கை.அறிவழகன் எழுதியவை | ஜனவரி 10, 2013

ஊரும், சேரியும் – சில நினைவுகள்.

01pongal

வெண்மஞ்சள் நிறத்தில் நாரைகள் அடிக்கடி இடம் மாறிக் கொண்டே இருக்கும், மரத்தடிகளில் வெற்றிலை சுவைத்தபடி இளைப்பாறும் ஊர்க்காரர்களைப் போலவே அவை ஊருணிக் கரைகளில் சோம்பலாய், ஒரு விதமான மிதப்போடு சிறகுகளைக் களைந்து இரைக்காகக் காத்திருக்கும், தெளிந்த நீரும், அல்லிக் கொடிகளுமாய் ஒரு ஏகாந்தமான அமைதியைத் தவழ விட்டபடி ஊர் நடுவே படுத்திருக்கும் அந்த ஊருணிக் கரைகளில் திசைக்கொரு சமூகமாய் வாழ்கிற எமது மக்களை ஒருபோதும் வேற்று மனிதர்கள் என்று சிந்திக்கத் தெரியாத வயது.

அடர் பச்சை நிறத்தில் எடை மிகுதியால் தனது பழங்களைக் காற்றில் உதிர்த்துக் கொண்டிருக்கும் புளிய மரங்கள், அவற்றின் இடையே படர்ந்திருக்கும் கோவைக் காய்க்கொடிகள், சிறுவர்கள் பறித்துத் தின்னும் முன்பாகவே கோவைக் கனிகளை உண்பதற்குத் தொலைவில் இருந்து பயணித்து வந்திருக்கும் பச்சைக்கிளிகள், குயிலும் மைனாக்களும் எழுப்பும் இசைவான குரலோடு பொருந்தாத சில்வண்டுகளின் இரைச்சல் ஒரு ஜுகல்பந்தியின் அழியாத விருந்தாளியைப் போல வெளியெங்கும் நிறைந்திருக்கும்.

சுற்றி இருக்கிற நீர் நிலைகள் நிரம்பிக் கிடப்பதால் அடிக்கிற குளிர் காற்று, அதில் நிரம்பி இருக்கிற நெற்பயிரின் வாசம், களத்து மேட்டில் எகத்தாளமாகப் படுத்திருக்கும் காலை மாடுகள், வேப்பங் குச்சிகளைப் பற்களில் பொருத்தியபடி நலம் விசாரிக்கிற மனிதர்கள், "எப்பா சின்னவுக யாரு?", அப்பத்தாவின் குரல் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல "மயம்புட்டுப் புள்ள" என்று இன்று வரைக்கும் அங்கு தான் சுற்றிக் கொண்டிருக்கிறது, "கைவல்யம் மகனா?". "என் ராசா, என்னய்யா படிக்கிற?" "பிப்த் ஸ்டான்டர்ட்" என்று சொல்லி முடிப்பதற்குள் நெட்டி முறித்து கன்னத்தில் வெற்றிலையும், புகையிலையும் படிய முத்தம் கொடுக்கும் மனிதர்கள். "யார் என்ன சாதி?", "எங்கிருந்து வந்தார்கள்?" என்று மனதை வதைக்கும் எந்தக் குழப்பமான சிந்தனைகளும் கிடையாது.

காலம் ஓடிக் கொண்டிருக்கையில் வந்த இன்னொரு பொங்கல் மஞ்சு விரட்டு நாளின் பின் காலைப் பகுதியில் துவங்கும் பிள்ளளையார் கோவில் மேளச் சத்தமும், தேத்தாம்பட்டியின் சாமியாட்டமும் முடிந்து விட்டிருந்தது, அநேகமாகப் பிற்பகல் துவங்கும் போது ஒவ்வொரு வீடாகச் சென்று தொழுவில் கட்டி இருக்கும் மாடுகளை அவிழ்த்து விடுகிற நாட்டார்களும், ஊர் மக்களும் மெல்ல நகர்ந்து சேரிப் பக்கமாய் வரத் துவங்கும் போது அப்பாவின் கைகள் பரபரக்கும், அகண்ட தாம்பூலத்தில் சந்தனம், மிட்டாய்கள், வெற்றிலை பாக்கு என்று பரப்பி இது வரப் போகிற நாட்டார்களை வரவேற்கக் காத்திருப்பார்.

WE095187

நெரிசலாய், சிரிப்பும் பாட்டுமாய் எல்லாத் திசைகளிலும் ஒன்றாய் நடந்த எமது மக்களின் கால்கள் இப்போது ஒவ்வொன்றாய்க் கழிந்து கடைசியில் ஒப்புக்கு வேறு வழியே இல்லையென்று வருகிற இரண்டொரு நாட்டார்கள் மட்டுமே எஞ்சி இருப்பார்கள், அப்பாவின் கண்களில் தெரிகிற அந்த ஏமாற்றம் தருகிற வலி நெஞ்சைப் பிளக்கிற வாதையாய் இன்னும் என் மூளையின் நியூரான்களின் நினைவகத்தில் ஒளிந்திருக்கிறது. கல்வியும், பொருளும் உங்கள் ஊரின் சொந்தப் பிள்ளைகளை மேன்மையுறச் செய்து உயர்த்திய கணங்களை கொண்டாட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியவே இல்லையே என் அருமை மக்காள்.

நாம் ஒரே குளத்தின் நீரைக் குடித்து வளர்ந்தோம், நாம் ஒரே புளியமரத்தின் கிளைகளில் விளையாடினோம், நாம் ஒரே குளிரில் ஓட்டைக் குடிசைகளில் ஒண்டிக் கிடந்தோம், நாம் ஒரே மண்ணில் உழுது பயிர் செய்தோம், உயிர்களை இழந்து கதறினோம், கூடிக் களித்தோம், பிள்ளைகள் பெற்றோம். ஆனாலும், மஞ்சு விரட்டின் போது எமது மக்களின் மாடுகளை அவிழ்க்கவும், எம் தந்தையரின் கள்ளமற்ற வரவேற்பை ஏற்றுக் கொள்ளவும் ஏன் நீங்கள் தயங்கினீர்கள்??? உங்கள் கால்கள் பின்வாங்கிப் போனதன் காரணத்தை அறிந்து கொள்ள இயலாத ஒரு இளைஞனாக நான் வளரத் துவங்கி இருந்தேன்.

நகர மனிதர்கள் விடுத்துச் செல்கிற "பிளாஸ்டிக்" பைகள் ஊருணிக்கரை நாரைகளையும், ஆராக் கீரைகளையும் அழித்து விட்டிருந்த இன்னொரு பொங்கல் நாளில் உங்கள் மண்ணிலிருந்து ஒரு மாவட்ட ஆட்சித் தலைவன் உருவாகி இருந்தான், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தெல்லாம் வாழ்த்துக் குவிந்த அந்த அழகான மறக்க முடியாத இரவுகளில் கூட மறந்தும் ஒரு வாழ்த்துச் சொல்லி விட எமது ஊருணிக் கரையின் தென்திசை மக்களும், வடதிசை மக்களும் வரவில்லையே என்று தான் நான் ஏங்கித் தவித்திருந்தேன்.

ஒரு பேராசிரியன், ஒரு காவல் துறை அதிகாரிஒரு வருமான வரித்துறை அதிகாரி என்று கல்வியின் செழிப்பில் உங்கள் மண்ணின் மைந்தர்கள் பெருமையோடு மேடைகளில் நின்ற போது பெருந்தன்மையோடு ஒரு அம்பலம் அங்கே மேடையேறி நின்றிருந்தால் இன்னும் ஒரு படி உயர்த்து இருப்பீர்களே, என் மக்காள். இந்த மண்ணை உழுத உங்கள் கைகளில் நெற்சோறு தின்று தானே நாங்கள் மகிழுந்துகளை வாங்கும் வல்லமை பெற்றோம், இந்த மண்ணைப் பண்படுத்திய உங்கள் வெற்றிலை படிந்த வாயில் முத்தம் பெற்றுத்தானே நாங்கள் இந்த உலகை வலம் வந்தோம். உலகெங்கும் எத்தனையோ மனிதர்களைப் பார்த்தாலும் பழகிக் கழித்தாலும் உங்களோடு முட்டி மோதுகிற அந்தக் கணங்கள் தானே எங்கள் இருப்பை நிறைவு செய்கிறது. உங்கள் பிள்ளைகளில் ஒருவனை வெறுக்கும் பண்பாட்டை உங்களுக்கு யார் கற்றுக் கொடுத்தார்களோ தெரியாது, எங்களுக்கு நீங்கள் கற்றுத் தரவில்லை.

pic2

இரண்டொரு வருடங்களாக அழுது வடிந்தபடி வருகிற பொங்கல் நாளின் மஞ்சுவிரட்டில் எங்கள் மாடுகளை அவிழ்க்க நீங்கள் வரத் தேவையில்லை என்று நாங்களும் முடிவு செய்து விட்டோம், முதல் மரியாதை தரச் சொல்கிற நாட்டார்களோடு மல்லுக்கட்டி அவர்களின் தீராப் பகைக்கு ஆளாகி இருக்கிறோம், நமது ஊருக்கு இப்போது விருந்தினர்களை விடக் காவலர்கள் அதிகம் வருவதாக அப்பா எப்போதாவது அலைபேசியில் சொல்கிறார், கல்வியும், அறிவும் உங்களை விடவும் எங்கள் வாழ்க்கையை பெருமளவில் மேம்படுத்தி இருக்கிறது, நாங்கள் மானமுள்ள மனிதர்களாக உலகெங்கும் வலம் வருகிறோம்.

ஏறு தழுவும்  மஞ்சுவிரட்டு வீர விளையாட்டு என்று இப்போதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை, பரிவட்டங்களைக் கட்டிக் கொண்டு உன்னை விடப் பிறப்பால் நான் உயர்ந்தவன் என்று தம்பட்டம் அடிக்கவும், சாதியப் பழம் பெருமைகளை நிலை நிறுத்திக் கொள்ளவுமே இப்போது "மஞ்சுவிரட்டுகள்" தமிழகமெங்கும் பயன்படுகின்றன, காலம் காலமாய் உங்களைப் போலவே மாடு பிடிக்கவும், செவுள் ஏறித் துண்டு பிரிக்கவும்  என் அண்ணனும், தம்பியும் இன்று வரைக்கும் இருந்தாலும் விருந்தினர் மேடையில் ஏறி நின்று தொழுவ மாடுகளைத் திறந்து விடுகிற உரிமையை மட்டும் எமது அமைச்சர்களுக்குக் கூட  வழங்க மறுக்கும் உங்கள் பிடிவாதமும், பித்தலாட்டமும் எம்மக்கள், எமது நிலம் என்கிற நெருக்கமான ஒரு உறவு நிலையைக் கூட அடித்துச் சென்று விட்டது.

மஞ்சுவிரட்டு எமது மக்களின் வீர விளையாட்டு, எமது பண்பாட்டின் அடையாளம் என்கிற நம்பிக்கையெல்லாம் பொய்த்துப் போய் மஞ்சுவிரட்டு எமது உயர் அடுக்கு நண்பர்கள் சொல்வதைப் போல வெறும் “மிருகவதை” என்கிற அளவுக்கு சிறுத்துப் போய் விட்டது.

0

இதோ இன்னொரு பொங்கல் வந்து விட்டது, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எமது மண்ணுக்குத் திரும்புகிற ஏக்கமும், கனவுகளும் எல்லையற்ற இன்பத்தை வழங்கும் ஒரு இனிய நிகழ்வு அது எனக்கு, நீங்கள் என்னை வெறுத்தாலும், நீங்கள் என்னைப் பறையன், பல்லன், சக்கிலியன் என்று என்ன சொன்னாலும், முன்னொரு நாளில் எல்லையற்ற அன்போடும், எல்லாம் நிறைந்த பிணைப்போடும் ஒரு வெற்றிலைக் கறை முத்தம் கொடுத்தீர்களே, அப்படி ஒரு முத்தம் என் குழந்தைக்குக் கொடுப்பீர்கள் என்ற அளவிட முடியாத நம்பிக்கையோடு அங்கே நின்றிருப்பேன்.

இன்னும் எத்தனை யுகங்கள் கழிந்தாலும் அழகம்மாள் என்கிற அப்பத்தாவின் குரலைப் போல ஊருணிக் கரையின் ஏகாந்த வெளியில் எனது குரல் எப்போதும் காத்துக் கிடக்கும், அந்த நாளில் வெண் மஞ்சள் நிற நாரைகள் நமது ஊருணிக் கரைகளில் மீண்டும் வரக் கூடும், அந்த நாளில் ஆராக் கீரையும், அல்லி மலர்களும் செழித்து வளர்ந்து வேடிக்கை பார்க்க, நாட்டார்களும், ஊர் மக்களும் ஒட்டு மொத்தமாய் மெல்ல நகர்ந்து எமது தொழுவத்தின் மாடுகளைத் திறக்கக் கூடும், அப்போது நமது ஊரின் நான்கு திசைகளிலும் ஒரே நேரத்தில் "பொங்கலோ, பொங்கல்" என்கிற எமது பழங்குடி மக்களின் மொழி சங்கொலியின் பின்னணியில் ஒலிக்கக் கூடும்.

***************

Advertisements

Responses

  1. அருமையான பதிவு. ஆற்றொழுக்கு போன்று சலசலக்கும் எழுத்தாற்றல். நல்ல தமிழ் எழுதும் இளைஞர்களைப் பார்க்கும் போது மனசு மிகவும் மகிழ்ச்கியடைகிறது. தமிழுக்கு எதிர்காலம் இருக்கிறது என.
    நிறைய எழுதுங்கள், நன்கு எழுதுங்கள். வாழ்த்துகள் திரு கை.அறிவழகன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: