய்ப்பை இந்தப் பாழும் சாதி வந்து தின்னப் பார்க்கிறதே என்று சேவுகனின் அடிவயிற்றில் இருந்து கவலைகள் உருளத் துவங்கின. இறங்கி நடக்கத் துவங்கினார் சேவுகன், சாரங்கோட்டை இளைஞர்களைப் பார்த்து "யப்பா, நல்லா இருக்குற ஊருக்குள்ள கலவரம் பண்ண வேணாம், எதுனாலும் பேசிக்கலாம்” என்று சமாதானம் செய்யத் துவங்கினார், திடுமென்று ஒரு கல் வந்து மேடைக்கு அருகிலோ விழுந்தது, தொடர்ந்து யாரோ யாரையோ அடிக்கும் சத்தமும், கூச்சலும் தொடர நீண்ட காலத்துக்குப் பிறகான ஒரு நாடக வாய்ப்பை இழந்தார் ராஜபார்ட் சேவுகன்.

மறுநாள் காலையில் எழுந்து திண்ணையில் அமர்ந்து இரவு வீட்டுக்கு வந்து கழற்றி வாய்த்த அங்கியை வெறித்துப் பார்த்தபடி இருந்தார் சேவுகன், தொலைவில் சின்னச்சாமியின் வண்டிச் சத்தம் கேட்டதும், முகத்தைத் துடைத்துக் கொண்டார், கண்பார்வைக்கு அருகில் வந்ததும் தான் தெரிந்தது சின்னச்சாமியின் வண்டியின் பின்புறமாக அம்பலார் அமர்ந்து இருப்பது, வாங்க, வாங்க, பெரியவுகெல்லாம் வீட்டுக்கு வந்திருக்கீக, உக்காருங்க, டேய் பாலு அந்த ஸ்டூல எடுத்திட்டு வா, என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து மேகலாவிடம் தேநீர் போடச் சொல்லி விட்டு ஓட்டமும் நடையுமாக வந்தார்.

"யப்பா, சேவுகா, என்னமோ, நல்லாத் தடபுடலா நடந்து முடிய வேண்டியது, கடைசி நேரத்துல இப்படி ஆயிப் போச்சு, மனசுல ஒன்னும் வச்சுக்க வேண்டாம், இந்தா, பேசுன படி பணம், எப்பா சின்னச்சாமி குடுப்பா" என்று ஐநூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து நீட்டினார் சுப்பிரமணி என்ற அம்பலார்.

"ஐயா, தப்பா நெனச்சுக்காதீங்க, என்னடா சேவுகன் இப்புடிச் சொல்றானேன்னு!!, வேலை முடிஞ்ச பிறகு தான் எனக்குக் கூலி வாங்கிப் பழக்கம், நாடகம் முடியுற வரைக்கும் யாருகிட்டயும் அஞ்சு பைசா வாங்கி எனக்குப் பழக்கம் இல்ல, தயவு பண்ணி இன்னொரு வாட்டி நாடகம் முடிஞ்ச பெறகு சேத்துக் குடுங்க" என்றார். அம்பலாரும், சின்னச்சாமியும் மலைத்துப் போய் சேவுகனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள், "இல்ல, சேவுகா, இப்ப இருக்குற நெலமைக்கி வெவரம் புரியாமப் பேசுறியே" என்று ஏதோ பேசத் துவங்கிய அம்பலாரை இடை நிறுத்தி மிடுக்காகவும் உறுதியான குரலிலும் சொன்னார் சேவுகன்.

imagesCAIGIQNY

நெலம மோசமாப் போனா திருடியும், அண்டியும் பொழைக்க முடியாது ஐயா, ராஜபார்ட் சேவுகன்னு சொன்னா நாளைக்கு யாரும் காசுக்கு மாரடிச்ச பயன்னு சொல்லக்குடாது பாருங்க" அந்தப் பேரும், அடையாளமும் தாயா எனக்கு வேணும், காசெல்லாம் நெறையப் பாத்துட்டேன்" என்றபடி எழுந்தார்.

அம்பலார், மெல்ல எழுந்து கிளம்புவதற்குத் தயாரானார், சின்னச்சாமியும் எழுந்து கொள்ள, மேகலா தேநீர்க் கோப்பைகளை எடுத்துக் கொண்டு நடக்கத் துவங்கினாள், ஒரு நல்ல பயலும் கெடைக்கக் கூடாது எனக்கு, அப்பாவோடையே இருந்து செத்துரனும் போலத் தோன்றியது அவளுக்கு, வீட்டுக்குள் பாண்டி என்ற வீரபாண்டியன் அப்பாவின் தலைப்பாகையைக் கையில் எடுத்து மெல்ல வருடிக் கொண்டிருந்தான், முன்பிருந்த அழுக்கின் பிசுபிசுப்பும், குடலைப் புரட்டும் நாற்றமும் இப்போது அதில் இல்லை. மாறாக ஒரு நேர்மையான கலைஞனின் வரலாற்று நறுமணம் வீடெங்கும் பரவிக் கிடப்பதை உணரத் துவங்கினான்.

************

Advertisements

Responses

  1. சேவகனின் வாழ்க்கை ஒரு இனம்புறியாத உணர்வை தந்தது….நாட்டுப்புற கலையையும் வெளில கொண்டு வந்ததற்கு நன்றி…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: