கை.அறிவழகன் எழுதியவை | மே 4, 2013

வாழ்க்கையும், விபத்தும்.

cars-on-highway-accident-92814

தும்கூர் தொழிற்சாலையில் இருந்து திரும்ப பெங்களூருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தோம் நேற்றிரவு நானும் என்னுடைய தென் மண்டல மேலாளரும், மனிதர்கள் தங்களது உலகங்களில் இயங்கிக் கொண்டிருந்தார்கள், ஊர்திகள் சலனமின்றி மனித மனங்களைச் சுமந்து முன்னும் …பின்னுமாக வேடிக்கை பார்த்தபடி என்னுடைய உலகம். "கோருகொண்டபால்யா" என்னுமிடத்தில் துவங்கிய மேம்பாலத்தில் ஏறி விரைகிறது மகிழுந்து. முன்னே ஒரு புத்தம் புதிய இரு சக்கர ஊர்தியில் பறக்கிறான் இளைஞன்.

ஒரு வழிப் பாதை என்பதால் பெரிய அளவில் வேகம் குறித்த அக்கறை இல்லாமல் பயணிக்கும் ஊர்திகள் நடுவே வண்ணக் கனவுகள் பலவற்றோடு பயணிக்கிற அந்த இளைஞன் யாரென்ற அக்கறை யாருக்கும் இல்லைதான் அந்தப் பாலத்தில். கண்ணிமைக்கும் பொழுதில் அவனுக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு "லாரி" இடது பக்கமாய்த் திரும்பித் தடுமாறுகிறது, இளைஞனால் கட்டுப்படுத்த இயலாத வேகம், புதிய ஊர்தி கொடுக்கிற உற்சாகம் எல்லாம் சேர்த்து சரக்கு லாரியின் சக்கரங்களுக்கு உள்ளே அந்த இளைஞனைத் தள்ளி அழுத்துகிறது வலது பக்கமாகச் சென்று கொண்டிருந்த காவல் ஊர்தியில் இருந்து ஐந்தாறு காவலர்கள் இறங்கி ஓடிச் சென்று இளைஞனை வெளியே எடுக்கிறார்கள்.

எங்கள் மகிழுந்து இடப்பக்கமாய் ஓரங்கட்டி ஓரங்கட்டி நிற்க நான் இருக்கையிலேயே அமர்ந்திருக்கிறேன், இளைஞனிடம் எந்த அசைவுகளும் இல்லை, ஒரு பருப் பொருளை நகர்த்துவது போல அவனது உடல் வெளியே எடுக்கப்படுவதைக் கண்டு எனக்கு ஒரு தயக்கம், உயிர்கள் துடிப்பதையும், இயக்கங்கள் கொஞ்ச கொஞ்சமாய் நின்று போவதையும் பல்வேறு விபத்துகளில் பார்த்து மனதளவில் ஒரு கலக்கம் வந்திருக்கிறது, உறுதியாக உயிர் பிழைக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிற விபத்தில் சிக்கிய மனிதர்களைப் பார்க்கும் மன வலிமை இல்லை. என்னுடைய தென் மண்டல மேலாளரைப் பார்த்தேன், கண்ணில் தென்படவில்லை.

ஒருவழியாக மனதைத் தேற்றி இறங்கி கூட்டத்தை விலக்கி உள்ளே போனால் சொந்த மகனை மடியில் கிடத்துவதைப் போலக் கிடத்தி நெடுஞ்சாலையில் அமர்ந்திருக்கிறார் தென் மண்டல மேலாளர், சிலர் போத்தலில் நீரைப் புகட்ட கொஞ்சமாய்ப் பேசத் துவங்கி இருந்தான் இளைஞன், தலைக்கவசம் அணிந்திருந்த காரணத்தால் தலையில் ஏதும் காயங்கள் இல்லை, ஆனால், தலைக் கவசம் சேதமடைந்திருப்பதைப் பார்த்தால் ஒரு கணம் மனக்கலக்கம் வந்து விடும்.

பெரிய அளவில் காயங்களோ, எலும்பு முறிவோ இல்லை, செய்தித் தாளை வைத்து ஒரு காவலர் வீசிக் கொண்டிருந்தார். அவசர கால ஊர்திக்குத் தகவல் சொல்லியாயிற்று, பாலத்தில் கீழே "சைரன்" ஒலி கேட்கிறது. பின்புறமாக சரக்கு லாரிக்கு அடியில் ஊர்தியோடு சென்று விட்டதால் உண்டான அதிர்ச்சி அவன் கண்களில் இன்னும் இருந்தது. கிழிந்து கழற்றப் பட்டிருந்த சட்டைப் பையில் இருந்து அலைபேசி மணி ஒலிக்கிறது,

யாராவது எடுத்து பதில் சொல்லுங்கள் என்று குரல்கள் ஒலிக்கிறது, எனக்கு மிக அருகில் அந்தச் சட்டையும், அலைபேசியும்…….என்ன சொல்வது, யாராக இருக்கும் என்று தயங்கியவாறு அலைபேசியை எடுத்து எண்ணைப் பார்க்கிறேன், திம்மண்ணா என்று இருக்கிறது.

4

நான் : "ஹலோ"

மறுமுனை : "லேய் எல்லி இதியா?, பருவாக பாணிப் பூரி தேகோன்பா, சௌம்யா கேளுத்தவளே!!"
(டேய் எங்கே இருக்கே? வரும்போது பாணி பூரி வாங்கிட்டு வா, சௌம்யா கேட்கிறாள்!!)

நான் :"சார், ஈ மொபைல் அவரிக யேனாகு பேக்கு"
(ஐயா, இந்த அலைபேசியின் சொந்தக்காரருக்கு நீங்கள் என்ன உறவு?)

மறுமுனை :ஹலோ, யாரு நீவு, மஞ்சன் கைகே போன் கொடி!!!
(நீங்க யாருங்க, மஞ்சன் கையில் அலைபேசியைக் கொடுங்கள்.

நான் : அவரிக ஆக்சிடென்ட் ஆகிதெ, சீரியசாகி ஏனு இல்ல.

மறுமுனையில் குரல் கம்முகிறது, "சார், நானு அவரு அண்ணா சார், நன் தம்மனுகே ஏனாயித்து சார், ஈகே எல்லி இதானே?
(என் தம்பிக்கு என்ன ஆச்சுங்க, அவன் இப்போ எங்கே இருக்கான்?)
கேவத் துவங்குகிறார் அண்ணன்.

நான் : சொல்ப நிதானக்கே நான் ஹேலோது கேளி, நிம்ம தம்மனுகே ஏனு ஆகில்ல, இல்லே கொருகொண்டபால்யா
flyover அத்தர கெலகே பித்தவரே, சொல்ப காப்ரி ஆகிதாரே பேரே ஏனு ஆகில்ல. நீவு ஹொரட்டு பண்ணி. நன்ன மொபைல் நம்பர் தெகொலி! 9945232920

நான் : நான் சொல்றதக் கொஞ்சம் நிதானமாக் கேளுங்க, கொருகொண்டப்பால்யா மேம்பாலத்துல விழுந்துட்டாரு, வேறு ஒன்னும் பயப்படற மாதிரி இல்ல. நீங்க கிளம்பி வாங்க. இது என்னோட அலைபேசி எண் 9945232920.

காவலர் ஒருவர் அலைபேசியை என்னிடம் இருந்து வாங்கி இளைஞனை ஒரு வார்த்தை பேசச் சொல்கிறார்.

காவலர் : மாத்தாடி பிடோ, இல்லாத்ரே பேஜாரு மாடுக்கொம் பிடுத்தாரே!
ஒரு வார்த்தை பேசிவிடு தம்பி, வீட்டில் பயப்படாமல் இருப்பார்கள்.

இளைஞன் : ஹலோ, அண்ணா, ஏனு ஆகில்ல, காப்ரி ஆகு பேடி.
அண்ணா, ஒன்னும் இல்ல, பயப்படாதீங்க.

காலம் என்கிற ஊர்தியில் மனிதர்கள் மனங்களின் இடைவிடாத கூக்குரலை கேட்டபடி புவிச் சாலையில் தெளிக்கப்பட்டிருக்கிறார்கள். தெளிவான வானத்தில் விண்மீன்கள் வழக்கமாகப் புன்னகைத்தபடி மின்னிக் கொண்டிருக்கிறது. அவசர கால ஊர்தியில் சகோதரனின் அருகிறுப்பை உறுதி செய்து கொண்டு, இளைஞன் பிழைத்துக் கொண்டு விடுவான் என்ற நம்பிக்கை வந்த பிறகு மீண்டும் எனது தென் மண்டல மேலாளரைப் பார்த்தேன், புன்னகைத்து விட்டு ஹிந்தியில் சொன்னார், "பச் கயா ரே லடுக்கா" (பிழைத்துக் கொண்டான் பையன்).

41

திரும்பி மகிழுந்தை நோக்கி நடக்கத் துவங்கினோம், திரும்பி செய்தித் தாளில் வீசிக் கொண்டிருந்த காவலரைப் பார்த்தேன், நெஞ்சில் கையை வைத்துத் தடவிக் கொண்டிருந்த பெயர் தெரியாத ஒரு பெரிய மனிதரைப் பார்த்தேன், நீர் புகட்டிய இன்னொரு காவலரைப் பார்த்தேன். நிமிர்ந்து ஒரு முறை வானத்தைப் பார்த்தேன், முன்னே நடந்து கொண்டிருந்த எனது தென் மண்டல மேலாளரைப் பார்த்தேன்.

பாதுகாப்பான, அன்பு நிரம்பிய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிற நிறைவு நெஞ்சையும் கண்களையும் நிறைத்தது.மொழிகள், பெயர்கள், இனங்கள், சாலைகள், ஊர்திகள், உறவுகள் என்று எல்லாவற்றையும் இணைக்கிற பெருவானமாய் அன்பெனும் ஆறு, காலவெளியை நிறைத்தபடி ஓடிக் கொண்டே இருக்கிறது.

***************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: