கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 31, 2012

மறக்க முடியாத பத்து இடங்கள். (Top Ten Land Marks)

ஒன்று : தனுஷ்கோடி

1

பாதி இளைஞனாகவும், பாதிச் சிறுவனாகவும் இருந்த போது அப்பா, அம்மாவோடு ஒரு கோடைக் காலத்தில் இந்த அழிந்த நிலத்துக்கு சென்றிருந்தேன், எங்களைத் தவிர மனிதர்களே இல்லாத மாதிரி ஒரு தனிமை எங்களைச் சுற்றிக் காற்றில் அடைபட்டிருந்தது, கண்ணுக்கு எட்டிய வரையில் ஓவென்று கிடைத்த இடைவெளிகளில் எல்லாம் காற்றும், திட்டுத் திட்டாய் நீரும், மணலும் மனிதனின் எல்லா விதமான ஆக்கிரமிப்புகளையும் அகற்றி விட்டு இயற்கை இந்தத் தீவில் ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்தது, பாதி நீரும், பாதிப் பாறைகளும் சுற்றிக் கிடக்க முழுதும் அழிந்து விடாத ஒரு கோவிலின் முன்பாக அமர்ந்து இருந்தபோது அங்கிருந்த வாழ்க்கையும், மனிதர்களும் நினைவில் வந்து அழைக்கழித்தார்கள், கடலின் அலைகள் ஏதுமறியாத குழந்தைகளைப் போல கரைகளைத் தொடுவதும், பின்னோக்கி ஓடுவதுமாய் விளையாடிக் கொண்டிருந்தன. புதைந்து போன அந்த ஊரையும், அதன் மனிதர்களையும் திரும்பப் பார்க்க வேண்டும் போலிருந்தது, கடலின் ஆழத்தில் அவர்கள் அமிழ்ந்து கரையேற முடியாமல் போன அந்த நாட்களின் வலி மிகுந்த தருணங்களை கொஞ்சமாய் மீதமிருந்த கட்டிடங்கள் நினைவு படுத்தியபடியே இருந்தன. சுறுசுறுப்பாய் இயங்கிய ஒரு நகரத்தின் சுவடுகளில் சுற்றுலாச் செல்வது கொடுமையானது தான், ஆனாலும் இறப்பு அங்கே ஓங்காரமாய் உலவித் திரியும் காற்றின் ஓசையைப் போல எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதாய் இருக்கிறது என்ற உண்மையை மனசுக்குள் உரக்கச் சொல்லியபடி இன்னும் அழியாத ஒரு நகரத்துக்குத் திரும்பி வந்தேன், திரும்பித் திரும்பிப் பார்த்தபடி…….

இரண்டு : கன்னியாகுமரி

2

தூத்துக்குடி NIIT யில் பணியாற்றிய போது, ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் கன்னியாகுமரிக்குச் சென்று விடுவேன், உலகின் கடைக்கோடி ஒன்றில் நின்று கொண்டிருக்கிறோம் என்கிற அற்புதமான உணர்வு அங்கே கிடைக்கும், காந்தி மண்டபத்துக்குப் பின்னே இருக்கிற கட்டுச் சுவற்றில் அமர்ந்து கொண்டு ஒரு நாள் மாண்டலின் சீனிவாசின் இசையைக் கேட்டபடி சுற்றி இருந்த மனிதர்களின் களிப்பில் கரைந்து கொண்டிருந்தேன், இன்று வரைக்கும் வேறெங்கும் கிடைக்காத வாழ்வின் அளப்பரிய தருணம் என்று அதைத் தான் சொல்வேன். அலைகள் கால்களை நனைக்கும் போது  குதித்துப் பின்னோடும் எமது ஊரகக் குழந்தைகள், அவர்களின் கள்ளமறியாத சிரிப்பின் அலைகள் மூன்று பெருங்கடல்களின் அலைகளைத் தோற்கடித்த விதம், மூன்று வெவ்வேறு நிறங்களில், முத்திசைகளையும் விழுங்கியபடி அசைந்தாடும் கடல் நீர், அதன் பிரம்மாண்டம், இவை எல்லாம் மனித வாழ்க்கையை கடற்கரையில் கிடக்கிற ஒரு மணல் துகள் போல உணரச் செய்யும் அதி அற்புதமான உணர்வுகள். வாழ்க்கையின் மீதிருந்த அவநம்பிக்கையையும், சலிப்பையும் கன்னியாகுமரி அறவே இல்லாமல் செய்து விடும் பேராற்றல் நிரம்பியது. பகலில் படகில் செல்கிற போதே அச்சம் ஆட்டி எடுக்கிற இந்தக் கடலில் ஒரு நள்ளிரவில் நீந்திச் சென்று அமர்ந்திருந்த விவேகானந்தரின் நினைவுகள், அலைகள் கரைகளோடு எப்போதும் பேசிக் கொண்டிருக்கிற ரகசியம் போல நெஞ்சில் நிறைந்திருக்கிறது. உலகின் எந்த மனிதனும் பார்த்தே தீர வேண்டிய கடற்கரை கன்னியாகுமரியின் கடற்கரை. உலகப் பொது மறையை எழுதி இறவாப் புகழ் பெற்ற எம் மொழியின் முன்னோடியை முக்கடலின் வரலாற்றுச் சாட்சியமாய் நிறுத்திய முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவுகளும் அந்தக் கடற்காற்றில் கலந்து திரிகிறது.

மூன்று : மேடை வேப்பமரம் – மருதங்குடி

3

பிள்ளையார்பட்டியின் பின்புறமாக பரவிக் கிடக்கும் குன்றுகளைக் கடந்து கொஞ்சம் முன்னேறினால் வயல்களும், நீர்நிலைகளும் சூழ்ந்து கிடக்கும் ஒரு பழங்குடிகளின் கிராமம், இந்த வயல்களில் உழன்று தான் எம்மை உலகுக்கு அறிமுகம் செய்தார்கள் எனது பாட்டனும், பூட்டனும், தமிழின் தொன்மையான பண்பாடுகள் பலவற்றை இந்த வேப்ப மர மேடையில் இருந்து தான் வேடிக்கை பார்த்தபடி கற்றுக் கொண்டிருக்கிறேன், பசியும், பட்டினியும் பெருகிக் கிடந்தாலும் விடுதலையையும், பண்பாட்டையும் மறந்து விடாத மக்களின் அமர்விடம், காரல் மார்க்சையும், வில்லியம் வோர்ட்ஸ்வோர்த்தையும் இரண்டு தலைமுறைகளுக்கு முன்னதாகவே வீட்டுக்குள் கொண்டு வந்த மனிதர்கள், சங்கத் தமிழையும், காந்தியையும், பெரியாரையும் தேடி வர வைத்த மண்டைச் சுரப்பர்கள். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உழவர்களுக்கு நன்றி சொல்வதற்காய் இந்த வேப்ப மர மேடையை வருடம் ஒருமுறையாவது தொட்டு வணங்கி விட வேண்டுமென்பது எனது வாழ்க்கையின் மாறாத வழக்கமாய் மாறி இருக்கிறது. உலகின் மிகப்பெரிய பட்டங்களை எல்லாம் சுமந்த மனிதர்களோடு எளிதாய் இயல்பாய் உரையாடி மகிழும் எனக்கு இந்த மரத்தடி மனிதர்களோடு உரையாடுவதில் சிக்கலிருக்கிறது, எந்தப் பூச்சும் இல்லாமல் வெள்ளந்தியாய் இதயத்தின் உள்ளிருந்து பேசுவது எப்படி என்று இவர்களிடம் இன்னமும் கற்றுக் கொண்டே இருக்கிறேன்.

நான்கு – "பாங்க் ங்கா வளைகுடா – தாய்லாந்து

4

இயற்கை மனிதர்களோடு பேசும் இடங்களை மட்டுமே பார்த்துக் களித்திருந்த எனக்கு மனிதர்களைப் பேச விடாமல் செய்த இடமாக இது தோன்றியதில் வியப்பில்லை, பசுமை நிறத்தில் அதிக ஆரப்பாட்டம் செய்யாத அமைதியான கடலுக்கு நடுவே திகீரென்று உயர்ந்து கிடக்கும் மலைக்குன்றுகள், அதோடு ஒட்டிக் கிடக்கும் குறுஞ்செடிகள் என்று வியப்பின் உச்சிக்குக் கொண்டு செல்லும் இயற்கையின் விந்தையான புதிர்கள் நிரம்பிய இடம், "லைம்ஸ்டோன்" பாறைகள் கடலால் அரிக்கப்பட்டு விழுதுகளைப் போலத் தொங்கிக் கொண்டிருக்கும் அழகை ஒருநாளில் ரசித்து உள்வாங்கிக் கொள்ள முடியவே முடியாது. பசிய மரங்கள் சூழக் கிடக்கும் குடைவரைகள், வானுயர எழும்பி நிற்கும் நெடிய பாறைக் குன்றுகள் மனிதனின் மனதை ஒரு மாதிரியான குழப்பம் கொள்ள வைக்கும் வலிமை கொண்டவை, "பாங் நா" கடற்க் குகைகளின் ஓரமாக நான் சென்ற படகு சென்ற போது எனது மனதுக்குள் இப்படித் தோன்றியது, "உணவுப் பொருட்களை அல்லது கைவினைப் பொருட்களை விற்கும் இந்த மீனவக் குடும்பத்து பெண்ணொருத்தியை மணந்து கொண்டு இங்கேயே இருந்து விடலாமா?" (கலவரத்தைத் தூண்ட நினைப்பவர்கள் கவனத்திற்கு – இந்தப்பயணம் திருமணத்துக்கு முன்பு நிகழ்ந்தது). தாய்லாந்து நாட்டின் கடற்கரை கிராமங்களில் வாழும் மனிதர்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள், உலகின் ஒட்டு மொத்த இயற்கை அழகும் அவர்களின் வீட்டருகே அலையடிக்கிறது.

ஐந்து : கங்கை கொண்ட சோழபுரம்

5 (2)

இது மனிதர்களால் கட்டப்பட்டதா, அல்லது வேற்றுக் கிரகவாசிகள் யாரேனும் இந்தக் கோவிலைக் கட்டுவதற்கு உதவி இருப்பார்களா என்கிற ஐயம் எனக்குள் இன்னமும் இருக்கிறது, கோவில் விமானத்தின் பிரம்மாண்டம், வெகு தொலைவில் இருக்கும் போதே மனதை பிசைய வைக்கிறது, ஏறத்தாழ உலகின் பிரம்மாண்டக் கட்டிடமான "அங்கோர்வாட்" டின் உள்ளூர் வடிவம் மாதிரி இருக்கிறது, நந்திக்கு அருகில் செல்லும் போதே உங்கள் கைகளில் வாளும், மார்பில் கவசங்களும் வந்தேறி விடும், வரலாற்றுப் புரிந்துணர்வோடு, இந்தக் கோவிலைப் பற்றிக் கொஞ்சமாவது அறிந்த ஒரு மனிதனால் இயல்பான மனநிலையில் இந்தக் கோவிலைச் சுற்றிப் பார்க்க முடியாது, சுற்றிப் படர்ந்திருக்கும் புல்வெளியிலும் மண் மேடுகளிலும் புதைந்த வரலாற்றின் எச்சம் பீறிட்டுக் கசியும் ஒரு அற்புதமான மன எழுச்சியை நான் உணர்ந்த இடம், ராசேந்திர சோழனின் கனவுகளும், அவனுடைய மனமும் எத்தனை பிரம்மாண்டமானவை என்று ஒவ்வொரு முறை இந்தக் கோவிலின்  விமானத்தைப் பார்க்கும் போதும் நான் உணர்ந்திருக்கிறேன். அமைதியாக ஓடும் காவிரியின் கரைகளில் தமிழ் மன்னர்களின் போர் வெற்றியை உலகுக்குச் சொல்லியபடி நிற்கும் அந்தக் கோபுரங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு உண்டாகும் வாய்ப்பே இல்லை.

ஆறு : சிறுமலர் நடுநிலைப்பள்ளி – செஞ்சை – காரைக்குடி

6

கைகளை விரித்தபடி சாந்தமான முகத்தோடு நின்று கொண்டிருக்கும் இயேசு கிறிஸ்துவின் சிலைக்கு முன்பாக இருக்கிற ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு அறைகளில் அமர்ந்து லாரன்ஸ் ஐயாவின் தமிழையோ, ஸ்டீபன் சாரின் ஆங்கிலத்தையோ, புஷ்பராஜ் சாரின் அறிவியல் சமன்பாடுகளையோ இனியொரு முறை கேட்டுக் கொண்டிருக்க முடியாதா என்று ஏங்க வைக்கும் இடம், வாழ்க்கையின் மிக முக்கியமான எட்டு ஆண்டுகளை நான் இந்தப் பள்ளியின் அறைகளில் தான் கழித்திருக்கிறேன், மனித உணர்வுகளை, வாழ்க்கைப் பண்புகளை இன்னும் எல்லாவற்றையும் வண்ணக் கலவையாய் எனக்குள் ஊற்றிப் பார்த்து மகிழ்ந்த உயர்ந்த ஆசிரியர்கள், ஒழுக்கம் நிறைந்த அந்தச் சூழல், பாம்பு பிடிக்கப் பழகிக் கொடுத்த நாட்டான் கம்மாய் சேவியர், முதல் முதலில் தொலைக்காட்சிப் பெட்டியை எனக்காக இயக்கிய சங்கர நாராயணன் என்று மிக இயல்பாய் உணர வைத்த நண்பர்கள். இப்போதும் விடுமுறை நாட்களில் சென்று பூட்டிக் கிடக்கும் வகுப்பறைகளில் நான் அமர்ந்திருந்த இடங்களை சாளரங்கள் வழியாகப் பார்க்க வைக்கிற ஒரு கவர்ச்சியை அந்த வகுப்பறைகள் எப்படித் தனக்குள் வைத்திருக்கின்றன என்பது வியப்பான விஷயம் தான். எனது அழுகை, எனது சிரிப்பு, எனது நட்பு, எனது பரிசுகள், எனது பாடல்கள் என்று ஒரு மனிதனை வகுப்பறை எப்படி வளர்க்கிறது என்று இங்கு வரும் போதெல்லாம் நினைவு கொண்டே இருக்கிறேன்.

ஏழு : மரைன் டிரைவ் – மும்பை

7

நிரவிக் கிடக்கும் கருங்கல் பாறைகளில் மோதிச் சிதறும் அரபிக் கடலின் நீர்த்துளிகள் அவ்வப்போது கால்களை நனைக்க சீறிப் பாயும் படகுகளை வேடிக்கை பார்த்தபடி மாலையை இங்கு கழிப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம், மும்பையின் எளிய உழைக்கும் மக்களும், அடுக்கு மாடிகைக் குடியிருப்புக்காரர்களும், உலகின் எல்லா நாடுகளைச் சேர்ந்த மனிதர்களும் இங்கு ஒரே தெருவைச் சேர்ந்தவர்களைப் போல நடந்து செல்வது தான் இந்த இடத்தின் தனிச் சிறப்பு, அதற்காகவே எனக்கு இந்த இடத்தைப் பிடிக்கும், ஏறக்குறைய மும்பையின் உயர்ந்த கட்டிடங்கள் அத்தனையும் கடலுக்கு வெகு அருகே முளைத்துக் கிடப்பதைப் போலத் தோன்றும், இரவு கவிழத் துவங்க வெளிச்சப் புள்ளிகள் கடலை ஒட்டிய அந்த வளைந்த பாதையில் நகரத் துவங்குவதைத் தொலைவில் இருந்து பார்ப்பது சலிப்பை உண்டாக்காத ஒரு காட்சியாகவே இன்றும் இருக்கிறது, அலுவலக வேலைகளுக்காக அடிக்கடி மும்பை செல்லும் இப்போதும் கூட ஒரு முறை மரைன் டிரைவின் சாலையோர நடைபாதைகளில் நடந்து செல்வதை மறப்பதே இல்லை, ஒவ்வொரு முறை இந்தக் அரபிக் கடல் ஓரத்தில் நடந்து செல்கிற போதும் ஒரு ஆப்ரிக்கனின் புன்னகையோ, ஒரு ஐரோப்பியனின் சிரிப்போ எதிர்ப்பட்டு விடும், உலகை மிகச் சிறியதாக ஒரு உருண்டையான கிராமம் இருக்கிறதென்று நாம் நம்புவதற்கு நமக்கு அருகில் இருக்கும் இடங்களில் மிக முக்கியமான இடம் மும்பை.

எட்டு : சோமேஷ்வர் – மங்களூர் – கர்நாடகா

8

சோமேஷ்வர் கடற்கரை அதன் மாறுபட்ட நில அமைப்பிற்காக மிகப் பழமையானது, கரும்பாறைகளும், குன்றுகளும் நிரம்பிய அந்தக் கடற்கரை ஊர்ப்புறங்களில் இருந்து ஏறத்தாழ இருநூறு அடி கீழே இருக்கிறது, கோவிலின் பின்புறத்தில் இருந்து பார்க்கும் போது கடல் ஒரு முரட்டுக் குழந்தையைப் போல தொலைவில் சூரிய ஒளியோடு விளையாடிக் கொண்டிருக்கிறது, மாலையின் கதிர்கள் கடல் பரப்பெங்கும் சிதறி தங்க நிறத் துகள்களைப் போல மின்னும் போது பக்கத்தில் இருக்கிற குன்றின் மீதேறி இருட்டைத் தேடுவது ஒரு அற்புத அனுபவமாக இருக்கும், சோமேஷ்வர் கடற்கரையின் குதிரை, குதிரைக்காரச் சிறுவனின் வாழ்க்கை, தாழக் கிடந்து அலையடிக்கிற கடல், கடலைப் பார்த்தபடி ஒய்யாரமாக வீற்றிருக்கிற மலைக் குன்றுகள், வழிபாட்டுக்கென வந்து செல்லும் உள்ளூர்வாசிகள் என்று கண்ணுக்கே எட்டும் தொலைவு வரை இயல்பான வாழ்க்கையின் சுவடுகள் கிடைப்பதில்லை, கடலும், அடர்ந்த காடுகள் நிரம்பிய மலைக் குன்றுகளும் ஒட்டியபடியே இருக்கும் இந்தியக் கடற்கரைகளில் வாழிடப் பகுதியில் இருந்து வெகுவாக உயரம் குறைந்த கடற்கரை சோமேஷ்வர், ஏறத்தாழ படங்களில் பார்க்கிற நியூசிலாந்து கடற்கரைகளைப் போல மிகுந்த அழகும், கவர்ச்சியும் கொண்ட சோமேஷ்வர் ஒரு முறை கண்டிப்பாகப் பார்த்து ரசிக்க வேண்டிய கடற்கரை.

ஒன்பது : பைரப்பட்டனா – சன்னபட்டனா – கர்நாடகா

9

இந்த ஊர்  சுற்றுலாத் தளம் அல்ல, இந்த ஊருக்கு வரைபடங்களில் எந்த முக்கியத்துவமும் இல்லை, நகரங்களின் இரைச்சல் மிகுந்த சாலையை விட்டு இறங்கி வெகு தொலைவு உள்ளே வர வேண்டும், சரியான சாலைகளோ, போக்குவரத்து வசதிகளோ இந்தக் கிராமத்தில் இல்லவே இல்லை, ஆனாலும் மரங்களும், கேப்பை வயல்களும் நிறைந்த நிலப்பகுதியில்  தங்கள் ஆடு மாடுகளோடு நெருக்கமாகப் படுத்துறங்கும் இந்த ஊரின் மனிதர்கள் அன்புக்குப் பெயர் போனவர்கள், மொழியும், இனமும் ஒன்றாக இராத இந்த மனிதனைத் தனது அண்ணன் என்று கொண்டாடும் ஒரு தங்கையின் ஊர் இது, இந்த கிராமத்தின் வீதிகள் ஒட்டு மொத்த இந்தியாவின் சராசரி வீதிகளைப் போல அத்தனை நெருக்கம் நிறைந்த மனிதர்களைக் கொண்டது, இங்கு பறவைகள் திண்ணைகளில் அமரும் அளவுக்கு அன்பு நிரம்பிக் கிடக்கிறது, ஆடுகள் சில நேரங்களில் கன்றுக் குட்டிகள் கூட மனிதர்களின் மடியில் உறங்கும் அளவுக்கு இங்கு தாய்மையும், பெண்மையும் வழிந்தோடிக் கிடக்கிறது, மொழியை, நிலப்பரப்பை, உடைகளை, பண்பாட்டை, கலாச்சார அடையாளங்களை, உணவுப் பழக்கங்களை எல்லாம் கடந்து உயிர்களின் அன்பு எத்தனை வலிமையானது என்கிற வாழ்க்கையின் மிக உயர்ந்த சமன்பாட்டை எனக்குச் சொல்லிக் கொடுத்த ஊர் என்பதால் அடிக்கடி என்னை இந்த ஊரின் தெருக்களில் சந்திக்க முடியும்.

பத்து – அரசு ஊழியர் குடியிருப்பு – சிவகங்கை

10

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சிவகங்கையில் நாங்கள் வாழ்ந்த அந்த அரசுக் குடியிருப்பு வீட்டருகில் சென்று அதன் மாடிப்படிச் சுவர்களை தடவிப் பார்த்துக் கொண்டிருந்தேன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள், வினோதமான எனது செயல்பாடுகளை அந்த வீட்டின் தற்போதைய உரிமையாளர்கள் கொஞ்சம் அச்சத்தோடு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்து விட்டு “யார் நீங்கள், என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று கேட்டார்கள். என்ன சொல்வது அவர்களிடம் என்று எனக்குத் தெரியவில்லை, நான் சறுக்கி விளையாடிய இந்த மாடிப்படிச் சுவர்களை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை, அந்த வீட்டுச் சாளரத்தின் அருகில் இருக்கும் அடர்ந்த மரக்கிளைகளில் எனக்கு சில அணில் நண்பர்கள் என்று சொல்லவா?  புளியங்காய்களைப் பறித்து கொஞ்சம் உப்பும் மிளகாயும் சேர்த்து இந்த மாடிப் படிகளின் கீழே நான் எப்போதோ விளையாடிக் கொண்டிருந்ததைச்  சொல்லவா? , என்னுடைய நெடுநாள் வாழ்க்கை அவர்கள் இப்போது தங்கி இருக்கிற வீட்டின் உள்ளே புதைந்து கிடந்ததை அவர்களிடம் நான் எப்படி விளக்கிச் சொல்வது? நான் சிறுவனாய் இருந்தபோது நிகழ்த்திய உரையாடல்களின் மிச்சம் அந்த வீட்டுக்குள் ஒளிந்திருப்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். வீடு என்கிற பருப்பொருளின் உள்ளே பொதிந்து கிடக்கிற மனித மனதின் எல்லையற்ற உள்ளீடுகளை நான் முதன் முதலாய்க் கண்டுணர்ந்த பரப்பு என்பதால் எத்தனை இடங்களுக்குப் போனாலும், எத்தனை வீடுகளில் வசித்தாலும் அந்தச் சின்னஞ்சிறு  வீட்டின் சுவர்கள் எனக்குக் காட்டிய நெருக்கத்தை வழங்கவே முடியாது, அந்த வீட்டின் ஒவ்வொரு துகளும் நான் என்கிற அகப்பொருளை உள்ளிழுத்துக் கொண்டவை, நான் என்பது அந்த வீட்டில் புதைந்திருக்கும் எனது நினைவுகளும் சேர்ந்ததே…….

***********

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: