கை.அறிவழகன் எழுதியவை | ஏப்ரல் 17, 2012

திராவிடம் – தமிழ் தேசியத்தின் திறவுகோல்.

ayothidasar

திராவிடம் என்கிற வெளிக்குள் வளர்ந்து பயிரான தமிழ் தேசியம் இப்போது அறுவடைக்குத் தயாராகிவிட்டது, தேர்தல் கால அறுவடையின் போது பெரு நட்டமடைந்த திராவிடப் பெருநில விவசாயிகளே இன்று இந்தக் குரலை முன்னின்று எழுப்பி வருகிறார்கள், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற அல்லது முதலாளித்துவ அரசியலின் பலன்களை பெற்றுத் தங்கள் குடும்பங்களைப் பல தலைமுறைக்கும் செழிக்கச் செய்யும் இவர்களின் நுட்பமான அரசியலை உணர்ந்து கொண்டே நாம் இந்த விவாதக் களத்திற்குள் நுழைய வேண்டியிருக்கிறது.

திராவிடம் என்கிற கருத்தியல் ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆரியம் என்கிற குறியீட்டு மரபுகளுக்கு மாற்றாக முன்வைக்கப்பட்டது, கல்வி, பொருளாதாரம், வழிபாட்டு நம்பிக்கைகள், கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களில் கடும் நெருக்கடிகளையும், பின்னடைவையும் கண்ட பல்வேறு சமூகக் குழுக்கள் அத்தகைய நெருக்கடியை எதிர்த்து எழுச்சி பெற வேண்டிய தேவை இருந்தது, அந்தத் தேவைகளின் விளைபொருளாக திராவிடம் என்கிற கருத்தியல் உருவாக்கம் கொண்டது.

காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு முந்தைய நிலவியல் அடிப்படையிலான அரசியல், தீர்க்கமான தேசிய உணர்வுகள் அற்ற ஒரு காலகட்டத்தில் திராவிடம் என்கிற கருத்தியல் இன்றைய தென் மாநிலங்கள் நான்கின் உழைக்கும் மக்களையும் அவர்களின் தொன்மையான ஆழ்மன வேட்கைகளையும் ஆட்கொண்டு காக்கும் திறன் கொண்ட மாற்றுச் சிந்தனையாகவே உருவெடுத்தது. திராவிட அரசியல் என்கிற கருத்தாக்கம் தமிழகத்தை மையமாக வைத்து ஏனைய தென் மாநிலங்களையும் சார்ந்து வளர்ந்தது என்பதற்கான திடமான ஆதாரங்கள் இல்லை, ஒப்பீட்டு நோக்கில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் திராவிட அரசியல் கருத்தாக்கம் மிகப்பெரிய தாக்கம் விளைவிக்கவில்லை.

தமிழர்களைத் தவிர திராவிட அரசியலின் மாற்றங்களை ஏனைய தென் மாநிலங்களின் எந்தப் பிரிவும் உள்வாங்கிக் கொள்ளவில்லை என்கிற முகத்திலறையும் உண்மையையும் நாம் உணர்ந்தாக வேண்டும். திடமான வரலாற்று ஆய்வுகளின் துணையின்றிக் கிடைக்கப்பெற்ற சில தொல்லியல் ஆதாரங்களை வைத்து உருவாக்கப்பட்ட "ஆரியம்" என்கிற குறியீட்டு அடக்குமுறை அல்லது ஆளுமை வடிவங்களில் மேலோங்கி இருந்த பார்ப்பன அதிகார மையங்களுக்கு எதிராகவே திராவிடம் நிலை நிறுத்தப்பட்டது.

rettamalai-srinivasan

ஆரியம் என்கிற குறியீட்டு அடையாளத்துக்கு எதிராகப் பார்ப்பனர் அல்லாத பல்வேறு அறிவுக் குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட திராவிடம் என்கிற கருத்தாக்கத்தை பெருமளவில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த பெருமை தந்தை பெரியாரையே சேரும்.அதே வேளையில் பெரியார் தொடர்ந்து சூழலுக்குப் பொருந்துகிற சிந்தனைகளை அல்லது கருத்தியக்கங்களை உருவாக்குவதில் எப்போதும் மிகுந்த துணிவோடிருந்தார், எந்த ஒரு கட்டமைக்கப்பட்ட சிந்தனை மரபையும் நோக்கி விடாப்பிடியாக நகர்வதை அவர் விரும்பவில்லை என்கிற உண்மையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தென்னிந்தியாவில் காலனி ஆதிக்கத்தின் முன்பாகவே மன்னராட்சி முறை மற்றும் சமஸ்தான அரசியல் நிகழ்வுகளின் மையப்புள்ளிகளாக கோவில்களும், மடாலயங்களும் மாற்றம் காணத் துவங்கி இருந்தன, மனித உணர்வுகளைக் குலைக்கும் பல்வேறு கண்டுபிடிப்புகளை அல்லது கற்பிதங்களை நோக்கி அரசுகளும், சமஸ்தானங்களும் நகரத் துவங்கி இருந்தன, பிறப்பு மற்றும் இறப்பு குறித்த மனித உயிரின் அச்சங்களை மூலதனமாக்கி புதிய நம்பிக்கைகளை உருவாக்கும் தங்கள் முயற்சிகளில் பார்ப்பனர்கள் பெரு வெற்றி அடைந்தார்கள்.

கார்ல் மார்க்ஸ் சொல்வதைப் போல சரணடைதல் கோட்பாட்டின் உயர் நிலைகளைத் தங்கள் உதவியின்றி யாரும் அடைய இயலாது என்கிற எல்லைக் கோட்டை பார்ப்பனர்கள் உருவாக்கிக் கொண்ட போது அதன் எதிர் வினையாகவே திராவிடம் என்கிற கோட்பாட்டு அரசியல் துவக்கம் பெற்றது. சரணடைதல் கோட்பாட்டின் மூலமாக சிலை வழிபாட்டு முறைகளையும், புராண இதிகாசத் தத்துவ மரபுகளையும் பார்ப்பனர்கள் உருவாக்கி தென்னிந்தியா முழுவதும் பரவிக் கிடந்த சிறு தெய்வ வழிபாட்டு முறைகளை அழித்தொழிக்க முற்பட்டார்கள், பெருமளவில் செலவு செய்து கட்டப்பட்ட கோவில்களின் மூலமாகத் தங்கள் இருப்பையும், வாழ்வையும் கத்தியின்றி ரத்தமின்றி மிக எளிமையாக மாற்றி அமைத்துக் கொண்டார்கள்.

எளிய மக்களின் கலை மற்றும் பண்பாட்டு வெளிகளை முறைப்படுத்தப்பட்டவாய்ப்பாடுகளுக்குள் கொண்டு வந்து அவற்றை வேற்றினத்தவர் யாரும் கற்றுக் கொண்டு வெளிப்படுத்துகிற வாய்ப்பை தங்கள் கைகளிலேயே ஒரு சுக்கானைப் போல அவர்கள் வைத்திருந்தார்கள், பயன்பாட்டு மொழியாக அவர்கள் வெவ்வேறு தென்னிந்திய மொழிகளைப் பேசினாலும் கூட கோவில் கருவறைகளில் சமஸ்க்ருதம் என்கிற புதிரை இன்றளவும் அவர்கள் தொடர்ந்து நிலை நிறுத்திக் கொண்டதன் காரணம் நிலையான பொருள் மற்றும் சமூக  வாழ்க்கை குறித்த அச்சம் என்றே சொல்லலாம்.குவிக்கப்படிருந்த அரசவை மையங்களில் இருந்து ஒரு புதிய அதிகார மையத்தைக் கோவில்களின் மூலம் கட்டமைப்பதில் பார்ப்பனர்கள் பெரிய அளவில் வெற்றி அடைந்தார்கள், மன்னர்களின் அல்லது சமஸ்தானத் தலைமைகளின் மிக நெருங்கிய ஆலோசகர்களாக கோவில்களின் வழியாகப் பார்ப்பனர்கள் நிலை பெற்றார்கள்.

PERIYAR

காலனி ஆதிக்கமும், அதற்கு முந்தைய சமஸ்தானங்களும் வழங்கிய அங்கீகாரம், பொருள் மற்றும் அதிகார ஆசைகளை நோக்கி ஆரியம் என்கிற குறியீட்டு அரசியல் வெற்றி கண்டிருந்த காலத்தின் மாற்றுக் குறியீட்டு அரசியலே திராவிடம் என்கிற கருத்தாக்கம். 1891 இல் அயோத்தி தாசரின் "திராவிட மகாஜன சபை" உருவாக்கப்பட்ட போது பிராமணர்களுக்கு எதிரான அவர்களின் ஆரியக் குறியீடுகளுக்கு எதிரான ஒரு நுட்பமான அறிவுசார் அரசியல் இயக்கமாகவே அது தோற்றம் கொண்டிருந்தது. பிராமணர்கள் அல்லாத அறிவுக் குழுக்களின் அடையாளமாக அன்றைய ஆதிக்க மகா சமூகங்களின் புகலிடமாக இருந்த "திராவிட மகாஜன சபை" சமூக நீதிக்கான முழுமையான தீர்வாக முன்வைக்கப்படவில்லை என்ற போதிலும், அதுவே இன்றைய தமிழ்ச் சமூகத்தின் சமூக நீதி கண்ட வெற்றிகளின் அடிப்படையாக இருந்தது என்பதைப் பெரியாரைக் கடந்து நாம் உணர்ந்து கொண்டே ஆக வேண்டும்.

ஆகவே திராவிடம் என்கிற குறியீட்டு அடையாளம் மறைபொருளாகக் கிடந்த பார்ப்பனர்களின் ஆரியக் குறியீட்டின் எதிர்ப் பொருள். கல்வி, பொருளாதாரம், கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களில்  திராவிட அரசியல் கருத்தாக்கத்தால் பெறப்பட்ட விழிப்புணர்வும், பயன்களும் அந்தக் கருத்தியலை நோக்கித் தீவிரமாக இயங்கும் பல்வேறு தலைவர்களை உருவாக்கியபடியே இருந்தது, தெரிந்தோ, தெரியாமலோ உழைக்கும் எளிய மக்களின் உரிமைகள் குறித்தும் அவர்கள் முழக்கமிட வேண்டியிருந்தது. திராவிடம் ஒரு வெகு மக்களின் அரசியல் இயக்கமாக மாற்றமடைந்தது.

திராவிடத்தின் விலை பொருட்களைத் தங்கள் உழைப்பாலும், ஊடகத் திறனாலும் ஒரு அரசியல் இயக்கமாக உருவாக்கிய பலரில் தந்தை பெரியார் முன்னிலை பெற்றார், அவரது எதைப் பற்றியும் கவலை கொள்ளாத, அச்சம் சிறிதளவேனும் இல்லாத தான்தோன்றி மனப்போக்கு திராவிட இயக்கத்தின் வலிமையான தலைவராக அவரை மாற்றியது. ஏனைய திராவிட இயக்கத் தலைவர்கள் செய்யத் தயங்கிய பல்வேறு உடைப்புகளையும், அதிர்வு தரும் திறப்புகளையும் அவர் தனி மனிதனாக நின்று நடத்திக் காட்டினார். வலிமையான நெடுங்கால வரலாறு கொண்ட ஆரியக் குறியீடுகளை அடித்து நொறுக்கி ஆட்டம் காண வைத்தார். தமிழகமெங்கும் திராவிடம் என்கிற ஒரு புதிய குறியீட்டு அடையாளத்தை உண்டாக்குவதில் அவரது தொடர்ச்சியான உழைப்பும், ஈடுபாடும் வெற்றி கண்டது.

annadurai image_jpg (12)

நான்கடுக்கின் முதல் நிலையில் இருந்த பார்ப்பனர்களின் ஆளுமையை எதிர்த்துத் தோற்றமும், வளர்ச்சியும் கண்ட திராவிடம் ஆட்சி அதிகாரத்தையும், சமூக நீதியையும் தனது இரண்டாம் நிலைக் குழுவிற்கு முழுமையாக வழங்கியது, மூன்றாம் தளத்தின் பாதி விழுக்காட்டு மக்களுக்கு திராவிடத்தின் பயன்கள் கிடைக்கப்பெற்ற போதும், மீதிப் பாதி மக்களுக்கும், கடைசி மற்றும் நான்காவது தளத்தில் கிடந்த மனிதர்களுக்கும் அந்த வாய்ப்பை திராவிடமே மறுக்கத் துவங்கியது, அந்தப் புள்ளியில் இருந்தே திராவிட அரசியல் கருத்தியல் வடிவத்திலிருந்து திசை மாறி வாக்கு வங்கி அரசியலின் சாதியக் கட்டமைப்புகளுக்குள் வீழத் துவங்கியது.

தனி மனித நலன்களை நோக்கியும், ஆரியக் குறியீட்டு அரசியலின் பாதையிலும் பயணிக்கத் துவங்கிய திராவிடம் தனது திட்டங்களை வரையறை செய்து கொள்ளத் தயங்கிப் பின்வாங்கியது. மன்னர்களாலும், சமஸ்தானங்களாலும் காலனி ஆதிக்க ஆற்றல்களின் மூலமாகவும் பறித்துக் கொள்ளப்பட்டுக் கோவில்களுக்கு சொந்தமாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மூன்றாம் மற்றும் நான்காம் தள வர்ணப் பிரிவினருக்கு நிலைத்தன்மை அற்ற வாழ்க்கையும், உரிமைகளும் அமைந்திருந்ததை திராவிட இயக்கங்களின்  ஆட்சி முறை அரசியல் மாற்றி அமைப்பதற்கான எந்த உறுதியான திட்டத்தையும் முன்வைக்காமல் பின்தங்கியது.

மண்டல வழியான சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலமாகத் தேர்தல் அரசியலில் வெற்றிகளைப் பெறும் ஒரு எதிர்த்திசை அரசியலை திராவிட இயக்கங்கள் தேர்வு செய்த போது சமூக நீதியை நோக்கிய அதன் பயணம் வியப்பான மாற்றங்களைச் சந்தித்தது, எந்தக் குறியீட்டுக்கு எதிராகத் துவங்கப்பட்டதோ அதனையே தலைமையாக ஏற்றுக் கொள்கிற ஒரு மனநிலைக்கு அது தள்ளப்பட்டதன் காரணிகளை ஆய்வு செய்யும் போது திராவிட இயக்க அரசியல் வெகு நுட்பமாக அதே வர்ணக் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு தன்னைச் சமரசம் செய்து கொண்டிருப்பது தெளிவாகப் புரியும்.

INDIA-ELECTION

ஆயினும், தமிழ்த் தேசிய அரசியல் இதற்கான தீர்வாக இருக்க முடியுமா? என்கிற மிகப் பெரிய கேள்வியை இந்த இடத்தில நாம் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது, தமிழ்த் தேசிய அரசியல் என்கிற கோட்பாடு எதிர்காலத்தில் வலிமையானதாக மாற்றம் பெறும் சாத்தியக் கூறுகளை இங்கிருக்கிற எந்தத் தமிழ்த் தேசியவாதியும் உரிமை கொண்டாட இயலாது, தமிழ்த் தேசியத்தின் சிந்தனை எல்லைகளைத் தொடர்ந்து தங்கள் திரளான பல்வேறு போராட்ட வடிவங்களின் மூலம் கட்டி அமைத்த பெருமை ஈழத் தமிழர்களையே சாரும்.

தொடர்ச்சியாக அவர்களின் மொழி சார் தேசியச் சிந்தனைகளுக்கு தமிழகமும், திராவிடமும் மிக முக்கியக் காரணிகளாக இருந்தன என்பதை மறுக்க முடியாது. தமிழ்த் தேசிய அரசியல் கருத்தாக்கம் தனது குழந்தைப் பருவத்தில் நின்று கொண்டிருக்கிறது, மன்னராட்சியின் மகத்துவங்களையும், தமிழ் நிலங்களை ஆண்ட சில மன்னர்களின் பதிவு செய்யப்பட வரலாற்று வெற்றிகளையும் மட்டுமே மையமாக வைத்துக் கொண்டு தமிழ்த் தேசிய அரசியலை நகர்த்தலாம் என்கிற ராஜராஜ சோழர்களின் சுவரொட்டிகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றையும், கண்ணீரையும் மறுதலிக்கும் ஒரு வழிபாட்டு மனநிலை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

திராவிட அரசியலின் அல்லது அதன் தலைவர்களின் தோல்வி இன்று தமிழ்த் தேசிய அரசியலை ஒரு பாடு பொருளாக மாற்றி இருக்கிறது, திராவிட அரசியலின் மூலமாகப் பெற இயலாத அதிகாரக் கைப்பற்றுதளைக் குறுக்கு வழிகளில் பெற முயற்சி செய்யும் தெளிவற்ற குழப்பவாதிகளின் கூடாரமாக இன்றைய தமிழ்த் தேசியக் கருத்தாக்கம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தமிழர் என்கிற உலகின் ஆதிக்குடிகள் இன்றளவில் ஒரு தனித் தேசிய அடையாளத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்களா என்ற கேள்வியும் மில்லியன் டாலர் பெறுமதி கொண்டது.

தனது அடிப்படைப் பண்பாட்டில் இருந்தும், மொழியின் மீதான செறிவான காதலில் இருந்தும், அரசியல் நுண்ணறிவில் இருந்தும் வெகு தொலைவு அடித்துச் செல்லப்பட்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் கூறுகளைத் தேடிக் கண்டடைந்து ஒருங்கிணைத்து, இந்தியா என்கிற பொருளாதார அடியாளிடம் இருந்து தப்பிப் பிழைத்து நாம் தமிழ்த் தேசியத்தினைக் கட்டி அமைப்பது வெகு தொலைவில் ஒரு கனவைப் போல நிலை கொண்டிருக்கிறது.

MGR-0016

ஆரியக் குறியீடான பார்ப்பனர்களின் கைகளில் இருந்து போராடிப் பெறப்பட்ட சமூக நீதியை இன்று பார்ப்பனரல்லாத எல்லாத் தரப்பு மக்களும் தங்களுக்கான அடையாளமாய்ப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், ஆயினும், கடைநிலையில் உடல் உழைப்பையும், தங்கள் விலை நிலங்களையும் மட்டுமே சார்ந்து வாழ்கிற ஒடுக்கப்பட்ட மனிதனை அவனது தளைகளில் இருந்து விடுவிக்கும் பணியை எந்தத் தமிழ்த் தேசியவாதியும் ஏற்றுக் கொள்வதாகவோ, குறைந்த பட்சம் ஒப்புக் கொள்வதாகவோ இல்லை.

மொழிச் செறிவான குடும்ப அமைப்பும், தெளிந்த ஆய்வு நோக்கிலான வரலாற்று வழிக் கல்வியும், சரியான பகிர்வுத் தன்மை கொண்ட பொருளாதார அறிவும், சாதிய மனக்கட்டிலிருந்து விடைபெறும் துணிவும் கொண்ட ஒரு பெரும்பான்மை சமூகத்தை உருவாக்கும் அடிப்படைப் பணிகளைத் தமிழ்த் தேசியவாதிகள் செய்வார்களேயானால் அது ஒரு நெடும் பயணத்திற்கான மிகச் சரியான திட்டமிடுதலாக இருக்கக் கூடும். அதே வேளையில் திராவிடம் என்கிற கருத்தாக்கம் நமக்கு வழங்கிய பயன்களையும், வரலாற்றுப் படிப்பினைகளையும் புரிந்து கொள்வது மட்டுமன்றி, பன்னெடுங்காலமாக ஒரே மாதிரியான கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டு இயங்கும் நிலவியல் சார்ந்த குழுக்களை ஒன்றிணைக்கும் பணியையும் நாம் செய்தாக வேண்டும், திராவிடத்தின் கீழாக அடைபட்டிருக்கும் பண்பாடு மற்றும் சமூக அறிவியல் சார்ந்த கூறுகளைப் புறந்தள்ளி ஒரு தீவிரமான தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுவது என்பது வெறுப்பினால் கட்டமைக்கப்படுகிற குழப்ப அரசியல் தவிர வேறொன்றுமில்லை.

திராவிட அரசியல் தான் தமிழ்த் தேசிய அரசியலின் தாய், அதுவே ஒரு மிகப்பெரிய குறியீட்டு விலங்கில் இருந்து தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுத்தது, தமிழை அறிவியலுக்குத் தகுதியானதாய் மாற்ற எழுத்தைச் சீரமைத்தது, வட இந்தியாவில் மட்டுமே அறியப்பட்ட அம்பேத்கர் என்கிற அறிவுலக ஆசான் முதற்கொண்டு இன்னும் பல ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழிகளை திராவிடமே நமக்கு அறிமுகம் செய்தது, மொழிமாற்றம் செய்து தந்தது.கல்வியும், பொருளும் எல்லா மனிதனுக்கும் பொதுவானது என்றும், மானமும் அறிவுமே மனிதர்க்கு அழகு என்றும் உணரச் செய்தது.

article-2120782-12583E28000005DC-831_634x443

புற்றீசல்கள் போலத் தோற்றம் கண்டிருக்கும் பல்வேறு தமிழ்த்தேசியச் சிந்தனைகளின் மையம் திராவிடம் என்கிற வெற்றி பெற்ற கருத்தாக்கத்தை உடைக்கச் செய்யும் எதிரிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது, திராவிடக் குறியீட்டு அரசியலை முற்றிலுமாகப் புறந்தள்ளி நம்மால் இப்பரந்த புவிப்பரப்பில் ஒரு தேசத்தைக் கட்டமைப்பது பெரியாரைக் கன்னடர் என்கிற ஒற்றை வரி விமர்சனத்தில் நிறுத்தித் தடை செய்வதைப் போல ஆபத்து நிறைந்த விளையாட்டு. திராவிடத்தால் விளைந்த நன்மைகளை உள்ளடக்கி, அதன் பின்னடைவுகளைச் சீர் செய்து அந்த வெற்றி பெற்ற கருத்தாக்கத்தின் வழியே பயணித்து தமிழ்த் தேசியம் என்கிற முன்மாதிரித் தேசியத்தைப் படைக்கப் புறப்படும் யாவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள், அந்த வெற்றி மனித குலத்தின் வரலாற்றை மாற்றி அமைக்கும் மாசற்ற அறத்தின் வெற்றியாகட்டும்.

************

Advertisements

Responses

  1. தங்கள் கருத்து மிக சரியானது.

    • AANALUM TZHAMIL THESIYAM ONTRU IRUPPATHUI UNMAITHANE?

  2. pilaiyana , tamizharkalin varalarukalai marukira seithikalai ulladakiya unmaikalai maraikka india , thiravida thesiyathai kakkum nokudan yeluthapatta katturai .. tamizhan izhithavayanaka irukum varai itu pontra kusumparkalin katuraikal varathan seiyum

  3. tamil dhesiyam na enna athu enga irunthu epadi vaarkappattathu nu purithal


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: