கை.அறிவழகன் எழுதியவை | மே 4, 2013

வெறுப்பும், பகையும் எங்கள் பண்புகள் இல்லையே, வீர வன்னியரே!!!

636x501

"சாதிய மனநிலை" அறிவியல் வழியாகவும், மருத்துவ வழியாகவும் ஒரு நோயாகவே அடையாளம் காணப்படுகிறது, அது ஒரு கற்பிதம் அல்லது நெடுங்கால நம்பிக்கை என்றபோதிலும் இந்திய சமூகத்தில் அது ஒழிக்கபபட முடியாமல் இருப்பதற்கு அதன் மூலம் கிடைக்கப்பெறும் பிறப்பு அடிப்படையிலான தகுதி ஒரு மிக முக்கியக் காரணம். மருத்துவமனைத் தொட்டிலிலேயே கிடைத்து விடும் ஒரு உயர் தகுதியை எந்த மனிதனும் இங்கே இழக்க விரும்புவதில்லை.

ஒவ்வொரு உயிரும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் வாழ்க்கைப் போராட்டம் சாதியை உயிர்ப்போடு வைத்துக் கொள்ளும் ஒரு காரணியாக இருக்கிறது. வளர்க்கப்படும் விதமும், கற்றுக் கொடுக்கப்படும் உயரிய உயிர் வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கை குறித்த பாடங்களும் சாதியைப் புறக்கணிக்கும் வல்லமை கொண்டவை என்றால் அரசியலில் இருந்து சாதியைப் பிரிக்கும் பணி மிக இன்றியமையாத ஒன்று. தன்னை ஒரு உயரிய மனித உயிராகவும், மேன்மை பொருந்திய அறிவியக்கமாகவும் உணர இயலாத எந்த மனிதனும் சமூகம் செயற்கையாக வழங்கும் ஒரு உயர் தன்மையை அணிந்து கொள்ள ஆசைப்படுகிறான்.

அதன் விளைவுகள் தான் அவன் தன்னை உயர் சாதிக் காரன் என்று தன்னிலைப் பிரகடனம் செய்து கொள்வது, எதிரில் இருக்கும் எளிய மனிதனை ஒடுக்கிச் சிதைப்பது, தன்னிடம் இல்லாத ஒரு மேன்மையை தனக்கு வழங்கும் படி பிறரைத் துன்புறுத்துவது போன்ற வன்செயல்கள். இயற்கையாகவே தன்னை ஒரு உயர் அறிவியக்கமாக அடையாளம் காணுகிற எந்த மனிதனும் பிற அடையாளங்களுக்காக ஏங்கித் தவிப்பதும், அவற்றைத் தன மீது ஏற்றிக் கொள்வதற்கும் விருப்புடையவனாக இருப்பதில்லை. உயர் சாதி மனநிலை என்பது ஆகக் கொடிய ஒரு மனநோய்.

அதற்குப் பின்னால் ஒரு எளிய உழைக்கும் மனிதனின் வாழ்க்கையை ஒடுக்குதல் உள்ளடங்கி இருக்கிறது என்று புரிந்து கொள்கிற யாரும் அந்த நோயின் பிடியில் இருந்து தப்பிக்கவே விரும்புவார்கள். தமிழ்ச் சூழலில் ஒடுக்கப்பட்ட சமூகமாக இருந்து பல்வேறு போராட்டங்கள், அரசியல் வழிமுறைகள் வழியாக மைய நீரோட்டத்தை அடைந்த சமூகங்கள் கூட அவர்களுக்கு நிகழ்ந்த அதே அவலத்தை பிற மனிதர்களுக்கு இன்று வழங்கி வருவது நமது கல்வி மற்றும் அரசியல் திட்டங்களின் தெளிவான தோல்வியையே உணர்த்துகிறது.

636x519

நாம் இப்போது வளர்ந்த மனிதர்களிடம் பேசி எந்தப் பயனும் நிகழப் போவதில்லை, நாம் பேச வேண்டிய மனிதர்கள் பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்கள், வகுப்பறைகளில், சமூகத் தளங்களில், அரசியல் செயல்பாடுகளில், இயக்கங்களில், வீடுகளில் என்று எல்லா இடங்களிலும் சாதி மற்றும் மதம் குறித்த தெளிவான செயல் திட்டங்களை முன் வைக்க வேண்டியது அறிவார்ந்த மனிதர்கள் ஒவ்வொருவரின் கடமை.  மருத்துவம் பயின்று உடலியல், சமூகவியல், அரசியல் என்று பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் போன்ற மனிதர்களுக்கே சாதி நோய் முற்றி மருத்துவம் செய்ய முடியாத அளவில் இருக்கும் போது சாமான்ய மனிதனின் நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அடிப்படை மனித அறிவியல் மற்றும் சமூகவியல் குறித்த தெளிவான சிந்தனைகளை வளர்க்கும் ஒரு கல்வி முறையை நோக்கி நாம் நகர்வது இந்த நேரத்தில் மிக முக்கியமானது. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பரதிநிதிகள் என்றில்லை சமூகத்தின் பல்வேறு தளங்களில் இயங்கும் அறிஞர்கள் ஒன்றிணைந்து இந்த மானுடத்தின் பயணத்தை முதிர்ச்சி பெற்ற ஒன்றாக மாற்ற வேண்டிய சவால் நமக்கு முன்னாள் இருக்கிறது.

marakkanam_1442925f

தமிழ்ச் சமூகத்தின் உயரிய வரலாற்றுத் தடத்தை மாற்றும் வல்லமை நமது பிரிவினைகளிலோ, முரண்பாடுகளிலோ ஒரு போதும் இல்லை. நமது சகோதரனிடத்தில் இருக்கும் நோயையும், வன்மத்தையும் களைவதற்கு நாம் என்ன செய்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. வன்னியன் ஆயினும், அந்நியன் ஆயினும் என்ன?? எம் தாத்தன் வள்ளுவன் திண்ணியமாகச் சொன்னான் எல்லோருக்கும்:

“இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
  நன்னயம் செய்து விடல்”.

எளியோரைத் தாக்கும் சாதி என்கிற மன நோயில் இருந்து நீங்கள் விடுபட்டு அன்பெனும் பெருவெளியில் பயணிக்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம். அதற்காக இன்னும் பல உயிர்களை நாங்கள் இழக்கக் கூடும். மனித குலத்தின் மேன்மை மிகுந்த நாகரீகத்தின் வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள், வழி நெடுகப் பள்ளங்களை நிரப்பிப் பாதையாய் இருப்பது ஒடுக்கப்பட்ட, எளிய உழைக்கும் மக்களின் கல்லறைகள் தானே…….

****************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: