கை.அறிவழகன் எழுதியவை | மே 23, 2012

ஆத்தா நான் பாசாயிட்டேன்….

29042-appreciation-of-creative-design

பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது எங்களோடு முத்துச்சாமி என்றொரு மாணவன் படித்தான், வகுப்பில் முதல் மாணவன், எல்லா ஆசிரியர்களுக்கும் பிடித்தமான செல்லப் பிள்ளையாக வலம் வரும் முத்துச்சாமியைப் பார்த்தால் எங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும்,

அவனுடைய நடை உடை பாவனைகளில் எல்லாம் ஒருவிதமான உயர்தனிச் செம்மை இருப்பதாகவும், அவனைப் போல மாணவர்கள் இந்தப் பள்ளிக்குக் கிடைத்த அரிய பரிசென்றும் ஆசிரியர்கள் அள்ளி விடுவார்கள்,

"அவன் மூத்………குடித்தாலும் உனக்கெல்லாம் அறிவு வராது" மாதிரியான சொற்களை உதிர்க்கும் முட்டாள் ஆசிரியர்கள் கூட எங்கள் வகுப்பறைகளில் உண்டு, முத்துச்சாமி அறிவு என்று சொல்லப்படும் உள்ளீடுகள் எல்லாவற்றிலும் சராசரி மாணவர்களை விடவும் மிகக் கீழ் நிலையில் இருந்தான்,

அவனுடைய பொது அறிவு, அரசியல் அறிவு, விளையாட்டு அறிவு, ஏன் அறிவியல் அறிவே கூட மிகத் தாழ்ந்த நிலையில் தான் இருந்தது, அவன் எந்தவொரு ஒருங்கிணைவு நிகழ்வுகளிலும் பங்கு கொள்வதில்லை, குழு விளையாட்டுக்களில் இருந்தும் கூட ஆசிரியர்கள் அவனுக்கு விலக்கு அளித்திருந்தார்கள்.

கலை, இலக்கியம் போன்ற துறை சார்ந்த ஈடுபாடுகள் யாவும் இல்லாத மனப்பாட இயந்திரமாக இருந்த அவனது கல்வியை ஆசிரிய சமூகம் ஆகா, ஓகோ என்றெல்லாம் புகழ்ந்து உச்சி முகர்ந்து கொண்டிருந்தார்கள், வயது முதிர்ந்த ஆசிரியர் ஒருவரை முரட்டு மாணவர்கள் இருவர் கிண்டல் செய்து அவரை உளவியல் ரீதியாகக் காயம் செய்து சிரித்துக் கொண்டிருக்கையில் கடைசி இருக்கைகளில் அமர்ந்திருந்த முட்டாள் என்றும், எதற்கும் பயனற்றவன் என்றும் ஆசிரியர்களால் சொல்லப்பட்ட பெரியசாமி தான் துணிந்து அவர்கள் இருவரையும் மிரட்டி அமைதியாக இருக்கச் செய்தான்.

தலைமை ஆசிரியர் விசாரணை செய்த போதும் கூட உண்மையை உரக்கச் சொல்வதற்கு முத்துச்சாமியோ அவனது புனித மூத்திரமோ தயாராக இல்லை. தேர்வுகள் முடிந்து முடிவுகள் வந்த அந்த மாலையில் முத்துச்சாமிக்கு "கட் அவுட்" வைக்காத குறையாக அவனது மதிப்பெண்கள் இருந்தன, நானூற்று எண்பது மதிப்பெண்கள் பெற்று முத்துச்சாமி மாவட்டத்தில் இரண்டாமிடமோ என்னவோ வாங்கி இருந்தான்,

அதன் பிறகு முத்துச்சாமி எங்கள் கண்களில் இருந்து மறைந்து போனான், வேறு ஏதோ ஒரு சிறந்த பள்ளியில் சேர்ந்து படிக்கப் போகிறேன் என்று சொல்லி விடை பெற்ற முத்துச்சாமியை பிறகு சந்திக்கவே முடியவில்லை.

30344-positivo-education-software-creative-wallpaper

முத்துச்சாமி வாழ்க்கையில் மிகப் பெரிய இலக்குகளை எல்லாம் அடையப் போகிறான், அவன் விஞ்ஞானி ஆகி விடுவான், எரோப்லேன் ஒட்டுவான் என்றெல்லாம் ஆசிரியர்கள் அடுத்த வகுப்புகளில் கதை சொல்லத் துவங்கி இருந்தார்கள், நீண்ட காலங்கள் கழித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை ஊருக்குச் சென்ற போது முத்துச்சாமியை நான் சந்தித்தேன்,

மிதிவண்டியை இடுப்பில் சாய்த்தபடி இன்னொரு பள்ளி நண்பனிடம் பேசிக் கொண்டிருந்த முத்துச்சாமியின் கைகளில் புகை கசிந்து கொண்டிருந்தது. நீண்ட குழப்பத்தில் அடையாளங்களை உறுதி செய்து அருகில் சென்று முத்துச்சாமியிடம் நலம் விசாரித்தேன், பிறகு கேட்டே ஆக வேண்டும் என்று மனதுக்குள் இருந்த அந்தக் கேள்வியை அவனிடம் கேட்டேன், "முத்துச்சாமி நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?", இங்கே பக்கத்தில் ஒரு மின்கருவிகள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்கிறேன் என்று முத்துச்சாமி சொன்னபோது எனக்குப் பகீரென்றது.

முத்துச்சாமியை ஏறத்தாழ ஒரு ஏரிக்கரை ஐயனார் ரேஞ்சுக்கு வழிபட்டு, அவனை மனப்பாடக் கல்வியில் புதைத்து சமூக அறிவையோ, அரசியல் அறிவையோ, மொழி அறிவையோ அறவே வழங்க மறுத்த நமது கல்வி முறையும் அதனைக் கற்பிக்கும் ஆசிரிய சமூகமும் தான் எத்தனை ஆபத்தானதாக இருக்கிறது. (விதிவிலக்கான ஐம்பது விழுக்காட்டு ஆசிரியர்கள் மன்னிக்கவும்).

நேற்று தமிழகத்தில் வெளியான பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள் குறித்து செய்தி எழுதும் அல்லது ஒளிபரப்பும் ஊடகங்கள் அத்தகைய ஆசிரியர்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத ஆபத்து நிரம்பியவர்கள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

அவர் இதிலே முதலிடம், இவர் அதிலே முதலிடம், இவர் வாயிற்று வலியோடு எழுதினார், இவர் இரண்டு கால்கள் இல்லாமல் வாயால் எழுதினார், இவர் அப்பா மிதிவண்டி ஓட்டுகிறார், இவர் சாப்பிடாமல் பட்டினியைக் கிடந்தது எழுதினார் என்று அதிக மதிப்பெண் பெரும் மாணவ மாணவியரை ஒரு வழிபாட்டு நிலைக்குச் கொண்டு செல்வது மட்டுமன்றி இதனை ஒரு உளவியல் சிக்கல் மிகுந்த நாளாக ஊடகங்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்கள் தேர்வு எழுதுவது என்பதே இந்திய மனப்பாடக் கல்வி முறையில் மிகப் பெரிய உளவியல் நெருக்கடி, இதில் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறேன் பேர்வழி என்று நமது அச்சு ஊடகங்கள் நிலை நிறுத்தும் பிம்பங்கள் நேர்மறையாக இந்தச் சமூகத்திற்கு ஆற்றும் பணிகளை விட எதிர்மறை விளைவுகளே அதிகம். தேர்வு முறை அல்லது மதிப்பெண் குறியீடுகளை அடைவது என்பது மாணவப் பருவத்தில் நிகழும் ஒரு இயல்பான நடைமுறை,

அதில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை அவர்கள் அதிகச் சலனம் இல்லாமல் திருத்திக் கொள்ளவும், அடுத்த முயற்சி செய்யவும் நாம் அவர்களுக்கு வழி கொடுக்க வேண்டும், கடந்த சில ஆண்டுகளில் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கும் நிகழ்வுகளில் இந்தப் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பெறுகின்றன.

30298-positivo-creative-wallpaper-digital-education

பல்வேறு நாடுகளில், ஏன் இந்தியாவிலேயே கூட மதிப்பெண்களால் அடையாளம் செய்யப்படாத, குறியீடுகளால் அடையாளம் செய்யப்படுகிற தர வரிசையை மட்டுமே தேர்வு முடிவாக வைத்திருக்கிறார்கள், ஒரு மதிப்பெண்ணால் மன அழுத்த நோய்க்கு ஆளாகிப் போகும் எத்தனையோ குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன்,

மனப்பாடம் செய்கிற திறன் குறைவாக இருக்கிற மாணவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்கிற மிகப்பெரிய உளவியல் நெருக்கடியை நமது குழந்தைகளுக்கு நீண்ட காலமாய் நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

காலனி ஆதிக்க அடிமைகளுக்கான கல்வி முறையை உருவாக்கிய மெக்காலேவின் உதவியாளர்களை இந்தியக் கல்வி முறையின் உயர் கல்விக் கூடங்களும் இன்னும் கடைபிடித்துக் கொண்டிருப்பதே ஒரு மிகப் பெரிய சிக்கல். அந்த மாணவி முதலிடம் பெற்று சக மாணவிகளால் அல்லது மாணவர்களால் தூக்கிப் பிடிக்கப்படும் போது நிகழ்கிற மிகப்பெரிய மன அழுத்தத்துடனே ஒவ்வொரு மாணவரும் வீடு திரும்புகிறார்கள்.

ஊரகப் பகுதிகளில் மிகப் பெரிய அளவில் இத்தகைய சூழல் இல்லை என்றாலும் கூட மதிப்பெண்கள் குறித்த பல்வேறு உளவியல் நெருக்கடிகளோடு வாழும் மாணவர்களை நகர்ப்புறங்களில் வழியெங்கும் நாம் சந்தித்துக் கொண்டே வருகிறோம், பள்ளிகளிலும், வகுப்பறைகளிலும் உண்டாக்கப்படும் உளவியல் நெருக்கடிகள் தவிர்த்து இப்போது ஊடகங்களில் உருவாக்கப்படும் நெருக்கடி ஒரு புதிய சிக்கலாக உருவெடுக்கிறது,

ஒரு மாணவனின் மனப்பாடத் திறனை (அதாவது இந்தியாவில் கல்வித் திறன்) அவனைச் சுற்றி இருக்கும் பல்வேறு வாழ்க்கைச் சூழல்கள் முடிவு செய்கின்றன, அவனது பொருளாதார நிலை, அவனது சமூக நிலை, அவனது குடும்பச் சூழல் இவற்றை எல்லாம் கடந்து ஒரு மாணவன் நிர்ணயம் செய்யப்படுகிற மதிப்பெண்களைப் பெரும் சவால் என்பது ஏறத்தாழ முதலாளித்துவ உலகின் குதிரை பேரம்.

அதிக மதிப்பெண் பெறுகிற குதிரைகள் உடனடியாகக் கல்லூரிகளில் இருந்தே வேலைக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள், அதாவது சிறந்த அடிமைகளை அவர்கள் தேர்வு செய்து தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்கிறார்கள்.

"படிச்சா அந்தப் புள்ளை மாதிரிப் படிக்கனும்டா, பாரு பேப்பர்ல பேரு, பேட்டி, நீயும் தான் இருக்கியே" தேர்வு முடிவுகள் வெளியாகும் கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கும் பெற்றோர்களின் இந்தக் குரலை ஒரு நாளேனும் நீங்களும் கேட்டிருப்பீர்கள்,இந்தக் குரல் தான் எத்தனை குரூரமானது, அறிவீனம் நிறைந்தது என்பதை நீங்கள் என்றாவது அறிந்திருக்கிறீர்களா?

Education_Wallpapers

மதிப்பெண்களும், மனப்பாட அறிவும் மட்டுமே ஒரு மனிதனின் இருப்பை முடிவு செய்வதில்லை நண்பர்களே, ஒவ்வொரு தனி மனிதனும் பல்வேறு சூழல்களில், பல்வேறு சிந்தனைத் தாக்கங்களோடு வளர்க்கப்படுகிறான், ஒவ்வொரு தனி மனிதனின் சொற்களும் செயலும் வெவ்வேறு இலக்குகளை நோக்கிப் பயணம் செய்கின்றன,

வேறு எல்லா விதமான வழிகளையும் அடைத்து மதிப்பெண்களை மட்டுமே இலக்கு வைத்து ஓடும் இயந்திரக் குதிரைகளாக நாம் நமது மாணவர்களை ஓடச் சொல்கிறோம், அதற்கு ஊடகங்களும், அரச நிறுவனங்களும் துணை நிற்பது குற்றம், இந்தக் குற்றத்திலிருந்து நாம் விடுபட்டே ஆகவேண்டி இருக்கிறது.

மதிப்பெண்களால் அடையாளம் செய்யப்படுகிற முத்துச்சாமிகளை விடவும், அவர்களின் மனப்பாடக் கல்வி அறிவை விடவும், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவர்களை வகுப்பறையில் தட்டிக் கேட்ட பெரியசாமி என்கிற அந்த மாணவன் மிகச் சிறந்தவன், மதிப்பீடுகள் நிரம்பியவன்,

இந்த சமூகத்தில் நிகழும் ஒழுங்கீனங்களைத் தட்டிக் கேட்கும் மனத்துணிவும், சமூக, அரசியல் உணர்வும் பெரியசாமியிடம் நிறையவே இருந்தது. இன்றைய தமிழ்ச் சூழலில் முத்துச்சாமிகளை விடவும், பெரியசாமிகளே தேவையானவர்கள்.

தமிழ்ச் சமூகம் ஒரு சிக்கலான கால கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது, ஒரே நாளில் எமது குருதியோடும், சதையோடும் ஒட்டிக் கிடந்த குழந்தைகளும், பெண்களும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள், ஏறத்தாழ ஐம்பதாயிரம் மனித உயிர்கள், எந்தச் சுவடுகளும் இன்றிக் கொத்துக் குண்டுகளாலும், வேதியியல் குண்டுகளாலும் ஒரே நாளில் அழித்துத் துடைக்கப்பட்டார்கள்.

அரசியல் அறிவும், சமூக விழிப்புணர்வும், நிகழ்கால வாழ்க்கை குறித்த எந்தச் சிந்தனைகளும் அற்ற முத்துச்சாமிகளை உருவாக்குவதில் பெரிய முத்துச்சாமிகளாகிய நாம் மிகுந்த கவனமாய் இருந்தோம், ஆகவே நம்மிடம் பெரியசாமிகள் இல்லாமல் போனார்கள், இருந்த ஒன்றிரண்டு பெரியசாமிகளும் காட்சி சாலைப் பொருட்களைப் போலப் பார்க்கப்படும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

30321-positivo-creative-wallpaper-computer-company

மதிப்பெண்களால் உருவாக்கப்பட்ட நமது மாணவர்கள், மிக அருகில் அழிந்து கொண்டிருந்த மனித உயிர்கள் குறித்த எந்தத் தாக்கமும் இல்லாதவர்களாக இயந்திரங்களைப் போல வகுப்பறைகளில் அமர்ந்திருந்தார்கள், பள்ளியில் கற்றுத் தரப்படுகிற உயர்தர முதலாளிகளின் அடிமைகளை உருவாக்கும் கல்வியைத் தவிர்த்து நிகழ்கால அரசியலை, சமூக இயக்கத்தை, பொருளாதார ஆற்றல்களை, விடுதலை பெற்ற மனித வாழ்க்கையை நமது குழந்தைகளுக்கு யார் தான் சொல்லிக் கொடுப்பார்களோ தெரியவில்லை.

அப்படியான விழிப்புணர்வை இந்தச் சமூகம் பெறும் நாளில் மதிப்பெண்களைத் தாண்டி மனித அறிவை, அறத்தை அளவிடும் பல்வேறு செய்திகளை நமது ஊடகங்கள் வெளியிடக் கூடும்.கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை மெரீனாக் கடற்கரையில் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நினைவேந்தும் நிகழ்வுக்கு வந்திருந்த மனிதர்களை விடவும், கடற்கரையில் களியாட்டம் போட வந்த மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாய் இருந்ததற்கான மிக முக்கியமான காரணம் நமது கல்வி முறை தான் என்று சொன்னால் நீங்கள் சிரிக்கக் கூடும், ஆனாலும், அதுதான் உண்மை.

சமூக அரசியல் அறிவும், நிகழ்கால அரசியலின் புரிதலும் இல்லாத ஒரு கல்வி முறை மனப்பட இயந்திரங்களையும் முதலாளித்துவ அடிமைகளையும் தொடர்ந்து வெற்றிகரமாக உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. கடந்த காலங்களில் நமது ஊடகங்களும், நாமும் கொண்டாடிய மதிப்பெண்களால் உருவான எரிக்கரை ஐயனார்களில் எத்தனை பேர் இந்தத் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்கும், அதன் மேன்மைக்கும் உழைத்திருக்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுத்துப் பாருங்கள்,

543235_388623824512114_100000935005439_1044800_1658077064_n

ஒன்றிரண்டு விதி விலக்குகளைத் தவிர ஏனையவர்கள் எல்லாம் வெற்றிகரமான முதலாளித்துவ அடிமைகளாய் எந்தச் சமூகப் பங்காற்றல்களும் இல்லாமல் காற்றில் கரைந்த பெருங்காயமாய் மாறிப் போயிருப்பார்கள். மதிப்பெண்களால் அடையாளம் செய்யப்படுகிற கல்விமுறையில் இருந்து எமது குழந்தைகளைக் காப்பாற்றும் மீட்பரை எந்த ஜெருசலேம் பெற்றுக் கொடுக்கும்????

*****************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: