கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 22, 2012

பாதையில் பூத்த மலர்கள் – (பகுதி – 1)

Rural-development-in-India-3

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் மழை காட்டுக்குள் இருந்து தப்பி வந்த பெரிய யானையைப் போல மனிதர்களைத் துரத்திக் கொண்டிருந்தது, சாலைகளை நனைப்பதும், மரங்களை அசைப்பதுமாய் மழை பாலமொன்றில் ஏறிக் கொண்டிருந்தது, சூழல்களை மறந்த சின்னக் குழந்தையைப் போலவே மழை பெருநகரச் சாலைகளில் விளையாடிக் கொண்டிருந்தது.

மழையின் இயக்கம் அதிகரிக்கும் போது மனிதர்களின் இயக்கம் அத்தனை எளிதானதல்ல, இயல்பான வேகத்தில் இயங்க முடியாத மனிதன் மழையில் முடக்கப்பட, சிறகுகள் நனைந்து, இரை தேடித் பறக்க முடியாத பறவைகளைப் போல அடைந்து விடுகிறான். மழையின் போது பொது இடங்களில் மனிதர்கள் வேறுபாடுகளைத் துறந்து விடுகிறார்கள், ஒரு முழு நாளைக்கு மேலான ஒன்று கூடலில் மனிதர்கள் வேறுபாடுகளை அறிந்து கொள்கிறார்கள், அது பழக்கமாகவும், தவிர்க்க முடியாததாகவும் மாற்றப்பட்டு விட்டது, அருகில் இருக்கும் வாய்ப்புகளில் இந்திய மனிதர்கள் ஒரு வார இடைவெளியில் உங்கள் மதம் குறித்தும், ஒரு மாத இடைவெளியில் உங்கள் சாதி குறித்தும் அறிந்து கொள்ள ஆவலோடு இருக்கிறார்கள்.

மழைக்கு இந்த வேறுபாடுகளில் நம்பிக்கை இல்லை, காலம் காலமாக பெய்து கொண்டே இருக்கும் மழை எல்லா மனிதர்களையும் நனைக்கிறது, எல்லா மனிதர்களின் கூரைகளிலும் பாகுபாடின்றி விழுந்து புரள்கிறது, ஒடுக்கப்பட்ட மக்களின் வியர்வைகளைக் கழுவித் தெருக்களின் வழியாக புகுந்து சாதி இந்துக்களின் வீட்டு வழியாகப் பயணித்துக் கண்மாய்களிலும், ஆறுகளிலும், கடலிலும் அனைவருக்கும் பொதுவானதாகவே கிடக்கிறது. ஆயினும் மனிதர்கள் தொடர்ந்து நீருக்குத் தீட்டுக் கழிக்கிறார்கள், மழை யாவற்றையும் உள்வாங்கியபடி தன் போக்கில் பெய்து கொண்டே இருக்கிறது.

வீட்டுக்குள் நுழைந்த பிறகும் மழைக்கட்டியில் இருந்து பிரிந்த சீவல்கள் மிதந்து கீழிறங்கி நகரத்தை நனைத்துக் கொண்டே இருந்தது. நகரம் தனது வழக்கமான இரைச்சலை நிறுத்தி வீடுகளுக்குள் ஒடுங்கிக் கிடந்தது, மழை குறித்த எந்தச் சுவடுகளும் இல்லாமல் குழந்தை விலைக்கு வாங்கப்பட்ட வண்ணக் களிமண்ணை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். தொலைவிலிருந்து முன்னோக்கி நகரும் ஊர்தியொன்றின் விளக்கொளியில் மழையின் விழுதுகள் மத்தாப்புச் சிதறல்களைப் போல தார்ச்சாலையில் தேங்கிய நீரில் உடைந்து பரவியதைக் கண்டபோது மனம் தனக்குள் பொதிந்து வைத்திருந்த காலத்தின் துண்டுகளை தூசி தட்டத் துவங்கியது. மழைதான் எத்தனை கலவையான உணர்வுகளையும், வாழ்க்கையையும் மனிதர்களுக்குள் அள்ளித் தெளித்திருக்கிறது.

மழை உயிர் வாழ்க்கையைத் தன் துளிகளால் நிரப்புகிறது, மழை பூக்களின் மடல்களை விரிக்கிறது, மழை கதிரவனின் வெம்மையைப் புவிப் பந்தின் மேலோட்டில் இருந்து துரத்துகிறது, மழை பால்வெளிக்கும் நமக்குமான இடைவெளியை தனது நீண்ட பிணைப்புச் சங்கிலியால் நிரப்புகிறது, தனித்து விடப்பட புவிப் பந்தின் சிறகுகளைத் தனது மென்மையான துளிகளால் வருடிக் கொடுக்கிறது, மழை விவசாயக் கிராமங்களில் எளிய மக்களின் துணையாய் இருக்கிறது, நிலங்களை நோக்கியும், பயிர்களை நோக்கியும் கண்களை அகலத் திறக்கும் மனிதர்களின் நம்பிக்கையாய் மழை தான் இன்னும் இருக்கிறது.

17788487854cfdd743b11dd

வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் மனித மனத்தின் காழ்ப்புகளை எல்லாம் கடந்து, நிலமும், மொழியும் துணையாய்க் கிடக்கும் கிழிந்த மனிதர்களின் இதயங்களுக்கு எந்த வேறுபாடுகளும் இன்றிப் பொழிந்து மழை தான் பொருளாகிறது. பிறக்கும் போதிலிருந்தே மழை என் கூடவே வருகிறது, மழை என்னிடம் வேறுபாடுகளை அறியாத நண்பனாய் இருக்கிறது, அடையாளங்களால் கட்டப்பட்ட அணைக்கட்டுகளில் சிக்கிக் கொண்டு விட்ட என் பழைய நண்பர்களைப் போலன்றி அது வர்ண பேதங்கள், பிறப்பின் அடையாளங்கள் எதுவுமின்றித் எல்லா இடங்களுக்கும் என் கூடவே வந்திருக்கிறது.

என் இளமைக் காலத்தில் கிராமப் புறங்களில் விழுந்த மழை இன்னும் அழகானதாய் இருந்தது, மழை முடிந்த ஒரே இரவில் ஊரெங்கும் பூத்துக் குலுங்கும் தும்பைப் பூக்களும், அவற்றில் அமர்வதற்காய் விரைந்தபடி சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகளும் மழையை எதிர் நோக்கிக் காத்துக் கிடந்தன. மரங்கள் நீராடிய மகிழ்ச்சியில் பின் வரும் காற்றின் மீது தெளிக்க மழையை இலைகளில் பிடித்து வைத்துக் கொள்ளும் அழகு மறக்க முடியாதது. மழை முடிந்து வரும் யாவும், அழகாய் இன்னும் செழிப்பாய் இருப்பது போலவே தெரியும், மழைக்குப் பின் வரும் சூரியன் தனது வெம்மையைப் பறி கொடுத்து விட்டு வேறு வழியின்றிக் குளிர்ந்து விடுகிறான், மழைக்குப் பின் வரும் காற்று மெல்லிசை போல மனதுக்குள் வீசுகிறது. மழைக்குப் பின் வரும் குருவிகள், தும்பிகள், அவற்றின் ஓசை யாவும் அழகிய நிலவொளியில் ஆடும் நதியலைகளைப் போலவே மென்மையாய் வாழ்க்கையின் மேன்மையை நமக்கு உணர்த்திச் சென்றன.

விவரம் தெரிந்து முதல் மழையை நான் ஊரணிக் கரையில் பார்த்தேன், சுற்றி இருந்த நடைபாதையை விட்டுத் தள்ளி இருந்த புளியமரங்களின் கீழே சூரியன் இறங்கிக் கொண்டிருந்தான், பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் அரச மரத்தடியில் எரியும் மின்விளக்கைத் தவிர ஊரில் மின்சார இணைப்புப் பெற்றிருந்த வீடுகள் மிகக் குறைவான ஒரு காலம், வேப்பமரத்தைச் சுற்றி மண்ணால் கட்டப்பட்டிருந்த மேடையில் பெரியப்பாவும், சூராவும் அருகருகே படுத்திருந்தார்கள், சூராவை ஒரு நாய் என்று எளிதாகச் சொல்லி விட முடியாது, அது ஏறத்தாழ ஒரு பேசத் தெரியாத ஒரு மனிதனின் மதிப்பை ஒத்திருந்தது. ஐயா மற்றும் பெரியப்பாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர்களின் வாழ்க்கையோடு மிக நெருக்கமாய் இருந்த சூராவைப் பற்றி நினைக்கும் போது ஒரே வீட்டில், ஒரே தெருவில், ஒரே அடுக்கு மாடிக் குடியிருப்பில் தனித் தனித் தீவுகளாக வசிக்கும் நகர மனிதர்கள் ஏனோ பரிதாபமாய் நிழலாடுகிறார்கள்.

Children-4

இப்போதெல்லாம் கிராமங்களிலும் திண்ணைகள் இல்லாத சுற்றுச் சுவரால் எல்லைகளைச் சுருக்கிக் கொண்ட வீடுகள் பெருகி விட்டன, பெரும்பாலான திண்ணைகள் அழிக்கப்பட்டுவிட்டன,திண்ணைகள் ஒன்று கூடலின் சின்னமாக, அன்பான மனிதர்களின் உறைவிடமாக இருந்த நினைவுகளை நமது குழந்தைகளுக்கு எப்படிச் சொல்வது என்று புரியவில்லை, தடுக்குகளும், தாயமும், பல்லாங்குழிகளும் தங்களுக்கே உரித்தான ஓசை எழுப்பியபடி மனிதர்களை மிக எளிமையான உயிர் வாழ்க்கைப் பொருளாக வைத்திருந்த ஒரு நூற்றாண்டு அனுபவத்தை நம் குழந்தைகள் இழந்து விட்டார்கள்.

திண்ணையில் ஐயாவிடம் கதை கேட்க எப்போதும் சில மனிதர்கள் இருந்தார்கள், தனது மலேசிய வாழ்க்கையின் நினைவுகளை ஒரு கீறல் விழுந்த இசைத்தட்டைப் போல ஐயா திண்ணையில் அமர்ந்தபடி சொல்லிக் கொண்டே இருந்தாலும் அதில் ஒரு அலாதியான சுவை இருந்தது, மனிதர்களின் கதை, ஊரின் கதை, நாடுகளின் கதை, என்று புவிப்பந்தின் கதையை தனக்கு அருகில் இருக்கும் இன்னொரு மனிதரிடம் இருந்து தானே கற்கத் துவங்குகிறான் ஒவ்வொரு மனிதனும்.

வாழ்க்கையும் கூட அப்போது ஒரு சுவையான கதையைப் போலவே இருந்தது, பள்ளியில் இருந்து வந்தவுடன், "லண்டியன்" விளக்கை எடுத்துத் துடைத்து வைப்பது எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஒரு முக்கியமான வேலை, யாரிடமும் கொடுக்காமல் தானே செய்து வந்த அந்த வேலையை ஐயா என்னிடம் எப்போது கொடுத்தார் என்று நினைவில்லை, லண்டியன் விளக்கைத் துடைத்துப் பற்ற வைத்து நிலைக் கம்பியில் தொங்க விடுவது ஒரு கவிதையை எழுதுவதைப் போல அழகானது.

லண்டியன் விளக்கின் மேலிருக்கும் "பிஸ்டன்" மாதிரியான மேற்புறத்தை மேலிழுத்து, கண்ணாடிக் குடுவையை சரித்துப் பின் அதனை வெளியே எடுக்க வேண்டும், முதல் நாள் எரிதலில் படிந்திருக்கும் கரும்புகையை பிடி துணியைக் கொண்டு அழுந்தத் துடைத்து, திரியில் படிந்திருக்கும் சாம்பலை நீக்கிய பின்பு அதனை ஆட்டிப் பார்க்க வேண்டும், களுக்கென்று தளும்பும் மண்ணெண்ணெயின் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும், பிறகு நெருப்பைத் திரியில் பொருத்தி எரிதழலின் உயரம் சீராக இருக்கிறதா என்பதை ஒருமுறை பார்த்து விட்டு வீட்டின் மையத்தில் நீளமாய்த் தொங்கும் கம்பியில் விளக்கைத் தொங்க விடும் போது ஒரு வெளிச்சம் பரவும் பாருங்கள், நகரத்தின் விலை உயர்ந்த சர விளக்குகள் அள்ளித் தெளிக்கும் வண்ணக் கனவுகளை விடவும் அந்த லண்டியனில் இருந்து பரவும் மெல்லிய வெளிச்சம் மிக அழகானது, ஏனெனில் அதன் ஒளியில் எப்போதும் அமைதி படிந்திருந்தது.

dsc04223

மழைக்கால வானத்தின் கீழே காளை மாடுகளைப் போலப் படுத்திருக்கிற சில மலைக் குன்றுகளின் பின்னே மறைந்திருந்தது எங்கள் ஊர். தரையெங்கும் தும்பைச் செடிகள் சில்லிட்டுப் பரவிக் கிடக்க, வண்ண வண்ணமாய் எண்ணற்ற பூச்சிகளும், பச்சைத் தவளைகளும் வேரடியில் விளையாடிக் களிக்கும். மேற்பரப்பில் தெளிக்கப்பட்டிருக்கும் வெண்ணிறப் பூக்களில் வண்ணத்துப் பூச்சிகள் வட்டமடிக்கும், ரெட்டைப் பாப்பாத்திகளைப் பிடித்து அதன் மெல்லிய உடலை நூலால் கட்டி விளையாடுவதைக் குற்றம் என்று தவிக்கிற இன்றைய மனசு, அந்த நாளில் அதைக் கொண்டாடி மகிழ்ந்தது, அதே மனம் தான், அதே மனிதர்கள் தான், வேடிக்கையான வாழ்க்கை.

அந்த மழை நாட்களில் ஊசித்தட்டான் பிடிக்கிற நண்பர்கள் திறமையானவர்கள் என்று திடமாக நாங்கள் நம்பினோம், வழக்கமான தட்டான்களின் பருத்த உடலமைப்பில் இருந்து விலகி ஒரு வெளிநாட்டுக்காரனைப் போல எப்போதேனும் வியப்பான காட்சி தரும் ஊசித் தட்டானைப் பிடிப்பது ஒரு அற்புதமான கலையாக இருந்தது, முதலில் டவுசரை இருக்கக் கட்டிக் கொள்ள வேண்டும், ஆவாரம் பூச்செடியின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஊசித் தட்டானை அடையாளம் கண்ட பிறகு, முழங்கால்களை மடக்கி ஒரு பூனையைப் போலப் பதுங்கி ஓசையின்றி நகர்ந்து செடியிலோ, இலையிலோ கைகள் படாமல் ஊசித் தட்டானின் பின்புற நீட்சியைப் பிடித்து விட வேண்டும், அவ்வளவுதான், நெப்போலியனுக்கு எதிரான வாட்டர்லூ வெற்றியைப் போல அன்றைய நாள் கொண்டாடப்படும், ஊசித் தட்டானை அறிமுகம் செய்து அதை எப்படிப் பிடித்தோம் என்பதையும் நண்பர்களுக்கு விளக்கி வெற்றிப் பெருமிதத்தோடு நடந்தால் மேகங்கள் டவுசரைப் பிடித்தபடி கூடவே வரும்.

கண்மாய்க் கரைகளில் விளையாடப்படும் அணிலா, ஆமையா என்றொரு அப்போது ஒரு விளையாட்டு உண்டு, அணில்கள் ஒரு அணியாகவும், ஆமைகள் ஒரு அணியாகவும் பிரிந்து கொள்வது, அணில் அணிச் சிறுவர்கள் மரங்களில் இருக்க வேண்டும், ஆமை அணிச் சிறுவர்கள் நிலத்தில் இருக்க வேண்டும், பத்து எண்ணி முடிப்பதற்குள் அணில்கள் நிலத்தில் கால் படாது மரங்களில் தொற்றி ஏறிக் கொண்டு விட வேண்டும், இலை. செடி, கொடிகளோடு ஒட்டிக் கொண்டிருக்கும் ஆமை அணிக்காரர்களை, அணில்களும், நிலத்தோடு எங்கேனும் உரசிக் கொண்டிருக்கும் அணில் அணிக்காரர்களை ஆமைகளும் பிடிக்க வேண்டும், பிடிபடாமல் இருக்கக் குரங்குகளைப் போல மரங்களிலேயே பொழுது சாயும் வரைக்கும் திரிந்தலைந்த காலங்கள்.

போதாக்குறைக்கு மாமரங்களும், புளியமரங்களும் கிடைக்கும் அணில் அணிக்காரர்கள் கீழே இறங்குவதே இல்லை, புளியம் பிஞ்சுகளை உரசி உப்பு வைத்துத் தின்பது, பால் சுரக்கும் மாங்காயையும், காராங்காயையும் சேர்த்து பல் கொடுகத் தின்று விட்டு நாக்கு வெந்து போய் வீட்டுக்குப் போனால் நடுமண்டையில் கொட்டு விழும். கண்மாய்க்கு நெருக்கமாய் இருக்கிற கோணப் பனை மரங்களின் பாதியில் ஏறி நீரில் குதித்து வீட்டுக்கு ஓடி விடும் சில அணில்களை இன்றைக்கு வரைக்கும் பிடிக்க முடியாமல் இருக்கிற இழப்பின் வலியை யாரால் தான் உணர முடியும்.

மழைக்கால மாலைகளில் தூறலாய்த் துவங்கி முன்னிரவில் கொட்டி முடித்து மரங்களில் இருந்து மழைத் துளிகள் வடிந்து கொண்டிருக்கையில் வீட்டுக்குள் உறக்கத்துக்கான ஒத்திகை நடக்கும், மழை முடிந்த பிறகு வரும் பட்டுப்பூச்சிகள், வெட்டுக்கிளிகள் சூழப் பனை ஓலைகளால் கட்டப்பட்டிருந்த அடுப்படியில் அப்பத்தாவுக்கு அருகே படுத்துக் கொண்டு ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணிக் கதையைக் கேட்கிற வாய்ப்பு எல்லா மனிதர்களுக்கும் கிடைத்து விடுவதில்லை தான். ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி அக்காவைக் காப்பாற்றப் புறப்படும் தங்கையின் கதை அது.

பெண்களின் துயரங்களை எத்தனை அழகாய்க் கதையாய்ப் புனைந்து விட்டார்கள், பறக்கும் குதிரைகள் முன்னொரு காலத்தில் சின்னச் சொரண்டையின் மதாக்கரையில் மேய்ந்து கொண்டிருந்ததை தான் பார்த்ததாகவும், புதிருக்குப் பதில் சொல்லிப் பரிசாய்ப் பெற்ற அந்தக் குதிரையில் ஏறித்தான் சின்னச் சிந்தாமணி பவள மலையின் உச்சியில் இருக்கும் தாழம்பூக் குகைக்குள் நுழைந்தாள் என்று குரலைக் குழைத்து ஒரு தேர்ந்த கதை சொல்லியைப் போல அப்பத்தாவின் குரல் மழையோடு இழைந்து கொண்டிருக்க, மழையோ பனை ஓலைகளில் சொட்டிக் கொண்டிருக்கும்.

beautiful_india_34

பவள மலையும், பறக்கும் குதிரைகளும் கண்மாய்க் கரைகளை ஒட்டிய மலையடிக் காடுகளில் எங்கேனும் இருக்கக் கூடும் என்று எட்டாம் வகுப்பு முடிக்கும் வரை என்னை உறுதியாக நம்ப வைத்தன அப்பத்தாவின் கதைகள். அவரது கதைகள் ஒருநாளும் முடிந்து போவதே இல்லை, குழந்தை என்னிடம் இப்போதெல்லாம் கதைகள் கேட்கிற போது ஒரு ஊருல ஒரு நரியைத் தாண்டி கதையை நகர்த்துவது பெரிய சிரமமாய் இருக்கிற போது அப்பத்தாவின் கதைகள் எப்படி காலத்துக்கும் முடியாமல் தொடர்ந்தன என்கிற கேள்வி விடையில்லாமல் நின்று கொண்டிருக்கிறது.

வாய்க்கால்களை அடைக்கவும், மதகுகளைத் திறக்கவுமாய் நள்ளிரவிலும் மனிதர்கள் மழையில் நனைந்தபடி பிஞ்சைக் காடுகளை ஒட்டிய பாதைகளில் பேசிக் கொண்டே நடந்தார்கள். தங்கள் மண்ணையும், மண்ணைச் சுற்றி இருக்கிற எல்லாவற்றையும் நேசிப்பதைத் தவிர அந்த மனிதர்கள் வேறொன்றும் பெரிதாய்ச் சாதிக்கவில்லை, சாதிப்பது குறித்து அவர்கள் பெரிதாய் அக்கறை கொண்டிருந்ததாகவும் நினைவில்லை. ஆனாலும் உலக நாகரீகங்களை எங்கள் மக்கள் அங்கிருந்து தான் வளர்த்துத் தழைக்கச் செய்தார்கள்.

மழைக்காலம் முடிந்து முன்பனிக் காலம் துவங்கும் அந்த நாட்களின் காலையில் நெற்கதிரின் வாசம் காற்றெங்கும் நிறைந்து கிடக்கும், வயல்பரப்பை விட்டுத் தொலைவில் இருந்தாலும் காற்று வயல்வெளிகளின் வாசத்தை வீட்டுக்குள் கொண்டு வந்து விடும், ஊர் முழுக்க வைக்கோல் போர்களால் நிரம்பிக் கிடக்கும், கருக்கறுவாலும் கையுமாய் தலையை அள்ளி முடிந்தபடி பெண்களும், அவர்களின் பின்னே பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளும் களத்து மேடுகளை நோக்கிப் படையெடுக்கத் துவங்குவார்கள், களத்து மேடுகள் எங்கள் கிராமங்களின் கலைக் கூடாரங்கள், பாட்டும், கூத்துமாய் விளைந்த பயிரைப் பதப்படுத்தி வரும் காலங்களை வசந்த காலமாய் மாற்றும் அந்தக் கலைக்கூடாரங்கள் ஏறத்தாழ அழிந்தே போய்விட்டன. அறுத்த நெற்கதிர்களை உலர்த்தி, சாணியிட்டு மெழுகிய பொட்டல் வெளிகளில் கொட்டிப் பரப்பி காலை மாடுகளை நீளச் சுற்றில் நடத்தி நெல்மணிகளை முடிந்த அளவுக்கு உதிர்க்க வேண்டும், நெல்லையும் காய்ந்த அதன் கதிர்களையும் பிரித்தெடுத்து மூட்டைகளில் கட்டி முடிப்பது ஓரிரு நாட்களில் முடிந்து போகிற வேலையில்லை, பாதுகாப்புக்காக இரவுகளில் வீட்டுக்கு ஒருவரோ இருவரோ களத்து மேடுகளில் காவலிருக்க வேண்டும்.

10103_s6s

ஏனெனில் களத்து மேட்டுக் காலங்களில் களவாணிகளைப் பற்றிய கிசுகிசுப்புகள் திண்ணைகளெங்கும் உலவிக் கொண்டிருக்கும். களவாணிகள் கைகளில் பெரிய வீச்சருவாளையும், உடும்புகளையும் சுமந்து கொண்டு வருவதாகவும், உயரமான வீடுகளிலும்,மதில்களிலும் ஏறுவதற்காக அவர்கள் உடும்பைப் பயன்படுத்துவதாகவும் சின்னையா தாத்தா சிறுவர்களை பயமுறுத்திக் கொண்டிருப்பார். களவாணிகள் வந்து எடுத்துச் செல்வதற்கான ஒரு பொருளான விளைந்த நெல்லைத் தவிர வேறொன்றும் எங்கள் ஊரில் இல்லை, ஆகவே களத்து மேட்டுக் காலங்களில் மட்டுமே அவர்களைப் பற்றிய செய்திகள் உலவித் திரியும், கடைசி வரையில் சின்னையா சொன்ன களவாணிகளை பார்க்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தம் தான், நிலவும், விண்மீன்களும் வேடிக்கை பார்த்திருக்க அன்பானவர்களின் அருகில் ஓலைப்பாய்களில் எந்தக் கவலைகளும் இன்றி மல்லாந்து படுத்து உருளும் அந்தப் பொன்னான காலத்தின் நினைவுகளை யார் தான் திருப்பிக் கொடுக்க முடியும்.

(இன்னும் பூக்கும்……..)

Advertisements

Responses

  1. Vanakkam.ungaludaya anaitthu pathivugalaiyum kaalam kadandhu paditthaalum adhan arttham/karu vai ulvaangi ungalodu payanittha oru payaniyaga yenni peraanandham adaigiren.ungalukku kidaittha pala anubavangal yennodu otri pinainthiruppadhai unarugiren yennaivittu pirindha moodhadhayar,nalla nanbargal,teacher’s bording school warden,manidha neyamikka mugam theriyadha nanbargalin pala ninaivugalai ungalin vaayilaga meetti paarkka thoondiya yezhutthukkalukku nantrigal pala kodi #neengal seiyum muyarchigalyavum vetripera manamaara vazhthugiren aangila putthandu vazhtthukkal#


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: