கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 28, 2012

மறக்க முடியாத திரைப்படங்கள். (Top Ten)

பத்து : வீரபாண்டிய கட்டபொம்மன்.

1

பள்ளிக் காலத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டு வெறும் இருபத்தைந்து பைசாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நினைவு தெரிந்த நாட்களின் முதல் திரைப்படம், இன்றைக்கு வரைக்கும் "வீரபாண்டிய கட்டபொம்மன்" என்கிற ஒரு வரலாற்றுப் பாத்திரத்தின் வடிவத்தை வேறு எந்த ஒரு மாற்று ஊடகத்தின் தாக்கத்துக்கும் ஆளாக்காமல் எனக்குள் (அனேகமாக நம் அனைவருக்குள்ளும்) வைத்திருக்கும் திரைப்படம், திரைப்படம் எத்தனை வலிமையான கலை என்பதை நான் இன்று வரை வியக்கும் ஒரு திரைப்படம், ஒரு நடிகனின் மகத்தான அடையாளங்களை, மிடுக்கை, மேதமைகளை தன்னந்தனியனாக நின்று களமாடும் "சிவாஜி கணேசன்" என்கிற நமது கலைஞனை வியந்து பார்க்க வைத்த திரைப்படம் என்று பல குறிப்புகளை இந்தப் படம் தனக்குள் கொண்டிருந்தாலும், அவை எல்லாவற்றையும் கடந்த ஒரு ரசிகனுக்கான எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்பது தான் இந்தப் படத்தின் தனிச்சிறப்பு, வரலாற்று முகவரி, விடுதலைப் போராட்டத்தின் பதிவுகள், நகைச்சுவை, காதல், பாடல்கள் என்று ஒரு காட்சியிலும் தொய்வு இல்லாமல் நகர்த்தப்பட்ட பொழுது போக்குச் சித்திரமாகவும் இந்தப் படம் இன்று வரை வரலாற்றில் அழியாமல் இருப்பது ஒரு வியக்கத்தக்க சாதனை.

 

ஒன்பது : எங்க வீட்டுப் பிள்ளை

2

என்னுடைய வயதில் இந்தப் படத்தை பார்க்காத எவரும் இருக்கவே முடியாது என்கிற அளவுக்குத் தமிழக மக்களால் வீதியெங்கும் விரும்பிப் பார்க்கப்பட்ட திரைப்படம், தமிழகத்தின் ஏதாவது ஒரு வீதியில் எண்பதுகளின் துவக்கம் முதல் இன்று வரையில் தொடர்ந்து இந்தப் படத்தை மக்கள் ஒரு எழுச்சியான மனநிலையோடு இன்னமும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள், புழுதி மணக்கும் தெருக்களில் நண்பர்களோடு அமர்ந்து இந்தத் திரைப்படத்தை அமர்ந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. ராமுவாக அவர் திக்கித் திணறும் காட்சிகளாகட்டும், இளங்கோவாக அவர் சாட்டையை வீசும் லாவகமாகட்டும் எம்.ஜி.யார் என்கிற ஒரு மிகப்பெரிய உருவகத்தை இன்று வரையில் அவரது திரைப்படங்கள் எப்படி உருவாக்கின என்பதற்கான ஒரு அப்பட்டமான சான்றாக இந்தப் படத்தை நான் சொல்லுவேன். தனது திரைப்படங்களைப் பார்க்க வருகிற எளிய உழைக்கும் மக்களின் மனதில் ஒரு தலைவனாக எப்படி அமர வேண்டும் என்று அவர் திட்டமிட்டார், அவர் திட்டமிடவில்லை என்றாலும் கூடத் தங்களின் வணிக வெற்றிக்காக அப்படி ஒரு திட்டமிடலை நோக்கி அவர் தள்ளப்பட்டார். எல்லாவற்றையும் தாண்டி ஒவ்வொரு சிக்கலையும் நாயகர்கள் எப்படிக் கடந்து வெளியேறுவார்கள் என்கிற எதிரப்பார்ப்பைத் திரைப்படத்தின் கடைசி வரை இயக்குனர் வைத்திருந்தது தான் இன்று வரைக்கும் இந்தப் படம் மனதில் நிலைப்பதன் ஒரே காரணம்.

எட்டு : "ப்ரூஸ் லீ’ஸ் ட்ரூ ஸ்டோரி" (The Bruce Lee’s True Story)

3

வன்முறையை எந்தக் காரணங்களுக்காகவும் விரும்பாத என்னை ஈர்த்துத் தன்னை நோக்கி வரச் செய்த ஒரு மகத்தான நடிகன் ப்ரூஸ் லீ, இந்தத் திரைப்படத்தைப் பார்த்து விட்டு ஒரு மூன்று நாட்களுக்கு நான் தென்னை மரங்களை அவரைப் போலவே பயிற்சி செய்து வீழ்த்தி விடலாம் என்று முட்டாள் தனமாக நம்பிக் கைகளால் வெட்டத் துவங்கி இருந்தேன். உடல் மொழிகலாகட்டும், முக பாவனைகலாகட்டும் ப்ரூஸ் லீ ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தின் இளைஞர்களைத் தனது மாறுபட்ட வசீகரத்தால் கொள்ளை கொண்டவர். வேகத்தையும், பயிற்சியையும் கலந்து தன்னுடைய நிஜ வாழ்க்கைக்கும், திரைப்படக் காட்சிகளுக்குமிடையிலான தொலைவை அவர் இல்லாமலே செய்து வைத்திருந்தார். சீனர்களின் தற்காப்புக் கலைகள் குறித்த ஒரு மிகப்பெரிய பிம்பத்தை இவரே துவக்கி வைத்திருப்பார் என்று நினைக்கிறேன், ஒரு கவிஞனாக, ஒரு திரைப்படத் தயாரிப்பாளனாக, ஒரு நடிகனாக, ஒரு விளையாட்டு வீரனாக, ஒரு தத்துவ மாணவனாக வாழ்வின் பல்வேறு திசைகளில் பயணித்த இந்த மனிதனின் வாழ்க்கை குறித்த இந்தப் படம் வாழ்க்கையில் நிச்சயம் மறக்க முடியாத ஒரு திரைப்படம் என்பதில் எப்போதும் எனக்கு ஐயமே இல்லை.

ஏழு : நாயகன்

4

திரைப்படக் கலை குறித்த நடைமுறை சாத்தியங்களை மறைத்து அதனை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றும் தமிழ்ச் சூழலில் என்னுடைய பதின் வயதில் இந்தப் படம் வெளியாகி இருந்தது. மணி ரத்னத்தின் படம் என்று சொல்வதை விடவும் இதனை ஒரு கமலஹாசன் திரைப்படம் என்று சொல்லும் அளவுக்கு திரைப்படத்தின் எல்லாப் பகுதியையும் விழுங்கிக் கொண்டு விடுகிற நடிகராக அவர் விஸ்வரூபம் எடுத்திருப்பார். ராஜாவின் இசை, பி சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் அற்புதமான கலை வடிவங்கள் என்று  தொழில் நுட்ப வெளிச்சத்தை தமிழ்த் திரையுலகின் மீது அள்ளித் தெளித்த திரைப்படம், ஒரு ஓவியம் போல் செதுக்கப்பட்ட திரைக்கதையின் ஓட்டம், பார்வையாளனை உள்  விழுங்கிக் கொள்கிற ஒரு நேர்த்தியை முதன் முதலாக எனக்கு உணர்த்திய திரைப்படம். இன்று வரைக்கும் இன்னொரு முறை பார்த்தாலும் சலிப்பைத் தராத காட்சி அமைப்புகள் தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய வலிமை. தமிழ் ரசிகனின் எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் "காட் பாதர்" மாதிரியான தழுவல்களுக்குள் நுழைப்பதும் கூட அத்தனை எளிதான ஒரு செயலாக இருக்க முடியாது. மணி ரத்னத்தின் மீதான அரசியல் பார்வைகள், விமர்சனங்கள், முரண்கள் எல்லாவற்றையும் தாண்டி அவரை ஒரு தமிழின் முன்னணி இயக்குனராக இன்றளவும் என்னைப் போன்ற கொஞ்சம் மண்டை வீங்கிப் பார்வையாளனை நம்ப வைக்க அவர் எடுத்த முதலும் கடைசியுமான படம் இது தான்.

ஆறு: தளபதி

5

நாயகனின் காலகட்டத்தில் வெளியாகி, அதே நேரம் நாயகனைப் போல பெரிய அளவிலான உழைப்பெல்லாம் இல்லாமல் வெற்றி அடைந்த திரைப்படம் மட்டுமில்லை, ரஜினி என்கிற ஒரு பிம்பத்தை வணிக ரீதியாகவும், துறை ரீதியாகவும் நிலை நிறுத்திய திரைப்படம், ரொம்பவே இளமையாகவும் அழகாகவும் ரஜினியை இந்தப் படத்தில் மாற்றி இருப்பார்கள், கல்லுக்குள் ஈரம் மாதிரி வன்முறை மனிதர்களுக்குள் ஒளிந்திருக்கிற இயல்பான மனித உணர்வுகளைக் காட்டும் படம் என்பதால் ஒரு வேளை இந்தப் படம் என்னைக் கவர்ந்திருக்க வேண்டும், எந்த நேரமும் ரஜினியை நடிப்பில் விழுங்கிச் சாப்பிட்டு விடும் மம்மூட்டியின் திறமைக்கு நடுவே தன்னை ஒரு நடிகனாகவும் ரஜினி உறுதி செய்து கொண்ட படம். இசை, ஒளிப்பதிவு, கவிதையைப் போன்ற உரையாடல்கள் என்று திரைப்படக் கலையின் பல்வேறு வடிவங்களை வெற்றியின் குறியீட்டுக்குள் கொண்டு வந்த ஒரு திரைப்படம். சந்தோஷ் சிவனின் இயல்பான நேர்த்தியான ஒளிப்பதிவும் இந்தப் படத்தை இன்றளவும் என்னை நினைவு கொள்ள வைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

ஐந்து :  தவமாய்த் தவமிருந்து.

6

இயக்குனர்கள் மீதான ஒரு மரியாதையும், அவர்கள் குறித்த ஒரு கூர்ந்த பார்வையையும் எனக்குள் கொண்டு வந்து நிறுத்திய படம், தான் வாழ்கிற வாழ்க்கைச் சூழலில் நிகழ்கிற எளிய மக்களின் வாழ்க்கையை அவர்களின் வலிகளை, அவர்களின் உரையாடலை ஒரு வெற்றிகரமான திரைப்படமாகப் பதிவு செய்து நெஞ்சில் நீங்காத இடத்தை உண்டாக்கிய மதிப்புக்குரிய நண்பர் சேரனின் திரைப்படம், அப்பாவின் மடியில் புழுதி படிய விளையாடித் திரிந்த என்னைப் போன்ற எண்ணற்ற மனிதர்களை நெகிழச் செய்த திரைப்படம், ஒவ்வொரு காட்சியையும், அதன் நேர்த்தியையும் வியக்கும் அளவுக்கு ஒரு செல்லுலாய்ட் சிற்பம் என்று தயங்காமல் என்னால் சொல்ல முடியும், கிராமங்களில் வாழும் தமிழ்க் குடும்பங்களின் கதை, ஊரகத் தமிழ் மக்களின் உணர்வுகள் என்று "அட, நம்ம வாழ்க்கை குறித்த கதைகளையும் திரைப்படமாக்கலாம் போல" என்கிற நம்பிக்கையை உண்டாக்கிய திரைப்படம். ஒரு தகப்பனின் பாசத்தையும், அவனது உழைக்கும் வாழ்வின் வலிகளையும் கவிதைகளை வாசிப்பது போல குருதி நாளமெங்கும் ஊசியாய் இறக்கும் திறமையை ஒரு இயக்குனராக சேரன் மிகத் திறம்பட வெளிப்படுத்தி இருப்பதே இந்தப் படம் எப்போதும் நினைவுகளில் நீங்காத இடம் பிடிக்க ஒரு இன்றியமையாத காரணம்.

நான்கு :  ப்ரேவ் ஹார்ட்.

7

தொழில் நுட்பமும், வரலாறும், உடல் மொழிகளும் இணைந்து ஒரு புதிய கோணத்தில் திரைப்படங்களை அணுக வைத்த திரைப்படம், இயக்கமும், நடிப்பும் மெல் கிப்சன், ஸ்காட் மக்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையில் நிலவும் இன்றைக்கு வரைக்குமான வெகு நுட்பமான பகையுணர்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் மறக்க முடியாத ஒரு பார்வையாளன் அனுபவத்தை எனக்கு வழங்கியது, வெகு நேர்த்தியான காட்சி அமைப்புகள், ஒவ்வொரு காட்சிக்காகவும்  கலைஞர்கள் காட்டி இருக்கும் அக்கறை, ஈடுபாடு போன்றவற்றைப் பார்க்கும் போது திரைப்படக் கலையில் நாம் இன்னும் செல்ல வேண்டிய தொலைவு கண் முன்னே வந்து நிற்கிறது. பிறப்பால் ஒரு ஆஸ்திரேலியராகவும், தொழில் நிமித்தம் அமெரிக்காவில் வாழும் ஒரு மனிதரால் தொடர்பே இல்லாத இன்னொரு நாட்டின் வரலாற்று நிகழ்வுகளைப் புனைவாக்கி மிகப்பெரிய வெற்றி முடியும் என்கிற மலைப்பை இன்று வரைக்கும் எனக்கும் உண்டாக்கும் ஒரு திரைப்படம். மிக மெல்லிய காதல், மன்னர்களின் மிடுக்கு, செருக்கு என்று வேற்று மொழிப் படம் என்கிற உணர்வையே காட்சி அமைப்புகளால் மறைத்து விடுகிற ஒரு அற்புதமான திரைப்படம்.

மூன்று : செவன் சாமுராய் (Seven Samurai)

8

திரைப்பட உலகின் நுட்பங்களை அறிந்து கொள்ள நினைக்கிற எவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம், ஜப்பானியக் கிராமத்தின் பயிர்களைக் காக்கப் போராடும் ஏழு போர் வீரர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான உறவையும், வாழ்க்கை முறையையும் வெகு நுட்பமாகச் சொல்கிற அகிரா குரசோவாவின் அற்புதமான திரைப்படம், தனது கதை சொல்லும் பாணியில் உள்ள நேர்த்தியையும், ஒழுங்கையும், உழைப்பையும் காட்டி மேற்குலகை இந்தப் படத்தின் மூலமாக அகிரா ஒரு உலுக்கு உலுக்கினார் அன்று சொன்னால் அது மிகையில்லை, பசியில் இருக்கிற ஒரு மதிப்புக்குரிய போர் வீரனைத் தேடுவதாகட்டும், தேர்வு செய்வதில் காட்டும் சமரசம் செய்து கொள்ளாத தன்மையாகட்டும், முக பாவனைகள், நுட்பமான ஒலிக்குறிப்புகள் என்று படம் முழுவதும் இன்று வரைக்கும் ஒரு பாடமாகவே இருக்கிறது. முதன் முதலாக திரைக்கலையில் வாழ்வின் பல்வேறு கோணங்களை, நிகழ்வுகளை ஒன்றுக்கு ஒன்று தொடர்பு செய்து காட்சிப் படுத்தும் "பிளாட்" முறையை இந்தத் திரைப்படமே அறிமுகம் செய்து வைத்தது. இயக்குனர்களின் உழைப்பு என்பது திரைப்படக் கலையில் சமரசம் செய்ய முடியாத ஆற்றல் என்பதை இந்தப் படத்தின் மூலம் உலகுக்கு உரக்கச் சொன்னார் அகிரா. நூற்றாண்டுகளில் மறக்க முடியாத திரைப்படம்.

இரண்டு : ஆரண்ய காண்டம்

9

ஒரு பார்வையாளனாக மூன்று மணி நேரம் என்னைக் கட்டிப் போட்ட சமீபத்திய படம் என்று சொல்லலாம், இந்தப் படம் ஏனைய தமிழ்ப் படங்களில் இருந்து தனது கதை சொல்லும் பாணியில் மாறி இருந்ததே அதற்கான முழுமையான காரணம், வழங்கு திறனில் எந்த நாட்டின் முன்னணி இயக்குனருக்கும் சளைக்காத ஒரு வேறுபட்ட அனுபவத்தை நமக்கு வழங்கியதற்காக அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.ஏறக்குறைய தமிழின் முதல் நியோ – நோயர் திரைப்படம், வழங்கு திறனில் எந்தப் புதுமையையும் உண்டாக்க நினைக்காத நமது வணிக இயக்குனர்களுக்கு நடுவில் ஒரு புரட்சியை உண்டாக்கியவர். திரைக்கு நடுவே பார்வையாளனைத் தூக்கிப் போட்டது மாதிரியான கோணங்கள், ஒலிக் குறிப்புகளில் உருவாக்கப்படும் அதிர்வுகள் என்று பல்வேறு தொழில் நுட்ப அதிர்வலைகளை உண்டாக்கிய திரைப்படம். பெண்களை மையமாக வைத்துப் பாத்திரங்களால் பேசப்படும் கொச்சையான உரையாடல்கள் மாதிரியான சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் சில படிகள் மேலே வைத்துப் பார்க்கப்பட்டிருக்கும். இருந்தாலும் தமிழில் கதை சொல்லும் வழியில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்ததற்காகவே என் நினைவில்  நீங்காத இடம் பிடிக்கும் திரைப்படங்களில் இது எப்போதும் ஒன்று.

ஒன்று : டைட்டானிக்

10

பிரம்மாண்டத்தைத் தவிர்த்து வர்க்க வேறுபாடுகள், இயல்பான மனித உணர்வுகள், காதல், மேல்தட்டு மக்களின் வறட்டு கௌரவம் போன்ற பல்வேறு வாழ்வியல் கூறுகளை ஒரு கவிதையைப் போலச் சொன்ன திரைப்படம், ஒரு திரைப்படத்தை உண்டாக்குவதற்கான உழைப்பு, அந்தத் துறை மீது இயக்குனருக்கு இருக்கிற ஈடுபாடு, நம்பிக்கை என்று திரைப்படக் கலையின் பிரம்மாண்டமான தாக்கத்தை மீண்டும் ஒரு முறை கண்ணில் நிறுத்திய திரைப்படம், தொழில் நுட்பம், கலை, ஒப்பணை, வரலாற்றுக் குறிப்புகளின் போது செய்ய வேண்டிய மிக முக்கியமான குறிப்புகள், மனித உணர்வுகளைக் காட்சிப் படுத்தும் நேர்த்தி, வரலாற்று நிகழ்வை படம் பிடிக்கிற ஒழுங்கு, நிகழ்வுகளுக்கு ஏற்ற ஒலிக்குறிப்புகள், பின்னணி இசை என்று பல்வேறு கோணங்களில் திரைப்படக் கலையின் வலிமையை உறுதி செய்து கொண்ட ஒரு திரைப்படம், இவற்றை எல்லாம் தாண்டி படம் முழுக்க இயக்குனர் அள்ளித் தெளித்திருக்கும் வர்க்க முரண்களின் கவிதைத் தனமான காட்சிகளே இந்தப் படத்தை அழிக்க முடியாத ஒரு நினைவுப் பொக்கிஷமாக எனக்குள் அடை  காக்கிறது . ஜேம்ஸ் கேமரூன் ஒரு மிக முக்கியமான இந்த நூற்றாண்டின் இயக்குனர்.

************

Advertisements

Responses

 1. வணக்கம்
  அண்ணா

  இந்தப் படங்கள் மக்கள் இதயங்களை வென்ற படங்கள் அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள்,

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: