கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 1, 2011

"தோலய்யா" என்றொரு மனிதர்.

oldmuslim_800

"தோலய்யா, இறந்து போய் விட்டார்" என்கிற சொற்களை ஒரு உரையாடலின் போது மிக எளிதாகக் கடக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை, "தோலய்யா" வின் மரணம் அத்தனை பரபரப்பானதாக இருக்க வாய்ப்பில்லை தான், ஏனென்றால் அவருடைய அழுக்குப் படிந்த தலையணைக்குக் கீழே கோடிக்கணக்கில் பணமும், வைர நகைகளும் இருந்திருக்காது, கடைசி காலத்தில் மட்டுமன்றி எப்போதுமே அவர் படித்துக் கொண்டிருந்த ஒரு சிறு குரான் நூலும், வெற்றிலைப் பையும், சில அழுக்குப் படிந்த ரூபாய் நோட்டுக்களும் மட்டுமே அவரிடம் மிச்சமிருந்தன.

அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது "ஐயா, தோலையா செத்துப் போயிட்டாருப்பா", என்று சொன்னார்கள், அம்மாவுடன் பேசி முடித்த பிறகு சில நிமிடங்கள் எந்த இயக்கங்களும் இன்றிக் கடந்து போவது போலிருந்தது, கொதிக்கும் சோற்றுப் பானையில் இருந்து தவறிக் கீழே விழுந்து தனித்துக் கிடக்கும் ஒரு பருக்கையைப் போல அவரது முகம் எனக்குள் கிடப்பதை உணர முடிகிறது.

தோலைய்யாவை ஒரு மாலையும், இரவும் கலந்த நேரத்தில் திடுமெனச் சந்திக்க நேர்ந்தது, அந்த இரவில் அவர் ஒரு அரசரைப் போல வீட்டுக்குள் அமர்ந்திருந்தார், அவரைச் சுற்றி அவரது பேரக் குழந்தைகள், மகன்கள், மருமக்கள், இன்னும் சில பெரியவர்கள், மீரா ஐயா என்று ஒரு கூட்டமே அமர்ந்திருந்தது, மனிதர்கள் தனித்து விடப்பட்ட ஒரு நகர வீதியில் அப்படி ஒரு கண் கொள்ளாத காட்சி அந்த வீட்டுக்குள் ஒளிந்திருந்ததை நான் அருகில் இருந்து பார்க்க நேர்ந்தது ஒரு விபத்தைப் போல இருந்தாலும், கிளர்ச்சியான மனித உணர்வாக இருந்ததை மறைக்க முடியாது.

சில குழந்தைகள் ஒரு சிறு குன்றைப் போல அமர்ந்திருந்த அவரது உருவத்தின் மீது ஏற முயன்று கொண்டிருந்தார்கள், மலையுச்சியில் வீசும் காற்றைப் போல அவர் ஏதும் செய்யாமலிருந்தார், குழந்தைகள் ஏற முயல்வதும், பிறகு சறுக்கி விழுவதுமாய் இருந்தார்கள், அவரது மூன்று மகன்களில் இருவர், நாளை ஆடு பிடிக்கச் செல்ல வேண்டிய இடங்கள் குறித்து அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள், ஒரு பேராசிரியரிடம் பாடம் கேட்கிற மாணவர்களைப் போல அவர்கள் வெகு அடக்கமாய் அமர்ந்திருந்தார்கள், தோலய்யா என்னை நிமிர்ந்து ஒரு முறை பார்த்து விட்டு அவரது பெரிய மகனை நோக்கித் தனது பார்வையைத் திருப்பினார். "கலாக்கா மகேந்த்தா, மூத்த பய" என்று தந்தையிடம் என்னை அறிமுகம் செய்தார் சாகுல் அண்ணன்.

"கலா மயனா, சின்னப் புள்ளைல பாத்துதுப்பா, நெனப்பில்ல, வாய்யா உக்காரு" என்று வாஞ்சையோடு தனக்கு அருகில் என்னை அமர்த்திக் கொண்டார், இப்போது சில குழந்தைகள் என் மீதும் ஏறத் துவங்கி இருந்தார்கள், அவரது பெருத்த உருவத்தின் அருகே அப்போது நானும் ஒரு குழந்தையாகி இருந்தேன், அது அவர்களின் இரவு உணவு நேரம், "பாத்திமா" என்று உள்ளறையை நோக்கிக் குரல் கொடுத்து அவர் அமைதியானபோது சில தட்டுக்களும் ஒரு பெரிய பேசினில் நெய்ச்சோறுமாக அந்த அம்மா வந்தார்கள், சுற்றிலும் மனிதர்கள் சூழ அந்த நெய்ச்சோற்றைக் கரண்டியில் எடுத்து அனைவருக்கும் பரிமாறத் துவங்கினார் தோலய்யா.

images

எங்கள் பகுதியில் இருக்கும் பழைய இஸ்லாமியக் குடும்பங்களில் பெரும்பாலும் பெண்கள் பரிமாறும் பழக்கம் இல்லை, நடுவில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களை அவரவரே எடுத்துச் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஆனாலும் அன்று என்னவோ தோலய்யா எங்கள் எல்லோருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தார். திண்ணைக்கு அருகில் கட்டப்பட்டிருக்கும் இரண்டு நாய்கள், சில ஆடுகள், நான்கைந்து குழந்தைகள், உள்ளறையில் சில பெண்கள், நான், மீரா ஐயா, ஒரு தோல் வணிகர், என்று ஒரு எளிய குடும்பத்தின் இரவில் கூட்டமாய் உணவு சாப்பிடுவது ஏதோ விழாக்காலம் போலிருந்தது.

உணவு நேரத்தில் வீட்டுக்கு வரும் யாராக இருந்தாலும் சாப்பிட்டாக வேண்டும் என்பதை ஒரு கண்டிப்பான விதியாகவே தோலய்யா பின்பற்றிக் கொண்டிருந்தார், இந்துக்கள், கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் போன்ற வேறுபாடுகள் எதையும் தோலய்யா வீட்டுத் தட்டுகள் அறிந்திருக்கவில்லை. அந்த சந்திப்புக்குப் பிறகு நான் பலமுறை தோலய்யாவைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. தோலய்யா தீவிர இஸ்லாமிய மரபுகளைப் பின்பற்றும் அந்தப் பகுதி ஜமாத்தின் தலைவராக இருக்கும் பெரிய மனிதர், அவரது குடும்ப வருமானம் ஒன்றும் சொல்லிக் கொள்கிற அளவில் பெரிதில்லை, ஆனாலும் அவரது வீட்டின் அடுக்களையில் எப்போதும் பிறருக்கான சோறு வடிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. அது குறித்த பல்வேறு விமர்சனங்களை அவர் காலம் முழுதும் எதிர் கொண்டார்.

சொந்த வீட்டில் மட்டுமல்லாது, மருமகன்கள், சம்மந்த வீட்டு மனிதர்கள், ஜமாத் நண்பர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் என்று பல நேரங்களில் தோலய்யாவின் முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாய் இருப்பது அவர் எல்லோருக்கும் இப்படி வடித்துக் கொட்டுவது தான் என்று புகார் வாசித்துக் கொண்டே இருந்தார்கள் மனிதர்கள், அந்தப் புகாரின் சாரத்தில் ஒளிந்திருக்கிற மனிதர்களின் சுயநலம் தோலய்யா வீட்டு நெய்சோற்றின் வாசத்தில் பல்லிளித்துக் கொண்டிருந்ததை அந்த ஒரே ஒரு இரவு உணவின் போது என்னால் உறுதியாக உணர முடிந்தது.

பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நாடெங்கும் மத அடிப்படைவாதிகள் எழுச்சி பெற்றிருந்தார்கள், அப்போது பள்ளிவாசலில் ஜமாத் தலைவராக இருந்தார் தோலய்யா, பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தின் போது யாரோ சில விஷமிகள் கல்லெறிந்து நிலைமை மோசமாக இருந்த ஒரு காலகட்டத்தில் ரம்ஜான் ஊர்வலம் ஒன்றை நடத்த வேண்டியிருந்தது, பெரும் கலவரம் நிகழும் சூழல் உருவாகி இருந்தது அன்று, இரவு முழுவதும் ஊர்வலத்தை எப்படி எல்லாம் அமைதியாக நடத்த வேண்டும் என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தார் தோலய்யா, இறுதியாக அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து இப்படிச் சொன்னார் "அல்லா கருணையும், பண்பும் நிரம்பியவன், நாமும் அப்படியே இருக்க வேண்டும்". சுற்றி இருந்த பெரியவர்களுக்கு இன்னும் குழப்பம் தீர்ந்தபாடாக இல்லை, ஒரு அவநம்பிக்கையோடு வீடு திரும்பினார்கள்.

046c5_Love others

மறுநாள் காலையில் ஊர்வலம் துவங்கி மெல்ல நகரத் துவங்கியது, சில இந்து மத அடிப்படைவாதிகள் எந்த நேரத்திலும் கல்லெறிந்து கலவரம் உண்டாக்கத் தயாராக இருந்தார்கள், பழிக்குப் பழி, பிள்ளையாருக்குக் கல்லெறிந்தவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று முன்னிரவில் முடிவு செய்திருந்தார்கள் அவர்கள். தோலய்யா எல்லோருக்கும் முன்பாக நடக்கத் துவங்கினார், அவரது நடையில் ஆழமான அமைதி குடி கொண்டிருந்தது.

பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக வந்ததும் தோலய்யா தனது செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே புகுந்தார், பிறகு மெல்லிய குரலில் "குருக்களே இங்க வாங்க" என்று கோவிலுக்குள் இருந்த பிச்சைக் குருக்களை வெளியே அழைத்தார், பிச்சைக் குருக்கள் பதட்டமடைந்து வெளியே வந்து தயங்கியபடி நின்றார், தனது நீளமான அங்கியைப் போன்றிருந்த சட்டைப் பைக்குள் கையை நுழைத்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்தார் தோலய்யா, "பள்ளிவாசல் ஜமாத் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணுங்க, இன்னைக்கு ரம்ஜான் ஊர்வலம் நல்ல படியா நடக்கணும்னு வேண்டிக்குங்க ஐயா" என்று சொல்லி விட்டுத் திரும்பினார்,

அந்தக் கணத்தில் இருந்து சுற்றி இருந்த அனல் காற்று தென்றலாய் மாறிப் போனது, முதல் முறையாக மதநல்லிணக்கத்தை ஒரு தனி மனிதனாய் உருவாக்கிக் காட்டினார் தோலய்யா, தனது தீவிர இஸ்லாமியப் பண்பாடுகள் எதையும் உடைக்காமல், மாற்று மதத்தவரின் மனங்களை வென்று தன்னந்தனியாகத் திரும்பி கூட்டத்தில் கலந்து விட்டார் தோலய்யா, இந்து மத இளைஞர்கள், பகுதிப் பெரியவர்கள் என்று எல்லோரிடத்திலும் ஒரு சமூகத்தின் அமைதியை வெகு நேர்த்தியாகக் கட்டமைத்தார் தோலய்யா, அந்த ஊர்வலத்தில் பல இந்துக்களும் இன்று வரையில் கலந்து கொள்வதற்கு ஒரு முன்னோடியாய் இருந்தவர் தோலய்யா.

தனது மனநிலை சரியில்லாத ஒரு தம்பியை எந்தக் குறைகளும் இன்றி ஒரு குழந்தையைப் போல அவர் கவனித்துக் கொண்டார், மீரா ஐயா என்று அழைக்கப்பட்ட அந்த மனிதரின் ஒவ்வொரு வேளை உணவையும் தனது மிகப்பெரிய கடமையாக அவர் கருதினார், அந்தக் கடமைக்குள் அழுந்திக் கிடக்கிற ஒரு பாசமுள்ள அண்ணனை வேறெவரும் உணர்ந்தார்களோ இல்லையோ நான் உணர்ந்திருக்கிறேன்.

"டேய் மீரா, சாப்பிடும்போது "தொனத்தொனன்னு பேசாத", "கீழ சிந்தாத", "கொழம்பு ஊத்திக்க", என்று அவரது ஒவ்வொரு திவளைச் சோற்றையும் கண்கள் பணிக்கப் பார்த்திருப்பார். மன அளவில் தனது தம்பியை எந்தத் தாக்கங்களும் இல்லாமல் அவர் ஒரு உறை போலப் பார்த்துக் கொண்டார். தானும் இந்த சமூகத்தில் ஒரு உறுப்பினர் தான் என்கிற நம்பிக்கையை மீரா ஐயாவின் கண்களில் வரவழைத்துக் கொடுத்ததில் தோலய்யாவுக்கு ஒரு மிகப் பெரிய பங்குண்டு.

தெருக்களில் சுற்றித் திரிகிற ஒவ்வொரு மனநிலை சரியில்லாத மனிதருக்கும் தோலய்யாவைப் போல அன்பான ஒரு அண்ணன் இருப்பான் என்கிற வாழ்க்கையின் மிகப்பெரிய பாடத்தை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.மன நிலை சரியில்லாத மனிதர்களை தோலய்யாவை நான் சந்தித்த பின்பு, முன்பு என்று என்னால் தெளிவாகப் பிரித்தறிய முடிந்தது.

feetprings in sand

தோலய்யா இரண்டு நாய்களை வளர்த்தார், அந்த நாய்களோடு அவர் தனது ஓய்வு நேரங்களில் திண்ணையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருப்பார், அந்த உரையாடல் எனது அன்றாட அலுவலக உரையாடல்களை விட மிக மேன்மையானது என்று இப்போது உணர்கிறேன் நான், அத்தனை நெருக்கமாக விலங்குகளோடு உரையாடுகிற மனிதர்களை நான் இனியும் சந்திக்கப் போவதில்லை, "டேய், அவென் தட்டுக்கு எதுக்குப் போற நீ, தள்ளு இங்க வா" என்று பெரிய நாயை அவர் அழைத்தவுடன் அவரது குருந்தாடிக்கு மிக நெருக்கமாகச் சென்று நக்கி ஈரம் செய்யும் அந்த நாய்" குழந்தைகளின் மலையேற்றம் போலவே அந்த நாய்களையும் அவர் பார்த்துக் கொண்டிருப்பார். உயர் தத்துவங்களிலும், உலக அறிஞர்களின் நூல்களிலும் வாழ்க்கையைத் தேடும் நம்மைப் போன்ற பலருக்கு தோலய்யா எளிமையாக வாழ்வதையே உயர் தத்துவமாகக் காட்டினார்.

கடைசியாக நான் தோலய்யாவை அவரது பேத்தியின் திருமணத்தில் பார்த்தேன், இஸ்லாமியத் திருமணங்களில் இயல்பாகவே இருக்கும் மரபுகளை மீறி அது ஒரு பன்மதத் திருமணம் போலிருந்தது, ஒரு தேவாலய மண்டபத்தில் நிகழ்ந்த அந்தத் திருமணத்துக்கு பழனிக்கு மாலை போட்டிருக்கும் இந்துமதக்காரர்கள், பிச்சைக் குருக்களின் மகன்கள், பாதிரியார் என்று பலரும் பிரசன்னமாயிருந்தார்கள், பல்வேறு பணிகளில் மும்முரமாய் இருந்த தோலய்யாவின் அருகில் சென்று "ஐயா" என்றேன். யாரென்று பார்க்காமலேயே "வாங்கத்தா, வாங்க" என்று சொல்லியபடி திரும்பினார்.

பிறகு "கலா மயனா?", என்கிற வழக்கமான அவரது முத்திரைச் சிரிப்போடு எனது கைகளைப் பிடித்துக் கொண்டார் அவர், ஒரு குழந்தையைப் போல அவர் பின்னால் நடந்து சென்றேன், தனது பேரன்களில் ஒருவனை அழைத்து "டேய் மூசாக்குண்டு, அண்ணன சாப்பிடக் கூட்டிப் போ" என்று என்னை அந்தச் சிறுவனிடம் ஒப்படைத்தார், உடல் இளைத்திருந்தாலும், அவரது விருந்தோம்பல் பெருத்து நகர முடியாமல் போன தருணம் அது. தொலைவில் இருந்து அவரைப் நீண்ட பார்த்துக் கொண்டே இருந்தேன். அதுதான் அவரை உயிரோடு கடைசியாகப் பார்க்கும் வாய்ப்பு என்பதை உணராமலேயே.

தோலய்யவைப் போன்ற மனிதர்கள் அருகிக் கொண்டே வருகிறார்கள், ஒரு நல்ல மனிதராக, ஒரு நேர்மையான வணிகராக, பல்லிகளைப் போல ஒட்டிக் கொள்கிற பேரப்பிள்ளைகளின் தாத்தாவாக, விருந்தினர்களை மட்டுமன்றி உணவு நேரத்தில் வீட்டுக்கு வருகிற மனிதர்களின் பசி போக்கும் அட்சய பாத்திரமாக, மீரா ஐயாவின் அன்புக்குரிய அண்ணனாக, நாய்களோடு உரையாடும் ஒரு எளிய மனிதராக, பிள்ளையார் கோவிலுக்குள் சென்று பள்ளிவாசல் ஜமாத்தின் பெயரில் அர்ச்சனை செய்யச் சொல்கிற மத நல்லிணக்கவாதியாக, எல்லாவற்றுக்கும் மேலாகத் தனது வாழ்க்கையை சக மனிதர்களோடு கொண்டாடுகிற ஒரு உயர்ந்த மனிதராக அவர் வாழ்க்கையை எதிர் கொண்டார், அவரது வாழ்க்கையின் வேர்கள் கண்ணுக்குத் தெரியாமல் அந்த வீதியில் இருந்து துவங்கி உலகெங்கும் கிளை விட்டுக் கொண்டே இருக்கும் என்று உள்ளம் ஏங்குகிறது.

98190-6

இஸ்லாமியப் புனித நூலின் ஒரு இடத்தில் இப்படிச் சொல்லி இருக்கிறார்கள்,

"யாரொருவன் தன்னைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்வோடு வைத்திருக்கிறானோ, அவன் கடவுளை அடைகிறான்",

தோலய்யாவுக்காக இந்தச் சொற்களை நான் இப்படி மாற்றி எழுதுவேன்,

"யாரொருவன் தன்னைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்வோடு வைத்திருக்கிறானோ அவன் கடவுளாகவே ஆகிப் போகிறான்".

ஆம், நண்பர்களே, உயர்ந்த மிகச் சிறந்த மனிதர்கள் வரலாற்றின் பக்கங்களில் இருப்பதில்லை, மனிதர்களின் உள்ளங்களில் எளிய சக மனிதர்களாய் வாழ்ந்திருப்பார்கள்.

******************


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்