கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 11, 2012

பூவரச மரத்தின் இலைகளும், ஒரு அறையும்.

Doctor_2

மழை வரும் போலிருந்தது, மண்வாசம் நாசியைத் துளைத்துக் கொண்டு பழைய நினைவுகளை வருடியது, காற்று விசித்திரமான ஒலி எழுப்பியபடி நோயாளிகளின் வலிகளை உள்ளிழுத்தபடி ஓடாடிக் கொண்டிருந்தது, கொஞ்ச நேரம் வெளியில் வந்து நிற்க வேண்டும் போலிருந்தது, எனது வெண்ணிறக் கோட்டை கழற்றி நாற்காலியில் போட்டு விட்டு அறையை விட்டு வெளியேறி நடக்க ஆரம்பித்தேன், வழக்கமான நோயாளிகளை விடவும் அதிகமாகவே இருந்தார்கள், இந்த நேரத்தில் வெளியேறிப் போவது எனக்கே கொஞ்சம் கூச்சமாக இருந்தது.

இந்த நீண்ட வரிசைகளில் இருக்கும் மக்கள் இங்கே வருவதற்காகக் குறைந்த பட்சம் அவர்களின் ஒருநாள் கூலியையாவது இழந்திருப்பார்கள், பல மணி நேரங்கள் காத்திருந்து கிடைக்கும் ஊர்திகளைப் பிடித்து தமது அன்பானவர்களை நலம் செய்து விட வேண்டும் என்று இங்கே அழைத்து வந்திருப்பார்கள், இருப்பினும் எனக்கு இந்த மழையின் வாசனை எப்போதும் ஒரு கோப்பை தேநீரின் சுவையை நினைவுபடுத்தி விடுகிறது, மழைக்காற்று வீசும் போது சுற்றி அடிக்கிற குளிரில் ஒரு கோப்பைத் தேநீர் என்பது வாழ்க்கையின் கொண்டாட்டம், அப்படியான கணங்களே இந்தக் கடுஞ்சுமை நிரம்பிய வாழ்க்கையின் சில கணங்களையாவது கொஞ்சம் இளைப்பாற விடுகிறது.

நான் மருத்துவமனையின் நீண்ட வாசலில் எப்போதும் கிடந்த படிக்கட்டுகளில் இறங்கி நடக்கத் துவங்கினேன், காற்று முன்னிலும் வேகமாய் வீசத் துவங்கியது, பூவரச மரத்திலிருந்து செந்நிறத்தில் சில முதிர்ந்த பூக்கள் உதிரத் துவங்கின, அடர்ந்து பரந்த அந்த மரத்தின் கிளைகள் மழைக் காற்றில் சிலிர்த்து தன் மகிழ்ச்சியை சில இலைகளை உலுப்பி காற்றில் பரப்பின, அந்த மரத்தின் கீழே இப்படி நடப்பது எனது வறுமையும், துன்பமும் நிரம்பிய இளமைக் காலத்தின் நினைவுகளை மீட்டி எடுக்க எப்போதும் போதுமானதாக இருந்தது.

நான் உணவகம் சென்று ஒரு கோப்பைத் தேநீரை மிக மெதுவாகக் குடித்து விட்டு எனது இருக்கைக்குத் திரும்பினேன்.அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் என்னருகில் வந்து நின்றார், "உக்காருங்க பெரியவரே, என்ன செய்யுது?" என்று கொஞ்சம் உரத்த குரலில் கேட்டேன், "ஐயா,ரெண்டு நாளா ஒரே வயித்து வலி, தாங்க முடியல, வேலைக்குப் போகல, கோடாங்கி கிட்டப் போயி அடசல் எல்லாம் எடுத்துப் பாத்துட்டேன், கேக்கல ஐயா". ஒருகாலத்தில் வெண்ணிறமாய் இருந்த அவருடைய சட்டையைக் கொஞ்சமாய் மேலே உயர்த்தி, வயிற்றின் கீழ்ப் பகுதியில் அழுத்திப் பார்த்தேன்.

"எந்த எடத்துல வலிக்குது பெரியவரே, இங்கேயா? இங்கேயா?" தொடர்ந்து கீழ்ப் பகுதியில் அழுத்திக் கொண்டே வருகையில் ஓரிடத்தில் அம்மா என்று பெரியவர் முனகினார், அந்த இடம் கண்ணிப் போயிருந்தது, எங்கோ எப்போதோ அடிபட்டிருக்க வேண்டும், நிறம் மாறி கட்டிக் கிடந்த அந்த இடத்தின் உள்ளே இருந்து தான் அவருக்கு வலி உண்டாக வேண்டும் என்பதை ஒரு எளிய நாட்டு வைத்தியனும் உணர முடியும்.

"இது எப்போ அடிபட்டது?, வீக்கமா வேற இருக்கு, எத்தனை நாளா வலிக்குது?" என்கிற எனது தொடர்ச்சியான கேள்விகளுக்கு மிகச் சுருக்கமாய் "செங்கல்லு விழுந்தது ஐயா, மாசத்துக்கு மேலே இருக்கும், இது உள்ள கூடி வலிக்குதுங்கய்யா" என்று சொன்னவரிடம், "வெளிய கூடி முடிஞ்சு, இப்போ உள்ள கூடியிருக்கு, உடனே வந்து பாக்குறதில்ல, ஒரு ஒத்தடமாவது குடுக்கலாம்ல, இப்பிடி செப்டிக் ஆகுற வரைக்கும் வச்சுக்கிட்டு அப்புறம் வந்தா" என்று கொஞ்சமாகக் கோபம் வரவழைத்துச் சொன்னேன், "ஒத்தடம் குடுக்க யாருங்கையா இருக்கா, வேலைக்குப் போயி காசு குடுக்கலைன்னா மருமகப் புள்ள சரியாச் சோறு போடாது, ஒத்த மயனப் பெத்தவனுக்கு புள்ள சரியில்லங்கய்யா, என்ன செய்ய?" சொல்லி விட்டு அமைதியானார் பெரியவர்.

ஒரு முறை நிமிர்ந்து அவரது முகத்தைப் பார்த்தேன், ஒரு தந்தையின் ஆற்றாமை, ஒரு தந்தையின் நோயுற்ற காலத்தில் அவரைக் கொஞ்சம் அன்பான சொற்களாலும், அரவணைப்பாலும் கவனிக்க முடியாத அந்த மகனின் மனநிலைக்கு எவர் மருத்துவம் பார்ப்பது, மகனின் அன்புக்காக ஏங்கும் நோயே அவரை இப்போதைக்குப் பீடித்திருக்கிறது, வயிற்று வலியை விடவும், மன வலியே அவரை அதிகமாய்த் துன்புறுத்துகிறது.

"சீட்டுல ஊசி எழுதி இருக்கேன், போட்டுக்குங்க, ரெண்டு மாத்தர எழுதி இருக்கேன், மூணு நாலு காலைல, ராத்திரி சாப்ட்ட பின்னாடி சாப்பிடுங்க, மஞ்சக் கலர்ல ஒரு களிம்பு தருவாங்க, சுடுதண்ணி ஒத்தரம் குடுத்த பின்னாடி நல்லாத் துடச்சுட்டு, களிம்பு தடவிக்குங்க, மூணு நாளுக் கழிச்சு மறுபடியும் வாங்க, வலி இருந்தா எக்ஸ்ரே எடுத்துப் பாக்கனும்", சட்டையைக் கீழே இழுத்து விட்டு கனிவோடு அந்தப் பெரியவரை ஒரு முறை பார்த்தேன், பாதி நோய் சரியான மாதிரிச் சிரித்து விட்டுக் கும்பிட்டார்.

doctor_child_530

அடுத்து ஒரு குழந்தையைத் தூக்கியபடி நின்றிருந்த அந்த இளம்பெண்ணிடம், "யாருக்கும்மா பாக்கணும்?" என்றவுடன், "புள்ளைக்கு ரெண்டு மூணு நாளா காச்சல் சார், வலிக்குது வலிக்குதுன்னு கத்துறா! எங்கே வலிக்குதுன்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறா! சொல்லத் தெரியல!" "இப்படி உக்கார வைம்மா", என்றவுடன் உரத்த குரலில் அழத் துவங்கினாள் அந்தக் குழந்தை.

"ஊசி வேண்டா, ஊசி வேண்டா" என்று மழலையாய் அழுத அந்தக் குழந்தையை " "ஊசி வேண்டாம், டானிக் தரேன், ஆக் காட்டு, செல்லம், உங்க பேரென்ன?" "அம்ம்முதா" என்று அழுகையின் ஊடே சொன்ன குழந்தையின் காதுக்கருகில் பொறிப் பொறியாய்த் திட்டாக இருந்த இடத்தைக் காட்டி "இது என்னம்மா குழந்தைக்கு?" என்று அந்த இளம்பெண்ணிடம் கேட்டதற்கு "என்னமோ பூச்சி கடிச்சிருக்கு சார், அது ரெண்டு மூணு நாளாவே இருக்கு, மஞ்சளைப் பூசி விட்டேன்".

டார்ச் விளக்கை எடுத்துக் காது மடலைப் பிரித்து உள்ளே அடித்துப் பார்த்தேன், "Mid Ear Allergy" என்கிற வெளியில் தெரியாத வலி குழந்தையை வாட்டி இருக்கிறது, "ஊசி போடனும்மா, டானிக் எழுதித் தாரேன், வெளில வாங்கிக் குடுக்குறீங்களா? இங்க ஸ்டாக் இல்லை, அறுபது ரூபாய் வரும்மா", "பரவாயில்லை சார், வாங்கிக் குடுக்குறேன்" என்றபடி சீட்டுக்களை வாங்கிக் கொண்டு புறப்பட்டாள் அந்தப் பெண், குழந்தை திரும்பி ஒரு முறை என்னைப் பார்த்து விட்டு, வெடுக்கென்று திரும்பி வேகமாக அம்மாவின் தோளில் இருக்கமாய் முகம் புதைத்தாள்.

அப்பா நினைவாக வந்தது, எழுந்து சாளரப் பக்கம் வந்தபோது மழை லேசாய்த் தூறிக் கொண்டிருந்தது, பூவரச மரங்களின் இலைகள் நனைந்தும் நனையாமலும் அடர் பச்சையாய் வானத்தின் நீலத்தோடு ஒட்டிக் கிடந்தன, அலைபேசியின் பொத்தான்களில் அப்பாவின் எண்களை அழுத்தினேன், அழைப்பு போய்க் கொண்டே இருந்தது, யாரும் எடுக்கவில்லை, இன்னொருமுறை அடித்து விட்டுப் பாதியில் துண்டித்த போது "ஹல்" என்கிற அப்பாவின் பாதி அருந்த ஹலோ காதில் விழுந்தது.

மீண்டும் ஒரு முறை அழைத்து அப்பா அழைப்பை எடுத்த போதே "இல்லப்பா, வெளில நின்னுட்டு இருந்தேன், வந்து எடுக்குறதுக்குள்ள கட்டாயிருச்சு" என்றார். "சரிப்பா, நல்லாருக்கீங்களா?, ஒடம்பு எப்படி இருக்கு?", என்றவனிடம் "நல்லா இருக்கேன், நீ எப்டி இருக்க, உங்க அம்மா, மாரியப்பன் மக கல்யாணத்துக்குப் போயிருக்காப்பா, உடம்பு நல்லா இருக்குப்பா, நீ எப்ப வர்ற?, அடுத்த வாரம் வர்றேன்னு அம்மா சொல்லிட்டு இருந்தா, லீவு இருக்காப்பா?" "ஆமாப்பா, ரெண்டு நாள் லீவு இருக்கு, உடம்பப் பாத்துக்குங்க, மாத்தரை எல்லாம் சரியாச் சாப்பிடுங்க, ரெண்டு வேலையும் முடிஞ்ச அளவுக்கு நடங்க, நடக்குறது ரொம்ப நல்லது, நான் சாயிங்காலம் பண்றேம்பா, வக்கிறேன்" என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்து இருக்கையில் அமர்ந்தேன்.

Stock Photoதலைமைச் செவிலி வள்ளியம்மாள் ஓட்டமும், நடையுமாக அறைக்குள் நுழைந்து, "சார், பாய்சன் கேஸ் ஒன்னு வந்திருக்கு, ஓர மருந்தக் குடிச்சிருக்காம், கொஞ்சம் சீரியஸா இருக்கு, வரீங்களா" என்று சொல்லி விட்டு விடு விடு வென்று நடக்கத் துவங்கினார்கள், என் அருகில் நின்றிருந்த அந்த வயதான பெண்மணியிடம் "அம்மா, உக்காந்திருங்க, வரேன்" என்று சொல்லி விட்டு நடக்கத் துவங்கினேன்.

நடக்கும் போதே மணியைப் பார்த்தேன், ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது, மாறி மாறிக் கடந்த சாளரங்களின் வழியாக பூவரச மரம் சொட்டுச் சொட்டாய் மழையில் பிடித்த நீர்த் துளிகளை வடித்துக் கொண்டிருந்தது, அந்த மரத்தின் அடியில் தண்டுகளை ஒட்டிக் குளிரில் நடுக்கியபடி சில மனிதர்களும், நான்கைந்து வெள்ளாடுகளும், ஒரு நாயும் நின்று கொண்டிருந்தார்கள். யாவருக்கும் சமமான ஒண்டுதலை வழங்கியபடி மிக உயரமாய் வளர்ந்து செழித்துக் கிடந்தது பூவரச மரம்.

தீவிர மருத்துவப் பிரிவுக்குள் நுழைந்த போது, படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தாள் ஒரு பதினைந்து வயது மதிக்கத் தக்க சிறுமி, அவளது முகம் ஒரு சிறு குழந்தையின் முகத்தைப் போல வாடாமல் இருந்தது, வாயின் இடது ஓரத்தில் நுரை ஒட்டிக் கிடந்த அந்தப் பெண்ணைப் பார்த்த போது மனம் நடுங்கிப் போனது, அருகில் சென்று நாடித் துடிப்பை ஒரு முறை பரிசோதித்துப் பார்த்தேன், பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் இல்லை, உணர்வோடே இருந்தாள், எனது நடவடிக்கைகளை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டு…….

உடனடியாக எனிமா கொடுக்கப்பட வேண்டும், "வள்ளியம்மா, எனிமா குடுங்க, எத்தனை மணிக்கு ஆச்சு?, என்ன குடிச்சுச்சு இந்தப் பொண்ணு?", என்று வாசல் பக்கமாய்த் திரும்பினேன், நடுத்தர வயது மனிதர் ஒருவர், அப்பாவாக இருக்க வேண்டும், "அரமணி நேரம் இருக்குய்யா, உர மருந்துங்கய்யா, டப்பாவ எடுத்துட்டு வந்திருக்கேன்", என்று மஞ்சள் துணிப் பையில் இருந்து அந்தப் பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் கையில் கொடுத்தார், "Magnesium Poisioning" என்று அதன் பெயரைப் படித்தவுடன் தெரிந்தது.

வள்ளியம்மா, எனிமாக் குடுத்து முடிஞ்சதும் "கால்சியம் க்ளோரைடு ஆண்டி டோஸ் ட்ரிப்" போடுங்க, என்று சொல்லிவிட்டுத் திரும்பி ஒருமுறை படுக்கையில் இருக்கும் பெண்ணின் முகத்தைப் பார்த்தபோது என்னை அவள் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது, இப்போது வள்ளியம்மா, எனக்கு நெருக்கமாய் வந்து "வாயே தெறக்க மாட்டேங்குது சார், வீட்டுல உப்புத் தண்ணி கலக்கி குடுக்கப் போனதுக்குக் கூட வாயத் தொறக்கவே இல்லையாம், ரொம்ப முரண்டு பண்ணுது", என்று சொல்லிவிட்டு நான் என்ன சொல்லப் போகிறேன் என்று என் முகத்தையே உற்றுப் பார்த்தார்கள்.

நான் ஏதும் பேசாமல் அந்தப் பெண்ணின் படுக்கையருகே சென்று "உயிர் வாழணும்னு ஆசை இருக்கா இல்லையா?" என்று கொஞ்சம் கனிவாகக் கேட்டேன், பதில் இல்லை, தனது பற்களை இறுக்கமாக அந்தப் பெண் கடித்துக் கொண்டிருப்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது, ஒரு முறை திரும்பி அதே வேகத்தில் பளீரென்று அவளது கன்னத்தில் பலம் கொண்ட மட்டும் விரல்கள் பதியுமாறு ஒரு அறை கொடுத்தேன், சுற்றியிருந்தவர்களும் அந்தப் பெண்ணும் ஒரு முறை நிலை குலைந்து போனார்கள்.

"வாயத் தெற, கழுத, என்ன வெளையாட்டுப் பண்றியா, வேற வேலை இல்ல யாருக்கும், பண்றது தப்பு, சுத்தி இருக்குற எல்லாருக்கும் கஷ்டம் குடுத்துட்டு ஆஸ்பிட்டல்ல வந்து அடம் புடிக்கிற, கையக் காலக் கட்டுங்க வள்ளியம்மா, இந்தப் புள்ளைக்கு", பற்களும் வாயும் நெகிழ்வடைந்தன இப்போது அந்தப் பெண்ணுக்கு, அவள் ஒரு வித மிரட்சியோடு என்னைப் பார்த்தாள், "உன் பேரென்ன?, என்ன படிக்கிற?" "கண்மணி" என்றவளின் கண்களில் நீர் ததும்பிக் கொண்டிருந்தது.

"பிளஸ் ஒன் படிக்கிறேன்", "எதுக்கு மருந்து குடிச்ச? சர்பத்துன்னு நெனச்சுக் குடிச்சியா? பதினஞ்சு வயசு வரைக்கும் ஒன்னைய வளைத்து ஆளாக்க இங்க நிக்கிற ரெண்டு பேரும் என்ன பாடு பட்டிருப்பாங்கன்னு தெரியுமா ஒனக்கு, விவசாயக் குடும்பத்துல பொறந்த புள்ள தான நீ? வயல் வேலையெல்லாம் பாத்திருக்கியா? நாலஞ்சு நாலு சேத்துல விட்டு களத்து வேல பாக்கச் சொல்லணும், நீங்க கண்ணே மணியேன்னு கொஞ்சி இருப்பிக, அதுக்குத்தான் இப்படிப் பண்ணி இருக்கு", "கஞ்சிக்கு இல்லைன்னாலும், இந்தப் புள்ளைக்கு ஒரு கொறையும் வக்கிறதில்லையா" என்று சேலைத் தலப்பில் மூக்கைத் துடைத்துக் கொண்டு அழுதார் கண்மணியின் அம்மா.

USSpecialtyCareImage

செய்யப்பட வேண்டிய எல்லாவற்றையும் செய்து அந்தச் சிறு பெண்ணின் உயிரைத் திரும்ப நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்த சேர்த்து கைகளைக் கழுவிய போது அந்தப் பெண்ணின் அம்மா வந்து அருகில் நின்று, "நீங்க நல்லா இருக்கணும், சாமி, எம்புள்ளை உசிரக் காப்பாத்துன கொலசாமி நீங்க, பத்து வருஷம் தவங்கிடந்து பெத்த புள்ள ஐயா, அவுக அப்பா திட்டுனாகன்னு பொசுக்குன்னு மருந்தக் குடிச்சிருச்சு". அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தபோதே பள்ளிக் கூடத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுவன் ஒருவன் உள்ளே நுழைந்து, அவனது அக்காவின் அருகில் சென்று நின்று கொண்டான், “அக்கா என்ன காச்சலா?, மருந்து குடிச்சியா?” சரியாயிருச்சா?" என்று விஷயம் புரியாமாலேயே கேள்விகள் கேட்டபடி கொஞ்ச நேரம் அருகில் நின்றான், பிறகு படுக்கையில் அமரப் போனவனை "அக்காவுக்கு ஒன்னும் இல்ல, சரியாயிருச்சு, நீ கொஞ்ச நேரம் வெளில இரு தம்பி" என்று வெளியேற்றி விட்டு கண்மணியின் முகத்தை நோக்கி "யாரு? உந்தம்பியா? இவன விட்டுட்டு செத்துப் போறியா?" சரி வீட்டுல போயி இன்னொரு டப்பா மருந்து எடுத்துட்டு வரச் சொல்லுவமா?" கேட்டு விட்டு முகத்தை ஒருமுறை மீண்டும் பார்த்தபோது எனது விரல் தடங்கள் அவளது கன்னத்தில் பதிந்து லேசாகச் சிவந்து தடித்திருந்தன.

ஆனால், அறை நன்றாக வேலை செய்திருக்கிறது, அவள் எனிமாவுக்கும், மருந்துகளைக் குடிப்பதற்கும் ஒத்துழைக்க ஆரம்பித்தது அந்த அறைக்குப் பிறகு தான், அவளது குற்ற உணர்வுக்கான தண்டனை அந்த அறை என்று அவள் நம்பத் துவங்கி இருந்தாள், அவளது மனமும், உடலும் கொஞ்சமாய் இறுக்கத்தில் இருந்து தளர்வடைந்து கொண்டிருப்பதாக நான் நம்பிய போது உணவு நேரம் தாண்டி வெகு நேரத்தைக் காட்டியது சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரம், “மூன்று மணிக்கு மேல் இனி உணவு கிடைப்பது கடினம் தான், சரி, பார்க்கலாம்” என்று நினைத்தபடி முன்பக்க வாசலுக்கு வந்தபோது ஏனோ காலையில் காத்திருக்கச் சொன்ன பாட்டியின் நினைவு வந்தது.

தேநீரும், வடையும் சாப்பிட்டு விட்டு அறைக்குத் திரும்பி அன்றைய நோயாளிகளின் அறிக்கையைத் தயார் செய்து முடித்த போது மணி ஐந்தரை, மீண்டும் கண்மணியின் முகமும், அவளது கன்னத்தில் சிவந்திருந்த எனது விரல்களின் தடங்களும் நினைவுக்கு வர தீவிர மருத்துவப் பிரிவு அறையை நோக்கி நடக்கத் துவங்கினேன். நான் இப்போது கண்மணியின் படுக்கைக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தேன், கண்மணி உறங்கிக் கொண்டிருக்க வேண்டும், என்னைப் பார்த்ததும், கண்மணியின் அம்மா, எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள், அவர்களை அமரச் சொல்லி விட்டு அவளது கையைப் பிடித்து நாடித் துடிப்பை ஒரு முறை சோதித்துப் பார்த்தேன், கண்களைத் திறந்து விழித்து ஒருமுறை எழுவதற்கு முயன்றால் கண்மணி.

கையால், படுக்கச் சொல்லி சைகை செய்து விட்டு, நீண்ட நேரமாய் அவளது பூனை போன்ற அழகிய கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன், பின்பு அவளது கன்னங்களை மெல்ல வருடி, "வலிக்குதாம்மா?" "இல்ல டாக்டர்", என்றவளின் குரல் உணர்ச்சி வசத்தில் கம்மியது, "என்ன கஷ்டம் வந்தாலும், யாரு என்ன திட்டினாலும் வாழ்ந்தும், போராடியும் தாம்மா பாக்கணும், அம்மாவும், அப்பாவும் எப்படித் துடிச்சுப் போயிருக்காங்கன்னு

நெனச்சுப் பாத்தியா? அவங்கள விட ஒனக்கு என்ன அப்படிப் பெருசா வேணுமா இருக்கு, இனிமே இப்பிடி முட்டாத்தனமா எதுவும் பண்ணாத என்ன?". ஒரு அழகிய பொம்மையைப் போலத் தனது தலையை ஆட்டிச் சரி என்றால் கண்மணி

எனது கைகள் அவளது மென்மையான பஞ்சு மாதிரியான கன்னங்களையே வருடிக் கொண்டிருந்தது, "நீ ஒழுங்கா மருந்து குடிக்கனும்னு தான் அடிச்சேன், வேகமா அடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்". என்று நானாகவே சொல்லிக் கொண்டு வாசலுக்கு வந்து திரும்பி ஒருமுறை கண்மணியைப் பார்த்தேன், இப்போது அவளது கண்களில் புதிய நம்பிக்கைகளும், அன்பும் பெருகிக் கொண்டிருந்தது, கூடவே கண்ணீரும்…….

முன்புற வாசலை அடைந்த போது பூவரச மரங்களின் கிளைகளில் சில குருவிகளும், காக்கைகளும் ஒலி எழுப்பியபடி அடைந்து கொள்ளத் தயாராகி இருந்தன, சிவப்புக் குற்றாலத் துண்டை விரித்து ஒரு முதியவர் அதனடியில் படுத்திருந்தார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளில் எதிரெதிராக அமர்ந்து இரண்டு இளைஞர்கள் உரக்கப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள், மழை முடிந்த அந்த மாலை மருத்துவமனைக்கு வெளியே மிக அழகானதாய் இருந்தது.

Tree-silhouette

சில நேரங்களில் அங்கே அமர்ந்திருக்கும் இளைஞர்களைப் போல இங்கிருந்து விடுபட்டு ஆட்களற்ற சாலையில் வளர்ந்து செழித்த ஒரு பூவரச மரத்தின் நிழலில் கரைந்து விட வேண்டும் போல எனக்குத் தோன்றும், ஆனாலும், உள்ளிருக்கும் மனிதர்களின் உயிர் பயமும், நம்பிக்கையும் கலந்த மருத்துவர்களின் மீதான அன்பு, அந்த விடுதலையை விட எனக்குள் ஆழ்ந்த அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கப் போதுமானதாக இருந்தது. நான் இந்த உலகில் பெரிதும் வெற்றி பெற்ற மனிதனாய் எதிரில் நின்ற பூவரச மரத்தை விட உயரமானவனாய் இருந்தேன்.

***********

Advertisements

Responses

  1. மிகவும் நெகிழ்ச்சியாக உணர்நதேன்.
    அன்பும் அரவணைப்பும் புரிந்துணர்வும் போராட்டமும் தானே வாழ்ககை

    • நன்றி செல்வா சார், வலிகளும், போராட்டங்களும், கொண்டாட்டங்களும் நிரம்பிய வாழ்க்கைக்குள், அதன் பொருளைத் தேடும் போது இப்படித்தான் சில நிகழ்வுகள் தட்டுப்படுகின்றன. என்னுடைய நெகிழ்ச்சி உங்களுக்குள் கடத்தப்பட்ட போது இலக்கியம் என்கிற துணைப்பொருள் கிடைக்கிறது போலும். நெகிழ்வில் தானே இறுக்கங்கள் தொலைந்து போகின்றன. நாம் எப்போதும் நெகிழ்வாகவே இருப்போம். நன்றி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: