கை.அறிவழகன் எழுதியவை | ஏப்ரல் 9, 2012

நினைவடைந்த மரக்கிளைகள்….

Mothers-love-their-children-animals-20186514-619-480

திறந்திருக்கும் சாளரங்களில் நெடிய இரவொன்று விழித்துக் கிடக்கிறது, பக்கத்தில் பகல் பரிசளித்த களைப்பில் ஒரு தாயும், அவள் மடியில் தலை அழுத்தி என் குழந்தையும் உறங்குகிறார்கள், செங்கல் சூளையொன்றில் இருந்து கிளம்பிய வெண்புகைச் சுருளைப் போல மேகங்கள், புதிர் நிரம்பிய நீல வானத்தின் கீழே நகர்ந்து செல்வது நினைவுகளை பின்னோக்கி இழுக்கிறது.

தனிமையைத் தன் பாதையெங்கும் நிறைத்தபடி தாழப் பறக்கும் ஒற்றைப் பறவையின் கூடப் பறக்கிறது மனம். மனித மனங்களின் கட்டுக்கடங்காத எல்லைகளை அடைத்தபடி வானுயரக் கிடக்கும் கட்டிடச் சுவர்களுக்குள் மானுடத்தின் வரலாறு கசிந்து கொண்டிருக்கிறது.

தாயின் மடியில் மட்டும் எப்போதும் வற்றாது சுரக்கும் பாலின் ஈரத்தில் தான் இந்த உலகம் நீண்ட காலமாய்ச் சுற்றிக் கொண்டிருக்கிறது, அதுவும் ஒரு மழைக்கால இரவுதானென்று நினைக்கிறேன், கல்லூரி முடித்துப் பொருள் சேர்க்கும் கனவுகளோடு தொலைதூரக் கடற்கரை நகரத்தில் தஞ்சம் புகுந்த எண்ணற்ற மனிதர்களில் நானும் ஒருவனாகி இருந்தேன்,

தொடர் வண்டிகளில் கனவுகளை நிரப்பியபடி வந்து சேர்ந்த அழுக்கடைந்த பயணப் பைகளை இறக்கிக் கொண்டிருந்தது "தாதர்" ரயில் நிலையம். தூரத்து உறவுக்கார நண்பனொருவனின் அறையில் பகலில் தங்கிக் கொள்ளும் அனுமதி பெறுவதே அத்தனை பெரிய சாதனையாகிப் போனது, வேலை தேடும் படலத்தில் நகரச் சாலைகளில் நடை பயின்று களைத்துத் துவண்டு போன கால்கள்.

சட்டைப் பையில் கிடந்த சில்லறைகளைப் பொறுக்கி இரவுக் கடையொன்றில் தேநீர் குடித்து வயிற்றை வற்ற விடாது பார்த்துக் கொள்ளும் கலையில் இரண்டொரு நாட்களில் தேர்ச்சி அடைந்திருந்தேன், அவரவருக்கான உணவுத் தேடலில் சலித்துப் போன மனிதர்கள் நிரம்பிய மாநகரத்தின் மையப் பகுதிக்கு இந்தப் புதிய மனிதனின் பசி ஒன்றும் அத்தனை கொடுமையானதல்ல,

நியான் விளக்குகளும், கொண்டாட்டங்களும் வெகு நேரம் தொடரும் இரவுக்குள், சில பருக்கைகள் சோறு கிடைக்காதா??? என்று ஏங்கித் தவிக்கும் மனிதனின் வலி அளவிட முடியாதது. மும்பை மாநகரத்தின் சோப்டாக்கள் அத்தகைய வலியால் கட்டப்பட்டவை, அதன் சதுரப்பெட்டி வாழிடங்களில் நகரம் உமிழ்கிற எச்சங்களைப் போல மனிதர்கள் எப்போதும் சுருண்டு கிடக்கிறார்கள்.

நானிருந்த அறையில் பகல் தனித்ததாகவும், இரவு நிரம்பி வழிவதாயும் இருந்தது, நான் ஏழாவது மனிதன், படுக்கை என்று அழைக்கப்படும் நீளமான ஒற்றைப் போர்வையில் அழுக்குத் துணிகளைச் சுருட்டித் தலையணை செய்து கொள்வது ஒன்றிரண்டு நாட்களில் கைகூடி இருந்தது.

நகரத்தில் கிராமத்தில் இன்னும் எல்லா இடங்களிலும் இலவசமாய்க் கிடைக்கிறது நிலவொளி. இனி எந்த நம்பிக்கைகளும் இல்லை இந்தப் புதியவன் பிழைக்க என்கிற இறுதி இரவுச் சிந்தனைகளோடு பசியில் புரண்டு கொண்டிருந்த அந்தக் கணங்கள் வற்றிக் கொண்டிருந்த நம்பிக்கைப் பயிர்களுக்கு நீரூற்றியவை.

கடந்து போகிற முக்காடு அணிந்த மராட்டியப் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் நிகழ்காலத்தைக் களைத்துப் போடுகிறாள் அதே மாதிரியான உடை அணிந்த ஒரு தாய். அந்தத் தாயின் மொழி என்னுடையதில்லை, அந்தத் தாயின் வாழ்க்கைக்கும் எனக்கும் அன்று வரையில் எந்தத் தொடர்புகளும் இல்லை.

மணி பன்னிரண்டைத் தாண்டிய அந்த இரவில் மேலிருந்த தகரக் கூரை பொருத்தப் பெற்ற வீட்டின் உலோகப் படிக்கட்டுகளில் இருந்து இறங்கி வந்து, "ஏன் வெளியே படுத்திருக்கிறாய் மகனே?" என்று இந்தியில் கேட்ட அந்தத் தாயிடம் உடைந்த இந்தியில் இப்படிச் சொன்னேன்," உள்ளே இடமில்லை அம்மா, அதோடு கொஞ்சம் காற்றும் வருகிறதே, அதனால் தான் வெளியே படுத்திருக்கிறேன்" என்று பதில் சொல்லி விட்டுப் பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் அலையும் ஒரு பெருச்சாளியைப் பார்த்தேன்.

20080806-232543-14

படுக்கையில் துணைக்குப் படுத்திருந்த காலித் தண்ணீர் பாட்டிலைக் காட்டி, "அம்மா, கொஞ்சம் நீர் நிரப்பித் தருவீர்களா? என்று என்னைக் கடந்த அந்தத் தாயிடம் கேட்டேன், "ஊப்பர் ஆஜாவ் பேட்டா" என்று என்னை மேலே வரச் சொல்லி விட்டு மீண்டும் உலோகப் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றவரைப் பின்தொடர்ந்து சென்று பாட்டிலை நீட்டியபோது என்னை மேலும் கீழுமாய்ப் பார்த்தவர் என்ன நினைத்தாரோ தெரியாது, "சாப்பிட்டாயா மகனே?" என்று வாய் நிறையக் கேட்டார் பார்வதி என்கிற ஒரு தாய்.

கொஞ்சமாய் ஒட்டிக் கொண்டிருந்த தன்மானம் ஒட்டுமொத்தமாய்ச் சரிந்து என் கண்ணீரைக் கசிய விட அந்தத் தாயின் உள்ளம் தவித்துப் போனது, விளக்குகளைப் போட்டுவிட்டு "ஷர்மி, ஷர்மி" என்று தன் மூத்த மகளை எழுப்பி விட்டு அடுப்பைப் பற்ற வைக்கத் துவக்கினாள் அந்தத் தாய்.

"யார் பெற்ற பிள்ளையோ, எத்தனை நாள் ஆயிற்றோ சாப்பிட்டு" என்று புலம்பித் தீர்த்தபடி என்னை அமரச் சொல்லிவிட்டு, "பகலில் கூடக் கேட்டேனே? உன்னிடம் சாப்பிட்டாயா என்று," "பொய் சொல்லி இருக்கிறான் அம்மா, எங்கள் மண்ணுக்குப் பிழைக்க வந்த பிள்ளைகள் இப்படிப் பட்டினி கிடப்பது பார்க்கச் சகிக்கவில்லையப்பா" என்று தூக்கக் கலக்கத்திலும் தாயின் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்த ஷர்மி என்கிற அந்த இளம்பெண்ணிடம் என்னன்னெவோ சொல்லிப் புலம்பியபடி இருந்தாள் அந்தத் தாய். இரவும், நிலவும் மனிதர்களை வழக்கம் போலவே கடந்து போய்க் கொண்டிருந்தன.

மீதமிருந்த உருளைக் கிழங்கு சப்ஜியையும், ஆறு கனத்த ரொட்டிகளையும், அன்றிரவில் பரிமாறி என் பசியாற்றிய அந்தத் தாயின் உள்ளம் தான் எத்தனை மகத்தானது, எந்த இலக்கியத்தால் அந்தத் தாயின் உள்ளத்தை விளக்கிச் சொல்லி விட முடியும், இந்த உலகின் மனசாட்சியாய்க் கிடந்து எப்போதும் கனன்று கொண்டிருந்த பசியை என்னிடம் கடைசியாய் அடையாளம் கண்டதும் இன்னொரு தாய்தானே என்று நினைக்கும் போதெல்லாம் உயிரில் பாதி பெண்ணாகவே உணரப்படுகிறது.

ஏறத்தாழ இரண்டு வாரங்கள் எனக்கு வேலை கிடைக்கிற வரையில் அந்தத் தாய்க்கு என்னையும் சேர்த்து ஐந்து பிள்ளைகள். எனக்குள் கிடந்த மொழியையும், என் இலக்கியத்தையும் அணைந்து விடாது அடை காத்தவள் அந்த அடையாளம் தெரியாத மராட்டியத் தாய்.

இன்னொரு மழைக்காலத்தின் மாலைப் பொழுதில் வானூர்தியில் பயணித்து, மகிழுந்தில் இறங்கி அந்த மாநகரத்தை அடைந்த போதும் என் கால்கள் அந்தத் தாயின் இருப்பிடத்தை நோக்கியே நடந்தன, அடையாளம் காண முடியாத நகரப் பெருவெள்ளத்தில் கரைந்து காணாமல் போய் விட்ட பார்வதி என்கிற அந்தத் தாயை நான் சந்திக்கிற ஒவ்வொரு பெண்ணிடமும் கண்டு கொள்கிறேன்.

ஆம், தாயின் மடியில் எப்போதும் வற்றாமல் சுரக்கும் பாலின் ஈரத்தில் தானே இந்த உலகின் பயிர்கள் எப்போதும் செழிக்கிறது. பல்வேறு கணங்களில் வாழ்க்கை இப்படித்தான் புரியாத புதிரைப் போல நீண்டு தொடர்கிறது, கல்வி, இலக்கியம், பொருள், மொழி எல்லாவற்றையும் கடந்து ஒன்றிரண்டு பருக்கைச் சோற்றிலும், துளி அன்பிலும் முடிந்து போகிறது. கோட்பாடுகளை, பேரிலக்கியங்களை எல்லாம் அப்படிச் சுரக்கும் ஒரு துளி அன்பும், சில சோற்றுப் பருக்கைக்களுமே பண்படுத்திப் பாதுகாக்கின்றன.

mumbai-slum

*******************************************************************************************************************************************************************************************

நேற்றிரவில் அமர்ந்து ஆனந்த விகடன் சிறுகதைக்காக வந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணில் பட்டது ஒரு பழைய நண்பனின் மின்னஞ்சல், வழக்கமான வணக்கம் இல்லாத அந்த மடலை வாசிக்க வாசிக்க வாழ்க்கை விஸ்வரூபம் எடுத்து நடுக்கமுறச் செய்தது.

தனது மொழியின் மீதும், தனது மக்களின் மீதும் தீராத அன்பு கொண்டிருக்கிற எந்த ஒரு மனிதனுக்கும் இப்படி ஒரு மடல் போதும் நிறைவான வாழ்க்கையை உணர்த்த………..அந்த மின்னஞ்சலை நண்பனின் மொழியிலேயே கீழே படியுங்கள்……….

"வார இதழ்கள் இங்கு எங்கு கிடைக்கும்?"

முகத்தைப் பார்த்தவர்… “தமிழா? மலையாளமா?” என்றார்..

“தமிழ்…”

“தமிழ் இங்கு கிடைக்காது… ஸ்டேசன் தான் போகணும்…”

ஹோட்டலில் ரிசப்சனில் கேட்டுவிட்டு படி இறங்கினேன்..

“ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றவரிடம் திரும்பி நன்றி உதிர்த்துவிட்டு ரோட்டில் இறங்கி ஆட்டோவில் அமர்ந்து கொண்டேன்.

வணக்கம் அண்ணா.. வெகு நாட்கள் முன் முகநூலில் அறிமுகமான நட்பு உங்களது. உங்களுக்கு நினைவில் இருக்குமா தெரியவில்லை. உங்கள் வலைதளம் மற்றும் பக்கங்களில் உங்கள் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். பின்னர் வெகு நாட்களாக உங்கள் பதிவுகளையும் படித்திருக்கவில்லை..வார இதழ்களையும் வாசித்து வெகு நாட்கள் ஆகி விட்டது..இன்று தற்செயலாக உங்கள் பக்கத்திற்கு வந்தபோது உங்கள் சிறுகதை ஆனந்தவிகடனில் வெளிவந்திருப்பதை அறிந்தேன்.. ஏனோ தெரியவில்லை..உடனே படிக்கவேண்டும் என்று தோன்றியதும் ஆட்டோவில் ஏறிவிட்டேன் ரயில் நிலையத்திற்கு..பணி நிமித்தம் சில நாட்களாக பரூச்-ல்(குஜராத்) இருக்கிறேன்.

"லயன்ல வாடா " என்றவனிடம் "ப்ளாட்ஃபார்ம் டிக்கெட்" என்றுவிட்டு இடையில் நுழைந்து டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே ஓடினேன். புத்தக ஸ்டாலைத் தேடி…

இரண்டாவது ப்ளாட்ஃபாரத்திற்கு படியில் இரண்டிரண்டாகக் குதித்து கடையை அடைந்து.. "தமிழ் வார இதழ் இருக்கிறதா?" என்றேன்.. பதிலில்லை..

மீண்டும் "தமிழ் வார இதழ் இருக்கிறதா?" என்றேன் இன்னும் சத்தமாக…

"இல்லை" என்றான்

இந்தியாவின் பழைய நகரமொன்றின் ரயில் நிலையத்தில் தமிழ் புத்தகம் இல்லை!!

வேறு எங்கு கிடைக்கும் என்றேன்..

நிமிர்ந்து, "ஷீத்தல் ஹோட்டல் பக்கம் போ..ஸ்டேசன் பின்னால்".. என்றான்…

வேகமாக மீண்டும் இரண்டிரண்டு படிகள் தாவி பின்னே இறங்கி ஹோட்டல் வாசலில் போய் நின்றேன்… சுற்றும் முற்றும் பார்த்ததில் ஒன்றும் தட்டுப்படவில்லை.. இஸ்திரி கடையா இல்லை டெய்லரா தெரியவில்லை..சட்டைகள் மடித்து கடையை மூடப் போன முதியவரிடம்…

"காக்கா.. புக்ஸ்…. தமிழ் புக்ஸ்… கஹாங் மிலேகா இதர்"…என்றேன்..

நெற்றியில் அரும்பிய வியர்வையைப் பார்த்தவர்…வெளியில் வந்து தோளில் கை போட்டு.. "ஓ.. பான் துக்கான் ஹேனா.. உஸ்கோ தோஓஓடா…. ஆகே… அவுர் ஏக் சோட்டாஸே துக்கான் ராயகா… வஹாங் தும்கோ ஜோ சாகியே.. ஸப் குச் மிலேகா.." என்றார்…

"தன்யவாத் காக்கா".. என்று அவரிடம் விரைவாக விடைபெறும்போது என் முதுகில் அவர் கைகள் ஆதரவாய்த் தட்டிவிட்டதை உணர்ந்தேன்..

விரைவாக நடந்து அந்த கடையை அடைந்தேன்… அம்மாவும் பிள்ளையும் இருந்தனர்.. மலையாள தோழர் அவர்.. ஆனந்தவிகடன் கேட்டு வாங்கியதும் முகம் வாடியது எனக்கு..

4.4.12

"இதற்கு அடுத்த இதழ் இல்லையா?"

"நாளைதான் வரும்" என்றார் சிரித்துக் கொண்டே…

19379_108544109162550_100000208834698_219494_4567599_nஏமாற்றத்துடன்.. இருந்தும் ஏதோ நப்பாசை.. திறந்து பார்க்க விரும்பியது மனம் உங்கள் சிறுகதை இதில் இருக்குமா!! என்று.. சுற்றும் முற்றும் பார்த்து பக்கத்தில் இருந்த ஹோட்டல் ஒன்றில் நுழைந்து, "ரொட்டி..சென்னா மசாலா".. என்று உட்கார்ந்து பாதி தேடிய நிலையில் ரொட்டியைக் கொண்டு வந்தான்.. "இப்ப மட்டும் சீக்கிரம் கொண்டுவந்துருங்கடா" என்று நினைத்துக் கொண்டே சாப்பிட்டுவிட்டு ஆட்டோவில் அறைக்குவந்து… மீதியையும் புரட்டினேன்..

சிரிப்பு..மகிழ்ச்சி..ஏமாற்றம்.. மூன்றும் ஒன்று கூடிக் கொண்டது… இருந்தும் வெகு நாட்களுக்குப் பிறகு வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போரையும்.. தமிழருவி மணியனின் முதல் சிறுகதையையும் இரவு வெகுநேரம் படித்து விட்டு உறங்குவேன்…

ஐயகோ.. ஆனந்தவிகடன் நாளை எத்தனை மணிக்கு வரும் என்று கேட்க மறந்து தொலைத்துவிட்டேன் கடையில்.. நண்பரைக் காண வேறிடம் செல்வேன்.. செல்கிற வழியில்…!!அப்படிக் கிடைக்காவிடில் மீண்டும் ஆட்டோ ஏறி….. நிச்சயம் நாளை இந்நேரம் வாசித்திருப்பேன் உங்கள் சிறுகதையை…"

வெங்கடேசன் நீலகிருஷ்ணன்

https://www.facebook.com/#!/NVenkadesan

********************************************************************************************************************************************************************************************

இந்த மின்னஞ்சலைப் படித்த பிறகு மனம் சிறகு முறிந்து பாலை நிலத்தில் கிடக்கிற பறவையைப் போலவே துடித்துப் போனது, மொழி மனிதர்களை எப்படியெல்லாம் இயக்குகிறது, இலக்கியமும், கலையும் மனித மனதின் வேர்களை அசைக்கிறது என்கிற உண்மையை உணரத் துவங்கினேன் நான்.

தனது மொழியில், தனக்குப் பிடித்த ஒன்றை எழுதும் மனிதனை, இந்த மடலை விட, இந்த மடலை எழுதிய மனிதனின் மனத்தை விட ஏதேனும் ஒன்று பெருமைப்படுத்தி விட முடியுமா என்ன? எத்தனை உள்ளார்ந்த ஈடுபாடும், நெருக்கமும் இருந்தால் மொழி ஒரு மனிதனை இப்படியெல்லாம் அலைக்கழிக்கும், திணறடிக்கும், மீண்டும் ஒருமுறை குளிரின்றி நடுங்குகிறது உடல்.

"தம்பி உங்கள் அலைபேசி எண்ணை அனுப்புங்கள்" என்று ஒரு பதில் மடலைப் போட்டு விட்டு அவர் அனுப்பிய மின்னஞ்சலில் குறிக்கப்பட்டிருந்த நேரத்தைக் கவனிக்கிறேன், சனிக்கிழமை இரவு – 21 .52 என்றிருந்தது. இரவையும், பகலையும் கண்டு கொள்ளாது ஓடிக் கொண்டே இருக்கும் கடிகார முட்களைப் பார்த்தால் இரவு பத்து மணி, இருபது நிமிடங்கள். பத்து இருபத்து மூன்றுக்கு ஒருமுறை "ரெப்ரெஷ்" செய்கையில் கிடைக்கிறது அலைபேசி எண்.

குறிப்பிட்ட எண்ணில் அழைக்க முயற்சி செய்தால் தொடர்பு கிடைக்கவில்லை, தொடர்பு மறுக்கப்படுகிறது, மீண்டும் மீண்டும் முயன்றும் தொடர்பு கிடைக்காமல் தடுமாறிய மனம் வேறு சில எண்களை முயற்சிக்க அவை யாவுமே இணைக்கப்படவில்லை. தொலைத் தொடர்பில் ஏதோ சிக்கல்.

தொழில் நுட்பத்தால், மனித மனத்தின் ஏக்கங்களை, தவிப்புகளை, ஏமாற்றங்களைப் புரிந்து கொள்ளவே முடியாது என்கிற உண்மை உரைக்க மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவனை நிலவு பாவமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது.

வெகுநேரம் கழித்து இணைப்புக் கிடைக்க மொழியை அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லும் அற்புதமான அந்த மனிதனின் குரல் மறுமுனையில் "அண்ணா" என்றது.

நான் படித்த எல்லா நூல்களின் பக்கங்களை விடவும், நான் எழுதிய எல்லாச் சிறுகதைகளின் கருக்களை விடவும், இவரது ஒருபக்க மின்னஞ்சல் மேலான இலக்கியம், ஏனெனில் இலக்கியம் என்பது தன் மொழியைத், தன் மக்களை இன்னும் ஒரு படி மேன்மையுறச் செய்யும் ஒரு துளி அன்பு…………

GiraffeBaby1

*************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: