கை.அறிவழகன் எழுதியவை | ஜனவரி 31, 2013

கண்ணீர் சுரக்கும் வெண்ணிலாக்கள்.

india-transgender-empowerment-2012-6-2-5-30-11

பெங்களூரு கப்பன் பூங்காவின் அடர்ந்த மரங்கள் அடங்கிய மையப் பகுதியில் உடைந்த ஒரு மர நாற்காலியில் அமர்ந்து இலைகளின் நடனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், எங்கிருந்தோ வந்து கண்ணுக்குத் தெரியாமல் இடங்களை அடைத்துக் கொண்ட காற்று ஏதோ ஒரு ராகத்தில் மரக்கிளைகளின் காதுகளில் குறிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

கிளைகளின் கட்டளைகளுக்கு ஏற்ப இலைகள் ஒருவிதமான சிலிர்ப்போடு சலசலக்கின்றன, மரங்களின் நடனத்தில் சொக்கிப் போயிருக்கிற நீளவால் குயிலொன்று நிலைத்திருக்க முடியாமல் நகர்ந்து வேறொரு மரத்துக்கு நகர்கிறது, மாநகரம் தனது மனிதர்களின் வேகத்தை உயரக் கட்டிடங்களின் சாளரங்களில் இருந்து வேடிக்கை பார்க்கிறது.

மனிதர்கள் தமது மனங்களால் கட்டிய கோட்டைகளைத் தலையில் சுமந்தபடி ஏதோ ஒரு திசையில் நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள், ஒரு இளம் காதலன் தனது காதலிக்கு இன்னும் நெருக்கமாய் அமர்ந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறான், ஒரு பழைய அழுக்கடைந்த பிசுபிசுப்பான துணிப்பையைக் கக்கத்தில் அணைத்தபடி தரையைத் தேய்த்தபடி பக்கத்தில் நடக்கிறான் ஒரு மனிதன்.

அவனது வாய் ஏதோ ஒரு புரியாத மொழியில் பாடலை முணு முணுக்கிறது, அந்தப் பாடலின் வரிகளில் மனித உணர்வின் ஏதாவது சிதிலமடைந்த துண்டுகள் பேரண்டத்தின் இரைச்சலோடு கலக்கக்கூடும், அடிப்படைத் தேவைகளைக் கூடக் கண்டடைய முடியாத தனது வாழ்க்கையின் தோல்வி குறித்த சன்னமான ஒரு முனகலாகத் துவங்கி அந்தக் குரல் ஆர்ப்பரிக்கும் கடலின் அலைகளின் ஊடே ஓங்காரமாக ஒலிக்கக் கூடும்.

மனச் சிறையிலிருந்து விடுபட முடியாத மனிதர்களை மேலிருந்து கொஞ்சம் அச்சத்தோடு வேடிக்கை பார்த்தபடி பறவைகள் அடையத் தயாராகின்றன. இரவு ஒரு காணக் கிடைக்காத நீரோடையைப் போல வெளியைத் தன் விழுதுகளால் நிரப்பியபடி எனைச் சுற்றி வளைக்கிறது, தொலைவில் தென்படும் வெளிச்சப் புள்ளிகளை நோக்கி நகர்வதற்கு முன்னதாக சிரிப்பொலிகளும், கொலுசொலிகலும் காற்றில் கலக்க சில பெண்கள் அசைந்தாடியபடி வருகிறார்கள்.

வெவ்வேறு திசைகளில் பிரிந்த அவர்களில் ஒருத்தி நானிருக்கும் பகுதியை நோக்கி வருகிறாள், மெலிந்த வறண்ட உடலின் திறப்புகளோடு அரையிருட்டில் ஒரு ஓவியம் போல அசைகிறது பிம்பம். அருகே நெருங்கவும் கட்டையான குரலில் "மாமோவ்" என்கிற குரல் அவளை ஒரு திருநங்கை என்று அடையாளம் செய்கிறது. எந்தச் சலனமும் இல்லாமல் வேடிக்கை பார்க்கிற சக மனிதனை அவள் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகி இருக்கலாம்.
Transgender-India-A-007a

அமைதியாக அவளது முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறேன் நான். வினோதமான ஓசைகளை எழுப்பியும், முக பாவங்களை மாற்றியும் என்னை ஒரு வழக்கமான மனிதனாக மாற்ற அவள் முயற்சி செய்கிறாள், உடலுக்கான உரையாடல் மொழிகளோடு இரவு உணவுக்கான பணத்தைக் கனவு காண்கிற அந்தச் சின்ன மனுஷியின் கைகள் ஒரு அழகான குழந்தையின் முகத்தை எனக்கு நினைவூட்டுகிறது.

அவள் என்னைப் போல ஒரு தந்தையின் செல்லக் குழந்தையாய் இருந்திருக்கக் கூடும், ஒரு தாயின் கரங்களைப் பிடித்தபடி அவள் கடைத்தெருவில் சுற்றித் திரிந்திருக்கக் கூடும். ஒரு அண்ணனோடும், தங்கையோடும் தின்பண்டங்களுக்காகச் சண்டையிட்டிருக்கக் கூடும். ஒரு அன்பான வீட்டின் உறுப்பினராகத் தானும் வாழ்ந்து கழிக்க முடியும் என்கிற நம்பிக்கைகள் கலைந்த ஒரு நாளை அவளது நேசக் குழிகள் அடைகாத்து வைத்திருக்கக் கூடும்.

இப்போது நான் தொட்டு விடும் தொலைவில் நின்றிருந்தாள் அந்த மனுஷி, புன்னகைத்தபடி "உங்க பேர் என்ன?" என்று நான் கேட்டபோது, ஒரு புன்னகையை எந்தத் தயக்கமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் அவள் இல்லாமல் இருந்ததை என்னால் உணர முடிந்தது, சக மனிதர்களின் புன்னகைக்குப் பின்னே இருக்கிற வக்கிரங்களை, வன்கொடுமைகளைப் பழகிப் போயிருந்தவள் என்பதை அவளது தயக்கம் தயங்காமல் சொன்னது.

"இங்க வந்து உக்காருங்க, உங்க பேரு என்னன்னு கேட்டேன், சொல்லவே இல்லையே??". மர நாற்காலியின் மற்றொரு முனையை என் கைகள் சுட்டிக் காட்டுவதை அவள் அறிந்து கொண்டிருக்க வேண்டும், இப்போது அவளது குரல் ஒரு நெகிழ்வை எட்டி இருந்தது, முன்னைப் போல அவளிடம் செயற்கையான உடல் மொழியும், முகபாவங்களும் இல்லை.

மர நாற்காலியின் இன்னொரு முனையில் அமர்ந்த அந்த சக மனுஷியை தயக்கங்களும், மிரட்சியும் இல்லாத சக மனிதனாய் இன்னொரு முறை "உங்க பேரென்ன?" உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும், உங்கள் இளமைக் கால வாழ்க்கை குறித்து நான் சிலவற்றை அறிந்து கொள்ள வேண்டும்." என்று நான் கேட்ட போது அதிர்ச்சி காத்திருந்தது.

வேக்……ஒரு மிகப்பெரிய கேவலோடு அழத் துவங்கி இருந்தால் அந்தப் பெண். அது ஒரு அசலான மனிதக் குழந்தையின் அழுகை, அந்த அழுகையில் துளியும் போலித் தனங்கள் இல்லை, கண்களைத் துடைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்போ, எதிரில் இருப்பவரின் நிலைப்பாடுகளோ எது குறித்தும் கவலைப்படாத ஒரு அழுகை அது. காலம் காலமாய் வாழும் சமூகத்தின் வாசலில் நுழைய அனுமதிக்கபடாமல் புறக்கணிக்கப்படுகிற மனிதர்களின் வலி அது.

நூற்றாண்டுகளின் வலியைச் சுமந்து திரிகிற ஒரு மனித உடலின் கண்களில் பீறிட்டுப் பொங்கும் இயலாமையும், வெறுப்பும் எனது இருப்பை அந்தக் கணத்தில் நிலை குலையச் செய்கிறது. பேரண்டத்தின் சிக்கலான முடிசுகளை அவிழ்க்கும் வழி தெரியாத ஒரு வலையில் அகப்பட்ட மீனைப் போல காலத்திடம் நான் சிக்கிக் கிடந்தேன். காலம் தனது சிறகுகளில் வலியை வழக்கம் போலச் சுமந்து கொண்டு சென்ற ஒரு கணத்தில் அவளது அழுகை நின்று போயிருந்தது,

"எங்களுக்குப் பெயர் இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா என்ன?" பதில் ஒரு சாட்டையைப் போல எனது இதய விளிம்புகளில் காயம் உண்டாக்கி இருந்தது.

Aravanis in Vilappuram and Koovagam gather to celebrate Lord Aravan's marriage to Krishna.

Photo: Tom Pietrasik
Vilappuram, Tamil Nadu. India
May 5th 2009

வீட்டில் எனக்குச் சூட்டிய பெயர் "மணிகண்டன்", நானே எனக்குச் சூட்டிக் கொண்ட பெயர் "நிலா – வெண்ணிலா", மனிதர்கள் தானே பெயர் சூட்டிக் கொள்கிற அவலம் சொல்ல முடியாத வலிகள் நிரம்பியது என்று அந்தக் கணத்தில் எனக்குத் தோன்றியது.

"நீங்கள் ஏன் வீட்டை விட்டு வெளியேறினீர்கள்?" என்கிற என்னுடைய கேள்விக்கு, வெண்ணிலா சொன்ன பதில் மிக ஆழமானது மட்டுமில்லை வலிகளின் ஊற்றுக் கண்ணாக இருந்தது,

"நான் இன்னும் எனது வீட்டை விட்டு வெளியேறவில்லை, நான் என் தந்தையோடு அவரது மோட்டார் சைக்கிளின் பின்னே அமர்ந்து தினமும் பள்ளிக்குச் செல்கிறேன், பசியோடு வீட்டுக்குத் திரும்பி அம்மாவோடு சண்டையிட்டபடி ரசம் சோறும் ஊறுகாயும் சாப்பிடுகிறேன். என்னிடம் இருந்து உலகம் எனது வீட்டைப் பறித்துக் கொண்டு விட்டது, நிரந்தரமாக இந்த உலகத்தை விட்டுப் போகும் போது தான் என்னால் எனது வீட்டை விட்டு வெளியேற முடியும்…………"

வெகு நேரம் உரையாடித் தனது வாழ்க்கை நிகழ்வுகளை என்னோடு பகிர்ந்து கொண்டு விட்டு விடை பெறும்போது வெண்ணிலா என்னிடம் தயங்கியபடி இப்படிக் கேட்டாள்….

Transgender-India-A-031

"உங்களை ஒரு முறை நான் அண்ணா என்று அழைக்க அனுமதிப்பீர்களா?"

கடும் சிரமத்துக்கு இடையில் என்னுடைய கண்ணீரை நான் மறைக்க இருள் உதவி செய்யத் துவங்கி இருந்தது.

மரங்களையும், வேலிகளையும் தாண்டி மாநகரம் சின்னஞ்சிறு மனித மனங்களின் மீது தனது ஊர்திகளை இயக்கியபடி வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. வெண்ணிலா சென்ற திசையை விட்டுக் கண்களை அகற்றி நிமிர்ந்து வானத்தைப் பார்க்கிறேன், மரக்கிளைகளின் நடுவே நிஜ வெண்ணிலா ஒளிந்து கொள்கிறது, அனேகமாக அது அழுவதற்கு இடம் தேடக் கூடும்.

(“மூன்றாம் உலகம்” என்கிற என்னுடைய நாவலுக்காக நான் நிகழ்த்திய சந்திப்புகளில் என்னால் மறக்க முடியாத ஒரு சந்திப்பு மேற்கண்டது,)

நாள் : 24-10-2012 – புதன்கிழமை

இடம் : பெங்களூரு – கப்பன் பூங்கா

*************

Advertisements

Responses

 1. நிராகரிப்பு

  அனைத்து உயிரினங்களிலும்
  ஆணும் பெண்ணுமாய்
  ஒரு ஜோடி
  நோவாவின் கப்பலில்.
  நீராலழிந்த புவிக்கோளத்தின்
  மீட்டுருவாக்கத்தின்பின்
  திகைத்து நிற்கிறான் நோவா
  கப்பலில் இடம் மறுக்கப்பட்டும்
  பேரழிவுக்குப் பின்னும் உயிர்த்தெழுந்த
  மூன்றாம் பாலினம் நோக்கி!
  anna, ungal katturai padithathum kavinmalar ezhuthiya intha kavithai ninaivu vanthathu……
  maatru thiranaalikal kuda petrorkalal purakanipadamaatarkal. aanal ivarkal petra thai, thanthaiyaraley purakanikapadum kodumaiku aalanavarkal…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: