கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 3, 2012

சியின் நதிக்கரையில் ஒரு தாய்…………

kvefr0490s

சியின் நதியின் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த சுவர்களில் நதியில் வீழ்ந்து புரளும் அளவுக்கு மலர் மாலைகள் நெருக்கமாகக் கட்டப்பட்டிருந்தன, மழை நதியின் படிக்கரைத் தோட்டத்தின் குப்பைகளைக் கூட்டி தோட்டக்காரர்கள் வைத்திருந்த புகை அந்தக் காலையின் வெளிகளில் தூறிக் கொண்டிருக்கும் மழைத்துளிகளுக்குள் புகையைக் கசிய விட்டுக் கொண்டிருந்தது, மீன்பிடிப் படகுகள் இயக்கமற்று நதியின் ஓரங்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.

நகரமெங்கும் விழாக் கோலம் பூண்டிருந்தது, பாரிஸ் நகரத்தின் நோட்ரே டாம் ஐநூறு அடிச் சுற்றுச் சுவர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அந்த மாபெரும் விழாவின் நிகழ்வுகளுக்கு சாட்சியாகப் போவதை எண்ணிப் பெருமிதம் கொண்டிருந்தன, செங்கற்களால் கட்டப்பட்டிருந்த அந்த ஆலயத்தின் உட்புறமிருந்த சலவைக் கல் சிற்பங்களை எண்ணெய் ஊற்றித் துடைத்துக் கொண்டிருந்தார்கள் ஆலய ஊழியர்கள்.

ஆலயத்தின் வானளாவிய இருபுறக் கோபுரங்கள் மீதும் பணியாளர்கள் விளக்குகளைப் பொருத்துவதில் மும்முரமாயிருந்தார்கள், ஆலயத்தின் பின்புறச் சுவர்கள் சியின் நதியின் நீரலைகளை எப்போதும் வருடிக் கொண்டிருந்தன, பின்புறத் தோட்டத்தின் குருஞ்செடிகளும், வெளிர்சிவப்பு நிற மலர்களின் நீண்டு தாழ்ந்த கிளைகளும் நதியை உரசிக் கொண்டிருந்தன, நதி ஏதுமறியாமல் வழக்கம் போலவே மனிதர்களைக் குளிப்பாட்டியபடி பயணித்துக் கொண்டிருந்தது.

கொஞ்சம் தொலைவில் போர் வீரர்களைத் தாங்கிய கருங்குதிரைகளின் சிலைகள் கட்டிடத்தின் உச்சியில் அணிவகுத்துக் கிடக்க அந்த அரண்மனை வெகு சீக்கிரம் விழித்துப் பணியாற்றிக் கொண்டிருந்தது, செந்நிறத் தோல் உரைகளால் சுற்றப்பட்டிருந்த அந்த நீண்ட கட்டிலின் மீது உறக்கமின்றிப் புரண்டு படுத்தான் "நெப்போலியன் போனோபார்ட்", அரச உடைகளும், கவசங்களும் இல்லாமல் படுத்திருந்த அந்தப் பேரரசனைப் பார்க்கையில் பக்கத்துத் தெருவில் பஞ்சு மிட்டாய் விற்கும் வணிகனைப் போலிருந்தது.

மெல்லிய குள்ளமான அவனது உருவம் அவன் ஒரு பேரரசன் என்பதை மறுத்தன, ஆனாலும், இந்த உலகை உலுக்கிய வெகு சில மனிதர்களில் அவனும் ஒருவன், உலகின் பல்வேறு பகுதிகளுக்குத் தனது படைகளோடு சென்று வெற்றிகளைக் குவித்தவன், அதிகாலை மெல்லப் பகலாய் உருமாறிக் கொண்டிருந்தது, மழையா?, பனியா? என்று தெரியாதபடி குளிர் எங்கும் நிரம்பிக் கொண்டிருக்கையில் அரண்மனையில் வெம்மையின் சுவடுகள் சரவிளக்குகளின் அடைசளுக்குள் இருந்து பரவியது.

notre-dame-de-paris

"லூயிஸ் போர்ணி" மன்னரின் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தான், உயர் பாதுகாப்பு வளையத்தின் இரவு நேரச் சிறப்புப் பாதுகாவலர்கள் தங்கள் மாற்று வீரர்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பதை அவர்கள் கண்களில் வழியும் உறக்கம் காட்டிக் கொண்டிருந்தது. தனிப் பாதுகாவலன் டெம்மி ஒரு முறை உள்ளே சென்று லூயிஸ் போர்ணி வந்திருப்பதை நெப்போலியனிடம் சொல்லி விட்டு வந்திருந்தான், நெப்போலியன் தன்னை மறந்து உறங்கும் சாமானிய மனிதனில்லை என்பது லூயிஸ் போர்ணிக்கு நன்றாகவே தெரியும்.

இப்போது மணியோசை கேட்டது, லூயிஸ் உள்ளே அழைக்கப்படுகிறான், லூயிசும், நெப்போலியனும் ராணுவப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள், விளையாடும் காலத்தில் இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாயிருந்தார்கள், அதன் பொருட்டே மட்டுமில்லாது லூயிஸ் போர்ணியின் நுட்பமான நூலறிவுக்காகவும், நம்பகத் தன்மைக்காகவும் அவனைத் தன்னுடைய தனிச் செயலாராக பதவி உயர்த்தினான் நெப்போலியன்.

லூயிஸ் போர்ணி அறைக்குள் சென்றபோது நெப்போலியன் வெடிமருந்துகள் குறித்த ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தான், பிரெஞ்சு நாட்டின் தனிப்பெரும் பேரரசனாகத் தன்னை முடிசூட்டிக் கொள்ளப் போகும் நாளில் கூட நெப்போலியன் ஒரு நூலைத் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தது லூயிசுக்கு வியப்பளிக்கவில்லை, ஏனெனில் படிக்கும் காலத்தில் இருந்தே தன்னுடைய எல்லாச் செயல்பாடுகளுக்கும் பின்னால் ஒரு நூலை முன்மாதிரியாக வைத்துக் கொண்டிருந்தான் நெப்போலியன் போனோபார்ட் என்பது லூயிசுக்கு நன்றாகவே தெரியும்.

"மாட்சிமை பொருந்திய பேரரசர் அவர்களுக்கு வணக்கம்" என்று லூயிஸ் சொன்னபோது நெப்போலியன் நிமிர்ந்து நோக்கினான், "லூயிஸ் இன்றைக்கும் நீ ஒரு செயலாலாராகவே இருக்கிறாய் அல்லவா?" என்று நெப்போலியன் கேட்டபோது லூயிஸ் வியப்படைந்தான், எப்போதும் உங்கள் நம்பிக்கைக்குரிய செயலராக இருப்பதில் எனக்குப் பெருமை தான் பேரரசே" என்று ஒரு முறை முழங்காலை மடித்து வணக்கம் செலுத்தி விட்டுக் கட்டளைக்குக் காத்திருந்தான் லூயிஸ்.

அமைதியாக லூயிசின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் தொடர்ந்தான் நெப்போலியன், "இன்று ஒரு நாள் நீ என்னுடைய பழைய நண்பனாக இரு லூயிஸ், நான் கடுமையான மனச் சோர்வில் இருக்கிறேன், நான் பல நாடுகளை வென்றவன், இந்த பிரெஞ்சு தேசத்தின் வழக்கமான லூயிகளுக்கு நடுவில் தனியொருவனாக வளர்ந்திருக்கிறேன், இருப்பினும் இன்று நடைபெறப் போகும் இந்த மேன்மை பொருந்திய மகத்தான விழா என் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு நண்பனாக நீ என்னருகில் இருந்தால் எனது மனம் கொஞ்சம் அமைதியாயிருக்கும் என்று நினைக்கிறேன். விழா மண்டபத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளை டெம்மியிடம் விட்டு விட்டு என் அருகிலேயே இரு லூயிஸ்", நிறுத்தாமல் ஒரு கட்டளையைப் போலவே இதையும் சொல்லிவிட்டு மீண்டும் லூயிசின் முகத்தைப் பார்த்தான் நெப்போலியன்.

img_3803

"நீங்கள் தயாராகுங்கள் பேரரசே, உங்கள் மனக் குறைகள் விரைவில் நீக்கம் பெறும், மகிழ்ச்சியோடு இந்த பிரெஞ்சு தேசத்தின் விரிந்த எல்லைகளை நீங்கள் ஆளும் நாட்கள் அருகில் இருக்கிறது" என்று சொல்லி விட்டு வெளியேறத் தயாரானான் லூயிஸ், "லூயிஸ் நீ கடைசியாக ஒரு முறை முயற்சி செய்து பார், உன்னால் முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கண்களால் விடை கொடுத்தான் நெப்போலியன். அரண்மனை மேல்தளத்தில் இருந்த குதிரைகளின் நிழல் இப்போது முற்றத்தில் நீண்டு விழுந்து கிடந்தது, சிவப்பு வண்ணச் சீருடைகளை அணிந்த பல்வேறு பணியாளர்கள் அரேபியக் குதிரைகள் பூட்டப்பட்ட ரதங்களைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

நெப்போலியன் தனது படுக்கையில் இருந்து எழுந்து உயரமாய்ப் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தான், அவனுக்கு அருகில் உலகின் விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட ஆடைகள் மூன்று வைக்கப்பட்டிருந்தது, அவற்றின் முனைகளைத் தொட்டுத் தடவிப் பார்த்தான் நெப்போலியன், பிறகு மெல்ல எழுந்து தெற்கு மூலையில் வைக்கப்பட்டிருந்த அந்த அடுக்குப் பெட்டியின் சாவியைத் திருகினான்.

கண்ணெதிரில் குவிக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண ஆடைகளுக்கு நடுவில் கருஞ்சிவப்பு நிறத்தில் கொஞ்சமாய் வெளுத்துப் போயிருந்த அந்த மேலாடை அவன் கண்களில் பட்டது, அந்த மேலாடையை எடுத்துத் தன் மார்பின் மீது அழுத்திக் கொண்டான் நெப்போலியன், அவனது கண்கள் கண்ணீரை உதிர்க்கும் அளவுக்குப் பணித்திருந்தன, அவனது நினைவுகள் ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு பின்னோக்கிப் பயணித்தது.

முன்னொரு நாளில் ராணுவப் பள்ளியில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தான் நெப்போலியன், அவன் அணிந்திருந்த தரம் குறைந்த மலிவான ஆடைகளை ஏளனம் செய்யும் ஒரு பெரும் கூட்டமே ராணுவப் பள்ளியில் அப்போது இருந்தது, அவ்வப்போது கேலியும் கிண்டலும் செய்து நெப்போலியனை வெறுப்பேற்றிக் கொண்டிருந்த நண்பர்கள் குறித்து அவன் லெடீசியா அம்மையாரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

Napoleon-Bonaparte-on-a-Zebra--60838

"அம்மா, என்னுடைய ஆடைகள் பழையனவாகவும், வெளுத்துப் போனவையாகவும் இருக்கிறது, அப்பாவிடம் சொன்னால், பிறகு பார்க்கலாம், பிறகு பார்க்கலாம் என்று நாட்களைக் கடத்துகிறார், நீங்களாவது அப்பாவிடம் சொல்லி எனக்குச் சில புதிய தரமான ஆடைகளை வாங்கித் தரக் கூடாதா?" பாவமாகக் கேட்ட நெப்போலியனின் அந்தச் சொற்கள் எப்போதும் ஒளிரும் லெடீசியா அம்மையாரின் கண்களைக் கலங்கடித்தன.

மீண்டும் ராணுவப் பள்ளிக்குத் திரும்பும் நாளுக்கு முந்தைய நாளில் லெடீசியா அம்மையார் தன்னுடைய அறைக்குள் அழைத்துச் சென்று ஒரு சின்னஞ்சிறு பெட்டியை நெப்போலியன் கையில் கொடுத்தார், ஆர்வம் பொங்க அந்தப் பெட்டியின் கொக்கியை இழுத்துத் திறந்தான் நெப்போலியன், அதற்குள் மூன்று வெவ்வேறு வண்ண உயர் ரக மேலாடைகள் காட்சி கொடுத்தன, அதிலும் குறிப்பாக பட்டுத் துணியால் வேலைப்பாடுகள் மிகுந்திருந்த அந்தக் கருஞ்சிவப்பு மேலாடையை நெப்போலியனுக்கு மிகவும் பிடித்துப் போனது.

அவனது கண்களில் இப்போது மகிழ்ச்சியும், அன்பும் நிறைந்திருந்தது, எதிரில் நின்ற தன் தாயை ஒரு முறை அணைத்து அவரது கன்னங்களில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்தான் நெப்போலியன். நெப்போலியன் இப்படியெல்லாம் எளிதில் முத்தம் கொடுத்து விடுபவன் அல்ல என்பது லெடீசியா அம்மையாருக்குத் தெரியும், அவனிடமிருந்து ஒரு புன்னகையைப் பெற வேண்டுமெனில் மாதக் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டும், மகனின் மகிழ்ச்சியில் அன்றைக்குக் கரைந்து ஒன்றிப் போனார் லெடீசியா அம்மையார்.

நிகழ்காலத்தில் வந்து விழுந்த நெப்போலியனின் கண்களில் அதே கருஞ்சிவப்பு வண்ண மேலாடை நிறம் மங்கிக் கிடந்தது, பல நாடுகளுக்குப் பயணம் செய்தபோதும், வீட்டை விட்டு வெகு தொலைவில் இருந்த போதும் நெப்போலியன் இந்த மேலாடையை எடுத்துச் செல்லத் தவறியதே இல்லை, அம்மாவும், தன் கூடப் பயணிப்பதாக உணரச் செய்யும் ஒரு பொருளாகவே இந்த மேலாடையைக் கருதினான் நெப்போலியன். இசைக் கருவிகளின் முழக்கம் நெப்போலியனின் காதுகளை எட்டியதும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு விழாவுக்குப் புறப்படத் தாயாரானான்.

விழா அரங்கு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது, அரங்கிற்குள் கிறிஸ்துவின் சிலுவை பொருத்தப்பட்டிருந்த அந்த மரச்சிற்பம் முழுதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஆலயத்தின் கூரையை நிரப்பிக் கொண்டிருந்தது ஒளி, பக்கவாட்டில் இருந்த மூன்றடுக்கு மாடங்களில் முதல் இரண்டில் பாதிரிகளும், விருந்தினர்களும் அமர்ந்திருக்க, பின்புறம் இருந்த மாடங்களில் நெப்போலியனின் உறவினர்கள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள், வாழும் கடவுளாக மதிக்கப்படுகிற அன்றைய போப் ஆண்டவர் "பியுஸ் 7 " ஒரு விலை உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்.

அரங்கினும் நுழைந்த நெப்போலியனின் கண்கள் அலைபாய்ந்து தனது தாயாரைத் தேடத் துவங்கின, ஏமாற்றத்துடன் பின்வாங்கிய அவனது கண்களில் வாசலின் படிக்கட்டுகள் வழியாக உள்நுழையும் லூயிஸ் தென்பட்டான், மீண்டும் ஒளி பெருகிய நெப்போலியனின் கால்கள் தன்னையும் அறியாமல் முன்னோக்கி நகரத் துவங்கின, நெருங்கிய லூயிசின் கைகளைப் பிடித்துக் கொண்டு குனிந்து காதருகில் கேட்டான், "லூயிஸ் அம்மாவைப் பார்த்தாயா? அவரது முடிவில் ஏதேனும் மாற்றம் உண்டா?".

NG%202461

தாயைத் தேடி அலையும் ஒரு கன்றுக் குட்டியைப் போல அந்த மாபெரும் அரங்கில் அலை மோதினான் நெப்போலியன், உலகம் அவனது காலடியில் கிடந்தது ஏவல்கள் புரிந்தது, எத்தனையோ சவால்களை எதிர் கொண்டு வெற்றி பெற்ற அந்த மாவீரனின் மனம் லெடீசியா என்கிற ஒரு ஏழைத்தாயிடம் தோற்றுப் போனதை அன்றைய நாளில் அறிந்திருந்த ஒரே பொருள் நெப்போலியன் தனது நீண்ட அங்கிகளுக்குள் மறைத்து அணிந்திருந்த அந்த வெளுத்துப் போன கருஞ்சிவப்பு மேலாடை மட்டும்தான்.

உலகை வென்ற ஒரு மாவீரனின் திருமணத்தையும், முடிசூட்டு விழாவையும் புறக்கணிக்க பாசம் மிகுந்த ஒரு தாய்க்கு ஆயிரம் காரணங்கள் இருந்தன. ஆம், எப்போதும் தாய் தாயாகவே இருக்கிறாள், கிழக்குத் திசையில் உதிக்கும் சூரியன் உங்கள் அறைக்குள் உதித்தாலும் கூட………..

*****************

Advertisements

Responses

  1. Krishna – Tamil Tiger
    சுவாரசியமான பதிவு. நெப்போலியனின் தாய் லிடீசிய அவரின் திருமணத்தையும், முடிசூட்டு விழாவையும் புறக்கணித்தார் என்பது எனக்கு புதிய செய்தி. அதை அறிய ஆவலாக இருக்கிறேன்.

    நெப்போலியனின் அரண்மனையை கண் முன் நிறுத்துவதாக இருந்தது எழுத்து நடை. நன்றிகளும் வாழ்த்துக்களும்! (இந்த வர்ண எழுத்து வாசிப்பதற்கு சற்று கடினமாக இருந்தது, ஒருவேளை எனக்கு மட்டுமாக கூட இருக்கலாம்)

  2. அருமை..
    அம்மா எப்போதுமே அம்மா தான்..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: