கை.அறிவழகன் எழுதியவை | மே 4, 2013

தொல்.திருமாவளவன் – ஒரு மீள் பார்வை.

616119_512647268763233_611544586_o

விடுதலைச் சிறுத்தைகள் என்கிற இயக்கம் முழுமையான ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்வுரிமைகளை வென்றெடுக்க உருவாக்கப்பட்ட இயக்கமாகவே இருந்தது, காலப்போக்கில் வெகுசன அரசியல் இயக்கங்கள் மற்றும் சாதி அமைப்பு சார்ந்த சமூக அரசியல் இயக்கங்கள் கொடுத்த அழுத்தங்களே அந்த இயக்கத்தின் தலைமையை தேர்தல் அரசியலில் பங்கேற்க வேண்டிய இக்கட்டான சூழலை நோக்கி உந்தித் தள்ளியது என்பதை ஒரு பார்வையாளனாக நான் அறிவேன்.

இந்திய சமூகத்தில் ஒரு தனி மனிதனாக வாழும் தலித் குழும மனிதனுக்கு என்ன மாதிரியான நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றனவோ, அதை விட மேலான அழுத்தங்கள் இயக்கங்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தை முன்னகர்த்திய போது தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் பயணம் செய்தார்.

சேரிகள் என்று சொல்லப்பட்டுப் புறந்தள்ளப்படும் உலக நாகரீகத்தின் உயர் குடித் தொட்டிகளில் வசிக்கும் இளைஞர்களை சமூக அரசியல் குறித்த விழிப்புணர்வை நோக்கி அவர் உந்தித் தள்ளினார், பெரியாருக்குப் பிறகு அரசியல் மற்றும் சமூக உரிமைகளை நோக்கி அவர்கள் குரல் எழுப்ப வேண்டியதன் அவசியத்தை ஒற்றை மனிதராக தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் அவரே நிறுவினார்.

அந்தக் கால கட்டத்தில் தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் குடிசைச் சுவர்களில் "அடங்க மறு, அத்து மீறு" "தேர்தல் பாதை, திருடர் பாதை" என்று எழுதத் துவங்கினார்கள் தலித் இளைஞர்கள். ஒரு தீவிரமான தலித் விடுதலையை நோக்கி நகர்கிற தேர்தலில் பங்கேற்காத இயக்கமாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் இயக்கமும் அதன் தலைமையும் தமிழக அரசியல் இயக்கங்களால் வெகு நுட்பமாகக் கவனிக்கப்பட்டது.

2009011854630401

சமூக விழுமியங்கள், சாதியத்தின் தாக்கம் உருவாக்கி வைத்திருக்கிற கோட்பாட்டு ரீதியான சமூக உளவியல் ஒவ்வொரு அரசியல் இயக்கத்தின் தலைவருக்கும் உள்ளீடு செய்யப்படுகிறது, நாம் தலைவர்களைக் குற்றம் சுமத்துவது என்பது தப்பித்துக் கொள்வதற்கான மிக எளிமையான வழி அவ்வளவே.

திராவிடக் கட்சிகள் அனைத்திலும் மட்டுமன்றி தேசியக் கட்சிகள் என்று அடையாளம் காணப்பட்ட காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் கூட மண்டலப் பெரும்பான்மை சாதித் தலைவர்கள் அடையாளம் செய்யப்பட்டார்கள், இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட பெருமைக்குரிய திராவிடர் கழகத்தின் அதிகார மையங்களில் கூட இன்று வரை பெரும்பான்மை ஆதிக்க சாதி அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது என்பது ஒரு வெட்கித் தலைகுனிய வேண்டிய செய்தி.

தி மு க மற்றும் அ தி மு கவில் மட்டுமன்றி பெருமபாலான அரசியல் கட்சிகளிலும் மாவட்டச் செயலர், ஒன்றியச் செயலர், நகரச் செயலர், மண்டலச் செயலர், செயற்குழு உறுப்பினர், பொதுக் குழு உறுப்பினர் என்று அதிகாரமும், வலிமையையும் நிரம்பிய பதவிகள் பெரும்பான்மை ஆதிக்க சாதிக் குழுவுக்குப் போய்ச் சேர்கிறதா என்பதை நமது சமூகம் மிகக் கவனமாக கண்காணித்துக் கொண்டே இருந்தது, அதுமட்டுமன்றி ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்கு கிளைச் செயலர், வட்டச் செயலர் போன்ற பதவிகளைத் தாண்டி ஏதும் கிடைத்து விடாதபடியும் நமது சமூகம் இடை விடாது கண்காணித்தது.

ஒரு படி மேலே சென்று இத்தகைய கண்காணிப்பு முறைகளை மீறி இயல்பாக எங்கேனும் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் அரசியல் அதிகாரத்தை நோக்கி பயணிக்கத் துவங்கினால் அவர்கள் முடக்கப்பட்டார்கள், பலர் கொலை செய்யப்பட்டார்கள், பலர் இடப்பெயர்வை நோக்கித் தள்ளப்பட்டார்கள், அரசியல் இயக்கங்களில் காணப்படும் பெரும்பான்மை சாதி அரசியல் என்பதைத் தாண்டி அதிகாரிகள் அளவில் நிலவும் அமைப்பு ரீதியான சாதிய அணிகள் மிக ஆபத்தும், வன்மமும் நிரம்பியவை.

குறிப்பாகக் காவல் துறையில் இயங்கும் பெரும்பான்மை சாதிய அரசியல் என்பது உற்று நோக்கப்பட வேண்டிய ஒன்று. சாதி சமூக அமைப்பின் கட்டுமானத்தைப் பாதுகாப்பதில் இந்திய சமூகத்தில் காவல்துறை ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. துவக்க காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சார்ந்த இளைஞர்களின் மீது சமூகம் தனது சட்ட வழியான அமைப்பான காவல் துறை மூலமாக மிகப்பெரிய அளவில் ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்தது. வழக்குகள், கட்டப் பஞ்சாயத்துகள், மன்னிப்புக் கோரல்கள், தண்டனைகள் என்று சமூகம் கொடுத்த அழுத்தம் விடுதலைச் சிறுத்தைகள் என்கிற அமைப்பைப் பெரிய அளவில் ஒரு அதிகாரத் தேடலை நோக்கி விரட்டி அடித்தது.

2009031759780701

திராவிட அரசியல் அல்லது சமகால அரசியல் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், வாக்கு வலிமையையும் பயன்படுத்திக் கொண்டு அதிகார அரசியலில் இருந்து அவர்களை வெகு நுட்பமாக ஒதுக்கி வைத்திருந்தார்கள். மேலும், பெரும்பான்மை ஒற்றைச் சாதி அரசியல் தலைவர்கள் அல்லது அதிகார மையங்கள் தலித் மக்களின் அறிவார்ந்த மைய நீரோட்ட அரசியலை எப்போதும் விரும்பி இருக்கவில்லை. தங்களின் மேலான அறிவுரைகளை ஏற்றுக் கொண்டுத் தங்களுக்குச் சாமரம் வீசும் இயக்கங்களாக அவை இருந்தால் போதுமானதென்று அதன் தலைவர்கள் உளவிருப்போடு செயல்பட்டார்கள்.

ஆனாலும் இந்த அடக்குமுறை வடிவங்களை எல்லாம் கடந்து ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் திருமாவளவன் வெற்றி பெற்றார் என்று தான் சொல்ல வேண்டும். தேர்தல் அரசியலைத் தவிர்த்து வெவ்வேறு நிலைகளில் இந்த அமைப்பை விரிவடையச் செய்ய வேண்டிய கடமையும், வாய்ப்பும் அப்போது திருமாவளவனிடம் இருந்தன.

கல்வி, பொருளாதாரம் சமூக மேம்பாடு, அரசியல் விழிப்புணர்வு என்று பல முனைகளில் அந்த இயக்கத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பை தேர்தல் சமன்பாடுகளில் தொலைக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பல்வேறு மட்டங்களில் சமரசங்களை அடையத் துவங்கியது, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமை என்கிற ஒரு மிகப்பெரிய நோக்கத்துக்காகத் துவக்கப்பட்ட இயக்கம் இன்று சில சட்டமன்ற நாடாளுமன்றத் தொகுதிகளுக்காக அண்டிப் பிழைக்கும் ஒரு இயக்கமாக மாறிப் போனது ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் பரிதாபமான வரலாறாக எஞ்சி இருக்கிறது.

பல்வேறு சமூக அரசியல் அழுத்தங்களும், தனிப்பட்ட காரணங்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற்ற திருமாவளவன் தேர்தல் மற்றும் மற்றும் அதிகார அரசியலை நோக்கித் தள்ளப்பட்டார். சில குறிப்பிட்ட தொகுதிகளில் அவரிடம் இருந்த வாக்கு வங்கி திராவிடக் கட்சிகளை அவர் பக்கமாய்த் திருப்பி விட்டது, வழக்கமான திராவிடக் கட்சிகளின் தந்திரமான தலித் மக்களின் அடையாள அரசியலை முன்வைத்து அவர்களின் வாக்கு வங்கியைக் கைப்பற்றுவது பின்பு அதிகார மற்றும் அமைப்பு வழியான அரசியலில் இருந்து அவர்களைக் கழற்றி விடுவது என்கிற மிக மோசமான தந்திரத்துக்கு திருமாவளவன் பலியாகத் துவங்கினார்.

இரண்டொரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்காவும், நான்கைந்து சட்டமன்றத் தொகுதிகளுக்காகவும் அவர் தலித் மக்களிடம் பெற்றிருந்த நம்பிக்கையை அடகு வைக்கத் துணிந்தார். பெருத்த அவமானங்களையும், அவமதிப்புகளையும் திராவிட மற்றும் ஒற்றைச் சாதி அரசியல் தலைவர்களிடம் தொடர்ச்சியாக அவர் அடைந்த போதும் திராவிடக் கட்சிகளின் அதே அடையாள அரசியலின் வசதியான இருப்பை அவர் இறுகப் பற்றிக் கொண்டார். இடையில் கிடைத்த பாட்டாளி மக்கள் கட்சியுடனான வெற்று அடையாள அரசியல் கூட்டணி அவருக்கு மறக்க முடியாத பாடங்களையும் அடியையும் வழங்கியது.

தலித் மக்களுக்கு பரிவட்டம் கட்டி அழகு பார்க்கும் ஒரு உயர் சாதிக் கட்சியாக மருத்துவர் ராமதாசு பாட்டாளி மக்கள் கட்சியை அடையாளம் செய்து கொண்டார், அன்றைக்கு வன்முறையைத் தவிர்த்து தலித் மக்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிய திருமாவளவனின் நகர்வு இன்றைய மருத்துவரின் வெளிப்படையான சாதி வெறிப் பேச்சுக்கு இடையே சிதைக்கப்பட்டிருக்கிறது. இப்போது மருத்துவர் ராமதாஸ் ஒரு நகர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே தோன்றுகிறது, அதாவது தலித் மக்களின் வாழ்க்கை முறையை அல்லது அவர்களது போராட்டங்களை அவர் விடுதலைச் சிறுத்தைகளின் செயல்பாடு என்கிற அளவில் சுருக்கி இருக்கிறார்.

பல்வேறு நிகழ்வுகளில் தலித் மக்களின் வாழ்வுரிமைச் சிக்கல்களை அவர் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு என்றே குறிப்பிட்டு பெரிய அளவிலான ஆதிக்க சாதிக் கூட்டமைப்பை உருவாக்க முயற்சி செய்கிறார், அவரது இந்த முயற்சியில் அரசியல் ரீதியாகத் தோல்வி என்று நாம் மகிழ்ச்சி அடைந்தாலும், உள்ளார்ந்த ஆதிக்க உணர்வோடு, வெறியூட்டப்படும் நாட்களுக்காகக் காத்திருக்கும் நமது சமூகத்தின் கூட்டு மன நிலைக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்ல முடியும்.

_49620157_musahars_wide

திருமாவளவனிடம் கொடுக்கப்பட்ட வாய்ப்பு என்பது தலித் மக்களின் வாழ்வுரிமை அரசியலுக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய அங்கீகாரம், ஆனால், அந்த அங்கீகாரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேலாக அவரால் முன்னகர்த்த இயலவில்லை என்பதே உண்மை. அல்லது முன்னகர்த்த விரும்பாத தேக்க நிலையும் ஒரு காரணமாக அறியப்படலாம்.

தேர்தல் மற்றும் அதிகார அரசியல் வழியாகப் பயணிக்கிற அதே வேளையில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அரசியல் சமூகப் புரிந்துணர்வு போன்ற தேக்க நிலை நிலவுகிற பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களை வலிமைப்படுத்துகிற வேலையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் செய்யத் தவறியதும், தேர்தல் மூலமாகப் பெறப்படும் அதிகார அரசியல் வளர்ச்சி ஒன்றே தலித் மக்களின் ஒட்டு மொத்த விடுதலைக்குமான வழி என்று நம்பியதும் திருமாவளவன் செய்த மிகப்பெரிய தவறுகள்.

இந்திய சமூகத்தில் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் மக்களின் கூட்டு மன நிலையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கும் வலிமையான அறிவார்ந்த ஒரு சமூகத்தை உருவாக்கி அதன் மூலமாக நிகழும் சமூக அறிவியலின் மாற்றங்களை அரசியலில் அறுவடை செய்வது தான் மிகச் சிறந்த வழியாக இருக்க முடியும்.

அதற்கான கட்டமைப்பை தனது இளைஞர்களிடம் உருவாக்க வேண்டிய காலத்தில் நின்று கொண்டிருக்கிறார் திருமாவளவன். கல்வியின் மூலமாக நிலையான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், பிறகு பொருளாதார அமைப்புகளை வலிமைப்படுத்துதல், அரசியல் விழிப்புணர்வுக்கான முறையான பட்டறைகள் என்று துவக்க காலத்தில் அவர் செய்த அதே வேலைகளை இன்னும் தீவிரமாகச் செய்ய வேண்டிய ஒரு கால விளிம்பில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் நின்று கொண்டிருக்கிறது.

தேர்தல் கூட்டணிக்கான நகர்வுகளை நோக்கியே கட்சியை இனி அவர் செலுத்திக் கொண்டிருப்பது ஒட்டு மொத்த தலித் மக்களுக்கான நன்மைகளை ஒரு போதும் வழங்கப் போவதில்லை. தலித் அதிகார அரசியல் என்கிற மிகப்பெரிய நோக்கத்தை தேர்தல் மூலம் பெறப்படும் வெற்றி தோல்விகளை வைத்தே அளவீடு செய்ய முடியாது.

untitled

பாட்டாளி மக்கள் கட்சி போன்ற ஒற்றைச் சாதி அரசியல் இயக்கங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது எத்தனை கடுமையான அளவில் வன்முறையை ஏவினாலும், பலநூறு மனிதர்களைக் கொன்று குவித்தாலும் அடுத்த தேர்தலில் மறப்போம், மன்னிப்போம் என்று அவர்களை ஆரத் தழுவிக் கொள்ளும் அரசியல் தலைவர்களோடு தான் இப்போது திருமாவளவன் இரண்டொரு தொகுதிகளுக்காக ஒட்டி உறவாடுகிறார் என்பதை அவரும், விடுதலைச் சிறுத்தைகளும் ஒரு போதும் மறக்கக் கூடாது.

தேர்தல் அரசியலைத் தாண்டி சமூக விடுதலை, கல்வி, வேலை வாய்ப்புகள், சமூகப் பொறுப்புகள், பொருளாதார மேம்பாடு என்கிற தனது பழைய பாதையைப் அவர் இப்போது புதுப்பிக்கத் தவறினால் இழப்பு தமிழ்ச் சமூகத்துக்கானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. ஏனென்றால் மக்களின் நம்பிக்கையையும், சிறந்த அறிவையும், அரசியல் வெற்றிகளையும் ஒரு சேரப் பெற்ற இன்னொரு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மகத்தான மனிதரை அடைய நாம் வரலாற்றில் நெடுங்காலம் பயணிக்க வேண்டியிருக்கும்.

***************

Advertisements

Responses

  1. anbulla arivazhagan,

    ippodhu samooga needhipathi pesakooda bayama irukku.aanmeegam,kadavul saadhi izhivugalai patri pesa bayama irukku samooga akkaraiyodu kuralkoduthal appurum dravida kazhagathilum dalit allavarthan irukkan.dalit alladhavarthaan murpokku pesurannu soluveenga.oru saga manithan adipattu saaliyil kidakkumpodhu avani thooka dalitthaan varavendum yenru illai yennai ponra saathi adayalam illadha oru manithanaaga irunthal podhum yenbadhai therivikkiren.nalla velai periyarai dalit alladhavar yendru kochaipaduthamal irundhal sari.neengal dravidathin meedhu veruppai umizvadharkku badhilaga dalit makkaludaya aanmegam,mmodathanam,kadavul ozhippu,vingnanam ponravatrai parapuungal periyar yentha adhikaara padhavikkagavum alladhu panathukkagavum idhai seiyavillai.mudhalil thiruma periyarai pol samoga thalathil irundhu poraadattum.

    adhigaram,arasiyal laba kanakku yengalai ponra periyaristgalukku kedayadhu.samoogam maara vendum adharku arasiyal,adhigaram vaithu onrum seiyamudiyadhu.UPyil mayavathi CM aaga irundhar ange dalitkku yedhirana moodathanam ozhindhuvitadhaa

  2. I find your post very fascinating and a very objective analysis of Thol Thirumavalavan. I have always wondered why he chose to go the electoral way. You have explained that he had no choice but forced by circumstances of caste and dravidian politics. I feel he could have stood firm. After all, I agree with you, in your conclusion. that Thol’s best efforts for the future, should be towards betterment of his community through education and job opportunities. An excellent post. 🙂

  3. Mothalla pallu theichu, kulichu, ….. sutham seithu, irukka solli kodunga


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: