கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 10, 2012

ஜெனீவா தரப் போவது என்ன?

101201_srilankansoldier

தனது மொழிக்கும், தனது உரிமைகளுக்குமான ஒரு ஆதிக் குடியின் போர் வல்லாதிக்க சிங்கள அரசியலால் கடும் நெருக்கடிக்கு ஆளாகி ஏறத்தாழ ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மனித உயிர்களைக் காவு வாங்கி மூன்று ஆண்டுகள் முடியப் போகிறது, போர் முடிந்து விட்டதா? அல்லது இந்தப் போராட்டம் இனி உயிர் பெற்று எழுமா? என்கிற பலரது கேள்விக்குள் ஈழமும், அதற்கான போராட்டமும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை ஜெனீவா மாநாடு பன்னாட்டு சமூகத்திற்கு உரக்கச் சொல்லி இருக்கிறது. ஆனாலும், உண்மையிலேயே இந்த மாநாடும், பன்னாட்டு சமூகங்களும் தமிழ் மக்களுக்கு வழங்கப் போகும் நீதி தான் என்ன? என்பது குறித்து நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. அமெரிக்காவுக்கு உண்மையில் ஆதிக் குடியான தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் உரிமைகள் குறித்த அக்கறை இருக்கிறதா? அல்லது அது கொண்டு வந்திருக்கிற ஐ.நா தீர்மானத்தின் நோக்கம் தான் என்ன?

சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இப்படிச் சொன்னார், "இந்திய மக்களும், சீன மக்களும் அதிகப்படியாக மகிழுந்துகளை (கார்) வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதே உலகின் எரிபொருள் பற்றாக் குறைக்கான காரணம்". மேலோட்டமாகப் பார்த்தால் ஓரளவு உண்மையானதாகத் தோன்றும் இதில் அடங்கி இருக்கிற முதலாளித்துவ வன்மத்தை வெகு நுட்பமாக நாம் கண்டு கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. கால காலமாக மகிழுந்துகளைத் தங்கள் வாழ்வுரிமை என்பது போலப் பயன்படுத்தி வருகிற அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் பிற நாட்டு மக்கள் இவற்றைப் பயன்படுத்துவதையே ஒரு குற்றமாகவும், தங்கள் உரிமைகளை மீறிய செயலாகவும் கருதுகின்றன என்பது தான் இதில் அடங்கி இருக்கிற நுட்பமான அரசியல்.

உலகின் பல நாடுகளில் இருக்கும் இயற்கை வளங்களை, ஆதிக் குடிகளின் உரிமைகளை, உணவுப் பொருட்களை இப்படித்தான் தன்னுடைய முதலாளித்துவத் தேவைகளுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன, ஈராக்கில் இருக்கும் எண்ணெய் வளமாகட்டும், தெற்கு ஆசியாவில் இருக்கும் கோழி மட்டும் ஆட்டிறைச்சிக்கான சந்தை ஆகட்டும், ஈரான் மக்களின் சுயமரியாதை நிரம்பிய ஆட்சியாகட்டும், அமெரிக்கா எல்லா இடங்களிலும் தன்னுடைய தேவைக்கான எல்லாவற்றையும் மற்றவர்களிடம் இருந்து பிடுங்கிக் கொள்கிறது அல்லது அதிகப் பட்சமாகப் போரிடுகிறது. போரிடும் எல்லா இடங்களிலும் அங்கிருக்கும் ஆதிக் குடிகளுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்து அவர்களின் உரிமைகளைச் சிதைப்பதும், அவர்களை முகாம்களில் அடைத்துக் கஞ்சி ஊற்றுவதும் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ வல்லாதிக்க நாடுகளுக்குக் கை வந்த கலை. மனித உரிமைகள் குறித்தும், ஆதிக் குடிகளின் உரிமைகள் குறித்தும் குரல் எழுப்புவதற்கு அமெரிக்கா போன்ற நாடொன்றுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டே நாம் இந்த ஜெனீவா மாநாட்டின் கூறுகளை ஆய்வு செய்ய முடியும்.

r838461_7798175

இந்தத் தீர்மானத்தின் மூலமாக தமிழர்களுக்குக் கிடைப்பது என்ன என்பதை விடவும், அமெரிக்கர்களுக்குக் கிடைக்கப் போவது என்ன என்பது தான் மிக முக்கியமான கேள்வி. ஆசிய மண்டலத்தைப் பொறுத்தவரை, சீனா ஒரு தவிர்க்க இயலாத உலகப் பெரும் ஆற்றலாக மாறி வருவதை நீண்ட காலமாகவே வெகு உன்னிப்பாகக் கவனிக்கும் அமெரிக்காவுக்கு அது ஒரு உறுத்தலாக மட்டுமன்றி, இந்த உலகின் சட்டாம்பிள்ளை என்கிற உயரிய அதிகாரம் கை நழுவிப் போய் விடுமோ என்கிற அச்சமும் இருக்கிறது, மாற்றாக ஆசியாவில் அது கட்டமைக்க விரும்பிய குழப்பங்கள் பலவற்றில் இலங்கையைப் போலவே இந்திய – பாகிஸ்தான் மோதலும் ஒரு நீண்ட காலத் திட்டமாக இருந்து வந்தது.

ஆனால், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற பன்முகத் தன்மை கொண்ட வெவ்வேறு சமூகங்கள் இணக்கமாக இருப்பதும், ஒருங்கிணைந்த ஆற்றலாக உருவெடுப்பதும் அமெரிக்க முதலாளித்துவ நலன்களுக்கும், அதன் ஆட்சியாளர்களுக்கும் கேடாக இருக்கும் என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிற அமெரிக்கா தன்னுடைய மறைமுகத் திட்டங்களில் இந்த மூன்று ஆற்றல்களும் இணைந்து நேர்கோட்டில் செயல்படுவதைத் தடுக்கும் திட்டத்தை முதலிடத்தில் வைத்திருந்தது. காங்கிரஸ் அரசின் எரிபொருள் துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் ஐயர் எரிபொருள் துறையில் தெற்காசிய நாடுகள் தன்னிறைவை எட்டுவதற்கான ஒரு தொலை நோக்குத் திட்டமாக எரிபொருள் குழாய் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த முனைப்புடன் இருந்தபோது அமெரிக்கா தன்னுடைய கைக்கூலிகளும், முன்னாள் முதலாளித்துவப் பன்னாட்டுத் தரகர்களான மன்மோகன் சிங்கின் மூலமும், ப.சிதம்பரம் மூலமாகவும் அந்தத் திட்டத்தைத் தகர்த்து மணிசங்கர் ஐயரை பதவியில் இருந்தே துரத்தியது இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டாக இருக்கும்.

தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருக்கும் இந்திய, சீனச் சந்தைகள், உள்நாட்டில் பொருளாதார வீழ்ச்சி, போலி அரசியல் கட்டமைப்புகளின் சரிவு, உழைக்கும் மக்களின் வல்லாதிக்கங்களுக்கு எதிரான புரட்சி இவற்றின் தீவிரத் தன்மைகளைக் கண்டு உள்ளூர நடுங்கும் அமெரிக்காவுக்கு தெற்காசியாவில் ஒரு வலிமையான காலூன்றலும், தலையீடும் நீண்ட காலத் தேவையாக இருக்கிறது. அதற்கு வாய்ப்பான ஒரு களமாகவே இலங்கையை இப்போது அமெரிக்கா தேர்வு செய்திருக்கிறது. இந்தத் தீர்மானத்தை வெற்றி அடையச் செய்வதன் மூலமாகவோ அல்லது அது தொடர்பான பன்னாட்டு அழுத்தங்களை முன்னெடுப்பதன் மூலமாகவோ திரிகோண மலையில் ஒரு நிலையான கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்காவின் உண்மையான நோக்கம்.

அப்படி அமைப்பதின் மூலம் எதிர்காலத்தில் வலிமையான தன்னுடைய ராணுவ பேரங்களை அது இந்தியா, இலங்கை மற்றும் சீன அரசுகளுடன் நடத்துவதற்கு ஜெனீவா மாநாடு அமெரிக்காவுக்கு வழி அமைத்துக் கொடுக்கிறது என்பதைத் தவிர வேறு இதயப்பூர்வமான தமிழ் மக்களின் மீதான அக்கறை எல்லாம் அமெரிக்காவுக்குத் துளி அளவும் இல்லை என்பது தான் நடப்பு உண்மை. இந்த உண்மையை மனதில் வைத்துக் கொண்டே தமிழ்ச் சமூகம் தன்னுடைய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் அழுத்தம்.

rajapaksa_llrc_report

சரி, அப்படியென்றால் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் அவையில் கையளித்திருக்கிற இந்த தீர்மானத்தினால் தமிழர்களுக்கு ஒன்றுமே கிடைக்கப் போவதில்லையா? என்கிற கேள்வி ஒன்றும் எழுகிறது. உறுதியாக இந்தத் தீர்மானத்தினால் பன்னாட்டு அரசியலில் தமிழ் மக்களுக்கு சில நன்மைகள் கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது, அவை முறையே:

1)  தமிழ் மக்களின் நீண்ட கால உரிமைப் போராட்டம் உலக அளவில் கவன ஈர்ப்புப் பெறுவது.

2) முறையான அழுத்தங்களால், தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகளால் இந்தத் தீர்மானத்தின் அடிப்படைக் கூறுகளை அமெரிக்கா தவிர்த்த பல்வேறு நாடுகளிடம் கொண்டு செல்வதற்கான ஒரு வாய்ப்பு.

3) இந்தியாவின் செயல்திட்டங்களில், அதன் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கைகளில் நெருக்கடியான சில மாற்றங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பு.

4) தங்கள் போராட்டத்தின் நோக்கங்களுக்கு இன்றியமையாத தொடர்ச்சியான ஊடக வெளிச்சம்.

இந்த முக்கியமான சில நன்மைகளைத் தவிர்த்து சில உபரி நன்மைகளும் தமிழ்ச் சமூகத்திற்குத் தற்காலிகமாகக் கிடைக்கக் கூடும், அவை, அரசியல் ரீதியாக பிளவுற்றுக் கிடக்கும் தமிழ் சமூகத்தின் ஒருங்கிணைவு, உள்நாட்டில் கிடைக்கப் பெரும் நெகிழ்ச்சியான சில பொருளாதார, அரசியல் நன்மைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.

தெரிந்தோ தெரியாமலோ அமெரிக்கா கையில் எடுத்திருக்கிற அதன் போலி நீதிக்கான குரலை உலக அரங்கில் உரக்க ஒலிக்கச் செய்து, பிறகு அந்தக் குரலை அமெரிக்காவின் குழலில் இருந்து மீட்டு தனிக் குரலாக ஒலிக்கச் செய்வதில் தான் தமிழ் அரசியல் ஆற்றல்களின் திறன் அடங்கி இருக்கிறது, வாக்கெடுப்பில் வெற்றியோ அல்லது தோல்வியோ நமது அரசியல் போராட்டத்தின் வலிமையை அதிகரிக்கச் செய்யப் போவதில்லை, மாறாக அதன் உள்ளரங்குகளில் இருந்து இந்த நீண்டகால ஆதிக்குடிகளின் உரிமைப் போராட்டத்தின் உண்மையை நாம் எப்படிப் பாதுகாக்கப் போகிறோம் என்பதில் தான் நமது உண்மையான வெற்றியும் தோல்வியும் அடங்கி இருக்கிறது.

HRC-Bridiers-2010-C

அமெரிக்கா நமக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் என்று நாம் நம்பிக் கிடப்பது ஏறத்தாழ கருணாநிதியும், ஜெயலலிதாவும் நமக்கான உரிமைகளை வென்று எடுப்பார்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக் கிடப்பதைப் போலவே மிகுந்த நகைச்சுவை அம்சங்கள் கொண்டது, ஏனெனில் அமெரிக்கா தான் போர்க் குற்றங்களை இந்த உலகிற்குக் கற்றுக் கொடுத்த முதல் நாடு, தனது ஒட்டு மொத்த முதலாளித்துவ நலன்களுக்காக அது கொன்றொழித்த குழந்தைகளும், பெண்களும் இலங்கை செய்ததைப் போலப் பன்மடங்கு என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக் கூடாது.

புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல் அணுகுமுறைகளும், உள்நாட்டில் கடும் அழுத்தங்களுக்கு இடையே வாழும் எளிய உழைக்கும் தமிழ் மக்களும் (அரசியல் அமைப்புகள் மற்றும் தேர்வு செய்யப்பட தமிழ் மக்களின் பிரதிநிதிகள்) இணைந்து தங்கள் செயல் திட்டங்களை நடைமுறைக்குத் தகுந்தவாறு மாற்றி அமைத்துக் கொண்டு, பன்னாட்டு அரங்கில் தொடர்ச்சியாக அழுத்தங்களை விளைவிப்பதும், இந்திய அரசின் செயல் திட்டங்களில் இருந்து விலகி இருப்பதும் மட்டுமே தமிழ் ஈழம் என்கிற தமிழர்களுக்கான தேசியக் கனவை உயிர்ப்போடு வைத்திருக்கும், காலம் கடந்தாயினும் கொன்றழிக்கப்பட்ட எமது குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிருக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் என்பதே ஜெனீவாவின் மூலமாக நமக்குக் கிடைக்கும் இப்போதைய நன்மை.

**********

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: