கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 7, 2012

சோழர்களின் கோபுரம். (நெடுங்கதை)

299594_2412708358035_1261057093_32864919_1005950923_a

ஆறு மணிக்கு இன்னும் மூன்று நிமிடங்கள் இருப்பதாகச் சொல்லியது மின்னணுக் கடிகாரம், வெகு நாட்களுக்குப் பிறகு அணைக்கட்டுக்கு வருகிறேன் நான், பிறந்து வளர்ந்து விளையாடித் திரிந்த இடங்கள் தான் என்றாலும் தொலைதூர தேசமொன்றில் பிழைக்கப் போய்விட்டுத் திரும்பி வரும்போது ஊரும், மனிதர்களும் கொஞ்சமாய் விலகிப் போய் விடுகிறார்களோ என்று தோன்றியது, தேங்கிக் கிடக்கிற நீரின் குளுமை காற்றில் கலந்து ஆடைகளைத் துளைத்துக் கொஞ்சமாய்க் குளிரூட்டியது.

ஆறு மணிக்கெல்லாம் அமைதி மலைப்பகுதி மக்களின் வீட்டுப் போர்வைகளைப் போல விரிந்து படர்ந்து கொள்கிறது, நான் இப்போது பாலத்தின் மேலாக நடந்து கொண்டிருந்தேன், கைப்பிடிச் சுவரைப் பிடித்துக் கொண்டு கால்களை மதில் சுவரின் தட்டையான சுவரில் வைத்துக் கொண்டு எட்டி எட்டி மீன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் சில குழந்தைகள்.

இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும், தாத்தா என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, காலைப் பொழுதொன்றில் இதே பாலத்தில் என்னைக் கூட்டிக் கொண்டு நடந்து கொண்டிருந்தார், என் இடது காலில் கொஞ்சம் வீக்கமிருந்தது, முள்முருங்கை இலைகளை வைத்து வெள்ளைத் துணியில் சுற்றி என் காலில் ஒரு கட்டுப் போடப்பட்டிருந்தது, நுட வைத்தியரைப் பார்க்க வேண்டுமென்று நானும் தாத்தாவும் நடந்து கொண்டிருந்தோம்.

பருத்த தண்டுகளோடு கூடிய வாதா மரங்கள் கரையெங்கும் அடர்த்தியாய் வளர்ந்து கிளை பரப்பி இருந்தன, இடையிடையே குட்டையாய் இலைகளை உதிர்த்தபடி கிடந்த நெல்லி மரங்களின் மீது கல்லெறிந்து கொண்டிருந்த அணைக்கட்டுச் சிறுவர்களை ஒரு விதமான ஏக்கத்தோடு நான் பார்க்க வேண்டியிருந்தது, நெல்லிக்காயை வாய்க்குள் போட்டு உருட்டிப் பின் அரை வட்ட வடிவில் கடித்து நாவினடியில் ஊறவைத்து நீர் குடித்தால் இனித்துக் கிடக்கும் என்கிற நம்பிக்கை தலைமுறைகளைத் தாண்டி எப்படியோ இன்னும் தப்பி வந்து கொண்டிருந்தது.

கால் மட்டும் நன்றாக இருந்தால் தாத்தாவிடம் கெஞ்சிக் கதறி எப்படியும் டவுசர் பைகளை நிரப்பிக் கொண்டிருந்திருப்பேன். பொதுவாகவே தாத்தா வைத்தியரிடம் எல்லாம் கூட்டிக் கொண்டு போக மாட்டார், அவரே ஒரு நாட்டு வைத்தியராகவும், மந்திரிப்பவராகவும் இருந்தபடியால் வைத்தியம் எல்லாம் வீட்டிலேயே அரங்கேறி விடும், ஆனால் இம்முறை தாத்தாவின் எல்லைகளை எனது விளையாட்டு கடந்து விட்டிருந்தது, அநேகமாகக் கால் முறிந்து போயிருக்க வேண்டும், அல்லது மூட்டுப் பிசகி இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் தாத்தா.

கபடி விளையாடப் போய் காலை முறித்துக் கொண்டதே மிச்சம் என்று தாத்தாவின் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் காலைக் கெந்திக் கெந்தி நான் அணைக்கட்டுப் பாலத்தின் மீது சரட்டிக் கொண்டிருந்தேன். தாத்தாவோடு இருக்கும் காலங்களில் கதைகளுக்குப் பஞ்சமே இருக்காது, இப்போதும் தாத்தா ஒரு கதை சொல்லியபடியே வந்தார், அணைக்கட்டுக் கரைகளில் வளர்ந்து கிடக்கும் மரங்களின் கதையில் இருந்து, சோழர்களின் கோபுரங்கள் வரைக்கும் ஒவ்வொன்றின் வரலாறும் தாத்தாவின் நெஞ்சக் கூட்டுக்குள் அடைந்து கிடப்பதாய்த் தோன்றிய காலங்கள் கரைந்து விட்டிருந்தன.

சிங்கக் கிணற்றுக் கதைகள், ஆற்றின் நடுவிலிருக்கும் தீவு மண்டபத்தின் கதைகள் என்று காணும் காட்சிகள் யாவும் பாத்திரங்களாய் உலவித் திரியும். இரவு நேரங்களில் எப்போதாவது தாத்தாவின் கதைகளுக்குள் சிக்குண்டு விட்டால் அன்று இரவு முழுதும் நடுங்கியபடி போர்வையைத் தலை முழுக்கச் சுற்றிக் கொண்டு படுத்துறங்க வேண்டியிருக்கும்.

தாத்தா கதையின் கதாபாத்திரங்கள் நிரம்பிக் கிடக்கும் அன்றைய இரவுகள் தொலைந்து வெகு நாட்கள் ஆகி இருந்தன. அணைக்கட்டும், மரங்களும் அப்படியே இருக்கத் தாத்தா ஒரு நாள் இரவில் காணாது போனார், அவரது கல்லறைகளில் புதையுண்டு போன கதைகளை யாராலும் தோண்டி எடுக்க முடியாமல் போனது எத்தனை பெரிய இழப்பென்று இப்போது தோன்றியது.

308524_2412744438937_1261057093_32864966_352316879_n

திரும்பி ஒருமுறை பாதையைப் பார்த்தேன், இருட்டு அணையை நிரப்பிக் கொண்டு மேலெழுந்து பாதையில் கிடந்தது, கப்பிச் சாலையில் நடந்து மறுகரைக்குச் சென்றால் கடைசிப் பேருந்தைப் பிடிக்கலாம், எனக்கு முன்னாள் வெகு தொலைவில் ஒரு குடும்பம் நடந்து போய்க் கொண்டிருந்தது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது, சம்சாரி ஒருவனின் கழுத்தில் அமர்ந்தபடி கைகளை ஆட்டுவதும், திரும்பிப் பார்ப்பதுமாய் ஒரு குழந்தை, இரண்டு பெண்கள், ஒரு இளைஞன் என்று நகர்ந்தபடி அவர்கள் அடித்த அரட்டை ஒலி ஆற்றுக்குள் விழுந்து எதிரொலித்தது.

சுற்றுப் புறங்களில் அவர்களின் உரையாடல் ஒலியைத் தவிரவும் வேறு எதுவும் ஓசை இல்லை , மூச்சு விடும் ஒலி எனக்கே கேட்கும் அளவுக்கான மயான அமைதி சில நேரங்களில் அச்சமூட்டியது. அடையப் போகிற சில பறவைகள் அவ்வப்போது தலைக்கு மேலே பறந்து திகிலூட்டிக் கொண்டிருந்தன, அணைக்கட்டு நீர் மதில்களில் மோதும் எப்போதாவது தெளிவாகக் கேட்ட போது தொட முடியாத உயரத்தில் கிடந்தது கருநீல வானம்.

கப்பிச் சாலையின் பாதி தூரத்தை நான் கடந்த போதே இருட்டு வண்ணமடித்தது போல ஒட்டிக் கொண்டு வழியை அடைத்துக் கொண்டது, எனக்கு முன்னாள் போய்க் கொண்டிருந்த குடும்பத்தின் ஓசையும் இப்போது தொலைந்து போக நான் தனியனாய் நடந்து கொண்டிருந்தேன், பழுத்த இலைகள் சில மரங்களில் இருந்து ஆடி அசைந்து ஆற்று நீருக்குள் வீழ்ந்து கொண்டிருந்தன, ஆற்றின் போக்கில் பயணித்து ஆற்றங்கரைகளில் குளித்துக் கொண்டிருக்கும் யாரேனும் ஒரு மனிதனின் இடையைச் சுற்றியோ, புதர்களில் சிக்கிச் சிதைந்தோ பின் மறைந்து போகும் அந்தப் பழுப்பு இலைகளைப் போல வாழ்க்கை இங்குமங்குமாய் அலைந்து கொண்டிருந்தது.

வடக்கில் திரும்பி ஒருமுறை சோழர்களின் கோபுரத்தைப் பார்க்க முனைந்தேன், கீழ்வானத்தில் கொஞ்சமாய் வெளுப்பும், சில பனை மரங்களும் தவிர வேறொன்றுமில்லை, மங்கிய அரைவட்ட நிலவு எதிர்த்திசையில் கிடந்தது, கோபுரம் நான் பார்த்த கோணத்திலிருந்து திசை மாறி எங்கேனும் இருக்கக் கூடும், கோபுரத்தைத் தேடும் அவகாசம் இல்லை இப்போது என்பதை மீண்டும் ஒருமுறை மின்னணுக் கடிகாரத்தின் கருப்பு எண்கள் எனக்கு உணர்த்தின. நான் ஏறக் குறைய ஓடத் துவங்கினேன்.

இருட்டு மனிதர்களை ஏனோ காலகாலமாய் பயமுறுத்திக் கொண்டே பின்தொடர்ந்து வருகிறது, பகல் கொண்டாடும் பொழுதுகளையும், ஒளி ஆடிக் களிக்கும் இடங்களையும் ஏனோ இருள் புதைத்து விடுகிறது, தாத்தாவும் நானும் காலைப் பொழுதுகளில் நடந்து சென்ற காட்சிகளை இங்கிருக்கும் மரங்களில் ஏதோவொன்று பார்த்திருந்திருக்கக் கூடும், இரவுகளில் மினுமினுக்கும் வானுயரக் கட்டிடங்களின் சரவிளக்குகள் கடலுக்குள் தெரியும் ஒரு ஓய்வு கொள்ளாத நகரத்தில் இருந்து வரும் பழைய ஊர்க்காரனுக்கும் இருள் அச்சம் தருவதாய்த் தான் இருந்தது.

கப்பிச் சாலை முடிந்து கடை வீதி முனைக்கு ஒரு வழியாய் வந்தாகி விட்டது, முன்னே வந்த குடும்பம் பேருந்து நிறுத்தக் கட்டைச் சுவர்களை அடைத்துக் கொண்டு அமர்ந்திருந்தது, ஆண்கள் எல்லோரும் மொட்டையடித்திருந்தார்கள், எங்கேனும் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வந்திருக்கக் கூடும், திறந்திருந்த கடைசிக் கடையை ஒரு சிறுமி அடைத்துக் கொண்டிருந்தாள், தார்ச் சாலையின் தொலைவில் விழுதாய் ஒளி பரப்பியபடி, மரங்களின் அடைசளுக்குள் இருந்து கேட்டது பேருந்தின் ஒலி.

உடைந்த பலகைகளால் செய்யப்பட்ட ஒரு ரேக்ளா வண்டியில் பயணிப்பதைப் போலிருந்தது பயணம், ஓட்டுனர், நடத்துனர் தவிர என்னையும் சேர்த்து மொத்தம் எட்டுப் பேர் இருந்தோம், இருக்கையில் அமர்ந்து ஓரத்தில் சாய்ந்து கொண்டு வெளியில் பார்த்தால் அரைவட்ட நிலவொளியில் தெரிகிறது சோழர்களின் கோபுரம், மரங்களிடையே மறைந்தும், பின்பு பிரம்மாண்டமாய் உயர்ந்தும் மின்னுகிற கோபுரக் கலசங்கள் ஒரு காந்தத்தின் முனைகளைப் போல நாங்கள் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்தைத் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டிருந்தது.

அடர்ந்த காட்டின் நடுவே கட்டப்பட்ட இந்தச் சோழர்களின் கோபுரம் வானுலகில் இருந்து வந்த எட்டுத்தலை நரசிம்மனால் கட்டப்பட்டதென்ற தாத்தாவின் கதையொன்று வாலறுந்த பட்டம் போல உலவிக் கொண்டிருந்தது காதருகில். தலையைத் திருப்பிக் கொண்டாலும் சோழர்களின் கோபுரம் மனசுக்கு மிக நெருக்கமாய் நின்று பயமூட்டியது அந்த இரவில்.

எட்டுப் பேரையும் மூதூரில் இறக்கி விட்டுப் பேருந்து புறப்பட்டபோது ஒன்பது மணியாகி இருந்தது, எட்டரை மணிக்கு ஊருக்குப் போகும் மினிபஸ் இப்போதுதான் புறப்பட்டுப் போனதாக இளநீர்க் கடைக்காரர் சொன்னபோது பகீரென்றது எனக்கு, நல்ல வேளையாக ஊர்க்காரர்கள் இருவர் கூட இருந்தார்கள், மழை பெய்து தண்ணீர் பெருக்கெடுத்து இருப்பதால் ஆட்டோவில் போவது சாத்தியமில்லை என்றும், அதிகாலையில் வரும் பால் வண்டியில் தான் ஊருக்குப் போக முடியுமென்றும் அவர்கள் முடிவு செய்து விட அவர்களைப் பின்தொடர்வதைத் தவிர எனக்கு வேறு வழியே இல்லாமல் போனது.

316216_2412755199206_1261057093_32864994_1501705278_n

நாங்கள் சோழர்களின் கோபுரத்துக்கு வெகு அருகில் நடந்து கொண்டிருந்தோம், நந்தியடிவாரத்தில் படுத்துறங்கி விடிகாலையில் போவதாக எங்கள் பயணம் மாற்றம் பெற்றிருந்தது. முட்டைக் கறியும், இட்டலியும் சாப்பிட்டு நாங்கள் தண்ணீர் குடித்த போது கடையின் உள்விளக்கை அணைத்துக் கொண்டிருந்தார் தாடி வைத்த மூதூர்க் கடைக்காரர்.

கோவிலின் நடுவில் திறந்த வெளியில் எரிந்து கொண்டிருந்த நியான் விளக்கின் கீழே இந்திய அரசின் தொல்லாய்வுப் பலகைக் குறிப்புகள் தென்பட்டது. கிடைத்த இடங்களில் எல்லாம் இருள் வவ்வால்களோடு அடைந்து கிடந்தது, நந்தியடிவாரத்தில் ஏற்கனவே நான்கைந்து பேர் படுத்திருந்தார்கள், ஊர்க்காரர்கள் விரித்த துண்டின் முனையில் ஒட்டியபடி நானும் படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தால் நிறைய நட்சத்திரங்களும், அரைவட்ட நிலவும் எட்டுத் தலை நரசிம்மன் வருகிற பாதைக்கு விளக்குகளைப் போல மின்னிக் கொண்டிருந்தது, செங்குத்தாக உயர்ந்து வளர்ந்து கிடக்கும் சோழர்களின் கோபுரம் நிலவொளியில் விண்ணடைத்துக் கிடக்க நான் அந்த இரவில் உறங்கிப் போனேன்.

திடுக்கென்று விழிப்பு வந்த போது யாரோ அழுகிற குரல் என்னருகில் தெளிவாகக் கேட்டது, எழுந்து அமர்ந்து கொண்டு சுற்றிலும் படுத்துக் கிடப்பவர்களை ஒரு முறை உற்றுப் பார்த்தேன் நான், யாரிடத்திலும் அசைவில்லை, ஊர்க்காரர்களை ஒட்டிப் படுத்துக் கொண்டு கண்களை மூடினால் அழுகுரலின் ஓசை இப்போது மிக அருகில் வந்திருந்தது, அது ஒரு பெண்ணின் அழுகுரல், மெலிதான பெருமூச்செறியும் குரலில் அந்தப் பெண்குரலின் அழுகை எதையோ சொல்லிக் கொண்டிருந்தது, குரலின் திசையறிய நான் இப்போது என்னையுமறியாமல் நடக்கத் துவங்கி இருந்தேன்.

குரல் வரும் திசையில் என் கால்கள் பயணிக்கத் துவங்கின. நான் இப்போது அச்சம் இல்லாதவனாய் இருந்தேன், நீளவாக்கில் கிடந்த கற்படிக்கட்டுகளில் இறங்கிய போது அழுகுரல் நின்று போனது, படிக்கட்டு முடியும் இடத்திலிருந்து வெட்டுப்பட்ட சூரியத் துண்டின் விழுதுகளைப் போல வெளிச்சம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது, கண்கள் கூசத் திரும்பிப் பின் நிலைக் குத்திப் பார்த்தபோது அது ஒரு பகல் பொழுதாய் மின்னியது. மேல் மண்டபத்தின் இருமருங்கிலும் அணிவகுத்து நின்ற யானைகள் தும்பிக்கையை அசைத்தபடி காதுகளை விசிறிக் கொண்டிருந்தன.

அழகிய பட்டுத் துணியால் அலங்கரிக்கப்பட்ட யானைகள் விழாக்கால நகரமொன்றை எனக்கு நினைவுபடுத்தின, பட்டாடை தரித்த ஆண்களும், பெண்களும் பூசைக் கூடைகளோடும், மலர்களோடும் இங்குமங்குமாய் நடந்து கொண்டிருந்தார்கள், நான் அங்கே ஒரு பார்வையாளனாய் நின்று கொண்டிருந்தேன், வாயிற் தோரணங்கள் வழி அடைத்துக் கிடக்க நாதஸ்வர இசையில் மூழ்கித் திளைத்தது சோழர்களின் நகரம், வேத முழக்கங்களும், மேளதாளங்களும் என் தனிமையைத் துடைத்து எறிந்திருந்தன.

தாத்தாவின் கதைகளில் கேட்ட பாத்திரங்களில் பலவற்றை நான் கண்ணெதிரே கண்டு வியப்போடு நின்று கொண்டிருந்தேன், மனதை மயக்கும் இசையில் என்னை மறந்து கிடக்க திடீரென்று கேட்டது குதிரைக் குளம்புகளின் ஓசை, இருபது முப்பது குதிரைகளின் ஒத்திசைவான ஒலி அருகில் நெருங்க நான் கண்ட காட்சி நம்ப முடியாததாய் இருந்தது, மந்திரி பிரதானிகளின் ரதமொன்று கடக்க, பின்தொடர்ந்து வந்தது சாட்சாத் மூன்றாம் கதிருடைச் சோழனேதான்.

குதிரைகள் வேகம் குறைக்க ஐந்து குதிரைகள் பூட்டிய ரத்தத்தில் இருந்து குதித்தான் மன்னன், அகண்ட மார்பில் சந்தானம் அப்பிக் கிடக்க, நீண்டு தளர்வாய்க் கிடந்த கூந்தலின் முனைகளைக் கட்டிக் கொண்டையாய் முடிந்திருந்தான் மூன்றாம் கதிருடைச் சோழன், ஏழடி உயரத்தில், ஒரு சிங்கத்தின் மிடுக்கோடு கீழ் மண்டபத்தின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்த மன்னனின் பின்னால் அணிவகுத்த படை வீரர்கள் வாயிலில் நின்று கொள்ள மந்திரி பிரதானிகளும், பாதுகாவலர்களும் மட்டும் மன்னனைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.

P9190010

மன்னர் கருவறை மண்டபத்தின் அருகில் சென்று வழிபட்டு நின்றபோது எதிரில் வந்து நின்றார்கள் எட்டுப் பூசாரிகளும், மன்னரின் வழிபாடு முடிந்தபோது பூசாரிகள் மன்னரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்கள், பொற்காசுகளை அள்ளி இறைத்த கணன பூபதியை நோக்கி இப்போது திரும்பினார் மன்னர்.

"பூபதியாரே, நிலங்களைக் கையகப் படுத்தும் வேலைகள் முடிந்தனவா? சிறைப் பிடிக்கப்பட்டவர்கள் எங்கே?"  என்று கேட்ட மன்னனின் அருகில் வந்து நின்ற பூபதி "அரசே, அவர்கள் தங்கள் உயிரே போனாலும் நிலத்தைக் கொடுக்கவியலாது என்று பிடிவாதமாய் இருக்கிறார்கள், சிங்கக் கிணற்றின் பக்கவாட்டுச் சிறையில் கிடக்கும் அவர்களை நீங்கள் சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்". மூன்றாம் கதிருடைச் சோழனின் கால்கள் இப்போது சிங்கக் கிணற்றுப்பக்கமாய் நகரத் துவங்கின,

பூசாரிகளும், ஏனைய மந்திரிகளும் மன்னனைப் பின்தொடர்ந்து நடந்தார்கள், சிங்கக் கிணற்றின் பக்கவாட்டுக் கதவுகள் வீரர்களால் திறக்கப்பட கணன பூபதி முன்னே நடக்கத் துவங்கினார். சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த அந்த நால்வரும் இப்போது வெளிச்சம் கண்டார்கள், பக்கவாட்டில் வழிந்த சூரிய ஒளியில் அவர்கள் மன்னனைக் கண்டார்கள்.

நிலங்களைப் பூசாரிகளுக்குக் கொடுக்க மறுத்த விவசாயப் பெருங்குடி மக்கள் அவர்கள், அவர்கள் தங்கள் மண்ணைத் தவிர எங்கும் மண்டியிடாதவர்களாயிருந்தார்கள். மன்னாதி மன்னர் வாழ்க வாழ்கவென்று முழக்கமிடாத நான்கு புதிய மனிதர்களை மூன்றாம் கதிருடைச் சோழன் முதன் முறையாக இப்போது கண்டான், "பூபதி, இவர்களின் கை விலங்குகளை அவிழ்த்து விடச் சொல்லுங்கள்", என்று மன்னன் சொல்லி முடித்த போது அவர்களின் கைவிலங்குகள் தளர்த்தப்பட்டிருந்தன.

"உங்கள் நிலங்களை நீங்கள் பூசாரிகளிடம் ஒப்படைக்கத் தான் வேண்டும், இனி அவர்கள் தரும் படிநெல்லையும், வைக்கோலையும் கொண்டு வாழ்க்கை நடத்துங்கள், கோவிலைச் சுற்றி இருக்கும் இருபது காத நிலங்கள் இனி பூசாரிகளுக்கே சொந்தம், இது மூன்றாம் கதிருடைச் சோழனின் கட்டளை" சிங்கக் கிணற்றின் படிக்கட்டுகளில் பட்டு எதிரொலித்தது மன்னனின் குரல்.

நிமிர்ந்தபடி முன்னாள் நின்ற அழகனாதனின் நரம்புகள் புடைக்கத் துவங்கின, கண்ணிமைக்கும் நேரத்தில் கணன பூபதியை நெருங்கினான் அழகனாதன், யாவரும் என்ன நடக்கிறது என்று நிதானித்து அறிவதற்குள் கணன பூபதியின் உடை வாளைப் பற்றி இழுத்தான் அழகனாதன், அது இப்போது அழகனாதனின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது.  சுற்றி நின்ற வீரர்களும், மன்னரும் திகைத்துக் கிடக்க ஆவேசம் கொண்டவனாய் ஓலமிட்டான் அழகனாதன்.

காலகாலமாய்த் தன் மண்ணோடு புரண்டு விளையாடிப் பயிர் செய்து பண்பட்ட மனிதனுக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்த பூசாரியிடம் படிநெல் தின்று பிழைத்துக் கிடப்பதை விடவும் மரணம் மேலானதாகத் தோன்றி இருக்க வேண்டும், இப்போது தலைமுடியை இறுகப் பற்றிக் கொண்ட அழகனாதன் தனது கழுத்தில் வாளிருத்திக் கரகரவென அறுக்கத் துவங்கினான், குருதி ஒரு பக்கமாய்க் கொப்புளிக்க தலை தொங்கி இடப்பக்கம் சாயத் துவங்கியபோது, மன்னரும், மந்திரிகளும் சிதறி ஓடினார்கள், ஒழுகிக் கொண்டிருந்த குருதிப் பெருக்கில் இருந்து பிரிந்து தனியே தலை வீழ அழகனாதனின் உடல் ஓடத் துவங்கியது.

அழகனாதனின் காலடித்தடங்கள் வரை ஒழுகிக் கிடந்த உழைப்பின் குருதி சொட்டுச் சொட்டாய் வரலாற்றில் வீழ அழுதபடி நந்தியடிவாரத்தில் நின்று கொண்டிருந்த தன் மனைவியின் பக்கமாய் விழுந்து அடங்கிப் போனான் அழகனாதன்.

Untitled

தம்பி, பால் வண்டி வந்துட்டு, எந்திரிங்க, எந்திரிங்க என்று ஊர்க்காரர்கள் தட்டி எழுப்பியபோது நான் விழித்தபடி சோழர்களின் கோபுரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன், எனது கண்கள் மூன்றாம் கதிருடைச் சோழனின் உருவத்தில் அல்லாது அழகனாதனின் தலையற்ற உடலில் நிலைத்துக் கிடந்தன,  நந்தியடிவாரத்தில் மனித வரலாறுகளை மறுதலித்து அரச வரலாறுகளைப் பறை சாற்றியபடி விண்ணை முட்டிக் கிடந்தது சோழர்களின் கோபுரம். அந்த அழுகுரல் அழகனாதனின் இளம் மனைவியுடையதென்று எப்போதோ தாத்தா சொன்ன இரவுக் கதை மட்டும் நந்தியடிவாரத்தில் சுற்றி அலைந்து கொண்டே இருக்கிறது….

****************

Advertisements

Responses

  1. சோழ மன்னர்களின் ஆன்மீகத்திற்காக
    அடிமையாக்கப்பட்டது எம்மினம்….

  2. சுவாரசியமான ஒன்று….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: