கை.அறிவழகன் எழுதியவை | ஏப்ரல் 2, 2013

ஒரு உள்ளூர்க் கதையும், ஒரு வெளியூர்க் கதையும்.

உள்ளூர்க் கதை.

tumblr_lovd9hRFJv1qfklz1o1_500

சனிக்கிழமை இரவே நிறைமொழி தனது ஞாயிற்றுக் கிழமை நிரலைத் தயாரித்து வழங்கி விடுகிறாள், அனேகமாக நிறைமொழியின் அம்மாவும் அதற்கு உதவி புரியக் கூடும் என்று நினைக்கிறேன், கடந்த ஞாயிற்றுக் கிழமை காலையில் நிறைமொழியோடு நடக்கத் துவங்கினேன், பறவைகளும், நாய்களும் கூட மிகச் சோம்பலாகத் தோற்றமளிக்கின்றன விடுமுறை நாட்களில், அனேகமாக இன்னும் சில நாட்களில் ஒரு மரக்கறி உணவுப் பழக்கம் கொண்டவனாக என்னை மாற்றி விடும் அளவுக்கு வகை வகையான கேள்விகளை மீன் கடையிலும், கோழி இறைச்சிக் கடையிலும் கேட்கத் துவங்குகிறாள், சில மாதிரிக் கேள்விகள்.

"அப்பா, இந்த மீனுக்கு அம்மா அப்பா எல்லாம் கிடையாதா?"

"அப்பா, இங்கே இருக்கிற மீனெல்லாம் என்ன சாப்பிடும்?"

கேட்டுக் கொண்டே இருப்பவளின் இந்தக் கேள்வி ஒரு கணம் என்னை நிலை குலைய வைக்கிறது, பல காலமாக இறைச்சி தின்னும் பழக்கம் உள்ள மனிதர்களாக, அதை ஒரு வெகு இயல்பான உணவுப் பழக்கமாகக் கருதும் என்னையும் கூட இந்தக் கேள்வி இன்னொரு உயிரின் வலி குறித்த ஆழ்ந்த கவலைகளை உண்டாக்குகிறது.

"அப்பா. இந்தக் கோழிக்கு வெட்டும் போது வலிக்காதா?.

ஒரு வழியாகச் சமாளித்து ஒரு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து சில சமையலுக்கான பொருட்களையும், இரண்டு (Cream Biscuit) இனிப்புக் களிம்பு ரொட்டிப் பொட்டலங்களையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம், வழியில் கேப்பைக் கூழ் விற்றுக் கொண்டிருந்தார்கள் ஒரு அம்மாவும், குழந்தையும், ஒரு காலத்தில் வழக்கமான ஊரகப் பகுதியின் உணவுப் பொருளாக இருந்த கேப்பை இப்போது தள்ளு வண்டிகளில் வைத்து விற்கப்படும் அரிய உணவாகி விட்டதை எண்ணியபடி அந்தப் பெண்ணிடம் கேப்பைக் கூழ் கலக்கித் தரச் சொன்னேன், பக்கத்தில் விடாமல் அழுது கொண்டிருந்தான் குழந்தை, நிறைமொழி குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அப்பா, தம்பி ஏன் அழுகுறான்?".

"தெரியலம்மா, நீயே கேளு?"

love

நான் கேப்பைக் கூழைக் குடித்து முடிக்கும் வரை அமைதியாகவே இருந்தாள் நிறைமொழி. காசைக் கொடுத்து விட்டு நகர முற்பட்ட போது என் கால்களைச் சுரண்டினாள்.

"என்னம்மா?".

"அப்பா, இந்த பிஸ்கட் பாக்கெட்டை தம்பிக்குக் குடுக்கலாமா?"

"நீ ரொம்பப் புடிக்கும்னு தானம்மா கேட்டு வாங்குன?"
 
வளர்ந்த மனித மனதுக்கு அதன் மேல் எழுதப்பட்டிருந்த விலை நிழலாடியது.

குழந்தைகளுக்கோ சக மனிதனின் அழுகை தான் நிழலாடிக் கொண்டே இருக்கிறது.

"இல்லப்பா நம்மக்கிட்ட தான் ரெண்டு இருக்கே?"

பட்டென்று சொன்னாள் குழந்தை, "ஆமா, நம்ம கிட்டத் தான் ரெண்டு இருக்கே!!!" என்று எனக்கும் அப்போது தோன்றியது.

"சரிம்மா, தம்பிக்குக் குடு". என்று ஒரு பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தேன், நிறைந்த மகிழ்ச்சியோடு அந்தக் குழந்தையின் கைகளில் அதைக் கொடுத்து விட்டு "தம்பி, அழுகாதடா, இதச் சாப்பிடு" என்று ஊட்டாத குறையாகக் கொடுத்து விட்டு அப்பாவைப் பார்த்தாள், இப்போது என் கண்களிலும் நிறைந்த மகிழ்ச்சி தான். குழந்தை சரியான பாதையில் தான் வளர்கிறாள் என்ற தந்தையின் மகிழ்ச்சி. அந்தக் குழந்தையும் அழுகையை நிறுத்தி விட்டு புன்னகைத்தபடி ரொட்டிப் பொட்டலத்தைப் பிரிக்க ஆரம்பித்தான்.

ஆனால் வீடு திரும்பும் வரையில் ஒரு கேள்வி என்னைத் துரத்தியபடி வந்தது,

நம்மிடம் இரண்டு ரொட்டிப் பொட்டலங்கள் இருப்பது ஏன் அந்தக் குழந்தை அழும் போது என் மனதில் தோன்றவே இல்லை?????

*********

வெளியூர்க் கதை.

Paderewski

1892 ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் தேர்வுக் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது, ஒரு முதலாண்டு மாணவனுக்கு கடுமையான நெருக்கடி, அவன் ஒரு ஏதிலி, ஒரு அநாதை ஆசிரமத்தில் இருந்து பல்கலைக்குத் தேர்வானவன், தேர்வுக் கட்டணத்துக்கான தொகை கணிசமாய் உயர்ந்திருந்தது, பணத்துக்காக எங்கு செல்வது என்று தவித்துக் கொண்டிருந்த அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது, சின்னதாகக் பல்கலைக் கழக வளாகத்திலேயே ஒரு இசை நிகழ்ச்சி நடத்தலாம், கிடைக்கிற பணத்தில் தேர்வுக் கட்டணம் கட்டலாம் என்று அவனைப் போலவே தவித்துக் கொண்டிருந்த இன்னொரு நண்பனின் உதவியையும் நாடினான்.

அவனும், சரி, நாம் நகரின் மிகச்சிறந்த ஒரு பியானோ இசைக்கலைஞரை அழைக்கலாம் என்று முடிவு செய்து அவரது அலுவலகத்துக்குப் போனார்கள், அந்த பியானோ இசைக் கலைஞரின் பெயர் "இக்னசி ஜான் பதேறேவ்ஸ்கி". அலுவலக மேலாளர் இரண்டாயிரம் டாலர் பணத்தை உங்களால் கொடுக்க முடியுமானால் உங்கள் நிகழ்சிச்யை நான் உறுதி செய்கிறேன் என்று சொன்னார்.

சரி, நாங்கள் இன்னும் இரண்டொரு நாட்களில் நுழைவுச் சீட்டு விற்பனையில் உங்களுக்கான பணத்தை கட்டணத்தைக் கட்டி விடுகிறோம் என்று நம்பிக்கையோடு சொல்லி விட்டுப் போனார்கள். மூன்று நாட்கள் தலை கீழாக நின்று நுழைவுச் சீட்டு விற்றுப் பார்த்தும் ஆயிரத்து அறுநூறு டாலர்களை மட்டுமே அவர்களால் ஈட்ட முடிந்தது, மூன்றாம் நாள் இரவு கவலை தோய்ந்த முகத்தோடு இருவரும் பதேறேவ்ஸ்கியின் அலுவலகத்துக்குப் போனார்கள். பார்வையாளர்கள் நிறைந்த அவரது அலுவலகத்தில்

வெகு நேரம் காத்திருந்து பதேறேவ்ஸ்கியை சந்தித்து, "ஐயா, உங்களுக்கு உறுதியளித்த இரண்டாயிரம் டாலர்களை எங்களால் திரட்ட முடியவில்லை, ஆயிரத்து அறுநூறு டாலர்களை வைத்துக் கொள்ளுங்கள், எஞ்சியிருக்கும் நானூறு டாலர்களுக்குப் பின் தேதியிட்ட காசோலையைக் கொடுக்கிறோம், வெகு விரைவில் பணமீட்டி உங்களுக்குத் தெரிவிக்கிறோம் என்று சொன்னார்கள்.

பதேறேவ்ஸ்கியிடம் இருந்து பெரிதாக ஒரு "நோ" வந்தது, எழுந்தவர் நானூறு டாலருக்கான காசோலையைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டார், "இந்த ஆயிரத்து அறுநூறு ரூபாயில் உங்கள் தேர்வுக் கட்டணத்தைக் கட்டுங்கள், நான் கட்டணமின்றி உங்கள் நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்கிறேன்" என்று வியப்பளித்தார்.

பின்னாட்களில் உயர உயரப் பறந்து பதேறேவ்ஸ்கி போலந்து நாட்டின் பரதம மந்திரியானார், அவரது ஆட்சிக் காலத்தில் உலகப் போர் கொடுமையான விளைவுகளை போலந்து நாட்டில் உண்டாக்கி இருந்தது 1.5 மில்லியன் போலந்து மக்களின் உணவு கேள்விக் குறியானது, பதேறேவ்ஸ்கி செய்வதறியாது திகைத்தார், நெருக்கடியான அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு ஒருவழியாக அமெரிக்காவின் உணவுக் கழகத்தை உதவிக்கு அழைப்பதேன முடிவு செய்து கடிதம் எழுதினார்.

31hh_header_sm

அன்றைய உணவுக் கழகத்தின் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்கிற இளைஞர், பெருமளவில் உணவுப் பொருட்களை போலந்துக்கு அனுப்பி போலந்து மக்களை அழிவிலிருந்து உடனடியாகக் காப்பாற்றினார் ஹெர்பெர்ட் ஹூவர். பதேறேவ்ஸ்கி மனம் நெகிழ்ந்து போனார், போர்க்காலம் முடிவடைந்த பிறகு அமெரிக்காவுக்குச் சென்று ஹெர்பெர்ட் ஹூவரைச் சந்திக்க வேண்டுமென்று விரும்பி அப்படியே பயணம் செய்தார் பதேறேவ்ஸ்கி.

நெகிழ்வான அந்தச் சந்திப்பில் ஹெர்பெர்ட் ஹூவரைக் கட்டி அணைத்து பதேறேவ்ஸ்கி இப்படிச் சொன்னார், "இளம் வயதில் மிகுந்த மனித நேயமும், அன்பும் கொண்ட ஒருவரைத் தலைவராகப் பெற்ற இந்த நாடும், நீங்களும் நன்றிக்குரியவர்கள்".

ஹெர்பெர்ட் ஹூவர் அமைதியாக பதில் சொன்னார், " மரியாதைக்குரிய பிரதம மந்திரி அவர்களே, உங்களுக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ?, நெடுங்காலத்துக்கு முன்னாள் ஸ்டான்போர்ட் பலகலைக் கழகத்தில் இரண்டு ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினீர்கள், அந்த முன்னிரவு நேரத்தில் உங்கள் வெம்மையான அன்பில் இருந்து தான் நான் மனித நேயத்தையும், அன்பையும் கற்றுக் கொண்டேன், அந்த இரண்டு மாணவர்களில் நானும் ஒருவன்".

பதேறேவ்ஸ்கியின் கண்களில் நீர் கட்டிக் கொண்டது.

இந்த உலகம் மிக அழகானதென்று அவர் நம்பத் துவங்கினார். பின்னாட்களில் உயர உயரப் பறந்து அமெரிக்காவின் 31 ஆவது குடியரசுத் தலைவரானார் ஹெர்பெர்ட் ஹூவர்.

ஆம், நண்பர்களே, இயல்பான சராசரி மனிதர்கள், பிறருக்கு உதவி செய்வதன் மூலம் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள், ஆனால், உயர் மனித எண்ணங்களும் சிந்தனைகளும் கொண்ட மனிதர்கள் பிறருக்கு உதவி செய்வதன் மூலம் அவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று ஒரு விநாடியேனும் சிந்திக்கிறார்கள்.

****************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: