கை.அறிவழகன் எழுதியவை | நவம்பர் 24, 2011

இளவேனிற் காலத்தின் கடைசிப் பந்து.

spring-1181

சாலையோர மரங்களின் இலைகளில் மெல்லப் படியத் துவங்குகிறது முன்னிரவுப் பனி, கனத்த தொப்பிகளை அணிந்தபடி வீடுகளை நோக்கி நகரத் துவங்குகிறார்கள் மனிதர்கள், நீண்ட இரவின் கொண்டாட்டங்களைத் கண்சிமிட்டியபடி பார்க்கத் துவங்குகிறது இரவு விடுதிகளின் மங்கலான நியான் விளக்குகள், வார்னர் பல்கலைக் கழகத்தின் வாயிலில் இருந்த காவலர் தனது கையேட்டில் வருகையைப் பதிவு செய்யத் துவங்குகிறார்.

பொன்னிறம் கலந்த அரக்கு கோட் அணிந்த ஒரு முதியவர் தான் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட முடியாதென்றும், தான் நன்கொடை வழங்க வந்திருப்பதாகவும் காவலரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார், காவலர் கண்டிப்பான குரலில் அப்படி அனுமதிக்கத் தனக்கு அதிகாரம் இல்லையென்றும், முதியவர் பல்கலை நிர்வாகத்தின் அனுமதிச் சீட்டு வைத்திருந்தால் மட்டுமே கை எழுத்தின்றி உள்நுழைய முடியும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

நகரத்தின் அதீத ஓசைகளை தனக்குள் உள்வாங்கி செதுக்கப்பட்ட புல்வெளிகளின் ஓரங்களில் அமைதியை வழியவிட்டபடி காற்றில் அசைந்து கொண்டிருந்தது வார்னர் பல்கலைக் கழகப் பூங்கா. மரப் பலகைகளால் நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருந்த சாய்வு நாற்காலிகளில் பல காலியாகிக் கிடந்தது, பனிப் பொழிவுக் காலங்களில் மாலை ஐந்து மணிக்கெல்லாம் மாணவர்கள் வீடு திரும்பி விடுவார்கள்.

குளிரை விரட்ட ஒருவரோடு ஒருவர் நெருக்கமாய் அமர்ந்திருக்கும் சில காதலர்களை மரத் தண்டுகள் மறைத்துக் கொண்டிருந்தன, காதலர்களுக்கான விதி உலகெங்கும் பொதுவானதாகவே இருக்கிறது, யாரும் பார்க்காத நேரமென்று அவர்கள் கருதும் நேரங்களில் இதழ் சுவைக்கிறார்கள், கட்டித் தழுவிக் கொண்டு அன்பைப் பரிமாறுகிறார்கள். அப்படிச் செய்து முடித்தவர்கள் பலர் வயதான பின்பு இது பொது இடத்தில் அத்து மீறல் என்று புலம்புகிறார்கள், வாய்ப்புக் கிடைக்காத பலர் வயிறெரிகிறார்கள். உலகம் அப்படியே கொஞ்சம் அமுக்கப்பட்ட உருண்டையாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது.

வார்னர் உள்ளரங்கு பாதி நிறைவடைந்திருந்தபோது பேராசிரியர் அக்கோ பெர்னாண்டோ மேடையில் தோன்றி உரையாற்றத் துவங்கினார், மேடையில் பின்புறத்தில் "மனநலம் சரியில்லாத குழந்தைகளுக்கான நிதி சேகரிப்பு நாள்" என்று சிவப்பு நிற எழுத்துக்களில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது.

அக்கோ, வார்னர் பல்கலையின் வரலாற்றில் இது ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நாள் என்றும், இந்த நாளில் கடவுளின் குழந்தைகளுக்கு நம்மால் இயன்றவற்றை வழங்க நாம் கடமைப்பட்டிருப்பதாகவும் மெல்லிய கீச்சுக் குரலில் பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த பலரது காதுகளைச் சென்று அடையாத அக்கோவின் உரையைத் தாண்டி முணுமுணுப்பும், காற்றின் அலை குரலும் உள்ளரங்கில் சுதந்திரமாய் சுற்றிக் கொண்டிருந்தன.

The University of Georgia's Main Campus sustainable design projects.
Athens, GA

இப்போது ஷேன் கோவர்டின் தந்தை நம்மிடையே உரையாற்றுவார் என்று சொல்லி விட்டுத் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார் அக்கோ. ஷேன் கோவர்ட் யாரென்று அங்கிருக்கும் பலருக்குத் தெரியாது, ஆனாலும் அந்த நடு வயதுத் தந்தையை கூட்டம் ஒரு முறை கூர்ந்து பார்த்துக் கொண்டது. அவர் மெல்ல மேடையேறி ஒலிபெருக்கியின் கோணத்துக்குத் தன் முகத்தை பொருத்திக் கொண்டார், இரண்டு முறை கைகளால் தட்டி ஒலிபெருக்கி வேலை செய்கிறதா என்று சோதனை செய்து கொண்டு அவர் கூட்டத்தினரைப் பார்த்துப் பேசத் துவங்கினார்.

இந்த உலகில் எல்லாவற்றையும் இயற்கை சரியாகப் படைத்திருக்கிறதா? அப்படி சரியாகப் படைக்கப்பட்டிருந்தால் என் சின்னஞ்சிறு மகன் ஷேன் கோவர்ட் ஏன் சரியாகப் படைக்கப்பட்டிருக்கவில்லை, எல்லா சின்னஞ்சிறு மனிதர்களையும் போல அவனால் தனக்கான வேலைகளையும் செய்து கொள்ள முடிந்திருக்கவில்லை, அவன் கற்றுக் கொள்வதில் நிறைய நேரம் செலவிட்டான், கடவுளோ இயற்கையோ அவனை ஏன் இப்படி ஒரு கடினமான வாழ்க்கையை எதிர் கொள்ளப் பணித்திருந்தார்கள்?

இப்படி ஒரு கேள்வியை கேட்டு விட்டுக் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தார் ஷேன் கோவர்ட்டின் தந்தை. கூட்டம் இப்போது முணுமுணுப்பதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து அமர்ந்து கொண்டது, காவலரிடம் சண்டை பிடித்துக் கொண்டிருந்த அந்த வயதான மனிதர் தனது கோட்டின் உள் பைகளில் வைக்கப்பட்டிருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்துத் துடைக்க ஆரம்பித்தார்.

ஷேன் கோவர்ட்டின் தந்தை கேட்ட அந்தக் கேள்வி அரங்கின் கடைசி இருக்கைகளில் போய் ஒளிந்து கொண்டது, அதற்கான விடையைத் தேடி கூட்டத்தினரின் கண்கள் அலையத் துவங்கி இருந்தன, அவர்கள் உரையைத் தொடர்ந்து கேட்கும் மனநிலைக்கு வந்திருந்தார்கள்.இப்போது ஷேன் கோவர்ட்டின் தந்தையார் மீண்டும் பேசத் துவங்கினார்.

அது ஒரு இளவேனிற்கால மாலைப் பொழுது கனவான்களே, ஞாயிற்றுக் கிழமைகளின் கணங்களில் எனது சின்னஞ்சிறு மனிதன் ஷேன் கோவர்ட் சில புதியவற்றைக் கற்றுக் கொள்ளப் பழகி இருந்தான். நான் அவனது கைவிரல்களைப் பிடித்து மெல்ல நடத்திச் சென்றேன், எங்களுக்கான சிற்றுண்டியைத் தயாரிப்பதில் மும்முரமாய் இருந்த ஷேன் கோவர்ட்டின் அம்மாவிடம் நாங்கள் தற்காலிகமாய் விடைபெற்றோம், வீதிகளைக் கடந்து நாங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளி வளாகத்தை அடைந்தோம்.

பள்ளி மைதானத்தின் நடைமேடையில் சிறுவர்கள் அமர்ந்திருந்தார்கள், அவர்களின் கண்களில் அந்த இளவேனிற் கால மரங்களின் கதகதப்பும், தூய்மையும் நிரம்பிக் கிடந்தது, வெவ்வேறு வண்ணங்களில் மழைக்கால தும்பைப் பூக்களின் மீது சிலிர்ப்பாய்ப் பறக்கும் வண்ணத்துப் பூச்கிகளைப் போல அவர்கள் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தார்கள்,

அவர்களைப் பார்த்தவுடன் ஷேன் கோவர்ட் உற்சாகமடைந்தான், தனது வளைந்த மென்மையான கைவிரல்களால் இன்னொரு கையைத் தட்டி ஓசை வரவழைக்க முயன்று கொண்டிருந்த அவனது முயற்சி அந்த மாலைக்கு மிகப் பொருத்தமான ஒரு செயலாக இருந்தது.

அவனது உற்சாகத்தைக் குலைத்து விடாதபடி நான் அவனோடு பேசத் துவங்கினேன், பள்ளி மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி குறித்து அவனிடம் விளக்கிச் சொல்லியபடி நடந்து கொண்டிருந்த போது ஷேன் கோவர்ட் இப்படிக் கேட்டான்,

"அப்பா, இந்த விளையாட்டுப் போட்டியில் என்னையும் சேர்த்துக் கொள்வார்களா?" அந்தக் கேள்விக்கான விடையைக் கூட என்னிடம் இருந்து கோவர்ட் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் எனக்குள் அந்தக் கேள்வி ஒரு தந்தையின் தவிப்பையும், வலியையும் உண்டாக்கி விட்டிருந்தது. பதில் ஏதும் பேசாமல் நீண்ட அந்தப் பள்ளியின் தாழ்வாரத்தில் நானும் கோவர்ட்டும் பல சுறுசுறுப்பும் துடிப்பும் நிரம்பிய சிறுவர்களைக் கடந்து நடந்து கொண்டிருந்தோம், குளிர் காற்றின் சில்லிட்ட பரவலைத் தாண்டி எனது முகத்தில் வெம்மை பரவி இருந்ததை நான் உணர்ந்தேன்.

cricket

அமர்ந்திருந்த கிரிக்கெட் குழுவினரின் தலைவனாக இருந்த அந்தச் சிறுவனிடம் சென்று ஷேன் கோவர்ட்டை உங்கள் அணிக்காக விளையாட ஒப்புக் கொள்வீர்களா? என்று தயக்கத்தோடு கேட்டேன், புன்சிரிப்புடன் ஷேன் கோவர்ட்டை ஒருமுறை பார்த்து விட்டு, அந்தச் சிறுவன் இப்படிச் சொன்னான்,

"ஒரு அணி விளையாடி முடித்து விட்டது அங்கிள், அவர்கள் இருபது ஓவர்களில் நூற்றி நாற்பது ஓட்டங்கள் எடுத்திருக்கிறார்கள், நாங்கள் இப்போது ஆடிக் கொண்டிருக்கிறோம், பதினேழு ஓவர்கள் முடிந்து தொண்ணூற்று மூன்று ஓட்டங்களைப் பதிவு செய்திருக்கிறோம், எங்களிடம் இருப்பதோ இன்னும் மூன்று ஆட்டக்காரர்கள் தான், இருப்பினும் நான் ஷேன் கோவர்ட்டை விளையாட அனுமதிக்கிறேன், வாய்ப்பிருந்தால் அவனும் விளையாடட்டும்" என்று ஒரு முதிர்ந்த மனிதனைப் போலச் சொன்னான்.

சொல்லி முடித்த கையோடு தான் அணிந்திருந்த தனது அணிக்கான கருநீல வண்ண மேலாடையை ஷேன் கோவர்ட்டுக்கு அணிவித்தான், கருநீல நிற மேலாடை ஷேனுக்கு மிகப் பொருத்தமானதாகவும், மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருந்தது, நான் ஷேனுக்கு அருகில் அமர்ந்து கொண்டேன், ஷேன் நன்றியோடு என்னை ஒருமுறை பார்த்துச் சிரித்தான், வெம்மை குறைந்து குளிர் காற்றின் விழுதுகள் என் முகத்தில் படியத் துவங்கி இருந்தன.

நூற்று முப்பத்தி ஓரு ஓட்டங்களை பெற்றிருந்த போது ஒன்பது ஆட்டக்காரர்களை இழந்து தடுமாறியது அணி, இப்போது அணித்தலைவன் ஷேன் கோவர்ட்டின் கைகளில் பாட்டைக் கொடுத்து மைதானத்துக்குள் செல்லுமாறு பணித்தான், ஷேன் கிரிக்கெட் விளையாடுவான், அவனது வலிமை இக்கட்டான இன்றைய ஆட்டத்தில் வெல்லப் போதுமானதாக இல்லையென்றாலும் அணித்தலைவன் ஷேன் கோவர்ட்டால் விளையாட முடியும் என்று நம்பினான்.

ஷேன் கோவர்ட் என்ற அந்தச் சின்னஞ்சிறு மன நலமில்லாத மனிதன் மிகப் பெரிய மைதானத்துக்குள் நுழைந்து அதன் நடுவே நின்று கொண்டிருந்தான். பந்து வீசத் துவங்கிய அந்தச் சிறுவனின் கால்கள் பந்தைச் சுமந்த கைகளோடு ஓடத் துவங்கியபோது எனது இதயத் துடிப்பு அதிகரிக்கத் துவங்கியது.

விக்கட்டின் மறுமுனையில் வந்து கொஞ்சம் நிதானித்தான் பந்து வீசும் சிறுவன், அவனது கைகளில் இருந்து வழக்கமாய் வரும் வேகத்தில் இல்லாமல் இம்முறை மிக மெதுவாகவும், மட்டைக்கு நேராகவும் வந்தது பந்து, ஷேன் மட்டையைச் சுழற்றிக் காற்றில் திரும்பினான், நூழிழையில் தப்பிச் சென்றது பந்து, "ஊவ்வ்வ்" என்று வாயில் விரல் வைத்துக் கடித்துக் கொண்டான் அணித்தலைவன்,

இப்போது சில சிறுவர்கள் எழுந்து நின்று "கம் ஆன் ஷேன், கம் ஆன் ஷேன், கம் ஆன் ஷேன்" என்று கத்தத் துவங்கினார்கள், இம்முறை அதிக தூரம் செல்லாமல் மிகக் குறைந்த தூரத்தில் இருந்து மட்டையிலேயே விழுமாறு பந்து வீசினான் பந்து வீசும் சிறுவன், தனது பலம் முழுவதும் திரட்டி ஷேன் மட்டையைச் சுழற்றினான், பந்து மட்டையில் பட்டு ஷேனின் இடது பக்கமாக ஓடத் துவங்கியது, "ஷேன் ஓடு ஓடு" என்று நாலாபக்கமும் இருந்து சிறுவர்கள் குரல் கொடுக்கவும், ஷேன் ஓடத் துவங்கினான், மூச்சிரைக்க ஓடி ஒரு ஓட்டம் எடுத்து முடித்த போதும் பந்து திரும்பி வந்திருக்கவில்லை, அணித்தலைவன் இப்போது "ஷேன் இன்னொரு ஓட்டம் எடு, ஓடு, ஓடு" என்று மைதானத்துக்குள் நுழைந்து கத்தினான்.

கைகளைத் தட்டியபடி நானும் ஷேனின் இன்னொரு ஓட்டத்தை காணக் காத்திருந்தேன், ஷேன் இப்போது மிகவும் களைத்திருந்தான், அவனால் மற்ற சிறுவர்களைப் போல அத்தனை வேகமாக ஓட முடியாது, ஆனாலும் ஷேன் என்னைப் பார்த்துச் சிரித்தபடி இரண்டாவது ஓட்டத்திற்கு முயன்று வெற்றியும் பெற்றான். இப்போது அணியின் ஓட்டங்கள் நூற்று முப்பத்து மூன்று.

மூன்றாவது பந்தை மிக மெதுவாகவும், மட்டையில் படுமாறும் வீசிய சிறுவனின் கண்களில் ஷேன் ஓட்டங்களை எடுக்க வேண்டும் என்கிற அளவற்ற அன்பு நிறைந்திருந்தது, அந்த அன்பு ஷேனின் மட்டையை பந்தோடு இணைக்கப் போதுமானதாக இருந்தது, இன்னுமொரு ஓட்டத்தை எடுத்திருந்தான் ஷேன், அடுத்த பந்தை சந்தித்த உயரமான மற்றொரு ஆட்டக்காரச் சிறுவன் பந்தை ஓங்கி அறைந்தான்,

பந்தைக் கவனிக்காமலேயே ஓடத் துவங்கிய அந்தச் சிறுவன் ஷேன் இன்னும் ஓடத் துவங்காததை கவனித்தான், "ஷேன் ஓடு, ஓடு" என்று கத்திக் கொண்டே தன்னை நோக்கி ஓடி வந்த அந்தச் சிறுவனைப் பார்த்தவுடன் தான் ஓட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பாதி தூரம் ஓடி முடித்திருந்தான் ஷேன், கனத்துக் கிடந்த அந்த மட்டையைத் தூக்கியபடி ஓடிக் கொண்டிருந்த ஷேனை இப்போது இரண்டு அணி வீரர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள், பந்து எல்லைக் கோட்டைத் தாண்டி இருந்தது.

untitled

நான்கு ஓட்டங்கள், அணியின் ஓட்டங்கள் நூறு முப்பத்து எட்டு, இப்போது ஷேனின் முறை, ஒரே ஒரு ஓட்டத்தை எடுத்தால் அணி சமநிலை பெறும், இரண்டு என்றால் வெற்றி, ஆட்டம் இழந்தால் எதிர் அணி வெற்றி பெறும், இம்முறை பந்து வீசிய சிறுவன் தனது வழக்கமான வேகத்திலேயே மட்டைக்கு நேராக வீசினான், ஷேன் மட்டையைச் சுழற்றாமல் பந்தைத் தடுத்தான்.

பந்து நகரத் துவங்கியது, இடது பக்கமாக மிக அருகில் நின்றிருந்த எதிர் அணி வீரனின் கையில் பந்து சிக்கிக் கொண்டது, ஷேன் மூச்சிரைக்க ஓடத் துவங்கினான், களைப்பிலும், அயர்ச்சியிலும் ஷேன் இருமியபடி மட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடினான், பாதி தூரத்தில் இருக்கும் ஷேனின் விக்கட்டை எறிந்து வீழ்த்தி விடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் பந்தை வைத்திருந்த சிறுவனிடம் இருந்தது, ஆனால் யாரும் எதிர்பார்க்காத மாதிரி அந்தச் சிறுவன் பந்தை விக்கெட் கீப்பரின் தலைக்கு மேலே வீசி எறிந்தான்.

பந்து யாருமற்ற திசையில் ஓடிக் கொண்டிருந்தது, அதற்குள் ஷேன் இரண்டாவது ஓட்டத்தை முடித்து விட்டிருந்தான், ஷேனின் அணி வீரர்கள் ஓடி வந்து ஷேனைத் தங்கள் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டார்கள், ஷேன் தனது மெல்லிய வளைந்த விரல்களால் ஓசை எழுப்ப முயன்றபடி என்னைப் பார்த்துச் சிரித்தான், தனது தந்தையின் ஆவலைத் தான் பூர்த்தி செய்து விட்டதாக அவன் பெருமையோடு நினைத்துக் கொண்டிருந்தான்.

சிறுவர்கள் தங்களுக்குள் ஆட்டத்தின் வெவ்வேறு கணங்களைப் பேசிக் கொண்டிருந்த போது நான் அணித்தலைவனான அந்தச் சிறுவனின் கைகளைப் பற்றிக் கொண்டேன், "நன்றி, ஜேம்ஸ், நீ ஷேன் கோவர்ட்டின் வாழ்க்கையை நம்பிக்கையோடு துவக்கி வைத்திருக்கிறாய்", என்றவுடன், "ஷேன் இன்னும் சிறப்பாக விளையாடுவான் அங்கிள்" என்று உரக்கச் சொல்லி விட்டு விடை பெற்றான்.

சூரியன் தனது வெம்மையைக் குறைத்துக் கொண்டு மேல் திசையில் மறையத் துவங்கி இருந்த அந்த மாலையில் ஷேன் கோவர்ட் புதிய நம்பிக்கைகளோடு என் கைகளைப் பிடிக்காமல் நடக்கத் துவங்கினான். ஷேன் கோவர்ட் என்ற அந்தச் சின்னஞ்சிறு மனிதன் இரண்டு இளவேனிற் காலங்களுக்குப் பிறகு இறந்து போனான், ஆனாலும் அவனைப் போலவே மனநலம் குன்றி வாழ்க்கையை எதிர்கொள்ளும் குழந்தைகளின் வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர் கொள்ளவும், வெற்றி கொள்ளவும் அவன் எனக்கு உதவி செய்திருந்தான். அவனது நம்பிக்கையை நான் இந்த ஒலிபெருக்கியின் மூலமாக உங்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறேன், நன்றி.” என்று சொல்லி அமர்ந்து கொண்டார் ஷேன் கோவர்ட்டின் தந்தை.

stock-footage-a-beautiful-tree-with-spring-green-life-foliage-basking-in-radiant-sunlight-seamless-looping-clip

அவரது கண்களில் கண்ணீர் ஓரு மெல்லிய கீற்றுப் போல வழிந்து கொண்டிருந்தது, இப்போது கூட்டம் ஆரவாரித்தது, ஷேன் கோவர்ட்டின் தந்தையைச் சூழ்ந்து கொண்டு பலர் கைகுலுக்கத் துவங்கினார்கள், உரை மிகச் சிறப்பானதாக இருந்ததாக அவரிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார், காவலரோடு சண்டை பிடித்துக் கொண்டிருந்த வயதான அந்த மனிதர். பேராசிரியர் அக்கோ பெர்னாண்டோ முதல் முறையாக பத்தாயிரம் டாலர்களுக்கு மேலாக மனநலம் குன்றிய குழந்தைகளின் வளர்ச்சி நிதியை பதிவு செய்து கொண்டிருந்தார்.

வார்னர் பல்கலைக் கழகத்தின் உள்ளரங்க இருக்கைகளில் படிந்திருக்கும் ஷேன் கோவர்ட்டுக்கான கண்ணீர்த் துளிகள் நாளை காலையில் துடைக்கப்படலாம், ஆனாலும் அந்த ஈரத்தில் இருந்து தான் தழைத்து வளர்கின்றன வார்னர் பல்கலைக் கழகத்தின் மரங்கள். இந்த உலகமும், வாழ்க்கையும் கூட…..

("ரப்பி பேசச் க்ரோனின்" "யாரும் விளையாடலாம் – (Anyone can Play)" என்ற ஆங்கிலச் சிறுகதையைத் தழுவி எழுதப்பட்டது.)

 

*************

Advertisements

Responses

  1. This story is a great one i have ever read. sorry for english. shall i teach this in my school sir? please reply.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: