கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 29, 2012

உறங்கும் தெருவில், இரவு ஆந்தைகள்.

giclee-owl-tree-limb

இலக்கியம் குறித்து வேடிக்கையாக இப்படிச் சொன்னார் லியோ டால்ஸ்டாய், "இலக்கியம் என்பது ஒன்று நகரத்திலிருந்து கிளம்பும் ஒருவனின் பயணமாக இருக்க வேண்டும், அல்லது நகரத்தை நோக்கி வரும் ஒருவனின் பயணமாக இருக்க வேண்டும்".

இலக்கியவாதி என்பவன் யார்? அவன் என்ன செய்கிறான்? அவன் என்ன செய்ய வேண்டும்? என்கிற கேள்விகள் நீண்ட நெடுங்காலமாக இந்த மானுட சமூகத்தில் ஆவிகளைப் பற்றிய கதைகளைப் போல உலவி வருகிறது, ஒவ்வொரு எழுத்தாளரும் அவரவருக்கான மனநிலையில், உலகில் நின்று பல நேரங்களில் இதற்குப் பதில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள், டால்ஸ்டாயில் இருந்து சாரு வரைக்கும் இலக்கியம் என்ன செய்கிறது?, என்ன செய்ய வேண்டும்? என்று கருத்துரைக்கிறார்கள்.

"வாருங்கள், மூன்று தொகுதிகளைக் கொண்ட ஒரு நாவலை உங்களில் யார் வேண்டுமானாலும் எழுதலாம், வாழ்க்கையையும், உங்களுக்கான இலக்கியத்தையும் முற்றிலுமாக நீங்கள் இழக்கத் தயாரானால்" என்று வலியோடு சொன்னார் "ஆஸ்கார் வைல்ட்".  இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்தே தங்கள் பணியைச் செய்கிறார்கள், ஆனாலும், அவர்கள் நிறைவான சமூக மனசாட்சியாய் தாங்கள் வாழ்ந்திருப்பதாக உள்ளுக்குள் மகிழ்கிறார்கள், நிறைவடைகிறார்கள்.

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு ஒரு அஞ்சல் அட்டையில் கவிதை எழுதி அனுப்பிய எனது பதிமூன்று வயதில் இலக்கியம் என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது. அவர் எனக்கு அனுப்பிய அஞ்சல் அட்டைப் பதிலில் “நிறையப் படி” என்கிற ஒற்றை வரியில் இலக்கியத்தை வடிகட்டி இருந்தார். ஆனாலும், ஒரு பதிமூன்று வயதுச் சிறுவனுக்குப் பதில் அனுப்ப வேண்டும் என்கிற அவரது குழந்தை மனம் ஒரு மிகப் பெரிய இலக்கியம்.

கடந்த பொங்கல் விழாவுக்கு மறுநாள் குன்றக்குடி தருமைக் கயிலைக் குறுமணி மேல்நிலைப்பள்ளியின் இலக்கியப் பெருமன்ற விழாவில் உரையாற்ற அழைத்திருந்தார்கள், அங்கே சில மாணவர்கள் “எழுத்தாளன் என்பவன் யார்?” என்கிற மிகச் சிக்கலான அந்தக் கேள்வியை என்னிடம் கேட்டார்கள்.

ஒரே ஒரு சிறுகதைத் தொகுப்பை மட்டும் எழுதி இருக்கிற, எழுத்தின் இலக்கணங்களையே இப்போதுதான் கற்கத் துவங்கி இருக்கிற என்னிடம் அந்தக் கேள்வியைக் அவர்கள் கேட்ட போது நான் திகைத்துப் போனேன், ஏனெனில் இப்படியெல்லாம் அவர்கள் கேள்வி கேட்பார்கள் என்று நான் நினைத்திருக்கவில்லை, நமது மாணவர்களின் மனநிலையில் பொதிந்து கிடக்கிற பேராற்றலின் ஒரு துளி அது.

நான் அந்த அவையில் பின்வருமாறு சொன்னேன், " எழுத்தாளன் என்கிற மனிதன் இந்த சமூகத்தை உற்று நோக்கியபடி எந்நேரமும் விழித்திருக்கிற ஒரு சக மனிதன், அவன் தன்னைச் சுற்றி நிகழும் எல்லாவற்றையும் கடந்து போகிற ஒரு சராசரி மனிதனில்லை, மாறாக அவ்விடத்தில் நின்று அந்த நிகழ்வுகளின் மூலமாய் இந்த மனித குலம் ஏதேனும் பாடம் கற்றுக் கொண்டு தன்னுடைய இருத்தலின் வலியைக் குறைத்துக் கொள்ள இயலுமா என்று பார்க்கிறான்.

வெகு தொலைவில் நிகழ்கிற ஒரு செய்தியையோ, மிக அருகில் நிகழ்கிற ஒரு இறப்பையோ ஒரு எழுத்தாளன் வாசித்தலிலும், அழுதலிலும் முடித்துக் கொள்வதில்லை, மாறாக அவன் அந்தச் செய்தியின் பின்புலத்தில் இருக்கும் நிலப்பரப்பை, அந்தச் செய்தியின் பின்னிருக்கும் மக்களின் வாழ்க்கையை, அந்தச் செய்தியின் பின்னிருக்கும் வரலாற்றை இன்னும் எல்லாவற்றையும் தோண்டிப் பார்க்கிறான்.

அப்படிச் செய்வதால் அவனுடைய வாழ்வதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிற நேரம் தொலைந்து போகிறது, அவனுக்காகக் காத்திருக்கிற அவனுடைய குழந்தையின் சிரிப்பும், விளையாட்டும் மறுக்கப்படுகிறது, ஆனாலும், அவன் இந்த மானுடப் பெரும் பரப்பின் பிரதிநிதியாகத் தன்னை மிகை கொள்கிறான்.

சாவின் மிக அருகில் சென்று அங்கிருக்கும் கண்ணீர் தோய்ந்த மனிதர்களின் மனங்களுக்குள் ஊடுருவிப் பார்க்கிறான், அந்த வலியின் சுவடுகளைத் தன் நினைவுகளில் தேக்கி வைத்துக் கொள்கிறான், கடந்து போகிற மனிதர்களின் வறண்ட மனசாட்சியை அவனது மனம் பின்னொரு நாளில் தனது எழுத்தின் மூலமாய் ஈரப்படுத்துகிறது, மனித உயிரின் உள்ளார்ந்த பண்படுத்தலை அவனது எழுத்து தீவிரமாகச் செய்ய முனைகிறது.

Literature

உயிர் வாழ்க்கையின் இருத்தலில் எப்போதும் படிந்திருக்கும் ஆறாத் துயரையும், அளப்பரிய மகிழ்ச்சியையும் அவன் தனது பேனாவின் மையூற்றும் குழிகளில் தேக்கி வைத்துக் கொண்டு தேவைப்படும் போது அவற்றைப் பகிர்ந்தளிக்கிறான். தனக்கு அருகில் இருக்கிற மனிதனின் வலியையும், தனக்குத் தொடர்பே இல்லாத மனிதர்களின் வலியையும் அவன் ஒரே நேர்கோட்டில் அளவிடுகிறான்.

தான் வாழும் சமூகத்தின் மனசாட்சி என்று தன்னைத் தானே அவன் கற்பனை செய்து கொள்கிறான், வழக்கமான உலகம் ஏனோ அவனையும் ஒரு வேலைக்குப் போகிற மனிதன் என்கிற அளவில் புறந்தள்ளிக் கடந்து செல்கிறது, அந்தப் புறந்தள்ளுதலை எள்ளி நகையாடியவாறு தன் போக்கில் அவன் பயணம் செய்து கொண்டே இருக்கிறான்.

ஆனால் அவனுடைய அந்தப் பயணம் தான் வரலாற்றின் சுவடுகளை, வரலாற்றில் மறைக்கப்பட்ட கறுப்புப் பக்கங்களை இந்த மானுட குலத்தின் பரப்பில் அள்ளி எறிந்து நீதி என்கிற ஒற்றைச் சொல்லை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது."

இலக்கியத்தின் பக்கங்களில் இறைந்து கிடக்கும் வரிகள் வாசிக்கும் ஒவ்வொரு மனிதனின் இதயத்தையும் முன்னும் பின்னுமாய் நகர்த்திப் பார்க்கின்றன, இலக்கியம் மட்டுமே இன்னொரு மனிதனுடைய மூளையின் மூலமாக உங்கள் மூளையை இயக்கிப் பார்க்கும் திறன் கொண்டதாய் இருக்கிறது, மொத்தத்தில் மனிதனை விலங்குகளிடம் இருந்து வெகு தொலைவுக்கு நகர்த்திக் கொண்டு வந்து சேர்த்திருப்பது எழுத்தும், இலக்கியங்களுமே."

இப்படி எல்லாம் சொல்லி முடித்த பிறகு அவர்கள் கேள்வி கேட்பதை நிறுத்தி விடுவார்கள் என்று நான் நினைத்தது என்னுடைய முட்டாள்தனம் என்றே நினைக்கிறேன், இதையெல்லாம் அமைதியாகக் கேட்ட பிறகு அவர்கள் இன்னும் சிக்கலான ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார்கள்,

அந்தக் கேள்வி இதுதான்,

"செக்ஸ் புத்தகங்கள் எழுதுபவர்களும் இதே வரையறைக்குள் தான் வருவார்களா?".

அதிர்ச்சியும், திகிலுமாய் நான் ஒலிபெருக்கியில் நின்றிருக்க, ஆசிரியப் பெருமக்கள் சிலர் அவர்களை அடையாளம் காண முயற்சி செய்து கொண்டிருந்தார்கள், அவர்களை அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு நான் தொடர்ந்தேன்,

"ஆம், நண்பர்களே, அவர்களும் இந்த வரையறைக்குள் தான் வருவார்கள், அவர்கள் இந்த உலகின் இருண்ட பக்கங்களில் வீழ்ந்து கிடக்கும் மனிதர்களின் மனசாட்சிக்குப் பிரதிநிதிகளாய் இருக்கிறார்கள், இந்த உலகம் தீங்கானது என்று குறிப்பிடுகிற நூல்கள் யாவும் வெட்கப்படும்படியான நமது இன்னொரு வாழ்க்கையின் நிழலாக இருக்கிறது. ஆகவே அவர்களும் இந்த வரையறைக்கு உள்ளாகவே வருவார்கள்”.

அவர்கள் முற்றிலுமாகப் புரிந்து கொண்டார்களா இல்லையா என்று உறுதியாக எனக்குத் தெரியாது, ஆனால், அன்று அவர்கள் என்னை இலக்கியம் குறித்து இன்னும் இன்னும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டினார்கள், எழுத்தாளன் என்பவன் யார் என்கிற விளக்க முடியாத வரையறையைத் தேடி ஒரு ஆழ்கடலில் என்னை அவர்கள் தள்ளி விட்டார்கள். தெரிந்தோ தெரியாமலோ எழுத்து என்கிற படகின் மீது ஏறிக் கொண்டு விட்ட எனது வாழ்க்கையை அவர்கள் மீளாய்வுக்கு இட்டுச் சென்றார்கள்.

ஆர்க்குட் என்கிற சமூக இணையத் தளம் அப்போது கோலோச்சிக் கொண்டிருந்த காலம், என்னுடைய அடையாளம் "பெரியார்", "திராவிடம்" என்கிற எல்லைகளில் நின்று கொண்டிருந்தது, விவாதங்கள் என்கிற பெயரில் அங்கு நிகழ்ந்த தனி மனிதத் தாக்குதல்களும், காழ்ப்புணர்வுகளும் இன்று நினைத்துப் பார்க்கும் போது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது, ஆனால், வாழ்க்கையின் மிக உயர்ந்த தத்துவங்களில் ஒன்றான அதன் போக்கிலான பாடங்கள் அங்கு தான் கிடைக்கத் துவங்கியது.

பிராமண நண்பர்களை நாங்கள் தாக்கிப் பதிவுகள் போடுவதும், எங்களைத் தாக்கி அவர்கள் பதில் பதிவுகள் போடுவதும் என்று அது ஒரு மிகப் பெரும் பொழுதுபோக்காகவே இருந்தது. இன்றைய பேராளுமைகள் பலர் கூட அந்த விவாதங்களில் பங்கு பெற்றிருந்தார்கள், ஒரு முறை ஏதோ ஒரு விவாதத்தில் "மீசை இல்லாத வீரமற்ற பயலுக" என்று நான் யாரையோ சொல்லப் போக, ஒரு பின்னூட்டம் வந்திருந்தது, மிக எளிமையான, சுருக்கமான பின்னூட்டம் அது, "அம்பேத்கருக்குக் கூடத்தான் மீசை இல்லை அறிவழகன்". விக்கித்துப் போனேன், இரண்டு மூன்று நாட்களாக எந்த இணைய விவாதங்களிலும் நான் பங்கு பெறவில்லை.

அந்தப் பின்னூட்டம் அப்படி ஒரு பாதிப்பை எனக்குள் விளைவித்திருந்தது. மீசை என்பது ஒரு மனிதனின் முகத்தில் தொக்கி நிற்கிற வரலாற்று எச்சம், அது ஒரு புற உடல் அடையாளம், அப்படியான ஒரு புற உடல் அடையாளத்தை வைத்து மனிதர்களை எடை போடுவதும், மனிதர்களின் பண்புகளை வரையறுப்பதும் எத்தனை அருவருப்பானது என்று உணர்ந்து கொண்டேன், அதன் பிறகு இன்று வரை விவாதங்களில் ஒழுங்கையும், நேர்மையையும் காப்பது எப்படி என்கிற அடிப்படை இலக்கியப் பாடத்தை அந்தப் பின்னூட்டமே எனக்குக் கற்றுக் கொடுத்தது.

24137_1394863465275_1042855542_31154284_310676_n

அந்தப் பின்னூட்டத்தைப் போட்டவர் வேறு யாருமில்லை, திரைப்பட நூலுக்கான தேசிய விருது பெற்றவரும், மிகச் சிறந்த ஓவியருமாகிய அன்புக்குரிய ஐயா ஜீவானந்தம் அவர்கள் தான்.

பார்ப்பனர்கள் குறித்த மேலோட்டமான, வரையறை செய்யப்பட்ட சிந்தனைகளோடு சுற்றித் திரிந்த அந்தக் காலகட்டங்களில் ஒருமுறை ஈழத் தமிழர்கள் குறித்த விவாதம் ஒன்று இணையக் குழுமம் ஒன்றில் நடைபெற்றது, வசைகளும், கூப்பாடுகளும், கூச்சலும் நிரம்பிக் கிடந்த அந்த விவாதங்களில் குடுமியும், நாமமும் அணிந்த ஒரு நண்பர் ஈழத் தமிழ் மக்களின் வலியை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருடைய இதயத்தின் அடிநாதத்தில் இருந்து ஒலித்த அந்த ஓலம் என் நெஞ்சை உலுக்கியது, கடுமையாக வசை பாடினாலும் தம்பி என்று அன்போடு அழைக்கத் துவங்கினார், எனக்குள் வரையறை செய்யப்பட்ட அந்த பிம்பங்களை ஒற்றை மனிதராக அவர் உடைத்தார், ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்காத காங்கிரஸ் அரசுக்கு எதிராக அவர் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கைகள் கொடுத்தார் என்பதும், மனித நேயம் கொண்ட மனிதராக இருந்தார் என்பதும் காலப் போக்கில் நான் அவரைப் பற்றி அறிந்து கொண்ட சில எளிய உண்மைகள.

குடுமியும், நாமமும் போட்டுக் கொண்டிருக்கிற மனிதர்கள் தமிழர்களின் எதிரி என்றல்லவா முந்தைய உலகம் எனக்குச் சொல்லிக் கொடுத்தது, இவரும் குடுமியும், நாமமும் தானே போட்டுக் கொண்டிருக்கிறார், ஆனாலும் நம்மை விடவும் தமிழ் மீதும், தனது நெருங்கிய நிலப்பரப்பில் வாழும் தனது சொந்தங்களுக்காகவும் அதிகமாக உழைக்கிறாரே என்கிற விழிகள் விரிந்த வியப்போடு தான் அவரைப் பார்த்தேன்.

அவரும், அவரது அணுகுமுறையும், தான் நம்புகிற பழக்க வழக்கங்களைக் விடாது கடை பிடிக்கும் மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான கோட்பாட்டு நிலைகளுக்குள் வருவதில்லை என்கிற மிகப் பெரிய உண்மையை எனக்கு உணர்த்தின. “அண்ணா” என்றும் “தம்பி” என்றும் தொடரும் அவரது உள்ளத்துக்குள் சாதீயத்தின் சுவடுகள் இன்று வரைக்கும் அறவே இல்லை. நான் சந்தித்த முற்போக்கு முகமூடி அணிந்த வேடதாரிகள் பலரை விடவும், தனது அடையாளங்களை இழக்காமல் உள்ளடக்கத்தை முற்றிலும் துறந்த இந்த அண்ணன் சிறப்புக்குரியவர்.

310979_2497755799675_1126280455_32891875_1383852842_n

இலக்கியத்தின் வெவ்வேறு திசைகளை எனக்கு விளக்கிச் சொன்னவர் ஒரு முன்னோடி எழுத்தாளர், ஒரு தாயைப் போல என்னுடைய தான் தோன்றித்தனமான பல விளக்கங்களை அவர் சகித்துக் கொண்டார், பிறகு அவற்றில் இருக்கும் மற்றொரு கோணங்களைக் குறித்து எனக்கு விளக்கினார்.

குளிர் காற்றும், தேநீர்க் கோப்பைகளும் கூடி இருந்த ஒரு மாலையில், ஒரு சோழ மன்னனின் பெயர் கொண்ட தமிழ் எழுத்தாளரின் முகப்பில் நான் இணைத்த குழந்தைப் படத்திற்காக என்னிடம் மிகக் கடுமையான முறையில் நடந்து கொண்டாரென்றும், அடிப்படை நாகரிகம் இல்லாதவர்” என்றும் ஒரு முன்னோடிப் பெண் எழுத்தாளரிடம் நான் சொல்லிச் சினம் அடைந்த போது அதன் பின்னிருக்கும் மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை எனக்குச் சொல்லிப் புரிய வைத்தார்.

“எத்தனை பெரிய ஆளுமையாக இருப்பினும் அடிப்படை மனித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்களே அவர்கள்” என்கிற எளிய உண்மையை அவர் சொல்லி முடித்த போது அந்தத் தமிழ் எழுத்தாளர் குறித்த என்னுடைய வரையறை குலைந்து வெறும் பரிவுணர்வும், அன்பும் மட்டுமே நிலைத்திருந்தது. அம்பை என்று அன்போடு அழைக்கப்படும் அந்த இலக்கியவாதி எனக்குள் இருந்த பல்வேறு வரையறைத் திசைகளை மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டவராய் இருந்தார். இருக்கிறார்.

முகநூலிலும், இணையப் பக்கத்திலும் விடாது எழுதிக் கொண்டிருந்த இந்தச் சிறுவனை மிக உயர்ந்த இடங்களுக்கு நகர்த்திப் போவதற்கு எப்போதும் என்னருகில் சில உறவுகள் இருந்தன, மிகப் பெரிய ஊடகங்களில் பணியாற்றினாலும், மிகப் பெரிய ஆளுமைகளாக வலம் வந்தாலும், மருதங்குடி என்கிற ஒரு சின்னஞ்சிறு விவசாயக் குடிகளின் ஊரில் இருந்து புறப்பட்ட என்னை ஆட்படுத்திக் கொள்ளவும், வழி நடத்தவுமாய் எண்ணற்ற மனிதர்களை நான் சந்தித்தேன்.

நான் தொய்வடைந்த போதெல்லாம் அவர்கள் எனது கைவிரல்களைப் பற்றி மீட்டார்கள், சிறுகதைகளை நூலாக்க வேண்டும் என்று துடித்த போது தங்கள் உழைப்பைக் கொட்டினார்கள், பொருளைக் கொட்டினார்கள், நூலாக்கினார்கள், “உங்கள் கதையொன்றை நான் விரும்பிப் படித்தேன், அது என் பழைய நினைவுகளைக் கிளறி விட்டது” என்று ஒரு குழந்தையைப் போல என்னிடம் சொன்னார் மிகப் பெரிய இயக்குனர் ஒருவர். அடையாளங்கள் அற்ற என்னிடம், ஒரு துறையின் மிகப்பெரிய அடையாளமாக இருந்த அவர் அப்படிச் சொல்ல வேண்டிய தேவைகள் இல்லை, ஆனாலும் நல்லோரின் உலகம் அப்படித்தான் இயங்கும் என்று அவர்கள் உணர்த்தினார்கள். ஆஸ்திரேலியாவின் சிட்னி நூலகத்திலும், கனடாவின் டொராண்டோ நூலகத்திலும் இலக்கியம் குறித்த அரிச்சுவடிகள் அறியாத இந்தச் சிறுவனின் நூலை அவர்கள் நிலை நாட்டினார்கள்.

பகல் முழுக்க அலுவலகப் பணிகளில் விடாது ஓடிக்கொண்டிருக்கும் என்னைப் போன்றொரு மனிதனின் இரவுகள் நீண்ட ஓய்வுக்காய் ஏங்கியபடியே இருக்கும், என்னைச் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கைக்காக இயங்கும் அந்தத் தொடர்பில்லாத பிழைப்புக்கான ஓட்டம், எனது இரவுகளின் நிழலில் எப்போதும் இளைப்பாறுகிறது.

181334_1266977970527_1712147856_477644_5227926_n

ஆம், எனது இரவுகள் நான் பகலில் சந்தித்த மனிதர்களின் வலிகள், அவர்களின் கண்களுக்குள் மறைந்து கிடந்த கவலைகளின் சுவடுகள் இவை எல்லாவற்றையும் அசை போட்டுக் கொண்டே இருக்கிறது, அவர்களின் மனதுக்குள் ஊடுருவிச் சென்று அவர்கள் நடக்கும் திசைகளில் பயணிக்க முற்படுகிறது, தொலைக்காட்சிகளில் போரில் இறந்து தலை தொங்கிக் கிடக்கும் எனது தமிழ்க் குழந்தைகளின் இழந்த சிரிப்பை நோக்கி வேகமாய் நடக்கிறது, குழந்தையைப் பெற்ற தாயின் வலிக்குள் புதைந்து மறைந்து கொள்ளத் துடிக்கிறது.

எமது உழைக்கும் மக்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் ஊடகங்களைக் காரி உமிழ்கிறது, பின்னெழுந்து அமர்ந்து எழுதச் சொல்கிறது, யாருமற்ற தெருக்களின் மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் ஒரு ஆந்தையைப் போல உறங்கிக் கொண்டிருக்கும் உலகை விநோதமாகப் பார்த்தபடி விழித்துக் கிடக்கிறது ஒரு எழுத்தாளனின் மனம்.

சிக்கலான மனித வாழ்க்கையின் முடிச்சுகளின் வழியாகப் பயணித்து நெகிழ்வான அதன் பிளவுகளைத் தளர்த்தி அவிழ்க்கப் பார்க்கிறது. அப்படி அவிழ்க்கப்பட்ட முடிச்சுகளின் செதில்கள் சொற்களாய் உருமாறி வெள்ளைத்தாள்களில் நிறைந்திருக்கும் போது நிறைவு கொண்டு உறங்க முயல்கிறது. ஒருவேளை இதுதான் இலக்கியமாக இருக்குமோ? ஒருவேளை இவர்களைத்தான் எழுத்தாளர்கள் என்கிறார்களோ? எனக்குத் தெரியாது, ஆனால், இவர்கள் தான் எழுத்தாளர்கள் என்றால் இவர்கள் அமைதியை இழந்து மனிதப் பெருங்கூட்டத்தில் தனித்து விடப்பட்டவர்கள் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

இருப்பினும், நண்பர்களே, இந்தத் தனித்து விடப்பட்ட ஆந்தைகளை ஆட்கொண்டு அமைதிப் படுத்துவதற்காய் உலகெங்கும் சில மனிதர்கள் இருக்கிறார்கள், இரண்டொரு சொற்களே பேசும் அவர்கள் ஆயிரமாயிரம் மனிதர்களுக்கு இந்த ஆந்தைகளை அடையாளம் காட்டுகிறார்கள், இந்த ஆந்தைகள் உறங்கும் தெருக்களின் கூட்டு மனசாட்சி என்று அவர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

149905_449913546609_717256609_5939157_4208022_n

இவர்களை எல்லாம் தாண்டி இந்த இரவு ஆந்தையை ஒரு தீக்கோழியைப் போல அடையாளம் செய்து அழகு பார்க்க ஒரு அண்ணன் இருக்கிறார், துவக்க காலங்களில் இருந்தே எனது எழுத்துக்களைப் படித்து அவற்றில் மிகச் சிலவற்றைத் தேர்வு செய்து, வடிகட்டி, வடிகட்டி இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்கிற முதல் இலக்கணத்திற்கு என்னை அழைத்து வந்திருக்கிறார்.

பக்கங்களைச் சுருக்கிப் பத்திகளாக்கி, பத்திகளைச் சுருக்கி வாக்கியங்களாக்கி, வாக்கியங்களைச் சுருக்கிச் சொற்களாக்கி, சொற்களையும் சுருக்கி சில நேரங்களில் நிலைத்த அமைதியை உருவாக்கும் கலை தெரிந்தவர். அவர் யாரென்று நீங்களும் தெரிந்து கொள்வதற்கு இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும், நானும் தான். 

****************

Advertisements

Responses

  1. “கடந்து போகிற மனிதர்களின் வறண்ட மனசாட்சியை அவனது மனம் பின்னொரு நாளில் தனது எழுத்தின் மூலமாய் ஈரப்படுத்துகிறது,..”
    அழகாகச் சொன்னீர்கள்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: