கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 9, 2013

என்றென்றுமான கதாநாயகன்…….

fathers-day_965801

மிதமான குளிரில் இளைப்பாறிக் கொண்டிருந்தது பெருநகரம், அலுவலகம் முடிந்து நகரச் சாலைகளில் ஒரு சாகசக்காரனைப் போல ஊர்தியைச் செலுத்தி முன்னேற வேண்டியிருக்கிறது, ஒருவழியாக வீட்டுக்கு வந்து குழந்தைகளின் முகத்தைப் பார்க்கிற போது களைப்பு ஓட்டமெடுக்கிறது, கண்டிப்பு மிகுந்த அலுவலனாக எட்டு மணி நேரத்துக்கும் மேலாக அல்டாப்புக் காட்டி விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் கட்டப்பட்டிருக்கிற குட்டி நாயைப் போல கம்பியின் மீது நடக்கிற மனித வாழ்க்கை, காட்சி மாற்றம் சில நேரங்களில் நகைச்சுவை மிகுந்தது.

நாயைப் போல ஓசை எழுப்பவும், பூனையைப் போல நடக்கவும், வயிற்றுப் பகுதியில் உனக்கு மட்டும் ஏன் முடி முளைத்திருக்கிறது என்பது மாதிரியான பல கேள்விகளுக்குப் பதில் சொல்லவும். நிறைய நரிக் கதைகளை தேடித் படித்துக் கொள்ள வேண்டும், சில நேரங்களில் நள்ளிரவு  இரண்டு மணிக்கெல்லாம் நரிக் கதைகள் சொல்ல வேண்டியிருக்கும். மனித வாழ்க்கையின் ஆகச் சிறந்த கணங்கள் குழந்தைகளோடு தான் நிகழ்கிறது.

இரண்டொரு நாட்களுக்கு முன்னாள் இரவில் நிறைமொழியும், அறங்கிழாரும் (தம்பியின் குழந்தை) விளையாடிக் கொண்டிருந்தார்கள். காலின் மீதேறி நடந்து வயிற்றில் கால் வைத்து ஒரே எட்டில் பைக்குள் கையை விட்டு ஒரு நூறு ரூபாய்த் தாளை உருவி விட்டார்கள். பிறகு அது யாருக்குச் சொந்தமானதென்று நடந்த பஞ்சாயத்தில் ஆளுக்குப் பாதியாக்கி விட்டிருந்தார்கள். நூறு ரூபாய் என்பது எத்தனை மதிப்பு மிக்கது, நூறு ரூபாய் பணம் எத்தனை மனிதர்களின் வாழ்க்கையைத் திசை திருப்பி இருக்கிறது. பலரது வாழ்க்கையை படுக்க வைத்திருக்கிறது, சிலரது வாழ்க்கையை துவக்கி வைத்திருக்கிறது. சிலர் வெகு உயரத்துக்குச் சென்றிருக்கிறார்கள், சிலர் குப்புற விழுந்திருக்கிறார்கள். கவலையோடு குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பைச் சொல்லி சாய்ந்து அமர்ந்தால், மனம் மெல்ல நிகழ் காலத்தின் கைப்பிடியில் இருந்து நழுவி முன்னொரு நாளின் இரவுக்குள் தஞ்சமடைந்தது.

IMG_0273

மழை லேசாகப் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது, செம்மண் நிலத்தில் மழைத்துளிகள் விழுந்து கிளப்பி இருந்த மண்ணின் வாசம் முற்றங்களில் புரண்டு கொண்டிருந்தது, வேப்ப மரத்தின் கிளைகள் மழையில் நனைந்து அடர்த்தியான அரக்கு நிறத்தில் பளபளத்தன, காகம் ஒன்று தனது கூட்டுக்கருகில் நின்று  உலர்த்திக் கொண்டிருந்தது, தென்னங்கீற்றுகள் வெயிலை வரவேற்பது போல சலசலத்துக் கொண்டிருந்தன, மாதத்தின் கடைசி நாட்கள், பள்ளியில் தேர்வுக் கட்டணம் கட்டுவதற்கு மாதக் கடைசி நாட்களை ஒரு காரணமாகச் சொல்ல முடியாது. முதல் நாளே வகுப்பாசிரியர்  கண்டிப்பாகச் சொல்லி இருந்தார், இரண்டொரு நாட்களாகவே தயங்கிக் கொண்டிருந்த நான் இன்று எப்படியும் அப்பாவிடம் சொல்லித் தான் ஆக வேண்டும்.

"இன்னைக்கித் தாம்பா  லாஸ்ட் நாளு"

"என்னதுடா?"

"அதாம்பா பரீட்சை பீஸ், நூறுவா"

அப்பாவின் முகம் ஒரு கணம் வாட்டமடைந்ததை என்னால் உணர முடிந்தது, அப்பாவின் சட்டைப் பையில் பெரிதாகப் பணம் இருந்திருக்கவில்லை என்பதையும் உளவு பார்த்தாயிற்று,

"நேத்தே ஞாபுகம் பண்ணி இருக்கலாம்லடா"

"…………." நான் ஏதும் பேசவில்லை.

"சரிடா, கிளம்பு, தர்றேன்"

கொஞ்சம் நிம்மதியாய் உணர்ந்தேன். வகுப்பாசிரியர் கல்யாணசுந்தரத்திடம் இருந்து தப்பித்து விடலாம்,  ஏற்கனவே டியூஷன் போகாத கடுப்பில் கும்மி எடுத்து விடுவார் என்று நினைத்திருந்தேன்.

குளித்து முடித்து அவசரக் காலை உணவை முடித்துக் கொண்டு பையை எடுத்துத் தோளில் போடும் போது , அப்பா சொன்னார்,

"என் கூட சைக்கிள்ளயே  வாடா".

அப்பா ஓரத்தில் கிழிந்திருந்த ஊதா நிற சீட் கவரை வெளியில் தெரியாதபடி அழுத்தி வைத்து விட்டு, ம்ம்ம்.உக்காருடா" என்றார்.

கேரியரில் உக்கார்ந்து பயணித்த போது எதிர்க்காற்று, கூடவே சூரியக் கதிர்கள் மொத்தமாய் அப்பாவின் மீதே விழுவது போலத் தெரிந்தது,  அப்பாவின் நிழல் என்னை வெயிலில் இருந்து முழுமையாய்ப் பாதுகாத்தது வழியெங்கும்.

அப்பா, ஒரு கூட்டுறவுப் பண்டக சாலைக்கு முன்னாள் வண்டியை நிறுத்தினார்.

தம்பி, இங்கேயே இரு.

சரிப்பா

பத்து நிமிடங்கள் காத்திருந்த பின்னும் அப்பாவைக் காணவில்லை.

சரி, கொஞ்சம் உள்ளே போய்ப் பார்க்கலாம்.

கண்ணாடி அலமாரிகளில் அடுக்கப்பட்டிருந்த பல்வேறு பொருட்களை வேடிக்கை பார்த்தபடி மெல்ல நடக்கத் துவங்கிய போது அப்பா கண்ணில் பட்டார்.

அப்பா, மேசைக்கு எதிர்ப்புறம் இருந்த நாற்காலி ஒன்றில் அடக்கமாக அமர்ந்திருந்தார்.

எதிர்ப்புறத்தில் மறந்திருந்த மனிதர் அப்பாவிடம்

"ஒரு அஞ்சு நிமிஷம் சார் இன்னும் போனியாகல".

"இருக்கட்டும், ராஜு, நீங்க பாருங்க"

முதல் வணிகத்தை முடித்து விட்டு ராஜு என்கிற அந்த மனிதர் அப்பாவிடம் நூறு ரூபாய்த் தாளொன்றை அப்பாவின் கையில் கொடுத்தார்.

"தேங்க்ஸ் ராஜு, சம்பளம் வந்தவொடனே வர்றேன்"

"மெதுவாக் குடுங்க சார், கேக்காத ஆளு கேக்குறீங்க"

அப்பா, எழுந்து வெளியே வரத் தயாரானார். எதுவும் தெரியாதவனைப் போல வெளியே வந்து நின்று கொண்டேன்.

சட்டைப் பையில் இருந்து நூறு ரூபாய்த் தாளை வெளியில் எடுத்து அப்பா என் கையில் கொடுத்தார்.

நூறு ரூபாய் பணத்துக்காக காத்திருந்த வலியை மறைக்க வலிந்து திணித்த ஒரு புன்னகையின் தடயத்தை முகத்தில் ஏற்றி இருந்தார் அப்பா.

"ரோட்டுல கவனமா போகனும்டா, கொண்டு வந்து விடவா"

"இல்லப்பா, நா போயிருவேன்"

நடக்கத் துவங்கினேன், அப்பா மீண்டும் ஒரு முறை வெளியே தெரிந்த கிழிந்த சீட்டின் உரையை உள்ளே அழுத்தி விட்டுக் இடது காலை ஒரு பெடலில் வைத்து வலது காலைச் சாலையில் இரண்டொரு முறை உந்தியபடி சைக்கிளில் ஏறி அமர்ந்தார். அவரது வெள்ளைச் சட்டையில் திட்டுத் திட்டாய் வியர்வைத் துளிகள் படரத் துவங்கி இருந்தன.

how-build-better-dad-istock-ZoneCreative-main_1

நிகழ்காலம் நிறைந்து வழிய நிறைமொழி வந்து இப்போது பக்கத்தில் நின்று கொண்டாள்.

"அப்பா, ஐயாவுக்கு இன்னும் போன் பண்ணல???"

"இப்போப் பண்ணுவோம்மா"

"ஹலோ, சாப்டீங்களா???, ஐயா, எப்ப வர்ரீன்ங்க???……"

பல நூற்றாண்டுகளுக்கும் தீர்க்க முடியாத அப்பாவின் பாசக் கடனை ஒரு சின்னஞ்சிறு தவணையில் நிறைமொழி செலுத்திக் கொண்டிருந்தாள்.

திரையில், வாழ்க்கையில் என்று விளக்கொளியில் மின்னும் நாயகர்கள் யாரும் வென்று விட முடியாத எனது நிஜ வாழ்வின் நாயகனாக அப்பாவே இருக்கிறார், உலகம் முடிகிற கடைசி நிமிடம் வரையிலும்…………

************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: