கை.அறிவழகன் எழுதியவை | ஜனவரி 4, 2013

மறக்க முடியாத பத்து மனிதர்கள்.

பத்து : மோனிகா செலஸ்.

seles1

எனது வயதை ஒத்த நண்பர்கள் எல்லாம் "ஸ்டெப்பி கிராப்" ரசிகர்களாக இருந்த காலத்தில் நான் ஒரு தீவிர "மோனிகா செலஸ்" ரசிகனாயிருந்தேன், அவர் டென்னிஸ் விளையாட்டில் ஒரு பின்னங்கை சிறப்பு ஆட்டக்காரராக இருந்ததோ, இல்லை அவர் பல க்ராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றதோ அதற்குக் காரணம் அல்ல, களத்தில் அவர் காட்டுகிற ஆவேசமும், தனி மனித உணர்வுகளும் தான் என்னை அவரைக் கூர்ந்து நோக்க வைத்தது, ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டு விளையாடுவதைப் பார்த்த எனக்கு அவருடைய அந்த ஆக்ரோஷம் ஒரு தனிச் சிறப்பானதாகத் தோன்றியது, ஆனால் அவருடைய அந்தக் கோபம் எப்போதும் எதிர் ஆட்டக்காரர் மீது வெளிப்படாது, தன்னையே அவர் திட்டிக் கொள்வார், குள்ளமாய், குழி விழும் கன்னங்களோடு, முன் பற்கள் உள்வாங்கிய அவருடைய புன்னகைக்காக பல மணி நேரம் சளைக்காமல் அவருடைய ஆட்டங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன்,

எனது பெண் எப்படி இருக்க வேண்டும் என்று யாராவது அவளைக் கேட்காமல், என்னைக் கேட்டால் இப்போதும் தயங்காமல் மோனிக்கா செலஸ் போலிருக்க வேண்டும் என்று என்னால் சொல்ல முடியும், நான் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தவள், வெற்றிக்காகவே பிறந்தவள் போன்ற ஒரு நம்பிக்கை அவருடைய கள ஆட்டங்களில் மட்டுமன்றி ஆடுகளத்திற்கு வெளியேயும் எதிரொலிக்கும், 1993 இல் "குண்ட்டர் பர்ச்சே" என்கிற தீவிர ஸ்டெபியின் ரசிகர் ஒருவர் அவரது தோள்பட்டையில் குத்திய போது எனக்கும் வலித்தது, இரண்டு ஆண்டுகள் டென்னிஸ் விளையாட்டில் இருந்து விலகி இருந்தார் மோனிகா, 1995 இல் மீண்டும் திரும்பி வந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டார், க்ராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதி ஆட்டங்கள் பலவற்றுக்குத் தகுதி பெற்ற அவரிடம் இருந்து அந்தப் பழைய ஆக்ரோஷம் வெகுவாகக் குறைந்திருந்தது.

பெண்களுக்குப் வாழ்வின் பல பகுதிகளில் இழைக்கப்படும் அநீதிகளைப் போலவே மோனிகா செலசுக்கும் நிகழ்ந்தது, ஒரு விளையாட்டு வீராங்கனையை அவர் விளையாடிக் கொண்டிருக்கும் போதே முதுகில் குத்துவது என்பது ஒரு ஆணாக என்னை வெட்கித் தலை குனிய வைத்தது, மனநிலை சரியில்லாதவன் என்று தண்டனைகளில் இருந்து தப்பினான் குண்ட்டர். ஆனாலும், சளைக்காமல் போராடி மீண்டெழுந்து வந்து தனது மன வலிமையை உறுதி செய்தார் மோனிகா, விளையாடும் காலத்தில் இருந்தே உணவற்ற ஏழை மக்களின் குழந்தைகளுக்காகத் தன்னால் இயன்றவற்றை செய்து கொண்டிருந்தார் அவர், பின்னாட்களில் ஐக்கிய நாடுகள் அவையால் வறுமைக்கு எதிரான இயக்கமொன்றுக்கு தூதுவராக நியமிக்கப்பட்டார், மறக்க முடியாத அவரது கன்னக் குழிச் சிரிப்பும், ஆக்ரோஷமும் ஒட்டு மொத்தப் பெண்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவே இப்போதும் உணர்கிறேன் நான். மோனிகா செலஸ் மறக்க முடியாத பெண்ணல்ல, மனிதர்……..

ஒன்பது : கமல் தயாளன்

Kamal

காட்சி ஒன்று : கடந்த ஆண்டின் துவக்கத்தில் கல்லூரி கால வழக்கு ஒன்றுக்காக காரைக்குடி நீதிமன்றத்துக்கு வெளியே நின்றிருந்தோம், அந்த வழக்கு ஒரு சக மாணவனின் மீதான சாதி ரீதியான தாக்குதலை எதிர்த்து நாங்கள் மேற்கொண்ட எதிர்த் தாக்குதல் காரணமாக எங்கள் மீது தொடுக்கப்பட்டது, ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நீடிக்க, முந்தைய இரண்டு வாய்தாக்களுக்கு நாங்கள் யாருமே செல்லவில்லை, வழக்கறிஞர்களின் போராட்டம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்ததால் இரண்டு வாய்தாவிலும் மனு கொடுக்க முடியாமல் போனது.

நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பிக்க, குறைந்த பட்சம் மூன்றாவது வாய்தாவுக்கு நீதிமன்றம் சென்று சரணடைய வேண்டும், அப்படிச் சரணடையவே நாங்கள் நின்று நீதிமன்றத்தில் கொண்டிருந்தோம். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் காக்க வைத்து விட்டு விடுவித்து விடுவார் நீதிபதி என்று எங்கள் வழக்கறிஞரின் எழுத்தர் நம்பிக்கையூட்ட நீதிமன்றத்துக்கு உள்ளே காத்துக் கொண்டிருந்தோம், வழக்குகளை வேகமாக முடிக்க வேண்டும் என்று ஆவலோடு இருந்த புதிய நீதிபதிக்கு எங்கள் மீது கடுங்கோபம் இருந்திருக்க வேண்டும்.

எங்கள் முறை வந்த போது கோப்பில் வேகமாக எதையோ எழுதத் துவங்கியவர், "இவர்கள் யாரும் ஒன்றாக வரப்போவதுமில்லை, நான் வழக்கை முடிக்கப் போவதுமில்லை" என்று கோபமாகச் சொல்லி விட்டு ஐந்து நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு எழுதி விட்டார். தொடர்ந்து ஒரு வாரம் (மூன்று நாட்கள் அரசு விடுமுறை) சிறையில் கழிக்க நேரிடும் ஒரு இக்கட்டான சூழல்.

சிறையில் இருப்பது அல்ல சிக்கல், ஒரு நேர்மையான காரணத்துக்காக, சாதீயத் தாக்குதல் என்கிற அப்பட்டமான ஒரு அநீதியை எதிர்த்து சிறையில் இருப்பது என்னைப் பொறுத்த வரையில் நிறைவான மனநிலை தான், ஆனால், குடும்பத்தினருக்கோ, அல்லது அலுவலகத்துக்கோ எந்தச் செய்தியும் தெரிவிக்க இயலாமல் போய் விடும், நீதிபதியின் அறிவுரைப்படி எங்களை அழைத்துச் செல்வதற்குக் காவலர்கள் தயாராகி சில கோப்புகளில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டார்கள், நீதிமன்றத்தில் பணிபுரிகிற பாதி வழக்கறிஞர்கள் கல்லூரியில் கூடப் படித்தவர்கள், வெளியே கூடி இருந்த நண்பர்களும் கலவரமடைந்தார்கள்.

கடைசியாக ஒரு வாய்ப்பு இருந்தது, இந்த வழக்கில் துவக்கத்தில் இருந்து அக்கறை காட்டிய நண்பன் கமல் தயாளனுக்குத் தகவல் சொல்வது. அழைத்து விவரம் சொன்னவுடன் "நான் தேவகோட்டையில் இருக்கிறேன், உடனே கிளம்பி வருகிறேன்" என்று சொல்லி வைத்து விட்டான். இருந்த ஒரே நம்பிக்கையும் தகர ஆரம்பித்தது, தேவகோட்டையில் இருந்து வருவதற்கே இரண்டு மணி நேரம் ஆகலாம், மணி ஏறத்தாழ பிற்பகல் இரண்டாகி விட்டது. காவலர்கள் எங்களை அழைத்துக் கொண்டு திருப்பத்தூர் கிளைச் சிறைச்சாலையில் சேர்ப்பதற்கு நகரத் துவங்கினார்கள். காவலர்களிடம் "இன்னும் கொஞ்ச நேரம் பொறுங்கள், நண்பர்கள் நீதிபதியோடு பேசப் போகிறார்கள்" என்று சொன்னால் ஏளனமாகச் சிரிக்கிறார்கள், "ஜாமீன் வரும் போது வாங்கிக்கலாம் தம்பி, கிளம்புங்க". ஒரு வழியாக எங்கள் பயணம் திருப்பத்தூர் கிளைச் சிறை நோக்கித் துவங்கி இருந்தது.

காட்சி இரண்டு :  தேவகோட்டையில் இருந்து அரை மணி நேரத்தில் வந்த நண்பன் கமல், ஓய்வு அறையில் சென்று நீதிபதியைச் சந்தித்து உடனடியாக எங்களை விடுவிக்கும் பிணை ஆணையை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறான், கூடவே இன்னும் சில கூடப் படித்த (பிரகாஷ்) வழக்கறிஞர் நண்பர்களும். நீதிபதி "ஒரு முறை நீதிமன்றக் காவலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதனை உடைப்பது அதே நாளில் சாத்தியமில்லை" என்று சொல்லி இருக்கிறார், நண்பன் விடுவதாயில்லை, "இது எங்களுடைய தனிப்பட்ட கோரிக்கை, நாங்கள் தனிப்பட்ட முறையில் எந்த வேண்டுகோளையும் உங்களிடம் வைத்ததில்லை, முதன் முறையாகக் கேட்கிறோம், பிணை ஆணை வழங்குங்கள்" என்று வாதிடத் துவங்கி இருக்கிறார்கள், "அப்படி நடைமுறை இல்லை" என்று சொல்லித் திருப்பி அனுப்பி விட்டு நீதிபதி பகல் உணவுக்கு வீட்டுக்குச் சென்று விட்டார்.

நண்பன்(கள்) வீட்டுக்குச் சென்று பல்வேறு சட்ட நூல்களை எடுத்துக் குறிப்புகள் எடுத்துக் கொண்டு நீதிபதியின் வீட்டுக்குச் சென்று "அதே நாளில் பிணை ஆணை வழங்கி இருப்பதற்கான ஏராளமான முன்னுதாரணங்கள் இருக்கிறது. நீங்களும் அப்படியே செய்ய வேண்டும்" என்று வாசலில் நிற்க, நட்பின் தீவிரத்தையும், ஆழத்தையும் நண்பர்களின் பண்பையும் உணரத் துவங்கி இருக்கிறார் மேன்மை மிகுந்த நீதிபதி.". மூன்று மணிக்கெல்லாம் பிணை ஆணையில் கையெழுத்திட்டு "எனது வாழக்கையில் இப்படி ஒரு அவசரப் பிணையை யாருக்கும் வழங்கியதில்லை கமல், ஆனாலும் நான் உங்கள் நட்பின் வலிமையை நான் மதிக்கிறேன். இது தவறாக இருப்பினும் கூட உளப்பூர்வமாக இந்த ஆணையை நான் வழங்குகிறேன்." என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.

காட்சி மூன்று : நாங்கள் திருப்பத்தூர் கிளைச் சிறையை அடைந்த போது மாலை நான்கு மணியாகி விட்டது, கிளைச் சிறைக் காவலர்கள் எங்கள் தனிப்பட்ட குறிப்புகளை பதிவு செய்யத் துவங்கிய போதே பிணை ஆணை கிளைச் சிறையை வந்தடைந்து விட்டது, "இவர்கள் இருவருக்கும் பிணை ஆணை வந்திருக்கிறது" என்று வாயிற் காவலர் தலைமைக் காவலரிடம் சொன்ன போது அவர் வியப்பில் விழிகளை விரித்தார்.

"என்னப்பா, பெரிய அரசியல்வாதிகளுக்குக் கூட பிணை ஆணை பின்னாலேயே வருவதில்லை, யாருப்பா நீங்க" என்று பிணை ஆணையைச் மலங்க மலங்க சரி பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரியாது அந்தப் பிணை ஆணையின் பின்னே ஒளிந்திருக்கிற நட்பின் வலிமையையும், ஆழமும். வாழ்க்கையில் நண்பர்களால் என்ன செய்ய முடியும் என்று முட்டாள்தனமாகக் கேள்வி கேட்கிற எவரையும் பார்த்து என்னால் சொல்ல முடியும், "உண்மையான நட்பும், அன்பும் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியவான்கள், அவர்களால் எதையும் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி வழங்கி விட முடியும்". அப்படி ஒரு நண்பனை நான் பெற்றிருக்கிறேன் என்று நினைத்துப் பார்ப்பது கூட அத்தனை மகிழ்ச்சியானது.

சிறைக் கம்பிகளை உடைத்து எங்களை அள்ளி அணைத்துக் கொண்டது நட்பு. இதில் தனிச் சிறப்பு என்னவென்றால் இன்று வரையில் எப்போது பேசினாலும் அவன் எதிர் கொண்ட அந்தச் சிக்கலான கணங்கள் குறித்து எதுவுமே பேச மாட்டான் கமல். நட்பு என்கிற அளப்பரிய ஒரு உறவின் மகத்துவத்தை என்றென்றும் எனது உள்ளத்தில் நிறைத்து அழியாமல் கிடக்கிறான் கமல் தயாளன் என்கிற "வக்கீல்".

எட்டு : சோனு நிகம்

sonu3

ஒரு நள்ளிரவு நேரம், அமைதியான காற்று அசைக்கும் இலைகளின் ஓசையைத் தவிர வேறெந்த இயக்கங்களும் இல்லை, அரைவட்ட நிலவு வீட்டு முற்றங்களில் இருளடைந்த வெளிகளில் ஒளியின் விழுதுகளைப் பாய்ச்சியபடி நகர்ந்து கொண்டிருந்தது, வைக்கம் முகம்மது பஷீரின் "பாத்துமாவின் ஆடு" என்கிற நாவலைப் படித்து முடித்த கையோடு படுக்கையில் சாய்ந்து கொள்கிறேன், காதுகளில் பொருத்தப்பட்டிருந்த இசைக்கயிற்றின் வழியாக யாரோ ஒரு பெண் பேசி முடித்த பிறகு ஒரு மெல்லிசை செவிப்பறைகளின் வழியாக உடலின் வெகு நுட்பமான நியூரான்களை உசுப்பியபடி மிதக்கிறது, வாழ்க்கையின் சுமை, நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிற கடமைகள், கவலைகள் எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிற உடலின் வாதைகளை உடைத்துப் பெரு வெள்ளமாய்ப் பாய்கிறது அந்தக் குரல்.

"தோ பல் ருக்கா………அவுர் பில் சல் தியே, தும் கஹா, ஹம் கஹா……." கூடவே இழைகிற வயலினின் குரலை மென்மேலும் இனிமையாக்கியபடி மனதைப் பிசைகிறது அந்தக் குரல், பல முறை கேட்டிருக்கிற குரல் தான், ஆனாலும், அந்த இரவு தான் சோனு நிகம் என்கிற ஒரு மாயக் குரலை முதன் முறையாக உணர்த்துகிறது, இந்திய இளைஞர்களின் கனவுக் குரல் அது, அதற்குப் பிறகு எத்தனையோ பாடல்கள், கன்னடத்தில், தெலுங்கில் என்று கேட்கக் கேட்கச் சலிப்படைய வைக்காத இனிமையான பாடல்கள், கன்னடத்தில் "சஞ்சு மத்து கீதா" என்றொரு பாடல், இசையின் வெகு நுட்பமான பகுதிகளை எல்லாம் ஒரு பாடகனின் குரல் எத்தனை ஈடுபாட்டோடு கண்டடைகிறது என்பதை உணர்த்திய பாட;ல், நான் கேட்ட மிகச் சிறந்த பாடல்களில் அதுவும் ஒன்று.

“ஹல் கடி கடி………..ஹர்பல் யஹா, ஜீபர்ஜியோ….ஜோ ஹே சமா”………என்று காட்டும் உணர்ச்சிப் பெருக்கில் நனையாதவர்கள் பாவம் செய்தவர்கள். தமிழ் இசை அமைப்பாளர்கள் இன்னும் அவரது குரலை அடையாளம் காணவில்லையா? அல்லது அவருக்கே விருப்பம் இல்லையா? என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு கர்நாடக இசைக் கலைஞனாக உலகின் பல்வேறு பாடகர்களின் குரலை ஊடுருவிக் கேட்டிருக்கிறேன், அடேல் என்கிற ஆங்கிலப் பாடகியின் குரல் அப்படியே மூளையின் கேட்கும் நியூரான்களை உலுக்கும், புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டது. அதற்கு இணையான ஏன் ஒரு படி மேலேயே ஒரு குழைவை, உயிரின் உளுப்பலை சோனுவின் குரல் வழங்குகிறது.

இந்தக் கட்டுரையின் இந்தப் பத்தியை எழுதி முடித்து விட்டு அலுவலகத்திலிருந்து கிளம்பி ஒரு நகரப் பேருந்தில் பயணிக்கத் துவங்குகிறேன், இறங்கப் போகும் தருணத்தில் கன்னடத்தில் ஒலிக்கிறது சோனுவின் குரல், “ஏ……நெந்து ஹெசரிடலி ஈ சந்த அனுபவக்கே”…….(இந்த அற்புதமான உணர்வுக்கு என்ன பெயரிடுவது?) ஏறத்தாழ டி எம் எஸ் இல்லாத நமது தமிழகக் கிராமங்களைப் போல சோனு நிகம் இல்லாத வட இந்திய நகரங்களே இல்லை எனும் அளவுக்கு அவரது குரல் பள்ளத்தாக்குகள், மலைச் சிகரங்கள், ஆறுகள், பெருங்கடல்கள் என்று ஓங்காரமாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது, சோனு நிகம் மறக்க முடியாத மனிதர் அல்ல, மறக்க இயலாத இந்தியாவின் குரல்…….

ஏழு : ரஜினிகாந்த் என்கிற சிவாஜி ராவ் கெய்க்வாட்.

rajini-in-sramakrishnan-function

ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னொரு மாலையில் "பாயும் புலி" திரைப்படத்தை இன்று பார்த்தே ஆக வேண்டும் என்று அழுது அடம் பிடித்து அப்பாவிடம் அடி வாங்கி அப்பத்தாவோடு வேறு வழியில்லாமல் சிவகங்கையின் ஸ்ரீராம் திரையரங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டேன், அம்மாவையும், தங்கையையும் கொன்றவர்களைப் பழி வாங்கும் ஒரு அப்பாவி இளைஞனின் வழக்கமான இந்தியக் கதை, ஆனால், என்னைப் போன்ற எண்ணற்ற தமிழகச் சிறுவர்களை அது வசீகரம் செய்தது, அவரது உடல் மொழியும், இயல்பான உரையாடல்களும், கருப்பான நிறமும் நமக்குள் ஒளிந்து இருக்கிற ஒரு நிழல் மனிதனை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது தான் ரஜினி என்கிற மகத்தான மனிதனின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம்.

ஊடகங்கள் அவரைத் வளர்த்தன, அவர் திட்டமிட்டு வளர்க்கப்பட்டார், பார்ப்பனீய லாபி ஒன்று அவருக்காக இயங்குகிறது, அவர் கன்னட வெறியர், மராட்டிய பொரியர், அது இதுவென்று கண்ணா பின்னாவென்று விமர்சனங்களை எல்லாம் தாண்டி ரஜினி என்கிற அழிக்க முடியாத பிம்பம் எனக்குள்ளும் ஊடுருவி இருப்பது குறித்து எனக்கே சில நேரங்களில் எரிச்சல் வரும், தனது அடுத்த படத்தில் வரும் ஏதாவது ஒரு நகைச்சுவைக் காட்சியில் அந்த எரிச்சலை அவரே சரி செய்து விடுவார். சிவாஜி திரைப்படத்தை பீ வீ ஆரில் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு காட்சியில் ஆரு? என்று கேட்கும் தொழிலதிபரிடம் ஆங், மோரு" என்று ஒரு அழிச்சாட்டியமான முகபாவத்தோடு அவர் சொன்ன போது தான் நான் வாழ்க்கையில் அடக்க முடியாமல் கடைசியாகச் சிரித்தேன் என்று நினைக்கிறேன். எம்ஜி.யாருக்குப் பிறகு தமிழகத்தில் சமூக அரங்கில், அறிவுத் தளத்தில் இயங்குபவர்களால் அதிகமாக விமர்சிக்கப்படுபவர் ரஜினிகாந்த்.

இயக்குபவர்கள்,தயாரிப்பாளர்கள், இன்னும் ஏராளமான தொழில் கலைஞர்கள் எல்லாவற்றையும் தாண்டி ஒரே ஒரு சொல் மட்டுமே மிச்சமிருக்கும் இவரது திரைப்படங்களின் வணிகத்தில், வெற்றியில், தோல்வியில், விருதுகளில், செய்திகளில் இன்னும் எல்லாவற்றிலும்….அந்தச் சொல் இதுதான், "இது ரஜினி படம்ல". இவரை எந்தக் குறிப்பிட்ட காரணத்துக்காக உங்களுக்குப் பிடிக்கும் என்று என்னிடம் கேட்டால் அதற்கான நேர்மையான பதில் "தெரியாது" என்பது தான். ஒரு மனிதரை நமக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்வதற்கு காரணங்கள் கட்டாயம் இருக்க வேண்டுமா என்ன?

எந்தக் காரணங்கள் இன்றி எண்ணற்ற மனிதர்களுக்குப் பிடித்திருப்பதைப் போல எனக்கும் ரஜினியைப் பிடிக்கும்.மனதில் பட்டதைச் சொல்வது, மனதுக்குப் பிடித்தவற்றைச் செய்வது, பிறகு மன்னிப்புக் கேட்பது, உளறிக் கொட்டுவது, பிறகு உணர்ந்து கொண்டேன் என்பது என்று நம்மைப் போலவே இருப்பதால் கூட ஒரு வேளை நமக்கு இவரைப் பிடித்திருக்கலாம். வெகு இயல்பான இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை என்கிற மாதிரி மேடைகளில் அமர்ந்திருக்கும் இந்த மனிதருக்கும், திரைகளில் நிழலாடும் ஒரு பத்தாயிரம் மெகாவாட் மின் ஆற்றல் கொண்ட இவரது முகத்துக்கும் இடையிலான வேறுபாடு தான் ரஜினி என்கிற பிம்பம், அது தமிழ் மக்களின் சமூக மனதில் உறைந்து போயிருக்கும் ஒரு கலாச்சாரமாக மாறி இருப்பது நன்மையா, தீமையா என்ற விவாதத்தால் கூட இன்னும் இரண்டு ரசிகர்களை அவர் கூட்டிக் கொண்டு விடுகிறார், அதுதான் அவரது வெற்றியின் மந்திரமும் கூட.

ஆறு : கலைஞர் மு கருணாநிதி

Karunanidhi

இந்த மனிதரை எனக்குப் பிடிக்கும் என்று நான் சொல்வதை என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பலரே இன்றைக்கு விரும்புவதில்லை, இணையத்தில், நேரடி வாழ்க்கையில் என்று பல நண்பர்கள் என்னிடத்தில் இதற்காக முரண்பட்டிருக்கிறார்கள், ஆனாலும் மிக நேர்மையாக ஒரு மனிதரைப் பிடிக்கும் என்று சொல்வதில் எனக்கு சிறிதளவும் முரணில்லை, ஏனெனில் என்னுடைய சம காலத்தில் இந்த மனிதரே அரசியலுக்கும், மொழிக்குமான ஒரு இணையில்லாத பிணைப்பைக் கொண்டிருக்கிறார், தெலுங்கு வழி வந்தவர் என்று பலர் இவரைத் தூற்றினாலும், இவரே தமிழின் தொன்மையான பல நூல்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார், புறநானூற்றின், அகநானூற்றின் வழியாகப் பொதிந்து கிடந்த எனது மொழியின் நுட்பங்களை இவரே ஒரு சாமான்ய மனிதனுக்கு விளங்கும் மொழியில் எழுதிக் காட்டினார்.

மேடைத் தமிழின் இலக்கணங்களை, இலக்கியங்களின் துணையோடு இந்தக் கிழவரே இன்னொரு தலைமுறைக்குக் கடத்தினார், இவருடைய அரசியல் நகர்வுகளை விட, இலக்கிய நகர்வுகள் இவர் மீது ஒரு தீராத காதலை என்னைப் போலவே எண்ணற்ற இளைய தலைமுறை மனிதர்களின் கனவுகளுக்குள் புகுத்தி இருக்கிறது. அரசியலாகட்டும், இலக்கியமாகட்டும், திரைப்படமாகட்டும் இவரது உழைப்பும், ஈடுபாடும் போற்றத் தகுந்தவை என்பதில் யாருக்கும் முரண்பாடுகள் இருக்க முடியாது, மூன்று தலைமுறை மனிதர்களுக்கு ஒரு தலைவராக மட்டுமன்றி, தமிழ்ச் சமூகத்தின் மொழி வழிச் சிந்தனைகளை இவர் வழி நடத்தினார், நடத்துகிறார். உலகின் மூத்த குடிமக்களின் மொழியை அவர்களின் அரசியலோடு கலந்து குறைந்தது ஒரு படியாவது முன்னேறிச் செல்வதற்கு இவர் ஒரு காரணமாய் இருக்கிறார் என்று நான் தயங்காமல் சொல்வேன்.

சங்கத் தமிழ் என்கிற எட்ட முடியாத மொழியின் தொன்மையை எளிமையாய் எந்தப் பல்கலைக் கழகத்திலும் படிக்காமல் உரைத்தவர். தமிழ் மக்களின் துயரத்தில் எத்தனை அழுத்தமாக இவரது பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அதை விட ஒரு விழுக்காடாவது மேன்மை பொருந்திய அழுத்தமாக இவரது பெயர் தமிழ் மொழியின் வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான அவதானிப்பு. தமிழக அரசியல் வரலாற்றில் தமிழ் மொழியின் சிறப்பியல்புகளை அதன் நுட்பமான கவித்துவமான வரலாற்றை அறிந்து வைத்திருந்த, வைத்திருக்கிற கடைசித் தலைவர் இவரே என்கிற ஒரு காரணமே வெறுப்புகளையும், முரண்களையும் தாண்டி இவரை நேசிக்கிற ஒரு மிகப்பெரிய காரணியாக என்னிடத்தில் எப்போதும் எஞ்சி இருக்கும்.

ஐந்து : பழனியப்பன்

a-hug-from-a-friend

சதுர வடிவமான முகமும், கரு கருவென்று மண்டிக் கிடக்கும் மீசையும், தாடியும் இந்த மனிதனை முதன் முதலாகப் பார்க்கிற யாருக்கும் ஒரு அச்சம் வரும், ஐயா மகன் என்று அழுத்தமான இன்றும் மரியாதையாக அழைக்கப்படும் இந்த மனிதனை இரண்டு மூன்று நாட்கள் அருகில் இருந்து பார்க்கும் யாரும் கையில் ஒரு கிலுகிலுப்பையை எடுத்துக் கொண்டு விட வேண்டியது தான், அத்தனை குழந்தைத் தனமானவன், இதயத்தின் உள்ளறைகளில் இருந்து சிரிப்பது எப்படி என்பதை இவனிடத்தில் இருந்து யாரும் கற்றுக் கொள்ள முடியும், பள்ளியில், கல்லூரியில் எத்தனையோ மாணவர்களின் நண்பன் என்பதைத் தாண்டி எத்தனையோ மாணவர்களின் தேர்வுக் கட்டணம் கட்டியவன் இவன், அடகுக்கடை குறித்த எந்த அறிவும் இல்லாமல் இருந்த நண்பர்களின் நடுவில் கையில் கிடந்த மோதிரங்களை, கழுத்தில் கிடந்த சங்கிலிகளை எல்லாம் வைத்து புன்னகையை விலையாகப் பெற்றுக் கொண்டவன்.

தமிழ்ச் சமூகத்தின் அளப்பரிய பண்பாகிய விருந்தோம்பலின் மிக உயர்ந்த இலக்கணங்களை இவன் வீட்டில் உண்ட போதெல்லாம் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன், சாதி என்கிற மிகப்பெரிய போதையில் திளைக்கிற மக்களைச் சுற்றமாய்க் கொண்டவன் ஆனாலும், சாதியின் நிழல் கூடத் தன் மீது படியாமல் இந்த மனிதனால் எப்படி வாழ முடிகிறதென்று இன்று வரைக்கும் வியக்க வைக்கும் ஒரு ஈடு இணையற்ற நண்பன். இரண்டு லட்சத்தை ஏமாற்றிச் சென்ற சமீபத்து நண்பனைக் கூட இவன் சினந்து பேசி எங்களால் பார்க்க முடியவில்லை, அப்பா சேர்த்த பொருளின் பாதியை அனேகமாக அள்ளிக் கொடுத்தே கரைத்திருக்கிறான். பெண்களின் மீதும், ஆசிரியர்களின் மீதும் இவன் காட்டுகிற அக்கறையும், நேசமும் ஒழுக்கம் குறித்த பல்வேறு பாடங்களை வாழ்வியலில் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் என் மதிப்பீடுகள் மாறாத ஒரு மனிதனாக இவன் மட்டுமே எஞ்சி இருப்பான் என்கிற என்னுடைய நம்பிக்கை தான் சாதியத்தின் கொடிய வேர்களை நம்மால் வென்று விட முடியும் என்கிற மிகப்பெரிய நம்பிக்கையை அழியாமல் எனக்குள் பாதுகாக்கிறது. இரண்டு, குழந்தைகளோடும் நண்பர்களோடும் காரைக்குடி நகரின் வீதியில் அடையாளம் காண முடியாத மனிதனாக இருந்தாலும் தமிழ்ச் சமூகத்தின் உண்மையான அடையாளம் காணப்பட்ட முகம் என்று என் நண்பன் பழனியப்பனை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவனது கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பும் அதட்டலும் ஒரு மிகப் பாதுகாப்பான உலகில் நாம் பிறந்திருக்கிறோம் என்று எப்போதும் என்னை உணரச் செய்யும், பழனியப்பனை நான் பார்ப்பதும் பேசுவதும் ஒரு இயல்பான நண்பர்களின் சந்திப்பு என்று மற்றவர்களுக்குத் தோன்றலாம், என்னைப் பொருத்தவரை அது ஒரு எல்லையற்ற ஆனந்தம், விலையற்ற செல்வம்.

நான்கு : இளவரசி டயானா

diana_tout

மிக எளிமையான நடுத்தர வர்க்கத்துப் பெண்ணாக இருந்து உலகின் உச்சத்தைத் தொட்டுப் பார்த்தவள் இந்த இளவரசி, இளவரசி என்கிற சொல்லுக்கான முழுமையான பொருளை உள்ளீடு செய்தவள் இந்தப் பெண், வேல்ஸ் கோட்டையின் எஞ்சிய கதவுகள் அனைத்தையும் ஏழைகளின் குடிசைகளுக்குத் திறந்து காட்டியவள், இங்கிலாந்துக் கோட்டைகளின் இறுக்கத்தை உடைத்து எளிய உழைக்கும் மக்களின் வாழிடம் நோக்கியவள், ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்குக் கூடப் பணியாட்களால் தூக்கிச் செல்லப்படும் செல்வச் செழிப்பை விரும்பாமல் வீதிக்கு நடந்து வந்தவள். உலகின் ஒப்பற்ற வீட்டில் இருந்து வீடற்ற மக்களைப் பற்றியும், உலகின் ஒப்பற்ற உணவு மேசையிலிருந்து உணவற்ற மக்களைப் பற்றியும், வழிபாட்டுக்குரிய தனது அழகின் சிம்மாசனத்தில் இருந்து சுருக்கங்கள் நிரம்பிய முதியவர்களைப் பற்றியும் வெகு நேரம் சிந்தித்த இளவரசி என்பதே இவளை நான் மிக உயரத்தில் வைத்துக் கொண்டாடும் காரணியாக இருக்கிறது.

ஆங்கில அரச வர்க்கம் சீண்டிப் பார்க்காத தொழு நோயாளிகளின், எய்ட்ஸ் நோயாளிகளின் மருத்துவமனைகளை இந்தப் பெண்ணின் அழகான மனம் வருடிக் கொடுத்தது, பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்ந்து தரைமட்டமாகிய அரச பாரம்பரியத்தின் உயர் மதிப்பீடுகளையும், வெற்றிகளையும் இந்த இளவரசியால் மட்டுமே தூக்கி நிறுத்த முடிந்தது. தனது அரச குடும்பத்தின் விலை உயர்ந்த ஆடைகளை விற்று ஆப்ரிக்காவின் ஆற்றங்கரைகளில் ஆடித் திரிந்த ஆடைகளற்ற குழந்தைகளுக்கு அழகு சேர்க்க நினைத்த இந்தப் பெண்ணின் ஒப்பற்ற இரக்கமே இவளை இன்று வரை மரணத்தைத் தாண்டி இளவரசியாகவே வைத்திருக்கிறது. சம காலத்தில் அழகுக்கும், கருணைக்கும், எளிய மக்களின் குழந்தைகள் மீது அவள் கொண்ட அன்புக்குமாய் ஈடு இணையற்ற உலக மக்களின் இளவரசியாய் அவள் நிலைத்திருப்பதற்கு இத்தனை காரணங்கள் போதாதா என்ன?

எத்தனை உயரத்தில் இருந்தாலும் ஒரு பெண்ணே இப்புவிப் பந்தின் பள்ளத்தாக்குகளில் கருணையை, எல்லைகளற்ற அன்பை வழிய விடும் முழுத் தகுதியும் உடையவள் என்பதை இறுதி வரை அவள் உறுதி செய்து கொண்டிருந்தாள். பெண்ணுடல் மீது ஒரு தனி மரியாதையை வழங்கிச் சென்றவள் என்ற வகையில் பேரண்ட வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மகத்தான பெண் டயானா. தனிப்பட்ட உடல் வாழ்க்கையின் விமர்சனங்களை அவள் மீது தூக்கி எறியும் யாரும் பெண் என்கிற சக உயிரின் ததும்பி வழிகிற விடுதலை உணர்வை அறியாத மடையர்கள் என்று நான் சொல்வேன்.

அதிகாரங்களுக்கும், அளவற்ற செல்வத்துக்கும் அடிபணியாது அப்படி வாழ்கிற துணிச்சல் அத்தனை எளிதில் யாருக்கும் வாய்த்து விடுவதில்லை. அவள் குறியீடுகளை உடைத்து ஒரு முழுமையான விடுதலை பெற்ற பெண்ணாக வாழ நினைத்தவள், உலகம் அத்தனை எளிதில் எந்தப் பெண்ணையும் அப்படி விட்டு விடுமா என்ன? துரத்தித் துரத்தி அவளது படுக்கையின் திரைகளை விலக்க நினைத்து வீதியில் சிதறடித்தது அந்த இளவரசியின் உடலை………

மூன்று : தொல்.திருமாவளவன்

7-23-2011-42-thirumavalavan-condemns-centre

பிறவித் தகுதிகள், பிறவித் தடைகள், வறுமை, ஆதிக்கத்தின் அழுத்தம், அதிகாரத்தின் வலிமை இப்படி எல்லாவற்றையும் தாண்டி ஒரு எளிய விவசாயியின் மகனால் தனது உழைப்பால் மட்டுமே ஒரு சமூகத்தின் அரசியல் தலைவனாக வந்து விட முடியுமா என்கிற மிகக் கடினமான கேள்விக்கு ஒரு விடை இருக்கிறது, அந்த விடை திருமாவளவனின் வாழ்க்கை, முற்றிலும் வெறுக்கப்படும் எந்த ஒரு மனிதப் பண்பையும் நீங்கள் இவரிடம் பார்ப்பது அத்தனை எளிதல்ல, நஞ்சைக் கக்கும் சாதிய வித்துக்களை செல்கிற இடமெல்லாம் உமிழ்கிற நச்சுப் பாம்பாக மாறி விட்ட மருத்துவரின் முரணுக்கு இந்த மனிதர் திருப்பி அளிப்பது, நட்பையும், அன்பையும் தான். அது அச்சத்தால் விளைந்த நிலைப்பாடு என்று ஏளனம் பேசுகிற எவரும் அரசியல் குறித்த அடிப்படை அறிவற்றவர்கள், அந்த ஒற்றை மனிதரின் பின்னால் இருக்கிற ஏறத்தாழ பதினைந்து விழுக்காட்டுத் தமிழ் மக்களை அவர் ஆயுதமாக்க ஒரு போதும் எண்ணவில்லை என்பதற்கான அப்பட்டமான சான்று அது.

தேர்தல் கால அறுவடைகளையும், அதிகார மோகத்தையும் தாண்டி ஒரு சமூகத்தை உண்மையாகவே நேசிக்கிற மனிதர்களால் மட்டுமே அது சாத்தியப்படுகிறது. ஒரு தலைவனுக்கே உரிய தனித்தன்மை அது, தமிழக அரசியலில் இருந்து கொண்டு அப்படி ஒரு முதிர்ச்சியை நீங்கள் இன்னொரு அரசியல் தலைவரிடம் எதிர்பார்க்க முடியவே முடியாது. ஒரு மனித உடலின் மிக அடிப்படைத் தேவையான திருமண வாழ்க்கையைக் கூட மறுதலித்து அரை வயிறும், அரைத் தூக்கமுமாய் முற்றிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை முன்னிறுத்தி ஒரு மனிதன் அலைகிறான் என்பதை உணர்ந்து கொள்ளவே நமது தமிழ்க் சமூகத்துக்கு இன்னும் ஏராளமான காலம் பிடிக்கும், அப்படியான ஒரு தலைவனின் வாழ்க்கை ஒட்டு மொத்த சமூகத்தின் ஏற்றத்தின் பாதை என்று நான் சொன்னால் என்னை ஒரு தலித் என்பீர்கள் நீங்கள். சொல்லிக் கொள்ளுங்கள், ஒரு தலித்தாய் இருப்பது என்பது ஒன்றும் எளிமையான சொகுசான வாழ்க்கை முறை அல்ல, சொந்த ஊரில், சொந்த மண்ணில், சொந்த வீட்டில் ஒரு போராளியாய் வாழக் கிடைத்திருக்கிற சாபம்.

கணக்கில் சில ஆயிரம் ரூபாய்களும், ஒரு ஓட்டைக் குடிசையும், இரண்டு சதுர வயலும் மட்டுமே சொந்தமாய் இருக்கிற ஒரு அரசியல் தலைவனை எங்காவது காட்டி விடுங்கள் எனக்கு, நான் இந்தப் பட்டியலில் இருந்து திருமாவளவனை நீக்கி விடுகிறேன். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளாய் நடந்து நடந்து கால்கள் புண்ணாகி, பிறகு மிதிவண்டியில் சக்கரங்கள் தேய்ந்து, இந்திய தேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகி விடுவது ஒன்றும் அத்தனை எளிதான வேலை இல்லை, பதவிகளும், பட்டங்களும் ஒரு மனிதனின் உழைப்புக்காக அவனிடத்தில் சேர்ந்த அளப்பரிய சாதனைக்குச் சொந்தக்காரன் இந்த மண்ணின் மைந்தன், அரசியல் முரண்கள்,கூட்டணிகள், நிலைப்பாடுகள் எல்லாவற்றையும் தாண்டி ஒரு தலைவனின் இதயம் அவனைச் சார்ந்த மக்களுக்காகத் துடிக்கிறதா என்று நீங்கள் கணக்கிடுவீர்களே ஆனால் திருமாவளவன் என்கிற ஒப்பற்ற மனிதனை ஒரு போதும் தூற்ற மாட்டீர்கள்.

இரண்டு : எர்னெஸ்ட் மில்லர் ஹெம்மிங்வே

Ernest-Hemingway-9334498-1-402

நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு நள்ளிரவில் நாவல் படித்துக் கொண்டிருந்தேன், அப்போது தான் முழுமையான நாவல்களை வாசித்து அதன் நுட்பங்களை அறிந்து கொள்ளும் மன முதிர்ச்சி அடைந்திருந்தேன் என்று கூடச் சொல்லலாம், அது ஒரு வழக்கமான இரவாகத்தான் இருக்கும் என்று நான் எண்ணியிருந்தது எத்தனை பெரிய தவறு என்று இப்போது தோன்றுகிறது எனக்கு, நாவல் வழக்கமான ஒரு மந்தத் தன்மையோடு துவங்கி மெல்ல நகர்கிறது, ஒரு கிழவன் தனது ஓட்டைப் படகோடு கடலுக்குள் செல்லத் துவங்குகிறான், படகு அசைந்தாடியபடி என்னையும் கடலுக்குள் அந்த ஓட்டைப் படகின் ஒரு முனையில்அமர்த்துகிறது, கடலின் பிரம்மாண்டமும், அதன் உயிர் வாழ்க்கை அற்புதங்களும் நான் என்கிற ஒரு வாசகனை தன்னிலை மறக்கச் செய்கிறது,

கிழவன் கடலுக்குள் வீசி எறிந்த தூண்டில் முள்ளில் சிக்கிக் கொண்ட மீனின் வாய்க்கு மிக அருகில் அது என்னை பயணிக்கச் செய்கிறது, கடலின் ஏற்ற இறக்கங்களில் ஒரு மனிதப் பதரை வெகு காலத்திற்கு முன்பு வாழ்ந்த இன்னொரு மனிதனின் எழுத்து மூழ்கித் திணறடிக்கிறது, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னால் நாவலை மூடி வைத்து விட்டு வெகு நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன், கடலின் சீற்றத்தில் இருந்தும், கிழவனின் மனப் பரப்பில் இருந்தும் நான் என்னை விடுவித்துக் கொண்டு ஆசுவாசப் படுத்திக் கொள்ள நேர்ந்த ஒரு நாவல் "கிழவனும் கடலும்" என்று இப்போதும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். கதை சொல்வதில் இத்தனை நேர்த்தியா? கதை சொல்வதில் இத்தனை நுட்பமா?

முறையாக அந்த நாவலை அந்தக் கிழவன் எழுதி இருக்க வேண்டும், அல்லது அவனோடு பயணித்த மீன் எழுதி இருக்க வேண்டும். இலக்கியம் தான் எத்தனை எத்தனை தலைமுறைகள் தாண்டி ஒரு கிழவனின் வலியை, ஒரு மீனின் வாழ்க்கையை, கடலின் ஆழத்தை இன்னும் எண்ணற்ற மனித மனத்தின் மகத்துவங்களை கடத்தித் தொடர்பே இல்லாத இன்னொரு மனிதனின் மன எல்லைகளுக்குள் சேர்க்கிறது, இலக்கியம் தான் எத்தனை கொண்டாட்டமாய் வாழ்க்கையை உணரச் செய்கிறது. வார்த்தைகள் இல்லாத மௌனத்தால் அந்த மகத்தான படைப்பாளியை நான் வணங்க நினைக்கிறேன். பிறகு தேடித் தேடி இந்த மனிதரின் நூல்களை படிக்கத் துவங்கிய போது மனித வாழ்க்கையின் மகத்தான வாசிப்பு அனுபவங்களை நான் பெற்றுக் கொண்டேன்.

"இந்த மணி யாருக்காக ஒலிக்கிறது" என்கிற இவரது இன்னொரு நாவல் போர் மென்மையான மனித மனங்களின் மீது எத்தனை வக்கிரமாகத் தாக்குதல் தொடுக்கிறது என்கிற சுடுகிற உண்மையை உணர வைக்கிறது, வெகு காலத்துக்குப் முன்பே வாழ்க்கை குறித்த நமது இன்றைய புரிதலை உணர்ந்து அதனை எழுத்தாகப் பதிவு செய்து விட்டுப் போன மனிதர்களை எல்லா மொழிகளும் இலக்கியவாதிகள் என்று கொண்டாடத்தானே செய்கிறது, ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை எப்போதும் வரலாற்றின் பக்கமாக நிலைத்து விடுகிறதே? இன்னும் எத்தனை மாற்றங்களும், கதைகளும் எனக்குள் விழுந்தால் என்ன? எனது மனச் சுவற்றில் வாழ்கிற அந்தக் கிழவனையும், மீனையும் யாரும் அழித்து விட முடியுமா என்ன?

ஒன்று : வேலுப்பிள்ளை பிரபாகரன்

prabhakaran

2009 மே மாதம் பதினேழாம் நாள், முன்னிரவில் ஒரு மிக முக்கியமான முடிவை எடுப்பதற்காகக் கூடி இருக்கிறது விடுதலைப் புலிகளின் தலைமை, போர் மிக உக்கிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும், விடுதலைக்கும் அச்சாணியாக விளங்கிய ஒரு ராணுவம் தங்கள் உன்னத லட்சியங்களுக்காக அழிந்து கொண்டிருந்தது, ஒரு மிக முக்கியமான தாக்குதலில் "சார்லஸ் ஆண்டனி" என்கிற தனது தலைமகன் நேரடியாகக் களம் இறங்குகிறேன் என்று சொல்கிறார், மற்ற தலைவர்களும், வீரர்களும் தலைவரின் மகனைப் பாதுகாப்பாக பகுதியில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஒரு நெடிய மௌனத்துக்குப் பிறகு "வேலுப்பிள்ளை பிரபாகரன்" இப்படிச் சொல்கிறார், "இந்த மண்ணின் விடுதலைக்குப் போராடும் எந்த ஒரு மனிதனுக்கும் இல்லாத சிறப்பு உரிமைகள் எதையும் என் பிள்ளைகளுக்குத் தர நான் விரும்பவில்லை, என் குழந்தைகளுக்கும் இந்த ஈழ மண்ணின் மற்ற குழந்தைகளுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், நான் அவனைக் கடைசியாகப் பார்ப்பது இதுவே முதல் முறை என்றாலும் கூடக் கவலை இல்லை, அவன் போர்க்களம் செல்வதை யாரும் தடுக்காதீர்கள்". தனது மண்ணின் விடுதலைக்காக ஒரு மனிதனால் இதை விட எப்படி அர்ப்பணிப்போடு செயல்பட்டு விட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நீங்களோ, நானோ இப்படி ஒரு தெளிவான தனி மனித உணர்வுகள் இல்லாத கோட்பாட்டு முடிவை எடுத்து விட முடியுமா என்ன?

விமர்சனங்கள், முரண்கள்,மாற்றுக் கருத்துக்கள் எல்லாவற்றையும் கடந்து உலகம் முழுதும் வாழ்கிற தமிழ்ச் சமூகத்தின் இளைய தலைமுறை மனிதர்களிடம், அரசியல் சார்ந்த, மொழி சார்ந்த விடுதலை உணர்வை இந்த ஒற்றை மனிதரே உருவாக்கினார். உலக அரசியல், மனித உரிமைகளின் எல்லையற்ற தேடல், சமூக அரங்கில் ஒழுங்குகள் என்று அதுவரை கண்டிராத ஒரு புதிய உலகத்தின் சாளரத்தை இந்த ஒற்றை மனிதரே நிலை நாட்டினார், போராட்ட உணர்வும், விடுதலையை நோக்கிய தேடலும் ஒரு மொழிக்கும், அதன் மக்களின் இருப்புக்கும் எத்தனை இன்றியமையாதது என்று இவரே உணர வைத்தார். தனது வாழ்நாள் முழுவதும் ஒரு ஒப்பற்ற தலைவனுக்குரிய நேர்மையும், ஒழுக்கமும் கொண்டிருந்த இந்த மனிதரின் வாழ்க்கை, வரலாற்றில் அழியாத ஒரு பாடமாய் நிலை கொண்டிருக்கிறது.

உலக வரலாற்றில், உலக அரசியல் அரங்கில் தமிழ் மொழிக்கான ஒரு நிலையான இருக்கையை அவனே உண்டாக்கிக் கொடுத்தான், எளிய குடும்பத் தலைவனாய், சக நண்பனாய், தனி மனித ஒழுக்கத்தின் ஒப்பற்ற இலக்கணமாய் இருந்தபடி எப்படி உலகின் வல்லரசுகளை எதிர்த்து போராடும் வல்லமையை இந்த மனிதன் பெற்றான் என்று நீங்கள் உணரத் துவங்கினால் தமிழ் இனத்தின் வரலாற்றுக் குதிரையில் ஏறி அமர்ந்திருக்கிறீர்கள் என்று பொருள். இவர் மறக்க முடியாத மனிதர் அல்ல, மாறாக மறக்கக் கூடாத மனிதர்.

************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: