கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 12, 2013

வீழ்வோம் என்று நினைத்தாயோ!!!!

540881_498502080208329_460030237_n

இன்று காலையில் ஒரு நண்பரைச் சந்தித்தேன், ஈழ விடுதலைக்காகவும், பல்வேறு சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடி வரும் அந்த நண்பர் என்னிடம் இப்படிக் கேட்டார்…,

“வருகிற ஞாயிற்றுக் கிழமை ஏதாவது வேலை இருக்கிறதா?” என்ன செய்யப் போகிறீர்கள்”. மிகத் தெளிவாகவும், மகிழ்ச்சியோடும் அவரிடம் இப்படிச் சொன்னேன், ” வருகிற ஞாயிற்றுக் கிழமை நான் குடும்பத்தோடு ஒரு திரைப்படத்துக்குச் செல்லலாம் என்று இருக்கிறேன், வேறு எந்த வேலைகளும் இல்லை, இருந்தாலும் வருவதாக இல்லை”.

நண்பருக்கு பெரிய வியப்பு,

“என்ன இது? நீங்கள் ஒரு போதும் திரைப்படங்களுக்கு ஆர்வமாகச் செல்பவர் இல்லையே, தமிழகமெங்கும் மாணவர்கள் மிகப்பெரிய எழுச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள், இந்த நேரத்தில் திரைப்படத்துக்குச் செல்கிறேன் என்று சொல்கிறீர்களே???.”
நான் புன்னகைத்த படி அவரிடம் மீண்டும் சொன்னேன். “நீண்ட நெடுங்காலமாக எமது இளைய தலைமுறை திரைப்பட நடிகர்களின் பின்னாலும், திரைப்படங்களின் பின்னாலும் அரசியல் உணர்வுகளோ, சமூக உணர்வுகளோ இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்களே என்கிற கவலையும், ஆதங்கமும் நெஞ்சம் எல்லாம் அளவிட முடியாத வலியாக நிறைந்திருந்தது.

இன்றைக்கு அந்த வலியும் வேதனையும் எனக்குள் இல்லை, நமது தோள்களில் கிடந்த சுமையை அவர்கள் சுமக்கத் துவங்கி விட்டார்கள். எமது இளைய தலைமுறை எங்கே போராட்ட வலிமையையும், சமூக அரசியல் உணர்வுகளும் இல்லாத ஒரு இனமாக இந்த இனத்தை மாற்றி விடுமோ என்கிற மிகப்பெரிய கவலையை நான்கைந்து நாட்களில் இல்லாதொழித்து விட்டார்கள்.

நம்பிக்கையும் கனவுகளும் நிறைந்த இந்த அறிவு சார் இனத்தின் இளைய சமூகம் தோல்வியுற்றதாக சொல்லிக் கொண்டிருந்த எண்ணற்ற மனிதர்களின் மனதில் மகிழ்ச்சியையும் நம்பிக்கை ஒளியையும் பாய்ச்சும் புது வெள்ளமாய் அவர்கள் புதிய பரிமாணம் எடுத்திருக்கிறார்கள். ஆகவே கவலைகள் இல்லாத ஒரு புதிய குடும்பத் தலைவனாக நான் வருகிற ஞாயிற்றுக் கிழமையை கொண்டாடப் போகிறேன்.

எமது இடங்களை இட்டு நிரப்ப எண்ணற்ற தம்பிகள் புதிய அரசியல் விழிப்புணர்வோடும் எழுச்சியோடும் இன்றைக்கு ஊடகங்களில் நிரம்பி வழிகிறார்கள். அறிவும் உணர்வும் பொங்கிப் பெருகும் அவர்களின் சொற்களில் எமது கவலைகள் கருகிக் கொண்டிருக்கிறது. இனி அவர்கள் விழித்துக் கொண்டார்கள் என்ற நம்பிக்கையோடு வழக்கமாய் இயங்கும் வலிமை எனக்கு வந்திருக்கிறது. நான் நிம்மதியாக ஒரு ஞாயிற்றுக் கிழமையை குடும்பத்தினரோடு கழிக்கப் போகிறேன்”.

வெறும் சொற்களின் ஒப்பனையோடு நான் மேற்கண்ட உரையாடலைச் எழுதவில்லை, எத்தனை மகிழ்ச்சியாகவும், புத்துணர்வாகவும் இருக்கிறது எமது தம்பிகளின் புதிய அவதாரத்தைக் கண்டு, அரசியல் இயக்கங்களின் பின்னால் கொடி பிடித்தபடி எழுச்சியும், சுய அறிவும் இல்லாத இளைஞர்களாய் வலுவிழந்த நம்பிக்கை ஊட்டாத அவர்களின் முகங்களைப் பார்த்துப் பழகிய எனக்கு ஒரே ஒரு நாள் முழுமையான நம்பிக்கையை மீட்டெடுத்த திருநாளாய் மலர்ந்திருந்தது. அவர்கள் எட்டுப் பேர் தலைநகரின் ஒரு குறுகிய இடுக்கான இடத்தில போடப்பட்டிருந்த மேடையில் அணிவகுத்திருந்தார்கள்.

ஒட்டு மொத்த இனத்தின் மனசாட்சியாய், கூனிக் குறுகிப் போயிருந்த உலகின் ஒப்பற்ற மொழியை அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள், அவர்களைத் தேடி தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகளில் இருந்து, சின்னஞ்சிறு இயக்கங்களின் தலைவர்கள் வரை வரத் துவங்கி இருந்தார்கள். தலைவர்களைக் கண்டு மயங்கியபடி, அவர்களின் தரிசனத்துக்கு ஏங்கியபடி தெருக்களில் முண்டியடிக்கும் சிறு கூட்டமாய் அலைந்திருந்த அவர்களைக் காண நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேசியக் கட்சிகளின் தலைவர்களும், செயற்குழு உறுப்பினர்களும் அங்கே வரிசையில் நின்றார்கள, நிலை தடுமாறிக் கொண்டிருந்த ஒரு இனத்தின் பல்லாண்டு கால வரலாற்று விடுதலைப் போராட்டத்தை ஒரு புதிய தளத்துக்கு அவர்கள் அழைத்து வந்திருந்தார்கள். அங்கே மகிழ்ச்சியும், உணர்ச்சிப் பெருக்குமாய் என்னைப் போலவே சில மனிதர்களை நான் அங்கே பார்த்தேன்.

IMG_0548

கலைந்த தலைமுடியும், தீராத வேதனையும் நிரம்பிய இன விடுதலையின் போர்க்களத்தில் உருவான சில அற்புத மனிதர்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள், ஒருவர் தோழர் திருமுருகன் காந்தி, தனது இல்லத்தில் நிகழும் திருமண வரவேற்பில் ஓடியாடும் ஒரு குழந்தையைப் போல அவர் வருகிற போகிற மனிதர்களை அவர் வரவேற்றபடி நின்றிருந்தார். இன்னும் பெரியதொரு பந்தலை அமைக்க யாரோ ஒரு நல்ல மனிதரிடம் நன்கொடையைப் பெற்று மாணவர்களிடம் சேர்த்துக் கொண்டிருந்தார் அவர்.

கன்னக்குழி விழும் புன்னகையோடும், கள்ளமற்ற பேரன்போடும் துள்ளிக் குதிக்கிற மான் குட்டியைப் போல பட்டினிப் போராட்ட அரங்கின் ஒவ்வொரு அங்குலமாய் சுற்றிக் கொண்டிருந்த எமது தமிழ்ப் பெண்களின் இன்னொரு அடையாளத்தை அங்கே பார்த்தேன் நான். அவரது கண்களில் இனம் புரியாத மகிழ்ச்சியும், நிறைவும் வழிந்து கொண்டிருப்பதை என்னால் அடையாளம் காண முடிந்தது. அவர் எமது அளப்பரிய மொழியின் கவிஞர் மீனா கந்தசாமி.

இவர்களைப் போல இன்னும் எண்ணற்ற மனிதர்கள், தனது எட்டு வயது மகனோடு பெருமிதம் பொங்க அந்த அரங்குக்குள் நுழைந்த ஒரு அண்ணனைப் பார்த்தேன், “வாடகைப் பணம் கொடுத்து விட்டீர்களா?” என்று யாரிடமோ அலைபேசியில் கேட்டபடி பட்டினி கிடக்கும் தனது பிள்ளைகள் இருந்த திசை நோக்கிக் கண் கலங்கிய ஒரு தாயைப் பார்த்தேன், தனது சகோதரர்கள் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் தவக் கோலத்தைக் கண்டு கலவையான உணர்வுகளோடு கை தட்டிக் கொண்டிருந்த எனது இனத்து மாணவச் சகோதரிகளைப் பார்த்தேன்.

இரண்டு கால்கள் இல்லாத ஊன்றுகோலின் உதவியோடு அரங்கின் நிகழ்வுகளைக் கண்களில் நீர் பணிக்கப் பார்த்துக் கொண்டடிருந்த ஒரு தமிழ்ச் சகோதரனைப் பார்த்தேன். பதாகைகளை அமைப்பதற்கு பட்டியல் கம்புகள் தேடிக் களைத்து ஒரு திரைப்படத் தட்டியை உடைத்து நொறுக்கிப் பதாகைகளைக் கட்டிய எமது குலக் கொழுந்துகளைப் பார்த்தேன். இதுவரை காணக் கிடைத்திராத ஒரு பரவசமான உணர்வு அது.

ஆம், எனதருமைத் தம்பிகளே, நீங்கள் விழித்துக் கொண்டீர்கள், எதற்காக ஏங்கினோமோ, எதற்காக நாங்கள் தவம் கிடந்தோமோ அதனை நீங்கள் செய்யத் துவங்கினீர்கள், உலகின் மௌனத்தை மூன்று இரவுகளில் உடைத்து நொறுக்கினீர்கள், கிரிக்கெட் வீரர்களின் பின்னாலும், திரைப்பட நடிகர்களின் பின்னாலும் தறி கெட்டலையும் தறுதலைகள் என்று உங்களைப் பார்த்துச் சொன்னவர்களை நாங்கள் உலகிற்கு நாகரீகம் வழங்கிய இனத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று உரக்கச் சொன்னீர்கள். தாய்த் தமிழகமெங்கும் கனன்று கொண்டிருந்த அந்த விடுதலை நெருப்பை உங்கள் கண்களில் அடைத்தீர்கள்.

ஊடகங்களில் ஒலிக்கும் உங்கள் ஒப்பற்ற குரல் ஒவ்வொன்றும், இந்த இனத்தின் விடுதலையை ஒவ்வொரு அங்குலமாக நகர்த்திக் கொண்டிருக்கிறது, அடக்குமுறைகள் வரக்கூடும், அரசியல் சதுரங்கத்தில் உங்கள் உடல் ஒரு பகடைக் காயாய் உருட்டப்படக் கூடும், ஆட்சியையும், அதிகாரத்தையும் காப்பாற்ற புதிய வழக்குகள் உங்கள் மீது பாய்ச்சப் படக் கூடும்,

IMG_0561

அஞ்சாதிருங்கள், உங்கள் எழுச்சி மிக்க போராட்டத்தின் காலடியில் காவற் காரர்களைப் போல நாங்கள் எப்போதும் அமர்ந்திருப்போம், உங்கள் ஒவ்வொரு அசைவையும், எமது பிள்ளைகளின் முதல் நடையைப் போலப் பார்த்தபடி நீங்கள் அமர்ந்திருக்கும் இடங்களைச் சுற்றித் தான் அமர்ந்திருப்போம்.

உங்களுக்கு அறிவுரை சொல்வதற்கும், வழி நடத்துவதற்கும் எங்களிடம் எந்தத் தளவாடங்களும் இல்லை, நீர்த்துப் போன சில தேசிய நலன்களும், திராவிடக் கொள்கைகளும் தவிர உருப்படியான ஆயுதங்கள் ஏதும் எங்களிடம் உண்மையாகவே இல்லை. இழப்பின், வலியும், எண்ணற்ற எமது குழந்தைகளையும், பெண்களையும் இழந்து தவிக்கிற ஆற்றாமையும் தவிர உங்களுக்குக் கொடுப்பதற்கு எங்களிடம் ஒன்றும் இல்லை.

உங்களுக்கான ஆயுதங்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள், உங்களுக்கான அரசியலை நீங்களே திட்டமிடுங்கள்.

பெருமையும், பேரன்பும் நிறைந்திருக்க இதோ எங்கள் தம்பி எழுச்சியும், மானமும் கொண்டு வெகுண்டு எழுந்து விட்டான் என்று போகிற வருகிற எல்லாரிடத்திலும் பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம், உங்கள் கண்களில் கனன்று ஒளிரும் அந்த ஈழ விடுதலைக்கான நெருப்பில் இனி நாங்கள் எரிக்கப் பட்டாலும் கவலை இல்லை. நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

இம்முறை வாழ்த்துக்கள் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளப் போகிறோம், இது உங்கள் கனவு, இது உங்கள் வாழ்க்கைக்கான அரசியல் போராட்டம். நீங்கள் போகிற இடங்களில் எல்லாம் எங்கள் உயிரும், உணர்வும் சுற்றிக் கொண்டிருக்கிறது, உங்கள் சொற்களில் எங்கள் வலி அடைக்கப்பட்டிருக்கிறது.

imagesCAW1E3KU

“எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு” என்று சங்கநாதம் முழக்கிய பாவேந்தனின் பேரன்களாய், “மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு” என்று சூளுரைத்த தந்தை பெரியாரின் பேரன்களாய், “கற்பி, ஒன்று சேர் புரட்சி செய்” என்று முழக்கிய அறிவுலக ஆசான் அண்ணல் அம்பேத்கரின் பிள்ளைகளாய் மானமுள்ள தமிழ்ப் பிள்ளைகளாய் உலகை வெல்லுங்கள். வாழ்த்துக்கள் தம்பிகளே, தங்கைகளே…….

*****************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: