கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 19, 2013

பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்……….

tumblr_mjvzv4qyKv1r6m2leo1_500

இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் டெல்லி ஜன்பத் சாலையில் இந்தியப் பேரரசின் அமைச்சரவைக் கூட்டம் சில மிக முக்கியமான முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறது, பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து கடை பிடிக்கப்பட்டு வரும் இந்தியா என்கிற மண்டல வல்லரசின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டு வரப் போகும் சில மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது.

ஒன்பது வருடங்களாக ஒரு அரசின் மிக முக்கியமான அரசியல் கூட்டாளியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஒரே இரவில் வெகு தொலைவு பயணப்பட வேண்டியிருக்கிறது. நடுநிலை வெங்காயங்களை தங்கள் வீட்டுத் தோட்டங்களில் பயிரிட்டு வளர்த்த பல அரசியல் வணிக விவசாயிகள் வேறு வழியின்றி இனப்படுகொலை என்கிற வயலில் களை பிடுங்க ஓடி வருகிறார்கள். தேசியக் கொடியைத் தங்கள் மகிழுந்துகளின் முன்புறத்தில் பறக்க விட்டுக் கொண்டு ஆட்சி அதிகாரத்தில் திளைத்திருந்த பல கதர் வேட்டிக்  கந்தசாமிகள் அவற்றை அகற்றி விட்டு கற்களும் செருப்புகளும் இல்லாத ஒரு புதிய பாதையில் பயணிக்கத் தலைப்பட்டார்கள்.

தமிழ் தேசியத்தைத் தங்கள் வாய்ச்சவடால்களில் கட்டி அமைத்து, ஒலிபெருக்கிகளில் வெற்று முழக்கங்களை எழுப்பிக் காற்றைக் களங்கம் செய்து கொண்டிருந்த சோழ இளவரசர்கள் விரைவாகப் படுத்து உறங்கி, மெதுவாக எழுந்து கொள்ளப் பழகிக் கொண்டிருந்தார்கள். நூற்றாண்டு கால திராவிட அரசியலால் இம்மியளவும் நகர்த்த முடியாத இந்திய தேசத்தின் கொள்கை வகுப்பாளர்கள் புதிய செயல் திட்டங்களை வகுப்பதற்கான பயிற்சி வகுப்பில் "உள்ளேன் ஐயா" என்று வருகைப் பதிவு செய்யத் தலைப்பட்டார்கள்.

வங்கத்தின் சிங்கங்கள் துவங்கி, முலாயம் சிங்க வகையறாக்கள் வரையில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று இந்திய நாடாளுமன்றத்தில் இடித்துரைத்தார்கள். தங்கபாலுக்களும், சிதம்பரங்களும் தாங்கள் தமிழர்கள் என்பதற்கான சான்றிதழ்களை ஒருமுறை சரிபார்த்துச் சத்தியம் செய்தார்கள்.

இவற்றை எல்லாம் ஓரிரு இரவுகளில் நிகழ்த்திக் காட்டிய எமது மதிப்புக்குரிய மாணவர்களோ பசியோடும், பட்டினியோடும் தெருக்களில் படுத்திருந்தார்கள், அவர்களின் அடுத்த நாள் உணவு குறித்த எந்த உறுதிப்பாடுகளும் இல்லையென்றாலும், தாங்கள் கையிலெடுத்த ஒரு தீரமிக்க போராட்ட வரலாற்றின் பக்கக்களை அவர்கள் வெகு திண்ணமாக வரையறுத்துக் கொண்டிருந்தார்கள்.

பயிலிடங்களின் உறைவிடங்களின் என்று எல்லா வாயில்களும்  தாழிடப்பட்டிருந்தன, ஆனாலும் அவர்களின் ஒளி படைத்த கண்களில் ஒரு இனத்தின் வலி தேங்கிக் கிடந்தது. நூற்றாண்டு கால அரசியல் இயக்கங்கள் செய்ய முடியாத மாற்றங்களை சில இரவுகளில் அவர்கள் வெகு இலகுவாக நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

575981_595652017113494_1204108184_n

"அப்படிச் செய்யாதே, இப்படிச் செய், இங்கே போகாதே, அங்கே போ" என்று யானைப் பாகன்களைப் போல அங்குசம் பிடித்துக் கொண்டிருந்த தந்தையரின் கைகளில் இருந்து மழுங்கிப் போயிருந்த அரசியல் என்கிற மந்திரக் கோலை  இவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள், பல நூற்றாண்டுகளாய்த் அறத்தில் தோய்ந்திருந்த தங்கள் பண்டைத் தமிழ் வீரத்தை அவர்கள் குறுவாளாய்த் தரித்திருந்தார்கள்.

களைத்துப் படுத்திருந்த பத்துக் கோடித் தமிழர்களின் படுக்கைகளை ஒட்டு மொத்தமாய்ச் சுருட்டித் தங்கள் அக்கினிக் குஞ்சுகளை அதற்குள் ஆடை காத்தார்கள். மடையர்கள் என்று சொன்ன அறிவு ஜீவிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டியபடி அவர்கள் ஊடகங்களில் ருத்ர தாண்டவம் ஆடினார்கள். சீருடைகளை அணிந்து சிறுவர்களைப் போலிருந்த அவர்களின் அரங்குகளில் அடிப்படை அரசியல் படிக்க அலைமோதியது அண்ணாச்சிகளின் கூட்டம்.

எந்தப் பாடசாலையும் அவர்களுக்கு அரசியலைக் கற்றுக் கொடுக்கவில்லை, எந்தக் கல்லூரியும் அவர்களுக்கு அறச் சீற்றம் குறித்து சிறப்பு வகுப்புகள் எடுக்கவில்லை, ஆனாலும் அவர்கள் அறத்தின் பக்கத்தில் தவறாது நின்றார்கள். சமூகம் குறித்து அவர்கள் அறிந்து கொண்டது எல்லாம் பொய்யும் புரட்டும் பேசிய பரதேசி ஊடங்களில் இருந்து தான். பெரும்பாலான அச்சு ஊடகங்கள் அவர்களுக்குக் காட்டியது எல்லாம் தொப்புள் கொடி உறவுகளின் தாங்கொணாத துயரத்தை அல்ல, தொப்புள் அழகிகளின் துள்ளும் இடுப்பைத்தான், பெரும்பாலான காட்சி ஊடகங்கள் அவர்களுக்குக் காட்டியது எல்லாம் விடுதலைப் போராட்டத்தின் சுவடுகளை அல்ல, திரைப்பட மூடர்களின் போலி முகங்களைத் தான். ஆனாலும், அவர்கள் கிடைத்த இடைவெளிகளில் உலகத்தைப் படித்திருக்கிறார்கள், கிடைக்காத வாய்ப்புகளில் குருதி தோய்ந்த அறுபதாண்டு கால அரசியல் வரலாற்றைப் படித்திருக்கிறார்கள். ஒரே இரவில் ஒப்பற்ற வீரர்களாய், ஒரு இனத்தின் விடுதலையை அடுத்த தளத்துக்கு நகர்த்தி இருக்கிரார்கள்.

579851_153372898160322_1970939098_n

காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஊர்தியொன்றில் அடைக்கப்பட்டிருந்த எமது பெண் குழந்தை ஒன்றின் களைத்த முகம் ஊடக ஒலிபெருக்கியை நோக்கித் திரும்பி இப்படிச் சொல்கிறது,

"எமது இனத்தின் அறுபதாண்டு காலப் போர் அடங்கிப் போய்விட்டதென்று யாரும் கனவு கண்டு விடாதீர்கள், எமது மக்களின் வலிக்கான நீதி எமக்கான தனித் தேசத்தை நாங்கள் உருவாக்குவதில் தான் அடங்கி இருக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்".

கடந்த பத்தாண்டுகளில் இப்படி ஒரு தீரமிக்க போராட்டத்தில் பங்கெடுத்த, தெளிந்த நீரோடையைப் போல முழக்கமிட்ட ஒரு ஆண் அரசியல்வாதியைக் கூட நாங்கள் பார்த்ததில்லை. கண்கள் பனிக்க அந்தக் குழந்தையை நாங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், எந்த முறையான அரசியல் அறிவையும் கொடுக்காத எங்கள்  குற்ற உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாது தவிக்கிறோம் நாங்கள்.

ஆறு நாட்களாக உணவு ஏதுமின்றிக் கொண்ட இலக்குக்காக உயிரைப் பணயம் வைத்தபடி படுத்திருக்கும் எனதருமைத் தம்பி ஒருத்தன் இப்படிச் சொல்கிறான்,

"கல்வி கற்கும் காலத்தில் இப்படிப் போராட்டங்களில் ஈடுபட்டு நாட்களை வீணடிப்பது சரியா என்று எனைக் கேட்கிறார் எங்கள் பேராசிரியர், அவருக்குச் சொல்லுங்கள், எமது மக்களின் அரசியல் உரிமைகளையும், எமது குழந்தைகளின் வாழ்வுரிமைகளையும் வென்றெடுக்கும் அரசியலை வளர்த்தெடுக்கும் காலத்தில் நீங்கள் சரியாக இருந்திருப்பீர்களே ஆனால், நாங்கள் இப்போது நீங்கள் சொல்கிற படி கல்வியைக் கற்றுக் கொண்டிருந்திருப்போம்."

எத்தனை அறச் சீற்றம், எத்தனை தெளிவான சிந்தனை, எமது மொழிக்கும், எமது இலக்கியத்துக்கும் இருக்கிற பேராற்றல் அது, எமது பாட்டனும், பூட்டனும் காற்றில் விதைத்துப் போன களங்கமற்ற நற்சிந்தனைகளின் வெளிப்பாடு தான் இங்கே பூத்திருக்கும் எமது விடுதலைப் பூக்கள்.

இந்த அற்புதமான ஒரு காலத்தில் எமதருமை அரசியல் நண்பர்களே, சான்றோர்களே, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த விடுதலை மலர்களுக்கு நீர் பாய்ச்சுவதும், உரமிடுவதும் தான். யார் என்ன செய்தார்கள், யார் என்ன செய்யப் போகிறார்கள், யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வியைத் தழுவுவார்கள் என்பது குறித்தெல்லாம் இந்த இளம் குருத்துக்களுக்கு அக்கறை இல்லை, அவர்கள் எமது பாரம்பரிய மிக்க மொழியும், இலக்கியமும் கற்றுக் கொடுத்த அறம் என்கிற ஒற்றைச் சொல்லை மட்டுமே உள்வாங்கி இருக்கிறார்கள், உங்கள் குழாயடிச் சண்டைகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், இயன்ற வரையில் ஒருமித்த குரலில் அவர்களின் பின்னால் அணிவகுத்து நில்லுங்கள்.

protest_EPS

விடுதலை என்பது இன்னும் மேன்மையான ஒரு உலகத்தைப் படைப்பதற்கான போராட்டம் தான் என்பதை எமது தம்பிகளும், தங்கைகளும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே உணர்ந்து விட்டார்கள், இனி அவர்கள் அறம் சார்ந்த ஒரு புற உலகைக் கட்டி அமைக்கும் வல்லமை பெறுவார்கள். ஒற்றைக் குரலில் அவர்கள் உயர்த்திப் பிடிக்கும் அந்த முழக்கம் வெகு விரைவில் அவர்களிடம் இருக்கும்.

வெல்லட்டும் எமது தம்பி, தங்கைகளின் புரட்சி. மலரட்டும் தனித் தமிழ் ஈழம்.

*****************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: