கை.அறிவழகன் எழுதியவை | நவம்பர் 11, 2011

ஜாமண்டிரி பாக்ஸ் – சிறுகதை

ice-cubes-3

கந்தசாமி எழுந்து மிதிவண்டியின் பின்புறச் சக்கரங்களின் காற்றளவைக் கைகளால் அழுத்திப் பார்த்தான், கொஞ்சம் காற்றுக் குறைவாக இருப்பதாகவே பட்டது, யோசித்தபடி மிதிவண்டியை உருட்டியபடி சென்று சுந்தரம் வீட்டுக் முன்புறம் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டின் கம்பிக் கதவைத் திறந்தான், கருப்பும் வெள்ளையும் கலந்த சுந்தரம் வீட்டு நாய் தலையை முன்னும் பின்னும் அசைத்தவாறு குரைக்கத் துவங்கியது, கந்தசாமி அங்கேயே நின்று விட்டான்.

கடந்த எட்டு வருடங்களாக அந்த நாய் கந்தசாமியைப் பார்த்துக் குறைக்கத்தான் செய்கிறது, இப்படிக்கும் கந்தசாமி இதே வீதியில் நடமாடிக் கொண்டிருக்கும் பழைய ஆள்தான், பெரும்பாலும் செல்லும் எல்லா ஊர்களிலும் நாய்கள் கந்தசாமியைப் பார்த்துக் குரைக்கத்தான் செய்கின்றன, குரைக்கும் நாய்களாவது பரவாயில்லை, கீழப்பூங்குடியில் ஒரு செவலை நாய் கணுக்காலில் பார்த்துக் கடித்து வைத்து விட்ட தழும்பு இன்னமும் மறைந்தபாடில்லை.

நாய்களுக்குக் கந்தசாமியின் மீதெல்லாம் எந்த வெறுப்பும் இல்லை, கந்தசாமி தனது மிதிவண்டியின் பின்னால் கட்டி வைத்திருக்கும் அந்தப் பெட்டியும் அதன் நிறமும் தான் பெரும்பாலான நாய்களுக்குப் பிடிப்பதில்லை, யோசித்தபடி நின்றிருந்த கந்தசாமியை பேருக்குக் கூட ஒரு புன்னகை இல்லாமல் வெளியில் வந்து பார்த்தார் சுந்தரம்.

"என்ன, கந்தா, பம்ப்பு வேணுமா?" காரணத்தைக் கண்டறிந்து விட்டதை ஒரு சாதனை போல எண்ணியபடி உள்ளே சென்று தொலைக்காட்சியில் மூழ்கி இருந்த மகனிடம் குரல் கொடுத்தார் சுந்தரம் "டேய், மணிகண்டா, அந்தப் பம்ப்ப எடுத்துக் கொண்டு போய் குடு", "ஏதாவது ஓசி கேட்டு வர்றதே வேலையாப் போச்சு" என்று முனகினார் சுந்தரம்.

சுந்தரம் இரண்டாவதாய்ச் சொன்னது மட்டும் கந்தசாமியின் காதில் சத்தமாகக் கேட்டது, கடைக்குப் போனால் இரண்டு ரூபாய், சுந்தரம் சில நேரங்களில் முகம் சுழித்தாலும் கூட இரண்டு ரூபாய் சேமிக்கப் படுவதை நினைத்தபடி பொறுத்துக் கொள்ள வேண்டியது தான். கடந்த இரண்டு வருடங்களாய் அப்படித்தானே பொறுத்துக் கொள்கிறான்.

மணிகண்டன் வேண்டா வெறுப்பாக வெளியில் வந்து பம்ப் ஐக் கந்தசாமியின் கைகளில் கொடுத்து விட்டு உள்ளே போனான், "மாமா, அப்படியே திண்ணைல வச்சுட்டுப் போயிருங்க", என்று மறக்காமல் சொல்லி விட்டுப் போனான் மணிகண்டன், பம்ப்பின் குழாயை மிதிவண்டியின் சக்கரத்தில் பொருத்தி அழுத்தினான் கந்தசாமி, பம்ப்பின் தண்டு வழியாகக் காற்றைச் செலுத்தும் "வாசர்" சரியாக வேலை செய்யவில்லை, அதைச் சரி செய்து இரண்டு சக்கரங்களிலும் காற்றை நிரப்பிக் கொண்டான் கந்தசாமி.

பம்ப்பை திண்ணையில் வைத்து விட்டு திண்ணையில் அமர்ந்து சவரம் செய்து கொண்டிருந்த சுந்தரத்திடம் "சுந்தரண்ணே தேங்க்ஸ்" என்றான் கந்தசாமி, கண்களை மட்டும் திருப்பி ஒரு ஏளனப் பார்வை பார்த்தபடி கண்ணாடியில் மோவாயைப் பார்க்கத் துவங்கினார் சுந்தரம், சுந்தரம் வீட்டில் மிதிவண்டி இல்லை, மிதிவண்டி இருந்த காலத்தில் அவர் பயன்படுத்திய, இப்போது எந்தப் பயனும் இல்லாமல் அந்தப் பம்ப்பை அவர் கந்தசாமிக்கு ஓசி கொடுப்பதை ஒரு மிகப்பெரிய சமூக சேவையைப் போல ஊரெங்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார், அந்தப் பெருமை மட்டும் இல்லை என்றால் அவர் எப்போதோ கந்தசாமிக்குப் பம்ப் இல்லை என்று சொல்லி இருப்பார்.

India, Rajasthan, Tonk district, Nagar village

மறக்காமல் கம்பிக் கதவின் இடைவெளியில் கைகளை நுழைத்துத் தாழ் போட்டு விட்டு மிதிவண்டியை உருட்டிக் கொண்டு வந்து தனது வீட்டு முன்பாக நிறுத்தினான் கந்தசாமி, கந்தசாமியின் நாய் வாலைக் குழைத்தபடி ஓடி வந்தது, அதன் நெற்றியில் கையை வைத்து கந்தசாமி வருடவும், தனது முன்னங்கால்களைத் தூக்கி அவனது மணிக்கட்டை நக்கத் துவங்கியது "மணி" என்கிற வெள்ளையும், கருப்பும் கலந்த நாய்.

அமுதனும், அழகுமதியும் எழுந்து விட்டிருந்தார்கள், அழகுமதி பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்தாள், அமுதன் ஐஸ் பெட்டியைக் கழுவிக் கொண்டிருந்தான், இருவரும் நன்றாக வளர்ந்து விட்டிருந்தார்கள், ஐஸ் பெட்டியைக் கழுவ வேண்டும் என்று நேற்று இரவு கந்தசாமி தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்ததை அமுதன் கவனித்திருக்க வேண்டும், அப்பாவின் வேலை குறித்தும், அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் அமுதனுக்கு எப்போதும் அதிக அக்கறை உண்டு, அருகில் சென்று "என்னடா, ஏதோ பரிச்சை இருக்குன்னு சொன்னியே, படிக்காம எதுக்கு ஐஸ் பெட்டியைக் கழுவுக்கிட்டு இருக்க?" என்றவுடன் அமுதன் கந்தசாமியின் பக்கம் திரும்பி " இல்லப்பா, நேத்து ராத்திரியே படிச்சு முடிச்சிட்டேன்" என்றான்.

கிணற்றடியில் குளித்துக் கொண்டிருக்கும் போது வழக்கம் போலவே ஒழுகிக் கொண்டிருக்கும் இந்த வாளியை மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் கந்தசாமி, அனேகமாக மூன்று மாதங்களாக அதையே தான் நினைத்துக் கொள்கிறான். காலம் தான் கைகூடவில்லை, சட்டியில் கஞ்சியும், கிண்ணத்தில் வெங்காயமும் கொண்டு வைத்து வைத்து விட்டு "வரும்போது கொஞ்சம் பருப்பும், தக்காளியும் வாங்கிட்டு வாங்கங்க" என்று மெல்லிய குரலில் சொன்னாள் செல்வி,

"ம்ம்ம், நான் வர லேட்டாச்சுன்னா நீ பால்சாமி ஐயா கடைல வாங்கிக் கொழம்பு வய்யி செல்வி, நான் வரும் போது காசு குடுக்குறேன்" என்று சொல்லி விட்டு பெட்டியை எடுத்து மிதிவண்டியில் கட்டத் துவங்கினான் கந்தசாமி, அமுதன் வந்து கயிற்றைப் பிடித்துக் கொண்டான், "யப்பா, அடுத்த வாரம் பரிச்சை ஆரம்பிக்குது, ஜாமன்றி பாக்ஸ் வாங்கணும், அது இருந்தாத் தாம்பா கணக்குப் பரிச்சை எழுத முடியும்", என்றான் அமுதன்.

geo13-250x250

எட்டாவது படிக்கும் போது அவனுக்கு ஒரு ஜாமன்றி பாக்ஸ் வாங்கிக் கொடுத்திருந்தான், கந்தசாமி, அமுதனும் இத்தனை காலம் உறை எல்லாம் போட்டு அதைப் பத்திரமாகவே வைத்திருந்தான், பரிச்சைக்கு அதைப் பயன்படுத்த முடியாது போலிருக்கிறது, அதன் முனைகள் மழுங்கிப் போய் பயன்படுத்த முடியாத அளவுக்குத் தேய்ந்து போயிருப்பதை கந்தசாமி பார்த்திருக்கிறான். "சரிப்பா, நாளைக்கு வாங்கிட்டு வாரேன்" கந்தசாமி கண்களால் உறுதி கொடுத்து விட்டு மிதிவண்டியில் ஏறி அழுத்தத் துவங்கினான்.

மிதிவண்டியின் இருக்கை ஏறத்தாழ ஒரு எலும்புக் கூடு மாதிரி மாறிப் போயிருந்தது, அதன் உள்ளிருக்கும் கம்பிகள் பின்புறத்தை அழுத்துவதில் இருந்து தப்பிக்க ஒரு குற்றாலத் துண்டை அதற்குக் கீழே வைத்துக் கட்டி இருந்தான் கந்தசாமி. வண்டி நகரத் துவங்கியது, கல்லல் வீதிகளைக் கடந்து ஐஸ் கம்பெனி வாசலில் வண்டியை நிறுத்தியபோது செல்வமும், இஸ்மாயிலும் புறப்படத் தயாராகி இருந்தார்கள், முதலாளி எங்காவது வெளியில் கிளம்பிப் போய் விட்டால் காத்திருக்க வேண்டியிருக்கும் என்கிற உண்மை அடிக்கிற வெய்யிலை விடவும் சூடாக இருந்தது,

அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்த போது முதலாளி பெரிய பெட்டி அருகில் நின்று கொண்டிருந்தார், "கந்தா, நூத்தம்பது ஐஸ் எடுத்து வச்சிருக்கேன், போதுமா?" என்றார். மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்தான் கந்தசாமி, நூற்றி இருபது ரூபாய் கிடைக்கும், போதாது, ஜாமன்றி பாக்ஸ் எப்படியும் நாப்பது அம்பது ரூபாய் ஆகும், தக்காளி, பருப்பு ஒரு நாப்பது சீட்டு அம்பது ரூபாய், "அய்யா, கூட ஒரு அம்பது வைங்கய்யா", என்றவுடன், வாங்குறது பெரிசில்ல கந்தா, எல்லாத்தையும் விக்கணும், திருப்பிக் கொண்டாந்தா நான் எடுத்துக்க மாட்டேன் பாத்துக்க, என்று சொல்லி விட்டு ஐஸ் குச்சிகளை எண்ணிக் கொண்டிருந்தார்.

பெட்டியைக் கழற்றி எடுத்து வந்து கீழே வைத்து அதன் ஓரங்களில் உப்பு ஐஸ் வைத்து நிரப்பத் துவங்கினான் கந்தசாமி, இருநூறு ஐஸ் விற்க வேண்டுமென்றால் நேரம் பிடிக்கும், மாலை வரையில் தாக்குப் பிடிக்க வேண்டுமென்றால் பெட்டி குளிராகவே இருக்க வேண்டும், அடிக்கிற வெயிலுக்கு ஐஸ் கரைந்து பெட்டி சூடாக்கி விட்டால் கதை கந்தலாகி விடும் என்பதை உணர்ந்தவாறு ஐஸ்களை நிறம் பிரித்து அடுக்கி வைத்துவிட்டுப் பெட்டியை எடுத்துக் கட்டிக் கொண்டு மிதிவண்டியை அழுத்தியபோது யோசனை வந்தது கந்தசாமிக்கு.

"இன்னைக்கி பேசாம காளையார் கோயில் போக வேண்டியது தான், திருவிழா நடக்குது, எப்பிடியும் வித்துறலாம்". அதற்கு முன்பு முருகப்பா ஸ்கூல் வாசலுக்கு ஒருமுறை போய் விட்டுச் செல்லலாம் என்று முடிவு செய்து வண்டியைத் திருப்பினான் கந்தசாமி, பள்ளி இடைவேளை விடுவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது, கொஞ்சம் வேகமாக அழுத்திப் பள்ளி வாசலை அடையவும், இடைவேளைக்கான மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது, எல்லாப் பிள்ளைகளும் வெள்ளையும், நீலமும் கலந்த வண்ணத்தில் கலகலப்பாய் இருந்தார்கள்.

பள்ளிகளில் பிள்ளைகளுக்குச் சீருடை அணிவிப்பது தான் எத்தனை அருமையான முடிவு, இல்லையென்றால் அமுதனும், அழகுமதியும் பெரும்பாலும் கொஞ்சம் வெளிறிய நிறத்தில் இருக்கும் சில கிழிந்த ஆடைகளையும் அணிந்து தான் பள்ளிக்கு வர வேண்டியிருக்கும் என்று கந்தசாமியின் மனதுக்குள் தோன்றியது, அவர்கள் இருவருக்கும் சில நல்ல ஆடைகளை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற கந்தசாமியின் நீண்ட காலக் கனவை ஏதாவது அற்புதம் நிகழ்த்துகிற மனிதர்கள் தான் நிறைவேற்ற வேண்டும். ஏழு ஐஸ் விற்றதில் ஒரு சிறுமி இரண்டு ரூபாய்க்கு ஐம்பது பைசா குறைவாக இருக்கிறது என்று சொன்னாள், பார்க்க

அழகுமதியைப் போலவே இருந்தாள், "சரி, நாளைக்குக் குடு, என்னம்மா!" என்று பேருக்குச் சொல்லி விட்டு அந்தக் குறைவான காசுகளை வாங்கி உள்பையில் வைத்துக் கொண்டு சுற்றிலும் ஒருமுறை பார்த்தான் கந்தசாமி, இடைவேளை முடிந்து விட்டிருந்தது, பிள்ளைகள் வகுப்புகளுக்குள் ஓடத் துவங்கினார்கள்.

நெல்லிக்காய் விற்கிற பொன்னம்மாள் பாட்டி "என்ன, கந்தசாமி, ரெண்டு நாளா ஆளக் காணும்" என்றார்கள். இல்லம்மா, பேருவலச திருவிழா நடக்குதில்ல, அங்கே போயிட்டேன், இன்னைக்கி காளையார் கோயிலுக்குப் போகணும், அப்பிடியே பள்ளிக்கூடத்துக்கு வந்துட்டுப் போலாம்னு" என்று பதில் சொல்லியபடி மிதிவண்டியின் மிதிகளில் கால்வைத்து ஏறி நகரத் துவங்கினான் கந்தசாமி. தேசிய நெடுஞ்சாலையில் பயணப்பட்டது கந்தசாமியின் மிதிவண்டி.

காளையார்கோவிலைக் கந்தசாமியின் மிதிவண்டி தொட்ட போது மணி பன்னிரண்டை எட்டி இருந்தது, ஊரெங்கும் வண்ணத் தோரணங்களும், தண்ணீர்ப் பந்தலும் என்று களை கட்டி இருந்தது, கந்தசாமி குடியிருப்புப் பகுதிகளை அடைந்து மிதிவண்டியின் முன்புறம் பொருத்தப்பட்டிருக்கும் காற்று ஒலிப்பானை விடாமல் அடிக்கத் துவங்கி "ஐஸ், ஐஸ், மேங்கோ ஐஸ், ஆரஞ் ஐஸ்" என்று கத்தியவாறு வண்டியை உருட்டத் துவங்கினான்,

__1_~1

ஒன்றும் இரண்டுமாக ஐஸ் கட்டிகள் கரையத் துவங்கி இருந்தன, தேரடி வீதியில் இருந்து கீழே இறக்கத்தில் இறங்கி கந்தசாமி நடந்தபோது நாட்டு ஓடுகள் வேயப்பட்ட முற்றத்து வீட்டில் இருந்து ஒரு இளைஞன் கந்தசாமியை அழைத்தான், அவனுக்குப் பின்னால் ஏழெட்டுக் குழந்தைகள் நின்று கொண்டிருந்தார்கள், "அண்ணே, ஐஸ் எவ்வளவு?" என்றான் இளைஞன், மூணு ரூபாய் தம்பி" பெட்டியின் மூடியைத் திறந்து ஒரு ஐஸை எடுத்து வெளியில் தெரியும்படி காட்டினான் கந்தசாமி, இளைஞன் பெட்டி அருகே வந்து திறந்திருந்த பெட்டியின் உள்புறமாகப் பார்வையைச் செலுத்தினான், பிறகு குழந்தைகளை அழைத்து ஒவ்வொரு ஐஸாகக் கையில் பிடித்துக் கொடுக்க ஆரம்பித்தான்.

கந்தசாமி கவனமாக வெளியேறும் ஐஸ்களை எண்ணிக் கொண்டிருந்தான், கந்தசாமியின் மனதில் ஜாமன்றி பாக்ஸ், பருப்பு, தக்காளி, கிணற்று வாளி என்று மாறி மாறி பிம்பங்கள் ஓடிக் கொண்டிருந்தன. கந்தசாமியின் பெட்டியும், உடலும் சூடாகித் தளர்வடைந்தபோது மணி நாலரையாகி விட்டிருந்தது. இன்னும் ஐம்பது ஐஸுக்கு மேல் விற்றாக வேண்டும், தக்காளியும் பருப்பும் கூடச் சமாளித்து விடலாம், ஜாமன்றி பாக்ஸ் எப்படியும் இன்று வாங்கியே ஆக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு தேரடி வீதிப் பாலத்தில் வண்டியை சாய்த்து விட்டு அமர்ந்து கொண்டான் கந்தசாமி. இனித் தாக்கு பிடிக்க முடியாது, ஏழு மணிக்கு மேல் போனால் முதலாளி ஐசைத் திரும்ப எடுத்துக் கொள்ள மாட்டார், கிளம்ப முடிவு செய்து கொண்டு சாய்த்த வண்டியை நிமிர்த்தினான் கந்தசாமி.

அனிச்சையாகக் குனிந்த கந்தசாமியின் கண்களில் காற்றில்லாத மிதிவண்டியின் முன்சக்கரம் முள்ளாகக் குத்தியது. வண்டி பஞ்சர் ஆகி இருக்க வேண்டும், வெயிலுக்குக் காற்று இறங்கி இருந்தாலும் முழுதாக இறங்கி விடாது, இனி மிதிவண்டி பழுது பார்க்கும் கடையைத் தேடி அலைய வேண்டும், இப்போதெல்லாம் மிதிவண்டி பழுது பார்க்கும் கடைகள் அருகிக் கொண்டே வருவதை நினைத்தால் கோபம் கோபமாக வந்தது, உருட்டிக் கொண்டே ஒருவழியாக ஊருக்குள் வந்து ஒரு கடையைக் கண்டு பிடித்தான் கந்தசாமி.

கடைக்காரனோ கடையை மூடும் அவசரத்தில் இருந்தான், திருவிழாக்காலம் இந்தக் கடையை விட்டால் பிறகு வீடு சேர்வது சிரமம் என்பதால், கெஞ்சிக் கதறி அந்தக் கடைக்காரனை பஞ்சர் ஒட்டுவதற்கு ஒப்புக் கொள்ள வைப்பதற்குள் களைத்துப் போனான் கந்தசாமி. கடைக்காரன் முனகியபடியே சக்கரத்தில் இருந்த முள்ளை எடுத்துக் கையில் காட்டி விட்டுக் "கொஞ்சம் இருந்தா மௌத்ல போயிருக்கும்னே", நல்ல வேலை தப்பிச்சீங்க என்று அச்சமூட்டினான்.

காற்று நிரப்பி வண்டியைக் கிளப்பியபோது மணி ஆறாகி இருந்தது, மூச்சு வாங்க அழுத்திக் கொண்டு வந்து முதலாளியிடம் கொஞ்ச நேரம் பேச்சுக் கேட்டு விட்டு இருநூற்று எண்பது ரூபாய் கொடுத்தான் கந்தசாமி, “ஐஸ எடுத்து பெரிய பெட்டில வையி கந்தா, எவளவு சொன்னாலும் நீ கேக்க மாட்ட, போகும் போதே நூத்தம்பது எடுத்துக்கிட்டுப் போன்னு சொன்னேனே கேட்டியா, நாளைக்கு உதிரி வந்தா உன் கணக்குல தான் வப்பேன்" என்று விடை கொடுத்தார் முதலாளி.

போகும் போது கறாராகப் பேசுவார், வரும்போது பெட்டி நிறைய ஐஸைத் திருப்பிக் கொண்டு வந்தாலும் ரெண்டு பேச்சுப் பேசி விட்டு திரும்ப வாங்கிப் பெரிய பெட்டியில் வைத்துக் கொள்வார், உதிரி உதிரி என்று சொல்வாரே தவிர ஒருநாளும் உதிரிக் கணக்கில் பிடித்தம் செய்ததில்லை.

கந்தசாமி ஒருவழியாக கல்லல் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் வெண்மதி புக் சென்டர் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு கடைக்குள் ஏறும் போது தான் யோசித்தான் அமுதனின் கணக்குப் பரிசைக்குத் தேவையான அந்தப் பொருளின் பெயரை, கந்தசாமி அதன் பெயரை மறந்து விட்டிருந்தான், மண்டையை உடைத்து யோசித்துப் பார்த்தும் அதன் பெயர் நினைவுக்கு வரவில்லை.

india%20the%20polio%20battle--1736725974_v2_grid-6x2

கடைக்காரர் "இரண்டு முறை கேட்டு விட்டார், "என்னண்ணே வேணும்?" என்று, ஒருவழியாய்ச் சமாளித்துக் கொண்டு கணக்குப் பெட்டி குடுங்கண்ணே என்றான், கடைக்காரர் சில நிமிடத் திகைப்புக்குப் பின்னர் உள்ளே சென்று ஒரு கால்குலேட்டரை எடுத்து வந்து காட்டினார், "இது இல்லண்ணே, பயலுக கணக்குப் போடுற பெட்டி, இந்த வட்டம், குத்தூசி, அடிஸ்கேல் எல்லாம் வரும்ல டப்பாவுக்குள்ள, அதுன்னே" என்று சொன்னவுடன் "ஜாமன்றி பாக்ஸா" என்று மறுபடி உள்ளே போனார்.

வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு வண்டியை வீட்டை நோக்கிக் கிளப்பினான் கந்தசாமி, போகிற வழியில் கடைக்குள் இருந்து பால்சாமி ஐயா குனிந்து பார்த்தார், அவர் எதார்த்தமாகக் கூடப் பார்த்திருக்கலாம். கந்தசாமிக்கு ஏனோ குற்ற உணர்வாய் இருந்தது, செல்வி தக்காளியும், பருப்பும் வாங்கி இருப்பாளோ?, முன்பாக்கி ஒரு நூத்தம்பது ரூபாய் இருந்ததே அதைக் கேட்டிருப்பாரோ? என்று மிதிவண்டிக்கு முன்பாகக் கேள்விகள் பயணித்தன.

கந்தசாமி வண்டியை கல்லுக்காலில் வைத்துக் கட்டி விட்டு பையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தவுடன் மணி ஓடி வந்து வாலை ஆட்டியது, அழகுமதி "அப்பா" என்றபடி ஓடி வந்து அணைத்துக் கொண்டாள், அமுதன் சுவற்றில் சாய்ந்தபடி படித்துக் கொண்டிருந்தான், செல்வி புதுச் சேலையோடு சமைத்துக் கொண்டிருந்தாள், எங்கோ வெளியில் சென்று வந்திருக்க வேண்டும், அலுமினியச் சட்டியின் நீரில் மூன்று தக்காளிகள் மிதந்து கொண்டிருந்தன, அப்பாடா, தக்காளியும், பருப்பும் வாங்கி விட்டிருக்கிறாள் என்று நிம்மதி பிறந்தது கந்தசாமிக்கு.

கிணற்றடிக்குச் சென்று நீரிறைத்து கை, கால், முகம் கழுவிக் கொண்டு கொடியில் காய்ந்து கொண்டிருந்த துண்டை எடுத்து முகம் துடைத்துக் கொண்டு பிள்ளைகளோடு வந்து அமர்ந்தான் கந்தசாமி. "இந்தாடா தம்பி, ஜாமுண்டி பாக்ஸ், பேரு வேற மறந்து போச்சுடா தம்பி, நல்ல வேளை கணக்குப் பெட்டின்னு சொன்னதும் கடைக்காரன் கண்டு பிடிச்சுக் குடுத்தான்".

அது ஜாமுண்டி பாக்ஸ் இல்லப்பா, "ஜியோமெட்ரிக் பாக்ஸ்" என்று அழுத்தம் திருத்தமாக ஆங்கிலத்தில் சொன்னான் அமுதன், திறந்து பார்த்து எல்லாப் பொருட்களும் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்து விட்டுப் பைக்குள் வைத்துக் கொண்டான்.

கல்லுக்காலில் சாய்ந்து கொண்டு இயல்பாகத் திரும்பிய போது கண்ணில் பட்டது சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய காற்றடிக்கும் பம்ப், கந்தசாமி கண்ணைச் சுருக்கிக் கொண்டு “செல்வி, யாரு சுந்தரண்ணே வீட்ல பம்ப் வாங்கினது, எதுக்கு வாங்குனீங்க?” என்று கேட்டவாறு எழுந்து சென்று பம்பை கையில் எடுத்துப் பார்த்தான் அதன் வழவழப்பில் அது புதிதாக வாங்கப்பட்டதென்ற உண்மை பளபளத்தது. “செல்வி, என்ன புதுசு மாதிரித் தெரியுது!!, யாரு வாங்குனா!!, காசு ஏது?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.

செல்வி வாய் திறந்தாள், “இல்லங்க, அமுதனுக்கு பள்ளிகூடத்துல இன்னைக்கு ஸ்காலர்சிப் குடுக்குறாங்கன்னு மதியம் வந்து சொன்னான், ஆயிரத்தி முன்னூறு ரூவா குடுத்தாங்க, கையெழுத்துப் போட்டு நான்தான் வாங்குனேன், அப்பாட்டக் குடுப்பம்டான்னு சொன்னேன், அவன்தான் ரெண்டு வருசமா அப்பா சுந்தரம் மாமா வீட்டுல போயி பம்புக்காக நிக்கிறாரும்மா, புதுசா ஒரு பம்ப்பு வாங்கிருவோம், எனக்கு இனி பரிச்சைக்கு பணம் கட்டுனாப் போதும்மா சொல்லி வம்படியா கல்லலுக்குக் கூட்டிப் போயி இத வாங்கிட்டாங்க, கூடவே பஞ்சர் செட்டும் வாங்கி உள்ள வச்சிருக்கான் பாருங்கங்க" என்று சொல்லிவிட்டு சமையலில் மூழ்கி விட்டிருந்தாள் செல்வி.

amazing-elephant-family-wallpaper-1600x1200-1005032

கந்தசாமி கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை, கூரையின் ஓட்டைகளில் நகர்ந்து கொண்டிருந்த சில விண்மீன்களைப் உற்றுப் பார்த்தான், தனது வாழ்நாளில் ஒரு உன்னதமான கணத்தில் நுழைந்த சுவடே இல்லாமல் கசிந்து கொண்டிருந்தது காலம், ஐஸ் பெட்டியின் மூடியைத் திறந்தவுடன் வெளியாகிற புகையைப் போல…………..

**********

Advertisements

Responses

  1. இனிய தோழமை. அறிவழகன்..

    ஜாமுண்டி பாக்ஸ் கதை வாசித்தேன். [நான் இன்னும் ஜாமுன்டி பாக்ஸ் காரந்தான்] . வாழ்த்துகள் தோழர். சில விஷய்ங்கள் எழுதி எழுதி தீராது. அவை எப்போதுமே புதிதாகவும் நெகிழ்வாகவும் இருக்ககூடியதுதான். உறவுகளுக்குள் புரிதலோடு செய்துகொள்கிற தியாகங்கள் அந்த வரிசையில் முதலிடத்தில் இருக்ககூடியது. கதையின் துவக்கம் கதையின் முடிவை பலரும் யூகித்திருக்கிற அந்த முடிவு இல்லாமல் வேறொன்றாக இருந்தது அழகு. இடஒதுக்கீடும் அதனை ஒட்டிய பலன்கள் எப்படி அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒரு அழகியலை தருகிறது அல்லது வாழ்வை தருகிறது என்பதாக யோசனைகள் விரிகின்றன. யதார்த்தமான கதை விவரிப்பு பிரதியை நெருக்கமாக்கிவிட்டது. இன்னும் விவரனைகளில் கவனம் எடுத்திருக்கலாமோ எனவும் தோன்றியது.

    தொடர்ந்து எழுதுதல் அதனை சரிசெய்துவிடும் என நம்புகிறேன்.

  2. நன்றி சரவணன், நீங்கள் சொல்வது உண்மைதான், குடும்ப உறவுகளில் காணப்படுகிற சின்னச் சின்ன விட்டுக் கொடுத்தல்களும்,நெகிழ்வும் எழுதித் தீர்க்க முடியாத இலக்கியப் பெருவெளியாகவே இருக்கிறது. நமது வாழ்வின் சில கணங்களில் நாம் சந்தித்த மனிதர்கள்,நிகழ்வுகள் இவற்றினால் கட்டப்பட்டிருக்கும் இந்தக்கதை எனக்கும் கூடக் கொஞ்சம் நெருக்கமானதே, எளிய மனிதர்களால் நிரப்பப்பட்டிருக்கும் எந்தக் கதையும் நமக்கு நெருக்கமாய் இருப்பதில் முரண்கள் ஏதும் இல்லை. நீங்கள் சொல்வதைப் போலவே விவரணைகளில் இன்னும் கொஞ்சம் தீவிர கவனம் செலுத்தி இருக்கலாம் என்றே இப்போது தோன்றுகிறது, தொடர்ச்சியான எழுதும், வாசிப்பும் எழுத்தை மென்மேலும் வளம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. உங்கள் பகிர்தலுக்கும் அன்புக்கும் நன்றி தோழர்.

  3. i liked it arivu. a good short story. i still can remember my first geometry box(make: natraj!!(rs.8) camel??? oh, no too expensive(rs.23), oxford??? ayyo only on dream) right?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: