கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 2, 2013

டாக்டருக்குப் பிடிக்காத கதைகள் – 1.

thumb-Mehrangarh-Fort

வானம் மேகமூட்டம் நிரம்பியதாய் இருந்தது, வெண்பஞ்சுப் பொதிகள் சில தாழ மிதந்து தெருவிளக்குகளின் கீழ் வான்கோழிகள் பறப்பதைப் போல போக்குக் காட்டிக் கொண்டிருந்தது, நான் டக்கர் வண்டிக்காகக் காத்திருந்தேன், ஜோத்பூர் நகரின் ஒரு ஊரகப் பகுதியில் ஒரு மலைச்சரிவில் இருந்தது எனது அறை, நகரத்தில் வேலைகளை முடித்து விட்டு நானா சந்திப்பில் இருந்து டக்கர் வண்டியில் பயணம் செய்ய வேண்டும், பத்துப் பதினைந்து மனிதர்களை நிரப்பிக் கொண்டு ஒரு குட்காவை வாயில் குதப்பிக் கொண்டு "ச்சலேன் சாப், பைட்டியே" என்று குரல் கொடுப்பான் மனிஷ். பல திசைகளில் இருந்தும் மனிதர்கள் மெல்லத் தங்கள் கூடுகளுக்குத் திரும்பும் பறவையாகி இருப்பார்கள், பகலில் இருந்த பரபரப்பும், கோபமும் உழைப்பில் வற்றிப் போயிருக்க புன்னகைக்கவும் சோம்பலாய் பனிக் குல்லாய்களுக்குள் தலையை அடைத்துக் கொள்கிற மனிதர்கள்.

நீளமாய் பள்ளத்தாக்கை நோக்கிச் செல்லும் எதிர்ப்புறச் சாலையை விடுத்து நேரெதிராக மேல்நோக்கிப் பார்த்தால்  மலைக்குன்றில் மினுமினுக்கும் மேஹ்ரன்கர் அரண்மனை விளக்குகள் தெரியும், தெளிந்த வானமும், விண்மீன்களும் நிறைந்த சில இரவுகளில் அந்த அரண்மனை திரைப்படங்களில் வருகிற கனவுக் காட்சியைப் போல பிரமிக்க வைக்கும், பக்கவாட்டில் தவளைகளின் இரைச்சலோடு படுத்துறங்கும் பச்சை வண்ண ஏரியும், அதன் கரையில் மெல்ல ஊர்ந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சரக்கு ரயிலும் ஒன்றாகச் சேர்ந்தால் வாழ்க்கை அதன் அழுத்தங்களில் இருந்து தப்பித்து ஒரு தக்கையைப் போல மிதக்கத் துவங்கும்.

அப்படி ஒரு நாளில் தான் அவளை நான் சந்தித்தேன், ஒட்டுமொத்த ராஜஸ்தானின் அழகையும் ஒத்திக்கு எடுத்தவள் போலிருந்தாள், முதல் நாள் நான் அவளைப் பார்த்த போது பச்சை வண்ணத்தில் வெள்ளிச் சரிகைகள் மினுமினுக்கிற ஒரு சுடிதாரை அணிந்திருந்தாள், நான் டக்கருக்குள் அமர்ந்திருந்தேன், பின்னிருக்கையில் எனக்குப் பக்கத்தில் ஒரே ஒரு இடம் மிச்சமிருந்தது, அமரும் போது ஒருமுறை எனது முகத்தைப் பார்த்தாள். முதல் பார்வையிலேயே நெஞ்சக் குழிகளை ஊடறுத்து ஒரு இளவரசியைப் போல சில பெண்கள் ஒய்யாரமாக இதய சிம்மாசனத்தில் அமர்ந்து விடுவார்கள், ஆண்களின் செருக்கு, மேட்டிமைத்தனம், போலியான இறுக்கம் இவற்றை எல்லாம் உடைத்து நம்மையும் அறியாமல் நமது இதழ்களில் ஒரு புன்னகைக் கீற்றை வரைந்து விடுவார்கள்.

இவளும் அப்படி ஒரு பெண் தான், பயணம் முழுவதும் ஓரக் கண்களால் அவளது செழுமையான இளமையின் பேராற்றலைப் பிரதிபலிக்கிற முகத்தை நான் ரசித்துக் கொண்டே இருந்தேன், டக்கர் வண்டி பத்துக் குதிரைகள் பூட்டிய  மகாபாரத ரதத்தைப் போல அப்போது மாறி இருந்தது. அவள் தொலைவில் மலைக்குன்றின் உச்சியில் தெரிகிற மேஹ்ரன்கர் அரண்மனையில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று நான் நம்பினேன். அது உண்மை என்பது போல எப்போதாவது கடுங்குளிருக்கு வெம்மையைப் பரப்புகிற புன்சிரிப்பை அவள் உதிர்ப்பாள்.

இறங்கிப் போகும் போது அலட்சியமான ஒரு புன்னகையை அவள் வீசி எறிந்து விட்டு நடந்தாள், அந்தப் புன்னகை உண்டாக்கிய சலனம் காற்றில் இருந்து களையும் வரைக்கும் அந்த இடத்திலேயே நிற்க வேண்டிய ஒரு பரிதாபமான சூழலில் நின்று கொண்டிருந்தேன் நான். இரண்டாவது நாளில் எனக்கு முன்னதாகவே டக்கருக்குள் தெரிந்த அவளது முகத்தை நான் அடையாளம் கண்ட போது ஒரு விலைமதிக்க முடியாத புன்னகையைப் பரிசாகக் கொடுத்தாள்.

டக்கர் மலைக்குன்றில் முக்கித் திணறி ஏறிக் கொண்டிருந்த போது "டட்ட ட்டத்" என்று இறுதி மூச்செறிந்து விட்டு நின்று போனது, மனிஷ் வண்டியை விட்டு இறங்கி என்னென்னவோ செய்து பார்த்தான், பிறகு வாட்டமான முகத்தோடு "காடி கராப் ஹோகயா சாப்" என்றான். நான் பத்து ரூபாய் நோட்டை மனிஷின் கைகளில் திணித்தேன், ஹரே சாப், சோடியே……என்றான். தலையை உறுதியாக ஆட்டி வாங்கிக் கொள்ளச் சொன்னேன். பரிதாபமாகச் சிரித்தான்.

3619287389_51a9c3863b_z

நான் மேஹ்ரன்கர் அரண்மனையை வேடிக்கை பார்த்தபடி சாலையின் ஓரத்து மதில்களை ஒட்டி நடக்கத் துவங்கினேன், இரண்டொரு விண்மீன்கள் கண்ணில் பட்டது, தொலைவில் மேகங்களுக்கு இடையே ஒரு வெளிச்சப் பிளவு பள்ளத்தாக்கின் மரக்கிளைகளில் வெளிச்சம் பரப்பி மறைந்தது, பக்கத்தில் பார்த்தால் இளவரசி நடந்து வந்து கொண்டிருந்தாள், உடைந்த ஹிந்தியில் இரண்டு பீகாரிகள் ஊரில் இருக்கும் நிலத்தின் வழக்கு குறித்துத் தீவிரமாய் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தார்கள். இளவரசி என்னை ஒட்டியே நடக்கத் துவங்கி இருந்தாள், திரும்பி ஒருமுறை புன்னகைத்தேன், எந்தத் தயக்கமும் இல்லாமல் பதிலுக்குப் புன்னகை செய்தாள்.

"உங்கள் பெயர் என்ன?"

"சான்ச்சல்"

"உங்களது?"

"ஹரிஷ்"

"நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"

"நான் நடந்து கொண்டிருக்கிறேன்?"

ரசித்தாளோ, ரசித்தது போல நடித்தாளோ தெரியாது, சிரித்தாள். இன்று மாலையில் டக்கருக்கு நடக்கும் போது யாரோ ஒரு பைக் பையன் காலில் இடித்து விட்டதாகச் சொன்னாள், ஆழமாகப் பார்த்தால் காலைக் கெந்தினாள்  வலி உயிரை வாட்டியது எனக்கு. பிகாரிகள் இல்லையென்றால் தூக்கிக் கொண்டு நடக்கலாம் என்றிருந்தது, கொஞ்ச நேரம் நின்று வேறு டக்கரில் போகலாமே, அக்கறையாய்க் கேட்டேன்,  இல்லை எனது அறை இங்கு தான் பக்கத்தில் இருக்கிறது.

நான் சான்ச்சலுக்காகவும், சான்ச்சல் எனக்காகவும் காத்திருப்பது நிகழத் துவங்கியது. நாங்கள் உலகின் அழகான சாலையில் மெஹங்கர் அரண்மனையை வேடிக்கை பார்த்தபடி வெகு தூரம் நடந்திருந்தோம், டக்கரில் மிக நெருக்கமாக எனக்கருகில் அமரத் துவங்கிய சான்ச்சல் வெகு வேகமாக் எனது இதய சிம்மாசனத்தின் அசைக்க முடியாத ஒரு மகாராணியாக மாறிப் போனாள்.

சான்ச்சல் பக்கத்துக்கு கிராமத்தில் இருந்து வேலைக்காக நகரத்துக்கு வந்திருக்கும் ஒரு ராஜஸ்தானின் பழங்குடிப் பெண், காச நோயில் படுத்திருக்கும் தந்தை, கூலி வேலைக்குப் போகும் தாய், படித்துக் கொண்டிருக்கும் இரண்டு தம்பிகள் என்று ஏழ்மையில் வாடும் ஒரு சராசரி இந்தியக் குடும்பம்.சான்ச்சளின் பணம் ஒரு பெரிய தூண், ஊருக்குப் போவதைக் கூட மறுதலித்து சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து ஊருக்கு அனுப்பும் பாசமுள்ள ஒரு பெண் சான்ச்சல்.

அழகியல் சார்ந்த உரையாடல்களில் சான்ச்சல் ஒரு ஸ்பீல்பர்க், ஒரு முறை எங்கள் உரையாடல் மேஹன்கர் அரண்மனையை நோக்கிப் போனது,

"இந்த அரண்மனையின் வரலாறு குறித்து உனக்கு ஏதாவது தெரியுமா சான்ச்சல்?"

சான்ச்சல் ஒரு கதை சொன்னாள்,

balsamand_lake-_resort

முன்னொரு காலத்தில் இங்கொரு ராஜா இருந்தார், ராவ் ஜோதா, ரதோர் வம்சத்தின் பதினைந்தாம் மன்னராக அவர் பதவியேற்ற போது மாண்டோர் அரண்மனையில் தான் அரச வம்சம் வாழ்ந்து வந்தது, ராவ் ஜோதாவின் தாத்தா காலத்தில் அரச வம்சத்தில் பிறந்த மேகலா என்கிற  இளவரசிக்கு ஒரு குதிரை வீரனோடு காதல், மாண்டோர் கோட்டையைச் சுற்றிச் சுற்றி மேகலாவும், ஜோகனும் காதல் நடனம் புரிந்தார்கள், தெளிந்த வானமும் விண்மீன்களும் நிரம்பிய ஜோத்பூரின் கோட்டைகளில் காதல் வழிந்து ஓடத் துவங்கி இருந்தது.

ஒரு நள்ளிரவில் மேகலாவும், ஜோகனும் தங்களை மறந்து மீர்பூர் ஏரியின் பசும் நீர்பரப்பில் கோட்டையைச் சுற்றிப் படகொன்றில்  சுற்றிப் படர்ந்திருக்கும் ஓரிதழ்த் தாமரைக் கொடிகளைப் போலத் தங்களை மறந்திருந்தார்கள். மன்னரின் ஒற்றர்கள்  இளவரசி குறித்த செய்திகளை மன்னருக்குச் சொல்லி முடிக்க, கையும் களவுமாகப் பிடிபட்டன காதல் ஜோடிகள். ஜோகனின் கைகளைக் கட்டி அதே படகுக்குள் வைத்து மிர்பூர் ஏரியின் கணவாய்க் குகையொன்றில் வைத்துப் பூசி மெழுகப்பட்டான்.

ஜோகன். மேகலாவின் கதறல் மாண்டோர் கோட்டைகளின் வாயிலில் பட்டு எதிரொலித்தது. ஜோகனின் பிரிவால் வாடிய இளவரசி மேகலா ஏரியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டு பின்னாட்களில் தற்கொலை செய்து கொண்டு விட்டாள். இளவரசியின் கடைசி ஆசைப்படி ஜோகனை சிறையிட்ட அதே குகையில் புதைத்தார்கள்.

ஜோகனும், மேகலாவும் பேயாக அலைந்து கொஞ்சம் கொஞ்சமாக மாண்டோர் கோட்டையை உடைக்கத் துவங்கினார்கள், ராவ் ஜோதா ஆட்சிக்கு வந்த காலத்தில் மாண்டோர் கோட்டை முக்கால்வாசி அழிந்து போயிருந்தது. வேறு வழியே இல்லாமல் ராவ் ஜோதா மன்னரால் கட்டப்பட்ட இந்த மேஹ்ரன்கர் அரண்மனையின் சுவர்களையும் ஜோகனும், மேகலாவும் உடைக்கத் துவங்க மன்னர் ராவ் ஜோதா ஏரியின் காதல் தேவதைக்கு ஒரு வேண்டுதல் வைத்தார், மிர் ஏரியின் நடுவில் ஒரு மிகப்பெரிய அரண்மனையைக் கட்டித் தருவதாகவும், ஜோகனும், மேகலாவும் அந்த அரண்மனையில் வசிக்கலாம் என்றும் மனமுருகி வேண்டிக் கொள்ள, அரண்மனையின் சுவர்கள் உடைவது நின்று போனது.

பிறகு மூன்று ஆண்டுகள் உழைத்து மிர் ஏரியின் நீரைக் காலி செய்து விட்டு நிலப்பரப்பில் ஒரு சலவைக் கல்லிலான அரண்மனையைக் கட்டினார் ராவ் ஜோதா. அங்கு இப்போதும் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஜோகனும், மேகலாவும் ஒரு நீர்க்குதிரை பூட்டிய படகில் அரண்மனையைச் சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள். ராவ் ஜோதாவின் ஆட்சிக் காலத்துக்குப் பின்னால் இதுவரை ஒருமுறை கூட நீர் வற்றி உள்ளிருக்கும் அரண்மனை வெளியே தெரிவதே இல்லை. ராஜஸ்தானின்  எல்லாக் காதலர்களையும் ஜோகனும், மேகலாவும் பாதுகாப்பதாக மக்கள் நம்புகிறார்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஏரியில் கரைகளில் கூட யாரும் செல்லாமல் அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள்.

images

கதையைக் கேட்ட பிறகு ஒரு முறை ஏரியைப் பார்த்தேன், ஏரியின் தோற்றம் முற்றிலுமாக மாறி இருந்தது, ஏரியின் நீர்ப்பரப்பில் இருந்து ஒரு மாளிகை உயர்ந்து மேலே எழுவதைப் போலிருந்தது, மேஹ்ரன்கர் அரண்மனையின் நிழல் நிலவொளியில் பட்டுத் தெறிக்கிற போது என் மனம் ஒரு மாறுபட்ட மனநிலையில் இருந்து அநதக் காதல் கதையை வலுவூட்டத் துவங்கியது.

ஒரு மழைக்கால இரவில் என்னுடைய திட்டப் பணிகள் முடிவு பெற்றதாக அலுவலகம் செய்தி அனுப்பி இருந்தது, கூடவே பயணச் சீட்டுகளும், சான்ச்சல் அதே புன்னகையோடும், நெருக்கத்தோடும் டக்கர் வண்டியில் பயணம் செய்தாள் ,மனிஷ் குட்காவைக் குதப்பிக் கொண்டு "ச்சலேன் சாப்" என்று குரல் எழுப்பினான். அதே புன்னகையோடும், நெருக்கதோடும் ஜோத்பூரின் ஏரியையும், அரண்மனைகளையும், இளவரசியையும் விட்டுப் நான் பிரிந்தேன்.

வாழ்க்கை அதன் போக்கில் ஒவ்வொரு நாளும் பல மனிதர்களைச் நம்மைச் சந்திக்க வைத்தாலும் சில மனிதர்களின் பிம்பங்களும் உரையாடலும் ஒரு அழிக்க முடியாத கோட்டுருவத்தைப் போல நம்மில் தங்கி விடுகின்றன, சான்ச்சலை நான் எப்படி இழந்தேன், அவளின் சிரிப்பையும் நெருக்கத்தையும் நான் எப்படி இழக்கத் துணிந்தேன் என்பது ஒரு பெரிய கேள்விக் குறி. என்னதான் சமாதானங்களை எனக்குள் சொல்லிக் கொண்டாலும் ஒரு அளப்பரிய நேசத்தின் சுவடுகளை யாருக்கும் தெரியாமல் அழித்து விடுகிற திருட்டுத்தனமான வேலையை நான் செய்திருக்கிறேன்.

குறைந்த பட்சம் அவளிடம் சொல்லி விட்டு வந்திருக்கலாம், ஒரே ஒரு வரியில் நான் உன்னை நேசித்தேன் என்று உணர்த்தி இருக்கலாம், அவளுடைய கரங்களை மெல்ல உயர்த்தி நேசத்தின் அடையாளமாக ஒரு முத்தத்தை வழங்கி இருக்கலாம். உணர்வுகளையும், உறவுகளையும் திருடிக் கொண்டு ஓடிப் போவது தான் எவ்வளவு கொடுமையான இழப்பு என்று இப்போது உணர முடிகிறது. அவள் என்னைத் தேடி இருப்பாள், கண்ணீர் சிந்தி இருப்பாள், ஆனாலும் காலம் அடித்துச் சென்று விட்ட டக்கர் வண்டிகளைப் போலவோ, மாண்டோர் அரண்மனையைப் போலவோ சான்ச்சலும் ஜோத்பூர் நகரின் கண்ணுக்குப் புலப்படாத கதையாய் மாறிப் போனாள்.

images (1)

எரிக்கடியில், தெளிந்த வானத்தின் கீழாக, விண்மீன்களின் மின்னும் பரப்பில், டக்கர் வண்டிகளின் இருக்கைகளில், பேருந்து நிறுத்தங்களில், கல்லூரிச் சாலைகளில், கடலின் ஆழத்தில், ஓரத்தில் இன்னும் எண்ணற்ற பேரண்டத்தின் வெளிகளில் சொல்லாத கதைகளாய், சொல்லி விரட்டிய சொற்களாய் காதல் காற்றைப் போல பரவிக் கிடக்கிறது. ஒரு புன்னகையின் நினைவுக் குமிழைப் பிடித்துக் கொண்டு உலகின் கொடுஞ்சிறைகளை எல்லாம் கடந்து போகிற மனிதர்கள் இன்னுமிருக்கிறார்கள், உயிர்களின் நேசத்தை வரலாற்றில் தக்க வைத்திருப்பது காதலின் வெட்டப்பட்ட சுவடுகளும் வேர்களும் தானே??

***********

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: