கை.அறிவழகன் எழுதியவை | மே 18, 2012

அப்போது போர் முடிவுக்கு வந்திருக்கும்…..…….

PIC 1 கடந்த ஆண்டின் ஒரு அற்புதமான மாலைப் பொழுதில் சோமேஷ்வர் கடற்கரையின் விளிம்பில் நுரைத்துப் பொங்கும் அலை அவ்வப்போது கால்களை நனைக்க நானும் கொஞ்சம் தொலைவில் குழந்தையும் நின்று கொண்டிருந்தோம், அலைகள் அதிகம் இல்லாமல் நீர்ப்பரப்பில் தங்க நிறத்தில் மின்னிய சூரியக் கதிர்களை வியந்தபடி நாங்கள் நின்றிருந்த போது தொலைவில் மிக உயரமாய் எழும்பியபடி ஆர்ப்பரித்து வரும் பெரிய அலை ஒன்றை நான் பார்த்தேன்.

ஏறத்தாழ கண்ணுக்கு எட்டாத தொலைவில் ஒரு நகரும் திட்டைப் போல கரையை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த அலை என்னைக் கலக்கமுற வைக்கிறது, நான் ஓடிச் சென்று அருகில் விளையாடிக் கொண்டிந்த குழந்தையை தூக்கி மடியில் பொருத்தி கடல் நீரின் விளிம்பில் இருந்து வெகு தொலைவு சென்று விட்டேன், அந்த அலை கொஞ்சமாய் வலுவிழந்து எல்லா அலைகளையும் போலவே சில சங்குகளைக் கரையில் தள்ளியும், சில குப்பைகளை உள்ளிழுத்துமாய் ஓய்ந்து போனது, ஆனாலும் நான் என்கிற இந்த மனிதனின் உள்ளுணர்வு எங்கே அந்த அலை கரைகளை ஆட்கொண்டு என் குழந்தையிடம் வந்து விடுமோ என்று நான் அஞ்சினேன், எனக்குள் இருக்கிற ஆதி மனிதனின் எச்சமாய் இருக்கிறது அந்த அச்சம், என் குழந்தை என்றில்லை, அவ்விடத்தில் எந்தக் குழந்தை நின்று கொண்டிருந்தாலும் நான் அதையே செய்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

2009 ஆம் ஆண்டு இதே மாதத்தில் ஒரு பங்கரில் இருந்து எட்டிப் பார்த்தபடி "குண்டடி பட்ட தனது தாயின் மடியில் இருந்து தலை தூக்கி வெளியே நிற்கும் தனது தந்தையை ஒரு குழந்தை "அப்பா, இங்க வந்துருங்க, இங்க வந்துருங்க" என்று இடை விடாது கூக்குரலிடுகிறது, அந்தத் தந்தை போரின் பெயரால் சில மனித மிருகங்கள் வானில் இருந்து வீசி எறியும் கொத்துக் குண்டுகளைப் படம் பிடிப்பதில் மும்முரமாய் இருக்கிறார், அந்தக் குழந்தையின் முகத்தில் வழியும் வேதனையும், சொற்களில் அடங்காத வலியும் என் குழந்தையின் வலியைப் போலவே இருந்தது, அதன் சின்னஞ்சிறு இதழ்களில் புரண்டு வீழும் சொற்கள் என் குழந்தையின் மழலைச் சொற்களைப் போலவே இருந்தது, ஆனாலும் அந்தக் காட்சிகளைக் கண்ணில் நீர் வழியப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே இருக்கவில்லை.

தெருவில் பதாகைகளை ஏந்தியபடி அரசுகளிடம் கதறியும், தொண்டை வெடிக்க முழக்கமிட்டபடியும் சாலைகளை மறித்தோம், நெடுஞ்சாலையில் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டோம், எனக்கு மிக அருகில் ராசன் ஐயா என்கிற வயது முதிர்ந்த அந்த மனிதரை இந்திய தேசியத்தின் இரக்கமற்ற காவலர்கள் குருதி சொட்ட அடித்தார்கள், வலி வலி என்று கதறும் முதியவர்களில் இருந்து அவர் வேறுபட்டவராய் இருந்தார், "இந்திய அரசே போரை நிறுத்து, போரை நிறுத்து" என்று விடாது முழங்கிக் கொண்டே இருந்தார். ஆனாலும் எங்கள் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, நாங்கள் கொல்லப்பட மாட்டோம் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும், முன்னதாக பங்கருக்கில் இருந்து கூக்குரலிட்ட அந்தக் குடும்பத்தில், குழந்தை உட்பட யாரும் பிழைத்திருக்கவில்லை, அவர்கள் கேட்பதற்கும், புதைப்பதற்கும் கூட நாதியற்று புல்டோசர்களினால் குழிகளில் போட்டு மறைக்கப்பட்டார்கள்.

PIC 3எனது செவிப்பறைகளில் நிரந்தரமாய் ஒரு ஓலம் தங்கி இருக்கிறது, அது தாய்ப்பறவையை இழந்த ஒரு குருவிக் குஞ்சின் சன்னமான நெடிய அழுகுரல் போலிருக்கிறது, உயர்ந்த மலைச் சிகரங்களில், ஆழக் கடலின் அமானுஷ்ய அமைதியில், ஆட்களற்ற ஆற்றங்கரைகளில், நகரத்துக்கு அப்பால் வெகு தொலைவில் மலர்கள் சூழ்ந்த ஒரு கிராமத்தில், என் மொழியின் சுவடுகள் இல்லாத இன்னொரு சந்தடி மிகுந்த நகரத்தில் இன்னும் குழந்தைகளின் விளையாட்டுப் பொம்மைகளைப் போல வீடுகள் காட்சி அளிக்கும் உயரப் பறத்தல்களில் எல்லாமும் இடைவிடாது துரத்தி வந்து என் செவிப்பறைகளில் கேட்கும் அந்த அழுகுரலைக் கடக்கும் மனவலிமை கிடைக்கவே இல்லை இந்த மூன்று ஆண்டுகளில்.

அங்கே மரங்கள் இருந்தன, மரத்தடியில் களைத்து உறங்கிக் கிடக்கும் சனங்கள் இருந்தார்கள், உச்சிக் கிளைகளில் சில பறவைகளும், அதன் கூடுகளும் இருந்தன, இன்னும் அங்கே அழியாத குழந்தைகளின் மிதிவண்டித் தடங்கள், அவர்கள் வளர்த்த நாய்க்குட்டிகள், வளர்க்க ஆட்கள் இன்றி தெருவில் விடப்பட்ட மாடுகள், அவற்றின் "அம்மாமாஆஆ" என்கிற அடிவயிற்றைப் பிசையும் அழுகுரல் என்று துயரம் தெருவெங்கும் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கிறது. சிலர் ஏகாதிபத்தியங்களின் கூட்டுப் போர் இது என்று சொல்கிறார்கள், இன்னும் சிலரோ முதலீட்டியத்தின் கொடும் விளைவுகளில் இதுவும் ஒன்று என்று சொல்கிறார்கள், சிலர் இரண்டு இனங்களுக்கிடையே நிகழ்ந்த ஆளுமைப் போர் இது என்றும், எளிய மக்களின் வாழ்க்கை பணயம் வைக்கப்பட்ட ஒரு விடுதலைப் போர் என்று இன்னும் சிலரும், ஒரு தனி மனிதனின் மரணத்துக்குப் பழி தீர்க்கும் இன்னொரு பெண்மணியின் போர் என்றும் போரைக் கோட்பாடுகளில் அடைத்து வரலாற்று வெளியின் இடைவெளிகளை நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

கொஞ்ச நாளைக்கு முன்பு அம்மாவிடம் அழுது பிடித்து அகிலன் என்கிற சுள்ளான் வாங்கிய குட்டி மிதிவண்டியின் அருகிலேயே தலை உடைபட்டு, நசுங்கிச் செத்துப் போன அந்தக் குழந்தையின் அழுகுரல் உங்கள் காதுகளில் கேட்கவேயில்லையா தமிழர்களே.

அப்பாவின் மடியிலேயே படுத்து உறங்கிப் பழக்கப்பட்டுப் போன சுகந்தி என்கிற அம்முவின் இறந்து போன உடலை விடாது இரண்டு நாட்களாய் அனைத்துக் கொண்டிருந்த ஒரு தகப்பனின் கண்ணீரை நீங்கள் கடைசி வரைக்கும் கண்டு கொள்ளவே இல்லையே எம் மக்காள்.

ஓலைப்பாயில் வைத்துச் சுருட்டிக் கொடுக்கப்பட்ட தனது தாயின் முலைகளை பாலுக்காய் முட்டியபடி அழுது தவித்துப் பின் மரித்துப் போன மஞ்சு என்கிற பட்டுவின் பிஞ்சு விரல்களை ஆட்படுத்திக் கொள்ள அந்தக் கொடுந்தினத்தில் யாருமே இல்லையே என் தமிழ்க் குலமே,

தம்பியின் கைகளைப் பிடித்தபடி தப்பிக்க ஓடியபோது விழுந்த குண்டில் கால்கள் இரண்டும் துண்டித்துக் கிடக்க தம்பியின் கைகளை விடாது பற்றிக் கொண்டிருந்த திருநம்பியின் வலியில் நமது வாழ்க்கையின் வலி முழுதும் கரைந்து போகுமே என் அருமை மூத்த குடியே,

அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, மாமா, மச்சான், அம்மம்மா, அப்பப்பா என்று அலறித் தவித்தபடி எந்தக் காரணமும் இல்லாமல் இறந்து போன எமது மக்களைக் காக்க மறந்து நாம் எப்படித்தான் வீழ்ந்து கிடந்தோம் எனதருமை மாணவர்களே,

PIC 2 புகை மண்டிய ஒரு காலைப் பொழுதில் அந்த வீடு அன்பின் அடையாளமாய் நின்றிருந்தது, நிரஞ்சன் என்கிற தனது சித்தப்பாவின் கால்களில் கிள்ளி விட்டு அம்மாவின் சேலைக்குள் சென்று ஒளிந்து கொண்டு மடை திறந்த வெள்ளமாய்ச் சிரிக்கும் தயா என்கிற அந்தக் குட்டிப் பையனை விரட்டி அவனது காதுகளைத் திருகிப் பின் அவனது இடுப்பைப் பிடித்து ஒரு முறை சுற்றியபடி அவன் கன்னத்தில் முத்தமிடும் சித்தப்பாவின் பிணத்தருகே தனியாகக் கிடந்த தயாவின் தலையை நீங்கள் என்றாவது ஒருநாள் பார்க்கத்தான் வேண்டும் தமிழர்களே, பட்டுப்போன அந்தத் தலையின் பக்கவாட்டில் இருந்த கன்னங்களில் முத்தங்களின் ஈரம் உலர்ந்து ஒட்டிப் போயிருக்கிறது, நமது இதயச் சுவர்கள் மட்டும் தான் தமிழர்களே ஈரத்தின் சுவடுகளே இல்லாமல் வறண்டு தகிக்கிறது.

நீண்ட நாளைக்கு முன்னொரு மாலைப் பொழுதில் "மாமாகிட்ட கதைக்க வேணுமாம்" என்று சொல்லி அவளுடைய பிஞ்சுக் கரங்களில் கொடுக்கப்படும் அலைபேசியில் இருந்து வழிந்தோடும் "மாஆமா…………, நீங்க எங்க வீட்டுக்கு எப்ப வருவீங்க" என்று கேட்ட அந்த முகம் தெரியாத வன்னிக் காட்டுக் குழந்தையின் மழலைக் குரல் என்னுடைய படுக்கையெங்கும் நிறைந்து கிடக்கிறது, உறக்கம் வரும் போதும் சரி, விழிப்பு வரும் போதும் சரி பின்னொரு நாளில் சிதைந்து சடலமாய்க் கண்ணில் விழுந்த அந்தப் பிஞ்சு உயிரின் பிம்பமாய் உலகம் காட்சி அளிக்கிறது. அந்தக் கொடிய நினைவுகள் அழிக்க இயலாத பெருஞ்சித்திரமாய் இந்த  உயிரில்  ஒட்டிக் கிடக்கிறது, வலிமையான, மன உறுதி கொண்ட மனிதனாக இருந்த எனது முந்தைய வாழ்க்கையை அந்தச் சித்திரம் மாற்றி மெல்லிய  ஓசைகளை

இரவில் கேட்டாலே திடுக்கிட்டு எழச் செய்யும் ஒரு மனவலிமை அற்ற மனிதனாக என்னை மாற்றி இருக்கிறது.

சில பக்கங்களை எழுதி முடித்து ஒரு படைப்பை நிறைவு செய்ய முயலும் போதெல்லாம் பங்கருக்குள் கிடந்து "அப்பா, இங்க வந்துருங்க, அப்பா இங்க வந்துருங்க" என்று கதறி அழுகிற அந்த என் தமிழ்க் குழந்தையின் குரல் காற்றில் ஒரு அனாதையின் குரலைப் போலப் பெருகி மனமெங்கும் நிரம்பி படைப்புகளையும், இலக்கியங்களையும் கேலி செய்கிறது. ஆனாலும் இந்தத் தமிழ் கூறும் நல்லுலகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது, எந்தக் குற்ற உணர்வும், சமூகக் கடமையும் இல்லாது எங்கள் எழுத்தாளர்களின் பேனா முனைகள் இயங்கிக் கொண்டே இருக்கின்றன, நாற்பதாயிரத்துக்கும் அதிகமான எமது தமிழ்ச் சொந்தங்கள் அழிந்த இந்த நாளில் கூட எமது மக்கள் சொல்லத் தயங்கிய எத்தனையோ உண்மைகளை, எமது பெண்கள் விழுங்கித் தீர்த்த பாலியல் வன்முறைகளை இல்லை என்று நிறுவுவதற்கும், உலக இலக்கியவாதிகளின் வெள்ளை முடிகளைப் பிடுங்கவுமாய்

எங்கள் எழுத்தாளர்களின் பேனா முனைகள் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றன, எங்கள் அழுகுரலைத் தேடித் பயணம் செய்ய நாங்கள் எப்போதும் சில வெள்ளை மனிதர்களைத் தான் தேட வேண்டியிருந்தது, நடிகர்கள் காலைக் கடன் கழிப்பது, நடிகைகள் முதலிரவை நேரடி ஒளிபரப்பு செய்வது மாதிரியான மிக முக்கியமான பணிகளில் எமது காட்சி ஊடகங்களை மூழ்கி இருக்க எமது மக்களின் சிதைந்த உறுப்புகளைக் கருப்பு வெள்ளையில் பிரதி எடுத்து வீதிகளில் கொடுக்க சில இளைஞர்களே இருந்தார்கள். இருக்கிறார்கள்.

PIC 4 இவை யாவும் பற்றித் துளியேனும் அக்கறையின்றி எமது மக்கள் இலங்கைத் தீவுக்குள் இன்னமும் அடிமைகளைப் போல, பிச்சைக் காரர்களைப் போல முகாம்களில் கிடத்தப்பட்டிருக்கிறார்கள், இந்தியாவில் இருந்து செல்லும் பறவைகளிடமும், ஜெனீவாவில் இருந்து வரும் ஓக் மரங்களிடமும் கூட அவர்கள் ஓடோடிச் சென்று தங்கள் காணாமல் போன குழந்தைகளைக் குறித்தோ, தங்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தோ புகார் சொல்கிறார்கள், மனுக் கொடுக்கிறார்கள், தங்கள் தேசியக் கனவை மட்டுமல்ல, வாழும் உரிமையையும் கூடத் தாங்கள் இழந்து விட்டதாக அவர்கள் வெற்றுடலைத் தூக்கிக் கொண்டு அலையும் மனித அவலங்களாக மாறிப் போயிருக்கிறார்கள்.

இந்த நாளில் நமக்குத் தேவையாய் இருப்பது விடுதலை முழக்கங்களும், அரசியல் வணிகக் கோஷங்களும் அல்ல, இன்னும் பங்கர்களின் ஓசைகளிலேயே வாழும் எமது குழந்தைகளின் கைகளை மெல்லப் பற்றி அவர்களின் கண்களில் கொஞ்சம் நம்பிக்கையை விதைக்கும் அளப்பரிய பணி நமக்கு முன்னே இருக்கிறது, ஈழத்தின் பெயரில் அரசியல், ஈழத்தின் பெயரில் கனவுத் தூண்களோ, நினைவுத் தூண்களோ எழுப்ப நன்கொடை, துரும்பையும் அசைக்காத வரட்டுக் கூச்சலிடும் தமிழ் தேசியக் குஞ்சுகள், எஞ்சி இருக்கிற குழந்தைகளையாவது இந்த கல் தோன்றி, மண் தோன்றி, மயிர் தோன்றி என்று புராணம் பேசுகிற இயக்கங்கள் காக்கத் தலைப்படுமா என்று தெரியவில்லை.

போரின் கொடுங்கரங்களில் இருந்து தப்பிப் பிழைத்திருக்கும் எமது குழந்தைகளின் அச்சம் போக்கி, அவர்களின் கல்வி மற்றும் சமூகத் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு வலிமையான அமைப்பைக் கட்டமைப்பதும், அந்த அமைப்பின் மூலமாகத் திரட்டப்படும் பொருளை அரசுகளின் முட்டுக் கொடுத்தலோடு அவர்களிடம் கொண்டு சேர்க்கிற பணியை ஈழத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் எந்தத் தமிழக அரசியல் கட்சியும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. ஈழ மக்களின் வலியும், வாழ்க்கையும் இங்கிருக்கிற பெரும்பாலான அரசியல், இலக்கிய வணிகர்களின் புகழ் மற்றும் பொருள் வாழ்க்கை அடையாளப்படுத்தலை நோக்கியே இயங்குகிறது. இந்த அடையாளங்களைத் தாண்டி சமூகப் பொருளாதார வழியாக அவர்களுக்கு உதவும் அரசியல் வழிமுறைகள் குறித்து மிகத் தீவிரமாக நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

இந்த நாள் வாழ்க்கை என்பதற்கான முழுமையான பொருளை எனக்கு உணர்த்திய நாள், வாழ்க்கை மிக அழகானதென்றும், அற்புதமானதென்றும் முதலீட்டிய ஊடகங்கள் கூவிக் கூவி எளிய மனிதர்களையும், அவர்களின் உழைப்பையும் தங்களின் சந்தை வணிகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கொண்டிருக்கும் இந்த அழுகி நாற்றமெடுக்கும் சமூகத்தில் இந்த நாளே உண்மையான உலகின் மனசாட்சியை எனக்குக் காட்டியது, இந்த நாளில் உலகம் அதன் வேறு திசைகளில் வழக்கம் போலவே இயங்கிக் கொண்டிருந்தது, ஒரே நாளில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காவு கொண்டு மிகப் பெரிய குழிகளில் போட்டு மூடி விட்டு அந்த நிலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதாகச் சொல்லும் அரசுகள், அவற்றின் பின்னே ஒளிந்திருக்கும் அதிகாரக் கனவுகள் என்று உண்மைகளை உரக்கச் சொல்லிய இந்த நாளில் தான் தமிழர்களின் உண்மையான அரசியல் தோற்றம் பெறுகிறது.

PIC 4 இந்த நாளும் ஒரு  IPL  போட்டியோடு  பல தமிழர்களுக்கு முடிந்து போகலாம், ஆனால் என்னுடைய பாதையெங்கும் பங்கருக்குள் இருந்து ஓலமிட்ட அந்தப் பெயர் தெரியாத குழந்தையின் கூக்குரல் விதைக்கப்படிருக்கிறது, அகிலனின் மிதிவண்டிகள், சுகந்தியின் அப்பாவுடனான உறக்கம், மஞ்சுவின் பிஞ்சு விரல்கள், திருநம்பியின் 

துண்டிக்கப்பட்ட கால்கள் , தயாவின் கள்ளமற்ற புன்னகை என்று எமது மக்களின் புதைந்து போன கனவுகள் எனது படுக்கை எங்கும் நிரம்பிக் கிடக்கிறது, உடல் என்கிற கூட்டுக்குள் அடைந்து கிடக்கிற உயிர் வாழ்க்கை என்கிற எனது இயக்கம் அந்த மக்களின் அழுகுரலை ஆற்றுப்படுத்தவே முடியாத குற்ற உணர்வோடு கூடவே ஒருநாள் நின்று போகலாம், ஆனாலும் எனது 

கல்லறைகளின் வழியாகப் பயணிக்கும் காற்று ஒருநாள் நீதி கிடைத்த செய்தியை என் காதுகளில் உரக்கச் சொல்லும். அப்போது பங்கருக்குள் இருந்து ஓலமிட்ட அந்தக் குழந்தையின் அழுகுரல் என் செவிப்பறைச் சுவர்களில் இருந்து நிரந்தரமாய் நின்றிருக்கும். வெறுப்பின் அரசியலும், அழுகுரலும் இல்லாத ஒரு புதிய புவிப்பந்தின் மரக்கிளைகளின் கீழே எங்கள் மழலைகள் மகிழ்ந்திருக்க அதன் உச்சிக் கிளைகளில் ஒரு பறவை கூடு கட்டத் துவங்கும்………………அப்போது போர் நிரந்தரமாய் முடிவுக்கு வந்திருக்கும்………….

********

Advertisements

Responses

  1. 3 ஆணடுக்ள் கடந்த பின்பும் வாசிக்கிற போதே கனக்கிறது மனசு. கொடுந்துயர்களின் சில துளிகளிலேயே இதயம் சிலவையாகிப் போகிறது. எப்படி தாங்குவர் என்னினம்? ஒவ்வொரு மனச்சாட்சிகளையும் கேள்வி கேட்கிற தங்களின் எழுத்துக்களுக்கு ஈழவிடுதலை என்ற ஒன்றே நியாயமான பதிலாக இருக்க முடியும்.

  2. உங்களின் இந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. பார்க்கவும்–>http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_28.html நன்றி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: